சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 3 · 3 / 14
“பரதன், அண்ணனைக் குருவாகக் கருதுகிறவன் தர்மாத்மா, சுத்தமான உள்ளமும் ஆசைகளை அடக்கும் சக்தியும் பெற்றவன். ஆயினும் மனுஷ்யனுடைய சித்தம் எப்போதும் ஒரே விதமாக இருக்காது என்று தசரதன் ராமனிடம் சொல்லி... பரதன் வருவதற்காக காக்கவேண்டாம் என்று வசிஷ்டருக்கும் தெரிவித்துவிட்டான்.
பட்டாபிஷேக வைபவம் அதில் சகோதரன் பரதன் இல்லாமல் - தான் பட்டம் கட்டிக்கொள்ள ராமனும் சம்மதித்து விட்டான். பரதன் வந்துவிட்டால் தசரதன் தன் அன்னையைத்திருமணம் புரியும்போது தன் தாத்தா கேகய மன்னனிடம் கொடுத்த வாக்கை நினைவுபடுத்தி பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிடுவானாம் - அதற்காக பயந்து ராமனுக்குப்பட்டம் கட்டும் சதியில் - வசிஷ்ட முனிவர், தசரத சக்கரவர்த்தி யென்னும் தாம்பிரபு, பகவான் ராமச்சந்திரமூர்த்தி - ஆகிய இத்தனைபேரும் கலந்து கொள்கிறார்கள்.
“ஏதாவது இடையூறு நேருமோ” என்று தசரதனுக்கு திகில் இருந்ததாம்! இருக்காதா திகில்? இருக்கும்! நிபந்தனையை மறந்து, பரதன் ஊரில் இருந்து வருவதற்குள் ராமனுக்குப் பட்டம் கட்டவேண்டுமென்று சதி செய்த தசரதனுக்கு திகில் இருக்காதா? இத்தகைய தசரதனின் திருமகனாகப் போய் மகாவிஷ்ணு பிறந்தாரே; அதில் அல்லவா இருக்கிறது ஆச்சரியம்! விஷ்ணுவைப் பங்குபோடப் பிறந்த பிள்ளைகள் நால்வரும்! அந்த நால்வருக்குள்ளாகவே சதி! அதுவும் அதிகப் பங்கில் அவதரித்த ஸ்ரீராமன், தந்தையின் சதிக்கு உடந்தையாக இருக்கிறான், பட்டாபிஷேகத்திற்கான சகல முன்னேற்பாடுகளையும் அவனும் கவனிக்கிறான் தன் மனைவியுடன்!
இந்த இதழில் ஆச்சாரியார் எழுதிய கட்டுரை, அவரையும் அறியாமல் ஓர் உண்மையை உணர்த்தி விட்டது.
தசரதன், கேகய மன்னனுக்கு வாக்களித்து, கைகேயியை மணந்தான். இப்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, ராமனுடன் சேர்ந்து சதி செய்து அவனையே பட்டத்திற்குரியவனாக்க திட்டமிட்டுவிட்டான். அதற்கு ராமனும் உடந்தை, என்கிற உண்மைதான் அது!
❧★❧
சென்ற இதழில் தசரதன், வசிஷ்டன், ராமன் மூவருமே சதியில் ஈடுபட்டு பரதனுக்கு, நிபந்தனைப்படி நியாயமாக சேர வேண்டிய ராஜ்ய பாரத்தை ராமன் தலையில் கட்டி விட முடிவு செய்தார்கள் என்ற உண்மையை ஆச்சாரியார் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாக முடித்திருந்தேன். பரதனுக்குப் பட்டம் கட்டுவதாக தசரதன் கேகய மன்னனிடம் கொடுத்த வாக்கை மீறுகிறான் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இதோ இந்த இதழில் அதே கருத்தை யொட்டி ஆச்சாரியார் எழுதுகிறார் கவனியுங்கள்.
“புத்திர பாக்கியம் பெறாமலிருந்த காலத்தில் கைகேயியைத் தசரதன், ராஜகுல வழக்கத்தை அனுசரித்து விவாகம் செய்து கொண்டான். இந்தச் சமயம் கைகேயினுடைய தந்தை கேகய ராஜன் தசரதனிடம் வாக்குறுதி பெற்றான்; இவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டமென்று. இப்படி அப்போது சொன்னதில் ஒன்றும் வியப்போ வித்தியாசமோ இருந்திருக்க இடமில்லை. அப்போது யாருக்குமே குழந்தைகள் இல்லை. மற்ற மனைவிகளுக்குப் புத்திரப்பேறுக்கு உண்டாகவில்லை.
புத்திரப்பேறுக்கு ஆசைப்பட்டே மூன்றாவது மனைவியைக் கொண்டது. அந்த ஆசையும் நிறைவேறவில்லை. வெகு நாட்கள் கழித்து யாகம் செய்து மூன்று மனைவிகளும் குழந்தைகள் பெற்றார்கள். பட்ட மகிஷியின் மகனான ராமன், நான்கு புத்திரர்களுக்குள் மூத்தவனாகவும், சகல உத்தம குணங்களையுடையவனாகவும், ராஜ்ய பாரம் வகிக்கும் தகுதியைக் கொண்டவனாகவும், மந்திரிமார்கள், நகரத்தார், கிராமவாசிகள், சிற்றரசர்கள் அனைவரும் யுவராஜப் பதவிக்குத் தகுந்தவன் என்று அவர்களுடைய அன்பைச் சம்பாதித்தவனாகவும் இருக்க, எப்படி அவனுடைய உரிமையையும் ராஜகுல முறையையும் புறக்கணித்து பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது நியாயமாகும்?”
ராமன்தான் ராஜ்யபாரம் வகிக்க தகுதியுடையவனாம் - கூறுகிறார் இப்படி! பரதனுக்குத் தகுதி கிடையாதா? ராமன் கானகம் சென்ற பிறகு துணைக்கு லட்சுமணனும், ஆறுதலுக்குத் தந்தையும் இல்லாத பரதன், சத்ருக்கனோடு சேர்ந்து பதினான்கு ஆண்டு ராஜ்யத்தை நடத்தி வந்தானே - அப்போது என்ன அயோத்தியில் குழப்பமா ஏற்பட்டது? எதிரிகள் படையெடுத்தா வந்தார்கள்? அராஜகம் நடந்துவிட்டதா? அடக்குமுறை தேவைப்பட்டதா? அமைதியாகத்தானே பரதன் அரசு புரிந்திருக்கிறான்.
பதினான்கு வருடம் கழித்த பிறகு, ராமன் பட்டத்திற்கு வந்த பிறகு வேண்டுமானால் கலகம் நடந்திருக்கிறது - அதுவும் உள்நாட்டு யுத்தம் - தகப்பனுக்கும் மகன் எனக் கூறப்படும், லவ, குசன் ஆகியோருக்கும் அஸ்வமேத யாகத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அமைதியோடு பதினான்கு ஆண்டு ஆட்சி புரிந்த பரதனுக்கு ராஜ்யபாரம் வகிக்க தகுதியில்லையாம் - காடாண்டபோதும் போராட்டம் நடத்திய ராமனே தகுந்தவனாம்.
ஆச்சாரியார் வாதிடுகிறார்.
ராமன் சகல உத்தம குணங்களும் பொருந்தியவனாம் அதனால் பட்டம் கட்டலாமாம். பரதன் என்ற அருமைச் சகோதரன் இல்லாத சமயம் முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ராமனா உத்தம குணம் கொண்டவன்? வனமேகினான் அண்ணன், எனக் கேள்விப்பட்டதும் வாடிச் சோர்ந்த பரதனைவிட ராமன் எந்த விதத்தில் உத்தம குணம் வாய்ந்தவனோ தெரியவில்லை.
தசரதன் முதலில் கொடுத்த வாக்கை மீறி பரதனுக்குத் தெரியாமல் - ரகசியமாக ராமனுக்கு முடிசூட்ட முயற்சித்தது சரிதான். நியாயமானதுதான் - என்று வாதிக்கிறார் ஆச்சாரியார்.
கொல்லைப்புறமாக மந்திரி சபைக்கு வந்தவரல்லவா ஆச்சாரியார்! அதனால் அவர் தசரதனுக்காகப் பரிந்து பேசுவதில் ஆச்சர்யமில்லையதான்.
இன்னும் பாருங்கள் - ஆச்சாரியார் முரண்படும் கட்டம் வந்துவிட்டது.
தவிர - பரதனும் கைகேயியும் - முடியைப்பற்றி எதொரு ஆசை, அல்லது எண்ணங்கூட வைத்து கிடையாது. அதைப் பற்றிப் பேச்சே கிடையாது. ஆனபடியால் முறைப்படி ராமனை யுவராஜ்யப் பதவியில் அமர்த்துவதில் ஒரு சிக்கலும் ஏற்படாது என்று அரசன் எண்ணினான். அவ்வாறே கைகேயியின் உள்ளத்திலும் எதொரு கல்மஷமும் இருக்கவில்லை. இது கைகேயியின் நடவடிக்கைகளினால் வியக்தமாகத் தெரிகிறது. பரதன் உள்ளத்தைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.”
இப்படி இந்த இதழில் எழுதியிருக்கிறார். சென்ற இதழில் எப்படி முடித்திருந்தார் தெரியுமா? முறைப்படி ராமனை யுவராஜ்யப் பதவியில் அமர்த்துவதில் ஒருவித சிக்கலும் ஏற்படாது என இந்த வாரக் கல்கி இதழில் எண்ணுகிற தசரத ராஜன், சென்ற வாரம் - பரதன் வந்துவிடுவானே எனப்பயந்து, ராமனை அவசர அவசரமாக இரண்டாவது முறை கூப்பிட்டு வாக்குச்சொல்லி, அவனிடமும் நிலையை விளக்கி - மறுநாளே யுவராஜ்யப் பட்டாபிஷேக ஏற்பாடுகளை கவனிக்கிறான்.
தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜனங்கள் தங்கள் வீடுகளின் மேல் பலவித அழகிய கொடிகள் பறக்கவிட்டிருந்தார்கள். ஆடை அணிகள் பூண்டு சந்தனம் பூசி, புஷ்பம் அணிந்து எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். கோயில்களில் வாத்தியகோஷம்.”
அயோத்தி இப்படி ஆனந்தமாக இருக்கிறது - ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் கைகேயி சொந்தக்காரியும் - தோழியும், அந்தரங்க வேலைக்காரியுமான மந்தரை என்பவளுக்கு ஒன்றுமே தெரியாது. பக்கத்தில் உள்ள ஒரு தோழியிடம் கேட்டு, அந்தக் கொண்டாட்டமெல்லாம், ராமன் பட்டம் சூட்டும் விழாவிற்கு என்று தெரிந்து கொள்கிறாள். மந்தரை மட்டுமல்ல; மகாராணிகளில் ஒருத்தியாகிய கைகேயிக்குக்கூட இந்தச் செய்தி மந்தரை மூலமாகத்தான் கிடைக்கிறது.
இந்த விபரங்களையெல்லாம் ஆச்சாரியார் (ஆகஸ்டு 15, 1954 கல்கி) இதழில் எழுதியிருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ராமன் முடிசூட்டு விழா செய்தி கேட்டு கொடி கட்டி கொண்டாடுகிறார்களாம் கூட்டம் கூட்டமாக. ஆனால் அந்தச் செய்தி “கல்மஷ” மனமில்லாத கைகேயிக்கும் தெரியாதாம் - அவள் அந்தரங்க வேலைக்காரி மந்தரைக்கும் தெரியாதாம்!
அப்படி என்றால் என்ன பொருள்? பரதனையும் கைகேயியையும் ஏமாற்ற “சதி” நடந்திருக்கிறது என்றுதானே நாம் முடிவுகட்ட வேண்டியிருக்கிறது - நாமென்ன; மூளையுள்ளவர் அனைவருமே அப்படித்தான் முடிவு கட்டுவார்கள்.
<!-- Article 3 ends on scan 25 / printed 23. Scan 26 / printed 24 begins Article 4: காமராஜன் ஆட்கொண்ட தசரதராஜன்! -->
தந்தையினிடம் விடை பெற்றுக் கொண்டு ராமன், உடனே கவுசல்யா தேவியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். பெற்ற தாய்க்கு விஷயத்தைச் சொல்லி ஆசி பெறுவதற்காகச் சென்றான். அதற்கு முன்னதாகவே கவுசல்யைக்கு சமாச்சாரம் எட்டியிருந்தது. நகரம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. பெண்களுக்கு அடங்காத உற்சாகம் ஆண், பெண், குழந்தைகள் எல்லாரும் எல்லை கடந்த குதூகலத்தில் இருந்தார்கள். சுற்றுப் பக்கத்துப் பிரதேசவாசிகள் எல்லாம் அயோத்திக்குப் பட்டாபிஷேக மகோத்சவத்தைப் பார்க்க வந்து சேர ஆரம்பித்து விட்டார்கள்.
ராமனும் சீதையும் தங்களுடைய மனையில் நாராயணனைத் தியானித்து, மறுநாள் பட்டாபிஷேகத்திற்கான சடங்குகளை மேற்கொண்டு தரையில் புல் பரப்பி, அன்றிரவு படுத்தார்கள்.
மேலே காணப்படும் இவ்வளவும் ஆகஸ்டு 8-54ஆம் தேதி இதழிலே ஆச்சாரியார் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்.
அடுத்த ஊரார் அயோத்திக்கு வந்துவிட்டனர் பட்டாபிஷேக சேதி கேட்டு, ஆனால் கைகேயிக்கு மட்டும் அந்தச்செய்தி தெரிவிக்கப்படவில்லை. மந்தரை மூலமாக கைகேயி செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறாள். பிறகு, மந்தரை - தசரதன், கேகேயனுக்குத்தந்துள்ள வாக்குறுதியை நினைவூட்டி, பரதனுக்குப் பட்டம் கட்ட யோசனை சொல்லித் தருகிறாள்.
பரதன் வருவதற்குள் தசரதன் ராமனிடம் கூறி, இருவரும் அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியதும், கைகேயிக்கு அறிவிக்கப்படாததும், சதித்திட்டத்தின் எதிரொலிகளே என்று ஆச்சாரியார் எழுத்து மூலமாகவே எடுத்துக் காட்டியிருந்தோம்.
