சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 1 · 1 / 14
‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற தலைப்பில் ஆச்சாரியார் அவர்கள் ‘கல்கி’ இதழில் தொடர்ந்து எழுதி வருவது வாசகர்கள் அறிந்ததே. இதுவரை பத்து கட்டுரைகள் வந்துள்ளன. திருமாலின் பத்து முரண்பட்ட அவதாரங்களைப் போலவே - ஆச்சாரியாரின் பத்து கட்டுரைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. அந்த தசாவதார கட்டுரைகளைப்பற்றி மொத்தமான விமர்சனத்தை மட்டும் இந்த இதழில் கூறிவிட்டு - அடுத்து வாரந்தோறும், ஆச்சாரியாரின் -அதாவது சக்கரவர்த்தியாரின், திருமகனைப்பற்றி - ஆச்சாரியரைப் பின்தொடர்ந்து - அவர் எப்படி பெய்ப்படி வளைவான பாதைகளில் போகிறார், தம் இனத்தை வாழ்விக்க - என்பதை கண்டு, அப்படிக் கண்டதை அவ்வப்போது உங்களுக்கு “முரசொலி” அறிவிக்கும்.
சகல சிறப்போடும் நடைபெற்று முடிவுற்றது தசரதன் செய்த அஸ்வமேதயாகம். அப்போது தசரதன் மனைவியர் அருந்துமாறு தேவபாயசம் அருளப்பட்டது. தசரதன் துணைவியர் மூவரும் தேவபாயசத்தை பங்கு போட்டு அருந்திக்கருவுற்றனர். அதை விவரிக்கிறார் ஆச்சாரியார்: படியுங்கள்!
“பாயசத்தில் அருந்திய பங்கின் விகிதாசாரப்படி இந்த நான்கு குமாரர்களுக்கும் விஷ்ணு அம்சம் சொல்லப்படுகிறது. முறையே ராமன் விஷ்ணுவில் பாதியென்றும், லக்ஷ்மணன் விஷ்ணுவில் கால்பகுதி என்றும், பரதனும் சத்ருக்கனனும் ஒவ்வொருவர் அரைக்கால் பங்காகவும் சொல்லப்படுகிறது.”
1954 - ஜூன் 6ஆம் நாள் ‘கல்கி’ இதழில் சக்கரவர்த்தித்திருமகன் கட்டுரையில் ஆச்சாரியார் எழுதிய வாசகங்கள் மேலே இருப்பவை, ஜூன் 6-ஆம் தேதி கட்டுரைக்கு அதே ஆச்சாரியார் மே மாதம் 23ஆம் தேதி பதில் சொல்லியிருக்கிறார், இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று ஜூன் 6இல் கூறுகிறார். 15 நாள் முன்னதாக ராமன் அவதாரமா என்ற வினாவுக்கு விடையளித்திருக்கிறார், படியுங்கள் அதையும்.
“வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன், வீரபுருஷன், அபூர்வமான குணங்கள் பெற்றவன். அம்மட்டே; கடவுள் அல்ல.”
“வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமன் ஒரு மகா புருஷன், ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை.”
**(மே. 23, ‘கல்கியில் ஆச்சாரியார்.)**
‘சக்கரவர்த்தித்திருமகன்’ ஒரே தொடர் கட்டுரை. ஒருவரே எழுதுகிறார் - அவரும் ஒரு சக்கரவர்த்தி - அவரே மே 23க்கும் ஜூன் 6க்குமிடையே இந்த அளவுக்கு முரண்படுகிறார். ஜூலை 18ஆம் நாள் ‘கல்கி’யில் அவரது கட்டுரையில் குறிப்பிடுவதாவது:-
“தமிழர்களுக்கு, “நீங்கள்தான் புராணத்தில் அரக்கர், என்று சொல்லப்பட்டவர்கள்” என்கிற புதுப்பட்டம் அளிப்பதற்குப் பழைய தமிழ் நூல்களில் ஆதாரம் எங்கும் இல்லை. அவர்களைத் தமிழர்கள் என்றும் - தம் முன்னோர்கள் என்றும், சிலர் இக்காலத்தில் அறிவின்மாக எண்ணியும் பேசியும் வருவது பரிதாபம்.”
அரக்கர் எனக் கூறப்பட்டவர் தம் முன்னோரே, என்று எண்ணியும் பேசியும் வருவது அறிவின்மாம்! அறிவின்மாம் தோழர்களே அறிவின்மாம்! அறிவுக் கடல் எனத் தன்னை எண்ணியிருக்கும் அகந்தை நிறை ஆச்சாரியார் கூறுகிறார்: அறிவின்மென்று! அவருக்கு பண்டித நேருவின் மொழிகளையே பதிலாகத் தர விரும்புகிறேன்.
“உண்மையை உரைக்குமிடத்து, ராமாயணக் கதையானது ஆரியர்கள் தென்னாட்டின்மீது படை எடுத்துச் சென்ற போது அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த சண்டையைப் பற்றிக் கூறுகிறதென்று சொல்லலாம். மகாபாரதம் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த சண்டையைப் பற்றிச் சொல்லவில்லை, ஆரியர்களுக்கும் ஆரியர்களுக்கும் நடந்த சண்டையைப் பற்றித்தான் அது சொல்கிறது. “தென்னிந்தியாவில் இன்றைக்கும் திராவிடர்களே வசித்து வருகின்றனர்.”
1928ஆம் ஆண்டு பண்டித நேரு, இமாலயத்தில் முசிரியில் இருந்த தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். “ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள்” என்ற புத்தகத்தில் இந்த உண்மைகளைக் காண முடியும். ஆச்சாரியார் என்ன சொல்லுகிறார் - ஆசியஜோதியாம் - அவரது தலைவராம் - நேரு பண்டிதரும் அறிவினத்தின் பாற்பட்டவரே என்று கூற முன் வருவாரா? - அல்லது தான் விரிக்கும் பொய்மை வலையை தானே அறுத்து விடுவாரா?
இன்னும் கவனியுங்கள் ஆச்சாரியார் முரண்படும் விதங்களை!
“முற்றிலும் வால்மீகியே கொடுத்த பாத்திரம் ராமனும் ராவணனும்! ராவணனைப்பற்றி வேறு கதையோ சரித்திரமோ இருந்ததா? இல்லை. வால்மீகிக்கும் முன்னதாக யாரேனும் ஒரு புராணமோ, பாட்டோ, சரித்திரமோ, அல்லது கல் சாசனமோ எழுதியிருந்து அதில் விஷயங்கள் வேறு விதமாக எழுதியிருப்பதைக் காண்கிறோமா? இல்லை;”
இது ஜூலை 18ஆம் நாள் ஆச்சாரியாரின் எழுத்து. இதே ஆச்சாரியார், மே 23ஆம் தேதி எழுதுவதையும் கூர்ந்து கவனியுங்கள்.
“வால்மீகி ரிஷியானவர், ராமாயணம் பாடுவதற்கு முன்னமேயே அதாவது புராதன காலந்தொட்டே - சீதாராம சரித்திரம் மக்களிடையே எழுத்து வடிவம் பெறாமலே, பல நூற்றாண்டுகள் வாய் வழிக்கதையாக வழங்கிவந்திருப்பதாகத் தோன்றுகிறது. காண்ட பரம்பரையாக முன்னமே இருந்த ராம சரித்திரத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற்போல் தோன்றுகிறது.”
மே 23ஆம் தேதி மேற்கண்டவாறு எழுதிய ஆச்சாரியார், ஜூலை 18ஆம் தேதி அதே ‘கல்கி’யில், “ராம கதையைப் பற்றிய விஷயங்களைப் பெற்றது வால்மீகி நூல் வழியேதான்; வேறு எங்கிருந்தும் அல்ல!” என்று உறுதியாகக் கூறுகிறார்! - இன்னும் பாருங்கள் சக்கரவர்த்தியாரின் முரண்பாட்டை!
“வால்மீகிக்கு முன்னதாக, யாரேனும் ஒரு புராணமோ பாட்டோ - சரித்திரமோ - அல்லது கல் சாசனமோ எழுதியிருந்து அதில் விஷயங்கள் வேறு விதமாக எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோமோ? அப்படி ஏதேனும் இருந்திருக்கும் பட்சத்தில் வால்மீகி முனிவரானவர், ராமனுக்கும் தேவர்களுக்கும் பட்சபாதமாக மாற்றியும் விஷயங்களை மூடியும் மறைத்தும் சொல்லி சமாதானங்களைக்காட்டி நம்மை ஏமாற்றுகிறார் என்று ஒரு வேளை வாதாடலாம்.
முதலிலே ஒரு கதையிலிருந்து அதை மூடி மறைத்து மறுப்பிச் சொன்னால் அதை “ஏமாற்றுதல்” என்று கூறலாம் என்பதாக ஜூலை 18ஆம் தேதிய இதழில் குறிப்பிடுகிறார். ராமர் கதையை முதலில் எழுதியது வால்மீகி. வால்மீகி, ராமனை பெரிய வீரனாக சித்தரித்தார். அந்த வீரனை அவதார புருஷனாக மாற்றினார் கம்பர். இதை தனது முதல் கட்டுரையில் ஆச்சாரியார் அவர்களே, குறிப்பிட்டிருக்கிறார். இதை “ஏமாற்றுதல்” என்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்ளுவாரா?
மாட்டாரா? இப்போது! - அது மட்டுமல்ல; வால்மீகிதான் ராமாயணத்தின் கர்த்தா - அந்த வால்மீகி சிருஷ்டித்த அகல்யா என்ற பாத்திரத்தை கம்பர் மாற்றி திருத்திவிட்டார். இதை தனது பாஷைப்படி - கம்பர் நம்மை ஏமாற்றுகிறார்” என்று ஆச்சாரியார் உரைத்திட முன் வருவாரா?
அகல்யாவைப் பற்றி ஆச்சாரியாரே தீட்டுகிறார் கவனியுங்கள்!
குடிசை நுழைந்த பூமான்!
“ஒரு நாள் இந்திரன், சமயம் பார்த்து, ஆசிரமத்தில் முனிவர் இல்லாத காலத்தில் கவுதமருடைய உருவத்தையும் முனி வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் புகுந்தான். அகலிகையின் உலக பிரசித்தமான அழகை நினைத்து அவளை அடையும் கெட்ட எண்ணத்துடன் வந்தான்; இவ்வாறு திருட்டுத்தனமாக வந்த தேவராசன் அகல்யா தேவியைப் பார்த்து, ‘அழகியே எனக்கு ஆசை மேலிட்டிருக்கிறது. இந்த நிலையில் காலப்பொருத்தம் பார்க்கலாகாது.
நாம் கூடுவோம்’ என்று முனிவர் சொல்லுவதுபோல் சொன்னான் ரிஷியின் மனைவி உடனே விஷயத்தைத் தெரிந்து கொண்டு விட்டாள். இவன் தன் புருஷன் அல்ல. இந்திரன் என்பது தனக்குத் தெரிந்துவிட்டது. ஆயினும் தேவராஜனே தன்னைத் தேடிவந்தான் என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு மனநிலையிழந்துவிட்டாள். தேவராசனுடைய விருப்பத்திற்கு உடன் பட்டுவிட்டாள்.
பிறகு “தேவராஜனே, சீக்கிரம் அப்புறப்பட்டுப்போ பெரும் அபாயத்திலிருந்து எப்படியாவது காப்பாற்றிக்கொள் என்று எச்சரித்தாள்.”
ஜூலை 18ஆம் தேதி இதழில் அகல்யாவைப்பற்றி ஆச்சாரியார் எழுதியுள்ளதுதான் மேலேயிருப்பது.
“இது வால்மீகி ராமாயணத்திலுள்ள அகலிகைக் கதை, மற்ற புராணங்களிலும் கதைகளிலும் சில விஷயங்கள் பேசப்பட்டு வழங்கி வருகின்றன. அதனால் குழப்பம் வேண்டியதில்லை.”
என்றும் ஆச்சாரியார் போதிக்கிறார், மூலக் கதையிலேயுள்ள உண்மை பேதப்படுமேயானால் அப்படி பேதமுண்டாக்கி எழுதியவர் நம்மை ஏமாற்ற எண்ணுகிறார் என்று வாதிடலாம் எனச் சொல்லிய ஆச்சாரியாரே - அதனால் குழப்பம் வேண்டியதில்லை யென்றும் கூறுவதுதான் விந்தை! தலைவலி ஏற்படுகிற அளவுக்கு குழப்பத்தை உண்டாக்கிவிட்டு, குழப்பம் வேண்டியதில்லை என்றும் அறிவுரை பகருகிறார்.
