உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 7 · 7 / 19

மணமக்களுக்கு அறிவுரை வழங்குவதுபோல் நான் இதைச் சில இடங்களில் வாழ்த்துரையில் இணைத்துக் கூறியிருக்கிறேன்.

நாகையில் ஒரு திருமணம். அங்கு வாழ்த்துரைக்குச் சென்ற நன்னிலம் நடராசன் என்ற கழகப் பேச்சாளர் இந்தக் கதையை நகைச்சுவையுடன் கையொலியும் சிரிப்பொலியும் எதிரொலிக்கிற அளவுக்குச் சொல்லியிருக்கிறார்.

அதே மண விழாவுக்கு இன்னொரு பேச்சாளர் தாமதமாக வந்திருக்கிறார். அவருக்கு நன்னிலம் நடராசன் இந்தக் கதையைச் சொன்னது தெரியாது. அவரை வாழ்த்த அழைத்த போது அவரும் இதே கதையை மிகவும் அழகுபடவும் சுவையாகவும் நீட்டி முழக்கியும் சொல்லியிருக்கிறார். மக்களிடமிருந்து எந்தவிதமான வரவேற்பும் இல்லை. பலர் எழுந்து போகத் தொடங்கினர். சிலர் கேலியாகப் புன்னகை புரிந்தனர்.

பேசி முடிந்ததும் பேச்சாளர், நடராசனைப் பார்த்து “என்ன நடராசா! கலைஞர் சொன்ன கதையைச் சொன்னேன். ஒருவரும் ரசிக்கவில்லையே?” என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். “அண்ணே, நான் அந்தக் கதையை முதலிலேயே சொல்லிவிட்டேன்” என்று நடராசன் சிரித்திருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற சொற்பொழிவாளர்கள், தங்களுக்கு முதலில் பேசியவர்கள் என்ன பேசினார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நிகழ்ச்சிக்குத் தாமதமாக வர நேரிட்டால் மேடையில் உள்ளவர்களிடம் மாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பேசியதையே அடுத்தவரும் அதே நிகழ்ச்சியில் திரும்பப் பேசினால் அப்படிப் பேசுகிறவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

அதிலும் குறிப்பிட்ட குட்டிக் கதைகள், உவமைகள், உதாரணங்கள் கூறுவதில் தனக்கு முன் பேசியவர் எது குறித்துப் பேசினார் என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவது மிக முக்கியம்.

உருவத்திற்கும் பருவத்திற்கும் ஏற்ற வண்ணம் பேச்சு அமைந்திட வேண்டும் என்பது கூட அலட்சியப்படுத்திடக் கூடிய கருத்தல்ல! சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலும் என்னுடைய முன்னிலையிலும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு நடைபெற்ற இரண்டு நாடகங்களை இங்கே இரண்டு விஷயங்களுக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன்.

வடசென்னைப் பகுதியில் நடைபெற்ற ஒரு நாடகம், கட்சித் தோழர்கள் தயாரித்து நடத்திய நாடகம். ஏழை களுக்காகப் பாடுபடக்கூடிய ஒருவன். அவன் ஊர் மடாதிபதியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறான். ஏழைகள் பின்தொடர அந்த ஏழை பங்காளன் மடத்திற்குள் நுழைந்து, தங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் மடாதிபதியைப் பார்த்துக் கோபைடுகிறான்.

“உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கும் எங்கள் தொழிலாளர் வர்க்கத்தைப் பாரும்; உண்டு ஊதி உப்பிக் கிடக்கும் உம்மைப் போன்ற மடாதிபதிகள் கொழுத்திட எங்கள் வியர்வை ஆறாக ஓட வேண்டுமோ?”

இப்படி உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சியுடன் ரசித்துக் கையொலி எழுப்பிட வேண்டிய அந்தக் கட்டத்தில் நாடகம் பார்த்திட அந்த மண்டபத்தில் குழுமியிருந்தோர் அனைவரும் எகடியமாகச் சிரித்துவிட்டனர். அண்ணாவும் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கினார். நான் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் தவித்தேன்.

கையொலி பெறவேண்டிய வசனங்கள் கேலிச் சிரிப்புக்கு உள்ளானது ஏன் தெரியுமா?

ஏழை பங்காளன் எந்த மடாதிபதியைப் பார்த்து, “உண்டு—ஊதி—உப்பிக் கிடக்கிறாய்!” என்று சொன்னாரோ அந்த மடாதிபதி வேடம் போட்டவர் கொத்தவரங்காய் போன்ற உடல் படைத்தவர். கூனிக்குறுகி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தார். “உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கிறோம்” என்று முழங்கியவரோ வாட்டசாட்டமாகவும் தொந்தியும் தொப்பையுமாகவும் சுமார் முந்நூறு பவுண்டு எடையுள்ளவராகத் தோற்றமளித்தார்.

ஒன்று வசனத்தை மாற்றியிருக்க வேண்டும், அல்லது வேடத்திற்குப் பொருத்தமாக நடிகர்களையாவது மாற்றியிருக்க வேண்டும்.

இதுபோன்ற தவறு சொற்பொழிவாற்றும் மேடைகளிலும் ஏற்படுவதுண்டு. பருமனாக உள்ள ஒருவர் ஏழைப் பாட்டாளிகளைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அவர்கள் பட்டியலிலே இணைத்துக் கொண்டு,

“எங்களின் பஞ்சடைந்த கண்களைப் பாருங்கள். பசித்துக் குமுறி ஒட்டிய வயிறுகளைக் காணுங்கள். உலர்ந்த உதடுகளை நோக்குங்கள்.

வாடிய மேனியை மேலும் வதைக்கும் வறுமை நீங்க வழி காணுவோம் வாருங்கள்!”

என்று பேசினால்; கூட்டத்திலிருப்போர் அந்த உரையில் உள்ள உணர்வை மறந்துவிட்டு, உரையாற்றுபவரின் உடலை விமர்சித்துக் கொண்டிருப்பார்.

ஏழை எளியோருக்காக வக்காலத்து வாங்கிப் பேச வேண்டுமே தவிர, பேசுகிறவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட, தன்னையும் பஞ்சடைந்த கண்கள் கொண்டோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு பேசுவது உரிய பயனைத் தராது.

புல் தடுக்கினால் கீழே விழக்கூடிய அளவுக்கு உடல் வலிவு படைத்தவர்களாக இருக்கும் பேச்சாளர்கள், அலெக்சாண்டரின் ஆற்றலை—நெப்போலியனின் அஞ்சா நெஞ்சத்தை—சேர சோழ பாண்டியர்களின் வீரவரலாற்றை விவரித்துச் சொல்வதின் மூலம் கூடியிருக்கும் மக்களைக் கவரலாம். ஆனால், அந்தப் பேச்சாளர்கள் தங்களின் உள்ளத்து உறுதியை வெளிக்காட்டுகிற அளவுக்கு வார்த்தைகளைத் தொடுக்க வேண்டுமேயல்லாமல்—தங்களின் உடல் வலிவை மிகைப்படுத்திப் பேசினால் அதனை மக்கள் எகடியமாகக் கொள்வார்களே தவிர, பேச்சாளரின் உணர்வுகளோடு ஒன்றிவிட மாட்டார்கள்.

உருவத்தைப் போலவேதான் பருவமும்! வயதுக்கேற்ற பேச்சாக இருக்க வேண்டும். வயது மீறிய பேச்சுக்களை ஏதோ ஒப்புக்குப் பாராட்டுவார்களே தவிர அந்தக் கருத்துகளுக்கு உரிய மதிப்பை மக்கள் வழங்கமாட்டார்கள்.

“ஒளவையப்பாட்டி ஆத்திச்சூடி இயற்றினார். அறஞ்செய விரும்பு—ஆறுவது சினம் போன்ற ஒளவையாரின் அறிவுரைகளை நாம் இந்த இளமைக் காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் மறந்துவிடக் கூடாது”

இப்படியொரு சிறுமியோ, சிறுவனோ பேசும்போது இயற்கையாக இருக்கும். அதே சிறுமி அல்லது சிறுவன்;