பேசும் கலை வளர்ப்போம்
கட்டுரைகள் 6 · 6 / 19
புண்ணியகோடியும் அவரது மனைவியும் மட்டுமல்ல; பதின்மூன்று வயது மணிமேகலை என்ற மூத்த பெண்ணும் எனத் தொடங்கி, ஒரு வயதுப் பிஞ்சுக்குழந்தை வரை ஆறு பிள்ளைகளும் பெற்றோருமாக எட்டுப்பேர் வறுமைக்குப் பலியாயினர் இந்த ஆட்சியிலே என்று உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றுவேன். என்னுடன் கூட்டங்களில் கலந்து கொள்ளும் எனது நண்பர் டாக்டர் இராமய்யா அவர்கள் மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவர், நல்ல நண்பருங்கூட!
அவர் சட்டமன்றத் தேர்தலில் 1962-ம் ஆண்டு போட்டியிட்டார்—கழகச் சார்பு வேட்பாளராக! அவரது தொகுதியில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புண்ணியகோடி கதையைச் சொல்லி மக்களை உருகிட வைக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறார்.
பெருங்கூட்டம் கூடியிருந்தது; வேட்பாளர் பேசுவார் என அறிவிக்கப்பட்டது! வேட்பாளர்கள் எப்போதுமே குறைந்த நேரம் பேசி, வாக்காளர்களிடம் ஆதரவு கோரி, விட்டு விரைவில் உரையை முடித்துக் கொள்வதே நல்லது! நண்பர் டாக்டர் கூட்டத்தைப் பார்த்ததும் நீண்ட நேரம் பேச விரும்பி புண்ணியகோடி கதையையும் தொடங்கி விட்டார்.
அந்தக் குடும்பத்தின் வறுமை—கஷ்டம்—அதனால் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த கொடுமை—எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு, அவர்களைக் கிணற்றடிக்கு அழைத்து வந்துவிட்டார். முதல் பிள்ளை மணிமேகலை என்று பெயரையும் கூறிவிட்டு, அத்துடன் நிறுத்தாமல் அதன் வயது ஐந்து என்று கூறி, அதைத் தூக்கி அந்தப் பெற்றோர் கிணற்றில் போட்டதைச் சொன்னார்.
இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு வயது சொல்ல வேண்டுமே! இரண்டாவது குழந்தைக்கு வயது மூன்று என்றார்! மூன்றாவது குழந்தைக்கு வயது இரண்டு என்றார்! நான்காவது குழந்தைக்கு வயது ஒன்று என்றார்! ஐந்தாவது குழந்தைக்கு... வயதைச் சொல்ல முடியாமல் தடுமாறினார்!
மணிமேகலை வயது பதின்மூன்று என ஆரம்பித்திருந்தால்தான் கணக்கு சரியாக வந்திருக்கும். வயதில் தடுமாறியவுடன், கவலைப்பட வேண்டிய மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அது மட்டுமல்ல; இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை வெறும் செய்தி சொல்வது போலச் சொல்லிக் கொண்டிருந்தால் அதன் வாயிலாக உருவாக்க நினைக்கிற உணர்ச்சியையும்,எழுச்சியையும் நிச்சயமாக மக்கள் மத்தியில் உருவாக்க முடியாது.
பேச்சாளர்கள் அவரவர்களுக்கென்று ஒரு தனியான பாணியை அமைத்துக் கொள்ளவேண்டும். அவரைப்போல் பேசுகிறார்; இவரைப்போல் பேசுகிறார் என்று மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க முனைந்து விட்டால் பிறகு அந்தப் பாணியில் செலுத்துகிற கவனத்தைப் பேச்சில் செலுத்திட மாட்டார்கள்.
“பானை உடைந்திருக்கிறதா இல்லையா என்பதைத் தட்டிப் பார்த்து அதன் ஒலியில் இருந்து அறிந்துகொள்வதைப் போல—மனிதன் அறிவாளியா அல்லவா என்பதை அவன் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம்”
என்று டெமஸ்தனிஸ் கூறியுள்ளதைப் பேச்சாளர்கள் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
முன்பெல்லாம் நான் திருமண விழாக்களில் பேசும் போது வெளிநாட்டுச் சிறுகதையொன்றை எங்காவது ஒரு மணவிழா நிகழ்ச்சியில் சொல்லுவதுண்டு. அந்தக் கதையை மிக விரிவாக மெருகிட்டு நமது தாய்நாட்டுக்கு ஏற்றவாறு கூறுவேன்.
“ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஏழ்மை அவர்களைத் தாக்கியது. பிழைப்புக்கு வழியின்றித் தவித்தனர். ஒருநாள் மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான்.
வழியில் மாடு அங்கு மிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற் குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி, கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய் விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக் கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்து விடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து “அட முட்டாளே! நானும் உன்னை கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்—ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய்—கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய்—இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியே விடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்” என்றான்.
அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றான். நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிட வேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிட வேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களை எல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து, “அந்தத் தேநீராவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்களா?”
என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப் போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்து விட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, “என்னடா, உன் மனைவி உன்னைவிட மூடமாக இருக்கிறாள்?” என்று கேட்டான். “அப்படியொன்று மில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ கோபமோ இருந்தாலும் அதைப் பிறர் முன்னால் காட்டிக் கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்” என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
தங்கள் குடும்பத்துப் பிரச்சனைகளைப் பிறர் முன்னால் பெரிதுபடுத்தக் கூடாது என்பதற்கு இந்தக் கதை எடுத்துக் காட்டு!”
