உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 5 · 5 / 19

இப்படி நான் கூறியதும் கையொலி! மகிழ்ச்சியொலி! அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டு “சபாஷ்” பெற்று விட்டேன்.

கூட்டங்களில் பாராட்டியும் கைத்தட்டுவதுண்டு! பேச்சை முடித்துக் கொள்ளச் சொல்லியும் கைத்தட்டுவதுண்டு! நான் குறிப்பிட்ட கே. கே. நீலமேகம் அவர்கள் குடந்தையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த நோக்கும், கொள்கை உறுதியும் கொண்ட பெரியவர் நீலமேகம், தமது வரவேற்புரையை எழுதியே படித்தார். எழுதிப் படிக்கும் நீண்ட உரைகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்பதில்லை. அதிலும் அன்று அவரது உரை மிக மிக நீண்ட உரை! அத்துடன் பிற்பகல் உணவு வேளையும் நெருங்கிவிட்டது. அடுக்கி வைத்திருந்த தாள்களில் 25-ம் பக்கத்திற்குப் பிறகு 26-ஆம் பக்கம் விட்டுப்போய் 27-ஆம் பக்கத்தைப் படித்தார்.

பேச்சின் தொடர்பு அறுந்துபோயிற்று, மாநாட்டுப் பந்தலில் கேலிச் சிரிப்பும் கைத்தட்டலும் எழுந்தது. கே. கே. என். அவர்களுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது!

“யார் கேட்டாலும் சரி கேட்கா விட்டாலும் சரி! ஒரு ஆள் மட்டும் இந்தப் பந்தலில் மிச்சமிருக்கும் வரையில் நான் எனது உரையைப் படித்துத்தான் தீருவேன்.”

இப்படி அவர் கர்ச்சனை செய்தபிறகு பந்தலில் அமைதி ஏற்பட்டது. எழுதிப் படிக்கிற உரைகளானாலும் அவற்றை ஒரு முறைக்கு இருமுறை கவனமாகப் படித்து, பக்க எண்களைச் சரியாகக் குறித்து ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொண்டு மக்களைக் கவரும் வகையில் குரலை உயர்த்திப் பேசவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினேன்.

நாடக உலகிலும் திரையுலகிலும் ஓரளவு புகழ்பெற்ற நடிகர் ஒருவர் என்னுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஆரணிக்கு வந்திருந்தார். அவர் பேச்சாளர் என்று அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது. தொடக்கத்தில் கடல்மடை திறந்தாற்போல் வார்த்தைகளைக் கொட்டினார். அவருடைய நினைவு எங்கேயோ இருந்திருக்கிறது! மக்கள் முன் எடுத்து வைத்த கருத்துக்களோடு அவர் ஒன்றியிருக்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தவர், திடீரெனத் திகைத்து நின்றுவிட்டார்.

ஒரு நிமிடத்திற்கு மேல் அப்படியே நின்றார். பேசிக்கொண்டு வந்த பொருள் பற்றிய தொடர்பை அப்படியே விட்டுவிட்டு அவர் “இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்” எனக் கூறி அமர்ந்துவிட்டார்.

இதிலிருந்து புரிவதென்ன? ஒரு பேச்சாளன் மக்களுக்குச் சொல்ல முயன்ற கருத்துக்களுடன் தானும் உண்மையிலேயே இரண்டறக் கலந்திருந்தால்தான் தங்கு தடையின்றிப் பேசமுடியும்! எங்கேயோ மனத்தை உலவவிட்டு விட்டு, அரங்கின் முன்னே உதடுகளை அசைத்துக் கொண்டிருந்தால் உணர்வு பூர்வமான பேச்சாக அமையாது!

சொற்பொழிவைக் கேட்பதற்கு மக்கள் சங்கீதம் கேட்க வருவது போல் வந்த காலத்தை உருவாக்கிய பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு!

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது; சென்னை சேத்துப்பட்டுப் பகுதியில் அண்ணா பேசுகிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நான், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், முல்லை சக்தி ஆகியோர் ஒரு காரில் அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம். இரவு எட்டு மணியிருக்கும். கூட்டம் நடைபெறும் இடம் சரியாகத் தெரியவில்லை. ஒரு வெற்றிலை பாக்குக் கடையோரமாகக் காரை நிறுத்திவிட்டு “அய்யா! இங்கே கூட்டம் எங்கே நடக்கிறது?”

என்று விசாரித்தோம்! கடை வாசலில் வாழைப்பழம் உரித்துத் தின்று கொண்டிருந்த ஒருவர் எங்களைப் பார்த்து, “அதுவா! அண்ணாத்துரை கச்சேரி தானே? இப்படி இடது பக்கமாகத் திரும்பிப் போங்க!” என்று பதில் அளித்து வழி காட்டினார்.

சொற்பொழிவை ஒரு இசைக் கச்சேரியாகவே கருதிக் கொண்டனர். 1953-ல் நான் கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு சாதாரணக் கைதி என்னைப் பார்த்து கைக்கூப்பி, “நமஸ்காரங்க!” என்று சொன்னார். “என்னைத் தெரியுமா?”

என்று அவரைக் கேட்டேன். “ஓ! நல்லாத் தெரியுமே! மூணு மாசத்துக்கு முன்பு மணப்பாறையிலே கச்சேரிக்கு வந்திருந்தீங்களே” என்றார் அந்தக் கைதி! கூட்டங்களையே கச்சேரி என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நிலையை கடந்த எவ்வளவு தூரம் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? இவ்விதம் முன்னேறியுள்ள பேசும் கலையில் வல்லவர்களாகத் திகழ, பெரும் உழைப்பைத் தர வேண்டும் என்பதைப் பேச்சாளர்களாக விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

“அக்ராசனாதிபதி அவர்களே!” என்று விளித்தது மாறி—“அவைத்தலைவர் அவர்களே!” என்று தமிழில் ஒலிக்கிற காலம் இது! “ஸ்ரீமான் அவர்கள்!” என்பது “திருவாளர் அவர்கள்” என்று மாறியிருக்கிற காலம் இது! இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு எழுத்தாளர்கள் மட்டும்மல்ல; தமிழ்ப்பற்று கொண்ட சொற்பொழிவாளர்களும் காரணமல்லவா? கூட்டங்களில் பேசிப்பேசி அந்தச் சொற்களை மக்களின் உள்ளத்தில் பதிய வைத்துவிட்டதால் அல்லவா; அவை பழகிப் போய்விட்டன!

தமிழ் நூல்களை நிறையப் படிப்பதன் மூலமும், நல்ல தமிழ் ஏடுகளைத் தவறாமல் படிப்பதன் மூலமும் ஒரு தமிழ்ப் பேச்சாளர், தங்கு தடையற்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும்.

நுனிப்புல் மேய்பவர்களாகப் பேச்சாளர்கள் இருந்தால், ஒவ்வொரு கூட்டத்திலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். அன்றாடம் ஏடுகளில் வருகிற புதிய செய்திகளைக்கூட அவர்கள் எடுத்துப் பார்ப்பதில்லை.

சில பேச்சாளர்கள் ஒரு பேச்சைத் தயார் செய்து கொண்டு அதை வைத்துக்கொண்டே ஓராண்டு காலம், ஒரு சுற்று வந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு, மற்றொரு பேச்சைத் தயாரித்துக்கொண்டு புறப்படுவார்கள். ஒரு இடத்தில் சொன்ன கருத்தையோ அல்லது கையாண்ட உவமையையோ மற்றொரு இடத்தில் கூறுவது தவறல்ல! ஆனால், அவற்றைச் சொல்லும் கோணத்தில் மாற்றங்கள் இருந்தால்தான் பேச்சு பொலிவு பெறும்! அதே வார்த்தைகள்—அதே வாக்க அமைப்பு—பதிவு செய்யப்பட்ட நாடா (டேப்) போலத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டால் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக அவரது பேச்சைக் கேட்பவர்கள் அலுத்துக்கொள்ள நேரிடும்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கோ அல்லது பெண்களுக்கோ யாரோ ஒருவருக்கு சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் திருமணம் நடத்தி வைப்பார். பெரிய அளவில் மண விழா நடைபெறும். பெரியார், அண்ணா, ஜீவா இவர்கள் எல்லாம் அந்த மணவிழாக்களில் தவறாமல் கலந்துகொள்வார்கள். சில புலவர்களும் கலந்து கொள்வார்கள்.

ஒரு புலவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) மணமக்களை வாழ்த்துவோர் வரிசையில் ஒவ்வொரு முறையும் இடம் பெறுவார். முற்போக்குக் கருத்துக் கொண்டவர் என்று அவர் தன்னைச் சொல்லிக்கொண்ட போதிலும் மணவிழாவுக்கு வந்தோரைச் சிரிக்க வைப்பதற்காக நகைச்சுவை என்ற பெயரால் படித்த பெண்களைக் கேலி செய்வார்.

படித்த பெண்கள் சமையற்கட்டுக்குப் போனால் கத்திரிக்காய்ப் பொரியல் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக முதலில் கத்திரிக்காய்க்குச் சோப்புப்போட்டுக் கழுவுவார்கள் என்பார். காய்கறி நறுக்கும் கத்திகளில் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதற்காக அந்தக் கத்திகளை “டெட்டால்” விட்டுக் கழுவுவார்கள் என்பார். இதையே அந்த வீட்டில் நடந்த திருமணங்களில் மூன்று தடவை அப்புலவர் பேசியிருக்கிறார்.

ஒருமுறை நானும் இயக்குநர் பீம்சிங் அவர்களும் கலைவாணர் வீட்டில் நடந்த நாலாவது திருமணத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். பீம்சிங் வருவதற்குச் சிறிது தாமதமாகிவிட்டது.

“என்ன பீம்! திருமணம் முடிந்திருக்குமே! அண்ணா பேச ஆரம்பித்து விட்டுப்போகிறார்! வாருங்கள் விரைவாக!” என அவசரப்படுத்தினேன்.

“அவசரப்படாதீங்க சார்! இப்பத்தான் அந்த......ப் புலவர் கத்திரிக்காய்க்கு சோப்பு போட்டுக்கொண்டிருப்பார்” என்றார் கேலியாக!

பேசியதையே பேசுதல்—அதுவும் ஒரே ஊரில் பேசுதல்—அதிலும் ஒரே வீட்டுத் திருமணத்தில்—அல்லது நிகழ்ச்சியில் பேசுதல்—எந்த அளவுக்கு விரும்பத்தகாததாகப் போய்விடுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு!

வேறு சிலர், சில சொற்பொழிவாளர்கள் பேசியதையே தாங்களும் பேசி அவர்களைப் போல மக்களின் பாராட்டுதலைப் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டுத் தோல்வியை அணைத்துக் கொள்வதும் உண்டு!

காங்கிரஸ் ஆட்சியாளரைச் சாடுவதற்காக நான் கூட்டங்களில் புண்ணியகோடி என்பவர் வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சியை மிகுந்த சோகப் பெருக்குடன் விவரிப்பது உண்டு! எதிரில் இருந்து கேட்கும் மக்கள் கண்ணீர் வடித்திடுவர்!