உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 4 · 4 / 19

இப்போதும்கூட இளைஞர்களாக இருக்கும் பேச்சாளர்கள் தாங்கள் பேசுவதற்கு மேடையில் ஏறியதும் தலைவருக்கும் அவையோருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, “அறிவியலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாத நான் பேசுவதில் குற்றம் குறைகள் இருந்தால் மன்னித்துவிட வேண்டுகிறேன்” என்று பேச்சைத் தொடங்கினால், அந்த இளைஞரிடம் அவையோருக்கு ஒரு அன்பும் பாசமும் நிச்சயம் ஏற்படும்.

மனப்பாடம் செய்துகொண்டு மேடையேறுகிற பல இளைஞர்கள், பாடம் செய்ததைப் பரபரப்புடன் ஒப்புவிக்கும்போது இடையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் திகைத்துப்போய் நின்று, மீண்டும் தாங்கள் மனப்பாடம் செய்ததைத் தொடக்கத்திலிருந்து கூற முனைவார்கள்! அவர்களுடைய மூளையில் பெரிய விஷயங்களை ஏற்றாமல்—நாட்டு நடப்பில் அவர்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களை மட்டுமே பதியவைக்க வேண்டும். அப்பொழுதுதான், தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியும்.

“எதென்சு நகரத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசைப் போல்—பொதுவுடமைப் பூங்காவுக்குக் கருத்து விதையிட்ட காரல்மார்க்சைப்போல்—இருளில் ஒளி கண்ட இங்கர்சாலைப் போல்—தன்மானச் சிங்கம் தந்தை பெரியார் விளங்கினார்.”

இப்படி எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மேடையில் பேசுகிற இளம் பேச்சாளருக்கு, சாக்ரடீஸ் என்றால் யார் என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா? மார்க்ஸ் பற்றியும் இங்கர்சால் பற்றியும் அந்த இளம் பேச்சாளர் உணர்ந்திருக்க வேண்டுமல்லவா?

அதனால் பெரியார் விழாவில் பேசுகின்ற இளம் பேச்சாளருக்கு, எதைக் கற்றுத் தந்தால் மனத்தில் பதியுமோ, அதை மட்டுமே கற்றுத்தர வேண்டும்.

“பெரியார், சாதிகள் ஒழியவேண்டுமென்று பாடுபட்டவர்! பிர்மாவின் முகத்திலே ஒரு சாதியும், தோளிலே ஒரு சாதியும், தொடையிலே ஒரு சாதியும், காலிலே ஒரு சாதியுமாக மனிதர்கள் பிறந்தார்கள் என்பதைப் பெரியார் மறுத்து எல்லோரும் ஒரே குலம்தான்—மனித குலம்தான் என்று முழங்கினார்.”

இப்படி எளிய முறையில் எளிய நடையில் இளம் பேச்சாளர் பயிற்சி பெற்றால்தான், அவர் உதடுகள் உச்சரிக்கிற வார்த்தைகளுக்கும் அவரது உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்கமுடியும். அப்படித் தொடர்பு இருந்தால் தான் உணர்ச்சியோடு அந்தக் கருத்துக்களைச் சொல்ல முடியும்.

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை அவரது தொகுதிக்குப் பாராட்டு விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். முதல் நிகழ்ச்சியில் பேசும் போது அவர் குறிப்பிட்டார். “தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதாவது என்னை ஜெயிக்க வைத்தால் கலைஞரை அழைத்து வருவதாக! இப்போது அவரை அழைத்துவந்து வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்” என்று!

அடுத்து நான் பேசும்போது, “என்னை அழைத்து வருவது என்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதி அப்படி யொன்றும் பெரிதல்ல! மலிவான வாக்குறுதிதான்! நான் எப்போதும் மக்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பவன்” எனக் குறிப்பிட்டேன்.

பிறகு அதே தொகுதியில் இன்னொரு இடத்தில் கூட்டம்! அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயும் என்னை வரவேற்றுப் பேசினார். என்ன பேசினார் தெரியுமா?

“தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு மலிவான வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதுதான், என்னை ஜெயிக்க வைத்தால் கலைஞரை அழைத்து வருவேன் என்ற வாக்குறுதி!”

இப்படிச் சொன்னதும் என்னருகே இருந்தவர்கள் திடுக்கிட்டனர். நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். நான் அந்தத் தொகுதியில் முதல் கூட்டத்தில் அடக்க உணர்வோடு பயன்படுத்திய அந்தச் சொல்லைத்தான், தானும் குறிப்பிட வேண்டுமென்று அந்த உறுப்பினர் கருதிக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது!

‘மலிவு’ என்ற சொல்லுக்குக்கூடப் பொருள் புரியாத நிலை! மனத்தில் நினைத்தது வேறு! உதட்டில் வெளிப்பட்டது வேறு!

இதிலிருந்து, சொற்களை நிறைய அறிந்திருப்பதும்—உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்பதும் பேச்சாளர்களுக்கு முக்கியமான தேவைகள் என்பது உணரப்படுகிறதல்லவா?

நெஞ்சம், சொற் பஞ்சமுடையதாயிருந்தால் மேடைப் பேச்சால் மக்களைக் கவர்ந்திட இயலாது. சிலருக்கு மனத்தில் நல்ல கருத்துக்கள் தோன்றும். அவற்றை வெளிப்படுத்த உரிய சொற்கள் இல்லாமல் தவித்திடுவர். வேறு சிலருக்குச் சிறந்த கருத்துக்களும் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய சொற்களும்கூட உள்ளத்தில் நிறைந்திருக்கும். ஆனால் அப்படிக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடிய பேச்சுவன்மை அவர்களுக்கு வாய்க்காமல் போய்விடக் கூடும்.

பல மொழிகளில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற முதுபெரும் புலவர்கள் பலர் எதிரே அமர்ந்திருக்கும் அவையோரை ஈர்த்திடும் வண்ணம் விரிவுரையாற்ற முடியாமல் தோல்வியுற்றிருக்கின்றனர். சொற்பொழிவுக்குத் தக்கவாறு குரலின் ஏற்ற இறக்கம், எத்தகைய சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்கிற பழக்கம் இவையெல்லாம் ஒரு பேச்சாளர், ஆரம்ப காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தினாலும்கூட, போகப் போக அந்தப் பழக்கம் தானாகவே ஏற்பட்டு விடும்.

ஒரு ஆரம்பப் பேச்சாளன் தோல்வி அடைகிற இடம் அவன் நீண்ட நேரம் பேசவேண்டுமென்று எண்ணுகிற மேடைதான்! “அடேடே! இன்னும் கொஞ்சம் பேசியிருக்கக்கூடாதா?” என்று அவையோர் அல்லது பொது மக்கள் நினைக்கிற அளவுக்கு ஆரம்பப் பேச்சாளன் நடந்து கொள்ளவேண்டும்.

ஐந்து நிமிடம் அழகாகப் பேசத் தெரிந்தவுடனேயே, ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கிற மாநாட்டில் பேச வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அத்தகைய மாநாடுகளில் தலைவர்களும், அந்தக் கட்சிகளின் முன்னணியினரும் என்ன பேசுகிறார்கள்; எப்படி மக்களைக் கவருகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

எத்தனை மணி நேரம் ஒரு சொற்பொழிவாளர் பேசினார் என்பதைவிட, என்ன பேசினார் என்பதுதான் முக்கியம்.

இளம் பேச்சாளனாக இருந்த நான் ஒரு முறை குடந்தையில் ஒரு கூட்டத்தில் பேசினேன். குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் தலைமையில் அந்தக் கூட்டம் நடந்ததாக நினைவு. அறிஞர் அண்ணா அவர்கள் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். என்னையும் பேசுமாறு கூறினார்கள். மிகக் குறைந்த நேரமே பேசி மக்களின் கைத்தட்டலையும் உற்சாக ஆரவாரத்தையும் பெற்றேன்.

“காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசினாராம்! அவர் மலையாம்! அண்ணா அவர்கள் துரையாம்! மலையில் மழை பெய்தால்தான் துரைக்கு வருமாம்! அதனால் அண்ணாதுரையை விட அண்ணாமலையே மேல்! இப்படிப் பேசிய அண்ணாமலை அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் அந்த மலையில் பொழியவேண்டிய மழைக்குத் தேவையான மேகம், இதோ எங்களிடம் இருக்கிறது! அதுதான் கே. கே. நீலமேகம்!”