உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 3 · 3 / 19

எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், இன்று மகா வித்துவானாக விளங்கக் கூடியவருமான, தண்டபாணி தேசிகர் அவர்கள்தான் எனது பேச்சுக்குத் தேவையான பல குறிப்புகளை எனக்கு வழங்கினார். அந்தக் குறிப்புகளைப் பெற, அவரது வீடு தேடி நாலைந்து முறை நடந்திருக்கிறேன். திருவாரூர் குமர கோவில் தெருவில் அப்போது அவர் குடியிருந்தார். அவர் தந்துதவிய குறிப்புகளை அப்படியே எழுதி, பல முறை மனப்பாடம் செய்து கொண்டேன். ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசிய எனக்குத்தான் மிகப் பெரும் பாராட்டு கிடைத்தது.

நான் அந்தப் பாராட்டைப் பெறுவதற்கு இரண்டு மூன்று நாட்கள், நான் எழுதிய குறிப்புக் கோவையை உறக்கமின்றி மனப்பாடம் செய்திருக்கிறேன். வீட்டில் உள்ள தூண்கள், சுவர்கள், இவைகளின் முன் எல்லாம் நின்று பேசிப் பார்த்திருக்கிறேன். என் வீட்டார் அனைவரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, நான் முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தியிருக்கிறேன். அதனால்தான் எனது மாணவப் பருவத்து முதல் மேடைப் பேச்சு, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவராலும் பாராட்டப்படுகிற அளவுக்கு அமைந்தது.

சபை நடுக்கத்தால் ஏற்படுகிற வேதனையான விளைவுகளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

‘கடவுள்’ என்ற தலைப்பில் எனது பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி! அதில் எனக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ நண்பர், பேசத் தொடங்கும்போதே நாக்கு தடுமாறிற்று. எப்போது பேச்சை முடிப்பது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த நண்பர் “இதுடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்று கூறுவதற்குப் பதிலாக—“இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என்றாரே பார்க்கலாம்!

கூட்டம் ‘கொல்’லென்று சிரித்துவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த “கட்டபொம்மன்” நாடகம், சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் எனக்குக் கிட்டியது. “தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க!” என்று அண்ணா சிவாஜிக்குக் கூறிய அன்பு வாழ்த்து—அந்த நிகழ்ச்சியில்தான்!

ஒரு பெரும் பட அதிபர், நாடகம் காண வந்திருந்தார். திடீரென சிவாஜி அவர்கள் அவரை மேடைக்கு அழைத்து மாலை அணிவித்து இரண்டு வார்த்தை வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பட அதிபர் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றார். கை கால்கள் உதறல் எடுத்தன. எத்தனையோ இயக்குநர்களை, நடிகர், நடிகைகளை, திரையுலக நிபுணர்களை உருவாக்கிய பெரியவர் அவர்! நூற்றுக்கணக்கானவர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரிகிற அளவுக்கு படத்துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர்.

இந்தி மொழியிலும் கூடப் படங்கள் எடுத்து, தமிழகத்துக் கலைத் திறனை வெளிப்படுத்தியவர். மலை போன்ற உருவம் கொண்டவர். அப்படிப்பட்டவர் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் வியர்வைக் கடலில் மிதந்தார். இறுதியாக அவர் பேசியது என்ன தெரியுமா?

“நானும் நீங்களும் கண்டு களித்த...இந்த...இந்த... பொம்மன் கட்டன் நாடகமானது...”

அதுவரையில் அவையோர் சும்மா இருப்பார்களா! அதிர் வெடிச் சிரிப்பு! இதற்குமேல் அவருக்குத்தான் பேச வருமா? முடியுமா?

இதிலிருந்து, பேசும் கலைக்குப் பெருமை சேர்க்க வேண்டுமானால், முதலில், கூட்டத்தைக் கண்டு ஏற்படுகிற அச்சத்தை மெல்லமெல்ல ஒத்திகை பார்த்தாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை புரிகிறதல்லவா?

தமிழை, இயல்—இசை—கூத்து என மூன்றாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். எண்ணிலடங்கா ஆண்டுகட்கு முன்பு, மனிதர்கள் நிர்வாணமாகத் திரிந்துகொண்டிருந்து பின்னர் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, இடுப்புக்குக்கீழே மட்டும் உறுப்புக்களை மறைத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் இயல் என்பது முதலாவதாகவும், இசையென்பது இரண்டாவதாகவும், கூத்து என்பது மூன்றாவதாகவும் அமைந்திருக்க முடியாது! சொற்களை அடிப்படையாகக் கொண்டது இயல்; ஒலியை அடிப்படையாகக் கொண்டது இசை!

அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது கூத்து!

மனிதன் தொடக்க காலத்தில் மொழியறிவே இல்லாதவனாகத்தானிருந்தான். கல்லையோ மரத்தையோ, மலையையோ, நதியையோ கண்டபோது அவற்றுக்கெல்லாம் அவன் பெயர் எதுவும் வைக்கவில்லை. அதனால் சொற்கள் தோன்றிட வேண்டிய அவசியமே இல்லை. சைகைகள் வாயிலாகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எதையும் உணர்த்திடத் தலைப்பட்டனர். கைகளை அசைத்து, தலைகளை ஆட்டி, ஊமைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்க்கையை நடத்தினர்.

அதன் பிறகு, தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கு ஒருவிதமான ஒலியையும், அருகில் இருப்பவரைத் தம் பக்கம் திரும்பச் செய்வதற்கு ஒருவிதமான ஒலியையும் எழுப்பினர். “ஏ” “ஓ” “ஈ” இப்படி ஒலிக்குறிப்புகள் வாயிலாகவே ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டனர். மூன்றாவது கட்டமாகத்தான் மனித சமுதாயம் தான் வாழ்ந்த அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது!

இயல், இசை, கூத்து என்பதில் இப்போது ‘இயல்’ முதல் வரிசையில் இருந்தாலுங்கூட, மனிதன் தோன்றி வளர்ந்து பல மாறுதல்களைப் பெற்றிடாத தொடக்க காலத்தில் அசைவுகள்—சைகைகள் மூலம் வாழ்க்கையை நடத்தினதால் கூத்து என்பதுதான் அப்போது முதல் இடத்தை வகித்திருக்கிறது. ஒலியை அடிப்படையாகக் கொண்ட இசை, அப்போதும் சரி—இப்போதும் சரி நடு இடத்திலேயே இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருந்த இயல், சொற்களின் அடிப்படையில் இயங்குவதால்—அந்தச் சொற்கள் இசைக்கும் தேவைப்பட்டு, அதே போல கூத்துக்கும் தேவைப்பட்டு, முதல் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.

அந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலமே எழுத்துக் கலையையும், பேச்சுக்கலையையும் திறமையாகக் கையாள முடியும்.

சொற்களைத் தேர்ந்தெடுப்பது என்றால் அகராதியை வைத்துக் கொண்டு சொற்களை மனப்பாடம் செய்து, அவற்றை நமது பேச்சில் எப்படியெப்படி பதியவைப்பது என்று முயற்சி மேற்கொள்வது அல்ல!

நிறைய நூல்களைப் படிப்பதாலும், நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகளைப் படிப்பதாலும் புதிய புதிய சொற்கள் நமக்குப் பழகிப் போய்விடுகின்றன. நாம் பேசும்போது அவை, தானாகவே வலிய வந்து விழ வேண்டும். வாக்கியத்துக்கு வாக்கியம் பொருத்தமான சொற்களை மேடையில் ஏறி நின்றுகொண்டு தேடக் கூடாது. ஓரளவு நாமே ஒரு அகராதியாக விளங்கிட வேண்டும். பேரகராதியாக விளங்க முடியாவிட்டாலும் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

சங்க இலக்கிய நூல் ஒன்றுக்கு உரையெழுதக்கூடிய அளவுக்குச் சொற்களைப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பேச்சாளருக்குத் தேவையில்லை. அதற்காக அத்தனை சொற்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் கூறவும் மாட்டேன். அவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டால் அவர்கள் மேலும் ஆற்றல் மிக்க பேச்சாளர்களாக ஒளிவிடமுடியும். அது மட்டுமின்றி, வளர்ந்துவரும் அறிவுலகத்தில் நாள் தோறும் புதிய புதிய சொற்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன.

அவற்றையெல்லாம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது ஒரு பேச்சாளரின் கடமையாகும்.

முன்பெல்லாம் அவர்கள் எவ்வளவு பெரிய பேச்சாளர்களாக இருந்தாலும்; தலைவர்களாக இருந்தாலும் மேடையில் ஏறியதும் சில நிமிடங்கள் பீடிகை போட்டு விட்டுத்தான் பேசுவார்கள்.

“அடியேன் பேசப்போகும் விஷயத்தில் குற்றம் குறைகள் இருக்கலாம். அப்படி இருக்குமேயானால் சபையோர்களாகிய நீங்கள், எப்படி பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அன்னப்பட்சியானது பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டு விடுகிறதோ அதைப்போல எனது பேச்சில் உள்ள நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகளை விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோலத்தான் பழங்காலத்துப் பேச்சுக்கள் அமையும். நான் தொடக்கத்தில் மேடையில் பேசும்போது இதே பீடிகையை வேறொரு உவமை கூறிப் பேசியிருக்கிறேன்.

“அவையோர்களே!சர்க்கரையையும் மணலையும் கலந்து வைத்தால்,எப்படி எறும்பானது மணலை விடுத்துச் சர்க்கரையை மட்டும் தின்றிடுமோ அதைப் போலும்—இரும்புத்தூளையும் மரத்தூளையும் கலந்து வைத்தால்,எப்படிக் காந்தமானது இரும்புத்தூளை மட்டும் இழுத்துக்கொள்ளுமோ அதைப் போலும்—என் பேச்சில் குறைகளைத் தள்ளிவிட்டு, நிறைகளை ஏற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இப்படி அன்னத்தையும் பாலையும் மாற்றி ஏதோ புதுமை செய்துவிட்டதாக நான் எண்ணிக்கொண்டிருந்த காலம் அது!