உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 2 · 2 / 19

“விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்”

என்றார் வள்ளுவர்! கருத்துக்களை ஒழுங்காக அமைத்து இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற்றால் அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ்வாறு நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எண்ணத்தில் எழுகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால்தான், வெற்றி கிட்டும் என்று சொல்லவன்மை என்ற அதிகாரத்தையே வழங்கியுள்ளார் வள்ளுவர்!

“அம்மா அப்பா” என்று மழலை பேசத் தொடங்கி ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்!

சொற்களைத் தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு- அவற்றை ஆள்வது என்பது வேறு!

அந்தச் சொல்லை ஆளுவது பற்றிய சுவையான தகவல்களைத்தான் உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.

1970-ஆம் ஆண்டு மேல் நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இலண்டன் மாநகரத்தில் பல பகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. “ஹைட்பார்க்” (HydePark)என்று ஒரு அழகான இடம்! அதனை ஒருசொற் பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் பசும் புல் தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று கொண்டிருப்பார். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல; பல இடங்களில்!

அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது, அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது, யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பார். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் அந்த இடத்தைத் தங்களின் பயிற்சிக்கூடமாகவே ஆக்கிக் கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசினாலும் தடையில்லை.

ஆங்கிலேய அரச பரம்பரையினரைப் பற்றிக் கூட ஆசை தீரத் தாக்கிப் பேசுவார்கள். பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக் கடுமையாக அலசுவார்கள்.

பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச்சாகக் கேட்டுக்கொண்டு, அன்றைய பொழுதைக் கழித்து விட்டு வீடு திரும்புவர்.

அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டுரிமைகளை அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலைசிறந்த இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா?

ஐ. நா. சபையில் மிக நீண்ட நேரம் பேசி, பெரியதொரு “ரிக்கார்டையே” ஏற்படுத்திய வி. கே. கிருஷ்ண மேனன்தான் அந்தப் பூங்காவிலே ஆரம்ப காலத்திலே பேசியவர்!

அவர் இலண்டன் நகரத்து “ஹைட் பார்க்”கில் நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது அவர் ஒரு காலத்திலே, ஐ. நா. அவையிலே புகழ்மிக்க சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினை யாக்கும். முதலில் நான் எப்படிப் பேசக் கற்றுக் கொண்டேன்? அதைச் சொல்ல வேண்டாமா? மேடையில் பேசியதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல!

அப்போது வயது எனக்கு பதினைந்து! என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் சிலரையும் நான் வசித்த தெருவில் உள்ள இளந்தோழர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு “சிறுவர் சீர்திருத்த சங்கம்” என்ற ஒரு அமைப்பை ஒரு ஓலைக் குடிசையில் தொடங்கினேன். அதில் காலணா கொடுத்தவர்களே உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். வாரந்தோறும் அவர்கள் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு பைசா சந்தாக் கட்டணம் செலுத்திவிட வேண்டும்.

“நெஞ்சுக்கு நீதி” என்ற எனது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, ஓலைக் குடிசையில் இருந்த அந்தச் சங்கம், விரைவில்—பழுதுபட்ட ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பே அந்த ஓலைக் குடிசையில் ஏழெட்டு சிறுவர்களை உட்கார வைத்துக்கொண்டு சங்கத்தின் தலைவனான நான் பேசுவேன்.

சிறுவர்கள் சுகாதாரத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. தீமை தாக்கக்கூடிய வார்த்தைகளை யாரும் பேசக் கூடாது. இதுபோன்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்வேன்.

அந்த ஓலைக் குடிசைக்குப் பக்கத்து வீடுதான் மறைந்த இசைமணி டி. வி. நமசிவாயத்தின் வீடு! நமசிவாயம் என் இளமைக் கால நண்பர். அவரது மாமன்கள்தான் டி. என். இராமன்—டி. என். லட்சப்பா என்ற சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களாக அப்போது அந்தப் பகுதியில் விளங்கியவர்கள். அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு பாட்டுக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு வழங்கிய விழாவுக்கு முயற்சி எடுத்துக் கொண்ட டி.எம். பார்த்தசாரதி, ஜலகண்டபுரம் கண்ணன் போன்றவர்களுடன் முன்னணியில் நின்று பாரதிதாசன் மலர் ஒன்றையும் வெளியிட்டவர்தான் டி.

என். இராமன்!

அத்தகைய அரசியல் சமுதாய ஈடுபாடு கொண்டவர்களை நண்பர் நமசிவாயம் இல்லத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாகப் பல புத்தகங்களையும் பத்திரிகைகளையும் காண முடிந்தது. பல அரசியல் தலைவர்களின் கருத்துக்களைப் படித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இது நமது கிராமங்களில் இன்னமும் ஒலிக்கிற பழமொழி. அதைப்போல பேசுவதற்கும் எதாவது விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால்தானே பத்து பேர் கூட்டமென்றாலும் பேச வரும். பல தலைவர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் பழக்கம்—நாளிதழ்கள்—வார—மாத இதழ்களை ஆர்வத்துடன் காத்திருந்து வாங்கிப் படிக்கும் பழக்கம்—இவைகள் என் உள்ளம் என்ற சட்டியை நிரப்பி வைத்திருந்தன. அந்த வயதில் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சமுதாயப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன்.

அதனால் அந்த ஓலைக் குடிசைக் கூட்டங்களில் என்னால் நடுக்கமின்றிப் பேச முடிந்தது. அந்தத் தயாரிப்பு, நான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேடைப் பேச்சுப் போட்டிக்கு மிகவும் துணையாக இருந்தது.

அவை நடுக்கம்—அதாவது சபைக் கூச்சம்—அதிலிருந்து ஒருவன் மீண்டுவிட்டால், அவன் நல்ல பேச்சாளனாக வாய்ப்புப் பெற்று விட்டான் என்று கூறிவிடலாம். இன்றைக்கு மேடை அதிர முழங்குகிற பல பேச்சாளர்கள் தங்களது முதல் மேடைப் பேச்சின்போது உடலிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் அதிக வியர்வை வழிந்தோட—நாக் குழற மேடையில் நின்றிருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அந்தச் சங்கடம் எனக்கு ஏற்படாமல் போனதற்கு இளம் வயது முதலே, சிறுசிறு கூட்டங்களில் நானே பேசிப் பழகிக்கொண்டதுதான். அப்படியிருந்தும்கூட பெரிய கூட்டங்களைக் காணும்போது ஆரம்பகாலத்தில் சிறிது நேரம் எனக்கு நடுக்கம் ஏற்பட்டதும் உண்டு. உயர்நிலைப் பள்ளியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் எனது முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினேன்.