உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 1 · 1 / 19

கலையை வளர்ப்போம் என்றால், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல!

“கலை என்பது கலைக்காக” என்றால், விளக்கு என்பது விளக்குக்காக என்று மட்டுமேயென விவாதிப்பது போலாகிவிடும்.

விளக்கு ஒளி தருவதற்காக!

அதைப் போலவே கலையும், சமுதாயத் துறையில்—பொருளாதாரத் துறையில்—அரசியல் துறையில்—அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை, செயலாற்றும் ஒளியைத் தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில் கலையை மட்டுமே காணுகிறோம்.

ஆனால் இராக, தாள, பாவங்களுடன் இனிய குரலில் இசைவாணர் பாடுகிறார். அவரது இசைத் திறனை வியந்து பாராட்டுகிறோம். மண்டபத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தலைகள், தம்மை மறந்து ஆடுகின்றன. “ஆகா! சபாஷ்!” என்று ஒலிகள் எழுப்புகின்றன.

அந்த இசை, வெறும் கலை நுணுக்கத்துடன் நின்றுவிடாமல் “வெண்ணிலாவும் வானும் போலே—வீரனும் கூர்வாளும் போலே—வண்ணப் பூவும் மணமும் போலே—கன்னல் தமிழும் நானும் அல்லவோ!” என்ற பாரதிதாசனாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம்—அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம்—கவிஞரின் கவிதைச் சுவையைப் பருகுகிறோம்—அனைத்துக்கும் மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம்.

எனவே, இசைப் பாடலாயினும், கூத்தாயினும், அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும்.

மேடையில் பேசுவதும் ஒரு கலைதான்! இசையில், நடனத்தில், நாடகத்தில் அதற்குரியோர் ஏற்கனவே பயிற்சி பெற்று ஒத்திகை பார்த்துக்கொண்டு திரும்பத் திரும்ப அதே பாடலை, அதே ஆடலை, அதே நடிப்பை, அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்!

ஆனால், பேச்சுக்கலை அப்படியல்ல! ஜனநாயகம் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பள்ளிக்கூடங்களிலேயே பேச்சுப் போட்டிகள், பரிசளிப்புகள் என்று ஆரம்பமாகிவிடுகின்றன.

ஊராட்சி மன்றங்களில் ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப் பேச வேண்டியிருக்கிறது.

நகராட்சி மன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களிலும் அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டியிருக்கிறது.

சட்டமன்ற அவைகளில் தொகுதியைப் பற்றியும், மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது; சூடாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

பாராளுமன்ற இரு அவைகளிலும் நாட்டுப் பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் சட்டப் பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிக் கனிவுடனும் பேச வேண்டியிருக்கிறது; காரசாரமாகவும் பேச வேண்டியிருக்கிறது.

கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே விவாதம் எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டுமல்லாமல், அவற்றை வாதாடும் திறமையுடனும் நடத்திட வேண்டியிருக்கிறது.

நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில் வாதாடுகிற வழக்குரைஞர் எவ்வளவு பெரிய சட்ட மேதையாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச்சாற்றல் தேவைப்படுகிறது.

இப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர்சிக்கிற அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது.

எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத் தொடர் கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டுக் காட்டவில்லையென்றாலும்கூட, பல்வேறு துறைகளிலும் தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பல செய்திகளையும் விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை உங்களில் பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவுமென்று நம்புகிறேன். ஏற்கனவே பேச்சாளர்களாக இருக்கிற சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக்கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணைபுரியும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

அத்தகைய நல்ல நோக்கத்துடன்தான் இந்தத் தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்றல்ல; பேச்சுக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகிற இளந்தலைமுறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச் சிந்தித்துப் பார்த்து, ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக்கூடியவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.