பேசும் கலை வளர்ப்போம்
கட்டுரைகள் 8 · 8 / 19
“ஒளவையார் என்ற பெயரில் ஒருவர் மட்டுமல்ல! வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஒளவை வேறு!—ஆத்திச்சூடி பாடிய ஒளவை வேறு! இரண்டு ஒளவையார்களையும் ஒருவரேயென எண்ணிக் குழப்பிக் கொள்வது கூடாது!”
எனக் கூறிவிட்டுப் புறநானூற்றுப் பாடல் ஒன்றையும் பாடிக் காட்டினால், அது இயற்கையானதாகவோ, அந்தச் சிறுமியோ சிறுவனோ உணர்ந்து பேசுவதாகவோ அமையாது.
வயது வந்தவர்கள் மட்டுமே பேசக் கூடியதை இளைஞர்கள் பேசுவதும்—வயது வந்தவர்களும், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தங்களின் வரம்பை மீறிப் பேசுவதும்—சுவைக்கத் தக்கவைகளாக இருந்திட மாட்டா!
“கல்யாணம் பண்ணிக்கிறதே முட்டாள்தனம்! ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்பினால் அவங்க பாட்டுக்கு ஒழுங்கா வாழ்க்கை நடத்த வேண்டியதுதான். பிடிக்கலேன்னா ரத்து பண்ணிட்டு போக வேண்டியதுதான். கல்யாணங்கிறத்திலே என்ன புனிதம் வந்து கிடக்கு : வெங்காயம்!”
இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில்—மேடையில் மணமக்களையும் அவர்களது உற்றார் உறவினர் நண்பர்களையும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பெரியார் ஒருவரால்தான் பேச முடிந்தது!
அவரது வயது—உழைப்பு—தியாகம்—ஓய்வில்லாத தொண்டு—கொள்கைக்கும் அப்பாற்பட்டு அவரிடம் ஆத்திகர்களும்கூடக் கொண்டிருந்த மரியாதை—இவ்வளவும் அவருக்குத் துணை நின்ற காரணத்தால் திருமண வீட்டிலேயே திருமணத்தை எதிர்த்து அவர் பேசியபோது அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்; வெறுப்பைக் காட்டாமல் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பெரியார் போலப் பேசுவதாக எண்ணிக்கொண்டு வேறு யார் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் மேடைகளில் உரையாற்றினாலும் எதிரே வீற்றிருப்போர் முகஞ்சுளிக்கவே செய்வர்.
அழகு தமிழில் வாக்கிய அமைப்புக்களோடு சொற்களை வரிசைப்படுத்திப் பேசுகிற வழக்கம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பிரச்சினைகளை அவரது பேச்சின் மூலம் அணுகும் முறை தனித்தன்மை வாய்ந்தது. தங்களுக்காக பேசுகிற ஒரு தலைவர் என்ற நிலையில் மக்கள் அவரது நீண்ட சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவரது வயது, செயல் திறன், தியாகம், உழைப்பு, செல்வாக்கு, இவை அனைத்தும் அவரது பேச்சுக்கு அடித்தளமிட்டிருந்தன.
எனவே, அவரது உரையில் எளிமையே மிகுந்திருந்ததையும் மக்கள் குறையாகக் கருதாமல்—அவர் சொன்ன கருத்துக்களை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். “பெருந்தலைவர் காமராஜரைப் போலப் பேசினேன்; மக்கள் ஆர்வத்துடன் கேட்கவில்லையே!” என்று எந்தப் பேச்சாளராவது ஆதங்கப்பட்டுக் கொள்வார்களேயானால்—அந்தப் பேச்சாளர் காமராஜராக வளரவில்லை என்பதுதான் நமது பதில்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சொற்பொழிவாளராகத் தமிழகத்தில் அறிமுகமான தொடக்கக் காலத்திலே அவரது பேச்சில் அடுக்குச் சொற்கள் மிகுதியாக வந்து விழும். ஆனால், அந்தச் சொற்கள் எதுவும் பொருள் இல்லாமல் “அ” வுக்கு “அ”, “க” வுக்கு “க” என்ற நிலையில் கையாளப்பட்டதில்லை! “மாளிகையில் இருந்த நீதிக் கட்சியை மைதானத்திற்குக் கொண்டுவந்தவர் பெரியார்” என்று அண்ணா பேசுவதின் மூலம், அந்தக் கட்சி ஏழை எளியோர்களின் கட்சியாக மாற்றப்பட்டுவிட்ட வரலாற்று உண்மையை அடுக்குத் தொடரால் விளக்கிவிடுவார்.
மக்கள் உள்ளம் கவர்ந்திடுவார்.
அரசியலார் 144 தடைச் சட்டம் போடுவார்களேயானால் அதனை அப்படியே தகவலாகச் சொல்லித் தாக்கிடாமல் “நாகரிக நாடுகளிலே நாக்கறுக்கும் சட்டமா?” என்று மேடையிலே கேள்விக்கணை பொழிவார். இதனைக் கண்ட சிலர், தாங்களும் பேச்சாளராக அடுக்குச் சொற்களைக் கோத்துப் பேசினால் போதுமெனக் கருதினர். பேசும்பொழுது அடுக்குச் சொற்களானாலும் அழகான தமிழானாலும் தானாக வந்து பொழிந்திட வேண்டுமேயல்லாமல் அவற்றைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திப் பேச முனைந்தால் பேச்சுக் கலையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும்.
“அடக்கு முறைகளால் முடக்கி விடலாமெனத் துடுக்கு கொண்டு மிடுக்குடன் நடப்பது அடுக்குமோ என நான் ஆத்திரத்துடன் அரசாங்கத்தை அறைகூவல் விட்டுக் கேட்கிறேன்.”
இது அடுக்குச் சொல்லை மட்டும் நம்பிப் பேசுகிற பேச்சு! நான் முதலில் குறிப்பிட்டதைப்போல அண்ணாவுடன் ஒரு நாடகத்துக்குச் சென்ற நிகழ்ச்சி வேறொன்றை நினைவு படுத்துகிறேன்.
தாம்பரத்திற்கருகே நாடகம்! நாடகத் தலைப்பு; “மரணப் படுக்கையில்” என்பது! நாடக விளம்பரங்கள் “மரணப் படுக்கையில் அண்ணா” என்றே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அண்ணா தலைமை வகிப்பதைத்தான் அவ்வளவு அழகாக விளம்பரப்படுத்தி இருந்தார்கள்.
அண்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். ஆரம்ப முதலே ஒரே அடுக்குச் சொல் வசனம்தான்!
“பேயே! அந்தப் பேப்பரை எடுத்துவரச்சொன்னால், என்னமோ பிரமாதமாக நின்றுகொண்டு பிர்மாண்ட சுனைப்போலப் பேந்தப் பேந்த விழிக்கிறாயே!”
இதுபோன்ற வசனங்களுக்கெல்லாம் ஒரு உச்சக்கட்டம் என்ன தெரியுமா?
வில்லன். கதாநாயகனைப் பார்த்து, “உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்” என்கிறான். உடனே கதாநாயகன் வில்லனை நோக்கி, “நான் சர்ப்பத்தையும் சாம்பார் வைத்துச் சாப்பிடுவேன்” என்கிறான். “அய்யோ அடுக்குச் சொல் படும் பாடே!” என்று அண்ணாவும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டோம்!
“மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்!”
“சாலையோரத்தில் வேலையற்றதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்! வேந்தே! அதுதான் காலக் குறி!”
இப்படி எழிலார்ந்த நடைபோட்ட அண்ணாவின் அடுக்குச் சொல்லைக் கையாண்டு எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காரணம், அவர்கள் கையாண்ட அடுக்குச் சொற்களில் கருத்தோட்டமில்லை.
அண்ணா அவர்களேகூட, தனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் மக்களுக்காகப் புரியவைப்பதில்—அவர் கலந்து இதயங்களில் பதியவைப்பதில்—அக்கறை காட்டினாரே தவிர—வெறும் அடுக்குச் சொல்லை அடுக்கிச் சொல்லவேண்டியவைகளைச் சொல்லாமல் விட்டுவிட்ட குறைபாட்டுக்கு என்றைக்குமே தன்னை ஆளாக்கிக் கொண்டதில்லை.
மேடையில் பேசுவதற்கு எடுத்துக்கொள்கிற பொருள் தான் மிக முக்கியம்! பொன் கட்டியைப்போன்று பொருள் என்றால், அதனை அணியாகச் செய்து மெருகேற்றிடுவது தான் சொற்களும்—சுவையான உவமைகளுமாகும்!
