பேசும் கலை வளர்ப்போம்
கட்டுரைகள் 14 · 14 / 19
அரசியல் மேடைகளில் கடுஞ்சொற்கள் இருதரப்பிலிருந்தும் கணைகளாகக் கிளம்பலாம். அதற்காகப் பேச்சு முழுமையுமே கடுஞ்சொற் களஞ்சியமாகவும்—ஆபாசக் குட்டையாகவும் அமைந்திடுமேயானால்; விரைவில் அந்தப் பேச்சாளர்களும் இருக்குமிடந் தெரியாமல் போய்விடுவர்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறப்பு குன்றிச் செயலிழந்து நின்றுவிடும்.
மேடையில் மக்களின் பிரச்சினைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது எழுகின்ற விவாதத்திற்குரிய விஷயங்களை அவரவர் கட்சிக் கண்ணோட்டத்திற்கேற்ப மக்களிடம் விளக்கிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிக் கொள்கைகளுக்கும் தனது கட்சிக் கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும், உடன்பாடுகள் பற்றியும் வாதங்களை அடுக்கிடவேண்டும். நாட்டில் பற்றி எரிகிற ஒரு முக்கியமான பிரச்சினையைத் தனது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் கூறவேண்டும்.
இவ்வளவையும் விட்டுவிட்டு, மேடையில் ஏறியதும் தனது கட்சித் தலைவனுக்கு ஒரு பகுதி நேரம் பாராட்டு—மறு பகுதி நேரம் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு ஆபாச அர்ச்சனை—என்ற நிலையில் பேச்சாளர், தனது சொற்பொழிவை அமைத்துக்கொண்டால்; கூட்டத்தில் மேடைக்கருகே இருக்கிற தனது கட்சிக்காரர்களின் கைத்தட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப் பேச்சுக்குக் கிடைக்காது.
“வசவு” ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண்கிறோம். கொள்கை, இலட்சியம், எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள்! பேச்சால் மட்டுமே பிழைப்பு நடத்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடையானாலும்—அல்லது யார் வீட்டுத் திருமண மேடையானாலும்—அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்—சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல்; தரக்குறைவான, ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர்.
சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்—வேறு கட்சியில்! அதன்பிறகு சில வாரங்கள் சென்று பார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்—இன்னொரு மேடையில்! இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப்பீட்டில் மிகக்கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள்.
நடைமுறைகள் — கொள்கை மாறுபாடுகள்—இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தான் தருகிறார்கள்.
நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
எந்த ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும்—அவர் தனது பேச்சின் வாயிலாகத் தனது கட்சிக்கு வலிவு தேட முனைவது போலவே தனது செயல் முறைகள் வாயிலாகவும் வலிவு தேடவேண்டும்.
நான் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி! திருவாரூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உருக்கமும் உணர்ச்சியும் பொங்கிட ஒரு பெரியவர் முழங்கினார். மக்கள் எழுச்சியுடன் அவர் பேச்சைக் கேட்டனர். மறுநாள் அதிகாலையில் நான் நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்றுமணலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே மணலில் ஒரு மனித உருவம் ஆடை குலைந்த நிலையில் படுத்திருந்தது. அருகே சென்று பார்த்தோம்.
முதல் நாளிரவு மேடையில் முழங்கிய அதே மனிதர்தான். நன்றாகக் குடித்துவிட்டு ஆற்று மணலில் உருண்டு கிடக்கிறார். அந்தக் காட்சியை பார்க்கிறவர்கள் அவரை மட்டுமல்ல; அவர் எந்தக் கட்சிக்காகப் பேச வந்தாரோ—அந்தக் கட்சியையும் கடுகளவாவது மதிப்பார்களா?
இரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்களிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலையத்துக்கோ அந்தப் பேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட்ட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல்களின் இடுக்கில் சிகரெட்! வாய்வழி மூக்கு வழியே புகை மண்டலம்! முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒரு சிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறையத்தான் செய்யும்.
நாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது—மற்ற விஷயங்களைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை.
இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன். தான் எப்போதும் கொண்டுள்ள இயக்கத்திற்காக—தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்க வழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சாளர்களுக்கு மிகமிகத் தேவை.
எந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங் குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச் சிறப்பு உண்டு. தொண்டர் குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர்கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாளராக ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திட வேண்டும்.
பேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங் குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு, தொண்டர்களை வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக் கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத்திடல் வேண்டும்.
தொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச்செலவுக்குப் பணம் அனுப்பி, விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடை போட்டு, ஒலி பெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட்டால் எப்படிச் சோர்ந்து போவான் என்பது, தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்—உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது.
தவிர்க்க முடியாத எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.
என் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன்.
முதல் மனைவி பத்மா, மரணப் படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண்மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத் துயில் கொண்டு விட்டாள் என்ற செய்தியைக் கேட்க!
இப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்!
பெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறாத பயிற்சியும் ஒன்று!
கடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்களை இன்று காணும்போது, என்னைப் பற்றிச் சில குறிப்புகளைச் சொல்ல நேர்ந்தது.
பேச்சாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கிறவர்கள் சிலரும், கூட்டம் முடிந்தபிறகு அவர்களைத் திண்டாடித் தெருவிலே நிற்குமாறு விட்டுச் செல்லுகிற நிகழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.
