பேசும் கலை வளர்ப்போம்
கட்டுரைகள் 15 · 15 / 19
எல்லாக் கட்சிகளிலுமே ஊடுருவியுள்ள இந்தக் குறைபாடுகளைப் பேச்சாளர்களும் கூட்ட அமைப்பாளர்களும் நீக்கிக்கொள்ள வேண்டும்.
மேலவைத் தலைவராக விளங்கிய அண்ணன் சி. பி. சிற்றரசு, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி, தன்மான இயக்கத் தளகர்த்தர் அண்ணன் அழகிரிசாமி ஆகியோர்—கூட்டத்தில் தங்கள் பேச்சை முடிக்கும்போது; மேடையில் இருக்கும் கட்சியின் செயலாளரது கைகளைத் கெட்டியாகப் பிடித்தவாறே—மக்களைப் பார்த்து—“இவ்வளவு நேரம் சொன்னவற்றை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!”
என்று கேட்டுக்கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச்செலவுப் பணத்திற்கு என்ன செய்வது? யாரைத் தேடுவது? அதனால்தான் செயலாளர் கைகளை அன்போடும் பாசத்தோடும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பேச்சை முடிப்பார்களாம்!
“இதோ இந்தத் தம்பியிருக்காரே; உங்க ஊர் செயலாளர் — தங்கக் கம்பி! நல்ல உழைப்பாளி. இவருடன் நீங்கள் ஒத்துழைத்து இந்த ஊரை நமது கட்சிக் கோட்டையாக்க வேண்டும்.”
இவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது போல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச்செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தனைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது! அதுவும் அந்தக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற அந்தப் பேச்சாளர்களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை!
எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும், எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க்கொடி நாட்டி யிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்—பேச்சாளர்களாக வளருகிறவர்கள், அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக்கொண்டே வளருகின்றனர்.
அவர்களுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது!
இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கண்ணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார்.
அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:
“நீங்கள் கூட்டத்தில் எதைப் பேச வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில்லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதிபெற்ற சொற்கள்.”
“ஸ்மிட்”
“ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவார்கள்.”
“மாண்டஸ்கியு”
“பேச்சுக் கலையின் நோக்கமுண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல—மக்களை இணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்.”
“மெக்காலே”
“மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவலமாகவும் தரக் குறைவாகவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே.”
“டிஸ்ரேலி”
“கோழி முட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பது போல, நீ பேச எடுத்துக்கொண்ட விஷயத்தைப்பற்றிச் சதா சிந்தித்துக் கொண்டேயிருந்தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவது போல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.”
“பிரெளன்”
“மெருகேறும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களையும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்.”
“செஸ்டர்பீல்டு”
“அருமையாகப் பேசும் சொல்ல வல்லோன் உண்மையைப் பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் இருக்க முடியாது.”
“கார்லைல்”
