பேசும் கலை வளர்ப்போம்
கட்டுரைகள் 13 · 13 / 19
ஒருவர், ஒரு முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருப்பவர், முக்கியமானவர்கள் நிரம்பிய ஒரு அவையில் பேசினார். தமிழகத்தில் வெள்ளம் புயல் ஏற்பட்டு பல பகுதிகள் சேதமுற்றது பற்றி விவாதம் நடந்தது. அந்த முக்கியமானவர் பேசும்போது சொன்னார், “என்னுடைய சிறு வயதில் சென்னையில் பெரு வெள்ளத்தை நேரில் பார்த்தேன்” என்று.
அத்துடன் நிறுத்தவில்லை. “எனக்கு எழுபது வயதிருக்கும். அப்போதுதான் சென்னையில் எம்டன் குண்டு விழுந்த நேரம். பெரிய மழை பெய்து ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டு சென்னை நகரமே மூழ்கிவிடும் போலிருந்தது” என்று விவரித்தார். ஒரு பெரியவர் குறுக்கிட்டு, “எம்டன் குண்டு விழுந்தது 1914-ஆம் ஆண்டில் அல்லவா?”
என்றார்! “உங்களுக்குத் தெரியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழு வயதுச் சிறுவன்” என்றார் திட்டவட்டமாக அந்த முக்கியமானவர்!
பெரும் பதவியில் இருப்பவராயிற்றே; அதனால் குறுக்கிட்ட பெரியவர் அடங்கிவிட்டார்.
உண்மை என்ன தெரியுமா? எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர்! ஜெர்மானியக் கப்பல்! முதல் உலக யுத்தத்தின்போது 1914-ல் சென்னையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டு வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சியைக் கல்வெட்டில் குறித்து இன்னமும் சென்னை உயர்நீதிமன்றச் சுற்றடைப்புக்குள் வைத்திருக்கிறார்கள். அந்தக் குண்டு விழுந்தபோது தனக்கு எழுவயது என்று கூறியவர்; பிறந்த ஆண்டு 1917 ஆகும்!
பதவியிலிருப்பவர் உயரியதாயிற்றே! என்ன செய்ய முடியும்—எப்படியோ தந்திரமாக அந்தப் பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு செய்து விட்டார்கள்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி “மாணவர் பேரவை”க்கு அழைப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு சென்று இலக்கியமோ — நாட்டு நிலையோ—இப்படி ஏதாவது பொதுவான பொருள்பற்றிப் பேசினால்தான் வரவேற்பு இருக்க முடியும். எல்லாம் தெரிந்தவன் என்று என்னைக் காட்டிக்கொள்ள முனைந்து இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை எப்படிச் செய்ய வேண்டும்—விபத்தில் தலையில் காயமுற்று மயங்கிய நிலையில் இருப்பவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்—என்றெல்லாம் எனக்குத் தெரியாத விஷயங்களில் அதி மேதாவி போலத் தலையிட்டு உரையாற்றினால்; விளைவு எப்படியிருக்கும்?
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது தமிழ் நாட்டில் அரைகுறையாக மதுவிலக்குக் கொள்கை அமுலாகிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் ரூபாய்க்கு எல்லோருக்கும் “மது பார்மிட்” தரப்படுகிறது. இச்சமயத்தில் தான், காஞ்சீபுரம் அரசினர் விழா ஒன்றில் நமது முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஒரு செய்தியை வெளியிடுகிறார்.
“இரண்டு நாளைக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது. ஒருவன் குடித்துவிட்ட காரணத்தால் கைதாகியிருக்கிறான். அவனை ஜாமீனில் எடுக்க ஒருவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். குடித்தவனை ஜாமீனில் எடுக்க வந்தால் அவனையும் கைது செய்யுமாறு உத்திரவிட்டேன். அதுதான் இந்த ராமச்சந்திரன்.”
செய்தியே பொய்யாக இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு முதலமைச்சருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ‘போன்’ வர முடியாது. அப்படியே “போன்” வந்தாலும், ஜாமீன் எடுக்க வந்த காரணத்திற்காகக் கைது செய்ய முடியாது! சட்டமும் தெரியாமல் மக்களை கவர்ந்திட பேசப்பட்ட தவறான பேச்சாகும் அது!
தெளிவாகத் தனக்குத் தெரியாத எதையும் பேசுவதால் இத்தகைய சங்கடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
இலக்கியப் பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை எல்லையற்றும் இருக்கின்ற காலக்கட்டத்திலே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அரசியல் பேச்சாளர்களில் ஒருசிலரே இலக்கியப் பேச்சாளர்களாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.
இதிகாசங்களையும் புராணங்களையும் இன்றுள்ள உலகியலுக்கும் பொருந்தும் வண்ணம் இடையிடையே இலக்கிய அரசியல் சுவை கலந்து வழங்குகின்ற கதா காலட்சேபப் பண்டிதர்களும்கூட இருக்கிறார்கள்.
ஆடாமல் அசையாமல் அங்கம் சற்றுக் குலுங்கிட, லாவகமாக நாலாப்புறமும் திரும்பியவாறு கடல்மடை திறந்தாற்போலத் தமிழ்ச் சொற்களைக்கொண்டு புராணக் கதைகளைப் பலமணிநேரம் சலிப்புத்தட்டாமல் மன்றங்களில் கூறுகிற ஆற்றல் வாய்ந்தவர்களில் கிருபானந்த வாரியார் ஒருவர்.
அங்க அசைவுகளும் முகபாவ மாற்றங்களும் வார்த்தைகளிலும் குரலிலும் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்குமெனினும் கவர்ச்சியாக இதிகாசக் கதைகளையும் இலக்கியங்களையும் நீண்ட நேரம் எடுத்துரைக்கக் கூடியவர்களில் ஒருவராகப் புலவர் கீரன் விளங்குகிறார்.
புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்தைப் பற்றிய சிறப்புக் கூறுகளைப் பல நாட்கள் தொடர்ந்து உரையாற்றித் தமிழ் கற்றோர் நெஞ்சங்களில் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் இனிப்பு பெருக்கெடுக்கச் செய்தார்.
சிலப்பதிகாரத்தைப் பல நாட்கள் மன்றத்தினர் களித்திருமளவுக்கு விமர்சித்து வெற்றி கண்டார் சிலம்புச் செல்வர் ம. பொ. சி.
கம்ப்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ணன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல—கம்பனின் கவிநயம் பற்றிச் சில மணிநேரம் சுவைபடச் சொற்பெருக்காற்றக் கூடியவராகவும் இருந்தார்.
கம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்—சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும்.
அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறுகளையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா? அந்தத் தொகையினரும் குறைவே! பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தாற்குறையாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பழக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர்.
கடுமையாக—காரசாரமாகப் பேசுவது என்பது வேறு!
தாற்குறையாக — ஆபாசமாக — அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு!
கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக் கூடும். மாற்றுக் கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் புழுதி வாரித் தூற்றுவதையே தனது தொழிலாகக் கொண்டிருக்கக் கூடும். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில் அதற்குப் பதில் அளிக்கும்போது கடுமையான கண்டனம் தவிர்க்க முடியாததாகி விடக்கூடும்.
ஒருமணி நேரப் பேச்சில் அப்படிக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பது ஓரிரு வினாடிகளே இருக்கவேண்டுமே தவிர, முழுப் பேச்சும் கடுஞ்சொற்களின் கோர்வை ஆகிவிடுமேயானால் ஒருக்கணம் மின்வெட்டுப்போலப் பளிச்சிட்டுத் தெரிந்த அந்தக் கடுஞ்சொல்லுக்குரிய மதிப்பு இல்லாமல் போய்விடக் கூடும்.
