உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

பேசும் கலை வளர்ப்போம்

கட்டுரைகள் 12 · 12 / 19

இப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர் சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற்றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக்கூட்டப் பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெற முடியாது.

அதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக்கூடிய நெல்லிக் கனியை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக் கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின் பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்தத் தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமையன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.

சந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரசு மரத்தைச் சுற்றுகிறோம்; இது அறியாமையல்லவா? எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்கமாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந்தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டியுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உருவாக்க மட்டுமே பொதுக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும்.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா?”—புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வி எழுகிறது! “காலுக்குச் செருப்புமில்லை—கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக் குழைத்தோமடா என் தோழா!”

என்ற ஜீவாவின் பாடலில் எத்துணை உருக்கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது!

தொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும்.

அடுத்து, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்!

நீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக்கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள் ஒரு பால வசதியின்றிக் கஷ்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உணவு தானிய உற்பத்தியாளர்களான உழவர் பெருங்குடியினர் உற்பத்திப் பொருள்களுக்குக் கட்டுபடியான விலையின்றித் துயருறுவதாக வைத்துக் கொள்வோம்.

இவை போன்ற மக்களுக்குத் தெரிந்திருக்கிற—மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சினைகள் எவையென்பதை அந்த ஊர்க் கூட்டத்திற்குச் சென்றவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பேச்சினிடையே அவைகளையும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினால் பேச்சாளருடன் கூட்டத்தில் குழுமியுள்ள அந்தப் பகுதி மக்களும் ஒன்றிவிடுவார்கள்.

அதைப் போலவே அந்தப் பகுதியில் நீண்ட காலமாக இருந்த தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றையும் குறிப்பிடும்போது, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டு பேச்சாளரின் கருத்துக்களோடு தங்களையும் இணைத்துக் கொண்டு ரசிப்பார்கள்.

சில பேச்சாளர்கள், தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூட்டத்தில் பேச விரும்புவார்கள். மக்களுக்குத் தெரியாததாக இருந்தால் அப்படித் தமக்குத் தெரிந்ததைப் பேசுவதில் தவறில்லை! தெரியாததற்கும், என்னதான் பேசினாலும் புரியாததற்கும் மிகப் பெரும் வேறுபாடு உண்டு!

ஒரு குக்கிராமத்துப் பொதுக்கூட்டம். மேடையில் ஒரு பட்டதாரி பேசுகிறார். தலைமை ஏற்றிருப்பவர் ஒரு பட்டதாரி. அடுத்துப் பேச இருப்பவர் ஒரு பட்டதாரி. எதிரே குக்கிராமத்து மக்கள்.

“பெரியோர்களே! ஜூலியஸ் சீசரை புரூடஸ் குத்தியபோது; நீயுமா புரூடஸ் என்றான் சீசர்!

கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது! ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இங்கிலாந்தில் மாதக் கணக்கில்—ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன. ஆபிரகாம் லிங்கன் ஒரு தியேட்டரில்தான் சுடப்பட்டார்.

இப்படிப் பேசினால், அது மேடையில் உள்ள மற்ற பட்டதாரி பேச்சாளர்களுக்குத்தான் புரியும்! எதிரேயுள்ள மக்களுக்கு சீசர், புரூடஸ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களே புரியாது!

தனக்கு என்ன விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பதை மேடையில் வீற்றிருக்கும் மற்ற பேச்சாளர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு உணர்த்துகிற பேச்சாக மட்டும் அமையாமல், எதிரே வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படுகிற பேச்சாக அமைய வேண்டுமென்பதில் ஒரு பேச்சாளருக்கு மிகுந்த கவனம் தேவை. தனக்கும் அல்லது தன்னைப்போல் நிறைய நூல்களைப் படித்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய செய்திகளையோ, குறிப்புகளையோ—மக்களுக்கும் தெரியவைக்க வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு இடமும்—இடத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்ட பொருளும் இருந்திட வேண்டும்.

மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்திப் பேச வேண்டிய கூட்டம் என்று வைத்துக்கொள்வோம். அரசியல் சட்டப்படி, எத்தனை அதிகாரங்கள் மத்திய அரசுப் பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் மாநில அரசுப் பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் பொதுப் பட்டியலில்—என்ற விபரங்களையும்; அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி மத்திய அரசு, ஒரு மாநில ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்பதையும் — அரசியல் சட்டம் தொகுத்த அறிஞர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்களே அந்தச் சட்டம் தலைகீழ் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமெனக் கருத்தறிவித்ததையும் — மாநில சுயாட்சி பற்றி இராசமன்னார் குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையினையும்—அதைத் தி.மு.க.

ஆட்சிக் காலத்தில் பரிசீலித்து சட்டமன்றத்திலேயே மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியதையும்—மாநிலங்கள் சுயாட்சித் தன்மையுடன் திகழவேண்டுமென்று பண்டித நேரு அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டதையும்—ஆதாரங்களுடன்—தேதிகளுடன் எடுத்துச் சொல்ல விரும்புகிற ஒரு பேச்சாளர்; அவர் சென்னையிலே ஒரு மேடையிலே நின்று பேசுகிறார் என்றாலுங்கூட — சென்னையில் எந்தப் பகுதி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேசவேண்டும்.

மாநில சுயாட்சி பற்றி மயிலாப்பூர் மாங்கொல்லையிலோ—அண்ணாநகர் சாந்தி காலனியிலோ—அடுக்கிக் காட்டுகிற ஆதாரங்களை—புரசை வெள்ளாளர் தெருவிலே வாரி வழங்குகிற புள்ளி விபரங்களை—சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்துவது என்பது இயலாது.

மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெறவேண்டுமென்பதற்கு அந்தப் பகுதி மக்களுக்கு எதைச் சொன்னால் மனதில் பதியுமோ, “ஆமாம்—நியாயந்தானே!” என்று சொல்லத் தோன்றுமோ அதைத்தான் சொல்லவேண்டும்.

தனக்குத் தெரிந்ததைப் பேசவேண்டும்; தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது.

சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தெரியாததைப் பேசத் தொடங்கி இடறி விழுவார்கள். அதாவது பணத்தாலோ—அல்லது பதவியாலோ செருக்குற்றிருப்பவர்கள், தப்பித் தவறிப் பேச்சாளராகவும் இருந்தால் அதனால் விளையக் கூடிய வேதனை இது!