உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பெருமூச்சு/கட்டுரைகள் 8
கட்டுரைகள்

பெருமூச்சு

கட்டுரைகள் 8 · 8 / 13

விபீஷணர்கள் சுக்ரீவர்கள் கோயாங்கா பக்கத்திலே! காங்கிரஸ் படையிலே!

வீரர்கள், சுயமரியாதை உணர்வு பெற்றவர்கள் அத்தனை பேரும் நம் பக்கத்திலே!

காங்கிரஸ் அவசர அவசரமாகச் சவக் குழிக்குச் செல்லவேண்டும். அந்த சத் காரியத்திலே ஈடுபடச் சங்க நாதம் செய்து விட்டார்கள் தென்னாற்காட்டார்.

தென்னாற்காடே! திராவிடத்தின் தூண்டா மணி விளக்கே! தேன் கீதமே! தித்திக்கும் திராவிடக் கனியே! உன் திறமையைக் காட்ட நேரம் வந்து விட்டது தயாராகிக் கொள்! சிங்க நெஞ்சு கொண்ட தென்னாற்காட்டுச் செயல் வீரர்காள்!

உங்கள் சிரிப்பிலே அழியட்டும் சீர்கெட்ட காங்கிரஸ்! பணம் விளையாடும்! காங்கிரசின் பட்டாளம் வேலை செய்யும்! அஞ்சேல், அயரேல்

திராவிட நாட்டுக் குரல் சட்டசபையிலே, பார்லிமெண்டிலே ஒலிக்கப் போகிறது! அதற்கு வலிமை தேடித்தா! தோளுயர்த்திவா தொண்டாற்ற! தி. மு. க.

ஆதரவு பெற்றவர்கள் எழுபது பேருக்கு மேற்பட்டவர்கள்! இருபத்தி மூன்று பேர் தென்னாற்காட்டார்!

உரத்த குரலில் உணர்ச்சி ஒலியில் திராவிடத் தீந்தமிழ்ப் பரணி பாடப்பட காங்கிரசைப் புறமுதுகிடச் செய்!

தென்னாற்காடே நீ தரும் பாடம் காங்கிரசுக்குப் புத்தி சொல்லட்டும்!

நீ பறக்க விடுகிற வெற்றிக் கொடி, நம்மைப் பதைக்க உயிர் வாங்கியவர்களை, பட்டினிபோட்டவர்களை பஞ்சம் வளர்த்த ஆட்சியை பாடையில் ஏற்றட்டும்!

“திராவிட நாடு திராவிடருக்கே!” தென்னாற்காடே! உரக்கச் சொல்! உத்வேகத்தோடு சொல்!

உழைப்பாளிக் கட்சியே உயரப் பறக்க விடு உன் கொடியை!

மாட்டுப் பெட்டி மாங்கல்யம் அறுந்த பெட்டி! மனித வாழ்வை மண்ணாக்கிய பெட்டி! கொடுமை வளர்த்த பெட்டி! கோணல் ஆட்சி நடத்திய பெட்டி!

“சேவல் பெட்டி தீரர்களின் பெட்டி வேதனை இருள் நீங்குவதை அறிவிக்க-விடுதலை விடிவெள்ளி முளைக்கிறதை உணர்த்த செங்கதிர் கிளம்புவதைச் சொல்ல சேவல் கூவுகிறது! சேவலை வாழ்த்துங்கள்! வழங்குங்கள், ஓட்டுக்களை! வெல்க தென்னாற்காடு! வீழ்க காங்கிரஸ்!

அன்றொரு நாள் திராவிடத்தைச் சுரண்ட வந்தவர்கள் மாடோட்டித்தான் வந்தார்கள் இமாலயத்தின் கணவாய்களின் வழியாக!

இப்போதும் நம்மிடம் மாட்டோட்டி வருகிறவர்கள் திராவிடத்தை வடவரின் வலையில் சிக்கிடும் மானை ஆக்கத்தான் பாடுபடுகிறார்கள்.

வடவரின் அடிமைகள் இவர்கள். இவர்கள் ஓட்டி வரும் மாடுகள் நம்மையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வடவரின் அடிமையாக்க முயற்சிப்பவை.

வட நாட்டு நாகரிகத்தை, வட நாட்டு மொழியை, வட நாட்டுக் கலாச்சாரத்தை திராவிடத்திலே பதிப்பது மட்டுமல்ல; வட நாட்டாரின் நிரந்தர எடுபிடியாக திராவிடத்தை மாற்றிவிட வேண்டுமென்ற தீவிர முயற்சி, மாடோட்டிகளால் நடைபெறுகிறது.

காங்கிரஸ்தான் விடுதலை வாங்கித் தந்தது; சுதந்தரம் பெற்றுத் தந்தது; என்ற காரணங்களைக் காட்டி மக்களை மயக்கிவிடலாமென்ற துணிவு ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கு!

சுதந்தரம் வாங்கித் தந்தமைக்காக நம் சுகவாழ்வையெல்லாம் இழக்க வேண்டுமென்று அர்த்தமல்ல!

சுதந்தரம் இவர்களின் திறமையால், தியாகத்தால் மட்டும் கிடைத்துவிட்டதல்ல.

சுதந்தரம் பெற்றோம் நாமும்தான் மகிழ்ந்தோம். அந்த நேரத்திலும் வெள்ளையனுக்கேற்பட்ட நெருக்கடி, உலகப்போர் முடிந்து அவனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை—இந்தியாவைக் கட்டிக்காக்க முடியாத நிலைமை, இவைகளும் முக்கிய காரணமா யிருந்தன விடுதலைக்கு என்பதை எடுத்துக் காட்டத் தவறிடவில்லை.

சுதந்திர பூமிதான்! ஆனால் இங்கேதானே பிண மலைகள்! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான் தோன்றி தர்பார்கள்!