பெருமூச்சு
கட்டுரைகள் 9 · 9 / 13
வடவரின் கையிலே இருக்கும் கொடுங்கோலுக்குப் பெயரா, சுதந்தரம்!
அடக்குமுறை தர்பாருக்குப் பெயரா சுதந்தரம்!
திராவிடம் தனியாட்சி பெற்றிருந்தால், பிணங்கள் விழுந்திருக்குமா, இங்கே!
திராவிடம் தனியரசு செலுத்தியிருந்தால் மலேயாவுக்கும், இலங்கைக்கும் ஓடுவார்களா, திராவிடர்கள்!
இலங்கையிலே இடர் பல ஏற்றுக்கிடக்கும் திராவிடரையெல்லாம் திருப்பியமைத்து தித்திப்பான வாழ்வைத் தந்திருக்காதா சுதந்திரத் திராவிடம்!
மலேயாவிலே கணபதி கயிற்றிலே தொங்க நேர்ந்தது.
சாம்பசிவம் தப்புவது பெரிதாகிவிட்டது.
இதோ சின்னாட்களுக்கு முன் லோகநாதனைத் தின்று ஏப்பமிட்டுவிட்டது மலேயாவின் மரண மேடை!
காமன் வெல்த்திலே அங்கம் வகிக்கிறது நம்மை யாளும் சர்க்கார்.
மலேயா கொடுமை பற்றி எடுத்துரைத்து ஏற்றது செய்ய மனத்துணிவு இல்லை. காமன் வெல்த்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்படவும் இல்லை. திராவிடம் தனி நாடாக இருந்திருந்தால் கணபதியை, லோகநாதனை சாக விடுவோமா? ஏன்; மலேயா சென்று வாழவேண்டிய நிலைமைதான் அவர்களுக்கு இருந்திருக்குமா?
கேடுகள் செய்தனர். வெளிநாடுகளில் வீசப்பட்ட கேடுகளைக் கண்டிக்க மறந்தனர்! மாடுகளை மட்டும் ஓட்டிக்கொண்டு ஓட்டுக்கு வருகின்றனர்.
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால் தானே, கோயாங்கா தென்னாட்டு அபேட்சகராக நிற்க முடிகிறது?
வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, பிர்லாவின் ஏஜெண்டுகள் சிலர்—பிர்லாவின் பணத்தை வாரி இறைத்து தேர்தலிலே போட்டியிடுகிறார்கள் திராவிடத்திலே?
இத்தகைய கொடுமையான ஏகாதிபத்யத்திலிருந்து திராவிடம் விடுபெறவேண்டு மென்பதற்காகத்தான், திராவிடம் சுதந்திர பூமியாக மாறவேண்டு மென்பதற்காகத்தான், திராவிடத்திலே உண்மையான சமத்துவம் நிலைக்கவேண்டு மென்பதற்காகத்தான், ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று முழங்குகிறோம்.
இந்த முழக்கம் மாடோட்டிகளுக்குப் பிடிக்கவில்லை; பிடிக்காதது மட்டுமல்ல, மறுக்கிறார்கள்.
“வடவரின் அடிமைகள்” என்றால் கோபத்தால் குதிக்கிறார்கள். வடநாட்டின் மொழி, கலாச்சாரம், அந்த நாட்டிற்குத் தகுந்தவாறுள்ள பிரச்சினை, இவைகளையெல்லாம் திராவிடத்திலே அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறவர்களை வடநாட்டு அடிமைகள் என்று கூறாமல் வேறென்ன. கூறுவது!
கோயாங்காவைக் கொண்டுவந்து திராவிடத்திலே போட்டியிடச் சொல்லுகிறவர்களை வடநாட்டு அடிமை
என்று கூறுவதிலே தவறு இருப்பதாகத் தெரியவில்லையே!
“திராவிடம் ஒரு தனி நாடு. இதை வேறு நாட்டுப் பிரச்சினைகள், அமைப்புகள், அவைகளை மட்டும் வைத்து ஒரே கண்ணில் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது” என்றுதான் நாம் பலமுறை விளக்கங்கள் தந்து திராவிட நாட்டுப் பிரச்சினையை மக்கள் முன்னே வைத்திருக்கிறோம்.
ஆனால் சிலர், “தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால்” என்ற தன்மையில் ஆகாதது, முடியாதது, குறுகிய நோக்கம் என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்களே தவிர, இன்னொரு நாட்டை உதாரணத்துக் கழைத்து நம் இதயகீதத்தை மறைக்க எண்ணினார்களே தவிர, தத்துவங்களுக்கு அடிமையாகி, நடைமுறைக்கு எதிரியாகிவிட்டார்களே தவிர, நம் பிரச்னையின் உட்கருத்தை அறியாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
எதிரிகளாகவே காட்டிக் கொண்டவர்கள் நேரடியாக எதிர்த்தார்கள் நம் பிரச்னையை! காட்டிக்கொள்ளாதவர், மறைமுகமாக எதிர்த்தார்கள். இத்தகைய எதிர்ப்புகளுக்கெல்லாம் முடிவு காணத்தான் தேர்தலிலே திராவிடநாடு பிரச்னையை ஏற்பவர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.
தி. மு. க. ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டவர்களின் வெற்றி—திராவிட நாட்டு பிரச்னையில் முதல்
வெற்றி! மாடு ஓட்டி வருபவர் மீண்டும் சிம்மாசனம் ஏறினால் நம் பிரச்னை சிறிது நாள் தள்ளப்படுகிறது என்று பொருள்!
