உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பெருமூச்சு/கட்டுரைகள் 2
கட்டுரைகள்

பெருமூச்சு

கட்டுரைகள் 2 · 2 / 13

இரயில்வே பிரச்சினையை ஆராய்ந்து, இலங்கைப் பிரச்சினையை விவரித்து, இதற்கான வழிதுறை தேடிடும் தீர்மானங்கள்.

நிறவெறித் திட்டத்தைக் கண்டித்து, அதற்கு ஆக்கமளிக்கும் காமன்வெல்த்திலிருந்து இந்தியாவை வெளியேறச் சொல்லி வலியுறுத்தியும், மலேயாவில் நிரபராதிகளான திராவிடருக்கு ஏற்படும் கொடுமைகளைக் கண்டித்

தும், தென் ஆப்பிரிக்கா பிரச்னையில் நம் கொள்கையை எடுத்துக் காட்டியும், வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியா, நடு நிலைமை என்ற போர்வையில்-நேர்மை தவறிடும் ஆதிக்க வரிசையை ஆதரித்து நின்றிடும் போக்கைக் கண்டித்தும் தீர்மானங்கள்.

இத்தனை தீர்மானங்களும் நிறைவேற்றப்பட, கேட்டுக் கொள்ளப்பட்டு, வலியுறுத்தப்பட்டு என்கிற நிலைமைகளே ஏற்படாமல் இருக்கத்தான், நாமே நம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத்தான், டில்லியின் பிடியில் அகப்பட்டு, டில்லி அனுஷ்டிக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்குத் தலையாட்டி, டில்லி செய்யும் தீர்மானங்களுக்குத் தலை குனிந்து, பொட்டுப் பூச்சிகளாய் வாழாமல் இருக்கத்தான் திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியதோடு அதற்கான எல்லாவித நடவடிக்கைகளையும் ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாநாடு சங்கநாதம் செய்தது!

'திராவிட நாடு'. நம் உயிர்ப் பிரச்னை; உயிர்போகிற நேரத்திலே கூட ஒரு முறை உரக்கக் கூவிட வேண்டிய தக்க சொல்! 'தாரக மந்திரம்', திராவிட நாடு! அந்த இன்ப இலட்சியத்திற்காகத்தான் நம்மவரில் பலரது வாழ்வு நசுங்கிப் போயிற்று!

உடையார் பாளையம் வேலாயுதம் பிணமாகத் தொங்கியதும், தாலமுத்தும் நடராசனும் கல்லறைக்

களாக மாறியதும் அந்தச் சுந்தரச் சொல்லுக்காகத்தான்! வாழ்வைக் கருக்கிக் கொண்டோர், வாழ்வை அணைத்துக் கொண்டோர் எல்லோருமே திராவிடம் என்ற தேன் சுவையில் துன்பம் மறந்தனர்!

அழகிரி மாண்டான்! அப்போதும் திராவிடம் என்ற இன்பக் குழந்தையை வளர்க்க நாம் வாழ்ந்தோம்!

செல்வம் மறைந்தான்! அப்போதும் திராவிடப் பூங்காவின் காவலாளிகள் நாம் என்று எண்ணிக் கண்ணீர் துடைத்துக் கொண்டோம்!

நாகைமணி, மாயவரம் நடராசன், நாகம்மையார், தியாகராசர், பனகல், நாயர் எத்தனையோ தங்கங்கள் நம்மைத் தவிக்க விட்டு மறைந்தன. அப்போதும் 'திராவிடம்' என்ற வைரம் நம்மைக் குளிர வைத்தது!

பெரியார் கொள்கை தவறினார்! அப்போதும் 'திராவிடம்' என்ற நிலவை நினைத்து—நெஞ்சில் இன்பம் சேர்த்தோம்! அத்தகைய திராவிடம், அனல் பொழியினும் அஞ்சிடாது பெறுவோம் என்று ஆண்மை கொழித்திடும் ஆற்றல் மறவர்களின் போர்க் கீதமாக இருக்கும் திராவிடம். மலை வந்தெதிர்த்த போதும் நிலை குலையோம் “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்று வீரம் பாடி சோகம் துரத்தி வேகம் தளராது விடுதலைக் கொடி பிடிக்கத் துடிக்கும் மாவீரர்களின் மனதிற் குடியேறிய திராவிடம், தேர்தல் நடனம் புரிய

அழைக்கும் திருக்கூட்டத்தினரின் தித்திப்புச் சொற்களால் தேய்ந்து விடக் கூடியதல்ல!

மாளிகைக்காரர் உருட்டி விடும் பணக் குண்டுகளால் மாய்ந்து விடக் கூடியதல்ல! திராவிடத்தை ஒப்புக்கொள்கிறாயா என்று கேட்பது, ஒப்பந்தப் பிச்சை என்று கோணல் மொழி பேசி, கொள்கையை விலை கூறி "பார் பார் பட்டணம் பார்!" என்று அரசியல் விளம்பரச் சூதாட்டமாடுபவர்களின் தந்திர மொழிகளால் தவிடு பொடியாகிவிடக் கூடியதல்ல! திராவிடம்! தணலில் போட்டால் மாற்று உயரும் தங்கம்! உடைக்க உடைக்க ஒளியேறும் வைரம்! தங்கத்தை இழக்க மாட்டான் தன் மதிப்புள்ள திராவிடன்!

அதுவும்-பித்தளையோடு பண்ட மாற்று செய்து!

வைரத்தை கொடுக்க மாட்டான் வீரத்திராவிடன்! அதுவும், கூழாங்கல்லை பதிலுக்குப் பெற்றுக் கொண்டு!

அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உருவான மாற்றமில்லாத மாணிக்கக் கொள்கை! அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்தை மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும், திராவிட சமுதாயம். பொதுச் செயலாளர் கூறியது போல ஐம்பத்தி நாலாம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்துவோம். அறுபதிலே திராவிடத்தில் வாழ ஆவன செய்திடுவோம். அதற்கான அடிப்படை வேலைகளை இப்போதே தொடங்குவோம். தேர்தல் தெம்மாங்கு மட்டுமல்ல, இப்

போது முக்கியம்! அபேட்சர்கள் ஊர்வலம் மட்டுமல்ல இப்போது அவசியம்! தேர்தல், மழையிலே பிடித்துக் கொள்ளும் குடை! குடையைப் பிடித்துக் கொண்டு, போக வேண்டிய இடத்தை மறந்து விடக்கூடாது!

மழையிலே நின்றால் கொள்கைத் தவறுதல் என்னும் குளிர் காய்ச்சல் வரும்! பதவித் தலைவலி உண்டாகும்! பிறகு சுயநல ஜன்னி பிறந்து விடும்! குடையும் பிடித்துக் கொள்வோம்! மழையையும் தடுப்போம்! செல்ல வேண்டிய இடத்துக்கும் செல்வோம்!

தேர்தலில் நம் ஆதரவைத் தருவோம்! காங்கிரசை ஒழிப்போம்! அதோடு திராவிட நாட்டுப் பிரச்சினையையும் மறக்காமல் நடப்போம்! இந்த எண்ணத்தின் எதிரொலிதான் மாநில மாநாட்டிலே இரண்டு லட்ச மக்களின் இதயத்தைத் தொட்டது! எழுச்சி முரசும் ஆர்த்தது. எலும்புகளைக் கற்களாக ஈந்து, நரம்புகளைக் கயிறுகளாகத் தந்து, மண்டையோடுகள் கூரையாக, மாமிசமும் இரத்தமும் சேறாகக் கலக்கப்பட்டு—மாளிகை அமைப்போம்!

அதுதான் மாவீரர் கட்டிடும் மாளிகை! மாற்றான் அஞ்சும் மாளிகை! மார்வாரி ஆதிக்கமற்ற மாளிகை! வெளிநாட்டு வெறியற்ற மாளிகை! சமரச மாளிகை! சமதர்ம மாளிகை! பொது உடமை மாளிகை! புதிய மாளிகை! திராவிட நாடெனும் மாளிகை!

அந்த மாளிகை அமைத்திட வாரீர்! மாவீரரே ஒன்று சேரீர்!

ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியிலே சென்னை மாகாண முதலமைச்சர் அசெம்பிளிக்கும், விருதுநகரின் விசித்திர மனிதர் காமராசர் பார்லிமெண்ட்டுக்கும் காங்கிரஸ் அபேட்சகர்களாக நிற்கும் தொகுதியிலே காங்கிரஸ்காரர் ஒரு மாநாடு கூட்டினார்கள். இதற்கு மந்திரிமார்கள் வந்து பேசுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டு, அமைச்சர் பரமேசுவரன் உட்பட, குமாரசாமி ராஜா, பெருமாள்சாமி ரெட்டியார் போன்ற அமைச்சர்கள் அங்குச் சென்றிருந்தனர்.

ஆனால் மாநாடு கூட்டியவர்கள் கலைவாணர் நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 'நான் கண்ட ரஷ்யா' என்னும் வில்லுப் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து அறிவைப் பெருக்கிக்கொள்ள விழைந்து அவரையும் மாநாட்டுக்கு அழைத்திருந்தனர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தம் குழுவினருடன் மாநாட்டிற்கு வந்து தம் வில்லுப் பாட்டைத் துவக்கி விட்டார் என்பதை அறிந்தவுடன், அமைச்சர்கள் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் நழுவி விட்டனர் என்று ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.

இச் செய்தி உண்மையாயின், இதை விட மானங்கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க

முடியாது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தாம் ரஷியா சென்று நேரிற்கண்டவைகளை வில்லுப் பாட்டாக அமைத்து அழகாகப் பாடி வருகின்றார். அவ்வில்லுப் பாட்டின் மூலம், ரஷியர்கள் தங்கள் நாட்டை எவ்வண்ணம் நடத்துகின்றனர்? ரஷ்யா இன்று எத்தகைய உன்னத நிலையை அடைந்திருக்கிறது என்பதை நம் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.