உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பெருமூச்சு/கட்டுரைகள் 1
கட்டுரைகள்

பெருமூச்சு

கட்டுரைகள் 1 · 1 / 13

பாடுபட்டு பாதாளம் தோண்டிப் பசும்பொன் எடுத்தவனின் முகத்திலே கிளம்பும் ஜோதி, தங்கத்திலே கிளம்புவதைவிட மாற்றில் அதிகம்தான்.

மூச்சடக்கி முத்தெடுத்தவனின் விழிகளிலே அரும்புகின்ற களிப்பு முத்தின் ஒளியைவிட தரத்தில் உயர்ந்ததுதான்.

கூரிய முட்காட்டில் நடந்து சென்று கீறிடும் முட்களுக்கிடையே உள்ள ரோஜா மலரைப் பறித்திட்ட பாவையின் நெஞ்சிலே தவழும் குளிர்ச்சி, மலரின் குளிர்ச்சியைவிட உயர்ந்ததுதான். மாதக் கணக்கிலே பாடுபட்டு, நாட்கணக்கிலே எதிர்பார்த்து, மாற்றாரின் கிண்டல் கேலிகளை எதிர்த்து நின்று, 'மாநாடாமே' என்று இழித்துக் காட்டி, இடர் மொழி கூறியவரை அலட்சியப்படுத்தி — சீறிவந்த சிரமங்களைத் தாண்டி, எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் ஆட்டிப் படைக்க, நல்ல முறையில் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளத்தைக் கிள்ள, கண்ணியத்தை மட்டும் கேடயமாகக்கொண்டு, கட்டுப்பாடு, கழக லட்சியங்களை ஆயுதங்களாக ஏந்தி மகத்தான மாநில மாநாட்டை

நடத்திக் காட்டிய மாவீரர்கள் ஆழ்ந்த - ஆனால் ஆனந்தமான பெருமூச்சு விட்டுக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நம்முடைய வாழ்த்தைக் காணிக்கையாக்குகிறோம்.

வீரர்கள் விடும் பெருமூச்சிலே எத்தனை எத்தனைக் கருத்துக்கள் துள்ளி விளையாடுகின்றன. எத்தனை இன்ப கீதங்கள் பொழிகின்றன. எத்தனை எத்தனை எழுச்சி நடனங்கள் முரசு கொட்டுகின்றன.

தென்னாட்டு அரசியல் சரித்திரத்திலேயே இதுவரை கண்டிராத அளவுக்கு, வெற்றி வீரர்களின் பவனி, அறுநூறுக்கு மேற்பட்ட கிளைக்கழகங்களின் கொடிகள் ஆலவட்டங்களெனச் சுழன்று பறந்திட, அசைந்து வரும் அலங்கார யானை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைச் சுமந்துகொண்டு முன்னே செல்ல, குதிரைகளிலே கொள்கை வீரர்கள் கண்காணிப்பு நடத்த, தம்பிமார் படை, சூழ்ந்துவர, மாவட்ட வாரியாகக் கிளைக் கழகத் தோழர்கள் அணிவகுத்து நடக்க, மாலைகள் மலர்களெனப் பொழியப்பட, வழியெங்கும் கரங்கூப்பி வாழ்த்துக் கூறிடும் மக்கள் வரிசை வரிசையாக நின்றிட, பூரிப்புமோத, புன்னகை தவழ்ந்திட ஐந்து மைல் தூரம், இரண்டு மைல் நீளம் உள்ள ஊர்வலமாக நடைபெற்றிருக்கிறது.

அதை பெருமையோடு கூறிக்கொள்கிறது அந்தப் பெருமூச்சு!

அறிவுப் பிரச்சாரத்திற்கு, இயக்கம் கண்டுபிடித்துள்ள புதிய முறையாம் ஓவியக் கண்காட்சி ஒரு பர்லாங் நீளத்திற்கு அமையப்பெற்று—சமூக பொருளாதார, அரசியல் விஞ்ஞான தத்துவங்களை அள்ளியள்ளி வீசி ஆயிரமாயிரம் கருத்துக் குவியல்களை எடுத்து நீட்டி ஆக்க வேலைக்கோர் எடுத்துக் காட்டாக எழுந்து நின்றதை முழக்குகிறது, அந்தப் பெருமூச்சு!

நான்கு நாட்கள் மாநாடு! இரவு பகல்; நாடகம்—பேச்சு—இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். வசதிக் குறைவு—இடக் குறைவு—இத்தனை இடையூறுகளுக்கிடையே ஆர்வமிழக்காத காளையர், அவர்களையெல்லாம் வரவேற்று, திறமையுடன் ஆற்றிய பணிகள், இவைகளையெல்லாம் விளங்க வைக்கிறது அந்தப் பெருமூச்சு! முன்னணி வீரர்கள், சேர, சோழ, பாண்டிய வீரர்களை நினைவுறுத்தும் தோரணையில் போர்ப்பரணி பாடிட, அதைக் கேட்டிருந்த இருலட்சத்தார் இன உணர்ச்சி வெள்ளத்தில் இரண்டறக் கலந்துவிட, அந்தக் காணமுடியாத காட்சியைக் கவிதையாக்கிவிடுகிறது அந்தப் பெருமூச்சு!

“கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே!” என்று விம்மும் குரலில் தழுதழுத்த வார்த்தைகளை வீரர் அண்ணா வீசியபோது, மேடையிலிருந்த தம்பிமார்கள் கலங்கினர். பந்தலில் இருந்தோர் மெய் சிலிர்த்தனர்.

அந்தக் காட்சியைக் காவியமாக்கித் தருகிறது அந்தப் பெருமூச்சு!

கண்டவர்கள் பெருமூச்சு விடுகிறார்கள். காணாதவர்கள் கண்டவர் சொல்லக் கேட்டுப் பெருமூச்சு விடுகிறார்கள்.

தென்னாட்டு அரசியல் சரித்திரம் காணாத, மகத்தான சாதனை மாநாடு! பல நாளைய உழைப்பின் பலன், மாநாடு!

பாடுபட்டவர்க்குக் கிடைத்த பரிசு மாநாடு!

அதனால்தான், மாநாட்டை நடத்தியவர்கள் — மாநாட்டைக் கண்டவர்—ஆனந்தப் பெருமூச்சு விடுகிறார்கள். அந்தப் பெருமூச்சு—அடுத்துவரும் உணர்ச்சி மூச்சுக்களுக்கு அடிப்பீடமாக அமையட்டும்! அந்த மூச்சு — சோகத்தின் விளைவல்ல! பொறுமையின் நிழலல்ல! பூரிப்பின் முழக்கம்! எடுத்த காரியத்தை முடித்தோம் என்ற எக்களிப்பின் அடையாளம்; எடுக்க வேண்டிய காரியங்கள் பல உள்ளன என்பதை ஒலித்துக்காட்டும் பேரிகை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சிய கீதமான, “திராவிடநாடு திராவிடருக்கே!” என்ற முழக்கம் சென்னை மாநில மாநாட்டிலே இரண்டு லட்சம் மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்திருந்தது.

மாநாட்டின் நான்காம் நாள் நிறைவேறிய தீர்மானங்கள் அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல அமைந்தது அந்த இலட்சியத் தீர்மானம்.

மாநாட்டிலே, கழகத்தின் முன்னணி வீரர்கள், தீர்மானங்கள் என்னும் திருவிளக்கேந்தி, தெளிவற்று இருண்டிருந்த பிரச்சினைகள் பலவற்றை, நாட்டினர் முன்னே எடுத்து வைத்து விளக்கவுரையாற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானங்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல், பொருளாதார, சமுதாயக் கண்ணோட்டங்களைச் சிறந்த முறையில் உணர முடிகிறது.

நாடாள வந்தவரின் நாச விளையாட்டுகளைக் கண்டிக்கும் முறையில் தீர்மானங்கள்.

ஏழை பங்காளர், கோல் பிடித்த பிறகு, நூல் பற்றாக்குறையால் பிணமான ஏழைகளின் நிலையை விளக்கி, கைத்தறிப் பிரச்சினையிலே கவனம் செலுத்த வேண்டிய முறையை சுட்டிக் காட்டிடும் தீர்மானங்கள்.

தொழில்களைப் பணத் தொந்திகளே தொடர்ந்து நடத்தாமல், தேசீய மயமாக்கும் திட்டங்களை, வற்புறுத்தி, வகைகள் தெரிவித்து, வழி காட்டிடும் தீர்மானங்கள்.

விவசாய முன்னேற்றம், விவசாயிகளின் நல்வாழ்வு பற்றிய அக்கரையைத் தெரிவித்து, அதற்காவன செய்யும்படி அரசியலாரைத் தூண்டிவிடும் தீர்மானங்கள்.

சித்தூரும், நாஞ்சிலும் சேர்ந்திருக்க வேண்டியது செந்தமிழ் நாட்டோடுதான் என்பதை எடுத்துரைத்து, ஆந்திரர் தமிழர் பேதத்தை வீணாகச் சிருஷ்டிக்கும் வீணர்களுக்கு விவேக போதனை செய்து, தமிழர்—ஆந்திரர் கசப்பு வளர்ந்தால் வடநாட்டார் வேட்டை அதிகமாகும் என்பதை உணர்த்திக் காட்டி, நேர்மையான முறையில் ஏற்படும் மொழிவழி அமைப்புக்களை உடனடியாக ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கு ஆதரவளித்து, அதற்கெனத் தீர்மானங்கள்.