பெருமூச்சு
கட்டுரைகள் 3 · 3 / 13
இதைக் கண்டு, காங்கிரஸ் மந்திரிகள் காற்றினும் கடுகி ஓட்டம்பிடிப்பதென்றால், இதனை என்னென்பது? ஏன் இந்த மந்திரிகள் ஓட்டம் பிடிக்க வேண்டும்? ரஷ்யாவிலே ஒழுங்காக மழை பொழிவதில்லை. எனவே, அவர்கள் மழையை மதிக்காமல் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விளைவிக்கும் வித்தையைக் கண்டு பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்! அதனால் அவர்கள் பஞ்சங் கண்டு அஞ்சுவதில்லை. அந்த நாட்டில் எவ்வளவு கொடுமையான போர் நெருக்கடி காலத்திலும் உணவு நெருக்கடி தோன்றவில்லை.
மேலும் அங்கே மக்கள் வாழ்க்கை வளம் நிறைந்ததாக ஆக்கப் பட்டிருக்கிறது. வாழ்க்கை துன்பம் என்பது அங்கு மருந்துக்கும் கிடையாது. இதனால் அங்குத் திருட்டு, சூது, வஞ்சகம், கொலை போன்ற குற்றங்கள் நடை பெறுவது அரிது. மக்கள் எத்தேவையுமற்ற வகையில் எல்லா வசதிகளும் உடையவர்களாக வாழ்வதால் அங்கு அரசாங்கத்துக்கு எதிர்ப்புமில்லை. மக்களிடை எரியுணர்ச்சியுமில்லை. அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சி
யும் பெருகிய மக்கள் வாழ்வு அங்கு நடைபெறுகிறது என்பதைக் கலைவாணர் தம் வில்லுப்பாட்டின் மூலம் விளக்குகின்றார்.
இந்த உண்மைகளை மக்கள் உணர்ந்துவிட்டால் காங்கிரஸ் ஆட்சியின் நேர்மைக் குறைவு, திறமையின்மை, நாணயக்குறைவு, சுயநலப் போக்கு முதலிய சீர்கேடுகளின் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்வார்களென்றும், நாட்டில் பஞ்சம் நிலவியிருப்பதும் இலஞ்ச ஊழல் பெருகிக் கிடப்பதும் கள்ளச் சந்தை சர்வ வியாபியாகி விட்டிருப்பதும் காங்கிரசுக்கார்களின் சுயநலத்தால் விளையும் கேடுதான் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் அதன் மீது, தாங்கள் பேசினால் மக்கள் எதிர்த்துக் கேள்விகள் கேட்க நேரிட்டால் தங்களிடம் தக்க பதிலின்மையால் திண்டாடித் திணற நேரிடுமென்றும் நன்கு அறிந்துதான் இந்த மந்திரிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்திருக்க வேண்டும்.
மக்கள் மன்றத்தின் முன் நின்று, மக்களின் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில் கூறி, அவர்களைச் சமாதானப் படுத்துவதென்பது காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பொறுத்த மட்டில் இயலாக் காரியமாகையால், நேர்மையைக் கண்டு அவர்கள் அஞ்சியோடாமல் பின் என்ன செய்வர்? நேர்மையாக, நாணயமாகக் கொள்கையின் மீது தேர்தலில் நின்று வெற்றி பெறுவ
தென்பது காங்கிரஸ் அகராதியில் கிடையாது. ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து, வடநாட்டிலிருந்து எவரையாவது இங்கு இறக்குமதி செய்து கண் காட்சியாகச் சுற்றி இழுத்துவந்து, மற்றும் பலபலத் தந்திரங்களைச் செய்து, அதிகாரத்தைப் பயன் படுத்தி, போலீசைத் துணையாகக் கொண்டு இவ்வாறெல்லாம் வெற்றிபெற்று விட முடியுமாகையால், மக்கள் மன்றத்தின் முன் நிற்க வேண்டிய தேவையில்லையென்றும் எங்காவது கள்ளச் சந்தையினர், பர்மிட்தாரர்கள், லைசென்ஸ்காரர்கள், காண்ட்ராக்டர்கள் ஆகியோரின் கூட்டங்களைக் கூட்டி அவற்றை மக்கள் மன்றமெனக்காட்டி ஜனநாயகம் பேசுபவர்களை ஏய்த்து விடலாமென்றும் நெஞ்சுறுதி பூண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மையைக் கண்டு ஓட்டம் பிடிக்காமல் வேறென்ன செய்வார்கள்!
அந்தோ! இப்படிப் பட்ட காங்கிரசுக்காரர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கதி என்னாகும்! எனவே மக்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காங்கிரசுக்காரருக்கு ஓட்டளிக்காமல் எதிர்த்து நிற்பவர்களுள்ளும் ஒரே ஒருவரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வார்களாக.........
வீராதி வீரர்கள் விரண்டோடினர். நாட்டையாளும் அமைச்சர் நாலுகால் பாய்ச்சலில் ஓடினர். சுட்டு விரல் அசைந்தால் சுட்டுத் தள்ளும் ராணுவப் படை கொண்டவர்கள் ஓடினார்கள். ரதகஜதுரக பதாதிகள் படைத்தவர்கள் பதறி ஓடினார்கள். யாரைக்கண்டு?
எதிரி நாட்டுப் படை வீரர்களைக் கண்டா? பிரிட்டனின் போர் முரசு கேட்டா? அமெரிக்கரின் அணிவகுப்பைப் பார்த்தா? ரஷ்யப் பட்டாளம் வருவதாகச் செவியுற்றா? இல்லை.... இல்லை........ஒரு கோமாளியைக் கண்டு ஓட்டமெடுத்தார்கள்;
(மன்னிக்கவும்........கோமாளி என்பது கலைவாணர் கிருஷ்ணனுக்குக் காமராசர் அளித்த வசவுப் பதக்கம்.)
ஸ்ரீ வில்லி புத்தூரிலே மந்திரிகள் கலந்து கொள்ளும் மகாநாடு!
ஆமாம் புண்ணிய பூமியிலே பிறந்து அன்னை பாரத மாதாவின் அருள் பெற்று அந்தராத்மா தந்த வரத்தின் மகிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை பெற்று (நினைத்ததை சாதிக்கும் வல்லமை யென்பது பிள்ளை வியாபாரம் நடத்தச் சொன்னது—பிணமலை குவித்தது) மந்திரி பீடத்திலே அமர்ந்திருக்கும் மந்திரிமார் மகா பெரிய மகான்கள்......ரஷ்யா சென்று வந்த பாவியின் முகத்தைப் பார்ப்பது கூட தோஷம் என்று கருதி பின்னங்கால் பிடரியில் இடிபட பாய்ச்சல் நடத்தி யிருக்கிறார்கள்.
கோலோச்சிடும் கோமான்கள் கோமாளியின் குரலுக்கு நடுங்கி யிருக்கிறார்கள். ஸ்ரீ வில்லிபுத்தூர், காமராசர் போட்டியிடும் தொகுதி! அந்த இடத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு நடத்திட விரும்பி யிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைப்பதாகத் தலைவெடிக்க அலறியவர்கள், தர்பார் சூரர்களை அவமானப் படுத்திவிட்டு ஓடியிருக்கிறார்கள். ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்தவர்—ரஷ்யாவில் குலுங்கும் இன்பங்களைத் தாழ்த்தப் பட்டவரிடம் எடுத்துக் கூறினால்......அத்தனை தாழ்த்தப்பட்டவர்களும் உடனே, அங்குள்ள பஞ்ச!
மந்திரிகளைப் பார்த்து, “பாராள வந்தவரே! கேளுமய்யா ரஷ்யாவின் குதூகலத்தை!” என்று உரக்கக் கூவினால், என்ன செய்வது என்று பயந்து கொண்டுதான் ஓடி யிருக்கிறார்கள்.
சுற்றிலும் ராணுவம்—கையிலே ஆட்சிக் கோல்.... சுழலும் துப்பாக்கி — இத்தனைச் சாதனங்களும் அமைந்த நாட்டின் அரசர் (குமாரசாமி ராஜா) நகைச் சுவையரசுக்குப் பயந்து ஒளிந்திருக்கிறார்!
இந்த பயம் வாழ்க! இந்த 'ஓட்டம்' யுத்த பாஷைப்படி வெற்றிகரமான வாபசாயிருக்கலாம். இந்த 'வாபஸ்' வாழ்க!
திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நமது முடிவை அறிவித்த பிறகு கம்யூனிஸ்ட் ஏடான 'ஜன சக்தி' அந்தத் தீர்மானம் மிக மிக ஏமாற்றத்தை அளிப்பதாகவும் காமராஜர்களும் சாமியப்பாக்களும் வெற்றி பெறச் செய்ய உதவுமென்றும் குறிப்பிட் டிருக்கிறது.
உண்மையில் சாமியப்பா வெற்றி பெற வேண்டுமென்று அதிகார பூர்வமாக உழைப்பவர்களிடம் கை குலுக்குகின்ற கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி அபாண்டத்தைச் சுமத்துவது ஏனோ தெரியவில்லை!
நம் கழகத்தை 'உதிரிகள்' என்று கூறியவர்களிடம் சேர்ந்துகொண்டு, வெட்கத்தை விற்றுவிட்டு வாழ்வதற்கு நாம் ஒப்பவில்லை யென்றால் நாம் எதிரிகளின் வெற்றிக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறுவது மிக மிகத் தவறான பிரச்சாரமாகும்.
நம்முடைய நேசக்கரம் நீட்டப்பட்ட நேரத்திலே அதைத் தட்டிவிடும் முறையில் நம் அடிப்படைப் பிரச்சினையை அவமதித்துவிட்டு "தேர்தலுக்கு மட்டும்வா" என்று அழைத்துவிட்டு, இப்போது "தேர்தல் தேனைப்
பருக அல்ல" என்று குறிப்பிடுவதும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டுவதும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன.
சாமியப்பா, தஞ்சை மாவட்டத்திலே கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழிவுதேடும் வேலையிலே அக்கரை எடுத்துக் கொண்டார். அவரை வெற்றி பெறும்படி விடுவது மகா கொடுமை என்றெல்லாம் மேடை அதிரப் பேசிவிட்டு, ஏடுகளிலே எழுத்தோவியங்களைத் தீட்டிவிட்டு, அவரை ஆதரித்து நிற்பவர்களின் கூட்டுறவிலே நிற்கும் செயலுக்கு என்ன பெயர் என்றே நமக்குப் புரியவில்லை.
ஒரு பக்கம் முதலாளி வீட்டு விருந்து, மறு பக்கம் தொழிலாளர் துயர் துடைக்கும் பிரசங்கம்! கம்யூனிஸ்டுகளின் வீரத்திற்கு — கொள்கைக்கு வேறுபட்ட செயலாயிற்றே இது! இத்தகைய அவலட்சணமான ஐக்கிய முன்னணிக்கா நாங்கள் அழைத்தோம்!
எங்கள் கூட்டுறவு இருந்தால், ஈரோட்டில் கே. டி. ராசுவை எதிர்க்க மாட்டோமே! சேலத்தில் மோகன் குமார் மங்கலத்தை ஒழிக்க முயல மாட்டோமே!
காஞ்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தோழர் ஜீவானந்தம் கூறினார்! "சாமியப்பாவுக்கு விட்டுக்
