உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பெருமூச்சு/கட்டுரைகள் 12
கட்டுரைகள்

பெருமூச்சு

கட்டுரைகள் 12 · 12 / 13

திராவிடம் பிரிவதற்கான அடிப்படை சூழ்நிலைகள் அமையக்கூடாது என்பதிலே அக்கரை செலுத்தும் பலர் “செய்ததை மறந்திடுக! செய்யப் போவதைப் பார்த்திடுக” என்று கூறுகிறார்கள். ஆசை காட்டுகிறார்கள்.

சூழ் நிலைகள் காரணமாக, காங்கிரசை எதிர்ப்போரின் ஓட்டுக்கள் பிரிந்து விடுமா, என்கின்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் செய்ய, திராவிட மக்கள் மாட்டுப் பெட்டியில் ஒரு ஓட்டுக்கூடப் போடாமல் இருந்துவிடவேண்டும்.

அதிலே நூறு ஓட்டுவிழுந்தால்தானே எண்பதும், அறுபதும் பெற்ற இரண்டு அபேட்சகர்களை காங்கிரசு வெல்ல முடியும்.

ஆகையால் திராவிட மக்கள் நேருவும், அவர் தம் குரலுடையவரும் வடிக்கிற நீலிக்கண்ணீரிலே ஏமாந்து விடாமல், திராவிட நாட்டுப் பிரச்சினையை மறந்து விடாமல், திராவிடம் பிரிந்தால் தீமைகள் விலகும்! விலகும் என்பதை நெஞ்சிலே கொண்டு காங்கிரசை ஒழிக்க முனைய வேண்டுகிறோம்.

சிலப்பதிகார கோவலன் கேட்ட மன்னிப்பிலே தெளிவு இருந்தது. வாஞ்சை இருந்தது.

தேர்தல் கோவலன் கேட்கும் மன்னிப்பிலே தெளிவு இல்லை! வஞ்சகமும் மறைந்திருக்கிறது!

திருப்பத்தூரிலே திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றவரும் ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவருமான தோழர் ராகவன் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தியும், மதுரையிலே கம்யூனிஸ்ட் தோழர் ராமமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியும், உதயகிரி தொகுதியில் நிதி மந்திரி கோபாலர் தோல்வியுற்றார் என்ற செய்தியும், அமலாபுரம் தொகுதியில் காளா வெங்கட்டராவ் தோல்வியுற்றார் என்ற செய்தியும், திராவிடத்தில் தேன் பாய்ச்சும் செய்திகளாக மதிக்கப்படுகின்றன.

கோபாலர், மந்திரியார் நிதிக்கு! காளாவும் மந்திரியார் தான் சுகாதாரத்திற்கு. இருவருமே காங்கிரஸ் மாளிகையின் தூண்கள் என்று பாராட்டப் பெற்றவர்கள். அந்தத் தூண்கள் தூள் தூளாகிவிட்டன.

முன்பொருநாள் சட்டசபையிலே “இப்படி வரிப் பளுவை அதிகமாக்குகிறீர்களே; தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு ஓட் கிடைக்குமா?” என்று கேட்டபோது அதற்கு கோபாலர் “மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கிடைக்காது என்றால் பெட்டியை மாற்றிக் கொண்டால் போகிறது” என்று பதில் கூறினார்.

மஞ்சள் பெட்டியை மாட்டுப் பெட்டியாக மாற்றிக் கொண்டிருந்துங்கூட தோல்வியின் மடியிலே கோபாலர்—காளா இருவரும் விழ நேரிட்டுவிட்டது!

திருப்பத்தூரிலே நமது ஆதரவைப்பெற்ற நண்பர் ராகவன் அவர்கள் காங்கிரசை ஆறாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று தோல்வியுறச் செய்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுதல்!

மதுரையிலே கம்யூனிஸ்ட் நண்பர் ராமமூர்த்தி அவர்கள் காங்கிரசை முறிய அடித்து வெற்றி முரசு கொட்டியிருக்கிறார். சிறைச்சாலையில், இருந்தபடியே—செங்கோல் பிடித்திருக்கும் கட்சியின் செல்வாக்கை செல்லாக்காசாக ஆக்கிவிட்டார்! அவர் நமது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவர்!

ராமமூர்த்தியின் வெற்றியை நாம் பாராட்டுவது போலவே சில இடங்களில் கம்யூனிஸ்ட் நண்பர்களின் வெற்றியையும் எதிர்பார்க்கிறோம். வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திடாத அபேட்சகர்கள் போட்டியிடுகிற இடத்திலும், கையெழுத்திட்டவர்கள் பொறுக்கப்படாத இடத்திலும் நம்முடைய கழகத்தவரின் ஓட்டுக்கள் கம்யூனிஸ்டு நண்பர்களுக்கு அளிக்கப்படாமல் வேறு யாருக்கு அளிக்கப்படும்!

இதை அண்ணாவின் அறிக்கையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. அத்தகைய இடங்களிலே திராவிட

முன்னேற்றக் கழகம் அதிகார பூர்வமாக கம்யூனிஸ்டுகளை ஆதரிக்காவிட்டாலும் ஓட்டு அளிக்கும் விஷயத்தில் தி.மு. கழகத்தார் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையும், எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும், தோழர்கள் ராமமூர்த்தி, அனந்த நம்பியார், மணலி கந்தசாமி, முத்தையா, மோகன் போன்றவர்களின் மனச்சாட்சி, நிச்சயமாக மறைத்துக்கூற முடியாது! நேர்மையிலும் நீதியிலும் நாட்டமுள்ளவர்கள்—விஷம எண்ணம் படைக்காத விவேகிகள்—அந்த உண்மையை உணர முடியும்.

சென்னையிலே ஜீவானந்தத்தை எதிர்க்க நேரிட்ட தென்றால் அது தி. மு. கழகத்தின் அடிப்படை இலட்சியமான திராவிட நாட்டைப்பற்றிச் சட்டசபையிலே எடுத்துக் கூறுவேன் என்று தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் உறுதி தந்து நமது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற காரணத்தால்தான்! கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூறுவதுபோல ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் அறிமுகமில்லாத புது மனிதரல்ல! திராவிட இயக்கப் போராட்டங்களிலே இருந்தவர்தான்.

இந்தி எதிர்ப்புப் போரிலே ஈடுபட்டவர்தான்.

இந்திப் போரை மெளனமாக கம்யூனிஸ்டுகள் கவனித்திருந்த நேரத்திலே ஆல்பர்ட் அவர்கள் அறப் போர்க்களத்திலே இருந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“ஜீவானந்தத்தையே எதிர்க்கிறார்களே!” என்று கலக மூட்டுகிறார்கள், கண்யமிழப்பதையே கடமையாகக் கொண்ட சிலர்! அந்தச் சிலர், மோகன் குமார மங்கலத்தையே, கே. டி. ராஜூவையே எதிர்க்கிறார்கள் என்பதை ஏன் தான் மறந்தார்களோ தெரியவில்லை.

மோகன் குமாரமங்கலம் ஜீவாவைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமா? அல்லது சேலம் தோழர் பாலுவைவிட குறைந்த ஓட்டுகள்தான் மோஹன் வாங்குவார்—பாலுதான் ஜெயிக்க முடியும் என்ற உறுதியான ஆருட இலட்சணமா?

ஜீவாவின் வரிசையிலே உள்ளவர்தான் மோகன் குமாரமங்கலம்.

அத்தகைய மோகனை எதிர்த்து, தோழர் பாலுவை ஆதரிக்கும் அந்தத் தோழர்கள் நாம் ஜீவாவை எதிர்ப்பதைப் பெரிதுபடுத்தி விஷம வேலைகளில் இறங்குகிறார்கள்.

இதை உணர்ந்தோ உணராமலோ — அல்லது தேர்தல் நேரத்தில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று உணராதவர்போல காட்டிக்கொண்டோ கம்யூனிஸ்டு நண்பர்களும் நம்மீது ஏளன வார்த்தைகளை வீசுகிறார்கள்.

“மாலைமணி பக்தர்கள்” “அருள் சுரக்க வந்திருக்கிறார் அண்ணா”