உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பெருமூச்சு/கட்டுரைகள் 11
கட்டுரைகள்

பெருமூச்சு

கட்டுரைகள் 11 · 11 / 13

இந்தத் தேர்தல் கோவலர்களும் ஓட்டு என்னும் சிலம்பைப்பெற்று, வாக்காளர் என்னும் கண்ணகியை காடுமேடு அழைத்துச்சென்று, அமெரிக்கா என்னும் வஞ்சிப்பத்தரிடத்திலே சிக்கிக்கொண்டு எல்லோரின் வாழ்நாளையும் கெடுத்துக்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.

அந்த முடிவைத்தான் காங்கிரஸ்காரர்கள் எழுதுகின்ற துன்பத் தொடர் கதையிலே நாம் எதிர்பார்க்கிறோம்.

கோவலன், சிலப்பதிகாரத்திலே உண்மையிலேயே மன்னிப்பு கேட்டான். திருந்திக்கொள்ள முயன்றான்.

இந்தக் கோவலர்களோ, சிலப்பதிகாரத்தை வஞ்சிப்பத்தர் இல்லத்தோடு முடித்துவிட விரும்புகின்றனர். ஆமாம், அமெரிக்காவிடம் அடிமைப் படுவதோடு முடிய இருக்கிறது. இந்த அவலக் கதையின் கடைசி அத்தியாயம்! அவர்களாகத் தேடிக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சோக முடிவிலே திராவிடத்தை—நம்மை இணைக்க விரும்புகிறார்கள்.

நேருவின் குரலிலே பலர் பேசுகிறார்கள்.

“செய்ததை மறந்து விடுக! இனிச் செய்வதைச் சரியாகச் செய்வோம்” என்கிறார்கள்.

மாதவியை மறந்துவிட்டு வந்த பிறகுதான் கோவலன் மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு நியாயமுங்கூட!

இவர்களோ, தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் செய்துகொண்டே, அமெரிக்க ஆதிபத்தியத்தின் பக்கம் அணைப்பை நெருக்கியபடி, அரசியல் கைதிகளைத் தேர்தல் சமயத்திலும் விடுதலை செய்யாமல் சிறையில் போட்டு அடைத்தபடி, அறிவியக்கத்தின் நாடகங்கள், நூல்கள் மேலுள்ள தடைகளை நீக்காதபடி, எதிர்க் கட்சிகளின்மீது எடுத்துக்கொண்டுள்ள வழக்குகளை காலதாமதம் செய்து கஷ்டங்களை வாரியிறைத்தபடி, மழை பெய்துவிட்ட காரணத்தால் தென்னாட்டுக்கு இனிமேல் தேவையான உணவை அனுப்ப முடியாது

என்று கொடுமையான அறிக்கைகள் பறக்கவிட்டபடி, தவறுகளை மறந்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். கண்ணீரிலே நீலிக்கண்ணீர் என்று ஒரு வகையுண்டு! அதை அறியாதவர்களல்ல மக்கள்!

தவறுகளை எடுத்துச் சொல்பவர்கள்—அவைகளை மறந்து விடுங்கள் என்று சொல்லி ஆதரவுப் பிச்சை கேட்பவர்கள், இருதயத்திலே சொருகிய ஈட்டியை எடுக்காமலேயே இனியமொழி பேசுகிற இரக்கமற்றவனிடம் நம்பிக்கை வைக்கச் சொல்லுகிற இனத்தைச் சேர்ந்தவர்கள்!

தேர்தல் நேரத்தில் தென்றலாகவும், வெற்றிக்குப் பிறகு புயலாகவும் மாறிவிடப் போகிறவர்களை, இதுவரை மாறி இருந்தவர்களை நாம் அறியாமலில்லை. மக்கள் உணராமலில்லை. அந்த உணர்வைப் புது உபதேசங்களால் ஒழித்துவிட முடியாது! திருவாங்கூர் கொச்சி தேர்தல் முடிவுகள் இதைத்தான் எதிரொலிக்கின்றன.

காங்கிரசுக்கும், அதை எதிர்த்த எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த ஓட்டுக்களை எண்ணிப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகள் பெருவாரியான ஓட்டுக்களைப் பெற்றிருக்கின்றன.

அது மட்டுமல்ல, காங்கிரசைவிட அதிகப்படியான ஸ்தானங்களை எதிர்க் கட்சிகள் கைப்பற்றி யிருக்கிறார்கள்.

எதிரிகள் பலராய் ஆகிவிட்ட காரணத்தால் காங்கிரஸ் சில இடங்களிலே வெற்றி முரசு கொட்டியிருக்கிறது ஆனால் நனைந்துபோன முரசின் ஒலியாகத்தான் அது இருக்கிறது.

எப்படியோ, அதேபோன்ற சூழ்நிலை தமிழகத்திலும் உருவாகிவிட்டது. காங்கிரசை எதிர்த்து ஒவ்வொரு இடத்திலும் பலர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் குறைந்த ஓட்டுக்களிலேயே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைதான் இது! ஆனாலும் இந்தச் சூழ்நிலை எப்படியோ அமைந்து விட்டது! கம்யூனிஸ்ட்களுக்கும் தி. மு. கழகத்திற்கும் தேர்தல் உறவு இல்லாமல் போய்விட்டதால், சில இடங்களில் நாம், கம்யூனிஸ்டு அபேட்சகர்களை எதிர்க்க வேண்டியவர்களானோம்.

கம்யூனிஸ்டுகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் தேர்தல் உறவு இருந்துங்கூட திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளின் முக்கியஸ்தர்களான, மோகன் குமாரமங்கலம், கே. டி. ராஜு போன்றவர்களை எதிர்க்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாவின் அறிக்கை கூறுவதுபோல, திராவிட நாட்டுப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதால் நாம் சில இடங்களில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

திராவிடர் கழகம் வெற்றிக்கு வாய்ப்புள்ள இடங்களில் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து நிற்கிறது.

பொதுவாக இரண்டு முகாம்களும் காங்கிரசை ஒழிப்பதைத்தான் தேர்தல் திட்டமாகக் கொண்டபோதிலும் தி. மு. கழகம், அத்துடன் திராவிடநாட்டு பிரச்சினையையும் சேர்த்திருக்கிறது.

தி. மு. கழகம் ஆதரிக்கும் சில அபேட்சகர்களை திராவிட கழகமும் ஆதரிக்கிறது. அண்ணாவின் அறிக்கை இதை விளக்கிறது. ஆனால் திராவிடர் கழகம் ஒப்பந்தம் இல்லாமல் ஆதரிக்கிறது. அதே அபேட்சகர்களிடம் ஒப்பந்தம் பெற்று தி. மு. கழகம் ஆதரிக்கிறது.

தி. மு. கழகத்தின் ஒப்பந்தத்தால் ஏற்படுகிற புதிய நிலை—புதிய லாபம்—காங்கிரஸை ஒழிப்பது என்பது மட்டுமில்லாமல், திராவிட நாட்டு பிரச்சினையைச் சட்ட சபை மக்கள் சபைகளிலே குரல் எழுப்புவது என்றும் வளர்ந்திருக்கிறது.

திராவிடர் கழகம் இந்த ஒப்பந்தம் கேட்காவிட்டாலுங்கூட—அல்லது கேட்கத் தவறிவிட்டாலுங்கூட திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகவும் உள்ள திராவிட நாட்டுப் பிரச்சினையைத்தான் நாம் தேர்தல் அடிப்படைப் பிரச்சினையாக வைத்தோம்.

சட்ட சபைகளிலே—மக்கள் சபைகளிலே—நம் ஆதரவு பெற்றவர்கள், “திராவிடநாடு திராவிடருக்கே!” என்று முழங்கும் போது, தி. மு. கழகம், திராவிடர் கழகம் இரண்டுமே இதயம் பூரிக்கத்தான் போகின்றன.

அந்தப் பூரிப்பு ஏற்படாமல் செய்யத்தான் நேருவின் பாணியிலே தமிழ் நாட்டில் பலர் பேசுகிறார்கள்.