பெருமூச்சு
கட்டுரைகள் 13 · 13 / 13
“பிராணனை விடுகிறார்கள்” “அனாதை ரட்சகாக அபயம் அளிக்க விந்துவிட்டார் அண்ணா” “பிளாங்க் செக்” என்பவை போன்ற கேலி மொழிகளை நம் கழகத்தின்மீது வீசுகிறார்கள் ஜனசக்தி மூலமாக!
தோழர் ஜீவானந்தத்தை எதிர்க்கும் நிலைமையேற்பட்ட வடசென்னை போன்ற சில தொகுதிகளில் வேண்டுமானால் நமது தோழர்கள் இந்த கேலிகளை அலட்சியம் செய்துவிட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்கலாம்.
ஆனால் நம்பியார், கல்யாணசுந்தரம், முத்தையா, மணலி போன்றவர்கள் நிற்கும் இடங்களிலே அவர்களுடைய வெற்றியை விரும்பி தங்கள் ஓட்டுக்களை அளிக்க இருக்கிற கழகத் தோழர்களின் உள்ளம் எவ்வளவு வேதனை அடையும் என்பதை கம்யூனிஸ்ட் நண்பர்களும் ஜனசக்தி பத்திரிகையும் சிந்திக்கவேண்டும். எவ்வளவுதான் வெந்த புண்ணிலே வேல் சொருகினாலுங்கூட கழகத்தவரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்குப் போகாது என்பதையும் கம்யூனிஸ்டு நண்பர்கள் உணரவேண்டும்; உணருவார்கள்.
ஏகாதிபத்திய தாசர் என்று கம்யூனிஸ்டுகளால் வர்ணிக்கப்படுகிற சர்மா அவர்களைப் பெரியார் ஆதரிக்க
வும்—பெரியாருடன் கலந்து பணியாற்றவும் துணிந்திருக்கிற கம்யூனிஸ்டு நண்பர்கள், நம்மீது வீண்பழிகளை சுமத்துவது ஏனோ புரியவில்லை.
ஆல்பர்ட் ஜேசுதாசன் திராவிட நாட்டுப் பிரச்சினையைச் சட்டசபையில் முழக்குவேன் என்றார். ஜீவா அது இயலாது என்றார். நாம் ஆல்பர்டை ஆதரிக்கிறோம். இம்மாதிரியான சூழ்நிலை இல்லாத இடத்தில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்காதது மட்டுமல்ல, கழக பூர்வமாய் ஆதரிக்காவிட்டாலுங்கூட நம்முடைய ஓட்டுக்களை கம்யூனிஸ்டுகளுக்கே வழங்குவோம் என்ற உணர்ச்சிதான் பரவியிருக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு மோகனை, கே.
டி. ராஜூவை, இன்னும் பல கம்யூனிஸ்டு நண்பர்களை எதிர்த்திடும் விபரீதப்போக்கு கொண்டவர்கள் அல்ல நாம்.
இதைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதோடு—கலக மூட்டுபவரும்--அந்தக் கலகத்தால் குழப்ப நிலையில் உள்ள பொதுமக்களும் நன்கு சிந்தித்து உணர வேண்டுமாய், உண்மை தெரிய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தோல்வியுற்ற காங்கிரசு மந்திரிகளுக்கு நமது அனுதாபத்தையும் வெற்றி வீரர்களுக்கு மகிழ்ச்சியையும் வழங்குகிறோம்.
அய்யாவுக்கு நல்லகாலம் பிறக்குமா ? பூம், பூம், பூம்! பசி போகுமா ?.... பூம், பூம், பூம்! பட்டினி தொலையுமா ? பூம், பூம், பூம்! பிள்ளை வியாபாரம் நிற்குமா ? பூம், பூம், பூம்! தற்கொலைகள் தணியுமா ? பூம், பூம், பூம்! தேனும், பாலும் ஓடுமா ? பூம், பூம், பூம்! அப்படின்னு அய்யா, ஓட்டுப் போடுவாரா? பூம், பூம், பூம்!
எல்லாவற்றுக்கும் அந்தப் பெருமாள் மாடுகள் தலையாட்டுகின்றன. பெருமாள் மாடுகள் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன தெரியுமா ?
நெற்றியிலே வைரமணிகளால் ஆன அசோகச் சக்கரம். பார்வைக்குத் தான் வைரமே தவிர, அவையெல்லாம் பாட்டாளி மக்களின் உடைந்துபோன பற்கள். ( தடியடி தர்பாரில் உதிர்ந்தவை )
கொம்புகளிலே மஞ்சள் தடவப்பட்டிருக்கிறது. அது மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறதே தவிர அது இந்தநாட்டு உழைப்பாளிகளின் உதிரம்! அது உலர்ந்து போய் மஞ்சளாகக் காட்சி தருகிறது.
மாட்டின் கழுத்திலே வெள்ளித் தாயத்துக்கள் மின்னுகின்றன; தாயத்துகளா அவைகள்! இல்லை; இல்லை! பசியால், வேதனையால், சுருண்டு செத்துப் போன சுதந்திர நாட்டுப் பிரஜைகளின் எலும்புகளைக் கோர்த்துப் போட்டிருக்கிறார்கள்.
மாட்டின் முதுகிலே வட நாட்டு பிர்லாக்கள் அணிவித்த பீதாம்பரங்கள் ஜரிகைத் துப்பட்டாக்கள்—இத்தனை ஆடம்பரத்தோடு காங்கிரஸ் பெருமாள் மாடுகள். பூம், பூம், வாத்தியத்தைக் கேட்டுத் தலையாட்டுகின்றன.
“அப்படின்னு, அய்யா ஓட்டுப் போடுவாரா? பூம், பூம், பூம்!
மாடுகள் தலையாட்டுகின்றன; போடுவார் என்று!
ஒரு சிறுவன், பெருமாள் மாட்டுக்காரனிடம் ஓடிவந்தான். பிண்ணாக்கு வேணுமா? புளியங் கொட்டை வேணுமா? பருத்திக் கொட்டை வேணுமா? பூம், பூம், பூம், பூம்! என்று கத்த ஆரம்பித்தான்.
பெருமாள் மாட்டுக்காரனுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில் எதுவும் சொல்ல முடியாமல் பூம், பூம், பூம் என்று வாத்தியத்தை முழங்கினான். நிறுத்தியதும், மாடுகள் தலையாட்ட ஆரம்பித்தன. அந்தத் தலையாட்டால், பிண்ணாக்கு வேணும், பருத்திக் கொட்டை வேணும் என்று சொல்வதுபோலிருந்தது!
பிண்ணாக்குச் சாப்பிடச் சொன்ன மாடே ! பருத்திக்கொட்டைச் சாப்பிடச் சொன்ன மாடே ! இந்தா, பிண்ணாக்கு! என்று எடுத்துக்கொண்டு சிறுவன் ஓடிவந்தான். உடனே பெருமாள் மாட்டுக்காரன், “சின்ன எஜமான் ஓட்டு கொண்டாந்து போடுங்க! இந்த மாடு ஓட்டைத்தான் சாப்பிடும்” என்று கெஞ்சினான்.
சின்ன எஜமானுடைய அப்பா சிரித்துக்கொண்டேயிருந்தார்.
“பாருங்கசாமி, பாருங்க எதாவது ஒரு பழசுபட்டு; ஒரு ஓட்டு போடுங்க” என்று பல்லைக் காட்டினான். அவர் மௌனமாயிருந்தார்.
அய்யா போடுவாரா? பூம், பூம், பூம்! மாடுகள் தலையாட்டின.
வீட்டுக்காரர் உள்ளே போனார். பெருமாள் மாட்டுக்காரனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. “அய்யா உள்ளே போயிருக்கிறார், ஓட்டுக்கொண்டு வந்து போடுவாரா?” பூம், பூம், பூம். “அய்யா போடுவாரா? பூம், பூம், பூம்!”
உள்ளே சென்ற அய்யா, போட்டுவிட்டார்! எதை? கதவுக்குத் தாழ்ப்பாளை!
பெருமாள் மாட்டுக்காரன், திகைத்தபடி, ஈனஸ்வரத்தில். “அய்யா போடமாட்டாரடா? பூம், பூம், பூம்!” என்றான். மாடுகள் தலையாட்டிக்கொண்டே இருந்தன. பூம்! பூம்!! பூம்!!!
