மீசை முளைத்த வயதில்
கட்டுரைகள் 22 · 22 / 26
போர் நாளும் வந்தது - ஊர் மக்கள் கூடி விட்டார். இருநூறு பொன் பந்தயத் தொகையாக இரு சார்பும் கட்ட வேண்டுமென நிபந்தனையும் தந்தார்கள் ஊர்ப் பெரியோர்! நானூறு பொன் கொண்ட கிழியொன்று தொங்குகின்ற மண்டபத்தில் ஊரார் அனைவருமே நிறைந்திருந்தார்.
இனியன் தன் சேவற் கோழியுடன் களம் வந்தான், “இளங்கோழி! ஆனாலும் செங்கண்ணன் கோழிபோல் பலமுள்ள கோழியாய்த் தெரியவில்லை” எனச் சொன்னார் சில கிழவர்! அதைக் கேட்டாள் ஏந்திழை! மேனியெல்லாம் வியர்வையாலே நனைந்து விட்டாள்!
இனியனின் சேவல் நிற்கின்ற இடம் நோக்கி, ராஜநடை போட்டவாறு செங்கண்ணன் கோழி வந்தவுடன் ஊர்ச் சிறுவர் கை கொட்டி வரவேற்றார். ஏந்திழைக்குப் பொறுக்கவில்லை. செங்கண்ணன் கோழி, உயரத்தில் இனியன் கோழிதன்னை மிஞ்சுவதாய் நின்றிருந்த காட்சி அவள் உள்ளத்தை உலுக்கிற்று.
போர் ஆரம்பம். ஒன்றையொன்று கொத்துதற்கும் பிராண்டுதற்கும் காலாலே சீறுதற்கும் முயற்சித்து மோதின! சிறகுகள் காற்றில் பறந்தன! எகிற் கொண்டைகள் நிமிர்ந்தன! சுழற் காற்று போல் இரண்டு சேவலும் சுழன்று சுழன்று போர் புரிந்த வேகத்தை ஊரார் வியந்தனர்!
இனியன் கோழித் தலையினிலே ஒரு கொத்து! குருதி வெள்ளம்! ஆனாலும் அயரவில்லை. முதுகினிலே மற்றொரு கொத்து! வலி பொறுக்கவில்லை. சற்றுச் சோர்வு!
அந்தச் சோர்வு கண்ட நேரத்தில் செங்கண்ணன் கோழி ‘மளமள’ வென அதன் மீது பறந்து பறந்து கொத்தியது! சீறியது! இனியன் கோழி கத்தியது! ஏந்திழைக்கோ நிற்க இயலவில்லை. அதைவிட்டு ஓடிவிட்டாள்.
அவமானம் சூழப் போகிறதே என நினைத்து இனியனுமே கலங்கலுற்றான். ஏந்திழை ஓடியதைக் கண்டு மனம் நொந்தான். செங்கண்ணனின் சிரிப்பு வலுத்தது. ஊர் மக்கள் கை கொட்டி ஆர்ப்பரித்தார்.
இனியன் கோழி இப்போது வீழ்ந்துவிடும் - செத்துவிடும் எனச் சொல்லி ஒரு கிழவர் வாய் மூடுவதற்குள், செங்கண்ணன் கோழி மீது அக்கோழி ஒரு பாய்ச்சல் நடத்தியது. மறு பாய்ச்சல் - செங்கண்ணன் கோழிக்கு வயிற்றினிலே ஒரு காயம்! அடுத்து ஒரு மோதல் - பாய்ச்சல்! . . . . இனியனுக்குப் பெரு மகிழ்ச்சி!
திடுமெனச் செங்கண்ணன் கோழி விலகிச் சென்று, இனியன் கோழி மேல் பாய்வது போல் போக்குக் காட்டி களம் விட்டு ஓடிற்று! தோல்வியால் முகம் தொங்க விட்டான் செங்கண்ணன்.
அதே ஊர் மக்கள் இனியனுக்கு மாலையிட்டார். மாலைத்தன்னைக் கோழிக்கு அணிவித்து நானூறு பொன்னோடு வீடு வந்தான். குப்புற வீழ்ந்திருந்த ஏந்திழைக்கு வெற்றிச் சேதி கிடைத்திடவே - அத்தானை எதிர் கொண்டு தழுவிக் கொண்டாள். விடவே மறுத்தாள். முத்தமழை - காதல் பெருவெள்ளம் உடைப்பெடுத்து ஓடிற்று; இன்பப் பிரவாகம்.
கோழிக்குக் களைப்பாற வேண்டுவன செய்துவிட்டு, “நானூறு பொன்னுக்கும் கோழிக்கே ஒரு கூண்டு வாங்கிடுவீர்! . . . இருப்புக் கம்பியுள்ள கூண்டு இனி நம் கோழிக்குக் கூடாது; வெள்ளிக் கம்பியுள்ள கூண்டொன்றே தேவை” என்றாள். “சரி” என்று கிளம்பிவிட்டான் கூண்டு வாங்க!
மறுநாள் காலையிலே வெள்ளிக் கூண்டுடனே வேல் விழியாம் ஏந்திழையைக் கூப்பிட்டான், “பார்த்தாயா
கூண்டழகை” எனக் காட்ட! அவளும் வந்து இருவருமே இருப்புக் கூண்டினிடம் சென்று அன்புச் சேவல் தன்னை இடம் மாற்றிக் குடியேற்றக் கூண்டைத் திறந்தார். வெள்ளிக் கூண்டினிலே வாழ்வதற்கு சேவலுக்கு விருப்பமில்லை போலும் - அதனாலே அது மாண்டு கிடந்தது இருப்புக் கூண்டினிலே!
●
அன்பு, ஒன்பதாம் மடல் தீட்டுகின்றேன். இன்பவெள்ளம் என்றென்றும் உண்டென்று கை பிடித்தீர். துன்ப மழை! சோகத் தொடர்கதை! இதற்குத்தான் பெண் பிறந்தாய் எனக் கூறிவிட்டால் எதற்குத்தான் எழுதப் போகிறேன்! இதய வலி தீர்ப்பதற்கு எப்போது வருகிறீர் - மருந்து முகத்தோடு - எனக் கேட்டால்; விருந்துண்ண அழைக்கும்போது வீண் மதிப்பு எனக்கதான் காட்ட வேண்டும்!
போர் முடிந்து களம் தோய்ந்த குருதியெல்லாம் காய்ந்து பல நாளாயிற்றென்றும் - காக்கை கழுகொன்றும் அங்கு வட்டமிடுவதில்லை என்றும் கால் ஒடிந்து திரும்பியிருக்கும் வீரன் சொன்னான். “களத்தினிலே உன் காதலன் பெற்ற புகழ் பெரும் புகழ் பெண்ணே!”
என்று அவனே சொன்னான். அதையும் கேட்டேன்.
கண்ணேயென்று அழைப்பொன்றும், அது தொடர்ந்து கட்டழகுக் காலையொன்றும் வீட்டுக்குள் புகுந்து என்னை வேட்டையாடும் வேலை மீண்டும் வாராதோ என இருந்த எனக்கு அச்சேதி தித்திப்புத் தான்! ஆயின் என் ? “எதிரிகளை அழித்துவிட்டுத் தழும்புகளில் உந்தன் இதழ் மூலிகையால் ஒத்தடம் கொடுத்துக் கொள்வேன்!”
எனக் கழன்று சென்றீர்!
“வேலெடுத்து வீசும்போது உந்தன் விழிதான் நினைவில் நிற்கும்! வாளெடுத்துச் சுழற்றும்போது உந்தன் ஒளி வீச்சு! கிளிப் பேச்சு!” - விடை பெற்றுப் போவதற்கு வாரி இறைத்தீர் பொய்மைகளை என்ற உண்மை இன்றன்றோ தெரிகிறது! இரவு நேரம் பாசறையில் எப்படித்தான் பொழுது போமோ என ஏங்கி நின்றீர்; வீங்கிய புயத்தினிலே நான் சாய்ந்து நின்றேன்! அவர் தானோ நீர் என்று ஐயம் கொள்ளுகிறது என்னை! வெள்ளைத் தாழையின் இதழ் பறித்துச் செண்பகப் பூவின் செழுமை நிறை அரும்பைச் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து மடல் எழுதிய மாதவிக்கு மனமொடியும் பதிலொன்றை வாய் மூலம் - வசந்தமாலை மூலம் அனுப்பினானே கோவலன்; அவனுக்கு அண்ணன் அத்தான் நீங்கள்!
“குமிழம்பூ முக்கும் குவளை மலர்க் கண்ணும் கொண்டும், கொவ்வைப் பழம் போன்ற வாய் மொழியால் எனை ஏமாற்றிய மாதவியின் கண்கூடுவரியை நானறிவேன்!” என்று பழித்துரைத்தான்! அதனினும் கொடுமையைத்தான் நீங்கள் காட்டும் மௌனம்! “வா” என்றால் வந்து, “போ” என்றால் போகும் நடிப்புமிகும் காண்வரிக் கோலத்தை அந்த கணிகையிடம் கண்டிருக்கிறேன் எனக் கற்புமணி மாதவியை இகழ்ந்துரைத்தான்! அவனினும் தீயவரே நீங்களென்று செப்புகின்றேன்; என் சிந்தையற்று இருக்கின்றீர், அதனாலே!
“மாலைப் பொழுதில் காதல் மயக்கத்தால் நான் வாடும்போது மயிற் சாயலும் அன்ன நடையும் காட்டாது மறைத்து, ஏவற் பெண்ணின் கோலத்தோடு என் எதிரே வரும் மாதவியின் உள்வரியாடலை உணர்வேன்” என்று உறுமி நின்ற கோவலனினும் ஒருபடி உயர்ந்தவர் ஏமாற்றுவதில் நீங்களென்றேன், நீண்ட நாள் மறந்து விட்டதால்!
“மேகலை ஆர்ப்ப - சிலம்பு கொஞ்ச - காதல் மிஞ்ச என் முன் வந்து சுருண்டு நின்று, என்னைத் தழுவாமலே போய்விடும் மாதவி கற்ற புறவரி எனக்குத் தெரியும்!” எனப் புகன்ற அந்த வணிகனினும் மேம்பட்ட வஞ்சகர் நீங்கள், வஞ்சியெனக்கு ஒரு வரியும் எழுதாத காரணத்தால்!
ஊடலுக்கு சொன்ன சொல்லை, உண்மைக் கோபச் சொல் எனக் கொண்டு - கிளர்வரிக் கோலம் புரியும் மாதவி என வருணித்தானே; அவள் மடல்
கண்டு . . . அவனை விட அறியாயக்காரர் அத்தான் தான் நீங்கள், என் அவதிக்கு மாற்றுதர விரும்பாத நிலையினால்! பிரிந்தபோது வருந்துகின்ற தேர்ச்சி வரியும், பிரிவிடம் காதல் பற்றி முறையிடும் காட்சி வரியும், ஆளன் வரவில்லையென்று உற்றாரிடம் ஆறுதல் பெற விழைந்து ஆற்றொணாத் துயர் காட்டும் எடுத்துக் கோள் வரியும் கற்றிருக்கும் மாதவியை அறிவேன் நன்கு - எனச் சொன்ன கோவலனுக்கும் உம்மை உவமை காட்ட முடியாது அத்தான்; ஏனெனில் அவன் மாதவியைக் கூடியவுடன் போய்விட வில்லை ...
உலக இன்பம் ஒவ்வொன்றும் பயிலுகின்ற கலைக்கூடம் - அங்கு மாதவியும் கோவலனும் மாறிமாறி ஆசிரியத் தொழில் பூண்டார்! நாடக அமைப்பில் உள்ள எட்டுவகை வரிக்கூத்தும் கற்றவள் மாதவியென்று பழித்துக்கூறும் கோவலனும் அவளழகைப் பாராட்டத் தவறவில்லை. அத்தனை நாள் ஒன்றாய் இருந்திட்டார், உம்மைப்போல் ஒரு கிழமை முடிந்தவுடன் வரும் பகையை ஒட்டுதற்கு ஓடவில்லை.
