உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 21 · 21 / 26

“உண்மையாகவா ?”

“மாமரத்தில் தாவுகின்ற மல்லிகையே - பாமரர்கள் கூறுகின்ற சாதி உனக்கு இல்லையே!

-என்று மாமரத்தையும், மல்லிகையையும் கவிதையில் நிறுத்தி மனித வர்க்கத்தைப் பழித்தீர்களே... நினைவிருக்கிறதா ?”

இளவரசியின் கன்னங்களில் சிவப்பு விரிந்தது.

சிற்பி இன்னும் பேசினான் : “நான் தங்கள் கவிதை இன்பம் பெறத் தவறுவதேயில்லை. தங்கள் கற்பனைக்கு இலக்கான மல்லிகைக் காட்டுக்குப் பின்புறத்தில் மாலை நேரங்களில் ஒளிந்திருப்பதும், தங்கள் கவிதைகளை ரசிப்பதும் என் வாடிக்கை...”

“காரணம் ?” அவள் இந்த உலகத்தில் இல்லை.

“இளவரசி......” பொன்னழகன் பேச்சை இழுத்தான்.

இளவரசி குறுக்கிட்டாள். “நான் வேல்விழி!”

வெட்கத்தால் அவள் குனிந்து கொண்டாள்.

“வேல் விழி!”

“அன்பா!”

அம்பிகாபதி அமராவதி சிலை அவர்களை வாழ்த்துவது போல் தோன்றியது!

●

இயலூர் போய் வீடு வந்த இனியனிடம் “என்னத்தான் வாங்கி வந்தீர்?” எனக் கேட்டு பறந்து வந்தாள், ஏந்திழையாள். இல்லத்தின் புதுச்சுவையைத் தெவிட்டாமல் உண்ணுகின்ற இளங்காதற் பெட்டகங்கள், இனியன் - ஏந்திழை, இருவரும் தமிழ்க் குலத்தார் - எழிற் கோலத்தார்!

“வானவில்போல் அழகு காட்டி வளைந்திருக்கும் தோகை கொண்ட ஆண் கோழியொன்று வாங்கி வந்தேன்” எனச் சொல்லி, மடி மீது இருந்து கொண்டு மற்றதமிழன் சாயல் காட்டும் சேவல் தன்னைப் பார் என்றான். “பாகற் பழம் போன்ற கொண்டைதனைக் கண்டாயோ பெண்ணே! துடுப்பட்ட நாக்கு போல் தொங்குகின்ற தாடையின் அழகுபார் கண்ணே! சேரனின் நடை காட்டும்! படை கண்டு கலங்காத வீரனின் தோற்றம் காட்டும்!”

எனப் புகழ்ந்தான்

“சரியத்தான் ஒப்புகிறேன்; பெட்டை யொன்று வாங்கி வந்தாலும் முட்டையிடும் . . . இதைக் கொண்டிருந்து பயன் என்ன ?” ஏந்திழையின் பேச்சுக்கு முதற் பதிலாய் நகை முழக்கிப் பின்னும் கூறலானான் “துப்புரச் சிவந்த’ வாய்ப் பேரழகே! பசு மாடு, பெண்ணாடு, பெட்டைக் கோழி - வளர்ப்பதிலே பால், முட்டையெனப் பயன் காணும் குறிக்கோள் ஒன்று மட்டும் உண்டு!... நான் சேவல் வாங்கி வந்த நோக்கத்தை உன் செவிதனிலே போட்டால் ஒப்பிடுவாய் என் செயலை!”

எனச் சொன்ன அத்தானின் தோளில் சாய்ந்து, “புரிந்து கொண்டேன் உமது உள்ளம்- பெண்ணைப் புகழ்வதற்கு மயில் தன்னை அழைத்திடுவார்; - இனிமேல் ஆணைப் புகழ்வதற்கும் சேவல் தன்னைக் காட்டிடலாம் என்பதுதான் உமது எண்ணம்!” எனச் சிரித்தாள்.

“அதிலும் தவறுகின்றாய் என் அன்பே ஆணுக்குச் சேவல் தன்னை ஒப்பிடலாம்!... மறுப்பாரில்லை! ஆனால் ஒன்று; பெண் குலத்தைப் புகழ்வதற்கும்

ஆண் மயில் தான் தேவைப்படும் - அதையும் உணர்ந்திடுவாய்!” என்று கூறி அவள் முகக் கடுப்பதற்குள் முத்தத்தால் சிவப்பாக்கி முடித்துவிட்டான் கோபந்தன்னை!

“ஏந்திழையே! இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றை உன்னிடத்தில் சொல்லாமல் இருப்பதற்கு முடியவில்லை! என் மாமன் செங்கண்ணன் இருக்கிறாரே; அவருக்குத் தினந்தோறும் தேகத்தில் கொழுப்பேறி நாக்கு வழி சிந்துகின்ற காட்சிதனை நான் நேராக அனுபவித்தேன். சேவற் சண்டையிலே பெருவீரர் எனப் புகழ் மண்டிவிட்ட காரணத்தால் - என்னமோ தானேதான் உடல் வருத்திப் போரிட்டு வென்றது போல் அரிவாள் மீசை தன்னை முறுக்கி விட்டு, அன்றொரு நாள் இலங்கையினை ஆண்டிருந்த இராவணன் போல் எண்ணிக் கொண்டு நடக்கின்றார்; தொலையட்டும் கவலையில்லை!

நான் சேவல்தன்னை வாங்கிக் கொண்டு வருகின்ற வழியினிலே மடக்கிக் கொண்டு, ‘என்னப்பா இளவெட்டு! சண்டைக்குப் பழக்குதற்குக் கோழி வாங்கிப் போகின்றாயோ ? எனக் கேட்டார். “இல்லை”யென்றேன்; ‘என்னதான் பழகினாலும் என்னை வெல்ல ஈரேழு லோகத்திலும் ஆள் இல்லை! வளர்த்துப் பார் உன் சேவலையும்! என் கோழி மூச்சுப்பட்டால் உன் கோழி ஒரு காதம் ஓடிவிடும்’ எனத் தற்பெருமை மலைமீது ஏறி நின்று சண்டைக் கோழி தரும் பெருமையாலே மண்டைக் கனம் கொண்டு விட்ட மாமன் கூவலானார்.

நானும் பேசலுற்றேன்;

சேவற் சண்டையிலே பெற்ற புகழ் பெருவீரம் என நினைத்து - சேரன் செங்குட்டுவன், கனகவிசயர் மீது வீசி நின்ற கனல் தெறிக்கும் வார்த்தைகளைப் பேசாதீர் மாமா! கோழி தன்னை ஆசையாய் வளர்ப்பதற்கு வாங்கி வந்தேன் - கோழ்மையையும் இனங்கொள்ளச் செய்கின்ற உமது பேச்சால் அந்த எண்ணம் மாற்றிக் கொண்டேன். சூளுரைப்பேன்; ஏற்றுக் கொள்ளும். துர் நீதான் எனச் சூட்டிக் கொண்ட பட்டத்தை, எண்ணி இரு திங்கள் முடிவதற்குள் இழக்கச் செய்வேன்.

இன்று முதல் எந்தன் கோழி சண்டைக்கோழி! இதையறிவீர் - வருகிறேன்” எனச் சொல்லி வந்துவிட்டேன் - ஊர் முழுவதும் பரவிவிட்டதடி இச்செய்தி!

“எனத்தான் புது வம்பு! கோழிச் சண்டையினைத் தொழிலாய்க் கொண்ட செங்கண்ணன் - அவரிடத்தில் வெல்வதென்றால் சுலபமா ? வேண்டாமே வீராப்பு! தோற்றுவிட்டால் வெளியிலே கிளம்புதற்கும், வீதியிலே நடப்பதற்கும் வெட்கம் - வெட்கம்! வேண்டாம் அன்பா பிடிவாதம் - விட்டு விடுக!”

என்றாள்.

“தமிழன் சூளுரைத்துப் பின் வாங்கினான் எனில் தலை குனிய நேராதோ-தங்கமே! அஞ்சாதே! நம் கோழி வீரக்கோழி என்பதற்கு ஒரு சான்று! இதன் தாய்க் கோழி, ஒரு நாள் குஞ்சுக் கூட்டமுடன் இரை தேடப் போகும்போது, கொத்த வந்த பருந்து ஒன்றை எதிர்த்துத் துரத்தியதாம். மற்றொரு நாள் வஞ்சக நரியொன்றின் வயிற்றுக்கு விருந்தாகும் நெருக்கடியில் போராடித் தப்பியதாம்! அதன் பிள்ளை இந்தச் சேவல்!”

“சரியத்தான் - சேவல் பேச்சு முடியட்டும்... பெட்டைக் கோழியின் துயர் தீர்ப்பீர்; வாரும்!” என்றாள் பஞ்சணைக்கு! பருவ ராணி தந்திட்ட பழச்சுவை யமுதங்கூட அவனுக்குச் சுவைக்கவில்லை; மலர் மெத்தை இன்பத்தைத் தரவும் இல்லை; வீணையும் நாதமும் ஆகிவிட்ட நிலையில் கூட ஏந்திழையின் செங்கண்ணைப் பார்த்தவுடன் செங்கண்ணன் நினைவாலே குழப்பமுற்றான். எப்படியும் வெற்றி பெற்றிட வேண்டுமென்ற துடிப்பாலே செயல் புகுந்தான்.

சேவலுக்குப் போர்ப் பயிற்சி துவங்கிற்று.

தாயின் பேரைப் பிள்ளை எடுக்குமென்ற தளராத நம்பிக்கையொரு புறமும் - செங்கண்ணன் கோழிப் போர்மேதை என்ற புகழுரைகள் மறுபுறமும் நெஞ்சத்தைத் தாக்கிடவே, நாள் நெருங்க நெருங்க நடுங்கலானாள் ஏந்திழையாள்!