உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 2 · 2 / 26

நீயும் கருப்பாயிருந்து சிரிப்பதால்தான் உன் நட்சத்திரப் பற்களின் வைர ஒளியை வையம் புகழ்கிறது. நீ சிரிக்கிறாய்; ஆயிரம் முத்துக்களை அடக்கி வைத்துள்ள சிப்பியைப் பிளந்ததுபோல் இருக்கிறது உன் வாய், பெண்ணே! உன் இருதயத்தின் படபடக்கும் ஒலிகூட என் காதில் விழுகிறது. அவ்வளவு அமைதியாயிருக்கிறாய் நீ! நீ, அமைதி அலங்காரி ஆனாலும் உன் இருதயம் சாந்தியற்றது. சஞ்சலம் நிறைந்தது. அதன் துடிப்பை உணருகிறேன் நான்.

உனக்கு ஒரு காதலன் வேண்டும். கள்வர்கள் உன்னைக் காதலிக்கிறார்கள். நீ வெறுக்கிறாய். வேதனைப்படுகிறாய். குடியர்கள் உன் மடியைத் தேடி அலைகிறார்கள். நீயோ குமுறுகிறாய். அதையும் உன் இதயம் சொல்லத் தவறவில்லை. கனி குலுங்கும் சோலைகளில், காவிரியின் கரைகளில், கட்டித் தழுவும் காதலர்களின் சரச உரையாடல்களைக் கேட்டுக் கேட்டுத் தினவெடுத்த உன் இருதயம் கனத்துப் போய்க்கிடக்கிறது. நீ சிரிக்கிறாய், வெளி உலகுக்கு!

ஆனால் உன் இருதயம் அழுவதை என்னால் உணர முடிகிறது. காதலுக்கேற்ற கட்டழகனே கிடையாதா என ஏங்குகிறாய். நானோ கல்யாணமானவன். என் விடுதலை ராணியை வெளியில் விட்டுவிட்டு வெந்து

கொண்டிருக்கிறேன் வெஞ்சிறைதனிலே!

கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் உன் சுயம்வர மண்டபத்திலே காலையெடுத்து வைத்து - நீ மாலையெடுத்து வரும் சமயம் - உன் மந்தகாசப் புன்னகை கண்டு, மயக்கமுற்று உலகத்துக்குத் தேவையாக ஏதாவது உளறியபடி விழுந்து விடுகிறார்கள்.

நீ விட்ட கண்ணீர் - தோட்டத்து மலர்களிலே, காட்டகத்துப் பூக்களிலே, பனி நீராகத் தேங்கியிருப்பதை நான் காணாமலில்லை. ஆனாலும் என் செய்வது! ஆறுதலுக்கு வழியிருக்கிறதா என்று நீ பார்க்கிறாய். ஆருயிர்த் தோழிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறாய்... அவர்களும் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாரும் உன் நல்ல பண்பின் மறைவிலே நாச நாடகம் நடத்திச் சம்பாதிக்கிறவர்கள். நலிந்து போன மாதர்கள்.

ஆமாம்; உன் சகோதரன் சந்திரன், வெண்துகில் ஒன்று கொடுத்தானே; அதை யார் பிடுங்கிக் கொண்டது? இயற்கையாண்டிதானே! அப்பப்பா;

அவன் ஒரு “மாயக் கண்ணன்” தான். உன் சேலையைத் திருடுவதிலே அவனுக்கு ஒரு திருப்தி. திருட்டுப்பயல் அவனைத்தான் உனக்கு அறவே பிடிக்காதே.

பிறகு எப்படித்தான் உனக்குத் திருமணமாவது? கருப்புப் பெண்ணே! இரவு நங்கையே! என் கவலையெல்லாம் உன் கல்யாணத்தைப் பற்றித்தான் - என் முகம் வெளுக்கிறது உனக்கு?

நேரமாகிவிட்டதென்றா? சோகம் தாங்காமலா? விரகதாபம் மேலிட்டா? இரு, இரு, அதோ வந்துவிட்டான் என் நண்பன். உனக்கேற்ற காதலன். அவனைத் தெரியுமா உனக்கு? காலையெனும் கட்டழகன் அவன்தான். உங்கள் கல்யாணத்தை இப்போதே முடிவுசெய்து விடுவோம். கருப்புப் பெண்ணுக்கும் காலைக்கும் கல்யாணமாம்; அதற்குப் பெயர் கருக்கலாம்.

அடே! எங்கே ஓடுகிறாய் - இரவுத் தோழியே; இளமைமாறா நங்கையே! இரு இரு, காதலனைக் கண்டதும் அவ்வளவு வெட்கமா உனக்கு! சரி, சரி போ!

●

கதிர் விழுங்கி - மதி உமிழும் கடலே! நிலமடந்தைக்கெழிலூட்டும் நீல உடையே! ஜகப் பெண்ணாளின் சந்தன மேனியில் சலசலவெனப் பறந்தாடும் சல்லாத்துணி நீ! பச்சைச் சிசுவின் பவள உதட்டிலே வழிந்து நிற்கும் பால்! கரையில் நீ உமிழும் நுரை! இரண்டும் ஒன்று! அசைந்தாடும் அழகு உதிர் அலைக்கரங்களால் அருமையான சங்குகளை நீ அள்ளி இறைப்பது; செங்கரும்புச் சிறு கைகளால் குழந்தைகள் செய்யும் இன்ப விஷமத்தை உணர்த்திக் காட்டுகிறது.

ஓய்வுபெற உன்பால் வருவேன். ஓசை முழக்கத்தால் உள்ளத்தைத் தாலாட்டுவாய்! தூங்காப் பெருங்கடலே! தூய்மை நிறை நம் சந்திப்பில் சிறு தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் கடலே! என் மடலுக்குப் பதில் எழுது.

“உழைக்கும் பாட்டாளி - உயரும் முதலாளி - உண்மை நவில் அறிஞன் - உயர் பண் தரும் கவிஞன் - சிற்பி - சித்திரக்காரன் - சிந்தனையாளன் - எல்லாருக்குமே ஓய்வுண்டு. உனக்கு ஓய்வே கிடையாதே ஏன்? ‘ஓயாமல் உழைக்கிறேனே பார்’ என்று உடல் வளையா சோம்பேறிக்குச் சொல்லிக் காட்டுகிறாயா?”

என்று முன்பெல்லாம் கேட்டேனே? அதைக் கேட்பேன் என்று எண்ணுகிறாயா? இல்லை; இல்லை.

கற்கண்டுக் கையால் கஞ்சியைத் துழாவித் தந்து, அதைவிட இனிப்பான முத்தம் தந்து காலையிலே கட்டுமரத்தில் வழியனுப்பி வைக்கப்பட்ட காதலன் - கதிரவன் சென்றும் வரக்காணேனே என்று கண் சோர, கால் சோர குடிசையின் வாசலிலே எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் ஏந்திழையாள், உன்னை நம்பி வாழும் குடும்பத்தின் இளஞ் சிட்டு - அவள் அயர்ந்து போகாமல், இடிந்து மாளாமல், அவள் கணவனை அன்றாடம் உன் நீலமணித் தோள்களிலே தூக்கி வருகிறாயா? என்று கேட்பேனே - அதைத்தான் கேட்கப்போகிறேன் என்று கருதுகிறாயா?

இல்லை - இல்லை.

கடல் மாதா காப்பாற்றுவாள் என்று நம்பி ஓரத்திலே முளைத்திருக்கும் ஓலைக் குடிசைகளைத் தூக்கி

எறிகிறாயே; தொழிலாளிகள் என்றால் உனக்குமா துரோக புத்தி - என்று கேட்டிருக்கிறேன் - பலமுறை கேட்டிருக்கிறேன் - அதையல்ல இப்போது கேட்கப் போவது!

முத்துப் பெருங்குளமே!

சிறைச்சாலையிலே, என் சிந்தனை அலைச்சலிலே அன்றொரு நாள் நீ செய்த அட்டூழியம் தலைகாட்டி மறைந்தது, கவின் நிறை நகராம் - தமிழரின் செல்வப் பூங்கா - காவிரிப்பூம்பட்டினத்தை அலைக்கரம் நீட்டி அழித்துப் போட்டாயாம்! ஏன் இந்த அநியாயம் புரிந்தாய் என்று கேட்கவில்லை. அதற்காக வழக்குத் தொடரவும் போவதில்லை.

ஆனால் கடலே! எம் செல்வத் திருநகரின் செழிப்பை அழித்தனையே! அதுபோல் பொல்லாத வடநாட்டுச் சின்னத்தை அழித்திடத்தான் துள்ளாதோ கல்லக்குடியில், உன் கரம்?

மடலுக்குப் பதில் எழுது! இல்லையெனில் மெளனமாய் இரு! இரண்டுமே உன்னால் முடியாத காரியம்!

●

அழகு

நதியே! நடனப்பெண்ணே! ஆட்டக்காரியின் அபிநயக்கரம் போல நெளிந்திடும் உன் அழகே அழகு! பெருகிவரும் நுரை வெள்ளமே! உருகி வரும் வெள்ளி ஒளியும் உனக்கீடாமோ! பண்ணமைக்கும் சிலம்பு நிகர் ஒலியும், வண்ணமெலாம் கூட்டிவரும் நடையும், உழவர் எண்ணமெலாம் களிப்பு செய்யும் உருவும் பொருந்திய பொன்னி மாதரசி! வாழி நீ வாழி!