உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 3 · 3 / 26

காதலி

காதற் பெண்ணே! காவிரிக்கண்ணே! சிவப்பு தவழ் பவள இதழ் நங்காய்! உவப்பு நிறை காதலினால் மண்ணழகன் வாயில், நீ உமிழ்ந்துவிட்ட தாம்பூலந்தான் வண்டலெனும் பொருளோ!

அன்னை

முற்றாத மழலைகளை வற்றாத கைநீட்டி வளர்த்திடும் தாயே! அன்புக் கரத்தின் அணைப்பினால் - ஆணிப்பொன்மேனி அசைந்தாட, மாணிக்கப் பல்காட்டிச் சிரிக்கும் செந்நெற் குழவிகளைப் பார்த்திடுவாய்! இயற்கை இன்பம் சேர்த்திடுவாய்! அருமைத் தாயே! ஆற்று மாதா! தெரிந்தோ தெரியாமலோ தீய களைகளுக்கும் பாலூட்டுகின்றாய். இப்பிழையை உந்தன் அன்னையிடம் கற்றனையோ! தொட்டிற் பழக்கமோ, அல்லது உன்னிடந்தான் அந்தத் தூயவளும் கற்றனளோ!

அரசு

நன்மைகளைக் கொலு வைத்துக் குதூகலம் அடைவதிலே உனக்கு நிகர் யாருளர்? மஞ்சள் மணிக்கதிர் உன் மடியில் படுத்தே தலை நீட்டுகிறது. கரும்பின் கால் நனைந்து அதன் கணுவெல்லாம் சுவையேற்றுகிறாய். வாழை - மா - பலா - இன்னும் வாழ்வுக்குத் தேவையெல்லாம் உன் கைபட்டே கருத்தரிக்கின்றன. பொதுநலம் காணவே உழைத்திடும் உன்னை ஓர் அரசுக்குச்

சமானமென்பேன்! நாட்டுக்குள் புகுந்து நலம் பாடும் நீயொரு நல்லரசு! கடமை புரிந்தபடி கடல்நோக்கிச் செல்லும் நதியரசே! கடலை நீதான் சென்று நிரப்புகிறாய் என்று மட்டும் நினைத்து விடாதே! அப்படித்தான் இந்த வையகத்தில் அரசு புரிவோர் நினைத்து விடுகிறார்கள். சமுத்திரத்து நீர் முகிலாக மாறியதால் நீ சந்தன வண்ண ஆறாக ஓடுகிறாய்! ஆறு போல்தான் அரசு! ஜனசமுத்திரத்தின் படைப்பு! நிலைகெட்டு ஓடினால் அணை போட்டுத் தடுப்பர், நதியே உன்னை!

நாடாளும் அரசுக்கும் அக்கதிதான்!

ஓடும்போதே, இந்தப் பாடம் சொல்லி,

வாழ்ந்திடு நதியே! வாழ்ந்திடு! நதியே!

●

வைகறையே! வா! என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு போ! அடடா! வாழ்த்து என்றதும் இப்படி ஓடி வருகிறாயே - அட, புகழ்தேடி! முதலில் வசவு - பின்தான் வாழ்த்து! ஆமாம் - சேவலையும் எழுப்பிவிட்டாய் - செங்கதிரையும் எழுப்பி விட்டாய் - இரண்டுக்குமிடையிலே, உழைப்பாளி வீட்டின் கதவை ஏனப்பா அவ்வளவு அவசரமாகத் தட்டுகிறாய்? இரவெல்லாம் உடல் வலியால் மண் தரையில் உருண்டு, கடைசியில், அந்தக் களைப்பில் கண்மூடிக் கிடக்கிறானே தவிர; உறங்கிக் கொண்டிருக்கிறான் என்றா எண்ணுகிறாய்!

ஏழை என்ற ‘இளக்காரம்’ உனக்கும் ஏற்பட்டு விட்டதால் தானே - சோர்ந்து சுருண்டு கிடப்போரின் குடிசைக் கதவை அவ்வளவு பலமாகத் தட்டுகிறாய்? மாளிகைகளின் படியேற உன் கால் நடுங்குகிறதோ - அன்றிக் கைதான் கதவைத் தொட்டிட அஞ்சுகிறதோ?

‘ஏழையே! எடு கலப்பையை’ என்று எவ்வளவு அதிகாரமாய் அதட்டுகிறாய். என்றைக்காவது ஒரு நாள்; எழில் மாடத்தில் சாளரத்தின் வழியாகவாவது, ‘நேரமாகி விட்டது’ என்று வீணை அதிர்வது போலவாவது விளம்பியிருக்கிறாயா?

ஏழையை நீ எழுப்பாத நாள் - அவன் இறந்து போன நாள்தானே! பிணத்தை நீ எழுப்புவதில்லை! மாளிகையின் நடைப்பிணத்தையும் நீ எழுப்புவதில்லை.

புரிந்துகொண்டேன் உன் பொருள் பொதிந்த போக்கு!

வைகறையே நீ வாழி!

●

“கையினிலே தட்டேந்தி சோர்ந்து நிற்கும் என்னைப் பார்த்து கைதிக்காவலன் மொண்டு ஊற்றும் சோளக் கஞ்சி கலகலவென சிரிக்கிறது. ‘கட்டுண்ட திராவிடத்தைக் காத்திடப் போராடி, இன்று தட்டுடனே நிற்கும் தம்பிமாரே! கஞ்சியெனைக் கண்டு கலங்குவதேனோ’ என்று கேட்கிறது அகப்பைக்குள்ளிருந்து!

இந்த அகப்பை சித்தரின் பேச்சிலும் அர்த்தமிருக்கிறது. புதிய தெம்புள்ள கருத்துமிருக்கிறது. இந்த சித்தரின் சூடான நாக்கு, எவ்வளவு குளிர்ச்சியான உண்மைகளைக் கொட்டுகிறது!

‘தம்பி! குளிர் தருவிலேயிருந்து நீ, கொஞ்சம் கோடையையும் அனுபவித்துப் பார்! வெடித்த வயல்களுக்கு நீர் பாய்ச்சுகிறவனின் சிரமமும், மாட்டு மந்தையை ஒழுங்காக மேய்த்துச் செல்ல ஓடியாடும் மாட்டுக்காரப் பையனின் கஷ்டமும், காலிலே சணல் சாக்கைச் சுற்றிக் கொண்டு அதை வாழை நாரினால் கட்டி, தலையிலே காய்கறிக் கூடையுடன் கிராமாந்திர சுடுமணலில் நடந்து செல்லும் ‘அன்றாடங்காய்ச்சி’ வியாபாரிகள் படும் அல்லலும், ‘ஈன ஜென்மமெடுத்தேன் என் அய்யனே’ என்று கரகரக்கும் தொனியில் பாடிக் கொண்டு, சுரைக்காயைக் குடைந்து மூங்கிலைச் செருகித் தயாரித்த சுத்த சுதேசித் தம்புராவை மீட்டியபடி ஊர் ஊராக உருண்டு புரண்டு பிச்சையெடுக்கும் மனிதப் பழுப்புகள் - தளிர்கள் - படும் வேதனையும், அப்போதுதான் உன் உள்ளத்தைத் தொடமுடியும்.

குளிர்நிழலிலிருந்து கோடைக்கு வா! குற்றாலத்திலிருந்து கொடைக்கானலுக்குப் போகாதே! கோடைக்கனலை கொஞ்சம் ருசித்துப் பார்!

அறுசுவையுணவையே ஆயுள் பூராவும் நீ அருந்தினால் போதுமா? உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? உன்னைச் சூழ்ந்துள்ள உலகம் மிகப் பெரியது! கஞ்சியே குடித்து வாழும் ஒரு பெருங்கூட்டம், அதுவுமின்றி வாடும் ஜனக்கூட்டம், அவைகளைப் பற்றி நீ யோசிப்பது எப்போது?

என்ன; சொன்னதைக் கேட்காமல் என்னையே பார்க்கிறாய்? தங்க நிறமாயிருக்கிறேனே என்றா? இல்லை - இல்லை - என்னோடு கலந்துள்ள உமிகளைப் பார்க்கிறாய். உமிகளும் என் இனந்தான். எனக்கு உறவினர்கள்தான். உன் இனமென்ன லட்சணமாயிருக்கிறது; மனிதச் சிறுவனே? உமிகள் உன் வாக்கத்திலும் உண்டு. அவர்களுக்கு உமிகள் என்று பெயரில்லை. முதலாளிகள் என்று பெயர் - ஆண்டைகள் என்று பெயர் - அவதார புருஷர் என்று பெயர்! அரசியல் மேதாவிகள் என்று பெயர்!

“உமிகள் உன் இனத்திலும் உண்டு. அவைகளை நீக்கிவிட உன்னால் முடியுமானால் - என்னாலும் முடியும் உமிகளைப் போக்கிவிட! முயற்சித்துப் பார்!”

இப்படி அகப்பை சித்தர் பேசிக் கொண்டேயிருந்தார். வரிசையாக நின்ற நானூறுக்கு மேற்பட்ட நண்பர்களின் தொகை தேய்ந்தது. கடைசியாக, நான்; கையிலே தட்டுடன்! எஞ்சிய கஞ்சியார் என் தட்டில் குதித்தபடியே “என்ன தம்பி! சொன்னது புரிந்ததா?” என்று கேட்டார். “உப்பில்லை” என்றேன். உங்கள் மனித ஜாதியின் உடம்பிலுந்தான் சிலருக்கு ‘அது’ இல்லை என்றார்.