மீசை முளைத்த வயதில்
கட்டுரைகள் 1 · 1 / 26
பிறையே! வானக் கடலலையின் நுரையே! பலகணி வழியே சிறைக்குள் எட்டிப்பார்த்து என்ன சிரிக்கிறாய்?
“கைதியே” என்று என்னை நீ கூப்பிடுவது என் காதில் விழுகிறது. நீ மாத்திரம் என்ன; சுதந்திரத் தேரில் ஏறியா சுற்றிவருகிறாய்? கிழித்த கோட்டைத் தாண்டாமல், விழித்த கண்ணை மூடாமல் சிறைச்சாலைக் காவலனைப் போல நடந்து போகத்தானே உனக்கு உரிமையிருக்கிறது.
சிறைக்கோட்டைக்கு வெளியே தவித்து நிற்கும் காதலியிடம் தாவிட முடியாது என்னால், உனக்கென்ன வாழ்கிறதாம்; உன் கோட்டுக்கு அப்பால் கண் சிமிட்டும் நட்சத்திர சீமாட்டிகளை கைத்திட்டத் தொடமுடியாது உன்னாலும்!
நானும் கைதி!
நீயும் கைதி!
வெளியுலகிலே எனக்கு இருட்டிப்பு உண்டு. உனக்குந்தான் உண்டு; மாதம் ஒருமுறை அமாவாசை! என்னைச் சரியாகப் பிரகாசிக்க விடமாட்டார்கள் - என் முழு ஒளியைத் தந்திரத்தால் மறைப்பார்கள். உனக்கென்ன வாழ்கிறது. உன்னைச் சுற்றி மேகங்கள் - என்னைச் சுற்றி பகைவர்கள்.
நானும் கைதி!
நீயும் கைதி!
நானாவது விடுதலை பெறுவேன். என் நாட்டோடு சேர்ந்து; உனக்கு விடுதலையே கிடையாது - உன் வட்டமிடும் வாழ்வில் மாறுதலே கிடையாது.
பிறையே! வானத்துப் படகே! என் வெண்ணக் கலாப மயிலைக் கொஞ்சம் சுமந்து வாயேன். என்னை எண்ணியபடி ஏங்கிக் கிடக்கும் என் சுந்தரியை எடுத்து வாயேன். பலகணி வழியே அவளைப் பார்த்துப் பரவசமடைகிறேன்! என் விடுதலை தேவியை அழைத்து வாயேன்.
உன்னிடம் சொல்கிறேனே; உன்னால் எப்படி முடியும் - நீதான் கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்ல முடியாதே!
நீயும் கைதி!
நானும் கைதி!
●
சீறியடிக்கும் ஆடிக்காற்றே! யாரைப் பயமுறுத்துகிறாய்? சிம்மாசனம் ஏறியிருப்போரின் சினத்தை விடப் பெரியதோ உன் சினம்! அதையே அனுபவித்தவன் நான். உற்றார், உறவினர், மனைவி, மக்கள், தாய், தந்தை, நண்பர் யாரும் என்னுடன் இருக்கக்கூடாது என்று தடை போட்டவர்கள், உன்னை மாத்திரம் உள்ளே அனுப்பி வைத்த ரகசியந்தான் என்ன!
வெளியிலே அவர்களின் வெறிபிடித்த தர்பாரை நான் காணமுடியாது என்பதற்காக உன் உருவிலே அந்தத் தர்பாரை எனக்குக் காட்டுகிறார்களா என்ன!
ஆடிக்காற்றே! மரங்களை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறாய்? மந்திரவாதி பேயாட்டி வைப்பதுபோல ஏன் ஆட்டி வைக்கிறாய்? மந்திரிமார்கள் மக்களை ஆட்டிவைப்பது போல ஏன் ஆட்டி வைக்கிறாய்? ஏன் வாட்டி வதைக்கிறாய்? என்ன குற்றம் செய்தன அந்த மரங்கள்? செழித்தது தவறா? சீர் தந்தது தவறா? மறுமலர்ச்சி பெற்றது தவறா? மணந்தரும் பூக்களை, சிகைக் கொண்டைகளில் சூட்டி நின்று செளந்தர்ய மோகினிகளாய்க் காட்சி தந்தது தவறா? எது தவறு? ஏன் தண்டிக்கிறாய்?
ஆடிக்காற்றே! அந்தக் காரணத்தைச் சொல்! சொல்லமாட்டாய். உன்னைப் போன்ற அரசாங்கமும் எங்களுக்குக் காரணம் சொல்லவில்லை! ஆடிக்காற்றே! மண்ணை அள்ளிக் கண்ணில் போட்டால் பயந்து விடுவோமா? கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தைவிடக் கடுமையானதா உன் கைகள் வாரியிறைக்கும் மணல் துளிகள்! மதில் தாண்டி வந்து மந்தி போல் குதிக்கும் ஆடிக்காற்றே! சிறைச்சாலைக்கு வந்த பிறகுமா என்னை நீ சித்திரவதை செய்ய முயலவேண்டும்? என்ன, பதில் பேசாமல் பயங்கர மூச்சு விடுகிறாய்?
சர்வாதிகாரிகள் உன்னைப் போலத்தான் அகோர இரைச்சல் போட்டார்கள்; அராஜக வெறியாட்டம் நடத்தினார்கள். அவர்களும் நீயும் ஒரே ரகம். அந்த உண்மையை ஊளைத் தொனியில் பாடிக்காட்டும்
ஆடிக்காற்றே! பொறு! பொறு! ஆடி ஓய்ந்ததும் அடங்கிவிடுவாய். அடங்கிய பிறகு, உன்னைப் போல ஆட்டம் போட்ட அரசாங்க நண்பனை - அந்தரங்கத் தோழனை சந்திக்கப் போவாய்! அய்யோ பாவம், அப்போது அவன் உனக்கு முன்னே பொந்துக்குள் போயிருப்பான்!
போ-போ, மண்ணை வாரி இறைத்துப் போ!
●
வா, இரவே வா! எழிலாடும் கருப்புப் பெண்ணே வா! நீ அழகி - பேரழகி. கருப்புப் பெண்ணை நான் விரும்புகிறேன். நேசிக்கிறேன். ஆனால் எனக்குக் கல்யாணமாகிவிட்டதே! அதனால் என்ன; களங்கமற்ற உள்ளத்தோடு உன் அழகை வர்ணிப்பது குற்றமா என்ன? மரகத மங்கையே! காரிருள் காதலியே என்று உன்னைக் கூப்பிட்டால் கடிந்து கொள்; நியாயம்! தோழியே என்று அழைப்பதில் தோஷமில்லையென்று நானே முடிவுகட்டி விட்டேன்.
இரவுப் பெண்ணே! இப்படி வா! உட்கார்! உட்கார்ந்தாயா, சரி. மகிழ்ச்சி! கருப்புப் பெண்ணை நான் விரும்புகிறேன். காரணம் தெரியுமா? கருப்புப் பெண் சிரித்தால்தான் முத்துப் பற்களுக்கு முதலிடம் கிடைக்கிறது. பெண்ணின் அழகே கண்ணில்தானே? கருப்பு மேனியில் வெள்ளை விழி. ஆகா, என்ன கவர்ச்சி! என்ன கவர்ச்சி!
