மீசை முளைத்த வயதில்
கட்டுரைகள் 19 · 19 / 26
இதைப் பாடிவிட்டு அந்தக் குயிலாள் குதித்தோடினாள். உலகத்தைப் பற்றியே கவலைப்படாத ஒரு அலட்சியம்... இளமையின் மிடுக்கோடு சேர்ந்துகொண்டது. பிறகு அவள் மான்குட்டிதானே! என்னென்னவோ ஆடிப் பாடினாள். ஆடிக்கொண்டே ஓடினாள். “கலைவாணன்” என்று அகில உலகப் பட்டமளிப்பு விழாவிலே பெயர் தட்டப்பட்ட ஒரு சிற்பி செய்த சிலை உயிரெடுத்து உலவுவது போல் படர்ந்து கிடந்த கொடிகளைத் தடவிப் பார்த்தாள்.
கலாபமொன்று களிநடம் புரிந்து - அதனோடு போட்டிப் போட்டுச் சாயல் காட்டினாள். அந்தச் சோலையின் செடிகளுக்கும், கொடிகளுக்கும் பேச வாயிருந்தால், ‘அட பைத்தியமே’ என்ற பரிகாச வார்த்தையால் அவள் காது செவிடப்பட்டு விடும்.
ஆட்ட பாட்டம் முடிந்து... அவள் வரவுக்காகக் காத்திருந்த ஊஞ்சலிற் பாய்ந்தாள்; ஊஞ்சல் ஆடிற்று!
மாமரத்தின் கிளை வளைந்து கொடுத்தது. அவ்வளவு வேகம்!
“படை வீரர் எதிரிகள்மேல் பாய்வதுபோல் ஆடு! உடைவாளை வீசியே சாவதுபோல் ஆடு! ஊஞ்சலே நீ ஆடு!”
ஊஞ்சலுக்கும் உடனே ஓர் கவிதை கட்டினாள் அவள்! ஆம்; கட்டழகி! பாடிக்கொண்டிருந்த அவள் பவழவாய் திடீரென முடிக்கொண்டது. குளிர்ச்சியைக் கொட்டிக் கொண்டிருந்த அவள் கண்கள் கனற்கட்டிகளாயின. இதழ்கள் அவளை அறியாமலே அவள் பற்களால் கடிபட்டன. கன்னங்களில் ஈட்டி பாய்ந்து இரத்தம் வழிவது போன்ற சிவப்பு முகத்தைத் திருப்பிக்கொண்டு மீண்டும் ஆடினாள். அவள் கண்கள் ஏதோ ஒரு குறிப்பான இடத்திற்கே கணைகளைப்போல் பாய்ந்தன; பலமான இரும்புக் கேடயத்தில் மோதிக் கூர்முனைக்கும் அம்புகள் போலவே மீண்டும் அவள் விழிகள் சாய்ந்தன.
ஆனால் அவளால் அந்த இடத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. “கேவலம்... ஒரு... சிற்பி... எவ்வளவு ஆணவம் ?” - அவள் வாய் முணுமுணுத்தது. சோலையின் ஓரத்தில்தான் வீடு. அந்த வீடு - பழைய வீடு! சில இடங்களில் சுவர்கள் சரிந்திருந்தன. வீட்டின் மேல் தளத்திலிருந்த அந்தப் பலகணிதான் அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்திற்று. கருப்புடை போர்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் கண்கள் பலகணியின் வழியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தன.
“தத்தளிக்கிற மானைக் கண்டு... சில சமயங்களில் வேடன் கூடக் குறி மாற்றிவிடுவான். செயலற்ற எதிரியைக் கண்டு சில சமயங்களில்... படை வீரன் கூட ஒதுங்கி விடுவான். இந்தப் பாவி... வைத்த கண் எடுக்காமல் என்னைத் துரத்துகிறானே! இயற்கை இன்பம் அனுபவிக்க ஒரே ஒரு இடம் எனக்கிருந்தது. இதற்கும் கேடா ? உம்... இவனை விடக்கூடாது... நான் யார் ? இவன் யார் ? கேவலம் - ஒரு சிற்பி! எவ்வளவு ஆணவம் ?... இதோ அகம்பாவத்திற்கு அழிவு தேடித் தருகிறேன்!”
அவள் கொதித்தாள். ஒரு சாதாரண சிற்பியின் பார்வையால் - பலாத்காரக் காமநோக்கால் - தன் கற்பு அழிந்துவிடுமென்று கருதினாள். மீண்டும் அந்தப் பலகணியைப் பார்த்தாள். அந்தக் கண்கள் அவளை விட்டுப் பிரியவில்லை. “பொன்னழகன்... பெயரைப்பார். சிற்பி! அந்தக் காமக் கண்கள் குருடாகட்டும். சிற்பி, கபோதியாகட்டும்...”
அவள் தொடர்ந்து பேசவில்லை! திடீரென ஓடினாள். ஒரு நல்ல கூர்மையான கருங்கல்! அதை வெகு வேகமாக வீசினாள்! அவள் கல்லை வீசியதுதான் தாமதம்... “ஆ... என் கலை ஒழிந்தது!” என்று வீரிட்டபடி ஒரு மனிதன் ஓடினான். பலகணியில் படார் என்ற ஒலியோடு கல் மோதிற்று.
நரம்புகள் எல்லாம் நடுங்க... அவள் அப்படியே நின்று விட்டாள். ஓடிக் கொண்டிருந்த மனிதன் நின்று, “இளவரசி!... என்ன காரியம் செய்தீர்கள் ?” என்று பேச்சை ஆரம்பித்தான். அவன் வார்த்தைகளை ஆத்திரம் தடுத்து அடைத்துக்
கொண்டது. மீண்டும் அவன் ஓடினான். அவளும் அவன் பின்னால் ஓடினாள்.
ஓடிக்கொண்டேயிருந்த மனிதன் வீட்டுக்குள் நுழைந்தான். அவளும் வீட்டை ஒரு முறை எறிந்துதுப் பார்த்தாள்.
‘சிற்பியின் வீடு’ - அவள் வேகத்திற்கு இந்த முணுமுணுப்பு முட்டுக்கட்டை போட்டாலும்... உடனே முறிந்துபோக வேண்டிய அளவுக்கு அவள் நெஞ்சில் ஓர் ஆவல் மண்டுகொண்டேயிருந்தது. வீட்டுக்குள் ஓடினாள். மேல் தளத்தில் தேம்பும் ஒலி! அந்த சோக ஒலிக்கு... நடைபோட்டு நகர்ந்து கொண்டிருந்தாள் அவள். “சேரன் செங்குட்டுவன்...! நான் படைத்த கலை...”
விக்கி விக்கிக் கிளம்பும் அழுகையோடு இந்த வார்த்தைகள் பின்னிப் பின்னி அறுந்து போயின.
அவள் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் நரம்புகள் மாத்திரம், தட்டிவிட்ட வீணைத் தந்திகள் போல் அதிர்ந்தன. சேரன் செங்குட்டுவன் சிலை நொறுங்கிக் கிடந்தது. சிற்பி பொன்னழகன் குப்புறக் கிடந்தான்.
“அய்யோ... என் இருதயத்தைப் பிளந்து எறிந்து விட்டாளே இளவரசி! சந்திரனைக் கூறு போட்டது போல் சேரனைச் சிதைத்து விட்டாளே! செங்குட்டுவா... உன் கண்ணில் ஒளியேற்ற... எவ்வளவு கஷ்டப்பட்டேன். அந்தக் கண்கள் கதிரவனை உருட்டிவிட்டது போல் உருண்டு
கிடக்கின்றனவே! உனக்கு அரும்பு மீசை அமைக்க ஒரு நாள் முழுவதும் செலவிட்டேனே! அவை ஆச்சரியக் குறிகளைத் துண்டாடியது போல் தூளாகிக் கிடக்கின்றனவே! உன் அதரங்களில் துடிப்பை நிறுத்தி வைத்து... தொகை தொகையாக பகைவர்கள் வந்தாலும் துச்சமெனக் கருதும் எண்ணத்தையும் அமைத்து வைத்து... அதனால் பெருமையடைந்தேனே... அந்தப் பெருமை இதோ அழிந்து கிடக்கிறதே!”
பொன்னழகன் புலம்பினான். அவன் படைத்த நினைவுச் சின்னத்தின் சாவு கண்டு ஒப்பாரி வைத்தான்.
அவள் கண்கள் உடைப்பெடுத்த எரிகளாயின. பூகம்ப அதிர்ச்சியையும் தோற்கடிக்கும் ஒரு தேம்பல் அவளை உலுக்கிற்று. மரத்துப்போன சிற்பியின் மனத்திலும் உணர்ச்சியுண்டாக்கி அதனைத் துள்ளியெழச் செய்து அந்தச் சோக விக்கல். பொன்னழகன் திரும்பிப் பார்த்தான். அவள் நின்று கொண்டிருந்தாள்; செதுக்காத சிலைபோல்! பொன்னழகனின் கண்களில் புனல் திரண்டுவிட்டது. கனல் கிளம்பிற்று.
“இளவரசி!... பாண்டிய நாட்டில் சேரர் ஆதிக்கத்திற்கு இடமில்லை. இதுதானே உங்கள் சட்டம் ? சேரநாட்டு வீரவேந்தன் செங்குட்டுவனின் சிலையைச் செய்யக் கூடவா சிற்பிக்கு உரிமையில்லை ? வேண்டு மானால் இந்தச் சிலையைச் செய்த குற்றத்திற்காக என்னைச் சிரச்சேதம் செய்திருக்கலாம். சிலையைச்
சிதைக்காமல் சேர நாடு மண்ணிலாவது நட்டுவைத்தால்... ‘என் கலை வாழ்கிறது’ என்று பூரிப்போடு சாவைத் தழுவியிருப்பேன். தங்கள் பெண்ணுள்ளத்தில் கூடவா இந்தக் கருணை தலை நீட்டவில்லை.”
இளவரசியின் கண்ணீரைத்தான் அவன் பதிலாகப் பெற முடிந்தது. அவனும் அமைதி பெற்றான். “சிலையை உடைக்க வேண்டுமென்ற எண்ண மிருந்தால் அவள் சீற்றமல்லவா அடைந்திருப்பாள்! அதற்குப் பதிலாக அழுகிறாளே!”
சிற்பியின் நெஞ்சில் இந்தச் சந்தேகம் சாந்தத்தைக் குடியேற்றியது.
கொதிக்கும் எண்ணெயில், கடுகைப் போட்டால் வெடித்துச் சிதறி விடுகிறது. சிற்பியின் கொதிப்பு அடங்கிய பிறகு இளவரசி பேச ஆரம்பித்தாள்.
“சிலையை உடைக்கும் குறுகிய மனப்பான்மையும், கோணல் புத்தியும் எனக்கில்லை. இந்த ஒரு சிலையை உடைப்பதால் கோடிக்கணக்கான பாண்டிய மன்னர்களின் சிலைகள் சேர நாட்டில் உடைப்படும் என்பதை நானறிகிறேன். அது மட்டுமல்ல; பாண்டிய மரபின் புகழே... சிலை உடைந்தால் ஒரு சின்ன புத்திக்காரி - என்ற விமர்சனத்தால் வீழ்ந்து விடும் என்பதும் எனக்குத் தெரியும். அதுமட்டுமல்ல; சேரனும் நமது இனத்தவன் என்ற உண்மையும் தெரியும் கலைஞரே...
நான் இந்தச் சிலையை உடைத்த காரணத்தை உலகம் அறிந்தால்... தங்களைக் ‘கலைவாணர்களின் மன்னர்
மன்னன்’ என்று வாயார வாழ்த்தும்!”
