உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 12 · 12 / 26

“யாரளித்தார் எனக் கேட்பீர்; ஒரு தமிழன் - உயர் தமிழன் தந்தார்!”

“யார் அந்தத் தமிழன்?”

“எனக்கு அண்ணன் போல!”

“உண்மையா ?”

“ஆமாம்.... லெஜியாவுக்கு அவர் அண்ணன்....”

“லெஜியா - நீயேதான்!”

“அத்தான்... நானேதான் லெஜியா!”

“கிள்ளை! முந்தீர் வழக்கம் ‘மகடூஉவோடில்லை’ என்பதை மறந்தனையோ ?”

“மறக்கவில்லை... விதிவிலக்கு எனக்கு மட்டும்!”

சிரித்தான் அவன்... அவள் கழுத்தில் முத்தாரம் அணிவித்தான். அவள் சிரிப்பு முத்தாரம் தந்தாள். பின்னர் இரவெல்லாம் முத்தாரம் தொடுத்தார் இருவருமே!

●

கயற்கண்ணி - நப்பின்னை! சங்கத் தமிழ் முழங்குகின்ற தமிழக்கத்துச் சோலையிலே இரு மயில்கள்! இசைக் குயில்கள்! முத்தவள் முத்தெடுத்துக் கோத்தது போல சிரிப்புக்காரி - முழு நிலவு காட்டுகின்ற முகத்துக்காரி! மொண்டு தரும் சுவையனைத்தும் உண்டு களிப்பதற்கு உலகினிலே யாருக்கு வாய்ப்போ என்று ஊர் பேசும், உவகை சிந்தும் பவழ இதழ் கண்டு!

கற்கண்டு இன்னொருத்தி - வயதினிலே இளைய தோழி! தங்கம் மேனி... குணத்தினிலே கொஞ்சும் கூனி!

ஓடையிலே - குளிர் தென்றல் மிதக்கின்ற ஓடையிலே - அருவியோரத்து அழகுக் காவின வாடையிலே - அவ்விருவர் ஆடிப்பாடி சோடிப் புள்ளெனவே பறந்திடுவார்! காண்போர், தம்மை மறந்திடுவார்!

கிரேக்கத்து எழிலாளும் யவனத்துப் பெருமகளும் - தமிழகத்துக் கரையோரம் இவர்களைக் கண்டதனால் மறுமூச்சு வாங்குவதற்கும் மறந்து போனார் - தலை குனிந்தார் - நிலை குலைந்தார்!

தென்னகத்துச் சந்தனத்தை வாங்குதற்கும், மலைப்பாம்பு-மயில்-மிளகு ஏற்றிச் செல்வதற்கும் - யானை தந்தத்தை நாவாயில் அடுக்கிப் போவதற்கும் வெளிநாட்டு வாணிபக் கோமான்கள் வரும்போது, கயற்கண்ணி - நப்பின்னை இருவரையும் கண்டுவிட்டால், கிரேக்கத்தை, யவனத்தைப் பண்ட மாற்றுச் செய்து கொள்வோம்; இந்தக் கிள்ளைகளைத் தந்திடுவீர் எனக் கேட்பார் என்று கூறி, கிழட்டுப் பெண்டிரெல்லாம் அவர்தம் அழகுக் கீர்த்திதனை வியந்துரைப்பார்!

வைரம் பதித்திட்ட பவழ வாய்ச் செம்புட்கள் தங்குவதற்கு இதயக் கூண்டுதனைப் பெற்றிருக்கும் ஆடவர்தான் யாரோ - எந்த ஊரோ - என்ன பேரோ - எனப் பேசி வினாக்குறி முகங்காட்டிக் கலைவார் அவ்வூரார்!

“கயற்கண்ணி, நப்பின்னை தோழிதானே - நப்பின்னை நமதருந் தங்கை தானே - இவள் மூலம் முயன்று பார்த்தால் அந்தத் தித்திக்கும் செந்தேனை யார் கொள்வார் நம்மையன்றி! எனவெண்ணி உழைக்கலானான், மணிவேலன்! மாணிக்கச் சிற்பத்தின் அண்ணன், மான், புலி, வேழம் கொல்வதையே தொழிலாய்க் கொண்ட பெருவீரன்!

நல்ல தருணம் வாய்க்கின்றபோதெல்லாம் கயற்கண்ணி காதினிலே அண்ணனது அழகாற்றல் வலிவையெல்லாம் அளந்தளந்து சலித்துவிட்டாள் நப்பின்னை!

துடிக்கின்ற அண்ணனிடம் ஓர் நாள். “தொட்டவுடன் துவளுகின்ற தோகையல்ல கயற்கண்ணி! முயற்கொம்பே அவள் இடத்தில் காதல் எதிர்பார்க்கும் வேலை என்பேன்! எதற்கும் புலி கொன்று நகம் கொண்டு வருவாய்! புலி நகத் தாலி கட்டும் போர்க்குடி மகனுக்கு ஒப்புவாய் என்று அவள் மனத்தை மாற்றுகின்றேன். அதுவும் முழு உறுதி அல்ல அண்ணா!”

என மொழிந்து காட்டுக்கு அனுப்பி வைத்தாள்!

ஓர் நிலவுக் காலந்தன்னில் விழி வெள்ளி தோன்றும் மட்டும் தோழிதனைக் காணோமென்று தேடி வந்தாள் நப்பின்னை! கடற்கரையின் வெண் மணலில் தனி நடந்து வருகின்ற கயற்கண்ணி விழியெல்லாம் வெண் சிவப்பாய் இருந்தல் கண்டாள்! விளக்கமேதும் தேவையில்லை; புரிந்து கொண்டாள் விவரமெல்லாம்!

“என் அண்ணன் உனக்காகப் புலிநகம் கொண்டு வரப் போனான் - இன்னும் வரவில்லை”யென்று சொன்னாள், நப்பின்னை!

“வரவேண்டாம்; வந்தாலும் எனக்கு அதைத் தர வேண்டாம் - வாழ்க்கைக்குத் துணையொன்றை நாடி விட்டேன்.”

-மொழிந்தவாறு கழுத்தினிலே ... ஆடுகின்ற முத்தாரம் எடுத்து முத்தம் தந்தாள், கயற்கண்ணி!