மீசை முளைத்த வயதில்
கட்டுரைகள் 11 · 11 / 26
“ரோமானியரைப் போல், தமிழர் அழகிற்கு அடிமையாவதில்லை; அழகை வியப்போம் - வளர்ப்போம் - மதிப்போம் - இவ்வளவும் எங்கள் நாகரிக இலக்கணத்திலிருந்து சிறிதும் நழுவாமல்!”
“என் ஆசை வெறும் கனவுதானா?”
“வருந்துகிறேன். என்னை முன்பே இன்னொருத்திக்கு ஒப்படைத்து விட்டேன் லெஜியா!”
“யார் அந்த கொடுத்து வைத்த கோகிலம்?”
“கிள்ளை அவள் பெயர்!”
“அவள் வாழ்க - இதோ என் அன்பின்
அடையாளமாக அவளுக்கு இந்த முத்துமாலையை அணிவிப்பீர்களா?”
“ஆகட்டும்!”
“அவளை நான் மதிக்கிறேன். அவள் பெரும் பேறு பெற்றவள். கற்புடைய கட்டழகனைப் பெற்ற அந்த நல்லாள் வாழ்ந்திடுக!... வளவர் கோமானே!... தங்கள் அன்பு நினைவாக எனக்கு ஏதாவது...”
“இதோ... இதயத் தாய்மையை வெளிப்படுத்தும் பரிசு!... இந்த முத்துக் கணையாழியை அணிந்துகொள்... இது தங்கைக்கு அண்ணன் தரும் அணிகலன்...”
○
இருபத்து திங்கள் கழிந்தன! ஒரு திங்கள்; சோலையிலே வந்ததுவோ எனத் தக்க காட்சி! கிள்ளை நிற்கின்றாள். இன்பக் கொல்லையிலே அத்தானின் அன்புத் தொல்லையிலே அகப்பட்டுக் களிக்க! முத்தம் பெறுவதற்கு முன்பாகக் கரம் ஏனோ கன்னத்தைத் தடவுகிறது! சத்தம் வரும் திக்கெல்லாம் கண் நோக்குத் தாவுகிறது! எனை மீட்ட வரும் யாழரசன் எங்கேயென்று இதய வீணை தவிக்கிறது! தாபம் தகிக்கிறது! கருகிப் போகும் முன்னாலே பயிர்க்கு மழை போலவே - உருகிச் சாகும் உளியடாச் சிலை முன்பு ஒளித் தமிழன் வந்துவிட்டான்.
“அத்தான்!” என்றாள். இதழ்ப் போர்; முழவின்றி, முன் அறிவிப்பின்றி, முடிவுமின்றித்
தொடங்கிற்று! இடையிடையே சொல் முத்து!
“வாணிபம் எவ்வாறெ”ன்றாள். “மிக வளம்” என்றான். “மின் வெட்டுக்காரிகள் யாராவது”என இழுத்தாள். “யாருமில்லை”யென்று கூறி, ஆரம் ஒன்று கொண்டு வந்தேன்; அணிந்துகொள்” என எடுத்தான்.
“எது இது?”
“ரோம் நகர வேலைப்பாடு... தமிழ்நாட்டு முத்து!”
“யார் அளித்தார்?”
“ஒருத்தி தந்தாள் உனக்காக!”
“அவள்?”
“என் தங்கை போல!... ரோம் நாட்டுக்காரி!”
“உண்மைதானா?”
“உன்மீது ஆணையாக!... ஒளிர்பூங் கொம்பே; உன் கழுத்தை இங்கு தந்திடு!”
“அத்தான்... இந்த முத்துக் கணையாழி கண்டீரோ?” எனக் கேட்டாள் கிள்ளை; கண்டுவிட்டு வியப்படைந்தான் மணப்பிள்ளை.
