உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 13 · 13 / 26

“முத்து கொடுத்து முத்தம் பெற்றானோ; முட்டாள் நீ ஏமாந்துவிட்டாய்! தமிழ் வீரம் காட்டுகின்ற செயல் புரிந்து புலி நகத்தைப் புதுப் பரிசாய்த் தந்து மனம் புரியும் வழக்கத்தை மாற்றிவிட்டாய் - மறத்தியல்ல!” எனக் கடிந்தாள்!

புன்னகையைத் தவழவிட்டுக் கயற்கண்ணி, பொன்னுதிரும் வார்த்தைகளால் பதில் சொன்னாள்!

“அடிதோழி! அவசரப்பட்டாதே! ஒளிமுத்து என்கிற உயர் வீரன் - உத்தமன்! என் உள்ளங் கவர்ந்தான் - மறத்தி நான் - அதனால் மாவீரா ... புலி நகம் பரிசாக வேண்டும் மென்றேன்! புதுவகைப் பரிசு தருவேன் என்றான் - முத்தெடுத்து அளித்திட்டான் - என்னையும் சேர்த்தெடுத்து அணைத்திட்டான்!”

“கடையினிலே ஒரு முத்தை ஒளிமுத்து வாங்கித் தருவதற்கும் காட்டகத்தில் புலி வேட்டை ஆடுவதற்கும் வித்தியாசம் நிரம்ப இருக்குதடி தோழி!”

“கடையினிலே அல்ல; என் கண் எதிரே கடல் நடுவே குதித்தான் ... பின்னர் முத்துச் சிப்பிகளோடு உதித்தான்!”

“இதோ, நானுந்தான் நேற்றிரவு வாழ்வுக்குத் துணை கண்டேன்!... புலிவேட்டைப் புலியொருவன்... நம்பியெனும் நல்லோன் நகமொன்று பரிசளித்தான். நான் அவனுக்கானேன்!”

“பரிசுக்கும் பாராட்டும் வீரத்துக்கும் மட்டும் பாவையர்கள் பறிகொடுக்க வேண்டுமோ உள்ளம்!... பண்போடு - அழகோடு - பராக்கிரமத்தோடு - மணவாளன் வருவதிலே மரபுக்கு மாச வருமோ பெண்ணே! கடையினிலே முத்தெடுத்து வந்தார் என்கிறாய்; என் கணவன்! காட்டினிலே புலி கொன்று வந்தான் உன் கணவன் என்று யார் கண்டார் ?”

“நம்பிக்கையில்லையென்னாதே! நம்பி அவர் பெயர்!”

“இந்த மலருக்குத் தும்பி! அதனால் புகழ்ச்சியுரை!”

“வார்த்தை நீள வேண்டாம் - வாழ்த்துகின்றேன் - வருகின்றேன் - என் வீரர் காத்திருப்பார்!”

நப்பின்னை நன்முகம் கோணி; போய் விட்டாள் அதை விட்டு!

“பித்துப் பெண்! இவள் அண்ணன் இரு புலியை ஒன்றாய்க் கொல்வான் - ஆயின் என் ? ... அவன் பண்பு பரத்தை வீட்டில் கேட்டால் தெரியும்!....” முணு முணுத்துச் சென்றாள் கயற்கண்ணி!

அண்ணனுக்குக் கயற்கண்ணி வாய்க்கவில்லை யென்கிற சீற்றமுடன் வீடு வந்த நப்பின்னை, மணிவேலன் மனமுடைந்து இருப்பதையும் கண்டு விட்டாள். மன்னிப்புக் கேட்டு நின்றாள்.

“இனியென்ன போகட்டும்; இலவு காத்த கிளியானேன்” எனச் சொல்லி எழுந்து சென்றான் மணிவேலன்!

“என்ன அண்ணா - எனக்கோர் துணைவன் தேடி விட்டேன்! ... இதோ பார் அவன் கொன்ற புலி நகம்!” எனத் தந்தாள் ... ஆர்வமுடன்!....

“யார் அவன்?” என்றான் ஆசையுடன்!.... “நம்பி!” என்றாள்.

“அவனா ?... அவன் கொன்றானா புலியை ?... நான் கயற்கண்ணிக்காகக் கொன்ற புலியின் நகத்தையன்றோ நம்பிக்குக் கொடுத்தேன்; அவள் மனச்சேதி கேட்ட பிறகு.”

எனச் சொல்லிச் சிரித்தான் மணிவேலன்!

வீரனை மணந்ததாய் எண்ணியிருந்த அத்தோழி, வீழ்ந்துவிட்டாள் பூமிதனில் மூர்ச்சித்து!....

ஆரியனாம் அந்த நம்பி என்ற சேதி அதன்பிறகு கேள்விப்பட்டாள்; ஆவிதனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தாள்! மறத்தியானாள்!

●

நகை நட்டு எதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள். புகையொத்த கொடிபோல நெளிந்தாடும் உருவத்தாள். இடையோ ஒரு பிடிக்குங் காணாத இளம்பிடி! இதழ்களிலோ தேன் ஒரு படி!.... இல்லை இவளுக்குக் குறையெனும் புகழ்பெற்ற முல்லை. பேசிலோ கிள்ளை!.... அவளை விடுமோ காதல் தொல்லை!

அழகும் உண்ணப் பிறந்தவன் ஒருவன் ... அவன் பேர் மருதன். குமுதம் சிரித்திடக் கோல நிலவென வந்திடும் குமரன். “வேலெடுத்தாள் உந்தன் விழி நினைவு வாட்டுதடி; வாளெடுத்தாள் முத்துப் பற்கள் ஒளி தலைகாட்டுதடி; வேழம் ஏறிவிட்டால் மத்தகந்தான் மெத்தத் தொல்லை அளிக்குதடி!”

எனக் கொஞ்சிப் பஞ்சணையில் அஞ்சுகத்தைப் புலன் மாற்றிப் போடுகின்ற பொல்லாக் காளை! போர் முகத்துப் பெருவீரன்! தானைத் தலைவன்!