ஆறுமாதக் கடுங்காவல்
கட்டுரைகள் 2 · 2 / 3
இரண்டாம் படையின் தலைவர் ராமசுப்பையா - அவர் தலைமையிலே படை போகிறது!
உழைப்பு - ஒரு உருவம் பெற்று அது ஓடி ஆடி, வேலை செய்துகொண்டிருக்கும்; அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா! - பார்க்கவில்லையானால் ராமசுப்பையாவைப் பாருங்கள் - அந்த உழைப்பு பெற்ற உருவந்தான் அவர். தொண்டருக்குத் தொண்டர் என்று யார் யாரோ எவ்வப்போதோ வாணிக்கக் கேட்டிருக்கிறோம். யார் யாரையோ பற்றி! அது உண்மையோ பொய்யோ தெரியாது - இதோ உண்மையின் ஒளி காரைக்குடி ராமசுப்பையாவை நம்முன் காட்டுகிறது.
அவர் கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும் குளிர்தரு - தருநிழல் - நிழல் தந்த சுகம்.
திருச்சி சிறைச்சாலையிலே நாங்கள் நூறுக்கு மேற்பட்டோர் அமைத்த ராஜ்ஜியத்திற்கு அவர்தான் உணவு மந்திரி.
தாயுள்ளம் படைத்தவர் - பேயுள்ளமும் இரங்கும்படி பேசுபவர் - இன்று நேற்றல்ல - என்னற்கோ - என் கண் மட்டுமல்ல; இயக்கத்தின் முன்னணி வீரர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தலைமையிலே சென்ற படை - களத்திலே எங்களைப் போலவே அறப்போர் புரிந்து அதிகார வர்க்கத்தினரால் பிடிக்கப்பட்டது.
அவர்கள் எங்களுடன் வந்து கலந்தனர். அந்த இருபத்தைந்து பேரிலே - முதலில் எங்களிடமிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டரால் பிரிக்கப்பட்ட பதினைந்து தோழர்களும் இருந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் எங்கள் ஐவரை (கருணாநிதி - சத்தி - கஸ்தூரி - குமாரவேல்-குழந்தைவேல்) தனியாகப் பிரிக்கப்பட்டு, உட்காரவைக்கப்பட்டோம். மற்ற 31 பேர்களும் ராமசுப்பையாவை உட்பட தனியாகப் பிரிக்கப்பட்டனர்.
அவர்கள் வருமாறு; ராமசுப்பையா, ஜெயங்கொண்டம் வேணுகோபால், மலைக்கோட்டை செயலாளர் ரத்தினம், அரியலூர் செயலாளர் எத்திராஜ், தமிழ் முத்து, முணுசாமி, மருதமுத்து, பாண்டியன், கலைமணி, முருகேசன், டி.எ. கமலன், பரமானந்தம், முருகேசன், ராமு, தங்கவேல், சின்னையா, சத்தி, அனீப், இராவணன், நல்லமணியன், காளிதாஸ், சக்கரபாணி, சோமசுந்தரம், மருதநாயகம், வளர்மதி, முகமதலி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு, ராமன், சின்ன துரை, நடராசன் ஆகியோர்.
போலீஸ் கூடத்திலே அனைவரும் அமர்ந்திருந்தோம். அந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் எங்களைப் பாதுகாத்தபடி எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
முப்பத்தி ஒன்று - என அவர்கள் எண்ணி முடிப்பார் - பிறகு எங்களை எண்ணுவார்! - மீண்டும் சந்தேகம் வரும் - மீண்டும் - எண்ணுவார் - ஒன்-டூ-த்ரீ - சொல்லுங்கள் என்பார் - சொல்லுவோம் - முப்பத்திஆறு முடியும் - “யாராவது இரண்டு முறை சொல்லியிருந்தால் என்ன செய்வது!”
என்பார்! - “சரி எல்லோரும் கைதூக்குங்கள்” என்று கூறி கைகளை எண்ணுவார்.
“யாராவது இரண்டு கையும் தூக்கியிருந்தால் என்ன ஆவது?” என்பார் - மீண்டும் எண்ண ஆரம்பிப்பார் - அவரும் இப்படி எண்ணிக்கொண்டேயிருந்தார் - நாங்களும் எண்ணிக்கொண்டேயிருந்தோம்; ஆட்கள் அல்ல! ஆதிக்கக்காரர் அரசோச்சும் நாட்கள்!
மூன்றாவது படை, நடுப்பகலில் - தோழர் கண்ணதாசன் தலைமையில் புறப்பட்டுச் செல்லும் ஒலி கேட்டது.
1949ம் ஆண்டு என்று நினைக்கிறேன்; சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு முதன் முதலாக சென்றிருக்கிறேன். இப்போது தமிழரசுக் கழக வாதியாக இருக்கிற தோழர் கா. மு. ஷெரீப் ஒரு நண்பரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
அந்த நண்பர் நெற்றியிலே பட்டையாக திருநீறு பூசிக் கொண்டு என்னை அறிமுகப்படுத்தியதும் ‘நமஸ்காரம்’ என்று கைகூப்பினார். நான் கொஞ்சம் அழுத்தமாக ‘வணக்கம்’ என்று சொன்னேன். அந்த நண்பர் செட்டிநாட்டைச் சேர்ந்தவரென்றும் கவித்துவமும், சமய உணர்ச்சியிலே துடி துடிப்பும் வாய்ந்தவரென்று ஷெரீப் கூறினார். சேலத்தில் சில நாட்கள் நான் தங்கவேண்டியிருந்தமையால் அவரோடு பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நல்ல இளமையும், தமிழறிவும் சமயமெனும் சூளையிலே நடப்படுகிறதே என எண்ணினேன்.
அவரோடு அதிகமாகப் பழகிய பிறகு என்னைப் பார்க்காமலே அவர் என்னிடத்திலே கொண்டிருந்த அன்பும், அவரைப் பார்த்த பிறகு அவரிடத்திலே எனக்கு ஏற்பட்ட அன்பும் - பாச உணர்ச்சியுள்ள நட்புப்பயிருக்கு விதையாகிவிட்டன. பிரிந்தோம் - பிறகு கூடினோம் - மீண்டும் பிரிந்தோம் - கூடினோம் - தகராறுகள் ஏற்பட்டு அல்ல! அவரவர்கட்கு இருந்த அலுவல்களால்!
பொள்ளாச்சியிலே பொதுக்கூட்டம் ஒன்றுக்காக போய்க்கொண்டிருக்கிறேன். வழியிலே கோவையிலே அந்த நண்பரைச் சந்தித்தேன். எப்போதும் சந்தித்தாலும் அவருக்கும் எனக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். அறிஞர் அண்ணாவின் ஆற்றலைப் பாராட்டுவார். அவர்போல் ஒரு
அறிஞரைக் காண முடியாதென புகழ்வார். ஆனால் கழகத்தின் கொள்கைகள் தான் கசக்கின்றன என்பார். கோவை சந்திப்பில் எங்கள் வாதம் ஒருவாறு முடிவுற்று - அவரும் என்னுடன் பொள்ளாச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டார். வழிநெடுக பஸ்ஸில் வாதம் நடத்தியபடி சென்றோம். கோவையிலே ஆரம்ப காலம் முதல் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான தோழர் ராஜமாணிக்கமும் வாதங்களில் கலந்துகொண்டார்.
பொள்ளாச்சி சென்றோம். பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பொள்ளாச்சி வாசியும் - கஷ்ட நஷ்டங்களுக்கிடையே கட்சிப் பணியாற்றுபவருமான கழகக் காளை ராமானுசம், கடமையுணர்ச்சிமிக்க நண்பர் ஆனைமலை மயில்சாமி, இருவரும் பேசினார்கள். நான் பேசுவதற்கு முன்பாக செட்டிநாட்டு நண்பர், தானும் பேசுகிறேன் என்றார். நான் சரியென்றேன். ஆனால் எனக்குப் பயந்தான். என்ன பேசிவிடுவாரோ; அதற்கு வேறு பதில் சொல்லவேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகிறதோ என்னமோ; அப்படிப் பதில் சொல்லி - வீணை குழப்பம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது; என் கோயமுத்தூரில் இருந்தவரை இங்கு அழைத்து வந்தோம் - என்றெல்லாம் எனக்குள்ளாகவே பேசிக்கொண்டேன்.
அவர் பேச எழுந்தார். உடனே அவர் நெற்றியை கவனித்தேன்! “அட பரமசிவம்” அவர் நெற்றியிலே திருநீறைக் காணோம்! பேசத்துவங்கினார்.
“தலைவர் அவர்களே! முட்டாள் தனத்துக்கு முதலிடம் கொடுத்து - மடிந்துபோகும் ஏழைகளைப்பற்றிக் கவலைப்படாமல் இடிந்துபோன கோயில்களுக்கு கும்பாபிஷேகம்
செய்யும் செட்டிமார் நாட்டிலே பிறந்தவன் நான்.” என்று பேச்சை ஆரம்பித்தார். குறைந்த நேரம் பேசினார். நமது கொள்கைகளையே பேசினார். அனைவரும் பூரித்தோம். அவர் நமது இயக்கத்துக்கு வர பொள்ளாச்சிதான் நுழைவு வாயிலாக இருந்தது. பிறகு அவருக்கு காரைக்குடியிலே திருமணம். நானும் அன்புச் சகோதரர் அரங்கண்ணலும் அங்கு சென்றிருந்தோம். திருமண வீட்டுக்குச் செல்லும் வழியில் ராமசுப்பையாவைக் கண்டோம். தனக்கும் தெரியாமல் ஒரு தோழர் இயக்கத்துக்கு வந்திருப்பதும் - அவர் மணத்திற்கு நாங்கள் செல்லுவதும் - அவருக்கு மிக வியப்பாகவேயிருந்தது.
எல்லோரும் சென்றோம்.
குதிரையென்று சொல்லப்படும் ஒரு பிராணியில் மணமகன் அமர்த்தப்பட்டு - கால்கள் தரையைத் தொடமுடியாத நிலையில் - பொய்க்கால் குதிரை மகாராஜாபோல் வேஷம் போடப்பட்டு - எங்கள் நண்பர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்த அதியற்புதமான செட்டிநாட்டு திருமணங்களில் சிறப்புமிக்க வழக்கமான காட்சியைக் கண்டோம்.
சில இடங்களில் மாப்பிள்ளைக்கு சாமியார் வேஷம் போட்டு வாழ்வு நிலையாமையையும் - ‘கூசாமல் சந்நியாசங்கொள்’ என்ற உபதேசத்தையும் நிகழ்ச்சியாக்குவார்கள்.
செட்டிநாட்டிலோ; வாழ்வு ராஜபோகமானது - என்பதை வலியுறுத்துகிறார்கள் மாப்பிள்ளைமார்களுக்கு வேஷம் போட்டு!
மாலையில் திருமணப் பாராட்டுக் கூட்டம் - நாரண துரைக்கண்ணன் தலைமையில் நாங்கள் பேசினோம்.
செட்டிநாட்டு நண்பரும் நாங்களும் - பிறகு - மிகவும் நெருங்கிவிட்டோம். கழகக் காரியங்கள் - சொந்த அலுவல்கள் - எல்லாவற்றிலும் அவரும் துணைபுரிபவரானார்.
அவர் மிகவும் நல்லவர். திருநீறு பூசியிருந்தாரே - அப்போதுங்கூட! அதனால் தான் அவர் அவ்வளவு சீக்கிரம் நம் பாசறையை உணர முடிந்தது - உழைப்பார் - உணர்ச்சியோடு செயலாற்றுவார் - ஒரே குறை - எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு உண்டாகும் குறை - உணவு விஷயத்தில் அவருக்கு அவரே நிகர்! சிறைச்சாலைக்குப்போனால் என்னய்யா செய்வீர்; என்று கோபமாகக் கேட்டேன். “அதற்குத்தான் தயார்படுத்துகிறேன்” என்பார்!
“ஒட்டகம்போல தயார்படுத்த முடியாது தோழரே! ஒத்திகை பார்த்துக்கொள்ளவேண்டும் பட்டினி கிடந்து!” என்பேன்! ஆத்திரம் தாங்கமுடியாமல் இலையைத் தூக்கி விட்டெறிவார் - எச்சில் தொட்டியில் - எல்லாம் சுத்தமாக சாப்பிட்டான பிறகு!
உணவு விஷயத்தில் நல்ல பாடங்கற்பிக்க சமயம் பார்த்திருந்தேன். கிடைத்துவிட்டது சந்தர்ப்பம். ஆனால் அது நழுவிவிட்டது. (இருந்தாலும் மீண்டும் கிடைக்கும்)
கல்லக்குடி போராட்டத்தில் மூன்றும் படை வரிசைக்கு தளபதியாகச் சென்று - போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதலுக்கு ஆளான கண்ணதாசனைப் பற்றித்தான் இவ்வளவு தூரம் கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும். ஜூலை 14ல் லால்குடி வந்தார்! மேடையில் பேசினார். ‘குருவுக்கு வரும் துன்பம் சிஷ்யனை
யும் தாக்கட்டும்’ என்று உரத்த குரலில் மொழிந்தார். பாசமிக்க அந்த நண்பனின் படைவரிசைக்கு தளபதியாகினேன்!
திருநீறு நெற்றியிலே ஒரு காலம்! செந்நீரைக் கொட்டவும் தயாரென செருமுனைக்குக் கிளம்பியது ஒரு காலம்! பின்னது பகுத்தறிவுக்காலம்.
கவிஞர் கண்ணதாசன் தலைமையிலே படை போகிற ஒலி காதிலே விழுந்தது. போலீசாரின் பாதுகாப்பில் (காவலில்) தான் இருந்தோமென்றாலும் கூட பிற்பகல் உணவை தோழர் தருமுவும் மற்ற தோழர்களும் கொண்டு வந்துதான் எங்களுக்கு அளித்தார்கள். உணவருந்திக் கொண்டிருந்தோம். சப் இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டு எங்களைச் சரிபார்த்தபடி இருந்தார். பந்தியில் உட்கார்ந்திருந்தபோதும் எங்களை ஒருமுறை எண்ணிட அவர் தவறவில்லை. அரசாங்கக் கடமையை அவர் அவ்வளவு ஒழுங்காகவும் ஜாக்கிரதையாகவும் செய்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் ஓடிவந்து சப் இன்ஸ்பெக்டரிடம் ஏதோ மெலிந்த குரலில் சொன்னார்.
எங்களுக்குப் புரிந்துவிட்டது அடுத்த விநாடியே! களத்திலே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறுகிறது என்று! உணவு பரிமாறிக்கொண்டிருந்த தருமு முதலியோரை உடனே போகும்படி அனுப்பினேன். பிறகு சாப்பிட முடியுமா எங்களால்! ஆச்சாரியார் சர்க்காரின் துப்பாக்கி ரவைகளுக்கு திராவிடத் தோழர்களின் சதைகளை - ரத்தத்தை - எலும்பை - இருதயத்தை - மண்டையோடுகளை - தீனியாகத்தருகிறது “டால்மியாபுரம்” என்று கேள்விப்பட்ட பிறகு சாப்பாடென்ன - சாப்பாடு!
கேசவன்
அடுத்த மாதம் திருமணம். பெண்ணெல்லாம் பார்த்து வைத்துவிட்டாள் பெற்றவள். வருங்காலத்தை - எண்ணியபடி பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான் வாலிபன்.
“வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் வனிதாமணி எப்படிப்பட்டவளோ - நான் கனவு காணும் கட்டழகியாகவே வாய்த்து விடுவாளா? - அம்மா போய் பெண் பார்த்தால் மகனுக்குப் பிடிக்காத பெண்ணாகவா பார்ப்பார்கள்.
திருமணம் - ஆகா, எவ்வளவு இன்பமான சொல்! எத்துணை தித்திப்பு அந்த வார்த்தையிலே! வாழ்விலோர் திருநாள் வாழ்க்கைக்குத் துணை அமையும் நாள் தான்! திருமணத்தன்று என் சுந்தராங்கியின் சுண்டுவிரலேத்தான் தொடமுடியும் - பிறகு ........ நினைக்கவே இனிக்கிறதே!
முதல் இரவு வரும் - வாழ்வில் என்றைக்கும் திரும்பப் பெறமுடியாத இரவு - காராக்கிரகத்துக்குக் கிடைக்கிற இரவும் - கல்யாணமான ஜோடிக்கு முதல் இரவும் - ஆகா - அனுபவிக்காமலே அதைப்பற்றி எவ்வளவு கற்பனையூறுகிறது எனக்கு! “வருவார் வருவார் என்று பஞ்சணை தேடும்! வந்து வரைவார் - இன்ப இலக்கிய ஏடும்!”
என்ற புரட்சிக் கவிஞரின் பொன்னெழுத்துக்கள் நினைப்பேனு- “கலவி நடுப்பாதையிலே காதல் பேசி” என்று வர்ணித்த பாரதியைப் பாராட்டுவேனு”
அடுத்த மாதம் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றி இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு ரயில் வண்டியினுள் மேல் பலகையில் படுத்திருக்கிறான் கேசவன்.
அடுத்த நாள் திரும்பி வந்துவிடுகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போனவன். அம்மா வீட்டிலே காத்திருக்கிறாள்; வியாபாரத்துக்குப்போன மகனே இன்னும் காணோமே யென்று!
ஆளொருவன் ஓடிவருகிறான் தாயிடம்! - கேசவன் இறந்துவிட்டான் என்று சொல்லுகிறான். எந்தக் கேசவன்? அடுத்த மாதம் திருமணம் என்பதைப்பற்றி எண்ணியெண்ணி கோட்டைகள் பல கட்டிக்கொண்டு போனானே; அந்தக் கேசவன்.
தாய் அழுதாள் - துடித்தாள் - அய்யோ மகனே என அலறி விழுந்தாள். இதையெல்லாம் சொல்லவும் வேண்டுமா?
“என் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண்ணெல்லாம் பார்த்தேனய்யா - அதற்குள் இப்படி ‘போக்காளி’ போய்விட்டானய்யா!” என்று ஒரு தாய் - பெற்றதாய் - அடிவயிறு எரிய எரிய - இருதயம் குமுறக் குமுற - தலை சுழல சுழல - கண்ணீர் வழிய வழிய - வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாலென்னால் யாரால்தான் அதை சகிக்கமுடியும் - இருதயத்தை எடுத்து வைத்துவிட்டு ஆட்சி நடத்துகிற அக்கிரமக்காரர்களேத் தவிர!
எதிர்காலத்தை எண்ணியபடி படுத்திருந்தான். அவன் மண்டையிலே ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது; புகைவண்டியைப் பொத்துக்கொண்டு!
பஞ்சணையிலே வாலிபன் படுத்திருப்பான். தலையிலே விரலால் ஒரு ‘தட்டு’ விழும். திரும்பினால் காதலி நிற
பாள். இப்படி வாழ்வின் ருசியைப் பற்றி எண்ணிக்கொண்டு படுத்திருந்த இளைஞன் தலையிலே மென்மையான ஒரு ‘தட்டு’ விழவில்லை. துப்பாக்கிக் குண்டு விழுந்தது! மண்டையைப் பிளந்து - தலை சிதறிப்போய்விட்டது. “வரப்போகும் இல்லாள் மெல்லிய விரல்களால் வருடுவாள் இந்தத் தலையை” என்று நினைத்துக்கிடந்தானே; அந்தத் தலையை துப்பாக்கிக் குண்டு சுக்கு சுக்காக்கிவிட்டது.
அவனால் இனி நினைக்கமுடியாது! மூளை சக்கை சக்கையாகிவிட்டது! வாயை மாத்திரம் “ஆவ் ஆவ்” என்று பிளந்தானும் - ஆயிரம் முறை! என்ன சொல்வதற்காகப் பிளந்தானே?
எப்படி வேதனையிருந்ததோ! அம்மாவுக்குக் கடைசிச் சேதி சொன்னே - அல்லது - அட பாவிகளே! என்னையேன் என் தாயிடமிருந்து பிரித்தீர்கள் என்று கதறுவதற்காக வாயைப் பிளந்தானே தெரியவில்லை. சாவைத் தழுவிவிட்டான்; கோமளவல்லியைத் தழுவப் போவதை நினைத்து மகிழ்ந்தவன் - கொடியோர் வீசியெறிந்த சாவைத் தழுவிவிட்டான். கல்லக்குடிகளத்திலே - பிணக்கோலம் பூண்டான், மணக்கோலம் பூண வேண்டியவன்!
ஒரு பிணம் விழுந்தது! - ஆனால் பிணவரிசை முடியவில்லை! யானைத்தீப் பசி கொண்ட ஆட்சிக்கு ஒரு பிணம் போதுமா? போதாது!
★
நடராசன்
இந்த எதிர்ப்புப் போராட்டத்திலே இதோ ஆச்சாரியார் ஆட்சியிலே தாளமுத்துவுடன் நடராசன் என்ற ஒரு தோழனை பலி கொடுத்தோம் சிறைச்சாலையிலே! இதோ இன்னொரு நடராசன் - லால்குடி வீரன் - கழகத்து தீரன் - களப்பலியானான் கல்லக்குடி அறப்போர் முனையிலே!
போராட்டத்திலே படை வரிசையிலே கலந்துகொள்ள ஓடோடிவந்தானாம் - ஐநூறுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டு களத்திற்கு வரவேண்டிய நாளும் குறிக்கப்பட்டுவிட்டதால் - அந்தப் பட்டியல் முடிந்த பிறகே நடராசனுக்கு இடம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம். மனம் நொந்து திரும்பியிருக்கிறான் ஊருக்கு! போகும் வழியிலே புகைவண்டியிலே பிணமானான். கையிலே ‘நம் நாடு’ இதழ்! படித்தானோ படிக்க வில்லையோ - இதழிலே நம் நாடு என உச்சரித்தபடியே இறந்துபட்டான்!
அய்யோ - இல்லை இல்லை - சாகடிக்கப்பட்டான்!
தையல் தொழிலாளி - தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு விட்டது அவன் கழுத்து! பாய்ந்துவந்த குண்டு அந்தப் பருவ இளைஞனின் கழுத்துச் சதையை கொத்திக் கொண்டே போய்விட்டதாம்.
“யார் பெற்ற பிள்ளையோ” என்று ரயிலில் இருந்தவர்கள் கதறியிருப்பார்கள். அந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் - துப்பாக்கிக் குண்டுக்குத் தெரியாது! துரைத்தனம் புரிவோருக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு இது பொழுதுபோக்கு!
அம்மா! திராவிடத் தாயே! இதோ நீ பெற்றெடுத்த நடராசன்! பொன்னையும் - மணியையும் - வாரி வழங்கும்
அன்னை திராவிடமே! நீ - சாவின் கோரக் கரங்களிலே நடராசன் போன்ற தியாகச் செல்வர்களையும் வாரி வழங்குகிறாயே; நியாயந்தானா? உன் மடியை ரத்தத்தால் நனைத்திருக்கும் இந்தப் பிணத்தைப் பாரம்மா! தொண்டன் நடராசனைப் பாரம்மா - குண்டர் ஆட்சியின் கோர விளையாட்டைப் பாரம்மா - கோடிக் கணக்கிலே பிள்ளைகளைப் பெற்றாய் - அவர்களுக்கு அரைகுறை வயதிலே கொள்ளி வைக்க - என்னம்மா விட்டாய்! ஓடியாடி உழைத்த உத்தமன் - திராவிடத்தரணி செழிக்கப் பாணி பாடிய வாலிபன் - சாய்ந்து கிடக்கிறான் பார், தாயே!
அழு! அழு! நன்றாக அழு! நீ அழுதால்தான் - கண்ணீர் விட்டால்தான் - கயவர் ஆட்சியை ஒழித்துக்கட்ட படை தயாராகும் - அம்மா - உன் மடியிலே கிடக்கும் நடராசனைப் பார்! அவன் ஒளிதங்கிய விழி எங்கே? உணர்ச்சி தங்கிய மொழி எங்கே? அசையாதம்மா உன் மைந்தனின் கரம் - ஆடாதம்மா அவன் ஆணிப் பொன்மேனி - புது மொழில் பேசிய உன் புத்திரனுக்குப் புதைகுழி தயாராகிவிட்டது!
யாரால்? யாரால்? யாரால் தாயே யாரால்?
பிணவரிசை முடியவில்லை - கொடும்பசி கொண்ட குண்டோதர ஆட்சிக்கு இரண்டு பிணம் போதுமா? போதாது! போதாது!
★
கோரத் தாண்டவம்!
குடி! குடி! ரத்தம் குடி! வயிறு நிரம்பி வழிகிற வரையில் குடி! இரைப்பை புடைக்க எலும்புகளை மென்று தின்னு! விழுங்கு நரம்புகளை! வயதானால் என்ன - வாலிபமென்றால் என்ன - சரியான மாமிசத் தீனி - மனித மாமிசம் சாதாரணமானதா - அதுவும் போர்க்களத்திலே திடீரெனச் சாயும் பிணம் ருசி கெடாது! புசி! புசி! அது ஜீரணமாக ரத்தம் குடி! குடி!
இப்படி அடக்குமுறை வேங்கைக் குரலெடுத்து - வெறிபிடித்து ஆடி - அகலமான வாயைத் திறந்து - “குடி குடி குருதியைக் குடி!” என்றவண்ணம் கல்லக்குடியிலும், தூத்துக்குடியிலும் குதியாட்டம் போட்டது! இரண்டு குடி! இந்நாட்டுத் திராவிடர் குடி! இரண்டு குடியிலும் இரும்பு நெஞ்சு அடக்குமுறைக்கு சரியான-உதிரக்குடி!
டால்மியாபுரப் போரின் எதிரொலியாக - வடநாட்டு மூலவர் எம்மை இழித்துச் சுடுசொல் வீசியதைக் கண்டிப்பதற்காக - இதோ ரயில் நிறுத்தம் என்றது தமிழகம் - ஜூலை 15ல்!
தூத்துக்குடியிலும் ரயில் நிறுத்தப்பட்டது. வயதேறிய இருவர் - வாலிபர் இருவர் - அடக்குமுறை வேங்கையின் சொரசொரப்பான நாக்கிற்கு - கூர்மையான கோரப் பல்லுக்கு இரையாக்கப்பட்டார்கள். உச்சிமாகாளி என்ற இளைஞனின் உடலைக் கிழித்து குடல் மாலை போட்டுக்கொண்டு உதிரப்பசியெடுத்த அடக்குமுறை வேங்கை! கணபதி என்ற இளைஞன் - அவனை நா நா
வென்று மென்று தின்று நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு “நாலு பிணம் போதாது - இன்னும் தேவை” என்று சீறிப் பாய்ந்தது - சீனுவாசம் பிள்ளை யென்ற கிழவர்மீது! அவரை விழுங்கி வாயில் போட்டுக்கொண்டு மந்திரம் நாடாரின் உயிரையும் தின்றது!
ஆறு பிணம் - ஆறு பிணம் - ஆறவில்லை பசி அடக்குமுறைக்கு! திராவிடத்தாயே! பாடைகள் ஆறு உன் பாலகர்களுக்கு! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு! ஒரே நாளில்! ஆறு பிணம் - ஆறு மக்கள் சுடுகாட்டுக்கு அனுப்புகிறாய்.
உத்தமர் காந்தியின் உலைக் களத்திலே - அகிம்சை நெருப்பிலே பழுக்கக் காய்ச்சப்பட்டு - சுதந்திரம் என்னும் சம்மட்டியால் உருவாக்கப்பட்ட தூய்மை என்னும் துப்பாக்கி முனைகள் துளைத்துத் தோற்றுவித்த ஆறு பிணங்கள்! அய்யகோ! காந்தியாரின் கல்லறைக்கு முன்னே காவு கொடுக்கப்பட்டு - பாரதமாதாவுக்கு படையல் போடுவதற்காக தயாரான ஆறு பிணங்கள்!
காந்தி கண்ணீர் வடிக்கிறார் - பாரதமாதா சிரிக்கிறாள் - அம்மா திராவிடம் - அழு! அழு! கண் இமைகள் கனத்துப்போகும் வரையில் அழு! ஒரே நாளில் ஆறு பிணம் - படுகொலை - படுகொலை பாரதமாதாவின் பெயரால் - பட்டப்பகலில் பகிரங்கப் படுகொலை.
அழு; தாயே-அழு! ஒரு காலத்தில் சிரித்து செழித்த என் செந்தமிழ்த்தாயே! அழு! கண்ணீர் சிந்து! ரத்தக் கண்ணீர் சிந்து! ஆனால் இந்தக் கண்ணீர் வீண் போகாதம்மா!
சார்லஸ் காலத்திலே ஆங்கிலத்து மண் அழுது வீண் போகவில்லை! லூயிக்கு நேராக பிரெஞ்சு பூமி விட்ட கண்ணீர் பயனற்றுப் போகவில்லை! ஜாருக்கு நேராக ரஷ்யத்தாய் சிந்திய கண்ணீர் ஆறு. நல்லதோர் விளைவைத் தான் தந்தது! இன்று - நீ நேருக்குநேர் விடும் கண்ணீர் இந்தப் பாருக்கு உன் நிலையை உணர்த்தத்தான் போகிறது!
தூக்கிக்கொடு ஆறு மைந்தர்கள் - கண்ணீரால் குளிப்பாட்டிக்கொடு உன் கண்மணிகள்! அவர்களை செந்நீரால் குளிப்பாட்டியவர்கள் செல்லட்டும் சிரிப்போடு!
ஆனால் தாயே! அந்த சிரிப்பு நீடிக்காது!
நீடிக்க விடமாட்டோம் மிஞ்சியுள்ள உன் கொஞ்சு மொழி மைந்தர்.
உயிரோடு ஆறுபேரை விழுங்கிய உதிரவாய்க் ‘காளிக்கு’ வயிற்றிலே கொஞ்சம் இடம் காலி - அதற்காகக் கல்லக்குடியிலே சந்தனம் ஜோசப்பின் இடதுகை முழுவதையும் முறித்துப் போட்டுக்கொண்டது. அப்போதும் கொஞ்ச இடம் காலி - தூத்துக்குடி ஆசிரியர் குருசாமியின் இடதுகால் வாழைப்பழம்போல் எடுத்து வயிற்றுக்குள் போட்டுக்கொண்டது.
ரத்த விருந்து முடியவில்லை - பதினாறுவயது இளைஞன் ராமச்சந்திரனின் பச்சைத் தொடைக்கறி - வாலிபன் சண்முகத்தின் கணுக்கால் சதை - ரங்கநாதன் குடல் கறி - கோம்பன், கிருஷ்ணன், செல்லையா, சோமன், வேணுலிங்கம், சுடலை, முணுசாமி, ரத்தினம், ஈஸ்வரன், சதாசிவன், அண்ணாமலை, முணுசாமி, நாராயணன், செபாஸ்டின் ஆகி
யோரிடம் ஆளுக்குக் கொஞ்சம் - எலும்பு, ரத்தம், சதை - இவ்வளவும் சாப்பிட்டானபிறகுதான் ஆறுபேரை விழுங்கிய அகிம்சாப் ‘பிடாரி’ எப்பம் விட்டாள்.
ஒருநாள் உணவு முடிந்தது என்றாள். “உயர்க அசோகச் சக்கரக்கொடி! இன்னும் உயர்க! விண்ணில் உயர்க! மண்ணில் உயர்க!” என்று பாட ஆரம்பித்தாள்!
ரத்த போதையில் குதித்தாள் - குதித்தாள் - சித்தம் கலங்கி சிரித்தாள் - சிரித்தாள் - ஆறு உயிரோடு விட்டாளா - அநேகர் குருதியோடு நின்றுளா - அகப்பட்ட போதே இரையைத் தேடிக் கொள்வோம் என்று ஐயாயிரம் தோழரை அகிம்சா குகைக்குள் அள்ளிப்போட்டாள். ஒரே நாள் - ஜூலை 15! - ஆறு உயிர்! அநேகர் சித்திரவதை! ஐயாயிரம்பேர் சிறைச்சாலைகளில்!
எங்கே வாழ்கிறோம்? - திராவிடத்தில்! எதோடு இணைந்து? - இந்தியாவோடு! யார் காலத்தில்? - காந்தியாரின் வாரிசு காலத்தில்! என்ன குற்றம் செய்தோம்? விடுதலை கேட்டோம்! ஆறு பிணம் - ஐயாயிரம் பேர் சிறையில்! மறவாதீர்! - அதை மறவாதீர்! சரித்திர ஆசிரியர்களே! குறித்துக்கொள்ளுங்கள். காவியம் தீட்டுவோரே! குறித்துக்கொள்ளுங்கள். பாடல் புனைவோரே! குறித்துக்கொள்ளுங்கள். கி. பி. 1953 சொல்லுகிறது - கி. மு. அல்ல! விடுதலை கேட்டது குற்றமாம்!
அதற்குத் தண்டனை ஆறு பிணம்! ஐயாயிரவர் சிறையில்! குறித்துக்கொள்ளுங்கள்.
தான், படைக்கும் அந்தி வானத்தையும் வெற்றி கொள்ளும் சிவப்பு நிறத்தைப் பூமியிலே கண்ட சூரியன் வெட்கித் தலை குனிந்து மறைந்தான். போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள்ளே - கல்லக்குடியில் - நாங்கள் சுருண்டு கிடந்தோம் - இந்த சோகச் செய்திகளை காதில் வாங்கியபடி!
இரவு 12 மணிக்கு மேலிருக்கும். அரை மசால்வடைத் துண்டும், கால்கோப்பைத் தேநீரும் கொண்டுவந்து தந்தனர் மணியும் முத்துவும் மற்ற நண்பர்களும்! அதுதான் எங்களுக்கு சரியான காலத்தில் கிடைத்த அருமையான இரவு உணவு. ஒருவர் கால் ஒருவருக்குத் தலையணையாக அமைத்துக்கொண்டு முப்பத்தாறுபேரும் தூங்கினோம். கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சகிதம் ரிசர்வ் போலீஸ் காவல் நின்றுகொண்டிருந்தது. எங்களுடனேயே இருந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த நடுநிசியில் திடீரென எங்களை எண்ணிட ஆரம்பித்தார்.
என்ன ஆச்சரியம்; முப்பத்தாறுபேரும் சரியாக இருந்தோம். வழக்கம் போல் இரண்டு மூன்று முறை எண்ணியபிறகு அவருடைய கணக்கு முடிவு பெற்றது.
புயலுக்குப் பின்னுள்ள அமைதியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது!
கண்ணதாசன் முதலிய நண்பர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.
நாட்டுப்பற்றும் - திராவிட இனப்பற்றும் கொண்டவருமான திருச்சி கலைமகள் பிரஸ் தோழர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் என்ன ஆனார் என்று பார்க்கச்சென்ற திருச்சி முஸ்லீம் இளைஞர் முன்னணி தோழர் ஜே. எம். ஷரீபும் காவலில் வைக்கப்பட்டார்.
தூத்துக்குடி செயல் மணிகளும் - எதையும் தாங்கும் இதயம் போன்ற சிங்க ஏறுகளும்-கண்ணியம்-கட்டுப்பாடு கடமையுணர்ச்சிகளில் கடுகளவும் வழுவாத கழகத்தின் கண்மணிகளுமான தோழர்கள் தங்கப்பழம் - சிவசாமி - கே. வி. கே. சாமி - நடராசன் - ரத்தினம் முதலிய எண்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் சதிவழக்கில் சம்பந்தப் படுத்தப்பட வேண்டும் என்று திட்டத்தோடு கைது செய்யப்பட்டார்கள்.
சென்னையிலே ஆச்சாரியார் வீட்டுக்கு முன்பு மறியல் நடத்துவதற்காகச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் அந்த அணிவகுப்புக்குத் தலைமை ஏற்று நடத்திய வீராங்கனை தோழியர் சத்தியவாணிமுத்து அம்மையாரும், காஞ்சி ராசகோபாலும் ஜூலை 14ந் தேதியன்று கைது செய்யப்பட்டார்கள்.
15ம் நாள் மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த தஞ்சை பூமி தந்த அஞ்சாநெஞ்சர் - தாக்கத்தால் தருக்கரை விரட்டும் தகைமையாளர் - இன்பபோர்த் தளபதி N. S. இளங்கோவும், வேதாசலம் முதலிய ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள் சென்னையிலே!
16ம் நாள் - ஆயிரம் இடர் அடுக்கிவரினும் அசையாத மன உறுதி படைத்தவரும் - வடாற்காடு மாவட்டத்
தில் கட்சிக்கோர் படை போன்றவருமான பேரூர் சுப்பிரமணியம் தலைமையில் ஆச்சாரியார் வீட்டுத் தெருவில் ஐம்பதுக்கு மேற்பட்ட நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறை நிரம்புகிறது - நிரம்பி வழிகிறது என்ற செய்திகள் செவி நிரம்ப - சிந்தையிலே துடிப்பு நிரம்ப - நாங்கள் காவலுக்கிடையே அமர்ந்திருந்தோம்.
16ந் தேதி காலை 10 மணிக்கு டி. எஸ். பி. வந்தார். எங்களையெல்லாம் உடனே அரியலூருக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டுப் போனார்.
பிற்பகல் 12 மணிக்கு போலீசார் செல்வில் சாப்பாடு போட்டப்பட்டது. நாங்கள் கடைசியாக இலைபோட்டு சாப்பிட்ட சாப்பாடு அதுதான்!
சாப்பாடு முடிந்தது - போலீஸ் வண்டி வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறி அமர்ந்தோம். வண்டி அரியலூர் நோக்கிப் புறப்பட்டது.
ஆம் - எங்களுடைய சிறை யாத்திரை துவங்கி விட்டது.
எங்கள் வண்டிக்குப் பின்னால் ஒரு மோட்டார் கார். அது சிறிது தூரம் எங்களைத் தொடர்ந்து வந்தது. உள்ளிருந்து இரண்டு மூன்று பேர் வணக்கம் தெரிவித்தனர். அந்தக் காரில் என் சகோதரர் அரங்கண்ணலும் இருந்தார். அவர் தன் அன்புக் கரத்தை நீட்டி - ‘சென்று வருக’ என்று அறிவித்தார்.
அவர் பற்றிய நினைவு என்னை எங்கேயோ அழைத்துச் சென்று - நீண்ட சிந்தனை. போலீஸ்வண்டி புழுதியை இறைத்தபடி போகிறது. பின்னால் வந்த மோட்டார் புழுதியில் மறைந்து வேறு பக்கம் திரும்பிவிட்டது. ஆனால் ‘அரங்கு’ என் மனதைவிட்டு மறையவில்லை.
1940ம் ஆண்டு - திருவாரூர்ப் பள்ளியிலே படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது படிப்பிலே கவனம் சென்றதைவிட - அதிகமாக இயக்கத்திலேதான் சென்றது. பள்ளியிலேயே கழகப்பிரச்சாரம் - கழக ஏடுகளைப் பரப்புதல் - கையெழுத்துப் பிரதிகள் நடத்துதல் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது என்னுடன் துணையாக இருந்தும் இணையாக இருந்தும் இயக்கத் தொண்டு புரிந்தவர் வ. கோ. சண்முகம் என்ற “மாவெண்கோ” இப்போது உடல் நலமின்றி யிருக்கிறார்.
பள்ளிப் பருவத்தில் எனக்குப் பரம விரோதியாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் வெங்கடசலம் என்ற பச்சைக் கதர்ச்சட்டைக்காரர். அவர் இப்போது - என் அப்போதே - திராவிட இயக்கத்திற்கு வந்துவிட்டார் - இன்னொருவர் ரங்கசாமி. என்னைக் கண்டால் அவருக்கு வேப்பங்காய் போலத்தான்! அழுத்தமான கதர் சட்டையும் - சட்டையிலே காங்கிரஸ் சின்னமும் அணிந்துகொண்டிருந்த அந்த இளம் நண்பர் - பள்ளித் தாழ்வாரத்திலே நான் நடந்து செல்வதைப் பார்த்தாலே போதும் - அவரது குழுவினரோடு சேர்ந்து கொண்டு பரிகாச வார்த்தைகளைக் கொட்டிக் கும்மாளம் போடுவார்.
சில நேரங்களில் சிறு கல்லும் வீசுவார்.
என் தான் இந்த ரங்கசாமிக்கு என்மீது இவ்வளவு காய்ச்சலோ தெரியவில்லை என்று எனக்கு நானே
ஆச்சரியப்படுவேன் - வருத்தப்படுவேன் - ஆனால் ஆத்திரப்படமாட்டேன். அதன் காரணமாகத்தான் ரங்கசாமி, அவ்வளவு விரைவில் அரங்கண்ணலாக மாறிட முடிந்தது. நாங்கள் தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன் முதல் நடித்த ‘பழனியப்பன்’ என்ற நாடகத்தில் தோழர் ரங்கசாமி - இல்லை - சகோதரர் அரங்கண்ணல் டாக்டர் வேடந்தாங்கி நடித்தார். ரங்கசாமி அரங்கண்ணலானார்! அரங்கண்ணல் நாடக டாக்டரானார் - இப்போது நாட்டு நலிவு போக்கும் டாக்டர்களில் ஒருவராகிவிட்டார் - எழுத்தால்!
பேச்சால்! இணையற்ற செயல்களால்! அவருக்கு நான் - எனக்கு அவர் - உடன்பிறப்பு.
அரங்குவைப் பற்றிய என் ஆழ்ந்த சிந்தனையோட்டத்தை “அரியலூர் வந்துவிட்டோம்” என்ற குரல் தடுத்து நிறுத்தியது. அரியலூர் சப்ஜெயில் வாசலில் ஒரே கூட்டம். நாங்கள் வரப்போகிறோம் என்பதைத் தெரிந்து மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கினோம். குழுமியிருந்தோரை வணங்கினோம். வாழ்த்தினர். உள்ளே அழைத்துச் செல்லப்பட்டோம்.
அரியலூர் சப்ஜெயிலில் இருபதுக்குட்பட்ட கைதிகளையே வைக்க முடியும். அங்கு எங்களுக்கு முன்பே வேறு வகைக் கைதிகள் பலர் இருந்தனர். நாங்களும் போனபிறகு மொத்தம் அறுபதுக்கு மேற்பட்டவரானோம். எங்கள் முப்பத்தாறு பேருக்கும் நாலந்து கூண்டுகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஒரு கூண்டில் இரண்டு பேர்தான் செளகரியமாக இருக்கமுடியும். ஏழுபேர் - எட்டுபேர் - ஒவ்வொரு கூண்டிலும் போட்டு அடைத்தார்கள்.
எங்கள் கூண்டு :
நான் - சத்தி - கஸ்தூரி - ராமசுப்பையா - வேணு கோபால்-மலைக்கோட்டை ரத்தினம்-அரியலூர் எத்திராஜ்-மற்றுமொரு நண்பர் ஆகிய எட்டுபேர் அடைக்கப்பட்டோம். காலடியால் சுமார் பத்து அடி நீளமும் - எட்டு அடி அகலமும் உள்ள அந்தக் கொட்டடியில் எட்டுபேர்!
அதிலும் பாதிக்குமேல் பயன்படுத்த முடியாத இடம். பெண்கள் அடைப்பட்டிருந்த கூண்டு. நாங்கள் சென்றதும் அவர்களே வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை எங்களுக்கு அளித்தார்கள். சிறுநீர் கழிக்கப் பட்டு - எங்கள் மூக்குகளையெல்லாம் கம்பிக்கு வெளியே நீட்டித்தான் மூச்சை சுவாசிக்கவேண்டும் என்ற நிலைமையிலே துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
மாலை 5 மணிக்கு எங்களைத் திறந்துவிட்டார்கள். மலஜலம் கழிப்பவர்கள் போகலாமென்று - ‘கக்கூஸ்’ என்று சொல்லப்படும் ஒரு இடத்தை காண்பித்தார்கள். “லாங் ஜம்ப்” தெரிந்தவர்கள் தான் உள்ளே சென்று அமர முடியும்.
காரணம் கால்வைப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் ஒன்றுக்கொன்று இடையே அவ்வளவு தூரத்திலிருந்தன.
பிறகு சாப்பிடுமிடத்திற்குக் கூப்பிட்டார்கள். குப்பையும் கூளமும் சேர்ந்த ஒரு தரையிலே - ஆமாம் - புழுதி மண்ணிலே - உட்காருங்கள் என்றார்கள். உட்கார்ந்தோம். உணவு வந்தது. இல்லை - இல்லை... ஆளுக்கொரு சட்டி வந்தது - மண் சட்டி! பிறகுதான் உணவு வந்தது.
அறுசுவை உணவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்- நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுசுவை உணவு என்றால் ருசி நிறைந்த அருமையான சாப்பாடு என்றும் ஆறுவகை, ருசி நிறைந்த சாப்பாடு என்று தான் அர்த்தம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
அரியலூரிலே எங்களுக்குத் தந்த அறுசுவை உணவுக்கு ஒரு புது அர்த்தமுண்டு.
அறுசுவை - சுவை அறுந்த
உணவு - சாப்பாடு என்பதும் கொடுமை
சுவை அறுந்துபோன கொடுமையை மண் சட்டிகளில் கொட்டினார்கள். மஞ்சள் வண்ணச் சோறு! பஞ்சு வண்ணக் குழம்பு! உப்பிலும் - புளியிலும் காரத்திலும் - சோராமல் சுயேச்சையாக வந்து விழுந்த பரங்கிக்காய்த் துண்டை எடுத்து வாயிலே வைத்தோம்! எப்படியோ எதிர் நீச்சல் போட்டு அது வயிற்றுக்குள் போய்விட்டது. எல்லா தோழர்களும் சோற்றைத் தொடாமலே என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “உம் சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டு நான் சோற்றைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டேன்.
“அண்ட சராசரங்களும் சுழலுதண்ணே” என்று குடிகாரன் பாடுவான்! “அடிவயிற்றிலேயிருந்து குமட்டுதண்ணே!” என்று நாங்கள் பாடவில்லை. அகத்தின் அழுகை முகத்தால் காட்டாமலும் இருக்கமுடியவில்லை.
சோற்றுருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டு - சட்டிகளைக் கழுவிவைத்துவிட்டு - முப்பத்தாறு பேரும் அணிவகுத்தோம்; நாலு நாலுபேராக!
எப்படியோ வாழ்க்கையிலே அதுவரையில் தொட்டறியாத கஷ்டத்தை அந்த இரவு வேளையில் அரியலூர் சிறையில் அனுபவித்தோம். படாதபாடுபட்டு இரவை நகர்த்தினோம்.
காலையிலே அரிசிக் கஞ்சி கொடுத்தார்கள். குடிக்க காயவிடாமல் பார்த்துக் கொண்டோம். மறுபடியும்
அடைத்துவிட்டார்கள். அன்றைய தினம் ஜூலை 17ந் தேதி! சென்னையிலே ஆச்சாரியார் வீட்டு மறியலிலே அருப்புக்கோட்டை தந்த வீரர் தோழர் எம். எஸ். ராமசாமி அவர்கள் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். கல்லக்குடியிலே தாக்குண்டு வைத்திய சாலையிலிருந்த கண்ணதாசனும் கைது செய்யப்பட்டார்.
வெளியிலே என்ன நடக்கிறதோ; தெரியவில்லையே என்ற ஆவலுடன் அடைந்து கிடந்தோம் கூண்டுக்குள்!
பிற்பகல் உணவுக்காக திறந்துவிட்டார்கள் - எங்களுத் திறப்பதற்காக வார்டர் கொஞ்ச தூரத்தில் வருவது எங்களுக்கு முன்பே தெரிந்துவிடும். அவர் கையிலுள்ள சாவிக்கொத்திலிருந்து எழும்பும் ஒலியைக் கேட்டதும் ராமசுப்பையா சொல்லுவார்; திறக்கப்போகிறார்கள் என்று! - பிற்பகல் அங்குள்ள மற்ற கைதிகளை நாங்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
நாலைந்து - வயதான தாய்மார்கள் சிறையிலிருந்தார்கள். சாராய வழக்கிலே கைது செய்யப்பட்டவர்கள். சுமார் இருபத்தைந்து - வயதுள்ள ஒரு வாலிபனைக் கண்டோம். கள்ளக் காதலின் காரணமாக காதலியின் கணவனைக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவன். கட்டுமஸ்தான தேகம் படைத்த இளைஞன். அவனுடைய காதலியும் அங்கே வேறு கூண்டில் அடைப்பட்டிருந்தாள். அவள் மீது அவன் கொண்ட பாசமும் - அவன் மீது அவள் கொண்ட நேசமும் - கணவனைக் கொல்வது என்ற மோசத்திலே கொண்டுபோய்விட்டதாக வழக்கு!
அந்த இளைஞன் சொன்னான்; தானும் அவளும் ஆசைக் காதலர்கள் என்று! அவனுக்கோ வயது இருபத்தைந்து இருக்கும். அவன் ஆசை ஜோடிக்கோ - அறுபதுக்குள் தான் இருக்கும்! புனிதமான காதல்! பொருத்தமான காதல்! “காதலுக்கு கண்ணில்லை என்கிறபோது வயதுமாத்திரம் எதற்காக?”
என்ற கேள்வியின் சரியான பதிலாக நின்றார்கள் அந்த இளங்காதலர்கள் - இல்லை கிழக் காதலர்கள் - அதுவுமில்லை - பழுப்புத்தளிர் காதலர்கள்!
சாராயத் தொழில் குடிசைத் தொழிலாக்கிக்கொண்ட இன்னும் சில ஆண் மக்களும் அங்கே கைதிகளாயிருந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகல் உணவு வந்துவிட்டது. அருமையான சோளக் களி. சோளத்தின் மாவிலே செய்யப்பட்ட சுவையான உணவு(?) அதன் தலையிலே கொஞ்சம் குழம்பு என்று சொல்லப்பட்ட ஏற்பாட்டையும் ஊற்றித் தொலைத்தார்கள். எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கப்பெருமாள் போல சோளக் களி நின்றுகொண்டிருந்தது சட்டியிலே!
“சோறு எதுவும் கிடையாதோ?” என்றோம். மாலையிலேதான் மஞ்சள் சோறு என்றார்கள். மோர் உண்டு இப்போது என்றார்கள். கொடுங்கள், கொடுங்கள் என்று குவளையை நீட்டினோம். மோர் சாப்பிட்டதோடு பிற்பகல் உணவு முடிந்தது. சோளக்களியை யார் தொட முடியும். அதுதான் தொட்டாலும் அசையாத நிலையில் இருந்ததே!
மீண்டும் பூட்டினார்கள். மாலை 3 மணிக்கு கொஞ்சம் மணிலாக் கொட்டையைக் கொடுத்து எல்லோரும் சாப்பிடுங்கள் என்று அன்பு, பொழிந்தார்கள். பிறகு மாஜிஸ்
டிரேட் வந்தார். ‘இன்றைய தினமே உங்கள் விசாரணை இருக்கிறது’ என்று கூறிவிட்டுப் போனார்.
சிறிது நேரத்தில் எங்களை அழைத்தார்கள். சென்றோம்.
நீதி மன்றம்! அங்கே நாங்கள் - முதலில் ஐவர் விசாரிக்கப்பட்டோம்.
பின்னர் ராமசுப்பையாவும் முப்பது தோழர்களும் விசாரிக்கப்பட்டனர்.
டால்மியாபுரம் பெயரை மாற்றவேண்டுமென்று வரி கொடுக்கும் பிரஜைகளின் சார்பாகக் கிளர்ச்சி நடத்தியது குற்றமாம்!
கல்லக்குடி எனும் தமிழ்ப் பெயரை விரும்பியது தகாத செயலாம்!
என்ன சட்டமோ - எந்த செக்ஷனோ - அப்படிச் சொல்லுகிறதாம்!
அப்பட்டமாக அப்படிச் சொல்லாவிட்டாலும் - உண்மையை மறைத்து - சட்டத்தின் துணையால் வழக்கு நடத்துகிறது ஆட்சி பீடம்! ‘நீங்கள் ஏன் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது?’ “என்று கேட்பதற்கு சட்டத்திற்கு நாக்கில்லை. இருந்த நாக்கும் அறுக்கப்பட்டு விட்டது இங்கே!
“நீங்கள் எப்படி கோரிக்கை யனுப்பலாம்?” என்ற பொருள்படும் கேள்வியை ஜாடைக் குறிகளால் - ஊமை பாஷைகளால் - கேட்டிடும் திறமை சட்டத்திற்கு இருக்கிறது!
ஆகவேதான் நாங்கள் ஈடுபட்ட அறப்போருக்கு களங்கம் கற்பித்தது.
“நீங்கள் குற்றம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?”
“குற்றமல்ல - குறிக்கோள் நிறைவேற்ற கையாண்ட அமைதியான முறைதானிது!”
“உங்கள் செயல் குற்றமாகத்தான் கருதப்படுகிறது.”
“சட்டப்படி இருக்கலாம் - நியாயப்படி அல்ல”
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கத் தயாராகிவிட்டது. வெளியிலே நூற்றுக்கணக்கான மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றனர்; மழைக்கிடையிலேயுங்கூட!
ராமசுப்பையாவும் முப்பது தோழர்களும் இரண்டு மாதம் கடுங்காவல் அனுபவிக்கவேண்டும். முப்பத்தி ஐந்து ரூபாய் அபராதம் - கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை! மொத்தம் மூன்று மாத தண்டனை.
சட்டம் கொட்டிவிட்டது அவர்களை!
எங்கள் பக்கம் திரும்பியது சட்டம் - ஐந்து மாதக் கடுங்காவல் - முப்பத்திஐந்து ரூபாய் அபராதம் - கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை - ஆக மொத்தம் ஆறு மாதத் தண்டனை.
ஒரே குற்றம் - இரண்டுவித தண்டனை!
போராட்டத் தலைவன் என்ற முறையில் எனக்கும்- என்னுடன் சேர்ந்த நால்வருக்கும் ஆறு மாதம்!
அடுத்த படைவரிசை யென்ற முறையில் மற்றவர்களுக்கு மூன்று மாதம்!
அதுவும் தவறு - அவர்களிலே ஆறுபேர் முதல் படைவரிசையிலே கைது செய்யப்பட்டவர்கள்.
எப்படியோ; சட்டம் நெளிந்து வளைந்து - ஆறு மாதம் - மூன்று மாதம் என்று பரிசுகளை அளித்து மகிழ்ந்தது!
17ந் தேதி மாலை 6-30 மணி சுமாருக்கு தண்டனை பெற்றோம். தமிழர் மானத்துக்காகப் போராடியதற்கு பரிசு பெற்றோம்!
“என்ன சார்; அவர்களுக்கு மூணுமாதம் - நமக்கு ஆறு மாதம்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் சத்தி.
“ஆமாம் நமக்கு ஆறுமாதம்தான்” என்றேன்.
“என் அப்படி?” என்றார் வேணுகோபால்.
“அதற்குமேல் தண்டனை தர அரியலூர் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை!” என்றேன்.
தீர்ப்பு கேள்வியுற்ற அரியலூர் மக்கள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு முன்பு திரளாக நின்றிருந்தனர். கூட்டம் கலைந்தபிறகு எங்களை அனுப்பவேண்டும் என்ற திட்டத்துடனே-என்னவோ - கோர்ட் வாசலிலேயே நல்ல இருட்டில் எங்களை உட்கார வைத்துவிட்டனர்.
ஆகாகா! ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே! - மாலையில் எங்களுக்கு மஞ்சள் சோறு போட்டுத்தான் பிறகு தீர்ப்பு கூறினார்கள்.
ஆறுமாதமென்ன - ஆறுவருடமே போட்டும் - அரியலூர் நரகத்திலிருந்து - மன்னிக்கவும். நகரத்திலிருந்து வேறு சிறைச்சாலைக்கு அனுப்பப்போகிறார்களே என்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும்! மூன்று மாத தண்டனை பெற்றவர்களுக்கெல்லாம் முகம் சுருங்கிவிட்டது! வாடிவிட்டது - வதங்கிவிட்டது - காரணம்; எங்களுக்கு ஆறுமாதம் கிடைத்துவிட்டதாம்; அந்தப் பொறாமையால்தான் - வேறென்ன!
“வாழ்க எம் நாடு!” என்று ஒலித்த குற்றத்திற்கு நீதிமன்றம் தந்த பரிசு கண்டு கண்ணீர் சொட்டுவது போல் வானம் மழையைக் கொட்டிற்று.
இடி - மின்னல் - பெருமழை!
இரவு 8 மணி சுமாருக்கு எங்களில் இருபத்தைந்து பேர்களை ஏற்றிக்கொண்டு போலீஸ் வண்டி புறப்பட்டது. மிச்சம் பதினொரு தோழர்களுக்கு வண்டியில்லாததால் - “பிடியுங்கள் சாபம்! இன்னும் ஐந்தாறு நாட்கள் அரியலூர் ஜெயிலில் இருங்கள்” என்று அவர்கள்மட்டும் அங்கேயே வைத்துக்கொண்டனர்.
நாங்கள் இருந்த வண்டி இருட்டையும் - இடையிடையே தோன்றிய மின்னலையும் - மழையையும் கிழித்துக்கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டது.
வெளியிலே எவ்வளவு மழை பொழிகிறது என்பதை எங்களால் கணக்கிட முடிந்தது - எப்படியென்கிறீர்களா -
பெய்த மழை முழுதும் எங்கள் தலையிலேதானே பெய்தது.
அரியலூருக்கும் திருச்சிக்கும் இடையே உள்ள சாலை இருக்கிறதே - அடடா - தார்ரோடுதான்!
[தார் என்றால் வண்டிக்காரர்கள் மாடுகளைக் குத்த உபயோகிப்பார்களே; அந்தத் தார் எனப் பொருள் கொள்க. வாழைத்தார் எனக் கொள்ளினும் கொள்க]
மேலே வானத்திலே இடி! கார்போகும் வேகத்திலே இங்கே ஒருவர்மேல் ஒருவர் இடி!
ஒரு தோழர் பாடினார் - அவரையறியாமலே “பீர்க்காக்கள்” உருண்டன - அவ்வளவு அசைவற்ற நிம்மதியான கார் சவாரி!
எவ்வளவு தொல்லைகள் இருந்தால் என்ன; அந்த அரியலூர் காராக்கிரகத்தையும்- கக்கூசையும் - தலைமுழுகி விட்டு வந்தோமே என்ற ஆறுதல் எல்லாத் தோழர்களுக்கும் ஏற்பட்டது.
வானம் உறுமிக்கொண்டேயிருந்தது. குடேறியிருந்த எங்கள் உடலிலே மழைத்துளி பன்னீர்போல கொட்டிக் கொண்டேயிருந்தது.
மழை - திராவிடத்தின் வளப்பத்தைச் சொல்லிற்று!
இடி - திராவிடரின் மனக்குமுறலுக்கு அடையாளமாயிருந்தது!
மின்னல் - இன்னல் புரியும் ஆட்சி இப்படித்தான் தோன்றி மறையும் என உணர்த்திற்று!
இரவு ஒரு மணிக்கு திருச்சி வந்துசேர்ந்தோம். மழை நின்றபாடில்லை. திருச்சியின் தெருவெல்லாம் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. மலைக்கோட்டையின் உச்சியிலே பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நகர் முழுதும் பூரண அமைதி நிலவிக்கொண்டிருந்தது. நடுநிசியிலே - நகர் அடங்கிய நேரத்திலே - நாங்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் காட்சியை சித்தரிக்க இயலாதுதான். நீண்டுபோன ஆடை - நடுங்கும் உடல் - ஆலை தெளிந்த உள்ளம் - இவைகளோடு எங்கள் பயணத்தின் கடைசிப் பகுதியை முடித்தோம்.
திராவிட நாட்டுப் போராட்டப் பயணத்திற்கு கடைசிப் பகுதியல்ல; முதல் பகுதி!
அந்த முதல் பகுதியிலே நாமும் நடைபோட்டோம் - என்ற எக்களிப்புடன் திருச்சி வீதிகளைக் கடந்தோம். சென்ற வழியிலே திராவிடப்பண்ணை முத்துவின் வீடு இருந்தது. அங்கே இறங்கி விசாரிக்காமல் சென்றது கிடையாது எப்போதும்! இப்போது நிறுத்தமுடியுமா காரை! அதை நினைத்தோம் - “நீங்கள் கைதிகள்” என்ற உணர்வு வாயை மூடியது!
ஈரத்தின் கனத்தையும் தூக்கிக்கொண்டு அதோ எங்கள் லட்சியக் கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. அவை காட்டிய வழியிலே நாங்களும் பயணம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
மலைக்கோட்டையின் பச்சை விளக்கு மறைந்து விட்டது.
சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். உயர்ந்த பலமான மதில்களையும் - கோட்டைபோன்ற
முகப்பையுமுடைய திருச்சி மத்திய சிறையின் வாசலிலே போலீஸ் வண்டி நின்றது. நாங்கள் இறங்கினோம்.
அகாலமாகிவிட்டதால் - மறுநாள் காலையில்தான் எங்களை விழுங்க முடியும் என்று கூறிவிட்டது சிறை அதிகாரம்.
“சரி - இதோ இந்த இடத்தில் படுங்கள்” என்று சிறைக்கு வெளியேயுள்ள ஒரு மண்டபத்தைக் காட்டினார். அதில் யோகாசனங்களும் - மாயவித்தைகளும் கற்றவர்கள் தான் படுக்கலாம். மழைத் தண்ணீர் கணுக்கால் அளவு தேங்கியிருந்தது. நீர்மேல் படுக்கும் பயிற்சி எங்களுக்கு கிடையாது. ஆகையால் தயங்கி நின்றோம். கால்வலி எடுக்கும் வரையில் நின்றோம்.
பிறகு கருணை பிறந்தது - “சரி இங்கே படுங்கள்” என்று ‘இண்டர்வியூ’ பார்க்குமிடத்திற்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைக் காட்டினார்கள். அங்குபோய் உட்கார்ந்தோம். மழைச்சாரல் நிற்கவில்லை.
குளிரும் கோடி கோடித் தேளென மாரிக் கொட்டியது. கண்ணைத் திறக்கமுடியாத மின்னல்! ‘புளூரசி’ நோயினில் பிடிக்கப்பட்டவன் நான் - அதற்குக் குளிர் ஆகாது - தொலைந்துபோன நோய் - மீண்டும் தொடர்ந்து விடுமோ இந்தக் குளிரால் எனப் பயந்தேன்; அவ்வளவு குளிர் - சத்தி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் - அந்தக் கதகதப்பிலே கொஞ்சம் கண்ணயர்ந்தேன். கைகளைத் தேய்த்துக்கொண்டு சூடு உண்டாக்கியபடியும் - முழங்காலுக்கிடையே கைகளைப் பொத்திக்கொண்டு சுருண்ட நிலையிலும் - எல்லாத் தோழர்களும் அந்த பயங்கர இரவை மிகக் கஷ்டப்பட்டு துரத்திக் கொண்டிருந்தனர்.
ஆரியத் தலைவர் ஆச்சாரியார் அயர்ந்து தூங்கிடும் வேளை!
அவருக்குத் தலைவர் நேரு அனந்தசயனத்திலிருக்கும் நேரம்!
அப்போது நாங்கள் - நாட்டின் விடுதலைப் படையினர் - குளிரின் பலமானப் பிடியிலே சிக்கி - மழைச் சாரலில் மண் நிறைந்த தரையில் - சுருண்டுகொண்டிருந்தோம்.
கதிர் வந்தது - கதவு திறந்தது:
வா! வா! என்று வாழ்த்துப்பாடி அழைத்த கதிரவன் வந்தான். ஜூலை 18ந் தேதி பிறந்தது. சிறைச்சாலையின் முன்னுள்ள சிறிய கதவு திறந்தது. இரவெல்லாம் குளிரால் வாடிய எங்களுக்கு ஒரு சிறு கோப்பையில் - அரைக் கோப்பை தேநீர் - யாராவது தரமாட்டார்களா - என்ற ஆசை பிறந்தது - ஆவல் துடித்தது - 15ந் தேதி காலையிலே - அதுவும் அவசரத்திலே நல்ல சாப்பாடு சாப்பிட்டவர்கள் மூன்று நாட்கள், வயிறு காலி! பசியோ கொல்லுகிறது - நாவோ காய்ந்துவிட்டது.
“ம்! உள்ளே செல்க” என்று உத்திரவும் பிறந்து விட்டது. ஒவ்வொருவராக உள்ளே போய்க்கொண்டிருக்கிறார்கள். நாலைந்துபேர் வெளியே மிச்சம். அந்த நேரத்தில் ஒரு புதையல் கண்டெடுத்தோம். “சார் ...... சார்.......... கொஞ்சம் நில்லுங்கள்” என்றபடி ஒரு தோழர் எங்களை நோக்கி ஓடிவந்தார்.
பார்த்தோம். ஒரு கோப்பைத் தேநீர்! ஆமாம் - பாலைவனத்திலே பசுந்தரை! ஆளுக்குக் கொஞ்சம் சூடுசூட சாப்பிட்டோம். நாக்கு வெந்துபோனதுகூட பிறகுதான் தெரிந்தது. அந்தத் தேநீர் தந்த தோழருக்கு எப்படித்தான் வாழ்த்து கூறுவது என்று புரியவில்லை!
சிறிய வாயிலெங்களை அழைத்தது. வெளியுலகத்தை இனி ஆறுமாதத்திற்குப் பிறகுதான் பார்க்கமுடியும் என்பதால் ஆசை தீர ஒருமுறை பார்த்தோம். பிறகு அடியெடுத்து வைத்தோம், உள்ளே! எங்களை உள்ளே தள்ளியதும் சிறையின் அந்த சிறிய உதடுகள் மூடிக்கொண்டன.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”
பாரதி தாசனின் “அந்த இலட்சிய வரிகள் இதயத்தில் புதிய இன்பம் இசைத்தன.
ஆறு மாதம் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தோம் என்றார் தோழர் வாணன். அவரும் நண்பர் செழியனும் எம்மைப் பார்க்க வந்திருந்தபோதுதான் அப்படிச் சொன்னார்கள்.
எத்தனையோ அதிர்ச்சிதரும் செய்திகள் சந்தித்திருக்கிறது திராவிடர் இயக்கம்.
வேலாயுதத்தை பட்டப்பகலில் கொலை செய்தார்கள்.
தாளமுத்து நடராசனை சிறையில் பிணமாக்கினார்கள்.
நெல்லிக்குப்பத்தில் இளைஞன் மஜீதை குத்திக் கொன்றார்கள்.
வடசென்னை பாண்டியனின் உயிரைக் குடித்தார்கள்.
இவ்வளவும் காந்தியத்தின் பெயரால் நடைபெற்ற கொலை விழாக்கள்.
இந்தக் காட்டுமிராண்டித் தன்மைக்கு ஒரு முடிவு ஏற்படுத்த கழகம், தியாகத் தீயில் குதித்திட வேண்டிய அவசியம் - அவசரம் - முறை-துறைகள் பற்றியெல்லாம் செழியனும், வாணனும் - நாங்களும் சேர்ந்து பேசிய எண்ணங்களை சென்னை கடற்கரை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறது. செழியன் - வாணன் - இயக்கத்திற்கு அமைந்த இரு உலைக்களங்கள் போல! அவர்கள் சொன்னார்கள் அதிர்ச்சியடைந்தோம் என்று! பயத்தால் அல்ல! பாசத்தால்! அனைவரும் எதிர்பார்த்த புதிய அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்கிறபோது அதிர்ச்சியினிடையே எழுகிற ஆனந்தமிருக்கிறதே - அது எல்லையற்றது.
அத்தகைய ஆனந்தம் எம்மை உந்தித் தள்ள சிறைக்கோட்டிற்குள் பிரவேசித்தோம்.
எங்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் தரப்பட்டன. ஆமாம் - எங்கள் வேட்டிகளிலே எழுதப்பட்டன.
வீட்டிலே என்னுடைய எண் மூன்று!
மூன்றாவது பிள்ளை நான்.
“தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி குணமானுவாகி விட்டதே” என்று சுற்றத்தார் சொல்லுவார்கள், முன்பெல்லாம்!
பள்ளிக்கூடத்திலே என்னுடைய எண் - மறந்து விட்டேன். S.S.L.C. தேர்விலே என்னுடைய எண் - தோல்வியடைந்த எண் - சொன்னால் அந்த எண்ணுக்கு அவமானம் ஆகையால் சொல்ல வேண்டாம்!
சிறைச்சாலையிலே எனக்கு மாட்டிவிடப்பட்ட சிங்காரப் பதக்கத்தின் எண் 5779!
இன்னும் எத்தனை எண்கள் சந்திக்கவேண்டுமோ; ஆனாலும் அந்த முதல் முறையாகப் பெற்ற எண்ணை மறந்துவிட முடியாது.
C. P. என்று சொல்லப்படும் CLOSE PRISONக்கு கொண்டு செல்லப்பட்டோம். முன்னூறுக்கு மேற்பட்ட நமது தோழர்கள் “வருக! வருக!” என அழைத்தார்கள். 1865ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த சிறைச்சாலையில் அப்போது மூட்டிவிடப்பட்ட அடுப்பு இன்னும் அணைய வில்லையாம் - தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கிறது.
வெள்ளைக்காரன் காலத்தில் ஆயிரம்பேருக்கு அதிகமாக கைதிகள் அடைப்பட்டதில்லையாம் அந்த சிறையில்!
நமது காருண்ய காங்கிரஸ் சர்க்கார் வந்தபிறகு மூவாயிரம் பேருக்கு குறைந்ததே கிடையாதாம்; கைதிகளின் தொகை.
ஒரு சிறு கிராமத்துக்குள் நுழைந்தது போலவே யிருந்தது எங்களுக்கு.
சலவை செய்யப்படும் இடம் உண்டு. தலையலங்காரம், முக அலங்காரம் செய்வோர் உண்டு. வைத்திய சாலை உண்டு. தொழிற்சாலைகள் உண்டு. பாடபோதனை இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடம் உண்டு. வாசகசாலை உண்டு. பள்ளிக்கூடம் - மருத்துவமனை இரண்டைத் தவிர - பிற எல்லா தொழில்களையும் அங்குள்ள கைதிகளே நடத்துகிறார்கள். கைதிகளுக்காக கைதிகளால் நடத்தப்படும் ஒரு சின்னஞ்சிறிய ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருப்பதாகவே நாங்கள் உணர்ந்தோம்.
உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தோம். நீலக் கிண்ணம் கவிழ்த்ததுபோல வானம். சுற்றிலும் பெரிய மதிற் சுவர்கள் கைதி என்பதைச் சுட்டிக்காட்ட! உள்ளே வேப்ப மரங்கள் - சிறை வாழ்வின் சுவையை உணர்த்திட!
மதிற்சுவருக்கு வெளியே பொன்மலை - பொறுப்புகள் உனக்கு அதுபோலத்தான் காத்திருக்கின்றன வெளியுலகத்தில் என்பதை எடுத்துச் சொல்ல!
நாட்டுப் பிரிவினைப் போரில் சிவப்பாக்கப்பட்ட இலட்சியச் சாலையில் எங்கள் கால்களும் பதிந்துவிட்டன என்ற அடங்காத பூரிப்போடு - உள்ளிருந்து அழைத்த தோழர்களுடன் ஐக்கியமானோம்.
உள்ளே வந்ததும் நாங்கள் கண்ட முதல் காட்சி என்ன தெரியுமா? நமது தோழர்கள் ‘கஞ்சிப்போர்’ நடத்திக்கொண்டிருந்தார்கள். ஜெயிலர் நிற்கிறார். அவரைச் சுற்றி தோழர்கள் நிற்கிறார்கள்.
மன்னார்குடி நாராயணசாமியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கழகத்திற்குக் கிடைத்த ‘சிங்கங்’ களில் அவர் ஒருவர். முறைப்படி சிலம்பம் முதலிய கலைகளே நன்கு பயின்றவர். “சினிமாவை விடு! சிலம்பை எடு!” என்று இப்போது கூச்சல் போடுகிறார்களே; அதற்குப் பதில் சொல்வதுபோல - சினிமாவும் பார்த்து - சிலம்பப் பயிற்சியும் - மற்ற உடற் பயிற்சிகளும் பெற்று கழகத்தின் பலமான அரணாக இருப்பவர் மன்னைப் பகுதியில்! உடல் வளர்த்திற்கேற்ற உள்ள வளமும் பெற்றவர்.
அமைதியெனும் பண்பிலிருந்து அணு
வும் நழுவாதவர். அவருடைய தலைமையிலேதான் ஜெயிலரைச் சுற்றித் தோழர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் அவர்களுக்கு சமாதானம் கூறுகிறார்.
“அரசாங்க உத்திரவை எம்மால் மாற்ற முடியாது. காலையில் கஞ்சி தரும்படியாகத்தான் எங்களுக்கு சட்டமிருக்கிறது - நானென்ன செய்வது”
இது ஜெயிலர்!
“அரசியல் கைதிகளுக்கு தனிச் சலுகை கேட்டவர்கள் - இப்போது ஆளவந்தவுடன் அதை மறுக்கலாமா?”
இது தோழர்கள்!
ஜெயிலர் சிரிப்பைத்தான் பதிலாகத் தரமுடிந்தது
நான் குறுக்கிட்டேன் - நாராயணசாமியும் என்னுடன் ஒத்துழைத்தார்.
“அரசாங்கத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாதென்றுதானே அறப்போர் துவங்கி யிருக்கிறோம் - ஆனால் மரத்தையே ஆணிவேரோடு பிடுங்கும் ஆரம்பப் போராட்டத்தில் குதித்திருக்கிற நாம், இந்தச் சிறுசிறு கிளைகளைப்பற்றிக் கவலைப்படக்கூடாது - கஞ்சியை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றேன்.
தோழர்கள் உடனே பறந்தனர் - கையினில் தட்டுடன்!
அந்த கண்ணியம் நிறைந்த கட்டுப்பாடு கண்டு ஜெயிலர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
புதிதாகப் போன எங்களுக்கு எங்கே தட்டு என்று கேட்டோம்!
உங்களுக்குக் கஞ்சித் தட்டு என்றார்கள்.
புரியவில்லை முதலில்!
நாங்கள் வருவது முன்பே தெரிவிக்கப்பட்டாததால் காலை ஆகாரம் எங்களுக்குத் தயார் செய்யப்படவில்லையாம்! “அரியலூர்” எங்களுக்குக் கடைசியாகப் பொழிந்த கருணை அதுபோலும்!
15ம் தேதி காலையிலே சாப்பிட்டவர்கள் 18ந் தேதி பிற்பகல்தான் ஒரு பட்டை வெள்ளச் சோற்றைக் கண்டோம்.
“அச்சடித்த சோறே! அவுன்ஸ் குழம்பே! வேப்ப மரத்து நிழலே! வெல்லம் போட்ட கடலையே! வெண்ணை எடுக்கா மோரே!”
இது அந்த ராஜ்யத்தின் நாட்டுப் பாடல்! அங்கே நாங்களும் பிரஜைகளானோம். முன்னூறு பேராயிருந்தவர்கள் இரண்டொரு நாட்களில் ஐநூறைத் தொடுமளவுக்கு - நானூறைத்தாண்டிய தொகையினரானோம்.
நாங்கள் அங்கே ஒரு புதிய ராஜ்யத்தை அமைத்து விட்டோம். அந்த ராஜ்யம் இரண்டுமாத காலம் மிக அற்புதமாக நடைபெற்றது. அதற்குப் பிறகு நாறுகி- ஐம்பதாகி - ஐந்தாக மாறிவிட்டோம்.
இரண்டு மாதம் நடைபெற்ற எமது ராஜ்ய நிர்வாகத்தை சொல்லாமலிருக்க முடியவில்லை. முதலில் ராஜ்ய அமைப்பைக் கூறுகிறேன்.
C. P. பிளாக் எனப்படும் - நாங்கள் அடைப்பட்டிருந்த இடம் நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு பேருக்குமேல் அடைக்கப்பட்டிருந்தோம்.
நான்கு பகுதிகளும் - தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னடம் என்ற திராவிடக் கூட்டாட்சியை எங்களுக்கு உணர்த்தியது.
வேறு பிளாக்கிலிருந்து கைதிகள் யாராவது வர வேண்டுமானால் அனுமதியின்றி வரமுடியாது - அதுபோல இந்த பிளாக்கிலிருந்தும் போகமுடியாது - நமது திராவிட நாட்டிலும் இப்படித்தான் அனுமதி முறை அமைக்கப்படும். அங்கே எல்லோருக்கும் ஒரேவிதமான உணவு. நமது திராவிட நாட்டிலும் - அளவு - சுவை - தரம் - ஆகியவை இப்படி இல்லாவிட்டாலும் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்படியான வசதியிருக்கும். பட்டினி கிடப்பது அங்கே பெரிய குற்றம்.
நமது திராவிடத்திலும் யாரும் பட்டினியால் மாளமுடியாது. சிறைச்சாலையில் “மாதிரி திராவிட நாட்டில்” இருந்தவர்கள் எல்லாம் அடிமைகள் - கைதிகள்! உண்மை திராவிட நாட்டில் அடிமைகள் இருக்கமாட்டார்கள் - சிறைச்சாலையில் அடிமைத்தனமிருந்ததற்குக் காரணம் - ஜெயில் அதிகாரம் என்ற மத்திய சர்க்கார் இருந்தது!
நம்முடைய திராவிட நாடு இந்திய மத்திய சர்க்காரின் கீழ் இருக்காது! ஆகவே அடிமைத்தனமும் இருக்காது!
சிறையிலே அந்த மத்திய சர்க்கார் தேவை!
காரணம் அது சிறை பூமி!
திராவிடத்திற்கு தேவையில்லை வடநாட்டு மத்திய சர்க்கார்!
காரணம் இது சுதந்திர பூமி!
திருச்சி சிறையில் எங்கள் திராவிட ராஜ்யம் ஆரம்பமாகிவிட்டது. அந்த ஆரம்ப வேலைகளில் தோழர் ராமதாஸ் என்பவர் என்னுடனிருந்து துணைபுரிந்தார்.
ஒவ்வொரு பிளாக் - அதாவது சராசரி நூறுபேருக்கு ஒரு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாலு துணைத் தலைவர்களுக்கும் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நானூறு பேரும் வசதியாகக் குளிப்பதற்கும், குடிப்பதற்குமான தண்ணீரைப்பெற “ஜல ஸ்தாபன மந்திரி” ஒருவர் நியமிக்கப்பட்டார். உணவு மந்திரி ஒருவர். கடிதப் போக்குவரத்து உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்து ஜெயில் அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ள ஒரு உள்நாட்டிலாகா மந்திரியும் உண்டு.
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுதல், தனி உணவுகளை நோயுள்ளவர்களுக்குப் பெற்றுத் தருதல் போன்றவைகளுக்கு சுகாதார மந்திரி யொருவர். மக்கள் மன்றம் அமைத்தல் - கூட்டுதல் - கலைத்தல் - தலைமை நிலையத்திலிருந்து - இல்ல - ஆட்சி பீடத்திலிருந்து வெளியாகும் அறிக்கைகளை உடனுக்குடன் அறிவித்தல் - முதல்வர் எனப்படும் தலைவருக்கு ராஜ்ய நிலைமையை எடுத்துரைத்தல் - ஆகிய காரியங்களுக்காக ஒரு பிரதம செயலாளர் உண்டு.
ஒவ்வொரு பிளாக் தலைவர்களுக்கும் ஒரு துணைத் தலைவர் உண்டு.
பிளாக் தலைவர்கள் ஒவ்வொருவரும் நூறுபேரைக் கட்டிக் காத்தல். அவர்களுக்கு ஆவன செய்தல். இது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டும்.
மக்கள் மன்றம் - பேச்சு மன்றம் என்றும் அழைக்கப்படும். அது நாள்தோறும் கூடும். மன்றத்தின் ஒவ்வொரு அலுவலாளரும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களே தான்! மன்றத்தின் அனுமதியோடு பொறுப்பேற்று பணியாற்றுகிறவர்கள்.
அவர்கள் வருமாறு :-
தலைவர் - கருணாநிதி
துணைத் தலைவர் - மன்னை நாராயணசாமி
முதல் பிளாக் தலைவர் - பேராவூரணி அடைக்கலம்
துணை - வடிவேலு
இரண்டாம் பிளாக் தலைவர் - தஞ்சை பட்டு
துணை - பக்கிரிசாமி கிருஷ்ணன்
மூன்றாம் பிளாக் தலைவர் - மாயவரம் கிட்டப்பா
துணை - வள்ளுவதாசன்
நாலாம் பிளாக் தலைவர் - ராமசுப்பையா
துணை - கோபால்சாமி
உணவு மந்திரி - ராம சுப்பையா
உள்நாட்டிலாகா - முல்லை சத்தி
சுகாதார மந்திரி - புகாரி சாகிப்
‘ஜல ஸ்தாபன’ மந்திரி - அய்யநல்லூர் வேலு
பிரதம செயலாளர் - ஜெயங்கொண்டம் வேணு
மேற்கண்டவாறு இலாக்காக்கள் பிரிக்கப்பட்டு எல்லோரும் பதவியேற்றனர். இதில் மூன்றாம் பிளாக் தலைவராக தோழர் மணி நான்கு நாட்கள் பணியாற்றி - பிறகு வழக்கு சம்பந்தமாக நாகை சென்றுவிட்டார்.
இலாகா சம்பந்தப்பட்டவர்கள் விபரம் :-
தலைவர் :—
கருணாநிதி - இவர் திராவிட முன்னேற்றக் கழகத்துப் பிரசாரகர். இந்த நூலின் ஆசிரியர். வயது ஏறத்தாழ முப்பது. தொண்டனை இருந்தே தொண்டு செய்வதில் விருப்பமுள்ளவர். இதிலிருந்தே கொஞ்சம் தற்புகழ்ச்சிக்காரர் என்பதும் உள்ளங்கை—நெல்லிக்கை போல் விளங்கும்!
துணைத் தலைவர் :—
நாராயணசாமி - மன்னார்குடியைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பு உடலும் - இளகும் நெஞ்சும் பெற்றவர்.
முதல் பிளாக் தலைவர் :—
அடைக்கலம் - பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நமக்கோர் படைக்கலம். பேராவூரணி குழந்தையென்று ஒரு பெரிய ஆள் இருக்கிறார். அவருடைய பாசறையிலே தயாரான வாட்களில் ஒன்றுதான் அடைக்கலம். பழங் காலத் திராவிட மக்களின் வீரத்தையும் - வேகத்தையும் காணவேண்டுமானால் பேராவூரணி செல்லலாம். அங்குள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் செய்துகாட்டும் உடற்பயிற்சி - சிலம்பக் கலைகளைக் காணலாம். செயலாற்றும் சிங்கம் அடைக்கலத்தின்
ஆர்வமிக்க உழைப்பையும் அன்பர் வடிவேலுவின் அனுபவ சாதனைகளையும் கண்டு ஊக்கம் பெறலாம்.
இரண்டாம் பிளாக் தலைவர் :—
தஞ்சை பட்டு! சிட்டாகப் பறந்து செயலாற்றும் தஞ்சை செயலாளர். பயந்த சுபாவமும் - பணிபுரியும் ஆர்வமும் நிரம்பப் பெற்றவர். அடக்கம் - அமைதி - கண்ணியம் - இவைகளைக் கட்டிக்காக்கும் பண்பு கொண்டவர்.
மூன்றாம் பிளாக் தலைவர் :—
மாயவரம் கிட்டப்பா! முட்டவரும் பகைவரை எட்டப்பா என்று சொல்லும் துணிவும் - கட்டுப்பாட்டுக்குப் பணிந்து நடக்கும் தன்மையும் கொண்டவர். மாயவரம் கழகத்து செயலாளர். இளைஞர். எழுச்சிக்காளை இன உணர்ச்சி முரசு!
நாலாம் பிளாக் தலைவர் :—
ராம சுப்பையா - உணவு மந்திரி என்றும்தான் சிறையிலிருந்தவர்களுக்குத் தெரியும். விளக்கத் தேவையில்லை. உழைப்பின் உரு!
சுகாதார மந்திரி :—
புகாரி! அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர். காங்கிரசின் அனுதாபியாக இருந்து கழகத்திற்கு வந்தவர். வைத்தியத் தொழிலில் அனுபவம் பெற்றவர். பொறுமைக்கோர் எடுத்துக்காட்டாக இங்கு நடந்து கொண்டார்.
உள்நாட்டு இலாகா :—
முல்லை சத்தி - முல்லைக்கொம்பை வடிவேலு அவர்களின் இளவல். கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்பவர். கொஞ்சம் முன்கோபக்காரரே தவிர தோழமைக்கோர் பிசிரானது.
ஜலஸ்தாபன மந்திரி :—
அய்யநல்லூர் வேலு. நாகை வட்டாரத்தில் நல்ல தொரு தொண்டர். அடக்கமான நடத்தை. கொள்கையிலே அடக்கொணா ஆர்வம். மெலிந்த உடல். மென்மையான மனம் - இயக்க நலனுக்கு செலவிடப்படும் இளமை.
பிரதம செயலாளர் :—
ஜெயங்கொண்டம் வேணு. அலுப்பில்லாமல் உழைக்கும் வைரக் கட்டை. ஒவ்வொரு மூச்சும், பேச்சும், கழகம் - கழகம் என்றே ஒலிக்கும். பம்பரம்போல் பணிபுரியும் காளை. போட்டோஸ்டுடியோ வைத்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு கட்சிப் பணியை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். எந்த வேலையும் - சொந்த வேலையென எண்ணும் சோர்விலாளன். சுயமரியாதை இளைஞர்.
இத்தகைய அருமைமிகு செயற்குழு, சிறைச்சாலை ராஜ்யத்திலே பதவியேற்றுப் பணிபுரியத் தொடங்கி விட்டது.
உணவு பரிமாறுதல் - தேவைகளைக் கேட்டல் - சிகிச்சைக்கு அனுப்புதல் - முதலிய எல்லாக் காரியங்களையும் சிறைச்சாலை வார்டர்கள் கவனித்து வந்தார்கள். எங்கள்
ராஜ்யத்தில்மட்டும் மேற்கண்ட எல்லா பொறுப்புகளையும் எமது மந்திரி சபையும் - மக்கள் மன்றமும் ஏற்றுக் கொண்டது.
எமது ராஜ்யத்தின் ஒரு நாள் நடவடிக்கைகளை முதலில் விளக்குகிறேன். சிறப்பான நிகழ்ச்சிகளை தனித் தனித் தலைப்புகளின் மூலம் பிறகு விவரிக்கின்றேன். காலை ஆறு மணிக்கு எங்கள் கூண்டுகளின் கதவுகள் திறக்கப்படும். காலைக்கடன்களை முடித்துவிட்டு கஞ்சி உணவுக்கு பிரஜைகள் தயாராகிவிடுவார்கள்.
நான்கு பிளாக் தலைவர்களும் வேப்பமரத்தடியில் கூடி இன்றையதினம் யார் யார் கஞ்சி பரிமாறுவது - எந்த பிளாக்கிலிருந்து ஆரம்பிப்பது என்பது போன்ற அலுவல்களை ஆலோசிப்பார்கள். அதற்குள் கஞ்சி அண்டாக்கள் வந்துவிடும். அந்த பெரிய அண்டாக்கள் அங்குள்ள கிரிமினல் கைதித் தோழர்கள்தான் தூக்கிவர வேண்டும். அவர்கள் தான் தூக்கிவருவார்கள். ஒவ்வொரு பிளாக் பிரஜைகளும் ‘க்யூ’ வரிசையில் நின்றுகொண்டு கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள்.
கஞ்சி ஒரு நாளைக்கு கெட்டுப்போயிருந்தால் உடனே தலைவரிடம் நாலு பிளாக் தலைவரும் அறிக்கை சமர்ப்பிப்பார். தலைவர் அதை தலைமை வார்டரின் கவனத்திற்குக் கொண்டு போவார். ஜெயில் அதிகாரம் உடனடியாக குறையைக் கவனிக்க முயற்சி எடுத்துக்கொள்ளும்.
கஞ்சி முடிந்த பிறகு - குளிக்குமிடத்தில் பிரஜைகள் கூடுவர். ஐம்பதுபேர்தான் ஏக காலத்தில் குளிக்க வசதியுடைய தண்ணீர்த் தொட்டி. அதில் நானூறுக்கு மேற்பட்டவரை செளகரியமாகவும் - எல்லோரும் குளிக்கக்
கூடிய அளவுக்கு தண்ணீரை சேதப்படுத்திவிடாமலும், குளிக்கவைத்திடும் பொறுப்பை ஜலஸ்தாபன மந்திரி தானே நேரில் நின்று கவனிப்பார். ஒவ்வொருவரும் எத்தனை குவளைகள் ஊற்றிக்கொண்டார்கள் என்று கணக்குப் பார்த்து - அளவுக்கு மேலாகிவிடாத நிலையில் - அங்குமிங்கும் ஆடியோடி, கட்டுப்படுத்தி - தண்ணீர் தட்டுப்பாட்டில்லாமல் பார்த்துக்கொள்வார்.
“நீர்மேல் நடக்கலாம்” என்று பாட்டு படித்திருக்கிறோம். அப்படி நடந்து காண்பித்தவர் தோழர் வேலு. ஆம் - ஜலஸ்தாபன மந்திரி! தண்ணீர்த் தொட்டியின் மேலேயே கால்முதல் பிற்பகல் 3 மணி வரையிலே நடை பழகுவார். அவர் போட்டிருந்த பனியனுக்கு உட்பட்ட பாகமெல்லாம் சிகப்பாகவும் - மற்ற இடமெல்லாம் கருப்பாகவும் மாறி - ஆளே இரு கலர் மனிதனைத் தோன்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்; அவப்பட்ட கஷ்டத்தை!
கஞ்சிக்கும் - குளியலுக்கு மிடையிலே - பிளாக் வாசல்களில் ஒரு ஒலி கிளம்பும். “ஆஸ்பத்திரி! ஆஸ்பத்திரி!” என்ற ஒலி! அதுபோன்ற சப்தம் நமது ஊர்த் தெருக்களிலே கிளம்பினால் “சரிதான் - சான்ஸ் எதுவும் கிடைக்காமல், யாரோ ஒரு டாக்டர் ஆஸ்பத்திரியை விலே கூறுகிறாராக்கும்” என்று நினைப்போம்.
சிறை ராஜ்யத்திலே வரும் இந்த ஒலிவேறு - சுகாதார மந்திரி புகாரி சாகிப் - தன்னுடைய தேன்கூடு வடிவமுள்ள தாடியைத் தடவியபடி “ஆஸ்பத்திரிக்கு யாராவது வருகிறீர்களா?” என்று கூவுவார். அவர் ஒரு ஐம்பது பேரையாவது தினந்தோறும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்புவார்.
பத்துமணி சுமாருக்கு “சுதேசமித்திரன்” ஏடு வரும். அந்தப் பத்திரிகையிலே ஏற்கனவே இருக்கிற இருட்டடிப்பு போதாதென்று - இங்கே வேறு முக்யமான செய்திகளிலே தாரைப்பூசி அனுப்புவார்கள். அண்ணா சிறைப்பட்டார் என்ற செய்தியை ‘மித்திரன்’ மூலமாகப் பார்த்து எல்லோரும் ‘உண்ணா விரதம்’ இருந்தோமாம்! அதற்காக எந்த ஊரிலே - எந்த நாட்டிலே - யார் சிறைப்பட்டாலும் அந்தச் செய்திக்கு தார் பூசிவிடுவார்கள்.
நான்கூட விளையாட்டாகக் கேட்டேன்;
“இப்படி தேவையற்றவைகளுக்குக் கூட தார் பூசுகிறீர்களே; கோதாவரியில் வெள்ளம் என்று செய்தி வந்தால் உடனே நாங்கள் அதைப் பார்த்து” - ஆகா கோதாவரியில் வெள்ளமா? அனுதாப உண்ணாவிரதம் இருப்போம்” என்று கூறினால் - பிறகு வெள்ளத்தைப் பற்றிய செய்திகளுக்கும் தார் பூசுவீர்களா?
“என்று! பதில் கிடைக்கவில்லை - அதற்கு! - ஒரு வகையில் எமக்கு மகிழ்ச்சி! இருட்டடிப்பு செய்யும் பத்திரிகைகளின் முகத்தில் தார் பூசவேண்டுமென்று பல நாளாக ஆசைப்படுகிறோம். அந்த அரியவேலையை - அரசாங்கத்தாரே தம் சொந்தப் பொறுப்பில் செய்து கொள்வதற்காக நன்றி தெரிவித்துத்தான் வேண்டும்.
வந்த பத்திரிகையை எடுத்துக்கொண்டு பிரதம செயலாளர் வேணு ஓடுவார். நான்கு பிளாக்குகளுக்கும் பத்திரிகை சென்று அதைப் பத்திரமாக எடுத்துவரும் வேலையை அவர் துரிதமாகக் கவனிப்பார்.
பிற்பகல் ஒரு மணிக்குள்ளாகவே - அநேகமாக - உணவு வந்துவிடும் - வெள்ளித் துணியால் மூடப்பட்டு - நீண்ட கட்டில் எனப்படும் ஒன்றை - நாலுபேர் தூக்கி வருவார்கள். முன்னே சட்டி வரும். அதிலே குழம்பு வரும். பெரிய சட்டி. இப்படி நாலைந்து பெரும் சட்டிகளும்; நாலைந்து கட்டில்களும், ஒரு அண்டாவில் மோருமாக எங்கள் ராஜ்யத்து உயிர் வாழும் பொருள் - உணவு என்னும் தண்டனை வந்துசேரும். சிறையிலே தாப்படும் பெரிய தண்டனை உணவுதான்!
சிறையிலே பெருங்குற்றமெனக் கருதப்படுவது; அதை சாப்பிட மறுப்பதுதான்!
பிளாக் தலைவர்களும் - துணைத் தலைவர்களும் - சோறு - குழம்பு - மோர் - ஆகியவைகளை வரிசை வரிசையாக வந்து வாங்கிப்போகும் பிரஜைகளுக்கு வழங்குவார்கள். அளவு சோற்றுடன் - அளவுக் களியும் தரப்படும். இரும்பு மணம் கமழும் - பரங்கிக்காய் - கீரைகள் - கீரைத்தண்டு - முதலிய சிரஞ்சீவிப் பொருள்கள் தலை நீட்டிப் பார்க்கும் - இதன் பெயர்தான் குழம்பு.
புதன் சனிக்கிழமைகளில் துவரை தருவார்கள். அளவுப்படி! அதுதான் எங்கள் நாட்டுக்கு மாமிச உணவு.
சாப்பாடு முடிந்ததும் சிறிதுநேரம் களைப்பாறுபடலம். உடனே உள் நாட்டு இலாகா மந்திரி சத்தியின் வேலை துவங்கும். மாதம் இரண்டு முறை கார்டு கொடுப்பார்கள். அவைகளைக் கணக்குப் பார்த்து - எழுதியவைகளை வாங்கி அதிகாரிகளிடம் அனுப்பி - எழுதாதவைகளை எழுதச் சொல்லி - கார்டு வராதவர்களுக்கு கார்டு வாங்கிக் கொடுத்து - அந்த அலுவல்களைக் கவனிப்பார். புத்தகம் வேண்டுமென்பவர்களுக்கு புத்தகமளித்து
படித்தவைகளை வாங்கி கணக்கு சரிபார்த்து - வாசக சாலையில் ஒப்புவிக்க முயற்சி எடுத்துக்கொள்வார்.
இதற்குள் ‘இண்டர்வியூ’ வரும். சிறையில் உள்ள தோழர்களை சந்திக்க நண்பர்களோ-உறவினர்களோ-வருவர்.
அந்தத் தகவல் எடுத்துக்கொண்டு வேணு ஓடுவார். நானூறு பேரில் அவர்களை சிரமப்பட்டு கண்டு பிடித்து ‘இண்டர்வியூ’க்கு அனுப்பிவைப்பார். புகாரி சாகிப்பின் ‘ஆஸ்பத்திரி’ - கூவல் மீண்டும் கிளம்பும். மாலை 4 மணிக்கு மக்கள் மன்றத்தை கூட்டும் பொறுப்பை வேணு சரிவரச் செய்து முடிப்பார். அந்தந்த பிளாக் தலைவர்களும் - தங்கள் தோழர்களுடன் மக்கள் மன்றத்திற்கு வந்து சேருவார்கள்.
மக்கள் மன்றம் - நாள்தோறும் - தலைவரின் - தலைமையிலே தொடங்கும். சிறைச் சாலையில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் - கழகத்தின் கடமை - கட்டுப்பாடு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். தினம் - ஒரு பொருளின் மீது பல தோழர்கள் உரையாற்றுவார்கள். இறுதியில் தலைவரின் முடிவுரையுடன் மன்றம் கலையும். சிறு குற்றம் செய்தவர்களும் - மன்றத்தில் விசாரிக்கப்பட்டு - பெரும்பான்மையோர் எண்ணத்திற்கு இணங்க - மன்றத்தின் முன்பு மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள்.
மாலை 5-30 மணிக்கெல்லாம் இரவு உணவு வந்து விடும். இப்போது சோளக்களி வராது. அரிசிச்சோறு
சிறிது அளவில் பெரிதாய்விடும். மோர் வராது. கடலை உருண்டை வரும். குழம்பு உண்டு. சாப்பாடு முடியும்.
ஆறுமணிக்கெல்லாம் மூன்று மூன்று பேராக கூண்டுகளில் அடைக்கப்படுவார்கள். நாங்கள் ‘பி’ வகுப்புக்காரர்கள் தனித் தனி ஒவ்வொருவராகத்தான் அடைக்கப்படுவோம்.
சில கூண்டுகளிலேயுள்ள ஆண் குயில்கள் பாட ஆரம்பிக்கும்! அந்த மகுடித் தொணிகேட்டு பாம்புகள் வந்துவிடும் - பாம்புகளுக்குவேறு ‘பீடி’ இருந்தால் தேள்களேயாவது அனுப்பிவைக்கும்.
அந்தத் தேள்கள் நமது தோழர்கள் பலரை முத்தமிட்டுமிருக்கின்றன. இரவு பத்து மணிக்கு அநேகமாக எமது ராஜ்யம் அடங்கிவிடும்.
கணக்கு வருது!
ஆறு மணிக்கு தோழர்கள் அடைக்கப்பட்டதும் - கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்க ‘ஹெட்வார்டர்’ எல்லா பிளாக்கிற்கும் சென்று சுற்றிப்பார்த்து வருவார். கடைசியாக எங்கள் நாலாம் பிளாக்கிற்கு வருவார். உம் - கணக்குவந்துவிட்டது. என்போம் நாங்கள்!
கெடிகாரம் போவது!
சிறைச்சாலை முழுதும் பல இடங்களிலே சுவர்களில் ஒரு வகையான சாவி பொருத்தப்பட்டு - அந்த இடங்களுக்கு ஒரு மணிக்கு ஒருதரம் வார்டர் சென்று - தன்னிட
முள்ள கெடிகாரத்திற்கு அந்த சாவி போட்டுவிட்டு வரவேண்டும். அந்த வார்டர் எங்கும் நிற்கமுடியாது. சுற்றியபடியே காவல் காக்கவேண்டும். நின்றால் - அவ்விட முள்ள கெடிகாரம் காட்டிக் கொடுத்துவிடும். அவர் இரவு நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் போய்க் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்து நாங்கள் மணி தெரிந்துகொள்வோம். அதற்காகத்தானே என்னமோ - சிறையில் அவர்போனால் - “கடிகாரம் போவது” என்கிறார்கள்!
- நாங்களும் “கணக்கு வருது!” “கெடிகாரம் போவது” என்றுதான் சொல்லுவோம்.
இப்படி எங்கள் ராஜ்யம் நடந்துகொண்டிருக்கும் போதுதான் சென்னையில் ஆச்சாரியார் வீட்டு முன் மறியல் அறப்போரில் தலைமை வகித்த தோழர்களான - போர்ப்பலகண்ட புலிநிகர் நண்பர் முனிசாமி, வீரமிகு மறவர் வி. டி. அண்ணாமலை, ஈரோடு தந்த இளஞ்சிங்கம் எஸ். அப்பாவு, காஞ்சிச் செல்வர் களம் பல கண்டு - நம் உள்ளமெலாம் நிறைந்த காமவீரர் C. V. M. அண்ணாமலை, செயலாற்றும் சிங்கம் சென்னை A. K. சாமி, வடாற்காடு மாவட்ட செயலாளர் - வன்னெஞ்சர் இடுப்பொடிக்கும் வாய்மையாளர் A.
L. C. கிருஷ்ணசாமி, சமருக்கஞ்சா சம்மந்தம், இன்மொழிபேசும் இன்மொழியன், செருமுனைக் கோர் சிறப்புறு படையாம் செயசந்திரன், நாசம் எதிர்க்கும் நடராசன், அயர்விலாத் தொண்டர் அரசு ஆகியோரும் மூன்றுநூறுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளர் அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், மதி, நடராசன் ஆகிய ஐவரும் நிபந்தனையின்றி சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது.
டால்மியாபுரம் போராட்டம் - புதுக்கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டம் - ரயில் நிறுத்தப் போராட்டம் - முதலியவற்றை தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுவந்தது.
அந்த வழக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை தண்டிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெறுவதுங்கூட - பெரியதும் நமக்கு பயன்பட்ட வழக்காகவே இருந்தது. நம்மைப்பற்றிய முழுவிபரங்கள் பொதுமக்களும் - மாற்றுக்கட்சிகளும் புரிந்துகொள்ளக் கூடிய விதத்திலே வழக்கு அமைந்தது.
லட்சத்துக்குமேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும் - கட்டுப்பாடு - கண்ணியம் - அமைதி - முதலியவை தி. மு. க. வின் லட்சியம் என்பதும் - ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளுடைய பெரும் இயக்கம் என்பதும் - தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக நிற்கும் மாபெரும் தேசியக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்பதும் - அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் சாட்சியங்களின் வாயிலாகவே நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விது தொடரப்பட்ட வழக்கு இத்தகைய கணிசமான புள்ளி விபரத்தை மக்கள் மன்றத்திற்குத் தந்திட உதவியது.
நீதி மன்றத்திலே ஐவரும் தந்த வாக்குமூலங்கள் நமது கழகக் கோட்பாடுகளை நாட்டுக்கு அறிவிக்கும் முரசங்களாக அமைந்தன.
இனிமேல் நமது கழகத்தோழர்கள் போராட்டத்திலே ஈடுபட்டால் - சிறைச்சாலைக்கு செல்வது என்பதை மட்டும் குறிக்கோளாகவைக்கக்கூடாது. என்ன குற்றம் செய்தோம்! என தண்டனை பெறவேண்டும் - என்பதையும் வாதித்து - அதன் பிறகும் தண்டனை தந்தால் - அப்பீல்களுக்குப் பிறகும் தண்டனை தொடர்ந்தால் - “சரி இனி மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்கட்டும்” - என்ற ஆறுதலோடு சிறைக்குச் செல்லவேண்டுமே தவிர உடனடியாக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நம்மை அர்ப்பணித்துவிடக் கூடாது - என்ற உண்மையை இவ்விது தொடரப்பட்ட வழக்கு நமக்கு ஒரு பாடமாகத் தந்திருக்கிறது என்று கூறச்சொல்லலாம்.
வழக்கு நடைபெறுவதுதான் - நாமும் எதிர்த்து வாதாடினால்தான் - நல்ல தீர்ப்பு கிடைப்பது ஒருபுறமிருந்தாலும் கூட - நாட்டுக்கு நமது நிலையை விளக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வாய்ப்பை இனி தவறவிடக்கூடாது என்பது என் தாழ்மையான தனிப்பட்ட எண்ணமுங்கூட!
அந்த எண்ணத்திற்கு வித்து - ஐவர் வழக்கினில் ஏற்பட்ட நல்ல விளைவுதான்!
அம்படிப்பட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வழக்கும் ஒருவாறு முடிவுற்றது.
கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஐவரும் மூன்றுமாத வெறுங்காவல் தண்டனை பெற்றார்கள்.
செப்டம்பர் திங்கள் முதல் நாளிலேதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூண்டி விட்டார்களாம் ஐவரும்! ஆகவே கூண்டிலிடப்பட்டார்கள்.
தூண்டிவிட்டது யார்? கேள்விக்கு சரியான பதில் எது? மக்கள் மன்றம் சுட்டிக் காட்டுகிறது தூண்டிவிட்டவர்கள் யார் என்று! ஆனால் அவர்கள் வெளியிலே உலவுகிறார்கள்!!
கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம். சரி- ஒத்துக்கொள்வோம்! கிளர்ச்சி செய்யும்படி கழகத்தைத் தூண்டிவிட்டது யார்?
‘நான்சென்ஸ்’ என்று கூறி தமிழர் துடிப்பைத் தூண்டிவிட்டது யார்?
கல்லக்குடி என்ற பெயரை அழித்து தமிழரின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது யார்?
புதிய கல்வித் திட்டத்தைக்கொண்டு வந்து நாட்டெங்கும் புகைச்சலைத் தூண்டிவிட்டது யார்?
தொழிலாளர்களுக்குச் சொந்தமான ஒரு பெரும் ஆலை இருக்கிறது. அதிலே சர்க்கரை மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அது கண்டு ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல். அந்த ஆலைக்குத் தீவைக்கும்படி சில ஆட்கள் அனுப்புகிறார்கள். தீ வைக்கப்படுகிறது. ஆலை எரிகிறது! அதுகண்ட பொதுநல ஊழியர்கள் புறப்படு
கிறார்கள். தண்ணீரைக் கொட்டி - ஆலையின் நெருப்பை அணைக்கிறார்கள். நெருப்பு அணைகிறது. மறுநாள் பொழுது விடிகிறது. தீவைக்க ஆட்கள் அனுப்பிய தீயவன், தொழிலாளர்களிடம் போகிறான்.
“பார்த்தீர்களா, பாட்டாளி நண்பர்களே! நீங்கள் அடுக்கி வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளையெல்லாம் இந்தப் பொதுநல ஊழியர் என்னும் பாவிகள் தண்ணீரை ஊற்றிக் கரைத்து விட்டார்கள் - ஆகவே அவர்கள் மீது உங்களுக்காக நான் வழக்கு போடப் போகிறேன்” என்று காட்டிக்கிறார்கள்.
தீ வைத்து ஆலையை சாம்பலாக்க எண்ணியவன் சர்க்கரை மூட்டையை கரைத்துவிட்டார்கள்- அணைக்க வந்தவர்கள் - ஆகவே அவர்கள் குற்றவாளிகள் என்கிறான்!
வடநாட்டு ஏகாதிபத்யம் - ஆணவப் பேச்சு-புதுக் கல்வித்திட்டம் - என்ற நெருப்புகள் வாரி இறைத்தார்கள். நாடு சாம்பலாகிவிடுமே என்று எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம். பொதுஜன செளகர்யம் என்ற சர்க்கரை மூட்டையை இவர்கள் கரைத்துவிட்டார்கள் என்று வழக்கு போட்டுத் தண்டித்தது அரசாங்கம்!
தீ மூட்டியின் ஸ்தானத்திலேயிருக்கும் அரசு! அணைப்பவரிடத்திலே இருக்கும் நாம்! சர்க்கரை மூட்டை போன்ற பொதுஜன வசதி! இது போன்ற சர்க்கரை மூட்டைகளே ஏராளமாகத் தயாரிக்கக்கூடிய ஆலை போன்ற நமது நாடு!
தீர்ப்பு இப்போது வழங்கவேண்டும், தீர யோசித்த பிறகு!
சட்டத்தைக் கையிலே பிடித்தவர்களால் முடியாது! அது அவர்களுக்கு சங்கடமான வேலை! நேர்மையை நெஞ்சிலே படைத்தவர்களால்தான் முடியும் - அவர்கள் நீதி மன்றம் அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது!
திடீர் திடீர் எனத் தோன்றியிருக்கிறது அத்தகைய நீதி மன்றம் - தீ மூட்டிகள் தோன்றியிருந்த நாடுகளிலே!
சிறை சென்றவர் செங்கோலோச்சுவதும் செங்கோ வேந்திகள் சிறை செல்வதும் - சகஜமாகிவிட்ட நாட்களிலே நாம் வாழ்கிறோம்.
சிறையிலே யிருக்கும் போதுதான் அந்த செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
