உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

ஆறுமாதக் கடுங்காவல்

கட்டுரைகள் 3 · 3 / 3

ஈரான் பூமியிலே - ஷா ஓட்டம் - முசாதிக் வெற்றி - என்ற செய்தி முதல்நாள் வந்தது! மூன்றாம்நாள் முசாதிக் கைது - ஷா ஆட்டம் - என்ற செய்தி கிடைத்தது!

கர்ச்சித்துக் கொண்டிருந்த காஷ்மீரத்துச் சிங்கம் - ஷேக் அப்துல்லா - முதல்நாள் பிரதமர் - மறுநாள் கைது - சிக்கலைத் தவிர்க்க முடியாத சிலோன் பிரதமர் சேனநாயகா - சிகிச்சையும் ஓய்வும் தேவையென்று- அரசு கட்டில் விட்டு இறங்கிவிட்டார்!

இப்படி சுற்றியுள்ள நாடுகளிலே சூறாவளி அடிக்கிறது. காண்கிறோம் நாம்! ஆனால் இங்கு குதாக்கள் சிலர் அந்த சூட்சமத்தை உணராமல் இந்த சாம்ராஜ்ய அதிகாரம் சதமென எண்ணியிருக்கிறார்கள்!

நல்ல மரங்களிலேயே புல்லுருவி பாயும்போது- இந்தக் கள்ளிக்காடுகளா இருந்து வாழப் போகின்றன?

அந்த நம்பிக்கை நிறைந்த ஆறுதலோடுதான் அண்ணாவும் ஐயாயிரவரும் சிறைப்பட்டுள்ள கொடுமையை ஒருவாறு சமாளித்துக்கொண்டோம் - சிறையிலிருந்தபடியே!

இனி எமது ராஜ்யத்தின் நிலைமைகளைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம்.

சிறைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதிகளும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா?

சலவைசாலை உண்டு - தொழிற்சாலை உண்டு - பள்ளிக்கூடம் உண்டு - தோட்டங்கள் உண்டு - என்றெல்லாம் படித்தீர்களல்லவா? அவைகளைப்பற்றி முதலில் சிறிது விளக்குகிறேன்.

சலவைசாலை இருக்கிறது என்பது உண்மைதான்.

சலவைசாலை யென்றதும், எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் என்றுதானே நினைக்கிறீர்கள் - அதுதான் தப்பு!

சினிமாப் படத்திலே சலவை சாலை யொன்றைக் காட்டி அதிலே ஏராளமான துணிகளையும் வெளுக்கிறார்கள் என்பதைக் காட்டும்போது - எப்படி நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமோ; அதுபோலத்தான் சிறையிலுள்ள சலவை சாலையையும் பார்த்து ரசிக்கலாம். அங்கே எல்லாக் கைதிகளின் ஆடைகளையும் சலவை செய்ய மாட்டார்கள். காண்விக்ட் வார்டர் உடைகள் - மருத்துவ மனைத் துணிகள் - ‘பி’ வகுப்பு கைதிகளின் உடைகள் - ஆகியவற்றைத்தான் சலவை செய்து கொடுப்பார்கள்.

தொழிற்சாலை யிருக்கிறது - திருச்சி சிறையைப் பொருத்தவரையிலே நெசவுத் தொழில் முக்கியமானது. ஒவ்வொரு கைதியும் நாளொன்றுக்கு இத்தனை கஜம் தரவேண்டுமென்று உத்தரவு போடப்படுகிறது. திருச்சியில் தயாராகும் மருத்துவ மனைக்குத் தேவையான ‘பேண்டேஜ்’ துணிகள் பெரும்பாலும் - திருச்சி சிறைக்கு மட்டுமின்றி, மாகாண மெங்குமுள்ள சிறைகளுக்கும் - அரசாங்க மருத்துவ மனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோலவே மாகாணமெங்குமுள்ள சிறைகளில் முக்கியமான பொருள்கள் கைதிகளின் உழைப்பைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

சேலம் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும், இரும்பு சாமான்களும், பெரிய பாத்திரங்களும், அலுமினியத்தட்டு குவளைகளும் - மாகாணத்தில் உள்ள எல்லா சிறைகளுக்கும் உபயோகமாகின்றன. அதுபோக மீதியை அரசாங்க சம்பந்தப்பட்ட மற்ற ஸ்தாபனங்கள் பயன்படுத்துகின்றன.

கோவையில் உள்ள சிறையில் பெட்ஷீட்டுகளும், வார்டர் - போலீஸ் முதலியவர்களுக்கு உடுப்புத் துணிகளும் தயார்செய்யப்பட்டு, எல்லா சிறைச்சாலைகளுக்கும், மீதி அரசாங்க அலுவலாளர்களுக்கும் உபயோகமாகிறது. வேலூரில் தயாரிக்கப்படும் செருப்புகளும், பூட்ஸ்களும், அரசாங்க அலுவலாளர்களுக்கும் - எல்லா சிறைச்சாலைகட்கும் உபயோகமாகின்றன. ராஜமுந்திரி சிறைச்சாலையில் நல்ல கம்பளிகள் தயாரிக்கப்படுகின்றன.

இப்படி முக்கிய தொழில்களும் - சில்லரைத் தொழில்களும் - சிறைக் கைதிகளாலேயே செய்யப்படுகின்றன. சர்க்கார் அலுவலகங்களில் இருக்கின்ற மரச்சாமான்கள் பல கைதிகள் சிறைகளில் தயாரித்தவைதான்!

சென்னை சிறையில் அச்சகம் அமைக்கப்பட்டு - எல்லா சிறைகளுக்கும் தேவையான அச்சு வசதிகள் கவனிக்கப்படுகின்றன.

தண்டனை பெற்றுவந்துள்ள கைதிகள் உழைக்காமல் இருக்கவே முடியாது. தோட்டி வேலைகளையும் அவர்களில் சிலரே செய்யவேண்டும். ‘கூட்டு கேங்’ என்று ஒரு குழு, கைதிகள் நிறைந்ததாயிருக்கும். அவர்கள் சிறைச்சாலை முழுவதையும் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

குப்பையில்லாவிட்டாலும் கூட்டவேண்டும்.

அதற்குத்தான் ‘ஜெயில் வேலை’ என்று பெயர்.

பாறைகளில் முளைத்திருக்கும் புற்களையெல்லாம் பிடுங்கும்படி உத்திரவிடுவார்கள். மண்வெட்டி கொண்டு

விரைவில் செதுக்கியும்விடலாம். செதுக்கிவிட்டால் - பிறகு வேலையிருக்காதே; அதற்காக புல்லைப் பிடுங்கச் சொல்வார்கள். அவர்களும் மிகவும் சுறுசுறுப்பாக - ஆளுக்கொரு நுனிப் புல்லாகப் பிடுங்குவார்கள். அப்போதுதானே மறுநாள் அந்தப்புல் வளரும் - அவர்களுக்கும் வேலை இருக்கும். இதற்கும் ‘ஜெயில் வேலை’ என்றுதான் பெயர்.

சிறை நிர்வாகத்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகளும் - கைதிகளைக் கண்காணிப்பதற்காக வார்டர்களும் இருக்கிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் கைதிகளே செய்கிறார்கள்.

சிறையில் குற்றம் செய்யும் கைதிகள். சிறையதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். கால் விலங்கு பூட்டுதல் - கைவிலங்கு பூட்டுதல் - நிலவிலங்கு மாட்டி வெயிலில் நிற்கவைத்தல் போன்ற கொடிய தண்டனைகளும் கைதிகளுக்கு அளிக்கப்படுமாம்

சிறைக்குள்ளேயே திருடுபவர்கள்-வேலைக்குப் பயந்து ஒளிந்துகொள்பவர்கள் - சிறை சட்டங்களை மீறி நடப்பவர்கள் - உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மாடுபோல ஏற்றங்களை இழுத்து தண்ணீர்பாய்ச்சுகிற வேலைகளையும் அவர்கள் தான் செய்யவேண்டும். எவ்வளவு குளிர் அடித்தாலும் சரி; ஒரு கால் சட்டை - ஒரு அரைக் கை சட்டை - ஒரு குல்லா - இவைகளால் தடுத்துக் கொண்டுதான் படுத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் சிலர் பி. வகுப்பு கைதிகளாயிருந்தாலும் கூட கடுங்காவல்

தண்டனை பெற்றவர்களாதலால் - நாங்களும் குல்லா அணிந்து கொள்ளவேண்டும்.

காலையில் எழுந்ததும் நாலு நாலுபேராய் Fileல் உட்காரவேண்டும். சாப்பிடப்போனாலும் - குளிக்கப் போனாலும் - வேலை செய்யப்போனாலும் - காலை முதல் மாலை வரையில் பல தடவை Fileல் உட்கார்ந்திருக்கத்தான் போகவேண்டும். அப்படி Fileல் உட்காரத் தவறுவது பெருங்குற்றம். ஏன்; தப்பித்து ஓடுவதற்கு எத்தனித்த குற்றமாகக்கூட ஆகிவிடலாம்! அதற்கெல்லாம் பெருந் தண்டனைகள் கிடைக்கும். தினந்தோறும் குளிப்பதற்கு அனுமதியுண்டு.

ஆனால் அவர்களுக்குத் தரப்பட்ட உடைகள் வாரம் ஒருமுறைதான் அவர்கள் துவைத்து உடுத்துகிறார்கள். அது அவர்களின் சோம்பேறித் தனமோ - அல்லது சிறையின் உத்திரவு அப்படியோ தெரியவில்லை! சிறை அதிகாரிகள் நல்லவர்கள் - ஆகவே சிறை உத்திரவாயிருக்கமுடியாது! - மாதா மாதம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து முழுகலாம் - அதற்கு அளவு எண்ணெய் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உண்டு. அன்றைய தினம் வேலை கிடையாது. அதற்காக இஷ்டம்போல் சுற்றவும் முடியாது.

அவரவர்கள் இருப்பிடத்தில் இருக்கவேண்டியதுதான்.

நான், முதலில் சிறைச்சாலை - ஒரு கிராமம்போலிருக்கிறது என்று சொன்னதும், “பூ - இவ்வளவுதானா?” என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்போது கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறதல்லவா?

ஆனால் இத்தகைய சிறைச்சாலையைத் தங்கள் ஜீவிய பூமியாக்கிக் கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முதன் முறை சிறைக்கு வந்தவனுக்கு “வெள்ளைக் குல்லாய்” என்று பெயர்.

பலமுறை வந்தவனுக்கு “கருப்புக் குல்லாய்” என்று பெயர்.

சிறையில் கருப்புக் குல்லாய்களுக்கு குறைவேயில்லை.. நிறைய இருக்கிறார்கள்.

குழந்தை முதல் சிறையிலே இருக்கிற ஒரு கைதியை யும் திருச்சியில் கண்டேன்.

எங்கள் பிளாக் ‘ஹெட் வார்டர்’ அவனை தஞ்சை இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளியில் (Borstal School) சிறு பையனாக இருக்கும்போது பார்த்தாராம்!

அவனுக்கு இப்போது ஐம்பது வயது இருக்கலாம். கண்டமாலை நோய் ஏற்பட்டு குணமடைந்தவனைப்படியால் அவனுக்கு கண்டமால் என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.

அவன் தாயார் அவனை சிறையிலே பெற்றெடுத்ததாகவும் சொல்லுகிறார்கள். சுமார் ஐம்பதாண்டு காலத்திலே அவன் ஐந்து ஆண்டுகள் கூட வெளியுலகத்திலே இருந்திருக்க முடியாதென்று அங்குள்ள கைதிகள் சொன்னார்கள். அவனைப்பற்றி அவ்வளவு விபரம் தெரிந்த கைதிகள் எவ்வளவு சிறை அனுபவஸ்தர்களாயிருக்க வேண்டுமென்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்! ஆனால் நான் எப்படித் தெரிந்துகொண்டேன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்! நான் அரசியல் வெள்ளைக் குல்லாதான்!

சிறையில் கருப்புக்குல்லாக்கள் காலத்தை சுலபமாகக் கழித்து விடுகிறார்கள் - பழைய அனுபவத்தை வைத்துக்கொண்டு! வெள்ளைக் குல்லாக்கள் தான் மிகவும் வேதனைப்படுகிறார்கள்!

சிறையிலே வேதனையில்லாமல் - ராஜபோகமாகவா இருக்குமென்று கேட்கலாம். வேதனை இருக்க வேண்டியதுதான்! முதலில் வந்த கைதிகள் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள் - ஆகவே அவர்கள் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைத்து, உணவு முதலியவற்றில் சலுகை காட்டும் முயற்சியில் அரசாங்கம் உடனடியாக கவலை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் கவலை எடுத்துக்கொள்ளாது! அவர்களுடைய நல் வாழ்வுக்கு வெளியிலே கவலை எடுத்துக்கொண்டிருந்தால்; ஏன் - இத்தனை பேர் கைதிகளாக மாறுகிறார்கள்?

வெள்ளையன் காலத்திலே ஆயிரம்பேர் இருந்த சிறையிலே இப்போது மூவாயிரம் போலல்லவா இருக்கிறார்கள்!

பள்ளிக்கூடங்களே மூன்று மணிநேரமாகக் குறைத்து சிறைச்சாலையின் கைதித் தொகையை மூன்று பங்கு அதிகமாக்கும் அதியற்புத அரசாங்கமல்லவா இப்போது நடக்கிறது!

சிறைக்கு வந்த மூன்று நாட்களுக்கெல்லாம் ஜெயிலர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்- ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்ட சில காகிதங்களைக் கொடுத்து அதை தமிழில் - “உங்கள் நடையில் மொழிபெயர்த்துக் கொடுங்கள்” என்றார் - அவைகளை நான் தமிழில் எழுதிக்கொடுத்தேன்.

கடுங்காவல் தண்டனைபெற்ற கைதியாயிற்றே; மறுக்கக்கூடாது! நான் எழுதியதை - மாயவரம் ஓவிய நண்பர் பி. டி. ராஜன் - சிறையிலுள்ள

‘குவாரண்டைன்’ என்னுமிடத்தில் அழகிய முறையில் வண்ணத்தால் சுவற்றில் தீட்டிக் கொடுத்திருக்கிறார். அவைகளைப் படித்துப்பார்த்தால் சிறையில் உள்ள வசதிகள் - சட்ட திட்டங்கள் எல்லாமே தெளிவாகும் என்று நம்புகிறேன். நீங்கள் அவைகளைப் படிப்பதற்கு முன்பு சிறையைப் பற்றிய இன்னும் சில விபரங்களைக் குறிப்பிட்டுவிடுகிறேன். சிறை அதிகாரிகள் யார் யார் என்பதும் - கைதிகள் எப்படிக் கண்காணிக்கப்படுகிறது என்பதும் தெரிந்துகொள்ள வேண்டியவை யல்லவா?

ஜெயில் சூப்பிரின்டெண்ட்:

மாதம் ஐநூறு ரூபாய் வரையிலே சம்பளம் பெறக் கூடிய இவரது பொறுப்பிலேதான் சிறையின் முழு நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஜெயிலர்:

இவரது மாதச் சம்பளம் சுமார் 300 ரூபாய். இவர் சூப்பரின்டெண்டுக்கு அடுத்தபடியாக சிறை அதிகாரத்தில் அங்கம் வகிக்கிறார். காலையில் சிறையைத் திறக்கும் பொறுப்பு அவருடையதுதான்.

டிப்டி ஜெயிலர்:

பதவிப் பெயரிலிருந்தே இவரும் ஜெயிலருக்கு அடுத்தபடியான கெளரவம் வாய்ந்தவர் என்பது தெளிவாகும்.

கேம்ப் ஜெயிலர் என்றும், இன்டர்வியூ டிப்டி ஜெயிலர் என்றும் இன்னும் இரண்டொரு பதவிகள் இருக்கின்றன.

சீப் வார்டர்:

எல்லா வார்டர்களுக்கும், தலைமை வார்டர்களுக்கும் இவர் அதிகாரி. திருச்சி சிறையில் ‘டவர்’ என்று ஒரு இடமிருக்கிறது. அதுதான் சிறைச்சாலைக்கு இருதயம் போல! அங்கேதான் சீப் வார்டர் இருந்து காரிய மாற்றுவார்.

ஹெட் வார்டர்:

ஐந்தாறு பெரும் பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையில் பல ஹெட்வார்டர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெரும் பிளாக்கின் முழுப் பொறுப்பும் இவர்களிடமே யிருக்கிறது.

வார்டர்:

நீலத் தொப்பியும், காக்கி சட்டையும் அணிந்திருப்பார்கள். ஹெட்வார்டர்களுக்கு அடுத்தமாதிரி தொப்பியில் இரு ஜரிகைக் கோடுகள் உண்டு. இவர்களுக்கு மாதம் அலவன்ஸ் உட்பட சம்பளம் ஐம்பது ரூபாய்க்குள் தான் கிடைக்கிறது. குடும்பத்தை சரிவர நடத்த முடியாத நிலைமையிலே கஷ்டப்படுகிறார்கள். போதுமான சம்பளம் கிடைத்து - பூரிப்பான வாழ்வு நடத்த அவர்களால் முடியுமானால் இன்னும் உற்சாகத்துடன் கடமை செய்வார்கள். ஹெட் வார்டர் - வார்டர்களின் சம்பளத்தை அதிகமாக்க வேண்டுமென்று - காங்கிரசார் சிறையிலிருந்தபோது சொன்னார்கள்.

ஆட்சிக்கு வந்தபிறகு எத்தனையோ மறந்தார்கள் - அவைகளில் இதுவும் ஒன்று! சராசரி மனிதன், தன் தேவை பூர்த்தி செய்யப்படும்போது தவறு செய்யமாட்டான் என்பதை இந்த ஆட்சியாளர் உணர்ந்திருந்தால் கைதிகளின் தொகை இவ்வளவு பெருகி யிருக்கமுடியாது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

காணிக்கை வார்டர்:

சிறையில் வார்டர்களுக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் காணிக்கை வார்டர்கள் தான். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. வெள்ளை உடையும் - வெள்ளைத் தொப்பியும் உண்டு. வார்டர்கள், வேலை முடிந்ததும் வெளியிலே செல்வதுபோல் இவர்கள் செல்ல முடியாது. காரணம் இவர்களுக்கு வேலை முடிவதேயில்லை. காணிக்கை வார்டர் என்பது உங்களுக்குப் புதிராக இருக்கிறதல்லவா?

கான்விக்ட் வார்டர் (Convict Warder) என்பதுதான் இப்படித் திரிந்து, தேய்ந்து, தெளிந்து - காணிக்கை வார்டராகியிருக்கிறது. மூன்று நான்கு வருடங்களுக்குமேல் தண்டனை பெற்ற கைதிகள் தங்களின் நன்னடத்தையால் சிறைச்சாலையில் பெறுகிற உத்தியோகமிது!

நீண்டநாள் தண்டனைபெற்ற ஒரு கைதி - மெல்ல மெல்ல ஒரு மேற்பார்வையாளனுக்கு பதவி பெறமுடியும். ‘ஒவர்சியர்’ என்று அந்த உத்தியோகத்துக்குப் பெயர். வெள்ளைத் தொப்பியும் - கால் சட்டையும் - அரைக்கைச் சட்டையும் அவனது உடுப்பு! அவனது பார்வையிலே பல கைதிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

சிறுகச் சிறுக ஒவர்சியருக்குப் பதவி உயர்ந்து, அழகான வெள்ளைத் தொப்பியும் - வெள்ளைக் கோட்டும், நீண்ட வெள்ளைக் காலுறையும் தரப்பட்டு - ‘கான்விக்ட்’ வார்டராக மாறிவிடுவார்கள். ‘ஒவர்சியர்’ இரவு நேரத்திலே கூண்டிலே அடைபடவேண்டும். ‘கான்விக்ட் வார்டர்’ - அதாவது கைதி வார்டர் கூண்டிலே அடைபடத் தேவையில்லை. ஆனால் இரவு நேரங்களில் மாறி மாறி - குறிப்பிடப்பட்ட கால அட்டவணைப்படி - பிளாக்குகளில் - மதிற் சுவர்களுக்குப் பக்கங்களில் - காவல் புரியவேண்டும்.

திருச்சி சிறையிலுள்ள கான்விக்ட் வார்டர்கள் பெரும்பாலும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்தான். ஆயுள் தண்டனை என்பது இருபது ஆண்டு!

ஆனால் - அவர்கள் நடந்துகொள்ளும் முறை - திருந்திய நடவடிக்கை - அயராத உழைப்பு - இவைகளின் காரணமாக அவர்களுக்கு ‘நாட் கழிவு’ தரப்பட்டு இருபதாண்டுகளுக்குள்ளாகவே விடுதலையாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும்பாலும் தூக்குமேடையிலிருந்து திரும்பியவர்கள் தான்! தூக்குமேடைக்கு செல்லும் கைதிகளுக்காக ஒரு தனி இடம் இருக்கிறது. அதற்குப் பெயர் ‘கண்டம்’ என்கிறார்கள். அதுவும் திரிந்து தெளிந்த பெயர்தான்! Condemned Prison என்பதுதான் கண்டம் என்று மாறியிருக்கிறது. அங்கு வந்த மனிதனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்பதை அது குறிப்பதால் சிறந்த பெயரும் ஒருவாறு பொருந்தும்! அந்தக் கண்டத்தில்தான் ஒரு காலத்தில் அண்ணாவும், பெரியாரும் பத்து நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

கண்டத்திலேயிருக்கும் கைதிகள் தனித்தனியேதான் வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு காவல் உண்டு. அதற்குப் பக்கத்திலேயே சிறிது தூரத்தில் தூக்குமேடையுமிருக்கிறது. நாங்கள் சென்றபிற்கு-எட்டு குற்றவாளிகள் அந்த மேடை மூலம் உலக விடுதலை பெற்றிருக்கிறார்கள். மிகவும் சோகமான செய்தியொன்று! ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. அவன் அதையும் மறுத்து அப்பீல் செய்தான். அப்பீலில் அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்து விட்டது.

அவன் நிலைமை எப்படி

யிருக்குமென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 15ந் தேதி சூரியனைக் காணுமுன்னே அவன் தூக்குக் கயிறை முத்தமிட்டுவிட்டான். ஒருநாளில் ஐந்துபேர் தூக்கிவிடப்பட்டார்கள். தொழுந்துரைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்ற கான்விக்ட் வார்டர்கள் சிறைச்சாலைக்குள்ளே மற்றவர்களோடு மிகவும் நன்றாகப் பழகுகிறார்கள். திருந்தி நடக்கவேண்டும் என்ற ஆசையோடு காலத்தைக் கழிக்கிறார்கள்.

குடிவெறியில் கொலைசெய்தவர்கள் - கற்பு தவறிய மனைவியைக் கொலை செய்தவர்கள்-பங்காளிகளைக் கொலை செய்தவர்கள் - நிலத் தகராறுகளால் கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் - எதிரிகள் கொடுத்த தொல்லையால் கொலை வெறிக்குத் தூண்டிவிடப்பட்டவர்கள் - ஆகியவர்கள்தான் அதிகமாகக் காணமுடிகிறது சிறைச்சாலைகளில்!

இருபது ஆண்டு தண்டனை சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடுகிறது - நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனுக்குத்தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை!

வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால் - வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்திலே சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழ்கிறது! ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!

ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், வெளியில் வந்தபிற்கு புதிய மனிதர்களாக மாறி - கொலைவெறியைத் தடுக்கும் கொள்கைக்காகப் பாடுபட்டார்களேயானால்- ஒரு கொலையால் வந்த பழியை - பல உயிர்களைக் காப்பாற்றுவதின் மூலம் போக்கிக்கொள்ளலாம். அதைவிட்டு வெளியில் வந்ததும் - “என்னிடம் யாரும் வாலாட்டக் கூடாது - நான் கொலைக்கேசில் ஜெயிலுக்குப் போனவனுக்கும்” என்று மீசையை முறுக்கித் தோள்தட்டிக் கொண்டு நின்றால் அது வீரமுமாகாது - விவேகமுமாகாது!

கோழைத்தனத்தின் கூக்குரலாகவே கருதப்படும்.

எதைப்பற்றியோ பேச வந்த நாம் - எங்கேயோ உபதேச காண்டத்திற்குப் போய்விட்டதுபோல் தெரிகிறது. திரும்ப நம்மிடத்திற்கே வருவோம். இப்போது சிறைச்சாலையில் உள்ள அலுவலாளர்களைப்பற்றி ஒரு வாறு புரிந்துகொண்டோம். கொலைக்குற்றத்தால் தண்டனை பெற்றவர்கள் நிலையையும் அறிந்துகொண்டோம். கொள்ளைக் குற்றம் - கள்ளக் கையெழுத்து - பிக் பாக்கெட் அரசாங்க மோசடி - இவைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள். இப்போது திருச்சி சிறையில் உள்ள கைதிகளில் மிகப் பெரும்பாலோர் - பாதிக்கு மேற்பட்ட தொகையினர் - மொத்தம் மூவாயிரம் கைதிகள் என்பதைக் குறைக்காமல் போக்கு வரத்துக் கைதிகளாக இருப்பவர்கள் சாராய வழக்கில் ஈடுபட்டவர்கள் தான்.

இன்று நூறு சாராய வழக்கு கைதிகள் விடுதலையானால்- நாளைக்கு நூற்றிஐம்பது சாராய வழக்கு கைதிகள் உள்ளே நுழைகிறார்கள். காங்கிரஸ் சர்க்காரின் ‘மதுவிலக்கு’ நாற்றமடிக்கும் காட்சி சிறைச்சாலையைப் பார்க்கும்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

மதுவிலக்கினால் பதினேழுகோடி ரூபாய்களில் வரி நஷ்டம் மட்டுமில்லாமல் - மதுவிலக்குப் போலீசார் சம்பள விரயமும் - கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைப் பிடிக்க செலவழியும் தொகையும் - பிடிபட்ட கைதிகளுக்கு சிறைச்சாலையில் உணவளிக்க ஏற்படும் செலவும்- எங்குபோய் நிற்கும் என்பது தெரியவில்லை! இவ்வளவு செலவழித்தும்- சட்டம் உடையாமலிருக்கிறதா என்று பார்த்தால் - அதுவுமில்லை; அய்யோ• பாவம் - துண்டு துண்டாக - செதில் செதிலாக - அணு அணுவாக - மதுவிலக்குச் சட்டம் மரணப்படுகுழியில் பிய்த்தெறியப்பட்டுக்கொண்டே யிருக்கிறது.

“மதுவிலக்கை வாபஸ் பெறுதீர்கள்! கள்ளச் சாராயம் காய்ச்சும் புதிய குடிசைத்தொழில் கெட்டு விடும்” என்று புரட்சிக்கொடி ஏந்துகிற அளவுக்கு ஒரு பெரிய வர்க்கம் உற்பத்தியாகி நிற்கிறது!

இந்த லட்சணத்திலே யிருக்கிறது ‘மதுவிலக்கு’ சட்டம். அரசாங்க நிர்வாக யந்திரத்தின் திறமைக்கு இது ஓர் நல்ல அத்தாட்சி?

ஒரு நாடு நலமுற சட்டங்கள் இயற்றுவது மட்டும் போதாது! அதை அமுல் நடத்தும் திறமை மிக்கவர்கள் அதிகாரத்தில் அமரவேண்டும். அந்த நிலைமை ஏற்படும் வரையிலே கண்துடைப்பு சட்டங்களால் பயன் நிச்சயமாக இல்லை. இதைத்தான் திருச்சி சிறைச்சாலையிலும், மற்ற சிறைச்சாலைகளிலும் நிரம்பி வழியும் மது காய்ச்சிய குற்றவாளிகளின் தொகை - மந்த புத்தியினருக்கு நினைவுறுத்துகிறது.

அடடா! மறுபடியும் எங்கேயோ - போய்விட்டோமே! எதையெடுத்து விவரித்தாலும் இறுதியில் அரசாங்கத்திடம் தான் போய் நிற்கிறது என் செய்வது! நாட்டின் நன்மை தீமைகளுக்கு அரசோச்சுகிறவர்கள் தானே பொறுப்பாளிகள். ஆகவே நாம் அந்த இடத்திற்குப் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.

சரி, மீண்டும் சிறைச்சாலைக்கே வருவோம். சிறையில் நுழையும் கைதிகளுக்கு சிறையின் சட்ட திட்டங்கள் - வசதிகள் பற்றி - வெளியிலேயுள்ள ‘குவாரண்டைனில்’ குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொன்னேன். இதை நீங்கள் படித்துக்கொண்டால் சிறைச்சாலையைப் பற்றிய முழு விபரங்கள் கூடியவரையில் பெற்றுவிடுவீர்கள். பிறகு நமது கதையைத் தொடருவோம். இதோ-படியுங்கள்! நான் மொழி பெயர்த்து - ராஜன் சுவரில் தீட்டியது இதுதான்!

நினைவுக்கு!

‘குவாரண்டைன்’ இதுதான். இங்கு நீங்கள் பத்து நாட்கள் வைக்கப்படுவீர்கள். இங்கே நீங்களும் உங்கள் சகோதரக் கைதிகளும், வியாதியிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். டாக்டர்கள் கடமை புரிய ஒத்துழையுங்கள். அவர்கள் நோய் நீக்கப் பாடுபடுகிறவர்கள்.

கவனிக்க!

எந்த வேலையை விரும்புகிறாய்? தச்சுவேலையா? தறிவேலையா? தையற் தொழிலா? புத்தகம் தைப்பதா? பயிர்த் தொழிலா? பாய் பின்னுவதா? தேவையானதைத் தேர்ந்தெடு. வெளியில் நீ செய்த வேலையையும் - இங்கே விரும்பும் வேலையையும் சிறையதிகாரியிடம் கூறு. அவர் உனக்கு நல்ல வேலை வழங்குவார்.

கண்ணான நேரம் - பொன்னான வாய்ப்பு!

நீ படிக்க விரும்புகிறாயா? பள்ளியுண்டு சிறையிலே! ஆங்கில தமிழ் நூல்கள் நிறைந்த புத்தக நிலையம் உண்டு. உள்ளங் கவர்ந்த ஆசிரியர்களின் ஏடுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். எழுத - படிக்க - கற்க முடியும். அவ்வழி செல்ல ஆசிரியரை நாடுக - பொன்னான இவ்வாய்ப்பை இழக்காதீர்கள். சிறந்த மனிதர்கள், சிறையிலேதான் பல கருத்துக்களைப் பெற்றிருக்கிறார்கள்.

[குறிப்பு: வாசகசாலையையும், பள்ளியையும் பெரும்பாலும் அரசியல் கைதிகள் தான் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது - ஆர்.]

உடைகள்:

உனக்கு இரண்டு ஜோடி துணிகளும், ஒரு படுக்கையும் தரப்படும். உடைகள் ஒன்பது மாதங்கள் வரையில் உபயோகிக்க வேண்டும். அவைகள் சுத்தமாகவும், கால வரையறைக்குமேல் உழைக்கக் கூடியதாகவும் வைத்துக் கொண்டால், அதற்காக தனி நாட்குறைப்பு உண்டு. இந்த சலுகைக்கு நாங்கள் ஆக்கம் தருவோம். வேண்டுமென்றே உடைகள் வீணாக்கினால் தண்டனை உண்டு என்பதை மறவாதே. முதல் அறிவுரையையே நீ பின்பற்றுவாய் என்பது உறுதி.

பேட்டியும் கடிதமும்:

ஒவ்வொருவரும் நண்பர்களையும், உறவினர்களையும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பேட்டி காணவும் - மாதம் இருமுறை கடிதங்கள் எழுதவும் - வந்த கடிதங்களைப் பெறவும் அனுமதிக்கப்படுவார்கள். தனி சலுகையும் தரப்படும். ஆனால் கண்ணியமாய் நடப்பவருக்கே இந்த சலுகை என்பதை மறவாதே.

நாட்குறைப்பு:

நாட்குறைப்பு என்பது உன் தண்டனை காலத்தைக் குறைப்படுதெனப் பொருள். மூன்று மாதமும் அதற்கு மேலும் கடுங்காவல் தண்டனை பெற்றவர்களுக்கு நன்னடத்தைக்காக இரண்டு நாட்களும், நல்ல உழியத் திற்க்காக இரண்டு நாட்களும், ஆக மாதம் நான்கு நாட்கள் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவுமன்றி தொடர்ந்து பனிரெண்டு மாதங்கள் எவ்வித குற்றமும் புரியாதிருப்பின் தண்டனையில் பதினைந்து நாட்கள் குறையும். அதற்காக முயற்சித்து அதிகப்படியான பயன்பெறுக.

பயனுள்ள பணிபுரிவோருக்குமட்டும் நாட்கள் - நாட்குறைப்பு கிடைக்க வசதியுண்டு.

உத்தியோக உயர்வு:

கைதிகள் பலவாறு பிரிக்கப்படுகிறார்கள். அவர்கட்கும் உத்தியோக உயர்வு உண்டு.

அறுபது நாள் நாட்கழிவு பெற்ற நல்ல ஊழியரும், சிறந்த பண்புடையவரும் இரவுக் காவலராகவோ - (வாட்ச்மேன்) ஊழியரை மேற்பார்வை யிடுபவராகவோ உயர்த்தப்படுவார்கள். இரவு காவலனுக்கு மாதத்தில் ஐந்து நாட்களும், மேற்பார்வையாளனுக்கு ஆறு நாட்களும் தண்டனை காலத்தில் விடுமுறையாகக் குறைக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவிலும் ஆறுமாதகாலம் அலுவல் பார்த்தவருக்கு, கைதி வார்டர் (கான்விக்ட் வார்டர்) என்ற உயர்ந்த உத்தியோக உயர்வு உண்டு.

அவர்கட்கு மாதத்தில் எட்டு நாட்கள், “நாட் கழிவு” தரப்படும். ஆனால் - நல்லவன், நம்பிக்கையானவன், நாணயமுள்ளவன், என்பதை நிரூபிக்க வேண்டும். இதைப்பெறும் வாய்ப்பை நீங்கள் விரும்பத்தான் செய்வீர்கள்.

ஆலோசனை மன்றம்:

குறிப்பிட்ட கைதிகள் தண்டனை காலத்திற்கு முன்பு விடுதலை செய்வதுபற்றி - மூன்று மாதத்திற்கொருமுறை கலெக்டரும், செஷன்ஸ் ஜட்ஜும், உத்தியோகப் பற்றற்ற உறுப்பினரும் கூடி ஆலோசிப்பார்கள். இரண்டு ஆண்டும், அதற்குமேலும் தண்டனைபெற்று அதில் முக்கால் பாகம் அனுபவித்தவர்களைப்பற்றி கவனிக்கப்படும். ஆனால் ஒழுங்கான நடவடிக்கையுள்ள கைதிகளைப் பற்றித்தான் இந்த மன்றம் சிந்திக்கும். கண்ணியமுடன் நடந்து-அதிகக் கவலை யெடுத்து - இந்த அனுகூலத்தை அடைவாயாக.

நீ நோயாளியா?

இங்கே வசதி நிறைந்த வைத்தியசாலை உண்டு. உன் பிணியைப்பற்றி அக்கரை காட்டும் டாக்டர்கள் உண்டு. அமைதியாயிருந்து - அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு - ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்! போலி வியாதிகளை மிகைப்படுத்துவோர் தண்டனைக்கு உட்படுவார்கள்.

நம் நாடு, விரும்புகிறது - பலமான உடல்களையும் - பரந்த உள்ளங்களையும்!

குறிப்பு: [இதுபோன்ற குறிப்புகள் இன்னும் சில உள. குவாரண்டைனில்! குவாரண்டைன் என்பது - தண்டனை பெற்ற கைதிகளை பத்து நாட்கள் வைத்திருக்கும் - சிறைச்சாலையின் திண்ணை போல]

★

பேச்சு மன்றம்

“பேச்சு மன்றம் ஒன்று உங்கள் ராஜ்ஜியத்திலே ஆரம்பித்தீர்களே; அது என்னவாயிற்று? என்று கேட்க நீங்கள் துடிக்கிறீர்கள். அது பல பேச்சாளர்களைத் தயாரித்தது. பெரிய மேடைப்பிரசங்கிகள் ஆகாவிட்டாலுங்கூட தங்கள் தங்கள் ஊர்களில் கொள்கையைத் தெளிவாகச் சொல்லும் பிரசாரகர்கள் உற்பத்தி செய்யப்பட்டார்கள். மாவட்டத்திலே ‘பயிற்சி முகாம்’ அமைப்பது என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும். அதுவும் ஒரு வாரம் நடத்த முடியும்.

இப்போது அரசாங்க செலவிலேயே இரண்டு மாதகாலம் பயிற்சி முகாம் நடத்திடக் கூடிய நல் வாய்ப்பை இழக்க முடியுமா என்ன?

“கடவுள் உண்டா? இல்லையா?” என்பது பற்றி முதல்நாள் பல நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். உண்டு என்று சிலரும், இல்லை என்று சிலரும் வாதிட்டார்கள். இல்லை யென்னும் எண்ணமுடையவர்களே - உண்டு என்னும் வாதத்தை சிறப்பாக நடத்தினார்கள்.

‘ஒரு கடவுள் உண்டு’ என்ற கொள்கையை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துரைக்கவில்லை என்றாலுங்கூட - கடவுள் பற்றிய விவாதத்தை, ஆராய்ச்சியை நிகழ்த்துவதிலே அதற்குத் தடையொன்றுங் கிடையாது. கடவுள் பெயரால் சீரழிக்கப்படும் பொருளாதார நிலை பற்றியும் - அதைத் தடுப்பதற்கான வகை பற்றியும் தீர யோசித்து முடிவு காணுகிற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான்!

கடவுள் உண்டென வாதிட்ட ஒரு தோழர் கூறினர்; “கடவுள் இல்லை யென்போர் காட்டுமிராண்டிகள்” என்று!

இந்தப் பட்டத்தை கடவுள் உண்டென்போர் மிகத் தாராளமாக சூட்டிவிடுவது நாட்டறிந்த உண்மை. அந்த உண்மையிலும் ஒரு உண்மை யிருக்கிறது.

கடவுள் இல்லையென்போர் காட்டுமிராண்டிகள் என்றுள் காட்டுமிராண்டிகள் காலத்திலே கடவுள் இல்லையென்பது உண்மையாகிறது. ஆகவே ஆண்டவன் அனாதி காலந்தொட்டு இருப்பவன் என்ற கூற்று பொய்யாக்கப்படுகிறது. அவர்கள் மொழியாலேயே! ஆதி மனிதன் கடவுளை வணங்கவில்லை. வளர்ந்த மனிதன்தான் கடவுளைப் படைத்தானே தவிர - கடவுள் மனிதனைப் படைக்கவில்லை யென்ற பேருண்மையும் வெளியாகிறது.

“வளர்ந்த மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தான் - காட்டுமிராண்டி ஆகாய விமானம் கண்டு பிடிக்கவில்லை. அவன்முட்டன்!

வளர்ந்த மனிதன் புத்திமான்! முட்டன் ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை யென்பதற்காக ஆகாய விமானமே பொய் என்று கூறமுடியுமா? முட்டன் கடவுளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் கடவுள் இல்லை யென சொல்லமுடியுமா? என்ற கேள்வியை ஆத்திகர் எழுப்பக்கூடும்.

அதற்கு ஒரே பதில்-

ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்டதல்ல! செய்யப்பட்டது! ஆகவே அது மனிதனுக்கு முன்பே இருக்க நியாயமில்லை. ராமாயண பாரத காலங்களிலே இருந்ததாகச் சொல்லப்படும் வானவூர்திகள் கூட மனிதனுக்குப் பிறகு மனிதனால் செய்யப்பட்டவைதான். அதுபோலத்தான் கடவுளும் மனிதனால் செய்யப்

பட்டார். சிருஷ்டிக்கப்பட்டார். பயத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள மனிதன் போட்ட ஒலம்தான் கடவுள்! இப்போதும் கடவுளை நினைப்பவன் - “கடவுள் துணை” என்று நினைப்பதிலிருந்தே - துணைக்காகப் பயன்படுத்தப்பட்ட - பயத்திலிருந்து விடுபட உபயோகிக்கப்பட்ட ஒரு ஆறுதல் சொல்தான் கடவுள் என்பது வெள்ளிடைமலை.

நாம் அந்தச் சொல்லுக்கு விரோதிகளல்ல! அந்தச் சொல்லில் வைத்துக்கொண்டு சுரண்டிப் பிழைப்போர் - அந்தச் சொல்தான் மக்களை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் எனக் கூறி சூது நடத்துவோர் - அந்தச் சொல்லில் உச்சரித்து இவ்வுலகில் ஏற்படும் தொல்லைகளைத் தாங்கிக்கொண்டு - தவளைபோல், எலிபோல் வாழ வேண்டுமென உபதேசிப்போர் - வறுமையின் தென் துருவமும் - செல்வத்தின் வடதுருவமும் - அந்தச் சொல்லின் மகத்துவம் - ஆகவே இரு துருவங்களும் ஒன்றுற முடியாது - அப்படி ஒன்றுற முயற்சிப்பது அந்த சொல்லுக்கு விரோதம் - எனக் கதைகட்டும் காவியுடைப் பண்டாரத்தார் - ஆகியவர்கள்தான் நமக்கு விரோதிகள்.

அருமையான வைரம் - அதைத் தற்கொலை செய்து கொள்ள ஒரு சமுதாயம் பயன்படுத்துகிறது என்றால் - வைரமானாலும் பரவாயில்லையென்று உடைத்துக் கடலிலே எறியவேண்டியதுதானே!

சுவையான சொல்லாயிருக்கலாம் கடவுள் என்பது! தற்கொலைக்கு உபயோகமாகும் வைரமாக மாறும்போது என்ன செய்யமுடியும்?

இந்தக் கேள்வியை எழுப்புவதுதான் நாத்திக வாதம் - நாமெல்லாம் நாட்டுக்கு கேடு தருபவர்களாம்!

நாட்டாளும் ஆச்சாரியார் சொல்லுகிறார், நம்மை யெல்லாம் நசக்கவேண்டுமென்று! அவர் பக்தகோடிகளும் அதையே சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் பக்தி சிரத்தையோடு பின்பற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு என்ன சொல்லுகிறார் என்று பாருங்கள். சிறைச்சாலையிலே ஒரு புத்தகம் எழுதுகிறார் பண்டிதர். அதன் பெயர் உலக சரித்திரம். அதிலே ஒரு பகுதியைக் குறிப்பிடுகிறேன் - கவனியுங்கள்.

இந்தியாவில் அக்பர், ஆட்சி நடத்துகிறார். அவர் எம்மதத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் ராஜ்ய பரிபாலனம் புரிகிறார். அப்போது அவரை தமது மதத்தில் சேர்ப்பதற்காக எச சங்கப் பாதிரிகள் வருகிறார்கள். அவர்களை அக்பர் சில கேள்விகள் கேட்டு மடக்கிவிடுகிறார். எச சங்கப் பாதிரிகள் அக்பரைப் பற்றி ஒரு குறிப்பு தருகிறார்கள்.

“எல்லா நாஸ்திகருக்கும் பொதுவான குற்றம் அக்பரிடத்திலும் காணப்படுகிறது. நாஸ்திகர் தங்களுடைய பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள். மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையெல்லாம் குறைபாடுள்ள தங்கள் அறிவாராய்ச்சிக்கு உட்படுத்துகிறார்கள்.”

இதுதான் பாதிரிமார்களின் குறிப்பு. அந்தப் பாதிரிகளின் கருத்துப்பற்றி பண்டிதரின் கருத்து என்ன தெரியுமா?

“ஒரு நாத்திகனுக்குரிய லக்ஷணங்கள் மேற் கூறியவைகள்தான். என்றால் அத்தகைய

நாத்திகரின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே ஒழிய வேறில்லை”

இதுதான் பண்டிதர் நேருவின் கருத்து! சிறையிலிருக்கும் போதுள்ள கருத்து! சிம்மாசனம் ஏறிய பிறகு அல்ல! அவர் அதை மறந்தார் - மதுரை மீனாட்சி ஆலயத்தின் தங்க மயிலைக்கண்டு மகிழ்ந்தார்.

ஷாஜஹான் காலத்திலே செய்யப்பட்ட மயிலாசனம் ஏழைகளின் வியர்வை என்று எழுதினர் தமது நூலில்! மதுரைப்போன்ற திருப்பதிகளிலே முடங்கிக் கிடக்கும் மயிலாசனங்கள் யாருடைய வியர்வை என சொல்லிடும் துணிவை இப்போது இழந்தார்! காரணம்-முன்பு கைதி! இப்போது பிரதமர்!

அவர் மறந்ததை அவருடைய சொல்லாலேயே நாம் நினைவூட்டுகிறோம்.

பகுத்தறிவை மத நம்பிக்கைக்கு கீழ்ப்படுத்த மறுக்கிற நாத்திகம், தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே ஒழிய வேறில்லை.

இது, பண்டிதரின் பொன்மொழி! பகவத் சிரோமணிகளே! பஜகோவிந்தப் பித்தர்களே! பகுத்தறிவு வாதிகளின் ‘புன்மொழி’ யல்ல! பண்டிதரின் பொன்மொழி!

மறு மலர்ச்சி

முழுகு! முழுகு! ஆழமாக முழுகு! மூச்சடக்கி முழுகு! இன்னும் முழுகு! முத்து கிடைக்கும்.

பேசு! பேசு! பலமுறை பேசு! நாப்பழக்கம் ஏற்படும்! நன்றாகப் பேசுவாய்! ஆனால் கிளிஞ்சல்களை வாரி இறைக்காதே!

ஒவ்வொரு பேச்சு மன்றத்திலும் இதைத் தவறாமல் சொல்லிவந்தேன். உரையாடலில் கலந்துகொண்ட தோழர்கள் ஒவ்வொருவரும் ஒளிபெறு வைரங்களாகவே மாறினர். ஒருநாள் ‘மறு மலர்ச்சி’ யென்னும் பொருளிலே நண்பர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். பேசும் தோழர்களில் G. நாராயணசாமி என்றொருவர்! அவர் பேச எழுந்ததும் பேச்சு மன்றம் ஒரேயடியாக சிரிக்கும். ஆரம்பப் பேச்சாளர்தான்! ஆனால் ஆர்வம் கொழிக்கும் - குள்ளமான அந்த உருவம் கையையும் உடம்பையும் ஆட்டிப் பேசும்போது கால் மூன்றத்துக் கத்திரிக்காய் போல் இருக்கும்!

பேசும் பொருளைவிட அபிநயத்திலே அதிக நகைச்சுவை பொசிந்து கிடக்கும்.

ஆகஸ்டு 19ந் தேதியென்று கருதுகிறேன்; அன்று தான் ‘மறு மலர்ச்சி’ பற்றி விவாதிக்கப்பட்டது. எங்கள் மன்றத்திலே! ஜூலை 18 லிருந்து ஆகஸ்டு 19 வரை வேறு எதையும் பற்றி விவாதிக்கவில்லையா என்று கேட்கத் தோன்றும். ஒவ்வொருநாள் மன்றத்திலும் எத்தனையோ விஷயங்களைக் குறித்து விவாதித்தோம்.

உலக சூழ்நிலைப்பற்றியும் - ஒவ்வொரு நாட்டின் சுதந்திரக் கிளர்ச்சிகள் பற்றியும் - நமது கழகக் கோட்பாடுகள் பற்றியும் - வேறு கட்சிகளுக்கும் நமக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும் - ஒவ்வொரு நாளும் கூடுகிற மன்றத்திலே விவாதிக்கப்பட்டது.

முன்னூறுக்கு மேற்பட்ட கேள்விகள் கொண்ட வினாத்தாள் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்தாற்போல் அந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்விலே யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக அல்ல; தெளிவு பெற வேண்டும் என்பதற்காக! ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் - இப்போது வாய்ப்பு ஏற்படும்போது சொல்லிவிடுகிறேன். எங்கள் நூறு பேரோடு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபது தோழர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் பள்ளி மறியலில் ஈடுபட்டு சிறையில் சில வாரங்கள் இருந்தார்கள். அவர்களும் பேச்சு மன்றங்களில் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.

அந்த திராவிடர் கழகத் தோழர்களுடன் ராஜன் என்ற ஒரு பார்ப்பன நண்பரும் பள்ளி மறியல் செய்து சிறைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னூறு கேள்விகளும் கேட்கப்பட்டு - அதற்குரிய பதில்கள் சொல்லப்பட்டதும் - அந்தப் பதில்கள் விளக்கி உரையாற்றப்பட்டதும் - பெரிதும் பயனுடையதாயிருந்தது எனத் தோழர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். சில கேள்விகள் தோழர்களை திகைப்புறவும் செய்துவிட்டன. அதற்கு உதாரணம் தருகிறேன்.

ஜூலை 14ம் நாள் ஆச்சாரியார் வீட்டு மறியலுக்கு தலைவாக நியமிக்கப்பட்ட தோழர் சம்பத், ஏன் அந்தநாளில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார்?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மன்றம் ஸ்தம்பித்து விட்டது, ஒரு விநாடி! சம்பத் கலந்துகொள்ளவில்லையா? என்ற சந்தேகக் குறிகள் அவர்கள் முகங்களில் தோன்றி விட்டன.

“அவர் 13ந் தேதியே கைது செய்யப்பட்டு விட்டார். அதனால் கலந்துகொள்ளவில்லை!” என்று ஒரு தோழர் கூறியதும்தான் மன்றத்தினரின் திகைப்பு மாறியது.

“வயதான காலத்தில் திருமணம் செய்துகொண்ட மந்திரி யார்?” என்று ஒரு வேடிக்கை கேள்வி கேட்டேன்! மந்திரி என்று கேட்டதை மறந்துவிட்டு எல்லோரும் “பெரியார்” என்று கூறிவிட்டார்கள். பிறகுதான் “தேஷ்முக்” என்ற பதில் வந்தது!

சிறையின் கொடுமையைப் போக்கிக்கொள்ள வேடிக்கையும், கொஞ்சம் வேண்டியதுதானே!

எங்கேயோ போய்விட்டோமே'மறுமலர்ச்சி'யை விட்டு விட்டு! நாம் மறுமலர்ச்சியை விட்டுவிட்டுப் போனது போலவே மறுமலர்ச்சியும் பல நாட்கள் விட்டுவிட்டுப் போவதும் பிறகு தோன்றுவதுமாயிருந்து வருகிறது.

குமுறல் - கொந்தளிப்பு - அறிவுத் தேக்கம் - மத வெறி-அரசுகளின் அக்கிரம ஆட்டம்-அநாகரீகம் - இவைகளுக்குப் பின்பு பூத்துப் பொலிகிற புதுமைக்கு மறுமலர்ச்சியென்று செல்லப் பெயரிட்டழைக்கிறோம்.

வாழ்ந்த நிலை - வீழ்ந்த நிலை - மீண்டும் வாழ்ந்திடும் நிலை. இந்த மாற்றமுடியாத மாறுதல் சக்கரத்தைப்போல் சுழன்றுகொண்டேயிருந்திருக்கிறது உலகம் பிறந்த நாள் முதல்! மொத்த உலகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு நாம் செல்லாமல் ஒவ்வொரு நாடும் - அந்த நாடு சமுதாயமும் எப்படியெப்படி மறுமலர்ச்சி பெற்றன என்பதைச் சிறிது காண்போம். எல்லா நாடுகளையும்கூட நாம்

ஆராயத் தேவையில்லை. பெரிய நாடுகள் சிலவற்றை நோக்குவோமாயின் அவை மோகன இயல்போடு வாழ்ந்த வரலாறும் - அந்த மலர்ச்சி கருகி மண்மேடிட்டுப்போன சோக சரித்திரமும் - அந்த சரித்திரம் தரும் பாடத்திலிருந்து நாம் பெறவேண்டிய நிலையான அறிவும் தென்படும்.

ரோமாபுரி - எத்தனை கலைப்பண்போடு வாழ்ந்த நாடு! சிசரும், ஆண்டனியும் எழுப்பிய சிங்கக்குரல் எங்கே போய்த் தேய்ந்து மறைந்தது! இத்தாலிய நாட்டுப் பிளாரன்ஸ் நகரம் - மறுமலர்ச்சியின் தாயகம் - தாந்தே, பெட்ரார்க் போன்ற மகா கவிகள் உலவவிட்ட பூஞ்சோலை-வியனார்டோ போன்ற சிற்பக் கலைஞர்கள் சிருஷ்டித்த பூமி - அந்தப் பெருமைமிகு இத்தாலிய மண், இப்போது உலகின் முன்னே முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பானேன்!

மலர்ச்சியுற்றிருந்து - பிறகு கருகிப்போய் - மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படாமலே பட்டுப்போன பூங்கொடிபோல காட்சியளிக்கும் சமுதாயங்கள் பலப்பல!

அந்த நிலையிலேயிருந்த சீன சமுதாயந்தான் இப்போது செழிப்புடன் பூத்து நிற்கிறது!

ஒரு காலத்திலே கலை, இலக்கியம், ஓவியம், ஆகியவைகளில் சீரும் சிறப்பும் பெற்றிருந்து பின்னர் சீரழிந்தது சீன நாடு. ஏன்? கலை, மக்களுக்காக, சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலிப்பதற்காக ஆக்கப்படாமல் மகுட மேந்திகளுக்கான கேளிக்கைப் பொருளாக ஆக்கப்பட்டது. சிற்ப - இலக்கிய உணர்ச்சிகள் எல்லாம் சிற்றின்ப உணர்ச்சிகளுக்கு முன்னே நிற்க முடியாமல் -

அரண்மனை ஆடம்பர லாகிரிகளுக்கு முன்னே வாழ முடியாமல் தத்தளித்துத் தடுமாறிச் சாய்ந்தன. சமுதாயக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு இருந்த அந்நாள் காவலர்கள் ஆடம்பர கேளிக்கைப் போதையிலே மயங்கியிருந்தார்கள். பிறகு எப்படி நீண்டதோர் பயணத்தை நடத்த முடியும். ரோம் நகரத்துப் பள்ளியறைகளைப் பந்தயத்தில் தோற்கடிக்கும் திறமை உடையனவாய் இருந்தன சீனாட்டுச் சிற்றின்பக் கூடங்கள், ஒரு காலத்திலே! ‘வீ’ என்று ஒரு அரசி இருந்தாளாம் - செல்வாக்குபெற்ற அரசி.

கட்டிலிலே இருந்த மன்னனை ஒரு வரம் கேட்டாளாம்.

அட்டியில்லை கண்ணே! என்ன வேண்டுமென்றும் அவன்! “நம் ஆட்சியின் கீழுள்ள ஆண்மகனை யெல்லாம் அழைத்து - அவர்கள் எல்லோரினும் சிறந்தவன் என் அந்தப்புரத்துக்கு அனுப்பிவையும்” என்று கேட்டாளாம். வேந்தனும் தலையசைத்தானும். இன்றொருவன் இருந்தான். சீனின் மன்னனை! ஷிங் என்று பெயர். கன்பூஷியஸ் காலத்திலே வாழ்ந்தான். அவன். தன் பஞ்சணையிலே வாசனைத்தூளைப் பரப்புவான். ஊரிலே உள்ள வேசிகளையெல்லாம் அழைத்து பஞ்சணை மீது நடக்கச் சொல்லுவான்.

அவர்களும் நடப்பார்கள். எவளுடைய காலடி, அந்த வாசனைத்தூளின் மீது லேசாகப் பதிந்திருக்கிறதோ - அவளுக்கு முத்துமாலைப் பரிசளிப்பான். கனமாகக் கால் பதிந்தவர்களுக்கு பட்டினிபோட்டு கனத்தைக் குறைப்பான். ஆகா என்ன கவலை நிறைந்த கலா உணர்ச்சி! சீனப் பெண்களுக்கு பாதங்கள் மெல்லியதாய் இருக்கவேண்டுமென்ற வழக்கமும் அதையொட்டித்தான் வந்ததுபோலும். பாதங்களைக் கட்டிப் பண்படுத்தும் பழக்கமும் சீனில் பரவியது

அதனால்தான் போலும். சீன சமுதாயத்தை அழிக்கும் கண்மூடி வழக்கங்கள் மண்மூடச் செய்திட கன்பூஷியஸ் என்ற பெரியோன் முயன்றான். அவனுடைய முயற்சி - நம் நாட்டுப் பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்கர் ஆகியோரின் முயற்சிபோலத்தான் முடிந்தது!

கருகிப்போய்க் கிடந்த அந்த சமுதாயம் சன்யாட்சன் காலத்திலே அரும்பிவிடத் தொடங்கியது! ஆனால் பூரணத்துவம் பெறவில்லை. மீண்டும் அடித்த புயலிலே அரும்பு உதிர்ந்துவிடாமல் காப்பாற்றி - இன்றைய தினம் மறுமலர்ச்சியின் காவலனுக்கு வீற்றிருக்கிறான் மாசேதுங்!

இரு நாடுகள் - இரு பாடங்கள்!

ரோம் - வாழ்ந்து கெட்டது! மலரவில்லை இன்னும்! சீனம் - சிதைந்தது - இப்போது செழித்தது! மறுமலர்ச்சி அது!

நாம்? திராவிட நாட்டாராகிய நாம்?

வாழ்ந்தோம் - வீழ்ந்தோம் - மீண்டும் தலையெடுத்திருக்கிறோம்! மூன்றுநிலை - மாறி மாறி வரும் நிலை! மூன்றாவது நிலை இனிமேல் வீழ்ந்துபடாமல் நம்மால் காப்பாற்றப்படவேண்டிய நிலை!

மூன்று நிலைகளையும் ஓரிரு உதாரணங்களால் விளக்குகிறேன். உலகத்திலே பல்வேறு நாடுகளும் தங்களுடைய சிறப்பை செங்கோலோச்சுவோரின் மூலமாகவே அந்நாட்களில் நிலநாட்டின என்றாலுங்கூட - அந்த செங்கோலுக்கு பின்னால் மறைந்து நின்ற கலைத் திறமை - இலக்கிய வளம் - விஞ்ஞான அறிவு - ஆகியவைகள் நாம் மறந்துவிடக்கூடாது.

இங்கிலாந்து - அரசர்களாலும் பெருமை பெற்றிருக்கலாம். ஆனால் ஷேக்ஸ்பியர் ஏற்றிவைத்த புகழ்தீபம் என்றும் அணையாத சுடர் கொண்டது. பிரான்ஸ் என்றால் நெப்போலியனின் நினைவு வருவது போலவே- நாடக ஆசிரியர் மோலியேரின் நினைவும் வரத்தான் செய்கிறது. ஹாலந்து குடியரசான கதையைக் காணும் போது ஆரஞ்சு வில்லியம் எதிரே நிற்கிறான். ஹாலந்தின் ஓவிய நிபுணன் ராம் ராண்டும் நிழல்போல ஹாலந்தின் புகழைத் தொடருகிறான்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இலக்கியமும் - கலையும் - ஓவியமும் - சிற்பமும் - ஆட்சியோடு போட்டிபோட்டு அந்நாட்டுக்குப் பசுமை குன்றாத புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆட்சியோடு சேர்ந்து அந்நாடுகளின் பாலைவனத் தரையாகவும் ஆக்கியிருக்கின்றன. அதே நிலைமையை நாம் நமது திராவிடத்திலும் காண முடிகிறது.

பாயும் அருவி - பறக்கும் கிள்ளை - அழகு துள்ளும் மான் - ஆவேசம் அள்ளும் வேங்கை - இவைகளே ஓவியத்திலே சித்திரித்தார்கள்.

அந்நாளில் வீர பரம்பரை நாட்டை ஆண்டுவந்தது!

பிறகு - பாயும் அருவியிலே ஒரு தாமரை! தாமரை இதழிலே லட்சுமி! பறக்கும் கிள்ளையிலே மன்மதன்! அழகு துள்ளும் மான் - அந்த மாய மானைத் துரத்தும் ராமன் - அவனுக்கோர் புராணம்!

இந்நாளிலே பக்திமான்கள் நாட்டைப் பரிபாலித்தார்கள்! இது இரண்டாவது நிலை - வாழ்ந்து கெட்ட நிலை!

புறநானூறு கையிலே இருந்து ஒரு நாள் - புராண இதிகாசங்கள் இலக்கியமாயின மறுநாள்-எழுத்தெல்லாம் புதுமையெனும் இனிமை, மொட்டவிழ்கிறது இந்நாள்!

ஆயிரம் நீலக்கண்களால் அழகை வாரிக்கொட்டி, மேகத்தைக் கண்டு மோகத்தால் ஆடும் மயிலைத்தீட்டி மகிழ்ந்த சித்திரக்காரன் - எழிலேற்றிக் காட்டிய ஓவியன்- அந்த மயில்மீது முருகனையும் ஏற்றிக்காட்டினான்.

அந்தத் தோகை மயில் மீதிருந்து வேலினை இறக்கி விட்டு - ‘ஆடு மயிலே ஆடு’ என்று தூரிகை மூலம் உரிமை வழங்கத் துவங்கிவிட்டது இந்நாள் ஓவிய உலகம்.

இதுதான் மறுமலர்ச்சி மணம் மொண்டு வரும் தென்றலின் நுழைவு வாயில்.

“திங்களைப் போற்றுதும் - திங்களைப் போற்றுதும். ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு போற்றுதும்” என்று துவங்கிய தமிழ் ஒலி, ‘பிறைகுடிப் பித்தனைப் போற்றுதும்’ என்று களங்கமடைந்தது. இப்போது களங்கமடைந்த சமுதாயம் கண் விழிக்கிறது - அதன் அடித்தளத்திலே நின்று கொண்டு ‘திங்கள் வாழ்க! செங்கதிர் வாழ்க!’

என்று குரலெழுப்புகிறான் கவிஞன்!

திராவிடம், தொண்டை கட்டியபோன இசைவாணன் நிலையிலேயிருக்கிறது.

அதற்கு மருந்து எடுத்துக்கொண்டு ஓடோடியும் வருகிறது மறுமலர்ச்சி இயக்கம். அதன் முன்னணியிலே அண்ணா!

இசைவாணனின் கெட்டுப்போன குரல் சீர்படும்! இன்ப மழை பொழியும்!

அதோ மறுமலர்ச்சி உதயமாகிறது. அந்த உதய தாரகையிலே நாம் கனவு காணும் உன்னத சமுதாயம் ஒளிவிடத்தான் போகிறது.

ஜனநாயகம்

சிறை வாழ்வைப்பற்றி எழுதும்போது எங்கள் ராஜ்யத்துப் பேச்சுமன்றத்தைப்பற்றி குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. அதைக் குறிப்பிடும்போது - அங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது. அந்த விளக்கம் என்னையறியாமலே ஒரு கட்டுரையாக மாறிவிடுகிறது. அதுவும் பயன்படலாம் என்று நம்பிக்கையோடுதான் உங்களிடையே வைக்கிறேன்.

எங்கள் ராஜ்யம் குறைவின்றி நடந்து கொண்டிருக்கும் போது சென்னையிலே அடைபட்ட அறப்போர்த் திலகர்களும் தொண்டர்களும் வரிசை வரிசையாக விடுதலை பெற்றுக்கொண்டேயிருந்தார்கள். அண்ணாவும் துணைச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், மதியழகன், இருவரும் - சிறையிலேயிருந்த காரணத்தால் கழகத்தின் காரியங்களை கவனிக்கும் பொறுப்பாளர் பதவியை தோழர் கோவிந்தசாமி எம். எல். ஏ., அவர்கள் ஏற்றுக் கொண்டார். இது நமது கழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் என்று கூறலாம்.

தோழர் கோவிந்தசாமி பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்த ஏட்டிலே கையெழுத்திட்டு அதன் ஆதரவு பெற்று வெற்றிமாலை சூடியவர். ஜெயில்போதையிலே மக்கள் மறந்துவிட்டு, பதவி வெறியிலே அற்பர்களாக மாறிவிடும் ஒரு சில அரசியல் மோசடிக்காரர்கள் உலவும் தமிழகத்திலே அவர்களுக்குத் தன் பொன்னான செயல்மூலம் சாட்டையடி கொடுப்பவர் கோவிந்தசாமி. கழகத்தின் முக்கியமானவர்கள் எல்லாம் சிறைக் கூண்டுகளிலே!

வெளியிலே இருந்த ஒரு சிலத் தீவிரர்களும் நாடெங்கும் மின்னல் வேகத்திலே சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தில்லைக் கழகப் பொறுப்புகளை தாங்கி நடத்திட கோவிந்தசாமி போன்ற தகுதி மிக்கவர்தான் தேவை. பொறுப்பேற்ற கோவிந்தசாமி, கழகத்திலே பல ஆண்டு காலம் இருந்து பழக்கப்பட்ட ஒருவரைப்போலவே கழக நண்பர்களோடு பழகிடவும் - கழக வேலைகளை மும்முரமாகக் கவனித்திடவும் - துவங்கினார். கழகத்திற்கு அவர் ஓர் தூணாக மாறியதுமில்லாமல், தி. மு. க. வின் தேர்தல் கொள்கையை கையாண்டி செய்து வந்த கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம் போன்ற கட்சிகளுக்கு அசைக்க முடியாத பதிலாகவும் தன்னை ஆக்கிக் கொண்டார்.

கழகம் மக்கள் மன்றிலே விசாலமான இடத்தையும்- சரித்திரத்திலே நிலையான இடத்தையும் - பெற்றுக் கொண்டு திராவிடத்தின் வீடுதோறும் புது நடைபோட்டு வளர்கிறது என்ற இன்பத்தேனூறு செய்திகளாக உருவெடுத்திடுவது கேட்டு புளகாங்கித முற்றிருந்தது எமது சிறை ராஜ்யம். நான் முன்பே கூறியிருக்கிறேன்; எங்கள் ராஜ்யம் இரண்டுமாத காலம்தான் பாங்கு கிடந்தது என்றும் அதன்பிறகு சிறுகச் சிறுக தேய்ந்து விட்டது என்றும்! அந்தத் தேயும் நிலை ஆரம்பமாகிவிட்டது.

ஆகஸ்டு 24ம் நாள் முதன் முறையாக எங்கள் ராஜ்யம் குறையத்தொடங்கியது. காட்டுப்புத்தூர் வீரர்கள் தோழர் ராஜமாணிக்கம் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர் எம்மைப் பிரிந்து சென்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் பொறையாறு அழகப்பா முதலிய பல தோழர்கள் ராஜ்யத்தைவிட்டு வெளியேறினார்கள். எஞ்சியுள்ள தோழர்களுக்கு விடுதலை உணர்ச்சியைக் கிளப்பிவிட்டுக் கூடிய அந்தப் பிரிவுகளால் ராஜ்யம் சோபையிழந்து விட்டுக்கூடாதே யென்பதற்காக பேச்சு மன்றம், முன்னி

லும் வேகமாகப் பணியாற்றியது. அந்த ஒன்றரை மாத காலத்திற்குள்ளாகவே சில நல்ல பேச்சாளர்கள் தயாரானார்கள். பலதிறப்பட்ட பொருள்களின் மீது விவாதம் நடத்தி பேச்சாற்றலில் வளர்க்க முயற்சிக்கப்பட்டது.

ஒரு நாள் ‘ஜனநாயகம்’ என்பது பற்றி மிகவும் அருமையாக நண்பர்கள் பேசினார்கள். பேசுவது மட்டும் மன்றி ஜனநாயகத்தின் உண்மை உருவத்தையும் - ஜனநாயகம் என்ற பெயரால் நாட்டிலே திரியும் போலித் தலைவர்களின் தன்மையையும் - ஆராய வேண்டியது இன்றைய சூழ்நிலையிலே மிக மிக அவசியமான காரியம்.

எந்தச் சொல்லிலும், அதன் தன் பெயரிலே மயங்கி விடாமல் அது புரியும் செயல் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உதாரணமாக- கும்பாபிஷேகம் - கொள்ளை யடித்தல் - என்ற இரு வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம்.

பழையகால மன்னர்கள் கட்டும் கோயில்களில் மூல விக்கிரகம் அமைக்கும்போது அதன் அடியில் விலை உயர்ந்த நவரத்தினங்கள் அள்ளிவிறிக் கொட்டி - அதன் மீது விக்கிரகத்தை அமைப்பார்கள். இந்த ரகசியத்தை சில பெரிய மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். அந்தப் பழைய காலத்து ஆலயத்தைப் புதுப்பித்து, ‘ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம்’ நடத்தப் போகிறேன் என்று பெரிய வள்ளல்போல கிளம்புவார்கள். அவர்களுடைய குறியெல்லாம் மூல விக்கிரகத்தின் அடியிலே அந்நாள் மன்னர் கொட்டியிருக்கும் நவரத்தினங்களின் மீதுதான்.

கோயில் பழுது பார்க்கும் வேலை நடைபெறும். அந்தப் பார்வையினுள்ளே மூல விக்கிரகத்தின் அடிப் பாகம் தோண்டப்பட்டு நவரத்தினங்கள், வள்ளல்களின்

வீடுபோய்ச் சேர்ந்துவிடும். கிடைத்த லாபத்திலே - கால் பங்கு செலவிலே - கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். “கொடைவள்ளலே! குணக்குன்றே!” எனப் பக்தர்கள் பாராட்டுவார்கள். கும்பாபிஷேகம் என்ற குளிர்ச்சியான சொல்லிலே திரை மறைவுக் கொள்ளை சுமுகமாக நடைபெற்று விடுகிறது. ஒரு சில கொள்ளைக் காரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொள்ளை யடிப்பதே தொழில். கொள்ளைக்காரர் என்ற பகிரங்கப் பட்டமும் பெற்றவர்கள்.

அவர்கள் கொள்ளையடித்த பொருள்களை எல்லாம் ஏழைகளுக்கே பங்கிட்டுக் கொடுத்து அதில் ஓர் தனி இன்பம் கண்டிருக்கிறார்கள்.

இரண்டு வார்த்தைகள் - கும்பாபிஷேகம் - கொள்ளை யடித்தல்! கும்பாபிஷேகத்தின் பெயரால் கொள்ளை - கொள்ளையின் பெயரால், கும்பாபிஷேகத்தை விட சிறப்பான செயல்!

இப்போது - ஜனநாயகம் என்ற சொல்லைப்பற்றி யோசிப்போம்! ஜனநாயகம் - சர்வாதிகாரம் - கும்பாபிஷேகம் - கொள்ளையடித்தல் இந்த வார்த்தைகளையும் பொருத்திப் பார்ப்போம்.

ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் நாடுகள் எத்தனையோ உண்டு! வெகுதூரம் போவானேன்; இந்தியாவிலே எத்தனை ஆதாரம் வேண்டும் அதற்கு! சட்டசபையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பு கொடுப்பது தன்னிஷ்டத்தைப் பொறுத்தது என சென்னை மந்திரியார் ஆச்சாரியார் கூறவில்லையா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், மக்கள் முன்பு தேர்தலின்போது நிற்காதவர்களும் கொள்ளைப்புற

வழியாக மந்திரி நாற்காலிகளைப் பிடித்துக்கொள்ள வில்லையா? திருவாங்கூர் கொச்சியிலே ஜனநாயகச் சிசு, துடிக்கத் துடிக்க கொல்லப்படவில்லையா?

ஜனநாயகம் - இன்பமான சொல்! அதிலே நஞ்சு கலப்போரும், அந்தச் சொல்லை வைத்துக்கொண்டு போலி நாடகமாடுவோரும் உலகிலே பல நாடுகளில் காணப்படுகிறார்கள்.

இங்கிலாந்தில் சார்லசின் தலையை வெட்டி எறிந்து - கிராம்வெல் நடத்திய பார்லிமெண்டு ஆட்சி சிறிதுகாலம் நடைபெற்று - மீண்டும் அரசுரிமைக்கு இடம் ஏற்பட்டு - அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி பார்லிமெண்டு நாட்டையாளத் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பார்லிமெண்டு மக்களின் பிரதிநிதித்துவம் பெற்றதாகவா இருந்தது. கேட்கும்போது சுவையாகத்தானிருக்கிறது - அரசனின் அதிகாரத்தை பார்லிமெண்டு கட்டுப்படுத்தி விட்டது என்ற செய்தியை!

ஆனால் அதனுள் மறைந்து கிடக்கும் உண்மை மகா பயங்கரமானதாயிருக்கிறதே!

1793ம் ஆண்டு இங்கிலாந்திலே யிருந்த காமன்ஸ் சபையில் 306 உறுப்பினர்கள் இருந்தார்களாம். அவ்வளவு பேரும் மொத்தம் 160 வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம். 306 பேர் 160 பேரால் தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு ஆச்சரியம் என்கிறீர்களா? அதாவது 17ம் நூற்றாண்டில் நடந்த ஆச்சரியம் - இதோ 20ம் நூற்றாண்டில் யாராலுமே தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மந்திரிகளாக வருகிறார்களே - ஜனநாயக ஆட்சியின் பெயரால் இந்தியாவில்!

இது எத்துணை மகத்தான ஆச்சரியம்! கும்பாபிஷேகம் செய்து கொள்ளையடிப்பதை விட பெரிய ஆச்சரியமல்லவா இது!

கும்பாபிஷேகத்தையும் ஜனநாயகத்தையும் ஒன்றுக ஒப்பிட்டுவிட்டேனென்று கருதுகிறீர்களா? கும்பாபிஷேகம் நல்ல எண்ணத்தோடு செய்யப்படுவதும் - பக்தர்களால் பாராட்டப்படுவதும்கூட உண்டு! நாம் ஆராயப் புகுந்தது கும்பாபிஷேகத்தின் தன்மையை அல்ல! அதை நடத்துவோரின் குறிக்கோளைத்தான். பக்தர்களுக்கு இனிப்பான வார்த்தை நாசகாரர்களின் நாடகத்திற்கு பயன்படுகிறது. மக்களுக்கு இனிப்பான ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தை மதோன்மத்தர்களால் பாழ் படுத்தவும் படுகிறது.

அழகான மலர்மாலையைப் பிய்த்தெறியும் மந்தியும் உண்டு. காதலியின் கழுத்திலே அணிந்து களிப்படையும் காதலனும் உண்டு. மாலையின் நிலையிலே ஜனநாயகமும், மந்தியின் நிலையிலே ஆட்சியாளரும் இருந்துவிட்டால் அந்த ஜனநாயகம் யாருக்குப் பயன்படமுடியும்!

ஜனநாயகத்தின் பெயரால் கொடுமைகள் நடந்து விடுகின்றன. உதாரணம் சுலபமான உதாரணம் - உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உதாரணம் - இந்தியா!

சர்வாதிகாரத்தின் பெயரால் நன்மைகள் மலர்வதும் உண்டு! கொள்ளைக்காரன் ஏழைகளுக்கே உதவுகிறான் என்று பார்த்தோமே - அதுபோல!

உதாரணம் - தற்காலிகமாக எகிப்தையே எடுத்துக் கொள்ளுவோம்! ஸ்டாலினின் ரஷ்யாவையும் காண்போம்!

தோட்டத்து மலர்கள் அத்தனையும் ஒருவனே பறிப்பது - பறிக்க உரிமை கொண்டாடுவது - பறித்த மலர்கள் இப்படித்தான் கசக்கி எறிவேன் என்பது - சர்வாதிகாரம் என்றால், பறித்த மலர்கள் பாங்கான மாலையாகி, மக்கள் மன்றம் என்ற எழிலோவியத்திற்கு

அணிவிப்பது சர்வாதிகாரத்துடன் ஒட்டியிருக்கும், நல்லெண்ணம் நிறைந்த ஜனநாயக உணர்ச்சி என்றுதான் கூறவேண்டும்.

இந்த சர்வாதிகாரம் என்ற வார்த்தையை கொள்ளையடித்தல் என்ற வார்த்தையோடு கூட ஒப்பிடுவது தவறுதான்! விளக்கம் தெளிவாக இருக்கவேண்டுமென்பதற்காக அந்த உதாரணத்தைக் கையாள நேரிட்டது.

மக்கள் தான் ஜனநாயகத்தை தோற்றுவிக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களும் அதை அழித்து விடுகிறார்கள். “நாங்கள் வெட்டிய கிணறுதானே! ஆளுக்கொரு கல்போட்டு தூர்த்துவிடுகிறோம்” என்று கூறுகிற அறியாமையை ஒத்ததாகும் இது. “நாம் வெட்டிய கிணறுதான் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் எடுக்கத்தான் உரிமை யிருக்கிறது - கல்போட எண்ணுவது தவறு - அதற்கு உரிமையளிக்கவும் கூடாது” என்ற அறிவுரையுடன் கற்கள் தடுப்பதற்காக கிணற்றின் மீது இரும்பு வலை போடுவதும் உண்டு.

அந்தத் தற்காப்பு வலை சில நேரங்களில் சர்வாதிகாரம் போன்று தோன்றினாலும் அது ஜனநாயகக் கிணற்றைக் காப்பாற்ற பெரிதும் பயன்படுகிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த முறையைத்தான் வருங்காலத்தில் ஜனநாயக ரீதியில் நாடாளப்போகிற திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச் செயலாளர் மூலம் கடைப்பிடித்து நிற்கிறது. இந்தியாவின் ஆட்சியாளரும் ஜனநாயகக் கிணற்றைப் பாதுகாக்கிறார்கள். கிணற்றின் உள்ளே கல் விழாமல் இரும்பு வலை போட்டல்ல!

பெரிய இரும்புத்தகடே போட்டு மூடியிருக்கிறார்கள்; கிணறு நீரை யாரும் மொண்டு விடாமலும் - கிணற்றுக்குள்ளே சூரிய ஒளியும் - காற்றும் சென்று விடாமலும் பார்த்துக்கொள்வதற்காக!

பாவம் - ஜனநாயகம் மூச்சுவிட முடியாமல் அரியலூர் சப் ஜெயில் கூண்டுக்குள்ளே அகப்பட்ட கைதிபோலத் தத்தளிக்கிறது இந்த அகிம்சா ஆட்சியாளரின் கையில் சிக்கிக்கொண்டு!

கல் விழாமல் தடுக்கின்ற இரும்பு வலை போன்ற சர்வாதிகாரமும் - தோண்டியவர்களுக்குத் தண்ணீர் வழங்குகின்ற கிணறு போன்ற ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைவதில் தவறில்லையென்பதுதான் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவாயிருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற சர்வாதிகாரம் - பூந்தோட்டத்திற்கு வேலி போல!

ஆனால் “வேலியே பயிரை மேய்வது” என்ற பழமொழி பலித்துவிடாமல் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மொழிப்பற்று — பித்தா ?

பேச்சுமன்றம் புதிய புதிய கருத்துக்கள் பற்றி விவாதிக்கவும் - விளக்கம் பெறவும் - விரிவுரை நிகழ்த்தவும் தன்னைத் தயாராக்கிக் கொண்டது. ‘குறளோவியம்’ பற்றி இரண்டு மூன்று நாட்கள் தோழர்கள் உரையாற்றிய பின் நான் முடிவுரை கூறினேன். குறளின் காமத்துப்பாலின் சுவையை தோழர்களிடம் கூறும்போது - சிறையிலிருக்கிறோம் என்ற எண்ணத்தையும் சில நிமிடங்கள் மறந்து குறளாசிரியரின் வானீலையிலே ஆழ்ந்தார்கள். ஒரு தோழர் பேசும்போது குறிப்பிட்டார்; குறளுக்கு சிறப்பு சொல்லவந்த யாரோ ஒருவர் - வாமனுதாரன் உலகை இரண்டடியால் அளந்தான் - வள்ளுவனும் இரண்டடியால் அளந்தான் - என்பதாகப் பாராட்டியிருக்க

கிறார் என்று! அது பற்றி நான் குறிப்பிட்டேன். வாமனன் இரண்டடியால் உலகை அளந்துவிட்டு, மூன்றாவது அடியை மாபலி என்ற மனிதன் தலையிலே வைத்து அழுத்தினான்! ஆனால் வள்ளுவன் மனிதன் தலையிலே ஏறிக்கொள்ளவில்லை. மனிதனுக்காக நீதி வகுத்தான் என்று விளக்கிச் சொன்னேன்.

‘நாற்காலி’ என்னும் பொருள்பற்றி ஒருநாள் உரையாற்றினோம். இப்படி எத்தனையோ சொற்பொழிவுகள்! சிறைக்குச் சென்றாலும் அது விடுகிறதா என்ன!

ஒரு நாள் பேச்சுமன்றம் வேண்டாம் என்று ஓய்வு எடுத்துக்கொண்டாலும் தோழர் வைத்திலிங்கம் விடமாட்டார். அவர் ஓர் இளம் பேச்சாளர். சிறைக்கு வருவதற்கு முன்பே மேடைகளில் பேசி பழக்கப்பட்டவர். மேடைப்பேச்சுக்கு மெருகேற்றிக் கொள்கிறேன் என்று கூறிக்கொண்டே அவர் தினந்தோறும் மன்றத்தைக் கூட்டும் முயற்சியில் தோழர் வேணுவுடன் சேர்ந்து கொள்வார். எல்லோரின் ஆர்வத்திலும் மன்றம், பயன் விளைவிக்கும் மணிமண்டபமாயிற்று.

‘கருப்பும் - சிவப்பும்’ என்ற தலைப்பிலே - நீக்ரோவர் - செவ்விந்தியர் நிலைமையிலிருந்து திராவிடர் நிலைமைவரையிலே விளக்கப்பட்டது.

நாமெல்லாம் மொழிப்பித்துக்கொண்டு அலைகிறோம் என்று அரசியல் எதிரிகள் குற்றம் சாற்றுகிறார்களே; அது எவ்வளவு தூரம் உண்மையென்று ஒரு நாள் விவாதித்தோம். மொழிப்பற்று? - பித்தா? என்ற தலைப்பின் கீழே! இது பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு பிறகு எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட வேறு சில புதுமைகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மொழியிலே பற்று? அல்லது பித்தா? என்று ஆராய்வதற்கு முன்பு - பற்று என்பதற்கும் பித்து என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். பற்றின் உச்ச நிலைதான் பித்து. அந்தப் பித்து, தானே உண்டாவதில்லை. பற்று வைக்கப்பட்ட பொருளுக்கு ஆபத்து வரும்போது அப்பொருளின் மீது பித்து ஏற்படுகிறது. குழந்தையின் மீது தாய்க்கு அளவற்ற பற்று. குழந்தை திடீரென நோய்வாய்ப்படுகிறது. இறந்துவிடுமோ மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அதை யாராவது தடுக்க முடியுமா? பற்று - பித்தாக மாறுகிறது.

சிறைச்சாலைக்குள்ளே தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதியின் நிலைமையைப் பார்ப்போம். உயிர் மீது பற்றில்லாமலா இருப்பான் அவன். மரணத்தை நோக்கி அவன் அடியெடுத்து வைக்கும் போது - வைகறையின் இளங் காற்று அவனுக்கு இன்பமூட்டுமென்று நினைக்க முடியும். பித்துக்கொண்டு அந்தக் கைதிகள் குதிப்பார்களாம் - பாடுவார்களாம் - அலறுவார்களாம் இங்கே பித்து, விபரீதத்தின் அடிப்படையிலே ஏற்படுவதல்ல. பற்றின் அடிப்படத்திலிருந்து கிளம்புகிறது.

மழலையின் மரணப்படுகை காணும் மாதா - உயிர் துறப்போகும் கைதி - பற்று கொண்ட பொருள்கள் பறிக்கப்படுகிறதே யென்றபோது பித்துக் கொண்டவர்களாகி விடுகிறார்கள். தாய்க்கு குழந்தையைவிட - கைதிக்கு உயிரைவிட - ஒரு சமுதாயத்துக்கு மொழி மிகவும் உயர்ந்தது. அந்த மொழிமீது பற்று வைக்காதவர் யாரே உளர்! அந்தப் பற்று அறுக்கப்படும்போது பற்றுகொண்டோர் பித்தர்களாக மாறுவதிலே என்ன

தவறு! அந்தப் பித்து ஏற்பட அடிப்படை எது? பற்றை அறுக்க முனைவதுதானே! அந்த வேலையைச் செய்வது யார்?

மொழியிலே நாம் பற்று வைக்கிறோம். அதை அறுத்து நம்மைப் பித்தர்களாக்குகிறார்கள். ஆகவே பித்து பிடிப்பது நம் தவறல்ல - அத்தகைய பித்து தவறுமல்ல! இந்த முடிவுக்கு பேச்சு மன்றத்தினர் வந்தோம். மொழிக்காக உயிர் கொடுத்த தாளமுத்து நடராஜன் இருவரின் கல்லறையிருக்கும் திசையைப் பார்த்து வீர வணக்கம் செலுத்தினோம்.

லத்தின் மொழியின் ஆதிக்கம் ஐரோப்பாவெங்கும் பரவி - வேறு நாட்டுத் தாய்மொழிகள் எல்லாம் தலையெடுக்காமல் அழுந்தியிருந்த காலத்தில் தாய்மொழிப் பித்துக்கொண்டு - “இனி லத்தீனில் எழுதுவதில்லை, எமது பிரஞ்சு மொழியிலேதான் எழுதுவோம்” என்று சபதம் எடுத்துக்கொண்டுக் கிளம்பிய பிரஞ்சு நாட்டு இளம் எழுத்தாளர்களே - 16ம் நூற்றாண்டின் மொழிக் காவலர்களே பெருமையோடு நினைத்துக் கொண்டோம்.

அந்த சரித்திரத்தையும் படித்துவிட்டு - இப்போது தாய்மொழியை மறந்து - ஆதிக்கக்காரர்களின் மொழியாம் இந்திக்கு ஆலவட்டம் சுழற்றும் ஆஷாட பூதிகளின் வரலாற்றையும் பார்க்கின்றபோது எவ்வளவு வேதனையாயிருக்கிறது என்று கண்ணீரும் விட்டோம்.

எம்மையறியாமலேயே - மொழிப்பித்து ஏற்பட்டு விட்டது.

“தமிழென்று தோள் தட்டி ஆடு! அந்தத் தமிழ் வெல்க என்றே தினம் பாடு!”

என்று பேரொலி எழுப்பினோம்.

“கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை” என்று குரலெடுத்தோம். அன்றைய மன்றம் முடிந்தது.

அதிசயம்!

சிறைச் சாலையில் ஒரு நாள் பேச்சு மன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மன்றத்து மத்தியிலே நான் அமர்ந்திருக்கிறேன். வெள்ளுடை அணிந்த ஒரு நர்ஸ் அங்கு வந்தாள். தான் கல்லக்குடிக்குப் பக்கமுள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்ததாகவும் போராட்டத்தில் காயம்பட்டவர்களுக்கெல்லாம் தானே சிகிச்சை செய்ததாகவும் கூறினாள். அவள் பேச்சிலிருந்து நமது இயக்க அனுதாபமுடையவள் என்று புரிந்தது. நல்ல சிவப்பு. குறுகுறுப்பான பார்வை.

கவரும் சக்தி படைத்தவள். ‘கருணாநிதி எங்கே’ என்று என்னையே கேட்டாள். ‘நான் தான்’ என்றேன். “ஓகோ அரும்பு மீசை வைத்ததும் அடையாளமே புரியவில்லை” என்றாள். போய்விடுவாளாக்கும் என்று எதிர்பார்த்தேன். போகவில்லை. நின்றுகொண்டேயிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கிழவரும் வந்தார். அவர் அவர்களுடைய தந்தையாம். “அப்பா! இவர்தான் கருணாநிதி” என்று அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். ஏன் இருவரும் அங்கு வந்தார்கள் தெரியுமா? அந்த ‘நர்ஸ்’ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமாம்.

திடீரென்று என்னைப் பார்த்துச் சொன்னாள்; “நான் உங்களைக் காதலிக்கிறேன்” என்று! நான் திடுக்கிட்டுப்

போனேன். பேச்சு மன்றம் கொல்லென்று சிரித்து விட்டது. நர்சுக்கு அப்போதுதான் நாணம் பிறந்தது. தந்தையை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். நான் வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தேன். இதோடா முடிந்தது! ஒரு தமிழ்க்காரிக்கும் தோழர் சத்திக்கும் தகராறு! தமிழ்க்காரி தன் கணவனிடத்திலே சத்தியின் விஷமத்தைப்பற்றிக் கூறிவிட்டாள். அவள் கொஞ்சம் இளம் வயதுக்காரி. சத்தியும் மணமாகாதபிள்ளை! ஏதோ தவறு நடந்து விட்டது!

அதை பேச்சு மன்றத்திலே சிரிப்பாய் சிரிக்க வைத்துவிட்டாள் அந்தப் பொல்லாத தமிழ்க்காரி. தோழர் ராமசுப்பையா, அவளிடம் மோர் வாங்கிக்கொண்டு கடன் சொல்லி ஏமாற்றிவிட்டாராம். சிறையிலே அவர் காசுக்கு எங்கே போவார். அதையும் பெரிய குற்றச்சாட்டாக்கி காரைக்குடியாரின் நாணயத்தைப்பற்றி வெளுத்து வாங்கிவிட்டாள்.

என்ன மூக்கிலே விரல் வைக்கிறீர்கள்! சிறைச்சாலையிலே பெண்கள் எப்படி வந்தார்கள் என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்?

பேச்சு மன்றத்திலே நடந்த (Fancy Dress) மாறு வேடப் போட்டியின் போதுகூட பெண்கள் வராமலிருந்தால் சுவைக்குமா என்ன? பெண்கள் மட்டுமா வந்தார்கள்? ஒரு குடு குடுப்பைக்காரன் கூட வந்தான்.

“குடு குடு குடு குடு! நல்ல காலம் பிறக்குது - திராவிட நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குது! அந்த மூலையிலே ஒருத்தன் அய்யோன்னு போறான் - துரோகம் பண்ணினவன் தொலையப்போறான் - காலையிலே கூட சொன்னேன் - காலையிலே கூட சொன்னேன் - சொரண்டிப்

பிழைக்கிறவன் சுருக்குன்னு போறான் - குடு குடு குடு குடு ஒரு பழைய துணி இருந்தா குடு குடு குடு!”

நரிக் குறவனும் - குறத்தியும் தோன்றினார்கள் “ஆயாலக்குறி - ஆயாலக்குறி” - என்று பாடியபடியே! வயிறு புடைத்த அய்யரும் - வறுமையிலிடப்பட்ட கெச்சவாளியும் வந்தார்கள்! குமார்கள் கிழவர்களாக மாறி வந்தார்கள். ஆண்கள் பெண்களாக மாறிவந்தார்கள் அழகிகளாகக் கூட!

சிறைச்சாலையிலே ஏதோ ஒரு பெரிய மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்து அதிலே மாறுவேடவிழா நடத்துங்கள் என்று யாரும் அனுமதி தரவில்லை. வேலையில்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையிலே தோழர்களின் சொந்த முயற்சியிலே பல வேடங்களில் தோன்றி, பாடி, மகிழ்வித்தார்கள். சிறைச்சாலையிலே பூத்திடும் மலர்கள்-நான் மேலே போட்டிருந்த பச்சைத் துண்டு போன்ற ஆடைகள் - முடிவெட்டும்போது கத்திரித்த ரோமங்கள் - அடுப்பின் கரிகள் - ஆகிய பொருள்களைக் கொண்டு, அலங்கார அணிகளும், ஆடைகளும், மீசைகளும், தாடிகளும், தயார்செய்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாத வெற்றியுடன் நடத்தப்பட்ட அந்தப் போட்டியிருக்கிறதே; அது - “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பதைத்தான் நினைவூட்டியது.

வல்லமையில்லாத ஆரியத்துக்கே- புல்லும் ஆயுதமாயிருக்கும்போது வல்லமையுள்ளவர்களுக்கு இருப்பதுதானே பெரிய காரியம்.

போட்டியின் நீதிபதிகளாக மன்னார்குடி நாராயணசாமி, காட்டுப்புத்தூர் ராசமாணிக்கம், பேராவூரணி வடிவேல், வைத்தீஸ்வரன் கோயில் முருகையன், K. R. கல்மணி ஆகியோர் இருந்து தீர்ப்பு வழங்கினர்.

திருச்சி டி. எ. கமலன் முதற் பரிசும், கொரநாட்டுக் கருப்பூர் G. நாராயணசாமி இரண்டாம் பரிசும், கம்பாநத்தம் கடல்வண்ணன் மூன்றாம் பரிசும், பெரியசாமி நான்காவது ஸ்பெஷல் பரிசும் பெற்றார்கள். அவர்களுக்கு “கல்லக்குடி பதக்கம்” பரிசளிக்கப்படும் என்றும், அந்த பரிசளிப்பு விழாவை மணப்பாறையில் தோழர் கஸ்தூரி நடத்துவதென்றும், விரும்பியதின் பேரில் அங்கு விழா நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

இன்னொரு ஞாயிற்றுக்கிழமை - ஒப்புவித்தல் போட்டி. முதலில் சத்தி, திருவையாறு மணி, கிட்டப்பா, திருவாரூர் விசயராகவன், கரூர் முருகேசனூர் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்டு நடைபெற்றது. அதில் பாரதிதாசன் கவிதைகளும், திரு. வி. க. வின் உரை நடைகளும், அண்ணாவின் பொன்மொழிகளும், நமது திரைப்படங்களின் உரையாடல்களும், புறநானூறு செய்யுட்களும் போர்வாள் முதலிய நாடக வசனங்களும் பல தோழர்களால் ஒப்புவிக்கப்பட்டன.

அதில் முதற்பரிசு பெரியசாமிக்கும், இரண்டாம் பரிசு அடைக்கலத்திற்கும், மூன்றாம் பரிசு S. M. வைத்திலிங்கத்திற்கும், நான்காவது ஸ்பெஷல் பரிசு G. நாராயணசாமிக்கும் கிடைத்தது. அந்தப் பரிசளிப்புவிழாவை ஜெயங்கொண்ட சோழபுரத்தில் நடத்துவதாக தோழர் வேணுகோபால் அனுமதி வாங்கிக்கொண்டார்.

ஒரு நாள் இசைப்போட்டியும் நிகழ்வுற்றது. தோழர்கள் உள்ளிக்கோட்டை சிங்காரவேல், திருவாரூர் தென்னன், கரூர் நாராயணன் ஆகியோர் நீதிபதிகளாய் அமர்ந்தனர்.

மாயவரம் செபாஸ்டின் முதற் பரிசும், அபிவிருத்தீஸ்வாம் நடராசன் இரண்டாம் பரிசும், ஓவியன் கருணா மூன்றாம் பரிசும், (சக்கரசாமம்) அப்பாசாமி நான்காவது ஸ்பெஷல் பரிசும் பெற்றார்கள்.

இவர்களுக்கு பரிசளிப்பு விழாவை மன்னார்குடியில் தோழர் நாராயணசாமி நடத்துவதாக கேட்டுக் கொண்டார். மன்றமும் இணங்கியது.

கடைசியாக ஒரு ஞாயிறன்று - பேச்சு மன்றத்தின் அறுவடையை கணக்குப் பார்க்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுதான் பேச்சுப்போட்டி.

திருவையாறு R. S. மணி, அழகான கருத்துக்களை அள்ளிச் சொரிந்து முதற் பரிசை அடைந்தார். திருவிடமருதூர் T. A. ராமசாமி, பெருமிதமான வார்த்தையோட்டத்தால் இரண்டாம் பரிசைத் தட்டிவிட்டார்.

உள்ளிக்கோட்டை சிங்காரவேல், எடுத்துக்கொண்ட பொருளை எழில் ததும்பச் சொல்லி மூன்றாம் பரிசுக்குரியவரானார். பேராவூரணி வடிவேல் நகைச்சுவை ததும்பப் பேசி நான்காவது ஸ்பெஷல் பரிசை ஏற்றார்.

அந்தப் போட்டிக்கு நீதிபதிகளாக, நானும், தோழர்கள் ராமசுப்பையா, அடைக்கலம், நாகை பாப்பையன், B. சாமிநாதன் ஆகிய நால்வரும் அமர்ந்து தீர்ப்பு வழங்கினோம். அவர்களுக்கு பரிசளிக்கும் விழாவை மாயவரத்தில் நடத்துவதற்கு தோழர் கிட்டப்பா கேட்டுக் கொண்டு மன்றத்தின் இணக்கம் பெற்றார்.

“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்ற கவிஞரின் பாடல் உரக்கப் பாடினோம். உற்சாகம் கொப்பளிக்கப் பாடினோம்!

நானூறுக்கு மேற்பட்டோரின் மொத்த வாழ்க்கை சிறையில் எப்படி நடைபெறுகிறது என்பதை விவரித்து விட்டேன். என் வாழ்வு எப்படி ஓடியது என்பதைக் கூறாமலிருக்க முடியுமா?

அவருடைய திருக் கரங்களால் எண்ணெய் தேய்த்து - சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டும்போது - என் அன்னையின் பொற்கரங்களின் ஸ்பரிச உணர்ச்சியையே கண்டேன் நான். குளித்துவிட்டு அறைக்கு வருவோம். வீட்டிலே மனைவிகூட அவ்வளவு ஒழுங்காக உடைகளை எடுத்துத் தந்து உபசரிக்க முடியாது; அத்துணை அழகாக உடைகளை எடுத்து வழங்குவார் தோழர் கஸ்தூரி. உடை இலாகாவை அவரிடம்தான் ஒப்புவித்திருந்தோம். உடனே தென்னன் காலை உணவுடன் எங்கள் அறையில் நுழைவார்.

சாப்பிட்டானதும் ஒரு சிகரெட் பிடிக்கலாம் என்ற காரணத்திற்காக சாப்பிடுவோம். அத்தகைய சாப்பாட்டுக்கும் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு- நம்மோடு ஒட்டிவராவிட்டால் அதோடு நாம் ஒட்டிப்போவோம் என்ற தத்துவார்த்த சிகரமாக எம்முடன் ஒருவர் இருந்தார். அவர்தான் திருவாரூர் டாக்டர் விசயராகவன். சிறையிலே தரப்படும் கடல் உருண்டை என்றால் அவருக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா? ஒரு நாள் அவர் கடல் உருண்டைக்காக இன்னொரு தோழருடன் பந்தயம் கட்டி நூறு ‘பஸ்கி’ போட முனைந்தார்.

பந்தயத்தில் தோற்றதால் கடல் உருண்டை கிடைக்கவில்லை. தொடை முழுதும் கடல் உருண்டைகள் போல வீங்கிவிட்டது. இரண்டு மூன்று நாள் மருத்துவ மனையில் இருந்தார். ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு “ஜாம்பவான்” வேலைக்கெல்லாம் போகலாமா?

காலை உணவு முடிந்ததும் நண்பர்கள் மன்னை நாராயணசாமி, அடைக்கலம், விசயராகவன், அத்தான், வடிவேலு, சத்தி, தென்னன், முத்துப்பேட்டை தெட்சணமூர்த்தி, கோபால்சாமி, வேணு, வைத்தீஸ்வரன் கோயில் முருகையா, திருவையாறு மணி, எதிராஜ், உசேன் ஆகி

யோர் ஓரிடத்தில் கூடுவோம். பழைய காலத்து ராஜா ராணிகளைப் பற்றியும், அவர்களுக்கு ‘ஜோக்கர்’ போல இருந்த பிரபுக்களைப்பற்றியும் பேசுவோம். இங்கிலாந்து சரித்திரத்திலே இப்படிப்பட்டவர்களின் கேளிக்கைகள் மிக மிக அதிகமல்லவா? கொரியாவுக்கு செல்லும் இந்தியத் துருப்புகள் பற்றியும் விவாதங்கள் நடத்துவோம். குடியரசு காலத்திலேகூட முடியரசு இருக்கிறது பார் என்று நாராயணசாமிக்கும், விசயராகவனுக்கும் தீப்பில் துப்பட்டியால் முண்டாசு கட்டி வேடிக்கை செய்வோம்.

சிறைச்சாலைக்கு சென்றதும் - எப்படியெல்லாம் விளையாடத் தோன்றுகிறது பாருங்கள்.

அமைதியான தோற்றமும்-ஆர்வம் நிறைந்த உள்ளமும் நட்புக்கோர் அணிகலனுமான வைத்தீஸ்வரன்கோயில் தோழர் முருகையா, சிறைச்சாலையைவிட்டு வெளியேறுகிற அந்தக் கடைசி நாளின் காலையிலேகூட ராஜா ராணி வேடிக்கை செய்து, அவருக்கு முண்டாசு கட்டிவிட்டுத், தான் வெளியே அனுப்பினோம்.

இப்படி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சிறைச்சாலையின் கொடுமைகள் விரட்டிக்கொண்டிருக்க- உதவி புரிந்த அருமைத் தோழர்கள் எல்லாம் எங்களை விட்டுப் பிரியும் காலம் வெகு விரைவில் வந்துவிட்டது. ஆச்சாரியார் ஆட்சி - எனக்கு ஆறுமாத தண்டனை கொடுத்தது கூடப் பெரிதல்ல! என அன்புத் தோழர்கள் என்னோடு சேர்த்துவைத்து, அவர்கள் பிரிந்து செல்லும் வேதனையை அடிக்கடி உண்டாக்கினதே; அதுதான் பெரிய தண்டனையாக இருந்தது.

தோழர் N. V. நடராசன், அடக்குமுறையின் கோரப் பொறியில் அகப்படுவதற்கு முன்பு - எனக்கு ஒரு கடிதம்

எழுதியிருந்தார் - “வெளியில் என்ன நடக்கிறதோ என்று கவலைப்படுவீர்கள்! வளர்கிறோம் - வளர்கிறோம் - மகிழ்ச்சி அடையுங்கள்” என்று! சிறைச்சாலையில் என்னை சந்திக்க வந்த அண்ணா அவர்களும் சொன்னார்; “வெளியுலகைப் பற்றி நினைத்து மனதை அலட்டிக்கொள்ளக்கூடாது” என்பதாக!

இருந்தாலும் முடிகிறதா; நாங்கள் பிரிந்து வரும் போது தமிழகம் ரத்தக்காடாகவல்லவா இருந்தது! “என்ன ஆயிற்று?” என்று ஏங்கிக்கொண்டுதான் கிடந்தோம்.

கல்லக்குடியிலே போராட்டம், சிந்தனைச் சிற்பி சிற்றரசு அவர்களின் தலைமையிலும் - திருச்சி திராக்களின் மேற்பார்வையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அண்ணாவும் மற்றவர்களும் சிறைக்குள்ளே அனுப்பப்பட்டுவிட்டார்கள். “தலைவர்களே விடுதலை செய்” என்ற முழக்கம் நாடெங்கும் கேட்கிறது. ஆச்சாரியாரும், கவர்னரும் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடிகள் காட்டப்படுகின்றன. இந்த நிலையிலே வட நாட்டிலே யிருந்து நேருவும் வருகிறார்.

அக்டோபர் முதல்நாள் ஆந்திர அரசு அமைகிறது. அதைத் துவக்கிவைக்க பண்டித நேரு அழைக்கப்பட்டிருக்கிறார். மொழிவழி மாகாணத்திற்காக ஆந்திராவில் கிளம்பிய நாற்பது வருடத்துக் கிளர்ச்சிக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. பதவிக்காக கட்சிகள் மாறும் பிரகாசம், காங்கிரசில் சேர்க்கப்படுகிறார். ஆந்திராவின் முதல் பிரதமராகிறார். ஆந்திர அரசு துவக்க நாளிலே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே - தலைவர்கள் பேசுகிறார்கள்.

நேரு பண்டிதர் பேசுகிறார். சென்னை மந்திரி ஆச்சாரியார் பேசுகிறார். ஆந்திரப் பிரதமர் பிரகாசம் பேசுகிறார். எங்கே நின்றுகொண்டு! பொட்டி ஸ்ரீராமுலுவின் எழும்பு மேட்டின்மீது நின்றுகொண்டு! ஆனால் ஒரு வார்த்தை அந்த தியாக சீலனைப்பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மார்பு, உண்ணாவிரதத்தைக் கிண்டல் செய்கிறார் அந்த இடத்திலே நேரு! உண்ணாவிரதம் நாமும்தான் தவறு என்கிறோம். அதற்காக - நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு வீரனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?

காந்தியார் உண்ணாவிரதத்தின் முடிவு இதுபோல் ஆகியிருந்தால்-நேரு கிண்டல் செய்திருப்பாரா? உண்ணாவிரதம் - மறியல் - அறப்போர் - முதலியவைகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுந்தான் ஏகபோக சொத்தா? மற்ற யாரும் அதைத் தொடவே கூடாதா?

எப்படியோ எல்லோரும் தியாகியொருவரை மறந்து விட்டு புதிய அரசுக்கு வாழ்த்துக்கூறினர். அதற்குள் இங்கிருக்கும் சிலர், “ஆந்திரா பிரிந்துவிட்டது - இனிமேல் திராவிடநாடு கோஷம் ஒழிந்துவிட்டது” என்று தீர்ப்புக் கூறிவிட்டனர்.

ஆந்திரா பிரிந்ததால் - “வேங்கடத்தை விடமாட்டோம்” என்ற வீராப்புதான் வீழ்ந்ததே தவிர - திராவிடநாடு பிரச்சினை மடிந்துவிடவில்லை. ஆந்திர அரசு - சென்னையிலிருந்து தன்னை அகற்றிக்கொண்டது. மத்திய சர்க்காரின் பிடியிலிருந்து அது விலகிக்கொள்ளவில்லை. நாளைக்கு கேரளம் தனி மாகாணமாகலாம் - கன்னடமும் அந்த நிலை பெறலாம். பிறகு தமிழகம் தனி மாகாணமே தான்! எல்லாமே தனி மாகாண அந்தஸ்து பெறமுடி

யுமே தவிர வடவர் ஆதிக்கத்திலிருந்து விலகிவிட்ட தனியரசாக எப்படி ஆகமுடியும். நமது லட்சியம், வடவர் தொடர்பிலிருந்து கத்தரித்துக்கொண்டு - இந்த நான்கு மொழிவழி மாகாணங்களும் ஒரு கூட்டாட்சி அமைப்பது - அதற்குப் பெயர் திராவிடக் கூட்டாட்சி என்பது! இந்த முடிவை ஒரு அரசு ஏற்காவிட்டால் மற்ற மூன்று அரசுகளும் சேர்ந்து திராவிடக் கூட்டாட்சி அமைக்க முடியாதா என்ன!

எல்லையிலே சிறிது குறையலாமே தவிர - ‘திராவிடம்’ என்ற சொல்லும், அந்த அரசும் எப்படிக் குலைந்துவிடும்!

பலாப்பழத்தை பாதியாக வெட்டிக் கொடுத்தாலும் அது பலாக்கனிதானே! பாகற்கனியாகிவிடாதே!

அரசியல் இலக்கணம் புரியாதவர்கள் ஏதாவது உளறிக்கொண்டுதானிருப்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டுதான் திராவிட நாடு செத்துவிட்டது என்ற கூச்சல்!

இவர்களாவது சாதாரணமானவர்கள்; ஏதோ வாயில் வந்தபடி உளறிவிடுகிறார்கள் - இவர்களின் தலைவராவது அரசியல் கண்ணியம் வாய்ந்தவராயிருக்கிறாரா என்று பார்த்தால் - அய்யோ! அதுவுமில்லை. ஆந்திர ராஜ்யத்தை துவக்கி வைத்துவிட்டு - சென்னை; கோவை, மதுரை, மாமல்லபுரம், பவானி, முதலிய இடங்களில் சுற்றுப்பயணம் நடத்தினார் பண்டிதநேரு. தமிழகத்தின் தலைவர்கள் சிறையிலே! ஜயபிரகாசர் அடக்கு முறைக்கு ஆளாயினர்! பிணங்கள் விழுந்தன!

சதி வழக்குகள் கிளம்பின! இந்த நிலையிலே கொதித்துப்போயிருந்த திராவிட மக்கள் - தங்கள் எதிர்ப்பினைக் காட்ட நேரு

வுக்கு எல்லா இடங்களிலும் கருப்புக்கொடி காட்டினார். அவரது பொதுவாழ்விலே அதுவரையில் காணாத எதிர்ப்பை அவர் கண்டார். கருப்புக்கொடி காட்டுவது, அரசியலிலே ஒரு முறை! நேருவுக்கும் தெரியாததல்ல! திராவிடரை “நான்சென்ஸ்” என்று இருமுறை இழிந்தார் - ஒருமுறை மன்னித்தோம் - பெரிய மனிதர் என்பதற்காக!

மீண்டும் சொன்னார் - நாம் அவர்பால் கொண்ட தவறான கருத்தை மாற்றிக்கொண்டோம்! கண்டனம் தெரிவித்தோம்!

“கண்டனம் தெரிவித்தோர் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் கூட அல்ல; அவர்கள் எவ்வளவோ மேல்! இவர்கள் அவரினும் இழிமக்கள்” என்று சூடு மொழி கூறினர் மூன்றாவது முறை! “எனக்கு நிகர் யாருமில்லை - எல்லாமே நான்தான்” என்றான் பதினெட்டாம் லூயி! அப்போது பிரான்ஸ் கொதித்தது! “புரட்சி வந்தால் எனக்குப் பின்னால் வரட்டும்” என்று கூறின பதினைந்தாம் லூயி!

பிரான்ஸ் குமுறியது!

“ஒரு கை பார்ப்போம்” என்றான் பாஸ்டிலியின் காவலன் பதினொராம் லூயி! பிரான்சின் எரிமலை வெடித்தே விட்டது!

இவர்களிலே எந்த லூயி - நேருவின் வடிவத்திலே பேசுகிறதோ நமக்குத் தெரியாது! ‘உலக சரித்திரம்’ எழுதிய நேருவுக்குத்தான் தெரியும்!

“அச்சம் கண்கள் மறைக்கும்போது - குற்றவாளி யார் - நிரபராதி யார் - என்பது தெரியாமலே போய்விடும்.” என்று நேருவே கூறியிருக்கிறார். கருப்புத் துணியைக் கண்டால் கலக்கம் - ஒரு வகை அச்சம் ஏற்படுவது இயற்கை, நேரு போன்றவர்களுக்கு!

ஆகவே அவரது பொன்மொழிக்கு அவரே இலக்காகி விட்டார்.

‘42 ஆகஸ்டு’ போராட்டத்தின் தளபதி - நமது அறப்போராட்டத்தைப் பார்த்து காட்டுமிராண்டித்தனம் என்கிறார்.

என்ன செய்வது பாவம்;

சில நேரங்களில் சிலர், நிலைக்கண்ணாடிக்கு நோக நின்று பேசவேண்டிய வார்த்தைகளை, தவறிப்போய் நம்மிடம் பேசிவிடுகின்றனர்.

மதுரையிலே நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய கிளர்ச்சியில், மாவீரர்கள் முத்து, அய்யாசாமி, ராசமான் மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலும் முப்பது பேருக்குமேல் கைதியாயினர். மதுரையிலும், கோவையிலும் இளங்கோவும், கண்ணதாசனும் முன்னின்று கருப்புக்கொடி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக்கினர். சென்னையிலே கண்ணபிரான், மாசில்மணி பார்த்தசாரதி மற்றும் பலர் தடியடிக்காளாயினர், செங்கற்பட்டிலே அண்ணாமலை தலைமையிலே கருங்கொடி நிகழ்ச்சி வெற்றிகண்டது.

நாள் தோறும் - நமது தோழர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருப்பதும் - நாட்டெங்கும் கிளர்ச்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதும் - தேனினுமினிய செய்திகளாக எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது.

எல்லோரும் போய்விட்ட காரணத்தால் - மிச்சமிருந்த ஐம்பதுக்குட்பட்ட தோழர்களை ராமசுப்பையா அவர்கள் வசம் ஒப்புவித்துவிட்டு நான் சிறிது ஓய்வுபெற்றேன்.

பேச்சுமன்றமும் கிடையாது. ராஜாவுக்கு முடிகூட்டும் விளையாட்டும் நின்றுவிட்டது. எதையாவது படிப்பது, எதையாவது எழுதுவது, மீதி நேரங்களில் வேப்ப மரத்தடி! அங்கே சத்தியும் நானும்! எத்தனையோ இன்பக் கதைகள் அந்த வேப்பமரம் கேட்டிருக்கிறது - பேச்சின் ஒலிக்கு மாத்திரம் சக்தியிருக்குமானால் அந்த வேப்பமரம், இனிப்புமரமாக மாறியிருக்கும் - அவ்வளவு தித்திப்பான கதைகள்!

ஒரு நாள் நீண்டு உயர்ந்த மதிலுக்கு உள்ளே ஒரு சிறிய பந்து வந்து விழுந்தது. வெளியிலே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலேயிருந்து தப்பி, அது எங்கள் கையில் சிக்கியது.

உடனே ஒரு திட்டம் போட்டோம். ஒரு பழைய வேட்டியைக் கிழித்து வலைபோலக் கட்டினோம். எங்கள் கைகளில் பந்தடிக்கும் Bat ஆக ஆக்கிக்கொண்டு தினந்தோறும் விளையாட ஆரம்பித்தோம். அந்த விளையாட்டுக்கு பந்தயம் எல்லாம் கட்டுவது உண்டு. தோழர் வேணு, தனக்கு வந்த கடலை உருண்டைகளை யெல்லாம் பந்தயத்தில் இழந்து - துவரையை இழந்து - சோற்றையும் ஒருநாள் இழந்து தரும மகாராஜன் போல நின்று கொண்டிருந்தார். தோழர் ராமசுப்பையா பந்து விளையாட்டில் என்னுடைய கட்சி- வருகிற பந்தையெல்லாம் சாமர்த்தியமாக அடித்துவிடுவார்.

ஆனால் ஒரு குறை - பந்து வலையைத் தாண்டி அப்புறம் போகாது! அவ்வளவுதான்! கஸ்தூரி, சத்தியின் கட்சியிலேயிருந்து விளையாடுவார். பந்து, தானவே போய் அவரது கையில் மோதி எங்களிடம் திரும்பிவரும் காட்சி அற்புதமாக இருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுவார்.

அந்த விளையாட்டிலும் இடையே தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஜெயில் ஆகாரத்தை சாப்பிட்டுவிட்டு இம் மாதிரி வேலையெல்லாம் எங்களைப்போன்ற பலசாலிகள் செய்யலாமா? எல்லோருக்கும் உடம்புவலி - உட்கார முடியாது, நிற்க முடியாது. நான் ஊசியும் போட்டுக் கொண்டேன். பிறகு மீண்டும் ஆசை பிறந்தது விளையாட! ஆனால் விளையாட்டுக்கு விரைவில் முடிவு ஏற்பட்டுவிட்டது.

காரணம்; கல்லக்குடி பட்டாளத்தை நோக்கி விடுதலை வந்துவிட்டது. விடுதலைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே - ராம சுப்பையா கண்ணீர்விட ஆரம்பித்துவிட்டார். விடுதலை நாளும் வந்தது. அக்டோபர் 15ம் நாள் காலையிலே அவர்களும் எம்மைப் பிரிந்தார்கள். சிறைச்சாலையிலே அகப்படும் பூக்களைக்கொண்டு ஒரு மாலை கட்டினார்கள். பிரிவுரை கூறினார்கள். கோவைக் கத்தரி அழுதார்கள். அவர்கள் வாய்விட்டுக் குழந்தை போல அழுத காட்சியை இப்போது நினைத்தாலும் கலங்குகிறது.

“இனிமேல் ராம சுப்பையா போல - என்னைத் தேத்துவிட யார் ஓடிவருவார்கள்?”

“வேணு போல பறந்து பணியாற்றிட யாரால் முடியும்!”

“கட்சிச் செய்திகளைக் கேட்டிட ஆவலுடன் அடிக்கடி வர - மல்லிக்கோட்டை ரத்தினம் போல யாருளார் இங்கே?”

“எது கேட்டாலும் சிரித்துக்கொள்ளும் எதிராஜ்!”

இப்படி ஒவ்வொருவரையும் பற்றி எண்ணினேன். என் பின்னே அணிவகுத்துவந்த கல்லக்குடி படை

வரிசை கண்ணீரைக் கொட்டியபடி நிற்பதையும் கண்டேன்.

“நேசமுள்ள நண்பர்களே! பாசம் நிறைந்த தோழர்களே! என் ஆசைக் கண்மணிகளே!” என்றேன். அதற்குமேல் பேச முடியவில்லை. “போய் வருக” என்று கையால் ஜாடை காட்டினேன். ராம சுப்பையா கட்டிப் பிடித்துக்கொண்டு கதறிவிட்டார். பிரிவு - பிரிவு - கட்டிக் காத்த குடும்ப பாசத்தில் குறுக்கிட்ட பிரிவு! அவர்கள் எம்மிடமிருந்து விடுதலையென்னும் சொல் பிரித்துக் கொண்டு போய்விட்டது.

தொடர்ச்சியாக ஐந்து சிகரெட்டுகள் அன்றுதான் முதன் முதலாகப் பிடித்தேன்.

சில நேரங்களில் “ஸ்பெஷல் இன்டர்வியூ”களும் வாங்கலாம்.

முதல் நாள் இரவு படுக்கும்போதே - காலையில் ‘இன்டர்வியூ’ பார்க்கலாம் என்ற இன்ப நினைவுடன் படுப்போம்.

காலையிலும் சுறு சுறுப்பாக எழுவோம். முக, அலங்காரம் முதலியன செய்து கொண்டு - வெள்ளை உடைகள்

அணிந்து - எப்போது வருவான் மணுக்காரன் என்று எதிர்பார்த்த வண்ணமிருப்போம்.

‘இன்டர்வியூ’ செய்து கொண்டு வருகிற கைதித் தோழனுக்கு மணுக்காரன் என்று பெயர். சந்திக்க விரும்புகிறவர்கள் மனுப்போட்டுப் பார்க்கிறார்கள் அல்லவா; அந்த மனுவை எடுத்து வருபவன் மணுக்காரன். பல மனுக்கள் வந்து மறுக்கப்பட்டு திரும்பியும் போய்விட்டன.

அறிஞர் அண்ணா, மதியழகன், அரங்கண்ணல், வாணன், செழியன், K. K. நீலமேகம், கண்ணதாசன் T. K. சீனிவாசன், மாயவரம் பழனிசாமி, முல்லை வடிவேல், வெங்கிடங்கால் சந்தானம், செளரிராசன் திருச்சி தோழர்கள் தருமு, பராங்குசம், மணி, முத்து, ராதாகிருஷ்ணன், ராபி, கடைத்தெரு கழகம் நடராசன், பாண்டுரங்கன், கருணாநந்தம், மாயூரம் காந்தி, செளந்தரராசன், கருணை ஜமால், காஞ்சி C. V. ராசகோபால், காரைக்குடி இராம வெள்ளையன், விடுதலையடைந்து சென்ற மன்னை நாராயணசாமி, தென்னன், கிட்டப்பா, A.

S. முருகையா அடைக்கலம் மற்றும் இளமுருகு, கோபால் கிருஷ்ணன், மாராச்சி, கிருஷ்ணமூர்த்தி, G. P. சோமசுந்தரம், சேவியர், செளரிராசன், செல்வரெத்தினம், S. V. லிங்கம், இளமவழுதி M. A. B. L., வில்லாளன் B. A. Hon. முத்து மல்லப்பன் ஆதங்குடி இயக்கத்தார் ஆகிய இயக்கத் தோழர்களும், வீட்டாரும், கோவிந்தசாமி M. L. A., பழனியாண்டி M. L. A., சிற்றம்பலம் M. L. A., தங்கவேலு M. L. A., பேபி கந்தசாமி M.P, ஆகிய சட்டசபை பாராளுமன்ற உறுப்பினர்களும், கலைவாணர் N.

S. கிருஷ்ணன், மதுரம், புரட்சி நடிகர் எம். ஜி. ராமசந்தர், சிவாஜி கணேசன், S. V. சகஸ்ரநாமம், ராதா

கிருஷ்ணன், M. N. கிருஷ்ணன், திருப்பதிசாமி, டைரெக்டர் கிருஷ்ணன் (பஞ்சு), மனோகரா பிக்சர்ஸ் பாலு, கதாசிரியர் ஆத்ரேயா, மாடர்ன் தியேட்டர்ஸ் சுலைமான், முதலிய கலை உலக நண்பர்களும் எங்களை வந்து சந்தித்துப் போனார்கள். அந்த நாளெல்லாம் எங்கள் ராஜ்யத்திலே ஒரு திருவிழா நாள் போல இருந்தது. நடுவிலே ஒரு பெரிய மேஜை. ஒரு பக்கத்தில் சிறையில் உள்ளவர். இன்னொரு புறத்திலே சந்திக்க வந்திருப்போர். அரசியல் விஷயங்களோ - ஆட்சேபகரமானவைகளோ பேசிவிடாமல் கவனித்துக்கொள்ள அருகாமையிலே ஒரு உத்தியோகஸ்தர்.

இதுதான் ‘பி’ வகுப்பு கைதிகள் இன்டர்வியூ பார்க்கும் முறை.

வலைபோட்ட பெரிய ஜன்னல். உள்ளே சிறையில் உள்ளவர். வெளியே சந்திக்க விரும்புகிறவர். கவனிக்க உத்தியோகஸ்தர். இருதப்பாரும் நின்றுகொண்டுதான் பேசவேண்டும். ஒருவர் முகம் ஒருவருக்கு சரியாகத் தெரிய முடியாது. இதுதான் ‘C’ வகுப்பு முறை ‘A’ வகுப்பு என்று சிறையில் முன்பு இருந்து - இப்போது கிடையாது.

‘பி’ வகுப்பு கைதிகளுக்கு ஒரு வசதியுண்டு. வெளியிருந்து சந்திக்க வருகிறவர்கள் பழம், ரொட்டி, சிகரெட், முதலியவை கொடுக்கலாம். பலகாரங்கள் எதுவும் தரக் கூடாது. P. C. P. என ஒன்றுண்டு. [Personal Cash Property] சொந்தப் பணம் வைத்துக்கொள்ளுதல், சிறையதிகாரிகளின் வசத்திலே நமக்கென பணம் வைத்துக்கொண்டு, வாரா வாரம் நமக்குவேண்டிய பொருள்களை அதிகாரிகள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். வேண்டிய பொருள்கள் என்றால் தேவையானது எல்லாம் அல்ல.

அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுவதுதான். நாங்களும் P. C. P.யில் பணம் கட்டியிருந்தோம். அதில் வாரா வாரம் ஓவல்டின், ஹார்லிக்ஸ், பிஸ்கட், சிகரெட், பழங்கள், சோப்பு, எழுதும் பேப்பர், மை, காப்பித்தூள், சர்க்கரை, முதலியன வாங்கிக்கொண்டோம்.

உடைகளை மாட்டிக் கொண்டு நிற்க வேண்டும். நீண்ட காலுறையும் கையுறையும் தருவார்கள்.

அந்த அணிவகுப்பை சூப்பிரிண்டெண்டு பார்வையிடுவார். அவருடன் D. M. O.வும் மற்ற சிறை அதிகாரிகளும் வருவர். கைதிகள் தங்களுடைய குறைகளை அவர்களிடம் சொல்வதற்காகவே இந்த ஏற்பாடு அமைக்கப்பட்டிருக்கிறது. அது கவனிக்கப்படுமா என்பது வேறு விஷயம். ஒரு திங்கட்கிழமை சிறை அதிகாரிகள் அணிவகுப்பைப் பார்வையிட்டு வந்தார்கள். ரேடியோ பற்றி நாங்கள் கேட்டோம். இந்த பிளாக்கிலிருந்தபடியே கேட்கிறோம், ஒரு ஒலிபரப்பி அமைத்துக் கொடுங்கள் என்று கோரினோம்.

அதற்கு ஜெயிலர் சொன்னார் - உங்கள் செலவில் ஒரு ஒலிபரப்பி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள், எமக்கு ஆட்சேபணையில்லையென்று! எனக்கும் அது சரியென்று பட்டது; ஆறு மாதத்திற்கு ஒரு இரவல் ஒலிபரப்பியா கிடைக்காது - திருச்சியிலே அருமைத் தோழர் ராபி இருக்கிறார். அவரிடம் சொன்னால் போதுமே - எத்தனையோ ஒலிபரப்பிகள் அமைத்துத் தருவார் என்று எண்ணியபடியே, “சரி நாங்களே அமைத்துக்கொள்ள அனுமதி கொடுங்கள்” என்றேன்.

“அனுமதி தருகிறோம். ஆனால் ஒன்று. அப்படி வைக்கப்பட்ட ‘ஸ்பீக்கர்’ ஜெயிலுக்குத்தான் சொந்தம். திரும்ப எடுத்துக்கொண்டு போகக் கூடாது” என்றார் ஜெயிலர்.

“நல்லவேளை! நம்மால் ராபிக்கு லாபமில்லா விட்டாலும், நஷ்டமில்லாமலாவது இருக்கட்டும்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே. “சரி சார்! ரேடியோ

கேட்டதுபற்றி மீண்டும் யோசிக்கிறோம்” என்று பதில் கூறிவிட்டோம். அவர்கள் போய்விட்டார்கள். பிறகு நாங்கள் ஏன் அதுபற்றி, யோசிக்கப்போகிறோம்! நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஹிட்லர் பாட்டு - சுதந்திர மெட்டு!

அக்டோபர் இருபத்திமூன்றும்நாள் நாறுபது நாள் முடிந்துவிட்ட விழாவை நாங்கள் ஐந்தாறு பேரும் சிறையில் சிறப்பாகக் கொண்டாடினோம். காலையில் விழித் தெழுந்ததும் மேசையில் நாறுபது நாள் என்ற எழுத்துக்கள் கொண்ட சிறுதாள் ஒன்று மின்னியது. அதன் பக்கத்திலே ஐந்தாறு மல்லிகை மலர்களால் தொடுக்கப்பட்டு கொழுந்து இலைகளுடன் கூடிய சின்னஞ்சிறு பூச்செண்டும் காட்சியளித்தது. வெளியுலகைக் கண்டு நாறு நாட்கள் ஆகிவிட்டன.

குழந்தைகளை வாரியணைத்து முத்தம் தந்து நாறு நாட்களுக்கு மேலாகிவிட்டன. பக்கத்திலே அமர்ந்து தாய் உபசரிக்க - துணைவி உணவு பரிமாறி நாறு நாட்கள் முடிந்துவிட்டன. நண்பர்களோடு கூடி இருந்ததும்-குலவிக்கிடந்ததுமான அந்தக் கோலாகல நாள் உருண்டுபோய் நாறு நாட்களாகி விட்டன. கிளிக்கூண்டின் கதவு படார் என சாத்தப்படும்போது - தவிர்க்கமுடியாத ஒரு மின்னல் போன்ற எண்ணம் இருதயத்தைத் தாக்கி மறைவது- இன்றைக்கு நாறுபது நாள்.

இந்த நாறு நாட்கள் - எங்களுக்கு மட்டுமல்ல; திராவிடத்திற்கு மிக முக்கியமான நாட்கள். வெள்ளையன் எதிர்த்த விடுதலைப்போரிலே ‘ஜாலியன் வாலாபாக்’ எவ்வளவு பிரதானம் வாய்ந்ததோ அவ்வளவு பிரதானம் வாய்ந்த கட்டம் இந்த நாறு நாட்கள், திராவிடத்தின் சரித்திரத்திலே!

கெல்லாம் எதிராக திராவிட விடுதலைப்படையின் சங்க நாதம் தீரமாக ஒலித்தது. விரைவில் விடியப்போகிறது என்பதற்கான விடி வெள்ளி தோன்றிவிட்டது.

அந்தப் பரவலான ஒளி படர்ந்த நாட்கள்தான் நான் குறிப்பிடும் நூறு நாட்கள்.

இந்த நூறு நாட்களிலே திராவிடர் நடத்திய தீரச் செயல்களே - விடுதலைப்போர் முறைகளே - எப்படி வருங்காலம் மறந்திட முடியாதோ - அதுபோலவே விடுதலைப் போருக்கு எதிராக எழுந்த வீணர் குரல்களையும் - விபீஷணச் செயல்களையும் - தேசிய உணர்ச்சியற்ற இழி குணத்தோர் போக்கையும் - மறந்திட முடியாது.

சரித்திரத்திலேதான் இடம் இருக்கவேண்டும். உடனே இவர்கள் ஒழிக்கப்படடாகவேண்டும் - என்று ஆச்சாரியார் கூறினார். அவரால் மறுக்கவோ - அல்லது நினைக்காமலிருக்கவோ முடியவில்லை - நாம் சரித்திரத்தில் இடம் பெறவேண்டியவர்கள் என்பதை! ருஷிய நாட்டு சரித்திரத்திலே லெனின் பட்டாளத்திற்கு இருந்த இடம் - சீனநாட்டு சரித்திரத்திலே மாசேவின் படை வரிசைக்கு இருந்த இடம் - நிச்சயமாக திராவிட நாட்டு சரித்திரத்திலே அண்ணாவின் அணிவகுப்புக்கு இருந்துதான் தீரும்.

அதை ஆச்சாரியார் தமது கண்ணீர்த் துளிகளைக் கொண்டு எழுதி முடித்தாலும் முடிப்பார். அல்லது - நாமே, நமது ரத்தத் துளிகளால் எழுதினாலும் எழுதுவோம். சரித்திரத்திலே இடம் தரவேண்டும் என்று பாராட்டிவிட்டார், பார்ப்பனகுல மகிமர்.

அதோடு விடவில்லை; இவர்களது கணக்கையும் தீர்த்தாகவேண்டும் என்று கூறிவிட்டார். இதை அவர்

நேருவிடத்திலே ஜாடையாக சொன்னதாகவே நாம் பொருள் கொள்ளவேண்டும்.

வாரன் ஹேஸ்டிங்ஸ், இங்கிலீஷ் பார்லிமெண்ட்டிலே சொன்னதுபோல அல்ல இது! மெளண்ட் பேட்டன் பிரபு - அட்லி துரையிடத்திலே கூறியதுபோலாகும். இந்த ஆச்சாரியாரின் வாசகம். நாமும்தான் கணக்கை தீர்த்துவிட்டு புதுக்கணக்கு போடவேண்டுமென்று துடிக்கிறோம். அட்லியிடத்திலே - மெளண்ட் பேட்டன் போல, நேருவிடத்திலே ஆச்சாரியார் கணக்கு தீர்ப்பது பற்றி கூறுகிறார் என்றால் மகிழ்ச்சியடைகிறோம். அல்ல;

எம்மிடத்திலே சித்திரபுத்திரன்போல்-என்று அவர் கூறுவாரேயானால் - நாமும் புராணக்கதையின்படியே அவருக்கு மார்க்கண்டேயன் வரலாற்றை ஞாபகப்படுத்துகிறோம். புராணக்கதையிலே லிங்கம் வெடித்து சிவனார் புறப்பட்டார்.

ஆச்சாரியார் அறிவார்! ஆனால் புரட்சிக் கதையிலே ...... அதையும் ஆச்சாரியார் அறிவார்!

“திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கு முதல் எதிரி” இந்த நூறு நாட்களிலே ஒருநாள் ஆச்சாரியார் உதிர்த்த உத்வேக மொழியது!

“கம்யூனிஸ்டுகளே முதல் எதிரி என்றேன் - அவர்கள் அடங்கிவிட்டார்கள் - இவர்களே முதல் எதிரி என்கிறேன் - இவர்களும் அடங்கிவிடுவார்கள்.” ஆச்சாரியாரின் திருப்தி இப்படியிருந்தது.

“மாகினட் அரணத் தொட்டேன் - மணிமேடாகி விட்டது! இதோ மாஸ்கோவில் நுழைகிறேன் - இதுவும்

குட்டிச் சுவராகிவிடும்” என்று யுத்த போதையிலே - வெற்றி மயக்கத்திலே பாடினான், உலகம் விழுங்கப் புறப்பட்ட உன்மத்தன் ஹிட்லர்!

அதே பாட்டு இங்கும் பாடப்படுகிறது - மெட்டு தான் வேறு! ஹிட்லர் பாட்டு! சுதந்திர மெட்டு!

★

சிறை திறந்தது

இன்னும் இரண்டுமாத காலம் கழித்த பிறகே திராவிடத்தின் தெருக்களில் நடமாட முடியும் என்றெண்ணியிருந்த எங்களிடம் புதிய செய்தியொன்று கூறப்பட்டது. ஒரு மாத தண்டனை குறைந்துவிட்டது என்பதுதான் அச் செய்தி. முப்பத்தைந்து ரூபாய் அபராதப் பணம் கட்ட மறுத்து மேலும் ஒரு மாத தண்டனையை ஏற்றுக் கொண்ட எங்களின் அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்து விட்டனர். முப்பத்தைந்து ரூபாய்க்காக என்னுடைய மோட்டார் காரின் மீது அவர்களின் கண் விழுந்ததென்றால் - அதை ஜப்தி செய்து ஏலம்போட முயன்றார் கலெக்டர் - வஞ்சம் தீர்த்துக்கொள்ள எந்தந்த வழிகளில் எல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஏறத்தாழ ஐந்து மாதம் சிறையிலே வாழ்ந்துவிட்டோம். ஐந்து மாத காலத்திலேதான் மூலவர் நேரு கடு மொழிகள் பல கூறினார். திராவிடத்தை நோக்கி. முப்புரிக் காவலர் ஆச்சாரியார் சுடுமொழி வீசினார் நமது கழகத்தை நோக்கி. இவைகட்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கவர்னர் பிரகாசா - திருவாரூரில் கருப்புக்

கொடி காட்டிய தோழர்களையும் பொதுமக்களையும் - காரிலிருந்து குதித்து - கம்பெடுத்து விரட்டியடித்திருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் கவர்னர், தானே முன்னின்று தடியடி தர்பார் நடத்தும் விசித்திரத்தை சரித்திரம் முதன் முதலாக சந்தித்திருக்கிறது இந்த ஐந்து மாத காலத்திலே!

ஜூலை 15ந் தேதிக்கு முன்னிருந்த கழகம் வேறு - அதற்குப் பிறகு உன்னதமாக வளர்ந்திருக்கும் கழகம் வேறு!

ஆயிரம் - லட்சமாக மாறிடும் வித்தையிலே அவ்வளவு சிறப்பான எழுச்சி பெற்றிருக்கிறது. தி. மு. க. அவதூறு பேசினாலும் - ஆணவம் காட்டினாலும் - அடித்து விரட்டினாலுங்கூட - அழிக்கமுடியாதது இவ்வளர்ச்சி எனக் கண்டபிறகுதான் கவர்னர் பிரகாசா - தஞ்சையிலே பேசும்போது - “கருங்கொடி நிகழ்ச்சிகள் ரஷ்யப் புரட்சி போலக் காட்சியளிக்கின்றன” எனக் கூறிவிட்டு - நாகையிலே பேசும்போது - “இவர்கள் வளர்ச்சியை அலட்சியப்படுத்தக்கூடாது” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அலட்சியத்தாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று கருதியிருந்திருக்கிறார்கள், இவர்கள் என்பதும் - இப்போது போர் முறையை மாற்றுகிறார்கள் என்பதும் - நாட்டுக்கு நன்கு புலனாகப் போகாது! இவைகளெல்லாம் எண்ணி மகிழ்கிறபோது சிறைச்சாலையின் துன்பங்கள் ஓடிவிட்டன. அது ஒரு ‘சுகவாசஸ்தலம்’ போலவே எங்களுக்கு இருந்தது. “நாம் சிறையிலிருக்கிறோம். வெளியில் நமது கழகம் வளர்கிறது. நாம் பூட்டப்பட்டிருக்கிறோம் - வெளியே பல கிளைக் கழகங்கள் திறக்கப்படுகின்றன” என்ற மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

அந்த சந்தோஷத்திலே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. நவம்பர் மாதம் 21ம் நாள் காலையிலே சிறைச்சாலையின் சிறிய கதவு திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு

முன்னால் பார்த்துவிட்டுப்போன எங்கள் அழகுத் திருநாட்டை, விசாலமாக விழித்துப்பார்த்தோம். ஆயிரமாயிரம் திராவிடத் தோழர்கள் - அவர்களின் ஒளி பொருந்திய கண்கள், எங்களை ஆரத்தழுவி வரவேற்றன. பொறுப்பாளர் கோவிந்தசாமி மத்திய கழகத்தின்சார்பாக வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் அம்பில் தர்மலிங்கம், தஞ்சை மாவட்ட செயலாளர் K. K. நீலமேகம், சென்னை மாவட்ட செயலாளர் கண்ணபிரான், மதுரை மாவட்ட செயலாளர் தொந்தி, மற்றும் மாவட்டத்து செயல் வீரர்கள் அனைவரும் வந்திருந்து வரவேற்றனர்.

கலையுலக ஜோதி கலைவாணர் கிருஷ்ணன் எதிர் கொண்டழைத்தார். என் அன்புக்குரியார் - அருமை திராவிடத்தின் பெருமைக்காகும் படைவீரர் - அனைவரும் ‘வருக வருக’ என வாழ்த்தினர். “சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு வந்தேன்” என்று கூறியபடி அவர்களைத் தழுவிக்கொண்டேன்.

நவம்பர் 21ந் தேதி காலை பத்துமணியுடன் எனக்கு விதிக்கப்பட்ட ஆறுமாதக் கடுங்காவல் முடிவுற்றது. ஆனால் என் அண்ணா திராவிடத்தைப் பூட்டிவைத்திருக்கும் அடிமைச் சங்கிலி அறுபடுவது எந்நாள்?

★

வெற்றி! வெற்றி!!

சிறையிலிருந்து மீண்ட மறுநாள் நானும், சத்தி, தாமலிங்கம் ராமசுப்பையா, பராங்குசம் ஆகியோரும் கல்லக்குடி களத்தைப் பார்வையிடச் சென்றோம்.

“நான் விடுதலை பெறும்போது டால்மியாபுரம்-கல்லக்குடியாக காட்சியளிக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டு சிறை புகுந்தேன். ‘வருங்கள் அந்த வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறேன்’ என அழைத்துச் சென்றார் தோழர்கள். ஆமாம். ஜூலை 15ல் நான் ஓட்டிவிட்டுப்போன கல்லக்குடி என்னும் தாள் தான் அங்கே மின்னுகிறது. டால்மியாபுரம் என்ற பெயரைக் காணவில்லை.

கொரியாவுக்கும், காஷ்மீருக்கும் படை வீரர்கள் அனுப்பும் பலம் பொருந்திய சர்க்கார், நாமோ சாதாரணமானவர்கள். அமைதியான அறப்போரை விரும்புகிறவர்கள். ஆனால்-நாம் ஓட்டுகிற கல்லக்குடி யென்னும் திருப்பெயரை அகற்றிட யாரும் முனையவில்லை. புகை வண்டி நிலையத்தில் நாள்தோறும் நமது கொள்கை முழக்கம் நடைபெற இடமளித்து - டால்மியாபுரம் என்கிற அவமானச்சின்னத்தின் மீது கரியைப் பூச அனுமதியும், பாதுகாப்பும் அளிக்கிறார்கள் என்றால் இதை நமது வெற்றி என்றுதானே கூறவேண்டும்.

“சர்க்கார் இன்னும் அதிகாரபூர்வமாக பெயரை மாற்றவில்லையே” என்று ஒரு தோழர் கேட்டார். அவருக்கும் அவர்போல் சந்தேகம் கொண்ட நண்பர்களுக்கும் பின்வரும் பதிலைத்தான் நான் தரமுடியும்.

கல்லக்குடி யென்னும் பெயர் அதிகாரபூர்வமாக இடப்படவில்லை யென்பது உண்மைதான். நமது வெற்றியை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதுதான் அதன் பொருள். அதனால் நாம் வெற்றி யடையவில்லை யென்று கூறமுடியுமா?

மாசே துங் செஞ்சினத்தில் வெற்றிக்கொடி நாட்டினார். சியாங்கேஷேக் பார்மோசாவுக்கு ஓடினார். ஆனால் ஐ. நா. சபை இதுவரையில் மக்கள் சீனத்தின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை. செஞ்சினம் ஐ. நா. சபையில் இடம்பெற முயன்று - முயன்று - முடியவில்லை! ஆனால் பார்மோசாவில் பதுங்கிய சியாங்கின் சர்க்காருக்கு ஐ. நா. விலே இன்னும் இடமிருக்கிறது. செஞ்சினத்தை ஐ. நா. அங்கீகரிக்கவில்லை என்பதற்காக அதன் வெற்றியை யாராவது மறுக்க முடியுமா?

சியாங்கின் தோல்வியைத்தான் மறைக்க முடியுமா? அதேபோலத்தான் - செஞ்சின வெற்றி எனும் இடத்திலே கல்லக்குடியையும் - சியாங் சர்க்கார் எனும் இடத்திலே ‘டால்மியாபுரம்’ என்ற பெயரையும் நிறுத்திப் பார்த்தால் நமது வெற்றி முழக்கத்திற்கு நல்லதோர் விளக்கம் கிடைக்கும்.

டால்மியாபுரம் பெயர் மாற்ற வெற்றியினாலேயே திராவிடநாட்டை திராவிடர்க்கு ஆக்கியதாக ஆகுமா என்ற ஐயமும் சிலருக்கு எழலாம்.

1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்றது. 1905ல் ரஷ்யாவில் நடந்த ‘ரத்த ஞாயிறு’ புரட்சிக்கு முடிவு உண்டாக்கப் பயன்படவில்லை. புரட்சித் தொடக்கத்தின் முன்னுரையாகத்தான் 1905ம் ஆண்டு எழுச்சி இருந்தது. பின்னர் பனிரெண்டு ஆண்டுகளுக்குப்பிறகே பாட்டாளியின் விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க முடிந்தது ரஷ்யாவில்!

அத்தனை ஆண்டுகள் இங்கே தேவைப்படாவிட்டாலும் - விடுதலை பெற அதிக விலை கொடுக்க வேண்டி நேரிடலாம்.

திராவிடத்தின் தேசிய எழுச்சி, இனி யாராலும் அடக்க முடியாது என்ற விதத்திலே - வளர்ந்தோங்கி யிருக்கிறது. மாற்றரின் பாசறையிலும் - குறிப்பாக தேசிய வட்டாரத்திலும் திராவிட உணர்ச்சி குமுறிக் கிளம்பியிருக்கிறது.

சிதறிக் கிடக்கும் திராவிடர்கள் சேரவேண்டியது தான் பாக்கி - நம் சிந்தைக்கினிய திராவிடத்தை மீட்டே தீருவோம் என்ற நம்பிக்கை மலர்ந்து விட்டது. அந்நிய ஆதிபத்யத்தை ஒழிக்க ஆரம்பித்த முதல் அறப்போரில் ‘ஆறுமாதக் கடுங்காவல்’ ஏற்பதற்கு முன் நான் பாடிய நண்பர் கருணாநந்தம் அவர்களின் எழுச்சிமிக்க பாட்டின் முதல் வரிகளே உங்கள் நெஞ்சில் நிறுத்தி இதை முடிக்கிறேன்.

“சேர வருவீரே! - சேர வருவீரே! சேர சோழ தென்பாண்டி நாட்டார்! வீர காவியம் தீட்டும் போரில் சேர வருவீரே!”

★