நெஞ்சுக்கு நீதி
நீதியே; நீ இன்னும் · 390 / 391
29. நீதியே; நீ இன்னும் இருக்கின்றாயா? -2003ஆம் ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் கடுமையான வறட்சி. மழை இல்லை. இன்னும் சொல்லப்போனால் டெல்டா மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடுகின்ற நிலை! அதற்கான புகைப்படங்கள் எல்லாம் அப்போது ஏடுகளில் வெளிவந்தன. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் வர வில்லை. சம்பா பயிரும் கருகியது. வறுமை தாங்காமல், மன்னார்குடியில் பாலையக் கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்ற விவசாயி, அரசைக் குறை கூறிக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்று அப்போது இருந்த போலீசார் படாதபாடுபட்டனர். மன்னார்குடி தொகுதியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் சிவபுண்ணியம் இல்லத்திற்கு நள்ளிரவில் சென்ற போலீசார், சோதனை என்ற பெயரில், அவரது வீட்டை அடித்து உடைத்து வெறியாட்டம் போட்டனர். மேலும், சட்ட மன்ற உறுப்பினர் சிவபுண்ணியம்மீது தாக்குதல் நடத்திடவும் முயற்சித்தனர்.
அந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி பொது மக்கள், 10-1-2003 அன்று சாலை மறியலிலே ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டம் முழுவதும் அன்று கடையடைப்பு நடந்தது. சம்பா பயிரில் ஏற்பட்ட கடும் பாதிப்பு காரணமாக, தஞ்சை அருகே சாலியமங்கலம் திருபுவனத்தைச் சேர்ந்த வீரையன் என்ற விவசாயியும் தற்கொலை செய்துகொண்டு உயிர் விட்டார். திருவாரூர் மாவட்டத்தில் வாழக்கரை கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர், போகி அன்று தனது வயலைச் சென்று பார்த்தபோது, வயல் முழுவதும் பாளம் பாளமாக வெடித்துப் பயிர்கள் முழுவதும் கருகி நிற்பதைப் பார்த்து, அங்கேயே மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தவர், பின்னர் எழுந்திருக்கவே இல்லை.
இவற்றைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்தியபோதும் ஆளுங்கட்சியினர் இந்தக் கொடுமையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோலவே திருத்துறைப் பூண்டி அருகே தமிழரசன் என்ற ஒரு விவசாயி, தன்னுடைய சம்பா பயிர் கருகியதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து, வீடு திரும்பும் வழியிலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். மேலும், திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ள அமலூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசத் தேவர் என்ற விவசாயியும், நாகை மாவட்டத்தில் சிக்கலை அடுத்துள்ள ஆவனானி, புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயியும், சம்பா பயிர் கருகிய காரணத்தால் உயிரிழந்தனர்.
மேலும், ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ், திருத்துறைப் பூண்டி சேகல் ஊராட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி, சாத்தான்குளம் அருகே பரமசிவம், ரிஷிவந்தியம் அருகே சொர்ண புஷ்பம், ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சம்பந்தம், திருப்பனந்தாள் ஒன்றியம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த யூனுஸ், பைய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்ச்செல்வம், சாத்தான், முத்து லட்சுமி, பீமகுட்டித் தேவர் - என்று இறந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. 26-1-2003 தேதிய "ஜூனியர் விகடன்" வார இதழில், எலிக்கறிகூடக் கிடைக்காமல், ஜெயலலிதா ஆட்சியில் விவசாயிகள் நத்தைகள் உண்ணும் பரிதாபத்தைப் புகைப்படமாகவே எடுத்துப் பேட்டிகளையும் பெற்று வெளியிட்டது.
வறட்சி காரணமாக இப்படிப்பட்ட பரிதாபகரமான நிலை நீடித்தது. அந்த ஆண்டு, என்னுடைய 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்பதால், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காகக் கழக அமைப்புகள், ஜனவரி மாதத்திலேயே அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் மிகப் பெரிய அளவில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்ததும், 31-1-2003 அன்று நான் விடுத்த அறிக்கையில், நாட்டில் நிலவிடும் வறட்சி நிலை கருதி, அந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் விழா கொண்டாட நான் விரும்ப வில்லை என்றும், எனவே அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்ய வேண்டா மென்றும் கேட்டுக் கொண்டேன்.
★ ★ ★ ஆண்டுதோறும் நடப்பதைப்போல 23-1-2003 அன்று தமிழக ஆளுநரான பி.எஸ். ராமமோகன்ராவ் அவர்கள் தனது உரையை ஆங்கிலத்திலே ஆற்றினார். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், ஆளுநர் ஆங்கிலத்தில் தனது உரையை ஆற்றி முடித்ததும், சட்டப் பேரவைத் தலைவர், அந்த உரையின் தமிழாக்கத்தைப் பேரவையில் படிப்பார். இதுவே சட்டமன்றத்தில் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வரும் மரபு. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தாரக மந்திரத்தை மனதிலே கொண்டு, நடைபெற்று வந்த ஆட்சிகளில் இந்த முறைதான் நீடித்து வந்தது.
ஆனால், 2003ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சியில், ஆளுநர் உரையைத் தமிழிலே படிக்கும் நடைமுறை கடைப் பிடிக்கப்படவில்லை. பேரவை முடிந்ததும், செய்தியாளர்கள் பேரவைத் தலைவரிடம் - "ஆளுநர் உரையை ஏன் தமிழிலே படிக்கவில்லை?" என்று கேட்டபோது - "நேரம் கருதி அப்படிச் செய்யப்பட்டது- ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை என் அறைக்கு டி.வி.க்காரர்கள் வந்து படம் எடுத்தால், நான் தமிழ் உரையைப் படிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
அப்போது பேரவைத் தலைவராக இருந்தவர் மொழிப் போர் வீரர்களில் ஒருவரான தம்பி காளிமுத்து. அவருக்குக் கிடைக்கும் அந்த வாய்ப்பு, அந்த ஆண்டு இல்லாமல் மறுக்கப்பட்டுவிட்டது. எப்படியோ தமிழுக்கு பேரவையிலே அன்றைக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ★ ★ ★ பேரவையிலே இதுபோன்ற மரபுகளை மீறும் செயல்கள் நடைபெறுவதாக இருந்தால், எதிர்க்கட்சிகளில் முன் வரிசையிலே உள்ளவர்களை அழைத்து, அவர்களின் கருத்துக்களையும் அறிந்து, அவர்களிடமும் சொல்லிவிட்டுச் செய்வார்கள்.
அதுவும் இல்லாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரிடமாவது சொல்லி விட்டுச் செய்வதுதான் மரபாக இருந்தது. ஏன் - எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்துபோதுகூட, நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். முதலிலே முதல் அமைச்சராக இருந்து, பிறகு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தேன். ஒரு நாகரீகமான முதல் அமைச்சருக்கு முன்னால், ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அமர்வதிலே நான் அன்றைக்குத் தயக்கம் காட்ட வில்லை.
பேரவைக்குப் பக்கத்திலேயே, முதலமைச்சர்கள் ஓய்வெடுக்க "வசந்த மண்டபம்" என்று ஓர் இடம் உண்டு. ஒரு நாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னிடம், "கொஞ்சம் வசந்தமண்டபம் வருகிறீர்களா?" என்று கேட்டார். நானும் "வருகிறேன்" என்றேன். அப்போது அவர் என்னிடம் - அவையில் பெருந் தலைவர் காமராஜர் அவர்களுடைய படம் மாட்ட வேண்டும் - அந்தப் படத்திற்குக் கீழே என்ன பொன் மொழி எழுதுவது?"
என்று கேட்டார். "உழைப்பே உயர்வு தரும்" என்று நான் எழுதலாம் என்று சொன்னேன். அப்படியே தான் எழுதப்பட்டது. இவர் என்ன சொல்வது - நாம் என்ன கேட்பது - என்று எம்.ஜி.ஆர். எண்ணவில்லை. மற்றொரு நாள் வசந்த மண்டபத்தில் எம்.ஜி.ஆரிடம் பேசிக் கொண்டிருந்த போது, "அதென்ன - டெல்லியிலே குடியரசுத் தலைவரின் உரை ஆங்கிலத்திலே படிக்கப்படுகிறது - அதை குடியரசுத் துணைத் தலைவர் இந்தியிலே மீண்டும் படிக்கிறாரே?"
என்றார். "ஆமாம் - அது அங்கேயுள்ள பெரும்பான்மையினரின் தாய்மொழி - அதனால்தான் படிக்கிறார்!" என்றேன். அப்படியானால், நாமும் நம்முடைய தாய் மொழிக்கு மதிப்புத்தர வேண்டாமா?" என்றார். கொடுக்கத்தான் வேண்டுமென்று சொல்லி, அந்த ஆண்டு முதல் கவர்னர் உரை சட்டமன்றத்தில் ஆற்றப்படும்போது, சபாநாயகர், ஆளுநரின் ஆங்கில உரையைத் தமிழிலே படிப்பது என்பது வாடிக்கையாக இருந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது தொடங்கிய மரபு ஆயிற்றே - அதை தி.மு.க.
ஆட்சியிலே தொடருவதா - என்றெல்லாம் நினைக்காமல், கழகம் ஆட்சியிலே இருந்த காலத்திலும் அந்த நடைமுறை தொடர்ந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். உருவாக்கிய மரபை 2003ஆம் ஆண்டிலே நிறுத்தினார்கள். வேண்டுமானால், முதலமைச்சர் ஜெயலலிதா - "நான் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கியதை மட்டும் புறக்கணிக்கவில்லை- எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த பொழுது தொடங்கியதையும் நிறுத்தி இருக்கிறேன் - என்பதற்கு இதுவே தக்கச் சான்று!"
என்று கூறிக் கொள்ளலாம் அல்லவா! எப்படியோ 2003ஆம் ஆண்டு, தமிழகச் சட்டப் பேரவையில் தமிழிலே படிக்கும் அந்த மரபு நிறுத்தப்பட்டது. அதற்கு நேரம் இல்லை என்று சொன்னதைக் கேட்டு விட்டு, தமிழ்த்தாயே! எங்களையெல்லாம் மன்னித்து விடு!" என்று கேட்பதைத் தவிர, வேறு வழி எனக்கு அப்போது தெரியவில்லை. ★ ★ ★ ஆளுநர் உரையைத் தமிழகச் சட்டமன்றத்திலே தமிழிலே படிக்க வேண்டுமென்றால், அனைத்து எதிர்க்கட்சிகளும், இனிமேல் ஆளுநர் உரையாற்றும்போது, வெளியேற மாட்டோம் - என்று உறுதியளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு நிபந்தனையை அறிவித்தார்.
அதைப்பற்றி நான் கூறும்போது, "தற்போது நிபந்தனை விதிக்கும் ஜெயலலிதா, கடந்த காலம் என்று ஒன்று இருந்ததையே மறந்து விடுகிறார். தி.மு. கழக ஆட்சியில், ஆளுநர்களின் ஆங்கில உரைகள் எல்லாம் தமிழிலே படிக்கப்பட்ட போதிலும், 1990, 1991, 1998 ஆகிய ஆண்டுகளில், அ.தி.மு.க. பேரவையிலேயிருந்து வெளிநடப்பு செய்துள்ளது. ஆளுநர் உரை தமிழிலே படிக்கப்பட்ட போதே, வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வின் தலைவிதான், தற்போது தமிழில் படிப்பதற்காக வெளிநடப்பு செய்யக்கூடாது என்று உத்தரவாதம் தரவேண்டும் என்று கோருகிறார்.
அப்போது அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது மாத்திரமல்ல - அவையில் இருந்தவாறே கோஷமிட்டிருக்கிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் இருவர் தங்கள் கைகளிலே மறைத்து வைத்திருந்த கறுப்புத் துணியை எடுத்து ஆளுநர் உரை நிகழ்த்தும் போது, அவையிலே காட்டினார்கள். ஆளுநர் உரை தமிழிலும் படிக்கப்பட்டபோதே இப்படியெல்லாம் அவையிலே நடந்து கொண்டவர்கள்தான் இப்போது வெளி நடப்பே செய்யக்கூடாது - அப்போதுதான் தமிழிலும் படிப்போம் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.
இதிலிருந்து கழக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆளுநரின் உரை தமிழிலும் படிக்கப்பட்டது" என்று விளக்கினேன். அவ்வளவு தான் - ஆளுங்கட்சியினர் அதன் பின்னர் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை. ★ ★ ★ கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதியைச் சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதுடன், தன்னைக் கொலை செய்து விடப்போவதாக பரிதி மிரட்டியதாகப் பேரவைத் தலைவரிடம் குமாரதாஸ் என்ற உறுப்பினர் புகார் செய்ததின்பேரில், பட்ஜெட் தொடர் முழுவதற்கும் பரிதி இளம்வழுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தச் செயலைக் கண்டித்து, பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் எல்லாம் அவையில் இருந்து வெளியேறிப் புறக்கணிப்பு செய்தன. இந்தச் சம்பவத்திற்காக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததால், 31-1-2003 அன்று, அ.தி.மு.க. அரசுக்கே உரிய நேரமான நள்ளிரவு 11.45 மணியளவில், பரிதி இளம்வழுதியை இரக்கமின்றிக் காவல் துறையினர் கைது செய்து, பதினைந்து நாள் சிறைக் காவல் விதித்தனர்.
அவரது கைதுபற்றி நிருபர்கள் என்னிடம் கேட்டபோது, கைது கடுமையான கண்டனத்திற்குரியது - அதைப்பற்றி மற்றக் கட்சிகளோடு கலந்து பேசி உரிய முடிவெடுப்போம்!" என்று கூறினேன். இதற்கிடையே, பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, தேவையில்லாமல் என்னையும், பேராசிரியரையும், ஏன் எல்லா கட்சித் தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசினார். அதைப் பற்றியும் செய்தியாளர்கள் என்னிடம் விரிவாகக் கூறி, அதுபற்றி என்னுடைய கருத்தைக் கேட்டபோது, விளக்கமாகவே நான் அப்போது தெரிவித்தேன்.
அது வருமாறு:- "ஜெயலலிதாவின் பேச்சு, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருந்தது. நானோ, பேராசிரியரோ சபைக்கு வரவில்லை - அல்லது கலந்து கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. எங்களைப் பொறுத்த வரையில், காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறோம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோதும் பணியாற்றியிருக்கிறோம். எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோதும் பணியாற்றியிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எருக்கஞ்சேரி ஊழலைப்பற்றி சட்டசபையில் அரை மணி நேரம் நான் பேசியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியோ - அல்லது காங்கிரஸ் உறுப்பினர்களோ யாரும் குறுக்கிடாமல், அந்த அரை மணி நேரக் குற்றச்சாட்டை அமைதியாகக் கேட்டார்கள். கேட்டது மாத்திரமல்ல - அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் அந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை அறிவித்தார்கள்.
அதன் பின்னர், அண்ணா தலைமையில் தி.மு.கழக ஆட்சி வந்தது. அண்ணா அவர்கள் பெருந்தன்மையோடு அந்தக் குற்றச்சாட்டு பற்றிய மேல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டார்கள். எருக்கஞ்சேரி ஊழல் பற்றி நான் பேசியது, "இந்த இட ஊழலிலே ஜானகிராமன், முதல் குற்றம் செய்ய ஆரம்பித்தார் - அவருக்குத் துணையாக கோசல்ராமன் இருந்தார் -அந்த இரண்டு பேருக்கும் துணையாக அமைச்சர் வெங்கட்ராமன் இருந்தார்! அட ராமா! இப்படி நடக்கலாமா?"
என்று கேட்டேன். அதைப் பொறுமையாகத்தான் ஆளுங்கட்சியினர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ★ ★ ★ எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போது, பல்கேரியா - பால்டிகா கப்பல் பேர ஊழலைப்பற்றி இருபதுக்கும் மேற்பட்ட ஆதாரங்களை, ஒன்றன் பின் ஒன்றாக அவையிலே எடுத்து வைத்து, ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினேன். அதை எம்.ஜி.ஆரும், அவருடைய ஆளுங்கட்சியினரும் அமைதியாகத்தான் கேட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுநாள் பதில் சொல்வதாக அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.
அவையிலே அறிவித்தார். மறுநாள் அவையில் எம்.ஜி.ஆர். அவர்கள் "அந்தக் கப்பல்கள் வாங்குவதாக இல்லை!" என்று விளக்கம் அளித்தாரே அல்லாமல், என்னுடைய குற்றச்சாட்டுகளை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால், இப்போது, ரஷ்யாவில் சொல்வார்களே, "இம்" என்றால் சிறைவாசம் - "ஏன்" என்றால் வனவாசம் - என்று, அதைப்போல, ஒரு வார்த்தைகூட ஆளுங்கட்சியினுடைய குறைகளைச் சொல்லவோ, குற்றங்களைச் சொல்லவோ அனுமதிப்பதில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பேச ஆரம்பித்தால், முதலமைச்சர் குறுக்கிட்டு விளக்கம் அளிப்பது என்பது இயற்கைதான். அதற்கும் ஓர் அளவு உண்டு. ஆனால் இந்த முதலமைச்சர் அடக்கத்திற்கே விடை கொடுத்துவிட்டு, எல்லா கட்சித் தலைவர்களையும் சகட்டு மேனிக்குத் தாக்கிப் பேசுகிறார். என்னை அரசியலிலிருந்து விலகிக் கொள்ளலாம் - இலக்கியத்திலே கவனம் செலுத்தலாம்" - என்றெல்லாம் பேசியிருக்கிறார். நான் அந்த அம்மையாரின் ஆசைப்படி கலைத்துறைக்கும் போகலாம் - இலக்கியத் துறைக்கும் போகலாம் - ஆனால் பாவம், அந்த அம்மாவால் அது முடியாது.
திறமை இல்லை என்று சொல்லவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு" - என்றெல்லாம் நான் விரிவாகப் பதில் சொன்னேன். ★ ★ ★ அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற மரபுகள் எல்லாம் மீறப்படுவதையும், எதிர்க்கட்சியினர் உரிமைகள் பறிக்கப்படு வதையும், தி.மு.கழக உறுப்பினர் பரிதி இளம்வழுதியைச் சட்டப் பேரவையி
ன் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைத்ததையும், அவர்மீது கொலை முயற்சி வழக்குப் போட்டிருப்பதையும் கண்டிக்கும் வகையில், 2-2-2003 அன்று மாலை 4 மணிக்கு, தேனாம்பேட்டை ஜி.ஆர்.டி. ஓட்டலில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம், எம்.ஜி.ஆர்.
கழகம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் மக்கள் சக்தியைத் திரட்டுவதென்றும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறே 8-2-2003 அன்று "சட்டப் பேரவையிலே அ.தி.மு.க.வின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து" பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் மயிலை மாங் கொல்லைத் திடலில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் உரையாற்றினோம். ஆனால், இவ்வளவிற்கும் பிறகு, பேரவையில் ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, எதிர்க்கட்சியினரை எல்லாம் அவருக்கே உரிய பாணியில் இரண்டு மணி நேரம் வசைமாரிப் பொழிந்தார். காங்கிரஸ் கட்சித் தலைவரான நண்பர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களை அகம்பாவம் கொண்டவர் என்று அர்ச்சித்தார். ஏன் - என்னையும் பேராசிரியரையும் மிக மட்டரகமான அளவில் கேலி செய்தார்.
நான் அதற்குப் பதிலாக "முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு - ஒரு திறந்த மடல்" என்று தலைப்பிட்டு நீண்ட கடிதமாக விளக்கமளித்திருந்தேன். முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பேசும்போது எனக்கொரு அறிவுரை வழங்கியிருந்தார். அதாவது, என்னை - இலக்கியத்துடன் இரு - அரசியலை விட்டு விலகிவிடு" - என்கிற பொருள் கொண்ட பொன்னான அறிவுரை அது. அதற்கு நான் அளித்த பதிலில், "ஆம் - எனக்கு அரசியல் லாயக்கு இல்லைதான்! அரசியலில் வெற்றிகளைப் பெற்று, அந்த வெற்றியின் விளைவாகக் கிடைக்கும் பதவியைக் கொண்டு, பணமலை குவிக்கவோ, கோடி கோடியாகத் திட்டங்களை அறிவித்து, அதில் கொல்லைப்புற வழியாகத் திரவியம் திரட்டவோ, இதற்குத் தடை, அதற்குத் தடை என சட்டம் இயற்றி, மிரட்டி, இறுதியில் தடைக்கே தடை விதிக்கும் சட்டங்களைச் செய்து, கறுப்புப்பணக் கருவூலத்தை நிரப்பவோ கற்றறியாத - கற்றிட விரும்பாத - ஓர் அப்பாவிக்கு அரசியல் அரங்கில் ஆடவும் தெரியாது - பாடவும் தெரியாது!
இதற்கெல்லாம் மேலாக அரசியல் ஜாம்பவான் என்று காட்டிக் கொண்டு, அரசாங்க நிலங்களையும் உடைமைகளையும் சுருட்டிக் கொள்ளவும் தெரியாது! அதில் சிக்கிக் கொண்டால், திரும்ப ஒப்படைத்து விடுகிறேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்திடும் பயிற்சி பெற்ற திருடர்களின் தந்திரமும் தெரியாது! இத்தனையும் தெரியாத எனக்கு அரசியல் தகுதி இல்லைதான்!"
- என்றெல்லாம் எழுதியிருந்தேன். ★ ★ ★ கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த மத்திய சென்னை மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பரிதி இளம்வழுதியைப் பார்ப்பதற்காக நான் 6-3-2003 பகல் 12.30 மணியளவில் சென்னை மத்திய சிறைக்குச் சென்றேன். என்னுடன் பத்திரிகையாளரான சின்னக் குத்தூசி உடன் வந்தார். சிறையில் பரிதியைச் சந்தித்து, அவரது நலம் குறித்துக் கேட்டதோடு, பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தம்பி சுப.வீரபாண்டி யனையும் சந்தித்து, நலம் விசாரித்து விட்டுத் திரும்பினேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்தபோது, தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர்மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு தொடர்ந்து, சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் அந்த விசாரணை நடந்து வந்தது. 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த காரணத்தால், ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில், 8-2-2003 அன்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து 17-2-2003 அன்று தி.மு.கழகத்தின் சார்பில் பேராசிரியர் அவர்களே உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 11-2-2003 அன்று தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சாட்சியமளித்த விசாரணை அதிகாரி, அரசு வழக்கறிஞரும், கண்காணிப்பு மற்றும் லஞ்சத் தடுப்பு இயக்குநரகமும் தனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியதையும், உள்துறையை முதல் அமைச்சர் ஜெயலலிதாவே வைத்திருப்பதால், போலீஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளனர் என்றும், மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சாட்சிகள், ஏற்கனவே அவர்கள் கூறியதிலிருந்து அடியோடு மாற்றிக் கூறியிருக்கிறார்கள் என்றும், அந்த மனுவிலே விரிவாக பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவே ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ஆட்சி மாறிய நிலையில், அவர்கள் தங்கள் சாட்சியங்களை மாற்றிச் சொல்லக்கூடும் - என்றும் பேராசிரியர் மனுவிலே எழுதப்பட்டிருந்தது. எனவே, அந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுவதுடன், சென்னை மாநகரிலே நடைபெற்றுவரும் விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டு மென்றும் பேராசிரியர் மனுவிலே கேட்கப் பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வைரவா, பி.என். அகர்வால் ஆகியோர் பேராசிரியர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டு, தனி நீதிமன்ற விசாரணைக்குத் தடை வழங்கியதோடு, ஜெயலலிதா தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வழக்குதான் இன்னமும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் தங்களுக்கு வேண்டியவர் நீதிபதியாக வரமாட்டாரா?
அல்லது அபிலாட்சைகள் கொண்ட எவராவது நீதிபதியாக வரமாட்டாரா? என்ற நம்பிக்கையோடு வழக்கைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ★ ★ ★ வாணியம்பாடி, சைதாப்பேட்டை இடைத் தேர்தல்களுக்குப் பிறகு, 2003ஆம் ஆண்டு, பிப்ரவரியில் சாத்தான் குளம் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவிக்கை செய்தது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆளுங் கட்சியாக இருந்த நிலையில், இடைத்தேர்தல்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், அமைச்சர்கள் எல்லாம் அந்தத் தொகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தும், கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்கிக் குவித்தும், போலி வாக்குகளைத் தயாரித்துப் பயன்படுத்தியும், வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதிலாக மாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தலாம் என்ற ஏற்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்டும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றிக் கொண்டும், இப்படிப்பட்ட மக்கள் விரோத சேட்டைகளுக்குத் துணையாக போலீசாரையும், அடியாட்களையும், அதிகாரிகளையும், அமைச்சர்களையும், தேர்தல் ஆணையத்திலேயே ஓரிரு அலுவலர்களையும் பக்க பலமாக வைத்துக் கொண்டும், எப்படியும் வெற்றிபெற்றே தீருவது என்று நடத்தும் வெறியாட்டத்திலிருந்து "ஜனநாயகம்" விடுதலை பெற இயலாது என்பதை அனுபவமாகக் கொண்டு, சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக உயர் மட்டச் செயல் திட்டக் குழு தீர்மானித்தது.
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து நாட்கள் அங்கே முகாமிட்டுப் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால், "சாத்தான் குளத்தில் சிமெண்ட் ஆலை அமைத்துத் தருகிறேன் - மகளிர் கல்லூரி ஏற்படுத்துகிறேன் - பாலிடெக்னிக், விளையாட்டு வளாகம் இப்படி பலவற்றை உருவாக்கித் தருகிறேன்" என்றெல்லாம் சரமாரியாக வாக்குறுதிகளை அளித்தார். "இப்படி ஒரு முதலமைச்சர் வாக்குறுதிகளை வழங்கி - வாக்குக் கேட்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் - எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தன.
முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் ஏடுகளில் வெளி வந்ததையும் அந்தப் புகாரில் இணைத்து அனுப்பினார்கள். டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் உடனடியாக அதில் தலையிட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மாலைக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் அதிலே கூறப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர் அன்று மாலையே அனுப்பிய பதிலில் முதல் அமைச்சர் உறுதியான வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை - பரிசீலிப்போம் என்றுதான் கூறினார் - விதிமுறைகளை மீறிப் பேசவில்லை"- என்று தெரிவித்தார்.
அதன் பிறகு டெல்லியில் மத்திய தேர்தல் கமிஷன் அவசரக் கூட்டத்தை நடத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தை ஆய்வு செய்தார்கள். அதன் பிறகு தேர்தல் கமிஷன் தமிழக அரசுக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பியது. அந்தக் கண்டனக் கடிதத்தில் - "உங்களுடைய விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதை கமிஷன் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளுங்கட்சி அரசு சார்பிலான முன்னறிவிப்புகளைச் செய்து ஆதாயம் தேடக்கூடாது என்று தேர்தல் விதி உள்ளது.
தேர்தலில் எல்லா வேட்பாளர்களும் எங்களுக்கு ஒன்றுதான். ஆட்சி கையில் இருக்கிறது என்பதற்காக ஆளுங்கட்சி எவ்வித சலுகைகளையும் பெற முடியாது. உறுதி மொழி தரவில்லை - பரிசீலிப்பதாகத்தான் சொன்னார் - என்பதெல்லாம் ஒரு உயர் பதவியில் இருப்பவர் கடைப்பிடிக்கக் கூடிய பாதுகாப்பு முறையல்ல. இப்படி யெல்லாம் பாதுகாப்பு தேடுவதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாத்தான் குளம் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது சம்பந்தமான அவரது செயல்பாடுகளைத் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலமைச்சர் தனது பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது, தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகத் தான் என்று தேர்தல் கமிஷன் உறுதியாகக் கருதுகிறது. ஜெயலலிதாவின் பிரச்சார முறை ஏற்கத்தக்கதல்ல என்று நிராகரிக்கிறோம். அவர் உறுதிமொழிகளை அளித்தது தேர்தல் விதிகளை மீறிய குற்றமே என்று தேர்தல் கமிஷன் முடிவுக்கு வருகிறது" என்று எழுதியிருந்தது.
எனக்குத் தெரிந்தவரையில், மத்திய தேர்தல் ஆணையம் இப்படிப்பட்டதொரு சான்றிதழ்(?) அன்றைய தமிழக முதலமைச்சரைத் தவிர, வேறு எந்த முதல் அமைச்சருக்கும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இதுபோன்றதொரு கடிதம் என்மீது வந்திருந்தால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார்? எப்படிப்பட்ட அறிக்கை விட்டிருப்பார்? அடுத்த நிமிடமே என்னைப் பதவியிலிருந்து விலகச் சொல்லியிருப்பார். அந்த நேரத்திலேகூட பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு போன்ற அரசியல் தலைவர்கள் ஜெயலலிதா உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்றுதான் அறிக்கை விடுத்திருந்தார்கள்.
ஆனால் செய்தியாளர்கள் என்னிடம் அதைப்பற்றிக் கேட்டபோது, "தார்மீக ரீதியில் பதவியில் நீடிக்கலாமா என்பதை முதலமைச்சர் யோசித்துப் பார்த்து முடிவெடுப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது" என்றுதான் பதிலளித்தேன். ★ ★ ★ இவ்வளவு நடந்த பிறகுக்கூட, சாத்தான்குளத்தில் இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்- களினுடைய அராஜகம் தலைவிரித்தாடியது. போலி வாக்குகள் சரமாரியாக அள்ளிப் போடப்பட்டன. அதிகாரிகளும், போலீசாரும் ஆளுங்கட்சியினரைப்போலவே செயல் பட்டார்கள்.
அதன் பயனாக சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அந்த வெற்றிபற்றி நான் கூறும்போது - "ஒரு அணியினரை இன்னொரு அணியினர் கிரிக்கெட் மட்டைகளால் மண்டையில் தாக்கி - அடித்துக் காயப்படுத்தி விட்டு, பந்தை அந்த அணியினரே "பௌலிங்" செய்து, விக்கெட்டுகளையும் கைகளால் தள்ளி விட்டு, அம்பயர் கேள்வி கேட்டதற்கும், தடுத்ததற்கும் வீண் தகராறு செய்து விட்டு, வெற்றிக் கோப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடியவருக்கு "மேன் ஆப் தி மேட்ச்" என்று பட்டம் கொடுப்பது போன்றது இந்த வெற்றி" என்று கூறினேன்.
மேலும் நான் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். அதிகாரத் துஷ்பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் ஏராளமாக மீறப்பட்டிருக்கின்றன. அதுபற்றித் தேர்தல் கமிஷன் கேட்டதற்குக்கூட பொய்யான ஒரு பதிலை தேர்தல் கமிஷனுக்கு எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, சிமெண்ட் ஆலை போன்ற பல வாக்குறுதிகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா அந்தத் தொகுதியிலே அளித்திருக்கிறார்.
அதுபற்றி காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் கூறப்பட, அதற்கான விளக்கத்தைத் தேர்தல் கமிஷன் கேட்டபோது - "பரிசீலிப்பதாகத்தான் முதல் அமைச்சர் பேசினார்" என்று, அரசின் தலைமைச் செயலாளரே ஒரு வடிகட்டிய பொய்யைத் தேர்தல் கமிஷனுக்குப் பதிலாக அனுப்பியிருக்கிறார்.
வாக்குறுதிகளாகவே ஜெயலலிதா சாத்தான் குளத்திலே பேசியது அவர்களுடைய கட்சியின் அதிகாரப் பூர்வமான நாளேடான "நமது எம்.ஜி.ஆர்." பத்திரிகையிலேயே வந்திருக்கிறது. அப்படியானால் "நமது எம்.ஜி.ஆர்." பத்திரிகை பொய்யா? தலைமைச் செயலாளர் தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதம் பொய்யா? இதில் எது பொய்?- என்பது ஒருவேளை தேர்தல் வழக்கு வந்தால்தான் வெளியாகும்" என்றேன். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அரசைப் பற்றியும், அ.தி.மு.க.வின் செயல்பாடுகளைப் பற்றியும் தேர்தல் ஆணையமும் இந்த அளவிற்கு விமர்சனம் செய்தது என்றால், தமிழக அரசுக்கு அப்போது உயர் நீதிமன்றம் கொடுத்த சான்றிதழ்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன்.
★ ★ ★
