உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"தொல்காப்பிய பூங்கா"
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"தொல்காப்பிய பூங்கா" · 389 / 391

28."தொல்காப்பிய பூங்கா" வெளியீட்டு விழாக்கள்! 28-7-2002 அன்று நான் விடுத்த அறிக்கையில், "நெசவு செய்த துணிகள் தேங்கிக் கிடக்கிற நிலையிலும், இலவச வேட்டி - சேலைகள் வழங்கும் திட்டத்தை இந்த அரசு நிறுத்திவிட்டதால், அவைகளை உற்பத்தி செய்து, வருவாய் ஈட்ட முடியாத நெருக்கடியிலும் தமிழக நெசவாளர் பெருமக்கள் - குறிப்பாக திருவில்லிப்புத்தூர், அருப்புக் கோட்டை, சங்கரன்கோயில், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ வேண்டிய அளவுக்கு அவதிப்படுகிறார்கள்.

"பசி, பட்டினியுடன் வாடுகிற அந்த மிகப்பரிதாபத்திற்குரிய மக்களுக்கு, அந்தப் பகுதியில் உள்ள நல்ல உள்ளம் கொண்டவர்கள், தங்களால் இயன்ற அளவுக்குக் கஞ்சித் தொட்டிகளை அமைத்து, அவர்களது பசியைத் தீர்த்து வருவதாகச் செய்திகள் கிடைக்கின்றன. எனவே, அத்தகைய வறட்சிப் பகுதிகளில் நமது கழக அமைப்புகளின் நிர்வாகிகள் முயற்சி எடுத்து - கஞ்சித் தொட்டிகள் தொடங்கி - மிகவும் நலிவுற்றுள்ள அந்த மக்களுக்கு உதவிடுமாறும், என் வேண்டுகோளை ஏற்று உடனடியாகச் செயல்படுமாறும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தேன்.

நல்ல நோக்கத்தோடு விடப்பட்ட அந்த அறிக்கையையும் தாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் தனது பேட்டியில் கூறியிருந்தார். நெசவாளர்களின் துன்பம் கண்டு - நெஞ்சு பதைத்து -அவர்தம் இன்னல் போக்கிடக் குரல் கொடுத்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 1953ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் காலத்திலேயே கைத்தறி நெசவாளர் துயர் துடைத்திடத் தூய பணிகள் ஆற்றியிருக்கிறோம். நான் எழுதி - நானும், நடிகர் திலகம் சிவாஜியும், பட்டிதொட்டி, பட்டினக்கரைகள் எனப் பல இடங்களில் நடித்த "பரப்பிரம்மம்" நாடகத்தில் - ஒரு நெசவாளி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்றுவிட்டுக் கடைசியாகத் தன் மனைவியின் புடவையையும் விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டபோது, அவன் - "அய்யா!

சோம்பேறி இல்லை நான் - உழைத்து உழைத்து உலுத்துப் போனவன்! கண் விழித்து - கஷ்டப்பட்டு - துணி நெய்து காலத்தைக் கழித்தேன்! உழைக்கக் கை இல்லாமல் இல்லை! உடலில் சக்தி இல்லாமல் இல்லை! ஆனால் உழைக்க வழி? உற்பத்தி செய்த ஆடைக்கு விலை இல்லை - விற்பனை இல்லை - ஏழை நெசவாளிக்கு! எனக்கு ஏது வேறு கதி? வீட்டில் தறி தூங்குகிறது! பசி, தூங்குமா என்ன? நான் என்ன செய்வேன்? போகாத ஊரில்லை வேண்டாத கோயில் இல்லை! அய்யா, புண்ணியவான்களே!

பொங்கல் திருவிழாவுக்கு வீட்ல சல்லிக்காசு இல்லை! கிழிஞ்ச துணியை இடுப்பிலே சுத்திக்கிட்டு, இந்தப் புடவையை விக்கச் சொல்லிக் கொடுத்தா எங்க வீட்டு மகராசி - இதையும் யாரும் வாங்குவாரில்லையா? அப்படின்னா இந்தச் சேலை நானோ - என் மனைவியோ தூக்கிலே தொங்கத்தான் உதவுமா?"

- என்று தெருவில் நின்று வெதும்பி அழுததை அந்த நாடகத்தில் காட்சியாக்கினேன். நடிப்போடும், நாடக எழுத்தோடும் இருந்து விடவில்லை. தி.மு. கழகச் செயற்குழு எடுத்த முடிவின்படி, கைத்தறித் துணிகளைக் கழகத் தலைவர்களும், முன்னணியினரும் ஊர் ஊராகச் சென்று விற்பதென்று முடிவெடுத்து, 1953ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திருச்சியிலே வீதி வீதியாகச் சென்று கைத்தறித் துணிகளை விற்றார். நான் அதே நாளில், சென்னையிலே கைத்தறித் துணிகளை தெருத் தெருவாகச் சென்று விற்பனை செய்தேன்.

ஒரே நாளில் தமிழ் நாடு முழுவதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கைத்தறித் துணிகள் கழகத் தலைவர்களால் விற்கப்பட்டன. நான் சென்னையில் மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். அந்த விற்பனையின்போது தான் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள், என்னிடம் கைத்தறித் துணிகளை வாங்கியதுடன், அன்று முதல் கதராடையில் இருந்து மாறி, கைத்தறி ஆடையிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். "செந்தமிழ் நாட்டுக் கைத்தறி வேட்டி சேலைகள் வாங்குவீர்!

நம் திராவிட இனத்தவர் ஷேமம் வேண்டிச் சிங்கார ஆடைகள் வாங்குவீர்!" - என்ற உடுமலை நாராயணக்கவிராயரின் பாடலை நானும், நண்பர் செல்லமுத்துவும், மற்ற நண்பர்களும் பாடிக் கொண்டே சென்னையில் கைத்தறி வியாபாரம் செய்தோம். அந்த நினைவிலேதான், 2002ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்கள் வாடிய போது கஞ்சித் தொட்டிகளை ஆங்காங்கு வைக்கும் முடிவினைக் கழகம் எடுத்தது. நெசவாளர்களின் பிரச்சினைகள்பற்றி அக்கறையில்லாமல் இருந்த அ.தி.மு.க.

அரசு, கழகத்தின் சார்பில் கஞ்சித் தொட்டி திறப்பு என்று நடத்தத் தொடங்கியதும், அதற்குப் பக்கத்திலேயே "பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி" என்று ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், நெசவாளர்கள் பிரியாணி வாங்குவதைப் புறக்கணித்து, கஞ்சித் தொட்டி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "கைத்தறி நெசவாளர்களின் துன்பங்களுக்குக் காரணம், தி.மு.கழக ஆட்சியின் தவறான கொள்கைகள் தான்" என்றும் குற்றஞ் சாட்டியிருந்தார்.

அதற்குப் பதிலாக, தி.மு.கழக ஆட்சியில் நெசவாளர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக என்னென்ன சலுகைகள் - சாதனைகள் செய்யப்பட்டன என்பதற்கான நீண்ட பட்டியலை 3-8-2002 தேதிய "முரசொலி"யில் விரிவாக எழுதினேன். ★ ★ ★ 6-8-2002 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், நெசவாளர்கள் அதிகமாக வாழும் அம்மையார்குப்பத்தில் நானே கலந்து கொண்டு, வறுமையில் வாடும் நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஏடுகளில் அதுபற்றிய செய்தி வந்தது.

அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்ததும், அதிமுக அரசின் அதிகாரிகள் உடனடியாக அம்மையார்குப்பம் பகுதிக்கு விரைந்து சென்று, அங்கே தேங்கிக் கிடந்த கைத்தறிச் சேலைகளை எல்லாம் அவசர அவசரமாகக் கொள்முதல் செய்தார்கள். நெசவாளர்களுக்கு நான் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலேயே பிரியாணி அளிக்கின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியிலே கலவரம் செய்து, கழக நிகழ்ச்சியிலே கலந்து கொள்பவர்கள்மீது தாக்குதல் நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்ததின் பேரில், கழகத்தின் சார்பில் அம்மையார்குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து விடும்படிக் கழகத் தோழர்களிடம் கூறினேன்.

★ ★ ★ ஆனால், மதுரை மாவட்டத்தில் 9-8-2002 அன்று செல்லூரில், கஞ்சித் தொட்டி திறக்கும் நிகழ்ச்சியில், மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே இடத்தில் அதிமுக சார்பில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சிக்கும் காவல் துறை அனுமதி அளித்தது. இரு தரப்பினருக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. காவல் துறையினர் சமாதானம் செய்ய முற்பட்டு, தி.மு.கழகத்தினர் நிகழ்ச்சியை மட்டும் ரத்து செய்யக் கோரினர்.

முன்னாள் பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மேயர் செ. ராமச்சந்திரன் ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்வதாகக் கூறி, போலீஸ் வேனில் ஏற்றினர். "நெசவாளர்களுக்கு கஞ்சி உறுதியாக வழங்கியே தீருவோம்" என்று கூறி முன்னாள் அமைச்சர் தா.

கிருட்டிணன், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி, முன்னாள் எம்.பி. செல்வேந்திரன் ஆகியோர் கஞ்சி வழங்க முற்பட்டனர். அப்போது மேடையிலே இருந்த தா. கிருட்டிணன் கீழே தள்ளிவிடப்பட்டார். தரையில் விழுந்த அவரை போலீசார் தடியடி நடத்தி பூடஸ் காலால் மிதித்தனர். மேடையில் இருந்த தி.மு.க. பேச்சாளர் சலீம், மாவட்ட அவைத் தலைவர் மு.தர்மலிங்கம் ஆகியோர்மீது போலீசார் நடத்திய தடியடியில், அவர்கள் மண்டை உடைந்தது.

கழகத்தினரை காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கிய காவல் துறை முக்கியமானவர்களை எல்லாம் கைது செய்தது. முன்னாள் பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, சொ. காவேரி மணியம், மதுரை மேயர் செ. ராமச்சந்திரன், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, கம்பம் செல்வேந்திரன், பி. பாக்கியநாதன், எம். மருதுபாண்டியன், கிரமர் சுரேஷ், செல்வின் பாண்டியன், கருப்பையா, ஆர்.ஏ.

வேல்முருகன், குருசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த தா. கிருட்டிணன், மு. தர்மலிங்கம், ஒச்சுப்பாலு, ராமமூர்த்தி, சலீம் உள்ளிட்ட பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறையில் உள்ளவர்களைப் பார்க்கச் சென்ற மு.க. அழகிரி, பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்களுக்கு சிறை அதிகாரி அனுமதி மறுத்துவிட்டார். இந்தச் சம்பவங்கள் நடைபெற்றபோது, மதுரையில் தங்கியிருந்த மு.க.

ஸ்டாலினை வெளியே வரவிடாமல் காவல் துறையினர் தடுத்து வைத்தனர். அவர்கள் தடுத்ததையும் மீறி மு.க. ஸ்டாலின், ரகுமான்கான், பெரிய கருப்பன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவர்களையெல்லாம் சந்தித்து நலம் விசாரித்தார்கள். ★ ★ ★ "தொல்காப்பியம்" நூலுக்கு கவிதை நடையில் கருத்துரை எழுதவேண்டுமென்று பல நாட்களாகத் திட்டமிட்டு, சென்னையிலே தொடர்ந்து கழகப் பணிகள் இருந்த காரணத்தினால், கோவா சென்று, அங்கே சில நாட்கள் தங்கி எழுதினேன்.

என்னோடு என் மனைவி தயாளுவும், தம்பி துரைமுருகனும் வந்திருந்தார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலே இருக்கும்போதும் சரி - இல்லாதபோதும் சரி - என்னென்ன பொய்களை யெல்லாம் கூறி வருகிறார் என்பதை இந்தத் தொடரில் பல இடங்களில் நான் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டி வருகிறேன். அந்தப் பட்டியலில் இடம் பெறக்கூடிய மற்றொரு பொய் இதோ! என் பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், நான் சந்தன வீரப்பனைச் சந்திப்பதற்காகத்தான் கோவா சென்றிருக்கிறேன் என்று தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையைப் பயன்படுத்தி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

என்னுடன் மத்திய அரசின் கறுப்புப் பூனைப் படையினரும், தமிழக அரசின் சார்பில் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட காவல் துறையினரும் வந்திருந்தார்கள். 6-8-2002 முதல் 10-8-2002 வரை பெங்களூரில் தங்கியிருந்த போதும் தமிழகக் காவல் துறையினரும், மத்திய அரசின் கறுப்புப் பூனைப் படையினரும், கர்நாடக மாநில காவல் துறையினரும் உடனிருந்தனர். மேலும், என்னுடன் தம்பிகள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, ஈ.ஏ.பி.

சிவாஜி, ராணிப்பேட்டை காந்தி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். ஆனால், கோவாவில் வீரப்பனைச் சந்தித்தேன் என்று ஜெயலலிதா கூறியதும், அதற்கு மறுப்பு தெரிவித்துப் பேராசிரியர் அறிக்கை விடுத்தார். அதில் - "திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திறந்த புத்தகம், சூழ்ச்சிகளுக்கோ - சூதுகளுக்கோ - ஜெயலலிதாவைப்போல திரை மறைவு வேலைகள் செய்வதற்கோ - தி.மு.க.விற்குத் தெரியாது. ஜெயலலிதா தன்னிடமுள்ள காவல் துறையினரை வைத்து எந்த விசாரணை வேண்டுமானாலும் செய்யட்டும்.

அந்த விசாரணையின் முடிவில், ஜெயலலிதாவின் முகத்திரை தான் கிழிக்கப்படுமே தவிர, கலைஞருக்கோ அல்லது கழகத்திற்கோ எந்தக் களங்கமும் ஏற்படாது. மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஜெயலலிதா அபாண்டமான ஒரு பழியை கழகத் தலைவர்மீது வேண்டு மென்றே திட்டமிட்டு கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!"

- என்று தெரிவித்திருந்தார். பெங்களூரிலிருந்து வெளிவரும் "தினச்சுடர்" ஏடு 31-8-2002 தேதிய இதழில், "பதவிக்கு அழகல்ல" என்ற தலைப்பில், ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தில் - "தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு - வீரப்பனைச் சந்திக்க முன்பு பெங்களூர் சென்றார் - இப்போது கோவா சென்றுள்ளார் என்று ஜெயலலிதா காணும் கனவை, தமிழக அரசு செய்தியாக வெளியிட்டுள்ளது. தனது 78வது வயதில், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அராஜகங்களை தாங்கிக்கொண்டே அரசியல் பணியுடன், தமிழ்ப் பணியையும் மேற்கொண்டுள்ள இந்தத் தமிழ் முனியைப் போற்றுவதை விட்டு, தூற்ற முனையும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கோவா எழில்மிக்க கடற்கரையுள்ள மாநிலம். இங்குதான் முன்பு ஜெயலலிதா "அடிமைப் பெண்"ணாக நடனம் ஆடினார். அங்குதான் இப்போது கருணாநிதி தமிழ் எழுதுகிறார். இதில் என்ன குற்றம் இருக்கும் என்று புரியவில்லை. தமிழக முதல்வர் (ஜெயலலிதா) அடிக்கடி ஐதராபாத் திராட்சைத் தோட்டத்துக்குச் செல்வது ஓய்வு எடுக்க அல்ல. ஆந்திர நக்சலைட்டுகளைச் சந்திக்கச் செல்கிறார் என்று கூறினால், அது எப்படி அபத்தமோ அதுபோலத்தான் கருணாநிதி கோவாவில் வீரப்பனைச் சந்திக்கிறார் என்று சொல்வதும் ஆகும்.

அரசியலில் முதிர்ச்சி வேண்டும். சொல்கின்ற கருத்துக்களில் தெளிவு இருக்க வேண்டும். ஏனோ தானோ என்று பேசுவது முதல்வர் பதவிக்கு ஏற்றது அல்ல" - என்று தினச்சுடரில் பா.சு.மணி எழுதியிருந்தார். ★ ★ ★ கோவாவிலிருந்து நான் திரும்பியதும், என்னைச் சந்தித்த செய்தியாளர்கள் "நீங்கள் கோவா சென்றிருந்ததைப்பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா, வீரப்பனைச் சந்திக்கத்தான் - என்று கூறியிருந்தாரே?"

என்று கேட்ட போது - "அந்தப் பைத்தியக்காரத்தனமான உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது, பெங்களூரில் அப்போதே கேட்டபோது, வீரப்பனைப் பார்க்க வரவில்லை, பின்லேடனைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன் என்று கிண்டலாகச் சொன்னேன்" என்று கூறினேன்.

★ ★ ★ 2003ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 11 அன்று, "தொல் காப்பியப்பூங்கா" நூல் வெளியிடும் நிகழ்ச்சி - அதற்கடுத்த நாள், ஜனவரி 12இல் சிலப்பதிகார நிகழ்ச்சி - அதாவது அன்பகத்தில் கண்ணகி சிலை திறப்பு விழா - இரண்டிற்கும் இடையே 12ஆம் தேதி காலையில், கழகச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. நான் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா" இலக்கிய நூலின் வெளியீட்டு விழா - கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் 11-1-2003 அன்று நடைபெற்றது.

சங்கத் தமிழ், குறளோவியம், சிலப்பதிகார நாடகக் காப்பியம், திருக்குறள் கலைஞர் உரை ஆகிய இலக்கிய நூல்கள் வரிசையில் எழுதப்பட்டது தான், "தொல்காப்பியப் பூங்கா" சிலப்பதிகார நாடகக் காப்பியம் என்ற நூலுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களே அணிந்துரை தந்தார்கள். "சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை என் தம்பி கருணாநிதி தனது "வளமிகு செழுந்தமிழ்ச் சொல் திறத்தால்" நாடகமாகத் தருவது பொருத்தமானதே! கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன் - பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் - ஊரும் உலகமும் அறிந்தது - அறிந்து மகிழ்ந்தது - மகிழ்ந்து பாராட்டியது!

நூல் முழுவதும் கருணாநிதி, ஒரு காவியப் படைப்பிற்குத் தேவையான செழுஞ் சொல்லோட்டத்தைச் சீரிய - அழகு அமைப்பை - உருவாக்கித் தருகிறார். மு.கருணாநிதியின் இந்நாடகமே ஒரு சிலம்பு! இளங்கோவடிகளின் தங்கம் அதில் இருக்கிறது! இந்தப் புகழ்மிக்க எழுத்தாளரின் ஆற்றலும் அபரிமிதமான அளவிற்கு இருக்கிறது!"- என்றெல்லாம் அண்ணா அவர்கள் அந்த அணிந்துரையில் குறிப்பிட்டிருந்ததை என்னால் மறக்க முடியுமா? "குறளோவியம்" குறித்து, எனது ஆசிரியர் மகாவித்வான் தண்டபாணி தேசிகர் அவர்கள், "கலைஞர் ம

ிகவும் அழகிய முறையிலே சுவை குன்றாமல் இந்த ஓவியத்தைத் தீட்டிச் செல்கின்ற முறையைப் பார்த்தேன். இந்த நூல் எனக்கே - ஏன் எனக்கே என்றால் - நான் சுவையறிவு உள்ளவன் - எனக்கே ஒரு விம்மிதத்தை உண்டாக்கிற்று. அதைப் பாராட்டக் கூடிய நேரமும் எனக்குக் கிடைத்திருக்கிறது"என்று புகழாரம் சூட்டியதைத்தான் என்னால் மறக்க முடியுமா?

"சங்கத் தமிழ்" குறித்து, மதுரைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள், "எவன் ஒருவனுக்குச் சங்கத் தமிழில் நாட்டம் இல்லையோ - அவன் வெறும் பங்கத் தமிழன் என்பது எனது கருத்து. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற சங்க நூல்கள் நமது தமிழுக்கு மூல வேர்கள் - விழுதுகள். இந்தச் சங்க இலக்கியங்களில் யார் ஊறித் திளைக்கின்றார்களோ, அவர்கள்தான் தமிழினத்தையும், நாகரிகத்தையும், சிறப்பையும் உணர முடியும்.

அந்த வகையில் இளமைக் காலந்தொட்டே, நல்ல சங்கத் தமிழில் புலமை இருந்த காரணத்தால், அவருடைய குறளோவியத்தில் இருக்கின்ற தமிழ் நடை அவ்வளவு அழுத்தமான - அழகு நிறைந்த - இனியதாக அமைந்திருக்கின்றது. கலைஞரை நான் மட்டுமே பாராட்ட வில்லை. தமிழகமே பாராட்டுகின்றது!"

என்று பேசியதை என்னால் மறக்க முடியுமா? ★ ★ ★ இந்த வரிசையில் நான் எழுதிய, "தொல்காப்பியப் பூங்கா" நூலினைத் தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் வெளியிட, மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு அதனைப் பெற்றுக் கொண்டார். தம்பி துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். முனைவர் நன்னன் அணிந்துரை வழங்கினார். விழாவில் முனைவர் சாலமன் பாப்பையா, முனைவர் அவ்வை நடராசன், கவிக்கோ அப்துல் ரகுமான், காவியக் கவிஞர் வாலி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கவிஞர் கனிமொழி நன்றியுரையாற்றினார். நான் ஏற்புரையாற்றினேன். தொல்காப்பியப் பூங்கா வெளிவந்ததை யொட்டி, இலண்டன் பி.பி.சி. செய்தியாளர் என்னிடம் சிறப்புப் பேட்டி ஒன்று வேண்டுமென்று கேட்டு, அவ்வாறே நான் அளித்த பேட்டியில், தொல்காப்பியத்தை எளிய முறையில் - எழிலார்ந்த தமிழில் தீட்டியிருக்கிறேன் என்றும், பழமையை எருவாக்கிக் கொண்டு, புதுமையை மலரச் செய்ய வேண்டும் என்பதே தொல்காப்பியப் பூங்கா மூலம் நான் தருகின்ற செய்தி என்றும் தெரிவித்தேன்.

தமிழகத்தில் "தொல் காப்பியப் பூங்கா" நூலின் முதல் பதிப்பு வெளியான நேரத்தில், கவிப்பேரரசு தம்பி வைரமுத்து ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ஜப்பான் நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், 8-1-2003 அன்றே என்னைச் சந்தித்து, என் ஒப்புதலைப் பெற்று, சென்னையில் அந்த நூல் வெளியிடப்படும் 11-1-2003 அன்றே, ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் அவர் கலந்துகொள்ளவிருந்த பொங்கல் விழா மேடையிலே அந்த நூலினை வெளியிட்டார். ★ ★ ★ வேலூர் மத்திய சிறையில் பொடா சிறைவாசியாக அப்போதிருந்த ம.தி.மு.க.

வின் பொதுச் செயலாளர் வைகோ "தொல் காப்பியப் பூங்கா" நூல் வெளியீட்டு விழாவிற்காக, 9-1-2003 அன்று ஒரு நீண்ட வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பி வைத்தார். அதில் இறுதியாக - "நீங்கள் படைத்துள்ள இப்பூங்காவில் மலரும் பூக்கள் என்றுமே வாடாது. வண்ணமும் மாறாது. இப்பூக்களின் தேனலை மொண்டிடும் வண்டுகள் களிக்குமே தவிர மயங்கிச் சாய்ந்திடா. தமிழ் உணர்வு மங்கி வரும் வேளையில், தமிழ்ப் பகைவர் ஓங்காரக் கூச்சலிடும் இன்றையக் காலக் கட்டத்தில் இத் "தொல்காப்பியப் பூங்கா" காலத்தின் இன்றியமையாத் தேவையாக - தன்மானத் தமிழரின் படைக்கலனாக - வாய்த்துள்ளது.

காலத்தை வெல்லும் உயிர்க் காவியங்களைப் படைத்து, தமிழன்னைக்கு நீங்கள் சூட்டிய மணியாரத்தில் இனியும் ஒரு ஒப்பிலா மணியை இணைத்துள்ளீர்கள். வெளியீட்டு விழாவில் நல்லறிஞர்களின் உரை அப்பூங்காவில் தவழும் தென்றலாகும். நேரில் காண இயலாவிடினும் இச்சிறையிலிருந்தவாறே என் மனக்கண்களால் கண்டு மகிழ்வேன். இத்தகு காவியங்கள் பலவற்றைத் தொடர்ந்து நீங்கள் படைத்திடும் வகையில், கார் காலத்து மழைத்துளிகளினும், காவிரி மணலினும் பன்னெடு நாள் நலமுடன் நீங்கள் வாழ்ந்திடும் அருளைப் பொழிந்திடுக - என்று இயற்கைத் தாயை இறைஞ்சுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

★ ★ ★ தொல்காப்பியத்திற்கு உரை எழுதிட வேண்டுமென்ற ஆவலை அருமைத் தம்பி, முரசொலிமாறன் என்னிடம் ஏற்படுத்தி, அதன் காரணமாக 2002ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் நாள், கோவாவில் எழுதத் தொடங்கி, 33 நாட்களுக்குள்ளாக 144 சூத்திரங்களுக்கான 100 மலர்களை எழுதி முடித்து, அது அருமையானதொரு நூலாக, ஐநூறுக்கு மேற்பட்ட பக்கங்களில் இரண்டே மாதங்களில் அச்சாகி, சென்னை மாநகரில் டோக்கியோ நகரில் வெளியிட்டார். 2003ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 11ஆம் நாள் அன்று முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

அதற்குப் பிரதமர் வாஜ்பய் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "பழம் பெரும் புலவர் தொல்காப்பியர் அவர்களால் தமிழர்தம் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து 2500 ஆண்டுகளுக்குமுன், எழுதப்பட்டதும், பழங்கால தமிழ் இலக்கண நூல் என்று கருதப்பட்டதுமான முதன் முதலான இலக்கியம் ஒன்றுக்கு, கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் விளக்க உரை எழுதியிருப்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். உலகின் தொன்மையான - வளமான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.

பண்டைய மொழியாக இருக்கும் அதே நேரத்தில், நவீன மொழியாகவும் அது விளங்குகிறது. தமிழக மக்களின் உயரிய கலாச்சாரம், மதி நுட்பம், சமூக பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அம்மொழி விளங்குவதால் தமிழர்கள் மட்டுமின்றி - இந்தியர்கள் அனைவருமே தமிழ் மொழி குறித்துப் பெருமிதம் கொள்ளலாம். டாக்டர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட "தொல்காப்பியப் பூங்கா" என்ற நூலின் வெளியீட்டு விழாவிற்கு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

★ ★ ★ நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்ற நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், நூலினை வெளியிட்ட தமிழண்ணல் அவர்களும், அந்த விழாவில் வாழ்த்துரை வழங்கியோரும் சிறப்பாக உரையாற்றினார்கள். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோருடன் என் வீட்டிற்கே வந்து வாழ்த்து தெரிவித்தார். ★ ★ ★ ஒரே மாதத்தில் தொல்காப்பியப் பூங்கா முதல் பதிப்பாக அச்சிடப்பட்ட 3000 புத்தகங்களும் விற்றுத் தீர்ந்த நிலையில், இரண்டாம் பதிப்பு வெளியிட முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த இரண்டாம் பதிப்புக்கும் வெளியீட்டு விழா ஒன்றினைத் தமிழகத்தின் தென் பகுதியிலே நடத்திட நினைத்து, சங்கம் வளர்த்த மதுரை மூதூரில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று தம்பி மு.க.

அழகிரி மிகுந்த ஆர்வத்தோடு - கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு நடத்தினார். அன்று காலையில் மதுரை புகைவண்டி நிலையத்திலேயே மிகப் பெரிய கூட்டம்! எழுச்சிமிகு வரவேற்பினை எனக்களித்தார்கள். இரண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்ட ஆயிரம் புத்தகங்களும் விழா மேடையிலேயே விற்றுத் தீர்ந்து, அடுத்து மூன்றாம் பதிப்பாக ஆயிரம் புத்தகங்களைப் புதிதாக அச்சேற்றித்தான், மதுரையிலே முன்தொகையாக பணம் கொடுத்திருந்தவர்களுக்கும், அடுத்து சென்னையிலே நேரிலே என்னிடம் கொண்டு வந்து லட்சம் ரூபாய் வீதம் கொடுத்த விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமசசந்திரன் அவர்களுக்கும், மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி அவர்களுக்கும் வழங்கிட முடிந்தது. ★ ★ ★ இரண்டாம் பதிப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குப் பேராசிரியர் தமிழண்ணல் தலைமை தாங்கிட, நூலினை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, மத்திய இணை அமைச்சர் ஆ. இராஜா பெற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, பேராயர் ஆரோக்கியசாமி, மணவை முஸ்தபா, க.ப. அறவாணன், அவ்வை நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலினை வெளியிட்ட கவிப்பேரரசு அந்த விழாவில் எனக்கு நினைவுப் பரிசு வழங்கித் தங்கக் காப்பு அணிவித்தார். நான் ஏற்புரை ஆற்றினேன். தமிழ்க்கனி பதிப்பகம் சார்பாக மு.க. அழகிரியும், மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அ. கருணைதாசனும் நன்றி கூறினார்கள். மதுரையில் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட வகையில், மதுரையில் மொத்தம் வசூலான தொகை 29 லட்சம் ரூபாய் என்பதை தமிழ்க்கனி பதிப்பகத்தின் சார்பில் மு.க. அழகிரி தெரிவித்தார்.

இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழாவன்று வசூலான 29 லட்சம் ரூபாயில், அச்சகச் செலவு 9 லட்ச ரூபாய் போக, மீதம் 20 லட்ச ரூபாயில் தமிழ்க்கனிப் பதிப்பக வளர்ச்சிக்காக 10 லட்சம் ரூபாய் வைத்துக் கொண்டு, எஞ்சிய பத்து லட்ச ரூபாய் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகை கழகத்தின் நீண்ட கால உடன்பிறப்புகள் நலிந்த நிலையில் இருந்தால், அவர்கள் பிள்ளைகளின் மேல்நிலைக் கல்விக்காகவும், உடல் நலிவுற்ற - வசதியற்ற கழகத் தொண்டர்களின் மருத்துவச் செலவிற்காகவும் தி.மு.

கழக அறக்கட்டளை மூலம் உரிய முறையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ★ ★ ★ அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகரில் மண்டலப் பொறுப்பாளர் கே.என். நேரு அவர்கள் மிகுந்த பிடிவாதமாக இந்த நூலின் நான்காம் பதிப்பு வெளியீட்டு விழாவினை நடத்துவதாகக் கூறி, 2002ஆம் ஆண்டு மார்ச் 22ந் தேதியன்று அந்த விழாவும் கோலாகலமாக அங்கே நடைபெற்று, அப்போது நான்காம் பதிப்பாக அச்சிடப்பட்ட ஆயிரம் புத்தகங்களும் உடனடியாக விற்றுத் தீர்ந்து, மேலும் இரண்டு பதிப்புகளாக ஐந்தாவது பதிப்பும், ஆறாவது பதிப்புமாக, நூல்களை அச்சடித்து வழங்கினோம்.

ஆக, முதல் பதிப்பு வெளியிடப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் ஆறு பதிப்புகளாக தொல்காப்பியப் பூங்காவின் 8000 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. திருச்சியில் தொல்காப்பியப் பூங்கா விற்பனையான நிதியில் மிஞ்சிய ஒன்பது இலட்ச ரூபாயும், திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு என்னால் வழங்கப்பட்டது. ★ ★ ★ இந்தப் புத்தகத்திற்காக வருகின்ற தொகையில், அதனை அச்சடிப்பதற்கான செலவுத் தொகை போக மீதமுள்ள தொகையில் பெரும் பகுதியைக் கழகத் தோழர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்கேற்பட்டு, தி.மு.கழக அறக்கட்டளைக்கு, இந்த நிதி வழங்கப்பட்டது.

தொல்காப்பியப் பூங்காவின் ஏழாவது பதிப்பு 20-4-2003 அன்று வேலூரில் வெளியிடப்பட்டது. காலை 10 மணிக்கு ஒரு திருமண மண்டபத்தில், நானே, என் கையால் நூலினை வழங்குவதென்று அறிவித்து, அவ்வாறே நடைபெற்றது. 10 மணிக்கு நூலினை வழங்கத் தொடங்கிய நான், பகல் 12.30 மணிவரையில் வழங்கிக் கொண்டிருந்தும், முடியவில்லை. அரக்கோணம், கந்திலி, நெமிலி, சோளிங்கர், திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்றியம், நகரக் கழகத் தோழர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே வழங்க முடிந்தது.

எஞ்சியிருந்த வேலூர், காட்பாடியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மற்றொரு நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று துரைமுருகன் அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், முகமது சகி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆர். காந்தி, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூரில் நடைபெற்ற 7ஆம் பதிப்பு வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலே கிடைத்த நிதியிலிருந்து மூன்று இலட்ச ரூபாய் தி.மு.

கழக அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. ★ ★ ★ தொல்காப்பியப் பூங்கா நூலின் 7ஆம் பதிப்பினை வேலூரில் வெளியிட்ட நான், 26-4-2003 அன்று காலையில், 8ஆம் பதிப்பினை கோவையில், முத்தமிழ் கலை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டேன். அந்தப் பதிப்பினை காவியக் கவிஞர் வாலியிடமிருந்து, மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் பெற்றுக் கொண்டார். அந்த விழாவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்த நிலையில், குளிர்ப்பதன வசதியும் அந்த மண்டபத்தில் இல்லாத காரணத்தால், நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால், இரத்த அழுத்தம் குறைவாகி, அதிக வியர்வை ஏற்பட்டு, சோர்வடைந்து, மயக்கமடைந்தேன்.

வியர்வை கொட்டியது. உதடுகள் காய்ந்து விட்டன. நா வரண்டுவிட்டது. பக்கத்தில் இருந்த கண்ணப்பனிடம் நிலையைச் சொன்னேன். அவர் எதிரே அமர்ந்திருந்த துரைமுருகனிடமும், டி.ஆர்.பாலுவிடமும் காட்டிய ஜாடையில் அவர்கள் மேடைக்கு ஓடி வந்தனர். என் குடும்ப டாக்டர் மேடையிலேயே என்னைச் சோதித்து விட்டு, நான் பேச வேண்டாமென்று தடுத்தார், நான் அதைக் கேட்காமல், நன்றி உரையாற்ற முற்பட்டேன். இருந்தாலும் ஒரு சில வாக்கியங்களுக்குமேல் பேச முடியவில்லை.

அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு எனக்கு என்ன நடந்தது என்று நினைவில்லை. உடனடியாக, கோவையில் உள்ள கே.ஜி. பக்தவத்சலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கே அனைத்துச் சோதனைகளும் முன் எச்சரிக்கையாக எடுக்கப்பட்டு, விரைவிலேயே - ஒருசில மணி நேரத்திலேயே நலம் பெற்றேன். இந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட பிரதமர் வாஜ்பய் அவர்கள், இரண்டு முறை தொலைபேசியில் டெல்லியிலிருந்து தொடர்பு கொண்டு என் உடல் நலத்தினைக் கேட்டறிந்தார்.

மாலையில் சூர்யா ஓட்டலுக்குத் திரும்பினேன். பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் புறப்பட்டேன். சேலத்திலிருந்து தம்பி வீரபாண்டி ஆறுமுகம் பொதுக்கூட்டத்திற்குப் போக வேண்டாமென்று கண்ணீரால் கட்டளையிட்டார். டாக்டர்கள் என்னதான் நல்ல நல்ல மருந்து வழங்கி என்னைக் காப்பாற்றினாலும், முழுமையாக என்னைக் குணமடையச் செய்யும் மாமருந்து, உடன் பிறப்புகள் - தமிழ்ப் பெருங்குடி மக்கள் குழுமியிருந்த அந்தக் கூட்டமாக அல்லவா இருந்தது!

அந்த மருந்தைத் தேடிச் சென்றேன்! பேசினேன்! ஏராளமான அரசியல் தலைவர்களும், நண்பர்களும் தொலைபேசியில் என் நலம் குறித்து விசாரித்தனர். 26-4-2003 அன்று கோவையில் "தொல்காப்பியப் பூங்கா" மூலமாக வசூலான நிதியில் தி.மு. கழக அறக் கட்டளைக்காக மேலும் பதினைந்து இலட்ச ரூபாயினை அளித்தேன். 1-9-2002இல் எழுதத் தொடங்கி - 3-10-2002க்குள் 532 பக்கங்கள் எழுதி முடித்து- முதல் பதிப்பு வெளியீட்டு விழா 2003ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி - ஐந்தே மாதங்களில் 11 பதிப்புகள் வெளியிடப்பட்ட - ஒரு நூலினை எழுதியவன் நான் என்ற சிறப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது, "தொல்காப்பியப் பூங்கா!"

★ ★ ★