உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/என்றும் மறக்க முடியாத மாறன்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

என்றும் மறக்க முடியாத மாறன்! · 388 / 391

27. என்றும் மறக்க முடியாத மாறன்! இருதய வால்வு கோளாறு காரணமாக ஏற்கனவே அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பூரண குணமடைந்த முரசொலி மாறன், தொடர்ந்து தனது மத்திய அமைச்சர் பணியிணைச் செவ்வனே பார்த்து வந்தார். இதற்கிடையே நள்ளிரவில் என் வீட்டுக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கைது செய்வது என்ற பெயரால் மிருகத்தனமாகப் போலீசார் இழுத்துச் சென்றபொழுது, விசாரிக்க வந்த முரசொலி மாறனை, அவர் மத்திய அமைச்சர் என்றும் பாராமல், காவல் துறையினர் இழுத்துக் கீழே தள்ளியதின் காரணமாக அவரது உடல் நிலை கடும் பாதிப்புக்கு ஆளானது.

அத்தகைய நிலையிலேயும் அவர் தனது பணியைத் தொடர்ந்து வந்தார். அவரது உடல் நிலை மீண்டும் டெல்லியிலே பாதிக்கப்பட்டு, 24-7-2002 அன்று அங்குள்ள அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் சேர்க்கப்பட்டு, இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலே ஓரளவு குணம் பெற்று, அத்துடன் பணிகளை ஆற்றி வந்த நிலையில், 23-9-2002 அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் அங்கே நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு டெல்லியில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில், சிறு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக டெல்லியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். ★ ★ ★ 25-9-2002 அன்று பிற்பகலில், தம்பி மாறனுக்கு மீண்டும் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வால்வில் ஏற்பட்ட பாதிப்பு, இந்த அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கிரிநாத் தலைமையில், இருதய சிகிச்சை நிபுணர் கே. சுப்பிரமணியம் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பிரதமர் வாஜ்பய் அவர்களும், மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சத்ருகன் சின்கா அவர்களும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மாறன் உடல் நிலை குறித்து விசாரித்தனர். 27-9-2002 அன்று அப்பல்லோ மருத்துவமனையில் நானும், பேராசிரியரும், வீராசாமியும், ஸ்டாலினும், துரைமுருகனும் மற்றவர்களும் அமர்ந்திருந்தோம்.

அதே மருத்துவமனையில் வேறொரு அறையில்தான் தம்பி மாறன் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மாறன் என்னைப் பார்க்க விரும்புவதாக அழைத்தார்கள். "அறுவை சிகிச்சை முதல் நாள்தான் முடிந்துள்ள நிலையில், யாரும் அருகே வரக்கூடாது, நான் இங்கேதான் இருக்கிறேன் என்று கூறுங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.

இருந்தாலும் அவர் கேட்காமல், பிடிவாதமாக வற்புறுத்தியதின் பேரில் நான் அங்கே சென்றேன். மாறன் எதுவும் அப்போது பேசவில்லை. என்னைப் பார்த்துக்கொண்டே அவர் படுத்திருந்தார். ஐந்தாறு நிமிடங்கள் கழித்து, மாறனின் மகளும், என் பேத்தியுமான அன்புக்கரசி, "அப்பா! தாத்தா பார்த்துவிட்டார், வெளியே போய் அமர்ந்து கொள்ளலாமா?"

என்று கேட்டார். அதற்கு மாறன், "இல்லையில்லை- இங்கேயே உட்காரட்டும்" என்று கை ஜாடையாகத் தெரிவித்தார். அப்போதும் எதுவும் பேசவில்லை. பதினைந்து நிமிடம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். மீண்டும் அரசி, "அப்பா! தாத்தா இப்போது போகலாமா?"

என்றார். உடனே கோபம்கொண்டு, மகள்மீது சீறி விழுந்து, "இல்லையில்லை- போகக் கூடாது - இருக்கட்டும்" என்று கூறி பார்த்துக் கொண்டே இருந்தார். மேலும் பத்து நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்துவிட்டு, நானாக வெளியே வந்து, "லிப்ட்" வழியாக இறங்கும்போது, மாறனின் துணைவி மல்லிகா, என் வேதனையைக் குறைக்க எண்ணி, கேலியாக, "மாமாவை மருமகப் பிள்ளை பார்த்துக் கொண்டே இருந்தார்" என்றார்.

அப்போது நான் சொன்னது, என் நினைவிலேயே உள்ளது. "மல்லிகா! மாறனுக்கு இப்போது 68 வயது ஆகிறது! நீ அவரை மணந்து நாற்பதாண்டுகள்கூட ஆகவில்லை. ஆனால், நான் அவனைத் தூக்கி வளர்த்து 68 ஆண்டு காலமாக அவனோடு பழகியவன். அவனை வளர்த்தவன்" என்று சொன்னேன்.

தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த முரசொலி மாறனின் உடல் நிலையில், அக்டோபர் மத்தியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அவரது நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையிலே உள்ள மூத்த மருத்துவர்கள் தெரிவித்த யோசனையின்படி பிரதமர் வாஜ்பய் அவர்களிடமும் கருத்தினைப் பெற்று, அமெரிக்காவிற்கு மாறனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று ஹூஸ்டன் நகரிலே "மெத்தாடிஸ்ட்" மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

13-11-2002 இரவு மாறன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதையொட்டி, பிரதமர் என்னிடம் கலந்து பேசிவிட்டு, மாறன் வகித்து வந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை பொறுப்புக்களை மத்திய அமைச்சர் அருண்ஷோரி தற்காலிகமாகக் கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. ★ ★ ★ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த மாறனின் உடல்நிலை குறித்து அடிக்கடி பிரதமர் வாஜ்பய் அவர்கள் தொலை பேசியிலே என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டிருந்தார்.

2003ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கடைசியில், மாறனுக்கு ஏற்கனவே இருதய 'மிட்ரல் வால்வு' மாற்று அறுவை செய்யப்பட்ட இடத்தில், மீண்டும் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென்று அமெரிக்க மருத்துவர்கள் முடிவு செய்து - 29-1-2003 அன்று அந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாறன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமோடு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் என்ற முறையில், முரசொலி மாறனின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசுதான் ஏற்க வேண்டுமென்றாலும், அ.தி.மு.க.வினர் சிலர் அதைப்பற்றி விமர்சனம் செய்த காரணத்தால், தந்தையின் மருத்துவச் செலவுகளைத் தாங்களே ஏற்பதாக என் பேரன் கலாநிதி என்னிடம் கூற, அந்தத் தகவலை நான் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தேன்.

அதையொட்டி நான் விடுத்த அறிக்கையில், "மத்திய அமைச்சர்களின் மருத்துவச் செலவுகளை இதுவரையில் மத்திய அரசு ஏற்றுக் கொள்வது என்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது என்பதற்குப் பல முன் மாதிரிகள் இருந்த போதிலும், அதற்கு மாறாக, முரசொலி மாறனின் மொத்த மருத்துவச் செலவுகளை, அவரது மகன் கலாநிதி மாறன் அவர்களே ஏற்றுக் கொள்வதாகக் கூறி, இந்தத் தகவலை பிரதமர் அவர்களுக்குக் கடிதம் மூலம் நான் தெரிவித்துள்ளேன். முரசொலி மாறனுக்குத் துணையாக அவருடன் சென்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் செலவுகளை கலாநிதி மாறன் தான் ஏற்றுக் கொண்டு செய்து வருகிறார் என்பதையும், வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவறாகச் செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே சென்னை அப்பல்லோ மருத்துவமனைச் செலவுகளையும் கலாநிதி மாறன்தான் ஏற்றுக் கொண்டு, பணம் கட்டியுள்ளார் என்பதையும் இப்போது நினைவூட்டுகிறேன்" என்று தெரிவித்தேன். ★ ★ ★ 13-11-2002 அன்று ஹூஸ்டன் நகருக்கு, சிறப்புச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி முரசொலி மாறன், 6-9-2003 அன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து, அவரது தொடர் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கலாம் என்று முதலில் திட்டமிட்டு, பின்னர் மனிதாபிமான- மற்ற முறையில் ஆட்சியிலே இருந்தோர், அந்த மருத்துவமனை நிர்வாகிகளுக்குச் செய்த மறைமுகமான மிரட்டல் காரணமாக, அங்கே அனுமதிக்க இயலாமல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ மனைக்குச் சென்று மாறனின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தேன். மருத்துவ மனையில் முரசொலி மாறனைப் பார்ப்பதற்காக பிரதமர் வாஜ்பய் அவர்கள், 13-9-2003 அன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெற்று வந்த மாறனைப் பார்த்தார். மாறனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். மாறனும் கண் விழித்துப் பார்த்தார். அதன் பிறகு தனி அறையில் என்னையும் சந்தித்து உரையாடினார். மாறன் உடல் நிலை குறித்து நீண்ட நேரம் என்னிடம் பேசினார்.

அவரிடம் நான் தஞ்சை, திருச்சி டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல், சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டு, உடனடியாகக் காவிரி ஆணையத்தைக் கூட்டி, கலந்து பேசி, டெல்டா மாவட்ட விவசாயிகளைக் காப்பாற்றும்படிப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். "அந்தக் கூட்டத்தைக் கூட்டினால் தமிழக முதலமைச்சரே கலந்து கொள்ளமாட்டாரே, அவருக்குத்தான் காவிரி ஆணையத்தையே பிடிக்காதே!"

என்றெல்லாம் வாஜ்பாய் என்னிடம் கூறினார். அகில இந்திய அளவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் முரசொலி மாறன் உடல்நிலை குறித்து தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்குப் பிறகு, சுமார் இரண்டரை மாதங்கள்தான் தம்பி மாறன் எங்களோடு இருந்தார். 2003ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி இரவு 7 மணியளவில், நான் அவர் அருகிலே இருக்கும்போதே உயிர் பிரிந்து விட்டது.

"எனக்கு எல்லாவற்றிலும் ஆறுதல் கூறக்கூடியவர் போய்விட்டாரே!" என்று கதறினேன். செய்தியறிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும், கழகத் தோழர்களும் திரண்டனர். 17-8-1934 அன்று, திருக்குவளை கிராமத்தில், நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது பிறந்த மாறன், திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசுக் கல்லூரி, சேலம் நகராட்சிக் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி - ஆகியவற்றில் படித்தார். மக்களவைக்கு 5 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 3முறையும் என்று 35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஏழாண்டுகள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

பன்முகத் திறன் கொண்டவர். சிறந்த பத்திரிகையாளர். அருமையாகக் கட்டுரைகளைத் தீட்டுவார். திரைப்படக் கதாசிரி யரும்கூட. தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், உரையாடல் தீட்டுபவராகவும் இருந்துள்ளார். சிறு கதை எழுத்தாளர். பொருளாதார விவகாரங்களில் விற்பன்னர். "மாநில சுயாட்சி" பற்றியும், "திராவிட இயக்க வரலாறு" பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைபோல நூல் எழுதியிருக்கிறார். என்னைப்பற்றி முரசொலி மாறன் குறிப்பிடும்போது, "எனக்கு அகரம் கற்றுத் தந்த ஆசான்" என்பார்.

பிரதமர் வாஜ்பய் அவர்கள் தயாநிதி மாறனைத் தொடர்பு கொண்டு, "முரசொலி மாறனின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு" என்று கூறியதோடு, நேரிலும் சென்னை வந்து, எனக்கு ஆறுதல் தெரிவித்தார். திருமதி சோனியா காந்தி அம்மையார், "தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் மாறன். மிகச் சிறந்த தலைவர். அவர் மறைவுச் செய்தி கேட்டு நான் மிகவும் கவலை அடைந்தேன்" என்றார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள என் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மாறன் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும், இரவு முழுவதும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தம்பி மாறனின் உடல் அரசு மரியாதையுடன் 24-11-2003 அன்று, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் வாஜ்பய், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் அமைச்சர் எஸ்.எம்.

கிருஷ்ணா, கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ண மூர்த்தி, அகில இந்தியச் செயலாளர் இல. கணேசன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, எல். கணேசன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன், திருநாவுக்கரசர், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, மற்றும் கலையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் கே.

பாலசந்தர், மற்றும் தமிழகத் தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, எனக்கு ஆறுதலும் தெரிவித்தனர். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு போன்றவர்களும், வைகோ போன்றவர்களும் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினர். அந்த நேரத்தில் சிறையிலே இருந்த வைகோவும், மு.க. அழகிரியும் நீதிமன்ற அனுமதியுடன் நேரில் வந்திருந்து மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர். ★ ★ ★ இந்தியப் பிரதமராக குஜ்ரால் இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரைச் சந்திக்க 21-5-1997 அன்று லண்டன் சென்றிருந்தார்.

அங்கே இங்கிலாந்து பிரதமரைச் சந்தித்த பிறகு, எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதை ஐந்தாம் பாகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்து 2001ஆம் ஆண்டு, நவம்பர் திங்களில் மாறன் இந்தியாவின் பிரதிநிதியாக தோகாவில் கலந்து கொண்ட உலக வர்த்தக மாநாட்டில் அவரின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் வாஜ்பய் அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி, அதில் மத்திய அமைச்சர் மாறன் தோகா மாநாட்டில் ஆற்றிய பணிக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில நாளிதழ்களும் மாறனுக்கு அப்போது புகழ் மாலைகள் சூட்டின. ★ ★ ★ அப்படிப்பட்ட மாறன் மறைவு குறித்து "முத்திரை பதித்த வித்தகர்" என்ற தலைப்பில், "தினமணி" 25-11-2003 அன்று எழுதிய தலையங்கத்தில், "நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முரசொலி மாறனின் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், பொது வாழ்க்கையில் அவர் நடத்திய போராட்டத்தில் பெற்றுத் தந்த வெற்றிகள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

"தி.மு.க.வின் குரலை மட்டுமின்றி, தமிழகத்தின் குரலையும் டெல்லியில் உரக்க ஒலிக்கச் செய்த பெருமை மாறனுக்கு உண்டு. கட்சித் தலைவர் கருணாநிதியின் "மனசாட்சி"யாகவே திகழ்ந்த அவர், குறுகிய கால ஆதாயத்தை இலக்காகக் கொள்ளாமல், நீண்ட காலக் கண்ணோட்டத்தில் "தி.மு.க. வின் மூளை"யாகவும் செயல்பட்டார். "அண்ணா விட்டுத் தந்த இடத்தை மக்களவையில் நிரப்புவதற்காக முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மாறன், எதிலும் சோடை போனதில்லை.

"மிசா" சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த அவர், சாதுரியமான அரசியல் முடிவுகளை எடுப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். அதற்கு ஓர் உதாரணம், 1980 மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டு சேரும் முடிவு! பலரை வியக்க வைத்த இந்த முடிவின் பின்னணியில் செயல்பட்டவர், மாறன். "1999ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், வாஜ்பய் அரசுக்கு ஆதரவாக தி.மு.க. வாக்களிக்க கருணாநிதியைச் சம்மதிக்க வைத்தவரும் அவரே.

இதனால் வேறுபட்ட இரு சித்தாந்தங்களைக் கொண்ட தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கரம் கோர்த்தன. தேசிய

ஜனநாயகக் கூட்டணியை உருவாக்குவதில் மிகவும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கி, குறைந்தபட்சச் செயல் திட்டம் வகுப்பது உட்பட ஒவ்வொரு கட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்தார். "அவரது மறைவு, கருணாநிதிக்கு மட்டுமோ, தி.மு.க.வுக்கு மட்டுமோ ஏற்பட்ட இழப்பாகக் கருத முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர் மாறன். அவரது இடத்தை எளிதில் நிரப்ப முடியாது.

உலக அளவில் இந்தியாவுக்கு அவர் பெற்றுத் தந்த வெற்றிகள், தமிழகம் எப்போதும் பெருமைப்படத்தக்கவை" - என்று எழுதியிருந்தது, "தினமணி" ஏடு. மாறன் மறைந்து ஒன்பதாண்டுகளாகின்றன. அவரின் எழுத்துக்களும், அவரைப் பற்றி எழுதிய எழுத்துக்களும் இன்னமும் வாழ்கின்றன - இனியும் வாழும். மாறன் மறைந்தபோது 27-11-2003 அன்று நான் முரசொலியில் வடித்த கண்ணீர் அஞ்சலி இதோ "தம்பி, "புள்ளியாய்த் தோன்றி பூமியாய் வளர்ந்தவரே!

நீங்கள் மரித்துப் போனதாய் மனம் நம்பவில்லை!" - என்று கவிப்பேரரசு இரங்கல் கவிதை எழுதியுள்ளார், உனக்கு! நீ மரித்துப் போகவில்லைதான் - பூமியாய் வளர்ந்து- வானமாக விரிந்து விட்டவனே! வானத்துக்கு மரணமேது? இன்னொரு கவிஞர் வி.இளங்கோ என்பார்; இன்று எழுதியுள்ள கவிதையில், "தாய் மாமன் பலருக்கு உண்டு - மாமனே தாயானது உனக்கு மட்டுந்தான்" - என்று குறிப்பிட்டிருப்பதை முழுவதும் படிக்க முடியவில்லை - அதற்குள் அருவித் திரைகள் என் பார்வையை மறைத்து விட்டன.

இந்தத் தாயை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்காக - இந்தத் தாய் தாங்கமாட்டாள் என்பதற்காக - நானூறு நாட்களுக்கு மேலாகக் கடும்போர் நடத்திக் கடைசியாக இயற்கையின் பக்கமே வெற்றியை வழங்கி விட்டுப் போய்விட்டாய். அன்று ஒரு நாள் காவல்துறை அதிகாரிகளால்; உன் நெஞ்சுக்குள் ஏற்பட்ட அந்த விழுப்புண் - அதுவே நீ விழுவதற்கும், எம் விழிகளில் நீர் விழுதுகள் இறங்குவதற்கும் காரணமாகி விட்டது என்பதை எண்ணிப் பார்க்கும் போது; போர்க் குணம் படைத்த என் தங்கமே!

அநீதியை, அராஜகத்தை எதிர்க்கக் கேடயமாகவும் ஈட்டியாகவும் எங்களுடன் இணைந்து இருந்தவனே! எப்போதும் அப்படியேதானிருப்பாய் எமது உணர்வாக! - என்ற உறுதியையும் நம்பிக்கையையும் எம்மிடம் விட்டுவிட்டுத்தான் சென்றிருக்கிறாய்! குவளை மலரில் ஓர் இதழாய்த் தோன்றினாய் - என்னைப் போலவே! அந்தத் திருக்குவளைத் தெருவில்தான் என் மடியில் விளையாடினாய்! அந்தக் கிராமத்தில் படித்த என்னை இரண்டாம் படிவத்தில் சேர்ப்பதாகத் திருவாரூர் உயர்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் அழைத்து வந்தார்.

தேர்வுகள் எழுதினேன் - எழுதினேன் - இறுதியில் வெறும் ஐந்தாம் வகுப்பில்தான் சேர்க்கப்பட்டேன்; அதுவும் - "தெப்பக் குளத்தில் விழுந்து விடுவேன்" என்று அந்தக் குளம் நோக்கி ஓடிய பிறகுதான் அந்த வகுப்பும் கிடைத்தது. ஆனால் நீ என்னிடம் பாடம் கற்றாய் - மூன்றாம் வகுப்பு படித்து முடித்த உன்னை ஐந்தாம் வகுப்புக்கே தகுதியென்று தேர்வு செய்தார்களே - அதை நீ மனத்தில் வைத்துக் கொண்டுதானே - இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்க மத்திய அமைச்சராக இலண்டன் மாநகர் சென்றபோது, அங்கிருந்து எனக்கு எழுதிய மடலில் "நான் உங்கள் தயாரிப்பல்லவா?"

என்று நன்றியுணர்வைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியிருந்தாய்! தொடர்ந்து அந்தக் கடிதத்தில், "என் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து - என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! இப்படி நீங்களும் நானும் தான் கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும் - ஏனெனில் இது இரத்த பாசம்! நமது திருக்குவளைப் பின்னணி! நமது மாநிலக் கட்சி சூழ்நிலை!"

என்று எழுதியிருந்தாய். அண்ணா எனக்கு எழுதிய கடிதங்களைக் கண்களில் ஒத்திக் கொள்வது போலத்தான் தம்பி - நீ இலண்டனிலிருந்து எனக்கு எழுதிய கடிதத்தையும் முத்தங்களால் நனைத்துக் கொண்டிருக்கிறேன். தாயின் முத்தத்தினையொத்த இந்தத் தாய் மாமனின் முத்தம் உனக்கும் இனிக்கும் - எனக்கும் இனித்துக் கொண்டேயிருக்கும். என் மருமகன் என்ற தகுதியால் மட்டுமே பெருமை பெறுவதும் - புகழ் பெறுவதும் நிறைவானதல்ல என்பதால்தான்- ஓராண்டு மிசா சிறைவாசமெனும் தியாகக் கிரீடத்தை அணிந்து கொண்டாய்!

அடக்குமுறை வெறிகளை - அராஜகத் தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டாய்! அண்ணாவின் அளப்பரிய அன்புக்கும் பாசத்துக்கும் ஆளானாய்! வாஜ்பய், வி.பி.சிங், குஜ்ரால் ஆகிய பிரதமர்கள் உள்ளிட்ட வடபுலத்துத் தலைவர்கள் பலரின் வாஞ்சைமிகு வாழ்த்துக்களுக்கு உரியவன் ஆனாய்! உலகின் கவனம் கவர்ந்த "தோகா" மாநாட்டில் நீ விரித்த புகழ்த் தோகையும் - கிளிண்டனுடன் விவாதித்த பெருமிதமும் - இங்கிலாந்தின் டோனி பிளேருடன் சந்திப்பும் - உன் கழுத்தில் ஊஞ்சலாடும் முத்தாரங்கள்!

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தும், மூதறிஞர் இராஜாஜியும், பேரறிஞர் அண்ணாவும் கையெழுத்திட்ட வேட்பு மனுவல்லவா உன்னை தென் சென்னை நாடாளு மன்ற உறுப்பினராகவும் - வெளிநாட்டுப் புகழாரங்களைத் தோளில் சுமக்கும் வெற்றி வீரனாகவும் - விளங்கிடச் செய்தது! மாநில சுயாட்சிக்கு 'வேதமே' எழுதி 'முரசொலி'த்தாய்! ஆனாலும் மத்திய அரசுதான் உனக்கு இறுதி இராணுவ மரியாதை செலுத்தியது! குவளையில் பிறந்து குவலயம் போற்றிடப் பணி புரிந்தாய்!

அந்தப் புகழ்ப் பூவின் மணம் சிறிதும் குறையாமல், புயல் அடிக்கும் என் நெஞ்சில் இப்போதும் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறாய். நீ போகலாம் - உன் நினைவுகளை என்னை விட்டு எடுத்துச் செல்ல உன்னால் முடியுமா? முடியவே முடியாது! ★ ★ ★