உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எந்த நாளும் மறவாத
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எந்த நாளும் மறவாத · 387 / 391

26. எந்த நாளும் மறவாத அந்த நாள் நினைவுகள் 23-8-2002 அன்று கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், தனது உடலையே தானமாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஏடுகளில் வெளிவந்ததை ஒட்டி, "முரசொலி"யில் வெளி வந்த கேள்வி-பதில் பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்; "தம்பி கலைஞானி கமல்ஹாசனின் அறிவிப்பு எல்லோரையும்போல எனது நெஞ்சையும் நெகிழச் செய்த ஒன்று! சமுதாயப் பணியும், மனிதநேயப் பணியும் ஆற்றுகின்ற வகையிலேயே அவர் தனது மன்றத்துப் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி வருவதும் பாராட்டத்தக்கதாகும்.

அவர் இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து - கலைத் தொண்டும், மனிதநேயத் தொண்டும் ஆற்றிட வேண்டுமென நான் விரும்புகிற அதே நேரத்தில், தனது முடிவுக்குப் பிறகு தனது உடலையே தானமாகத் தருவதாக வெளியிட்டுள்ள அவரது மனப் பாங்கு போற்றத்தக்கதும், புகழத்தக்கதுமாகும்" என்று தெரிவித்ததோடு, செங்கற்பட்டு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றிய காஞ்சிபுரம் கே.டி.எஸ்.

மணி அவர்கள், தான் மறைந்த பிறகு, தனது உடலை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கியதையும், அவ்வாறே அவர் தனது 67வது வயதில், 28-8-1993 அன்று மறைந்தவுடன், அவரது விருப்பப்படியே அவருடைய உடல் ராமச்சந்திரா மருத்துவ மனைக்குத் தானமாக ஒப்படைக்கப்பட்டதையும் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். என்னுடைய இந்தப் பதிலைப் படித்த கலைஞானி கமல் அவர்கள், 29-8-2002 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில்- "அன்புள்ள அய்யா அவர்கட்கு, வணக்கம். நெகிழ்தல், நெகிழ்விக்கத் தெரிந்தோர் மனதில்தானே உடனே நிகழும்? தமிழையும் தமிழர் உள்ளங்களையும் பல மாமாங்கங்களாய் அவ்வப்போது நெகிழ வைக்கும் தங்களைப் போன்ற மூதறிஞர் வாயால் வாழ்த்துப் பெற்றதில் நெகிழ்ந்தது நானும்தான். உடல் தானம் என்கிற சமுதாய நேயமுள்ள செயலை, நானே முன்னோடியாக நின்று செய்துவிடவில்லை என்பதை நான் முற்றும் உணர்கிறேன். இந்திய மக்கள் எனக்குக் கனிவுடன் தந்திருக்கும் சிறிய நட்சத்திர அந்தஸ்தை நற்செயல்களுக்குப் பயன்படச் செய்வதே எனது நோக்கம்.

உங்களுடைய கழகக் கண்மணிகளைப்போன்ற உன்னதச் சிந்தனையாளர்கள் பலருடைய நற்செயல்களின்பால் கவன ஈர்ப்பு செய்யும் ஒரு கருவியாகவே என்னையும், எனது இச்செயலையும் மக்கள் ஏற்பர் என நம்புகிறேன். பெயர் தெரியாத பல தியாகிகளின் வாரிசாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உங்களுடைய அன்பு வார்த்தைகள், தொடர்ந்து நற்செயல்களில் என்னை ஊக்குவிப்பதாக மட்டுமின்றி, எனது பெயரில் இயங்கிவருகிற நற்பணி இயக்கத் தோழர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சார்ந்த நன்றி. அன்புடன் கமலஹாசன்" என்று எழுதி இருந்தார். காஞ்சிபுரம் கே.டி.எஸ். மணியின் அன்பு மகன் பொன்னம்பலமும் எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார். ★ ★ ★ 2003ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி அதிகமாக உள்ளது என்று கூறி, ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கே புதிதாகத் தலைமைச் செயலகத்தைக் கட்டப்போவதாக அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராணி மேரி கல்லூரி மாணவிகள், 5-4-2003 அன்று என்னைச் சந்தித்து முறையிட்டதோடு, அவர்கள் தொடர்ந்து நடத்தவிருந்த போராட்டத் திற்குத் தி.மு.கழகத்தின் ஆதரவைக் கோரினார்கள்.

"எங்களுடைய ஆதரவு அவர்களின் போராட்டத்திற்கு உண்டு" என்று நான் தெரிவித்தேன். உடனே அந்த மாணவிகளை நான்தான் தூண்டி விடுவதாக என்மீது குற்றம் சாட்டினார்கள். பண்பாட்டுச் சின்னங்கள் பற்றியோ வரலாறு பற்றியோ கவலைப்படாமல், ராணி மேரிக் கல்லூரியை இடிப்பது என்பது அ.தி.மு.க. அரசின் விவேகமற்ற செயல்" என்று 7-4-2003 தேதிய "இந்து" நீண்ட தலையங்கம் தீட்டியது.

★ ★ ★ மு.க. ஸ்டாலின், பொன்முடி, எ.வ. வேலு, இள.புகழேந்தி, எஸ்.ஏ.எம்.உசேன், ஜெ.அன்பழகன், திருச்சி பரணிகுமார் ஆகியோர் நான் கூறியதன்பேரில் ராணி மேரி கல்லூரிக்குச் சென்று, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளைச் சந்தித்து, ஆதரவினைத் தெரிவித்தார்கள். அவ்வளவுதான்! அன்று நள்ளிரவே அ.தி.மு.க. அரசின் காவல் துறை மு.க.ஸ்டாலின் மற்றும் க.பொன்முடி, எஸ்.ஏ.எம்.உசேன், ஜெ.அன்பழகன் ஆகியோரை ராணி மேரி கல்லூரிக்குள் அத்து மீறி நுழைந்ததாகப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு சென்னை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே இடம் இல்லை என்ற ஒரு காரணம் கூறி, அவர்களைக் கடலூர் அழைத்துச் சென்று, அங்கே சிறையில் அடைத்தனர். இந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட கழகத் தோழர்கள் பல்லாயிரவர் ஆங்காங்கு மறியலில் ஈடுபட்டுக் கைதாகினர். மு.க. ஸ்டாலினுடன் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர்களான தம்பிகள் தண்டராம்பட்டு எ.வ. வேலு, இள. புகழேந்தி ஆகியோரையும் கைது செய்து சிறையிலே அடைத்தனர்.

"ஸ்டாலினை நள்ளிரவில் கைது செய்திருக்கிறார்களே - சட்டத்தை மீறி கல்லூரிக்குள் அத்துமீறி சென்றார் என்பதற்காகவா? அல்லது அரசியல் பழிவாங்கும் காரியமா?" என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது - "சட்டத்தை மீறிய பிரச்சினையே கிடையாது. அத்துமீறிச் சென்றார் என்றால் தனியார் இடமா அது? ராணி மேரி கல்லூரி பொது இடம். 102 வயதான அம்மையார் ஆலிவ் பால், டாக்டர் ராமமூர்த்தி ஆகியோர் எப்படி அங்கே சென்று பார்த்தார்களோ, அதைப்போல சாப்பிடாமல் அங்கே வாடிக்கொண்டிருந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், தி.மு.க.

தலைவராகிய நான் அவர்களுடைய போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவு உண்டு என்று தெரிவித்திருப்பதைப்போல ஆதரவு தரப்படும் என்று சொல்லவும், அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற போது அவர்களை யாரும் தடுக்கவில்லை. அங்கே சிறிது நேரம் பேசியிருக்கிறார்கள். அப்போதும் தடுக்கவில்லை. மறுநாள் திடீரென்று நினைத்துக்கொண்டு - அதுவும் வழக்கம்போல் இரவு 12 மணிக்குமேல் கைது செய்திருக்கிறார்கள்" என்று கூறினேன்.

14-4-2003 தேதியிட்ட "தி ஸ்டேட்ஸ்மேன்" ஆங்கில நாளிதழில், "Law less in Tamil Nadu" - எனத் தலைப்பிட்டு, "Time ripe for regime change" என்கிற துணைத் தலைப்பில் எழுதிய தலையங்கத்தில்- "தமிழகச் சட்டமன்ற தி.மு. கழக உறுப்பினர்களில் ஒருவரும், இரண்டு முறை சென்னை மாநகர மேயராக இருந்தவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை, இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளின்மீது நள்ளிரவிலே கைது செய்த செயலின் மூலம், உச்ச நீதி மன்றம் 1994ஆம் ஆண்டிலும், 1997ஆம் ஆண்டிலும், முறையே ஜோகிந்தர் குமார் வழக்கிலும், டி.கே.

பாசு வழக்கிலும், கைது செய்வதற்காக வழங்கிய விதிமுறைகளை எல்லாம் எந்த அளவிற்கு மதிக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் செய்து காட்டியிருக்கின்றது. "மு.க.ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி அவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு சாதாரண குற்றச்சாட்டுகளின் பேரில் இதைப் போலவே நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது - எதிர் காலத்தில் அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேண்டுமென்றே பல தகராறுகளை உருவாக்கும் இதுபோன்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று மத்திய அரசின் உள்துறை, மாநில அரசினை எச்சரித்தது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதுபோன்ற தொரு துரதிருஷ்டமான செயல்களில் மற்றொரு முறை ஈடுபடாத அளவிற்கு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. "2001ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற நாள் முதல், ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளே அதன் செயல்பாடுகளாகவே இருக்கின்றன" என்றெல்லாம் எழுதியிருந்தது. ஆனால் ஜெயா அரசு இந்தத் தலையங்கங்களைப் பற்றி யெல்லாம் கவலைப்படுவதாக இல்லை.

நள்ளிரவின்போது ஸ்டாலினும், மற்றவர்களும் கைது செய்யப்பட்ட பிரச்சினையையும், அரசு அலுவலர் பிரச்சினையையும் சட்டப் பேரவையில் 10-4-2003 அன்று எழுப்பிட அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால், அனைத்து எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தங்களது கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பின்னர் கைதாகி, வடக்கு கடற்கரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, காவலில் வைக்கப்பட்டார்கள்.

அப்போது அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த எனக்கு, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகி, காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட தகவல் கூறப்பட்டது. அந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட நான், அவர்களைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு, மதியம் 12.30 மணியளவில் வடக்கு கடற்கரைக் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.

பாலசுப்பிரமணியம், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் ஆகியோரை நான் சந்தித்துப் பேசினேன். அங்கே வந்திருந்த சோ.பாலகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசினேன். ★ ★ ★ அதைப்பற்றி அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வளவு நாகரீகமாக அவையிலே விமர்சித்தார் தெரியுமா?

"முன்னாள் முதல்வர் கருணாநிதி நான்கைந்து வாகனங்கள் பின்தொடர வடக்கு கடற்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அவர் உறுப்பினர்களைப் பார்த்துவிட்டு, அப்படியே சென்று விட்டால் பரவாயில்லை. சாலையில் உட்கார்ந்தால், அப்படியே பத்திரமாகத் தூக்கிக்கொண்டு போய் விட்டுவிடக் கூறியிருந்தேன். அவர் 43 உறுப்பினர்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துப் படம் எடுத்துவிட்டு, அண்ணா அறிவாலயம் சென்று விட்டார்" என்று கூறினார்.

நான் "சாகசம்" எதுவும் செய்யாமலேயே, ஜெயலலிதா "போஸ்" கொடுத்துவிட்டுத் திரும்பியதாகப் பேசினார். "சாகசக் கலை"யில் கைதேர்ந்தவர் யார் என்பதும் நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன? மு.க.ஸ்டாலின் கைதைத் தொடர்ந்து, தமிழக அரசின் காட்டு மிராண்டித்தன தர்பாரைக் கண்டித்து, தமிழகமே போர்க் கோலம் கொண்டது. ஆனால் ஜெயலலிதா, பேரவையில் எதிர்க் கட்சியினர் பொறுப்புக் கெட்டத்தனமாக நடந்து கொள்வதாகக் கூற அதையும் கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசனும் அறிக்கை விடுத்தனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எப்போதும்போல, "ஜெயலலிதாவின் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பினால்தான் தமிழ்நாடு உருப்படும்" - என்றே பேட்டி அளித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்ட விரோதமாகச் சிறையிலே அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலினையும், அவரோடு கைது செய்யப்பட்டவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று எஸ்.ஏ.எம்.

உசேன், எம்.எல்.ஏ.வின் மகன் எஸ்.எம். அப்துல் காதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சண்முகம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முன்பாக, ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனுவினைத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்பு ஆஜராகி வாதாடினார். ★ ★ ★ 11-4-2003 அன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்ச் செல்வம் தலைமையில் நடைபெற்ற அறப் போராட்டத்தில் கழகத்தினர்மீது போலீசார் நடத்திய தடியடிப் பிரயோகம் கொடுமையினும் கொடுமை!

தாய்மார்கள் என்றும் பாராது அவர்களைத் தரையில் உருட்டிப் போலீசார் மிதித்த குரூரச் செயல், எத்தகைய ஒரு துரைத்தனத்திலும் பார்த்திருக்க முடியாத காட்சியாகும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுவது குறித்தும் - எதிர்க்கட்சித் தலைவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா தரக் குறைவாக விமர்சனம் செய்வது குறித்தும் - எதிர்க் கட்சி உறுப்பினர்கள்மீது காவல் துறையை ஏவிக் கைது செய்வது குறித்தும் - மற்றும் அ.தி.மு.க.

அரசின் அராஜகப் போக்குகள் குறித்தும் - கலந்தாலோசிக்க 24-4-2003 அன்று அனைத்துக் கட்சி கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை கழகம் ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., எம்.ஜி.ஆர். கழகம், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, பாரதக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.

அன்று இரவு சைதாப்பேட்டையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றும் போது, பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தொடருமானால், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும்வரை போராட்டமும் தொடரும்!" என்று பேசினேன். 26-4-2003 அன்று கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, "சட்டமன்ற ஜனநாயகமும், அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். ★ ★ ★ 2001ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சியில் என்னைக் கைது செய்தபோது, நீதிபதி அசோக்குமார், என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும்படியும், அதன் பிறகு சிறைக்குக் கொண்டு செல்லலாம் என்றும் கூறினார்.

ஆனால், என்னை மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லாமல், நேரடியாக சிறைச்சாலைக்குத்தான் அழைத்துச் சென்றார்கள். தம்பி மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோதுகூட நீதிபதியிடம், தன்னை வெளியூர் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், சென்னைச் சிறையிலேயே வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதால், நீதிபதி சென்னைச் சிறையிலேய வைக்க ஆணையிட்டார். ஆனாலும், அவரை மதுரைக்குக் கொண்டு சென்று அங்கே சிறையில் அடைத்தார்கள்.

அதுபோலவே, பொடா சட்டத்தின்கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறனை நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி அவரிடம் "ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போது நெடுமாறன், "இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவன் நான் - எனக்கு உடல் நலம் சரியில்லை - அதனால் என்னைச் சென்னை மத்தியச் சிறையில் அடைக்க உத்தரவிடுங்கள். வெளியூர் வேண்டாம்" என்று வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார்.

அவரது இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, சென்னை மத்தியச் சிறையிலேயே அவரை வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நள்ளிரவில் சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நெடுமாறன் - சிறிது நேரத்தில் கடலூர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே சிறையிலே அடைக்கப்பட்டார். இதெல்லாம் நீதிபதியின் தீர்ப்புக்கு ஜெயலலிதா அரசு தலைவணங்கிய (?) நிகழ்ச்சிகள். ★ ★ ★ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாகத் தமிழர் தேசிய இயக்க அமைப்பின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு இரண்டு ஆண்டு க

டுங்காவல் - மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை சைதை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிறப்பித்தார். மேல் முறையீடு செய்வதற்கு அவகாசம் அளித்து, ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. நீதி மன்றக் காவல் முடிந்து, பூவிருந்தவல்லி பொடா நீதி மன்றத்தில் தம்பி சுப.வீரபாண்டியன் ஆஜர் செய்யப்பட்ட போது, வீரபாண்டியனின் கைகளுக்கு விலங்குமாட்டப் போலீசார் முயல்வதாக நீதிபதியிடம் அவரது வழக்கறிஞர் கோபி கிருஷ்ணா தெரிவித்தார்.

வீரபாண்டியனிடமும் அதுபற்றி நீதிபதி கேட்டறிந்தார். "நீதிமன்றத்தின் உத்தரவின்றி யாருடைய கைகளுக்கும் விலங்கிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே கை விலங்கிட வேண்டும். மிகக்கொடுமையான குற்றம் சாட்டப்- பட்டவர்களுக்கு மட்டும் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்பு விலங்கு மாட்டலாம். சட்டம் பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியம்!"

என சுப.வீரபாண்டியனின் பாதுகாப்புக்கு வந்திருந்த சென்னை மாநகரப் போக்குவரத்து உதவி ஆணையரிடம் நீதிபதி ராஜேந்திரன் கூறி, சுப. வீரபாண்டியனுக்கு கை விலங்கு கூடாது என்று கூறினார். வழக்கை 24-9-2002ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தபோது, அந்த நீதிபதி அவர்களிடம் சுப. வீரபாண்டியன்- "எனக்கு ஒரு வேண்டுகோள்" என்றார்.

என்ன என்று கேட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே தன்னைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் தன் மனைவியையும், மகனையும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டு மென்று கோரி, நீதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டு, அவர்களைப் பார்க்க அனுமதித்தார். ஆம் - அந்த அளவிற்குக் கொடுமை அப்போதே கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. ★ ★ ★ 2002ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்களில் பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்துக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

அந்த இயக்கத்தின் தலைவரும், உறுப்பினர்களும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பற்பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும், சட்டத்தை நிர்வகிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் அந்த அமைப்பினர் குறுக்கிடுகின்றனர் என்றும் கூறி, தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்து அறிக்கை வெளியிடப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழர் தேசிய இயக்கத்தின் சென்னை அலுவலகத்தைச் சீல் வைப்பதற்கு அரசு ஆணை வெளியிட்டது.

அந்த அலுவலகத்தில் ஓர் அறை தவிர, மற்ற அறைகளில் அவருடைய பத்திரிகை அலுவலகம் இயங்கி வந்தது. தமிழர் தேசிய இயக்க அலுவலகம் செயல்படும் ஓர் அறைக்கு மட்டும் சீல் வைக்குமாறு அங்கே உள்ளவர்கள் தெரிவித்தபோதிலும், அதனைக் கேட்காமல், போலீசார் அனைத்து அறைகளுக்கும் சீல் வைத்தனர். ★ ★ ★ 11-7-2002 அன்று "பொடா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையிலே இருந்த வைகோவையோ மற்றவர்களையோ அ.தி.மு.க. அரசு விடுதலை செய்யாத நிலையில், அவரைச் சந்திப்பதற்காக 5-11-2002 அன்று வேலூர் சென்றேன்.

அந்தச் செய்தியைக் கேட்டு, நான் புறப்படுவதற்கு முன்பாகவே, என் வீட்டின் முன்னால் செய்தியாளர்கள் திரண்டு அதைப்பற்றிக் கேட்டார்கள். அப்போது நான், "குடும்பப்பாச உணர்வோடு செய்யப்படுகிற காரியம் இது. தம்பி முரசொலி மாறன் மருத்துவ மனையில் இருக்கும் நிலையில், வைகோ சிறையில் இருந்தவாறே, நலம் கேட்டு தந்தி அனுப்பியிருந்தார். நேரில் அவரால் வர முடியாத நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் - அவரது துணைவியார், அவரது சகோதரர், அவரது மகன் வையாபுரி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்தார்கள்.

அதேபோல எனக்கும் அந்தக் கடமை இருக்கிறது. அதைப் போலத்தான் நான் பார்க்கச் செல்கிறேன்" என்று கூறினேன். என்னுடன் வேலூருக்கு நெப்போலியன் எம்.எல்.ஏ., வந்திருந்தார். மாவட்ட எல்லையில் முகமது சகி மற்றும் ஆ.கிருஷ்ணசாமி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆர்.காந்தி, எ.வ. வேலு, சிவானந்தம், ஈ.ஏ.பி., சிவாஜி மற்றும் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் திரண்டு வரவேற்றனர். சிறை வாயிலில் மதிமுக மாவட்டச் செயலாளர் நடராசன், வேலூர் சுப்பிரமணியம் ஆகியோர் என்னை வரவேற்றனர்.

வேலூர் சிறையில் காலை 11.45 மணியளவில் வைகோவைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுதிய "திருக்குறள் - கலைஞர் உரை" என்ற புத்தகத்தைக் கொடுத்தேன். வெளியே வந்த என்னைச் செய்தியாளர்கள் மீண்டும் சந்தித்து, பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள் - "சிறையிலே வைகோ எப்படியிருக்கிறார்?"

என்று கேட்டதற்கு, "நலமாக இருக்கிறார் - தெளிவாக இருக்கிறார்- வைராக் கியத்தோடு இருக்கிறார்" என்றேன். "சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் உண்டா?" என்ற கேள்விக்கு - "இந்தச் சந்திப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது" என்று கூறினேன்.

"நான் "சங்கத் தமிழ்" எழுதும்போது, அவர் என் அருகே இருந்தார். அதைப் பற்றியெல்லாம் பேசினோம். வெளியிட இருக்கின்ற "தொல்காப்பியப் பூங்கா" பற்றி ஆவலோடு கேட்டார். அதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாக குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா இவைகளைப்பற்றியே நீண்ட நேரம் எங்களுடைய பேச்சு அமைந்தது. "பிறகு, அவருடைய உடல் நலம், குடும்ப நலம் இவைகளைப்பற்றிக் கேட்டறிந்தேன். அவரும் என்னுடைய நலத்தைப்பற்றியும் - குறிப்பாக முரசொலி மாறன் அவர்களின் நலத்தையும் அக்கறையோடு கேட்டார்.

எங்களுக்கிடையே நீண்ட காலமாக அரசியல் உறவைவிட, அதற்கும் அப்பாற்பட்டு, அண்ணன் - தம்பி என்ற குடும்ப உறவும் உண்டு. அந்த அடிப்படையிலேதான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது" என்று கூறினேன். இறுதியாக - "தமிழகத்தில் நடைபெறும் அரசுபற்றி மொத்தமாகக் கூறுங்கள்" என்று கேட்டபோது, "இப்போது அரசா நடக்கிறது?"

என்று பதில் அளித்தேன். ★ ★ ★ எனது வேலூர் பயணம்பற்றி வார ஏடுகள் எல்லாம் அவையவைகளின் விருப்பம்போல செய்திகள் வெளியிட்டன. இரண்டு குடும்பத்தின் இல்லத்தரசிகளின் சந்திப்பின் அடிப்படையிலேதான் நான் வேலூருக்குச் சென்றதாக எழுதியிருந்தார்கள். வேறு சில ஏடுகள், "மீண்டும் கூட்டணிக்கு முயற்சி - இணைப்புக்கு முயற்சி - அதற்கான பேச்சு வார்த்தை சிறையில்" - என்றெல்லாம் எழுதியிருந்தன. "அந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது - அண்ணன் தம்பி உறவு என்ற முறையில் நடந்த சந்திப்புதான்" - என்று செய்தியாளர்களிடம் கூறிய பிறகும், அந்த ஏடுகள் தங்கள் கற்பனையை நிறுத்தியபாடில்லை.

துக்ளக் ஆசிரியர் "சோ, எங்கள் சந்திப்பு பற்றி கிண்டலாகவும், கேலியாகவும் "வேலூர் சிறையில் வைகோவைச் சந்தித்த கருணாநிதி, தொல்காப்பியப் பூங்காபற்றிப் பேசியதாகச் சொல்லியுள்ளார். நேரம் போதவில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால், கிரிக்கெட் மேட்ச் பற்றியும், சொந்த ஊரில் மாடு கன்று போட்ட செய்தி எனப் பல பிரச்சினைகள் பற்றிப் பேசியிருப்பார்கள்" என்று எழுதியிருந்தார்.

அதைப்பற்றி என்னைக் கேட்டபோது, "உண்மைதான்! நேரமிருந்தால் நாங்கள் அதையும் பேசியிருப்போம்! ஆனால், "சோ"வுக்குக் குழந்தை பிறந்த செய்தியை எங்களிடம் யாரும் கூறவில்லையே?" என்று பதிலளித்தேன். என்னைச் சந்தித்ததுபற்றி வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசியல் உலகில் அண்ணன் தம்பி பாச உணர்வை உருவாக்கியவர் அண்ணா. அந்த ரீதியில் தி.மு.க. தலைவர் அண்ணன் கலைஞர் என்னை வேலூர் சிறையில் சந்தித்தார். அவர் என்னைச் சிறையில் சந்தித்தது நெகிழ்ச்சியான சந்திப்பு.

அப்போது நாங்கள் அரசியல் பேசவில்லை. அவரது இலக்கியப் படைப்புகள் - வெளிவர இருக்கின்ற தொல்காப்பியப் பூங்கா குறித்துத்தான் நாங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் சந்திப்பு இலக்கியச் சோலையில் வீசிய பாசத் தென்றலாகத்தான் இருந்தது. இந்தச் சந்திப்பை அரசியல் யூகங்களுடன் சிந்திக்கத் தேவையில்லை. தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என நான் முன்பே கூறியிருந்தேன். தற்போது அ.தி.மு.க.

அரசை எதிர்த்து அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர்" என்றெல்லாம் கூறினார். ★ ★ ★ "பொடா"வில் கைதான பழ.நெடுமாறனும், சுப.வீரபாண்டியனும் தங்களை ஜாமீனில் விடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2002 நவம்பர் இரண்டாவது வாரத்தில் மனு தாக்கல் செய்தனர். வைகோ உள்ளிட்டோரைப் பொடா சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளதைக் கண்டித்து, ம.தி.மு.க.வினர் திரட்டும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்துக்கான படிவத்தில் முதல் கையெழுத்தினை அந்தக் கட்சியின் அவைத் தலைவர் எல்.

கணேசன் என்னைச் சந்தித்துப் பெற்றார். ஒரு கோடி பேர் கையெழுத்திட்டு, அதைக் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கொடுத்தனர். 21-2-2003 அன்றைய தினம் மக்களவையில் பேசிய தி.மு. கழக நாடாளுமன்றத் தலைமைக் கொறடாவான பழனிமாணிக்கம், பொடா சட்டம் தவறான முறையில் தமிழக அரசினால் பயன்படுத்தப் படுகிறது என்றும், அந்தச் சட்டத்தின்கீழ் வைகோ கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் ஆகியும் அதுபற்றி மத்திய அரசு மவுனம் சாதிப்பதாகவும், உடனடியாக அவரை விடுவிப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள், "பொடா சட்டத்தைத் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் - வைகோ கைது தேவையற்றது!" என்றார். ★ ★ ★ பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, பழ. நெடுமாறன் மற்றும் பலர் ஆறேழு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதுபற்றிக் கலந்தாலோசிக்க, 12-3-2003 அன்று, சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று; பழிவாங்கும் கொடுஞ்செயலுக்கு பொடாவைப் பயன்படுத்தும் அ.தி.மு.க.

அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, வைகோ உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி, 29-3-2003 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருப்பது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 29ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற உண்ணா நோன்பினை நான் துவக்கி வைத்தேன். வேலூர் சிறையிலிருந்து வைகோ வழக்கறிஞர் மூலமாக எனக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு - "தி.மு.கழகத்தோடு சேர்ந்து களம் காண்பது ம.தி.மு.க.வின் தலையாயக் கடமையாகும்" என்றும் அறிக்கை விடுத்திருந்தார்.

12-4-2003 அன்று பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீதும் பொடா சட்டம் பாய்ந்தது. 15-4-2003 அன்று மாலையில், பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், துணைப் பிரதமரான எல்.கே.அத்வானி அவர்களுக்கும் நான் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் எல்லை மீறிய வகையில் பொடா சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பது பற்றி விரிவாக விளக்கியிருந்தேன். அந்தச் சட்டத்தின்கீழ் 20 அரசியல்வாதிகள் உட்பட 41 பேர் கைதாகியிருப்பதைப் பற்றியும் - "அந்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பதுதான் நல்லது" என்றும் எழுதியிருந்தேன்.

★ ★ ★ பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள்மீது எடுக்கப்பட்ட ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தியும், தமிழக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் "பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் குழு" சார்பில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்று, 13-5-2003 அன்று சென்னையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு "ப்ரண்ட் லைன்" பத்திரிகையின் ஆசிரியர் நண்பர் என்.

ராம் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய என்னுடன், டாக்டர் ராமதாஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, என்.வரதராசன், டாக்டர் கிருஷ்ணசாமி, எல்.கணேசன், வாசந்தி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர். "பொடா சட்டத்தைத் தவறாகப் பயன் படுத்தும் அ.தி.மு.க. அரசின் எதேச்சதிகாரத்தை வீழ்த்த - சர்வாதிகாரத்தைச் சாய்க்க அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்வோம் - வெல்வோம்!"

என்று நான் பேசினேன். ★ ★ ★ 16-12-2003 அன்று நாடாளுமன்றத்தில் பொடா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வைகோ கலந்துகொள்ள - பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அந்த மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ஏ. குலசேகரன், வைகோவை நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள - 15-12-2003 அன்று தீர்ப்பளித்தார்.

அன்றிரவே வேலூரிலிருந்து வைகோவை சென்னைக்கு அழைத்து வந்து, 16ஆம் தேதி காலையில் டெல்லிக்குச் செல்லும் முதல் விமானத்தில் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் அவர்கள், 15ஆம் தேதி இரவே மேல் முறையீட்டு மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அன்றைய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி வெளியூர் சென்றிருந்ததால், மூத்த நீதிபதி சிர்புர்கர் அவர்களின் வீட்டிற்கே சென்று மனு தாக்கல் செய்து, நீதிபதிகள் சிர்புர்கர், கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அந்த வழக்கை இரவு 9.45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரவு 11 மணிவரை விசாரணை நடந்தது.

அரசு தரப்பில் என்.ஆர். சந்திரனும், வைகோவுக்காக (இன்றைய நீதிபதி) கே. சந்துரு அவர்களும் வாதிட்டனர். இறுதியாக இரவு 11.45 மணியளவில் நீதிபதி குலசேகரன் வைகோ டெல்லி செல்லலாம் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். ★ ★ ★