உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஜெயா ஆட்சியில்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஜெயா ஆட்சியில் · 386 / 391

25. ஜெயா ஆட்சியில் "தடா, பொடா" தர்பார்! 11-11-2012 அன்று வெளிவந்த 23வது அத்தியாயத்தில், சைதைத் தொகுதி இடைத் தேர்தலில், எந்த அளவிற்கு அ.தி.மு.க.வினரின் அராஜகம் தலை விரித்தாடியது என்று எழுதியிருந்தேன் அல்லவா? அந்த இடைத் தேர்தலில், ஆளுங்கட்சியினரால் நடத்தப்பட்ட அராஜகங்களைக் கண்டித்து, 3-6-2002 அன்று நடைபெறவிருந்த என்னுடைய பிறந்த நாள் விழாவினை ரத்து செய்தபோதிலும், நான் எழுதிய "மீசை முளைத்த வயதில்" என்ற நூல் 2-6-2002 அன்று மாலையில் கலைஞர் அரங்கத்தில், நமது பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.

முதல் நூலைக் கவிப் பேரரசு வைரமுத்து பெற்றுக் கொள்ள, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும், காவியக் கவிஞர் வாலி அவர்களும் வாழ்த்துரை வழங்கிட, நான் ஏற்புரையாற்றினேன். தமிழ்க்கனிப் பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கனிமொழி வரவேற்புரையாற்றிட, கயல் தினகரன் நன்றியுரையாற்றினார். இதற்கிடையே டான்சி, மற்றும் கொடைக்கானல் ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்ற நீதிபதி ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று கூறித் தண்டனை அளித்திருந்த போதிலும் கூட, 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு- அதாவது அ.தி.மு.க.

ஆட்சி வந்த பிறகு - அவர்கள் உயர் நீதிமன்றத்தில் செய்து கொண்ட மேல் முறையீட்டில், உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்து, 2001ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புபற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, நான் நீதிபதிகளைவிட நீதியை மதிப்பவன்" என்று கூறியிருந்தேன்.

அவ்வாறு நான் கூறியது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று என்மீது அதிமுக அரசு சார்பாக, சென்னை உயர் நீதிமன்ற அட்வகேட் ஜெனரல், என்.ஆர். சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில், நான் முரசொலி பத்திரிகையில் நீதிமன்றத்தைப் பற்றியும், நீதிபதிகளைப்பற்றியும் கவிதை, கட்டுரை எழுதியுள்ளதாகவும், கார்ட்டூன் வெளியிட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் - என்றும் கூறியிருந்தார்.

அந்த வழக்கை தலைமை நீதிபதி திரு. சுபாஷன் ரெட்டி அவர்களும், நீதிபதி திருமதி பிரபா ஸ்ரீதேவன் அவர்களும் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்து, இந்த வழக்கில் கலைஞர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புகிறோம் - அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை - விலக்களிக்கிறோம்!"

என்று உத்தரவிட்டனர். அந்த வழக்கில், என் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.என்.நடராஜன் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்து வாதாடினார். அப்போது அவர், முரசொலி பத்திரிகையின் இன்றைய ஆசிரியர் கலைஞர் அல்ல - அதில் வந்த எல்லா செய்திக்கும் அவர் பொறுப்பேற்க முடியாது. அவர் பேட்டி அளித்த போது எந்த அவமதிப்பு செயலும் செய்யவில்லை. எனவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் அதற்கு பதில் கூறி வாதாடினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் - "முன்னாள் முதல்வர் கலைஞர் சிறந்த அரசியல்வாதி - மூதறிஞர் - மற்றும் சிறந்த இலக்கியவாதி. அனைத்து நற்குணங்களும் படைத்தவர். டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ததுபற்றி கருத்து கூறும்போது, கலைஞர் தனது அதிருப்தியைப் பேட்டியின்போது தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

கலைஞர் அளித்த பேட்டியில், நீதிபதிகள் பற்றியும், மற்றும் நீதிமன்றத்தைப்பற்றியும் அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார் - எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியதை ஏற்க முடியாது. அவருக்கும் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் கருணாநிதி என்று அரசு தலைமை வழக்கறிஞர் தவறாக இந்த வழக்கில் கூறியுள்ளார். அவர் முரசொலி பத்திரிகையின் நிறுவனர்தான்.

எனவே, இந்த அவமதிப்பு வழக்கை கலைஞர்மீது தாக்கல் செய்ததே தவறானது. இதை ஏற்க முடியாது. எனவே இதற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்று கருதி, இதிலிருந்து விடுவிக்கிறோம். கலைஞரின் பேட்டி, யாரையும் அவமதிக்கும் வகையில் இல்லை. இரண்டு பேர் பேசும் கற்பனை உரையாடலுக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கலைஞர் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம். கலைஞர் எழுதிய கட்டுரையில், நீதிபதிகளுக்கு எதிராகவோ - நீதிமன்றத்திற்கு எதிராகவோ அவர் கருத்துக் கூறவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியதை ஏற்கிறோம்.

கலைஞர் நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை. எனவே கலைஞர்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கிறோம்" என்று தெரிவித்தார்கள். ★ ★ ★ 2002ஆம் ஆண்டு, ஜுலைத் திங்கள், 15ஆம் நாள் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அணுசக்தி விஞ்ஞானியும், "பாரத ரத்னா" உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான ஏ.பி.ஜெ.

அப்துல் கலாம் அவர்கள் 10-6-2002 அன்று அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதுமே, நான் அப்துல் கலாம் அவர்களைத் தொலைபேசியிலே தொடர்புகொண்டு, என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். கலாம் அவர்கள் உளம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். பிரதமர் வாஜ்பய் அவர்களின் இல்லத்தில் நடந்த முக்கிய தலைவர்கள் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அப்துல் கலாம் அவர்களின் பெயரை பிரதமர் அறிவித்ததும், அதனை அனைத்துத் தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

"மதச்சார்பற்ற ஜனநாயக நெறிமுறைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு அப்துல் கலாம் பெயரை அறிவித்ததே தக்க சான்று!" என்று தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அந்த அறிவிப்பு வெளிவந்ததும், அப்துல் கலாம் அவர்களைப்பற்றி "காலம் வாய்த்தது, அப்துல் கலாம் வாய்த்ததினால்" என்ற தலைப்பில் என் உணர்ச்சியைக் கொட்டி ஒரு கவிதை எழுதி, அதனை "முரசொலி" அலுவலகத்திற்கு அனுப்பினேன்.

அந்தக் கவிதை வருமாறு :- இராமேசுவரம் கடற்கரையில் மோதுகின்ற அலைகள்கூட இன்று மலையளவு உயர்கின்றன! மகிழ்ந்து கூத்தடிக்கின்றன! நடுக்கடலில் காற்றழுத்தத்தின் விளைவு என- நானும் நீயும் கருதினால்; அது தவறு! நாள்தோறும் கேட்கும் கடல் பாட்டல்ல இது! அலைகள் நடனம் அனுதினமும் கண்டுள்ளோம். அற்புதமாய் இன்று மட்டும் இந்த ஆனந்தக்கூத்து ஏன்? ஆடியும் ஓடியும் நீரை அள்ளி வீசியும் அந்தச் சிறுவன், அடிகள் பதித்தது இந்த இராமேசுவரம் மண்ணில் மட்டுமல்ல- இனிய இந்திய மண்ணில் - விண்ணில்!

மன்பதை ஆளும் விஞ்ஞானம் - இந்திய மாநாட்டையும் ஆளப் போகிறதென்ற மகிழ்ச்சியின் துள்ளலே - இதோ மணல்மீது அலையின் நடனம்! நடுத்தரக் குடும்ப வானில் உதயம் நாளிதழ்க் கட்டுகள் தூக்கி ஊதியம்! பழைய சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்த பகுத்தறிவுப் பார்ப்பன ஆசிரியர் ஆரியராயினும் அறிவுச் சுடராய் வளரும் இளைஞன் - அப்துல் கலாமை அரவணைத்து நின்று சூரியன்போலச் சுட்டெரித்தார், மதவெறி அன்று! காரியத்தில் கண்வைத்து விஞ்ஞானத்தில் வென்று - கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து - மடமை நீங்கி - மத நல்லிணக்கம் ஓங்க - மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின் மணிவிளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!

அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல் அமைதி காக்கும் கேடயமாய் ஆவதற்கும் ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை அண்டை நாட்டுத் தூதராக மாறுதற்கும் மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும்! அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும்! இமயமுதல் குமரிவரை வாழ்கின்ற இந்தியக் குடிமக்கள் எவராயினும் - இணைபிரியாத் தோழர்களாய் - இரத்தக் கலப்புள்ள சோதரர்களாய் வாழ்வதற்கு - நன்றாகக் "காலம்" வாய்த்ததென்போம் நாட்டின் தலைவராக "அப்துல் கலாம்" வாய்த்ததினால்!

"முரசொலி"யில் நான் எழுதிய இந்தக் கவிதையை அப்துல்கலாம் அவர்கள் படித்துவிட்டு, உடனடியாக எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்- "மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். தங்களுடைய 10-6-2002 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. தங்களுடைய நல்லாசிக்கும், ஆதரவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஜுன் 13ந்தேதியன்று தாங்கள் வார்த்த கவிதை எனது உள்ளத்தை உருக்கியது. "இராமேசுவரம் கடற்கரையில் மோதுகின்ற அலைகள்கூட இன்று மலையளவு உயர்கின்றன" என்ற வார்த்தைகளை நான் பல தடவைகள் படித்தேன்.

என் சுற்றத்தார்கள் படித்தார்கள். என்னுடைய நண்பர்கள் படித்தார்கள். எல்லோருக்கும் மகிழ்ச்சி! ஒரு அறிஞரால் - ஒரு கவிஞரால் வார்க்கப்பட்டக் கவிதையை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி"என்று எழுதியிருந்தார். 16-6-2002 அன்று மாலையில், கிண்டி, அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த அப்துல் கலாம் அவர்களை, என்னுடைய சார்பில் தம்பி 'மு.க.ஸ்டாலின்' சந்தித்து - பொன்னாடை அணிவித்து - பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்துல் கலாமுக்கு ஆதரவு இல்லை என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவித்தன. அவர்களின் வேட்பாளராக நேதாஜி ராணுவ பெண்படைத் தளபதியாக இருந்த கேப்டன் லட்சுமி நிறுத்தப்பட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் கலாம் அவர்களையே ஆதரிப்பதாக முடிவெடுத்தது. அதன் பின்னர் 28-6-2002 அன்று மாலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களை அண்ணா பல்கலைக் கழக விடுதியில் நான் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன்.

அவருக்குப் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து அளித்து, நான் எழுதிய திருக்குறள் உரை உட்பட பல புத்தகங்களை வழங்கினேன். அப்துல் கலாம் அவர்கள், எனக்கு அவர் எழுதிய "இந்தியா 2020" என்ற நூலினை அளித்தார். பின்னர் அவருடன் நீண்ட நேரம் அங்கே உரையாடிக் கொண்டிருந்தேன். ★ ★ ★ 18-7-2002 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, இந்தியாவின் பன்னிரண்டாவது குடியரசுத் தலைவராக அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவருக்கு நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்- "பெருமதிப்புக்குரிய கலாம் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்திய நாடு உலகத்தில் பெரிய ஜனநாயக நாடு என்பது மாத்திரமல்லாமல் -அமைதியான சூழல், அன்பான நேயம், மனித சமுதாயத்தில் பரவிட வழிகாட்டக் கூடியது என்பதைத் தங்களின் தலைமை நிலை நாட்டும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

25-7-2002 அன்று இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாநிகழ்ச்சிக்கு தமிழக முதல் அமைச்சருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறி, மத்திய அரசைத் தாக்கிக் கடுமையாக ஓர் அறிக்கையை அன்று ஜெயலலிதா விடுத்திருந்தார். அதற்கு மத்திய அரசு தனது பதிலை அளித்தது. அந்தப் பதிலில், இது போன்ற விழாக்களுக்கு மாநில அரசின் சார்பில் டெல்லியில் உள்ள அலுவலகங்களிலிருந்து விண்ணப்பங்கள் வருவதையொட்டித்தான் அழைப்பிதழ் அனுப்பப்படுவது வழக்கம் என்றும், இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை தமிழக ஆளுநருக்கு மட்டும் அழைப்பிதழ் கேட்டதால் அது அனுப்பப்பட்டது என்றும், தமிழக முதலமைச்சருக்கு என்று டெல்லியில் உள்ள தமிழகச் சிறப்பு அதிகாரி விண்ணப்பம் எதையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள்.

அதைப்பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கருத்துக் கேட்டனர். "மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். அதனால்தான் ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றிய முறையை மாற்ற மத்திய அரசுடன் வாதாடி, வற்புறுத்தி, மாநில முதல் அமைச்சர்களும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தேன்.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கு மாநில முதல் அமைச்சர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் இருப்பது என்பதும், விரும்பி விண்ணப்பித்த முதல்வர்களை மட்டும் அனுமதிப்பது என்பதும் சுதந்திரம் பெற்ற காலத்திலே இருந்து கடைப்பிடிக்கப்படும் முறையாக இருக்கலாம். அதற்காக அதையே நிரந்தரமாக அமைத்துக் கொண்டு, மாநில முதல்வர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. அழைப்பிதழ் என்பது அனுப்பப்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, விண்ணப்பித்துப் பெறக் கூடியதற்கு அழைப்பிதழ் என்று பெயரில்லை.

இதுவரை இருந்து வந்துள்ள இந்தப் பழக்கத்தை இனிமேலாவது மாற்றி, மாநில முதல் அமைச்சர்களையும் அவர்களிடமிருந்து விண்ணப்பத்தை எதிர்பாராமல் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்கு அழைப்பு அனுப்பும் பழக்கத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினேன்.

நான் இவ்வாறு கூறியதும் ஒரு செய்தியாளர், "ஜெயலலிதாவினுடைய கோரிக்கைக்கு முதன் முதலாக நீங்கள் ஒத்துப்போய் இருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார். அப்போது நான், "ஜெயலலிதாவின் கருத்துடன் நான் நெருங்கிப் போகிறேன் என்று அர்த்தமல்ல - மாநில சுயாட்சிக் கொள்கையிலே இருந்து விலகாமல் - உறுதியோடு இருக்கிறேன் என்றுதான் அர்த்தம்" என்று பதிலளித்தேன்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 12-8-2002 அன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. பிரமுகர் பைரோன் சிங் ஷெகாவத் அவர்களும், எதிர்க் கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் பிரமுகர் சுசில் குமார் ஷிண்டே அவர்களும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள். அத்தேர்தலில் மக்களவை - மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் ஷெகாவத்துக்கு ஆதரவாக 454 வாக்குகளும், ஷிண்டேவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும் பதிவாகின.

19-8-2002 அன்று குடியரசுத் துணைத் தலைவராக ஷெகாவத் பதவியேற்றார். ★ ★ ★ 17-6-2002 அன்று த.மா.கா. தலைவர், ஜி.கே. வாசன் தலைமையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அதன் காரணமாக, காங்கிரசுடன் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி இணைகின்ற விழாவினை நடத்துவதாக முடிவு செய்து - அறிவித்தார்கள். அவ்வாறே 14-8-2002 அன்று மதுரையில், த.மா.கா., காங்கிரஸ் இணையும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி கலந்து கொண்டார். ★ ★ ★ 2-7-2002 அன்று இந்திய நேரம் அதிகாலை 3.13 மணிக்கு, தெற்கு ஜெர்மனியில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள ஊபர்லிங்கன் என்ற ஊருக்கு அருகே, ரஷ்யக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற விமானமும், ஒரு சரக்கு விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

அந்த விபத்தில், ரஷ்யக் குழந்தைகள் 47 பேர் உட்பட, மொத்தம் 71 பேர் பலியானார்கள். ரஷ்யாவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அருகே உள்ள கோஸ்டாபிரேவா என்னும் ஊருக்கு 47 குழந்தைகள் சுற்றுலா புறப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக பெரியவர்கள் 10 பேர் வந்தனர். அவர்கள் வழக்கமான விமானத்தைத் தவற விட்டுவிட்டதால், பஷ்கிரியன் என்னும் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான துபோலேவ் வகை விமானத்தில் ஸ்பெயின் புறப்பட்டனர்.

அந்த விமானத்தில் விமானிகள் உட்பட 12 ஊழியர்கள் இருந்தனர். அந்த விமானம் ஜெர்மனியின் மூனிச் நகரில் இறங்கிவிட்டு, பார்சிலோனா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ஏற்றிக் கொண்டு போயிங் விமானம் பஹ்ரைனிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வந்து கொண்டிருந்தது. அதில் இரு விமானிகள் இருந்தனர். இரண்டு விமானங்களும் தெற்கு ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டான்ஸ் ஏரிக்கு அருகே வரும் போது, முப்பத்தறாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தன.

அந்த விமானங்களின் போக்கை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், உடனே ரஷ்யப் பயணிகள் விமானத்துடன் தொடர்பு கொண்டு, எதிரே சரக்கு விமானம் வருவது குறித்து எச்சரித்தனர். அந்த விமானத்தை மேலே கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அந்த விமானியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதற்கிடையே, ரஷ்ய விமானத்தை நெருங்கி விட்டதை அறிந்த சரக்கு விமானத்தின் விமானி, அதை வேறு திசையில் திருப்ப முயன்றார்.

அதற்குள் இரண்டும் நேருக்கு நேர் மோதின. அதன் விளைவாக 71 பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ★ ★ ★ 17-8-2002 அன்று அ.தி.மு.க. அரசின் மற்றொரு சாதனை(?)யாக முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் வீடுகளில் - 29 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். அவர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி 16ந்தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மறுநாளே 17ஆம் தேதி பொது ஊழியர்களாக இருந்தபோது அவர்கள் வருமானத்துக்கு மீறிச் சொத்துக்கள் சேர்த்ததற்காக அவர்கள்மீது வழக்கு என்று கூறி, அதற்காக கழக ஆட்சியில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்குச் சொந்தமான 12 இடங்களிலும், அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த புதுக்கோட்டை ரகுபதிக்குச் சொந்தமான 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த புரசை பா.ரெங்க நாதனுக்குச் சொந்தமான ஆறு இடங்களிலும் அன்றைய தினமே சோதனைகள் நடைபெற்றன.

இந்தச் சோதனைபற்றி நிருபர்கள் என்னைக் கேட்ட போது, "கட்சிக்கு இன்னும் வேகமும் விறுவிறுப்பும் தருவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா சோதனையை மேற்கொண்டுள்ளார். நாம் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்படி சந்திப்போம். சோதனையின்போது போலீசார் பெரிதாக எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று சொன்னார்கள். எதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை" என்று கூறினேன்.

★ ★ ★ அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து 28-11-2002 அன்று, அரசியல் பழிவாங்கும் நோக்கில் அ.தி.மு.க. அரசு, முன்னாள் கல்வி அமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான பேராசிரியர் - தி.மு.கழக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோர் வீடுகள் உட்பட 32 இடங்களில் சோதனையிட்டது. ஆனால், அந்தச் சோதனைகளில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் சிக்குமா என லஞ்ச ஒழிப்புப் போலீசார் அலசி ஆராய்ந்தனர்.

இருப்பினும் ஆதாரங்கள் ஏதும் கிட்டாமல் ஏமாந்து திரும்பினார்கள். அந்தச் சோதனை குறித்து செய்தியாளர்கள் பேராசிரியரைக் கேட்டபோது - "உண்மை அல்லாத புகார்களை வைத்துக் கொண்டு, எனது வீட்டைச் சோதனை போட்டார்கள். வீட்டில் இருந்த 10, 12 பவுன் நகைகளையும், டி.வி., ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனர் இவைகள் பற்றிய விவரங்களையும், வீட்டில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ பற்றிய விபரங்களையும் பட்டியலிட்டு குறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் போடக்கூடிய எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தி.மு.க. முன்னணித் தோழர்கள் வீடுகளை எல்லாம் சோதனைபோட வேண்டும் என்ற திட்டத்தோடுதான் இப்படி சோதனை போட்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் எதையும் சந்திக்கத் தயாராக இருப்பார்கள். அந்த அடிப்படையில் நானும் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

எனவே அ.தி.மு.க. ஆட்சி எப்போது தமிழகத்தில் ஏற்பட்டாலும், இப்படிப்பட்ட சோதனைகள் என்பது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. ★ ★ ★ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரை திருமங்கலத்தில், 29-6-2012 அன்று வைகோ பேசியதற்காக அவரை "பொடா" சட்டத்தில் கைது செய்யப் போவதாக ஜெயலலிதா அரசு மத்திய அரசின் துணைப்பிரதமர் அத்வானிக்குக் கடிதம் எழுதியது. அதுபற்றி மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி.சுவாமி, "மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டால் நாங்கள் வைகோவிடம் விவரம் கேட்போம்.

அவர் என்ன பேசினார் - எந்த நோக்கத்தில் பேசினார் - என்ற விவரங்களைக் கேட்போம். அதே நேரத்தில், அனுமதி கேட்பதாக இல்லாமல், வெறும் தகவலுக்காகத் தமிழக அரசு கடிதம் அனுப்பினால் மத்திய அரசு என்ன செய்ய முடியும்? சட்டம், ஒழுங்கு மாநில அரசு தொடர்பான பிரச்சினை. அதைக் கையாளும் அதிகாரம் அவர்களிடம் உள்ளது" என்று கூறினார்.

3-7-2002 அன்றைய தினம் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, "வைகோவைப் "பொடா" சட்டத்திலே கைது செய்வது குறித்து மத்திய அரசுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்ட போது - சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் என்னை சித்திரவதை செய்து கைது செய்தபோது, ம.தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள், "கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட நன்றாக நடிக்கிறார்" என்று பொதுக் கூட்டங்களில் கேலி பேசினார்கள்.

அந்தக் கடினமனம் எனக்குக் கிடையாது. இப்போது வைகோவைப்பற்றி ஜெயலலிதா சொல்லியிருப்பதும், பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டியிருப்பதும், இந்த ஆட்சியைப் பொறுத்த வரையில், அப்படி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. "ஏனென்றால், கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, திருமதி சுப்புலட்சுமியையும், அவரது கணவர் ஜெகதீசனையும் ஓராண்டு காலம் சிறையில் அடைத்திருந்த ஆட்சிதான் இந்த ஆட்சி.

ஆகவே, தடா சட்டமானாலும், பொடா சட்டமானாலும் அரசியல் நோக்கத்தோடு பயன்படுத்துவதை தி.மு.க. ஏற்காது!" என்று கூறினேன். அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த வைகோ, அங்கிருந்தபடியே விடுத்த அறிக்கையில், அ.தி.மு.க. அரசை எதிர்த்து, தான் செய்யும் விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் ஜனநாயகப் பண்பு இல்லாததால், அரசியல் உள்நோக்கோடு பொடா சட்டத்தில் தன்னைக் கைது செய்யத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும், ஆனால், தமிழக அரசின் அடக்கு முறைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம் - என்றும் தெரிவித்தார்.

11-7-2002 அன்று போலீசார் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து - அமெரிக்காவிலிருந்து மும்பை வழியாக வந்த அவரை, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்தார்கள். 29-6-2002 அன்று மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதையடுத்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 9 பேர்மீது "பொடா" சட்டத்தில் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வைகோ தவிர, மற்ற எட்டு பேரையும் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கைது செய்தது மாத்திரமல்லாமல், அவரைப் போலீஸ் வேனில் வைத்து இரவோடு இரவாக சென்னைக்கும் மதுரைக்கும், பிறகு மதுரைக்கும் வேலூருக்குமாக அலைக்கழித்தார்கள். சிறைக் கொட்டடியில் அவருக்கு மின்விசிறி வசதிகள்கூட முதலில் செய்து தரப்படவில்லை. 12-7-2002 அன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, "வைகோவைப் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்ததில் அரசியல் உள் நோக்கம் எதுவுமில்லை.

புலிகள் ஆதரவைத் தொடர்ந்து அந்தக் கட்சியைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கும்!" என்றார். வைகோ அவர்களைத் தொடர்ந்து, 1-8-2002 அன்று தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் பழ. நெடுமாறன் "பொடா" சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் உலகத் தமிழர் அமைப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகத் தமிழக கியூ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். நீதிபதி, அவரை ஒரு மாத காலம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டதையடுத்து, பழ.

நெடுமாறன் சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து பொடா சட்டத்தின்கீழ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ம.தி.மு.க.வைச் சேர்ந்த கணேச மூர்த்தி, சிவந்தியப்பன், இளவரசன், பூமிநாதன், வழக்கறிஞரான அழகுசுந்தரம், பி.எஸ். மணியம், நாகராசன், கணேசன் ஆகியோரும் "பொடா" சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேலம், கடலூர், திருச்சி, மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டனர். "வைகோவைத் தொடர்ந்து, பழ.நெடுமாறனும் பொடாவில் கைது செய்யப்பட்டுள்ளாரே?"

என்று என்னிடம் செய்தியாளர்கள் கேட்ட போது - "உழுது விதைப்பாருக்கு உணவில்லை- பிணிகள் பலவுண்டு - பொய்யைத் தொழுதடிமைச் செய்வார்க்குச் செல்வங்களுண்டு - உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரியப் - பெருங்கொடுமைச் சிறையுண்டு! - என்று பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது!"

என்று கூறினேன். ★ ★ ★