உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சேது சமுத்திரத் திட்டம் ஏன்?
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சேது சமுத்திரத் திட்டம் ஏன்? · 385 / 391

24. சேது சமுத்திரத் திட்டம் ஏன்? ஐம்மு பகுதியில், "காலுசக்" என்ற இடத்தில், பயங்கரவாதிகள் 2002ஆம் ஆண்டு, மே திங்கள் மத்தியில், நடத்திய திடீர்த் தாக்குதலில் பல கிராமங்கள் தீப்பற்றி எரிந்தன. அதில், மாண்டு மடிந்தோர் 40 பேர். அவர்களில் சின்னஞ்சிறு குழந்தைகளும் உண்டு. சிகிச்சை பெற்றோர் 47 பேர். சம்பவம் நடந்தவுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அந்தப் பகுதிக்குச் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதலைக் கூறியும், காயம்பட்டோருக்குத் தைரியம் உரைத்தும் திரும்பினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா அவர்களும், அந்தப் பகுதிக்கு விரைந்தது மட்டுமல்லாமல், அத்தகைய பயங்கரவாதச் செயல்களை எதிர்த்து வீழ்த்திட, மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றும் கூறினார். இந்த மிகக் கொடுமையான நிகழ்ச்சிக்கும், கொத்தாக சுமார் 40 உயிர்கள் போக்கப் பட்டுள்ளதற்கும், ஜம்மு பகுதியில் பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்று பாகிஸ்தான் கூறியது.

அப்போது காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த நண்பர் பரூக் அப்துல்லா அவர்கள் பாகிஸ்தான் கூறியதை மறுத்ததோடு, அந்தக் கொடூரமான படுகொலைகளுக்குப் பாகிஸ்தானே காரணம் என்று சுட்டிக் காட்டினார். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் "தீவிரவாதிகளின் அந்தக் கொடுஞ் செயலுக்கு தக்கப் பதிலடி கொடுப்போம்" என்றார்.

"இந்திய எல்லைக்குள் புகுந்து தீவிரவாத வன்முறைச் சேட்டைகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபடாமல் இருக்க - அமெரிக்கா, பாகிஸ்தான் அரசுக்கு வாய்மையுடன் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அஃதில்லாமல்; ஆழ்ந்த வருத்தம் - அதிர்ச்சி - இந்த வார்த்தைகளால் நம்மை அமைதிப் படுத்தலாம் என எண்ணினால்; இந்திய நாடு; இமயம் முதல் குமரிவரையில் உள்ள மக்களை ஒரே அணியில் திரட்டுவதன் மூலம் தனது வலிமையை நிலைநாட்டிக் காட்டி, வன்முறைப் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நாடு எதுவாயினும் அதற்குப் பாடம் புகட்டத் தாமதிக்கக் கூடாது-" என்று நானும் கேட்டுக் கொண்டேன்.

★ ★ ★ 24-3-2002 அன்று கழகத்தின் பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா அரசு, சோதனை என்கிற பெயரில் கழகத்தினர் இல்லங்களில், அதிகாரிகள் புகுந்து அராஜகம் செய்வதையும், பொய் வழக்குகள் போடுவதையும் வன்மையாகக் கண்டித்து - அந்தப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க.வோடு தி.மு.கழகம் தோழமை கொண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த நிலையில், தமிழகத்திலே உள்ள ஒரு சில பா.ஜ.க.

தலைவர்கள் அப்போது கூட்டணியைக் குலைக்கும் வகையில் தங்கள் பேச்சுக்களை அமைத்துக் கொண்டார்கள். அதுபற்றிச் செய்தியாளர்கள் என்னிடம் பொதுக்குழு முடிந்தவுடன் கேட்டபோது, மத்தியில் பா.ஜ.க. தலைமையோடு உறவு காட்டுவோம் என்றும், தமிழக பா.ஜ.க.வுடன் நட்பாக இருப்போம் என்றும் கூறினேன். ஏற்கனவே பா.ஜ.க.வோடு தேர்தல் உடன்பாடு கண்டபோதே, "குறைந்தபட்சத் திட்டம்" ஒன்று வகுக்கப்பட்டு, அந்த அணியில் மதச் சார்புக்கு இடம் இல்லை என்ற உறுதி மேற்கொள்ளப்பட்டதை நான் அடிக்கடி சுட்டிக் காட்டியதைப்போலவே, இந்தப் பிரச்சினையிலும் அப்போது சுட்டிக் காட்டினேன்.

★ ★ ★ கழகத்தின் தொடக்கக் காலத்தில் நன்னிலம் வட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று, தஞ்சை மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர்தான் நன்னிலம் நடராசன். சிரிப்பு மழை பொழியக்கூடிய பேச்சாளர்களில் ஒருவர். அவருடைய கால்கள் படாத கிராமங்களே தமிழகத்திலே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கழகத்தின் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர். அவர் 12-3-2002 அன்று மறைந்து விட்ட செய்தியினை அவருடைய மருமகனும், கழகத்தின் செயல் வீரர்களில் ஒருவருமான தஞ்சை ஜெயபால் எனக்குத் தெரிவித்தபோது, நான் அதிர்ந்து போனேன்.

ஏனென்றால், அதற்கு முந்திய வாரம்தான் நன்னிலம் நடராசன் என்னைச் சந்தித்து, தனது உடல் நலம் சரியாக இல்லை என்று கூறிய போது, உடனடியாக அவரைச் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கே அனுமதிக்கச் செய்து, சிகிச்சை அளிக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், அவர் எனக்குத் தெரியாமலேயே மருத்துவமனையிலிருந்து தன்னிச்சையாக ஊருக்குச் சென்றுவிட்டார் என்ற செய்தியினை அறிந்து, ஊருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை மருத்துவமனையிலே சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தினேன்.

"நன்னிலம்" என்றாலே நன்னிலம் நடராசன் என்ற அளவிற்குப் பெருமை சேர்த்த அந்தக் கொள்கைத் தங்கம் மறைந்து விட்டார். தலைமைக் கழகத்தின் சார்பில், நன்னிலம் நடராசன் குடும்ப நிதியாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அன்றே அறிவித்து, அது உடனடியாக வழங்கப்பட்டது. கோ.சி. மணி தலைமையில், கழக முன்னணியினர் எல்லாம் கலந்துகொண்டு, அவருடைய இறுதி ஊர்வலம் நடைபெற்றது. "நன்னிலம் நடராசனுக்கு கழகம் அளித்தது நிதியல்ல - கழகம் செலுத்தும் காணிக்கை" என்று அதைப்பற்றி வெண்ணிப்பறந்தலை ராஜேந்திரன் என்பவர் எனக்குத் தெரிவித்து, அதற்கு ஒரு காரணமும் அப்போது எழுதியிருந்தார்.

ஒருமுறை ஜெயங்கொண்டத்தினிலே நன்னிலம் நடராசன் விடியற்காலை 3 மணி அளவில் கைது செய்யப்பட்டு, அந்தச் செய்தி உடனடியாக எனக்கு அந்நேரத்தில் தெரிவிக்கப்- பட்டது என்றும், அப்போது முரசொலி அந்த நேரம்வரை, 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விட்ட போதிலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நன்னிலம் நடராசன் கைதான செய்தியைச் சேர்த்துப் புதிதாக அச்சடிக்கச் சொன்னதாகவும், அப்படிப் பட்ட நடராசனுக்கு கழகம் கொடுத்த காணிக்கைதான் அந்தத் தொகை - என்றும் எழுதியிருந்தார். ★ ★ ★ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில்தான் அப்பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதாகக் கூறினார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் தொடக்க விழா, தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், 1997ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவராக இருந்த திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள்தான் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி தலைமை வகித்தார். நான் பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டிப் பேசினேன். அப்போது, "தமிழகத்தில் உள்ள எல்லா சட்டக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியாவிலேயே முதல் முயற்சியாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அம்பேத்கருடைய பெயரை இன்றைக்குத்தான் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு வைத்தோம் என்று இல்லை. 1990ஆம் ஆண்டு, அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடைபெற்ற அந்தக் கால கட்டத்திலேயே சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற பெயரைச் சூட்டினோம்" என்று பேசினேன்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் பேசும் போது, "தமிழகத்தில்தான் சமூகப் புரட்சிக்கான முதல் குரல் கொடுக்கப்பட்டது. சமூகப் புரட்சியின் பாரம்பரியத்தை நடைமுறை அரசியலிலும், அமைப்பு மற்றும் நிர்வாகத் துறைகளிலும்கூடக் கடைப் பிடித்து வருகிறார் கருணாநிதி. அவரும், அவருடைய சகாக்களும், தமிழ்நாடு அரசும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தைத் தொடங்குவது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முயற்சியை எடுத்ததற்காகப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

"இவைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது என்று கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியமல்ல - பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றிலே மறைக்க முயலும் காரியம்!"

என்று நான் அப்போது பதிலளித்தேன். ★ ★ ★ அம்பேத்கர் பல்கலைக் கழகம்பற்றி உண்மைக்கு மாறாகப் பேசியதைப் போலவே, 25-4-2002 அன்று, காவல் துறை மானியக் கோரிக்கைமீது பேசிய முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சிக் கல்லூரிக்கு அருகே உள்ள கோல்ஃப் மைதானத்தைக் குத்தகைக்கு விடுவதில், முரசொலி மாறனின் பினாமியான இந்தியா சிமெண்ட் நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்கு சாதகமாக நான் நடந்து கொண்டேன்- என்று குறிப்பிட்டவுடன், கழக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த துரைமுருகன், "மாறனின் பினாமி - என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும்" என்றார். உடனே முதல்வர் அவருக்கே உரிய பண்போடு, "மாறனுக்கு சீனிவாசன் பினாமி இல்லையென்றால், கருணாநிதிக்குப் பினாமி என்று துரைமுருகன் சொல்கிறாரா?"

என்று கேட்டார். மத்திய அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறனைப் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா பேரவையில் சாட்டிய குற்றச்சாட்டிற்கு முரசொலி மாறன் அளித்த பதில் அறிக்கையில்- "எனக்கு ஒரு பினாமி இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் அடிப்படையற்றது மட்டுமல்ல - அணுவளவும் உண்மை கலவாத அபத்தமான கற்பனையாகும். "தான் திருடி, பிறரை நம்பாள்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

அந்தப் பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது. எனக்கு பினாமி உறவுப் பழக்கமும் எந்தவித செயற்கை உறவுப் பழக்கமும் கிடையாது. மனநோய்ப் பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபடாதவர்களால் மட்டுமே இத்தகைய அடிப்படையற்ற அதீதக் கற்பனைகளை நினைக்கவும் சொல்லவும் முடியும். பொதுவாக இன்றைய தமிழ்நாடு அரசியல் நிலைபற்றிக் கூறவேண்டுமெனில், அது மிகவும் அழுக்காகவும், கேவலமானதாகவும் ஆகிவிட்ட நிலையை நடுநிலையாளர்களே உணர்வார்கள்.

எனக்கு அத்தகைய பினாமி இருப்பதாக நிரூபணமானால், நான் பொது வாழ்வை விட்டே விலகிடத் தயாராக இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா தயாரா எனக் கேட்க விரும்புகிறேன். தமிழக ஆக்கப் பணிகளிலும், மக்கள் நல்வாழ்வுப் பணிகளிலும் இனிமேலாவது பொறுப்பில் இருப்பவர்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். மன நோயாளியைப் போலப் பிதற்றாமல் இருப்பதே நல்லது" என்றார்.

காஸ்மோபாலிட்டன் கிளப்பின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஆர். காந்தி அவர்கள் 3-5-2002 அன்று அளித்த பேட்டியில், "கோல்ப் மைதானத்தைக் குத்தகைக்கு விட்டதில் கலைஞர்மீது வழக்கு தொடர முடியாது, கலைஞர் எந்த லாபமும் பெறவில்லை - எந்த உள்நோக்கமும் இல்லை" என்று விளக்கினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலேயே எப்படிப்பட்ட பொய்களையெல்லாம் பேசி - பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணமாகும். ★ ★ ★ அது மாத்திரமல்ல - அவருடைய சொல்லடியும், வல்லடியும் அரசியல் கட்சித் தலைவர்களை மட்டுமல்ல - அரசாங்க அலுவலர்களையும் தாக்கியது. அரசாங்க அலுவலர்கள் என்றாலே ஜெயலலிதாவுக்கு வேப்பங்காய்தான். அரசு அலுவலர்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஆட்சியிலே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகத் தனியாகவே ஒரு அத்தியாயம் எழுதலாம்.

2002ஆம் ஆண்டில், மே திங்களில் ஒருநாள், பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதைப் பற்றி நாளேடுகளில் எப்படி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்தாலே, அம்மையாருக்கு அரசு அலுவலர்களிடம் உள்ள அன்பினைத் தெரிந்து கொள்ள முடியும். "சர்க்கஸ் ரிங்மாஸ்டர்போல் சாட்டையால் அடித்து அடித்து அவர்களுக்குப் பணி ஆர்வத்தை நான் ஊக்குவித்து வருகிறேன் - அதிகாரிகளுக்குப் பணி ஆர்வம் செத்து விட்டது - வேலை செய்யும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர்" என்று "தினமலர்" ஏடும் - "சர்க்கஸ் ரிங்மாஸ்டர்போல சாட்டையால் அடித்து அதிகாரிகளை வேலை வாங்குகிறேன்" என்று "தினமணி" ஏடும் - "அதிகாரிகளை ரிங்மாஸ்டர் போல வேலை வாங்கி வருகிறேன்" என்று "தினத்தந்தி" ஏடும் - "I have to act like a ring master - says Jayalalitha" என்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடும் - "Bureaucrats lackadaisical : C.M."

என்று "இந்து" ஏடும் தலைப்பிட்டு அம்மையாரின் அபத்தப் பேச்சினை வெளியிட்டிருந்தன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெயலலிதா பேசியதற்கு இந்த ஏடுகளே சாட்சி! அரசு அதிகாரிகளை - எந்த அரசு அமைந்தாலும் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்களை - ஆட்சிக்கு வருவோர் நினைத்தவாறு ஏசிடக் கூடாது. "Men may come; Men may go; I will go on for ever" என்ற ஆங்கிலக் கவிஞன் டென்னிசனின் வார்த்தைகளின் அடிப்படையில் நாம் பார்த்தால், "அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார்கள் - போவார்கள்.

ஆனால் அரசு அதிகாரிகள் என்போர் நிரந்தரமானவர்கள்" என்று அண்ணா அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசு அதிகாரிகளைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் இவ்வாறு பேசினார். நீதிபதிகளைப் பற்றி பேரவையில் முதல் நாள் தன் விருப்பப்படி ஏசுவார். மறுநாளே அதே பேரவையில் "நான் நேற்றுவாய் தவறிப் பேசிவிட்டேன் - திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்!"

என்று சொல்வார். ஆனால் அரசு அதிகாரிகளைப்பற்றி பேசியதை ஜெயலலிதா திரும்பப் பெறவே இல்லை. மேலும், அவருடைய அ.தி.மு.க. ஆட்சியையே பழிக்கக் கூடிய வகையில், அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, முதலமைச்சர் பதவியில் இல்லாத அந்த ஐந்து மாத கால இடைவெளியில், அதிகாரிகளிடம் ஆர்வம் சரிந்துவிட்டதாகவும், அந்த நேரத்தில் அதிகாரிகள் அலுவலகங்களுக்குக் காலை 11.30 மணிக்குத்தான் வந்தார்கள் என்றும் கூறினார்.

அந்த ஐந்து மாத காலத்தில், அதிகாரிகளிடம் தொய்வு என்றால் அதற்கு யார் பொறுப்பு? அவருடைய கட்சியைச் சேர்ந்தவரான பன்னீர்ச்செல்வம்தானே முதலமைச்சராக இருந்தார்? தன்னைத் தூக்கி வைத்துக் கொள்வதற்காக, அவரையே கிண்டல் செய்கின்ற அளவிற்குப் பழி சுமத்தினார், முதலமைச்சர். பேரவையில் இவ்வாறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைப்பற்றி எல்லாம் தரக்குறைவாகப் பேசியதுபற்றி வருந்திய ஒரு சில அதிகாரிகள் தலைமைச் செயலாளரிடம் முறையிட்டார்கள் என்று "இந்து" இதழிலேயே அப்போது செய்தி வந்தது.

★ ★ ★ 2002ஆம் ஆண்டில் ஏப்ரல் திங்கள் இறுதி நாளன்று, பேரவையில் பொதுப்பணித்துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் பன்னீர்ச்செல்வம் தனது பதில் உரையில் "காவிரிப் பிரச்சினையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெரும் துரோகம் செய்துவிட்டார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

★ ★ ★ அந்த நேரத்தில் எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்த தம்பி துரைமுருகன் எழுந்து பதில் கூற முற்பட்டார். "காவிரிப் பிரச்சினையின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் கலைஞர்" என்று சொல்லி, அதற்கான விளக்கங்களை அளித்தார்.

★ ★ ★ 23-5-2002 அன்று "தினகரன்" நாளிதழின் வெள்ளி விழா நிகழ்ச்சி தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது

. நான் தலைமை தாங்கினேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க. சார்பில் எஸ். திருநாவுக்கரசர் எம்.பி., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர். நல்லகண்ணு, த.மா.கா. சார்பில் சோ. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே. ரெங்கராஜன், மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம், திருப்பூர் அல்தாப் ஆகியோர் உரையாற்றினர். தினகரன் நிர்வாக ஆசிரியர் தம்பி ௧.

குமரன் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் து. பால்ராஜ் நன்றி தெரிவித்தார். அந்த விழா நடப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை ஓய்ந்த காலக் கட்டத்தில், நான் தொடங்கி வைத்த நாளிதழ் தினகரன்! அதன் வெள்ளி விழாவினை நடத்திக் கொண்ட நேரத்தில் அதிலும் நான் பங்கேற்றிருப்பதைப்பற்றி அங்கே குறிப்பிட்டேன். ★ ★ ★ 8-5-2002 அன்று இந்தியப் பிரதமர் அவர்களுக்கு ஒரு நீண்டக் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதம் இந்தத் தொடரிலும் இடம் பெறலாம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அது தமிழ் மக்களின் பிரச்சினை. இன்றளவும் முழுமையாக நிறைவேறாமல் இருக்கின்ற பிரச்சினை. பிரதமருக்கு நான் எழுதிய அந்தக் கடிதம் வருமாறு :- "அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, வணக்கம். "தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இக்கடிதம் தங்களுக்கு எழுதுகின்றேன். இத்திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டுமென்று, திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறது.

நான் பல சமயங்களில், பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன். "23-7-1967இல் சேது சமுத்திரத்தின் ஒரு பிரிவாக உள்ள தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி, முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறிவித்தார். அத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து அத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும், அத்திட்டம் நீண்ட நாளாகக் கிடப்பில் போடப்பட்டது என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

மத்தியில் ஆளும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அத்திட்டத்தை நிறைவேற்றிடவும், அத்திட்டத்தின் சாத்தியக் கூறினை ஆராய்ந்திட பண ஒதுக்கீடு செய்தது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டம் விரைவாகச் செயல் படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் இக்கடிதம் மூலமாகத் தங்களை வலியுறுத்துகிறேன். "சேதுக் கால்வாய் பற்றிய விவரங்களையும், அதனால் பொதுவாக இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்படும் பயன்களையும் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இத்திட்டத்தை ஆங்கில அரசாங்கத்தின் கப்பல் படையைச் சேர்ந்த கமாண்டர் டெயிலர் என்பவர் 1860ஆம் ஆண்டு உருவாக்கினார். அன்றைக்கு அதனுடைய மதிப்பீடு ரூபாய் ஐம்பது இலட்சமாகும். பின்பு டவுண்ட்ஸ்டன் மற்றும் ஜான் கூடே என்பவர்கள் இத் திட்டத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனப் பல வழிகள் வகுத்தனர்.

ஆனால், ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மறுபடியும் 1921ஆம் ஆண்டு சென்னை மாநில அரசு இத் திட்டத்தை வகுத்தும், ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியின்மையால் நிறைவேற்றப்படவில்லை. 1945ஆம் ஆண்டு, மறுபடியும் ஆங்கில அரசாங்கம் இத்திட்டத்தைப்பற்றி அறிய ஒரு குழுவை அமைத்தது. ஆனால், அந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, 1955ஆம் ஆண்டு டாக்டர் சர்.ஏ.

இராமசாமி முதலியார் தலைமையில், சேதுக் கால்வாய்த் திட்டத்தைப் பரிசீலிக்க ஒரு குழு இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. "சேது சமுத்திரத் திட்டத்தை அரசு நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியும், கிழக்கு கடற்கரை ஓரமாய்க் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும்" என அக்குழு தனது அறிக்கையில் கூறியதோடு, உடனே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனவும் தெளிவாக இந்திய அரசுக்குத் தெரிவித்தது.

அதற்கு ரூ.9.98 கோடி திட்ட மதிப்பையும் அக்குழு வெளியிட்டது. ஆனால், சர்.ஏ. இராமசாமி முதலியார் குழுவின் அறிக்கையின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய அரசாங்கம் விட்டுவிட்டது. 1963ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது திட்டக் காலத்தில் இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென முடிவு செய்தும், இத்திட்டம் செயல்வடிவம் பெறாமல் போய் விட்டது. அதன் பிறகு, டாக்டர் நாகேந்திர சிங் என்பவர் குழுவும் (1963ல்) சி.வி.

வெங்கடேஸ்வரன் குழுவும் (1965ல்) அமைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு, சி.வி. வெங்கடேஸ்வரன் தலைமையிலான குழு திட்டத்தை நிறைவேற்ற சுமார் 37 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆனால் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி வருவாய் உள்ளதெனவும் கூறியது. அதன் பின்பு இறுதியாக எச்.ஆர். இலட்சுமி நாராயணன் தலைமையில் ஐவர் குழு ஒன்றும் மத்திய அரசால் 1981-82ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அக்குழு தமிழகமெங்கும் சென்று இத்திட்டத்திற்கான பல்வேறு தரப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

இத்திட்டத்தின் பயனைப்பற்றி 1981-82ஆம் ஆண்டு மத்திய அரசின் குழு பின்வருமாறு ஆராய்ந்து மதிப்பிட்டது. 1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல்வழிப் போக்குவரத்திற்குத் தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால், இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்- புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால், கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக்குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும். அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை 434 மைல் (மிச்சப்படும் தூரம்) ஆ.தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (மிச்சப்படும் தூரம்) இ) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா - 340 மைல் (மிச்சப்படும் தூரம்) 3.

இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரிபொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணிச் செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும். 4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

5. இக்கால்வாய் வெட்டப்பட்டால், தூத்துக்குடித் துறைமுகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு, அதன் மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும். 6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல், அது ஓர்அரணாக விளங்கும். 7. இக்கால்வாயின் மூலம் மீன்பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும்.

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும். 8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருட்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும். 9. சேதுக்கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.

10.இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து, உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது. 11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, அது இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். 12. இக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடு செய்துவிடலாம். 13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும்.

இந்தியாவின் நலன் கருதி, உடனடியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் 1981-82ஆம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. எனவே, இத்திட்டத் தாமதத்தினால் பொருளாதார ரீதியாக எவ்வாறெல்லாம் இழப்பு ஏற்படுகிறது என்பதை என் கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள். எனவே, பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமதமில்லாமல் நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்."

- என்று விளக்கமாகவும் விரிவாகவும் எழுதினேன். இக்கடிதத்தை நான் எழுதியபோது தி.மு. கழகம் தமிழகத்திலே ஆளுங்கட்சி அல்ல. இருந்தாலும், தமிழகத்தின் நலன் கருதி இந்தக் கடிதத்தைப் பிரதமருக்கு எழுதினேன். ஆனால், இந்தக் கடிதத்தின் பயன், மத்தியிலே ஆட்சி மாறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான் ஏற்பட்டது என்பதையும், அதன் தொடக்க விழா மதுரையில் நடைபெற்றதையும், அதற்கும் பின்னர் எவ்வாறு அத்திட்டம் சுணங்கியது என்பதையும் பின்னர் காண்போம்.

ஆனால் அந்தக் கடிதம்பற்றி 11-5-2002 தேதிய "தினமணி" ஒரு தலையங்கத்தை "தூங்காத கருணாநிதி" என்ற தலைப்பில் எழுதியிருந்தது. அதன் சுருக்கம் வருமாறு :- ✽ "கருணாநிதியின் சுறுசுறுப்பு அலாதியானது. அது எத்தகையது என்பதை அவருடைய அரசியல் எதிரிகளும் கூட நன்றாக அறிவார்கள். ஆட்சியைப் பறிகொடுத்து ஓராண்டு ஆகிறது. ஆயினும் கருணாநிதியின் வேகமான அரசியல் தடைப்பட்டு விடவில்லை. அநேகமாக நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினைமீது அறிக்கையை அவர் வெளியிடத் தவறுவதில்லை.

அதோடு புதிய புதிய பிரச்சினைகளை ஆட்சியாளர்களுக்குக் கிளப்பி விடுவதிலும் அவர் பின்வாங்குவது இல்லை. இதற்கிடையே திடீரென சேது சமுத்திரத் திட்டம் கருணாநிதிக்கு நினைவுக்கு வந்துவிட்டிருக்கிறது. அவ்வளவுதான், உடனடியாக பிரதமருக்கே நேரிடையாகக் கடிதம் எழுதி விட்டார். அத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில் வணிக வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பு ஏற்படுவதுடன், தென் தமிழகத்தின் பலமுனை முன்னேற்றத்திற்கும் வரப்பிரசாதமாக அமையும் என்பதையும் நினைவுபடுத்தி யிருக்கிறார்.

✽ "கருணாநிதி இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் பொறுப்புள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் அல்லவா? அவரால் எப்படித் தமிழக நலன்களை மறக்க முடியும்? அதோடு, இங்கு அதிகாரத்தில் தி.மு.க. இல்லாவிடினும், தில்லியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகிக்கிறது அல்லவா? எனவே சேதுத் திட்டம் வேகமாக நிறைவேற்றப்படுவதில் தி.மு.க.வுக்கு அக்கறை இருப்பதை கருணாநிதியால் நியாயப்படுத்த முடியும். தூங்காத கருணாநிதியால் சும்மா இருக்கமுடியாது.

✽ "ஆட்சியில் இருந்தால் எதிர்க் கட்சிகளைத் தூங்கவிட மாட்டார். எதிர் வரிசையில் இருந்தால் ஆட்சியாளர் - நண்பர்கள் ஆகிய இரு தரப்பையுமே தூங்கவிட மாட்டார். "தூங்காமை, கல்வி, துணிவுடைமை - ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்கு அவசியமான பண்புகள் என்று திருவள்ளுவர் இலக்கணம் வகுத்து இருக்கிறார் அல்லவா? எனவேதான் இந்த அபாரச் சுறுசுறுப்பு!"

★ ★ ★