நெஞ்சுக்கு நீதி
வெற்றியுமல்ல - தோல்வியுமல்ல! · 384 / 391
23. வெற்றியுமல்ல - தோல்வியுமல்ல! தி .மு. கழக ஆட்சியில், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டப்படும் என்று ஒரு திட்டத்தை நான் அறிவித்திருந்தேன். அத்திட்டத்தின்படி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் ஆங்காங்கு கட்டப்பட்டுத் திறக்கப்பட்டு வந்தன. அந்தத் திட்டத்தின்கீழ் என்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கான அந்த அலுவலகத்தை 7-3-2002 அன்று காலையில் நான் திறந்து வைத்தேன்.
அந்த அலுவலகம் திறக்கப்பட்ட மறுநாளே, அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சிக் கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் அந்த அலுவலகத்திற்கு வந்து கண்ணாடிகளையெல்லாம் அடித்துச் சேதப்படுத்தி, அராஜகச் செயல்களிலே ஈடுபட்டனர். அந்த அலுவலகத்திற்குள் யாரும் பொது மக்கள் வந்து தங்கள் முறைகேடுகளைச் செய்யக் கூடாது என்ற பெருந்தன்மையோடு(?) அப்படிப் பட்ட அராஜகச் செயல்களிலே அந்தக் கும்பல் ஈடுபட்டது. அதைப்பற்றி காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை.
காவல்துறையினரின் அந்த அலட்சியத்தைக் கண்டிக்கும் வகையில், 10-3-2002 அன்று காலையில், அந்த அலுவலக வாசலிலேயே நான் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்துத் தொடங்கினேன். அந்தத் தொகுதியைச் சேர்ந்த தாய்மார்களும், பொதுமக்களும், கழகத்தைச் சேர்ந்தவர்களும் அந்த உண்ணா நோன்பில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். சென்னையில், நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்ற செய்தி வெளியூர்களுக்கு எட்டியதும், ஆங்காங்கு கழகத் தோழர்கள் தாங்களும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துத் தொடங்கிவிட்டார்கள்.
மதுரையில், தென் மண்டல தி.மு.க. செயலாளர் மு.க. அழகிரி, பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் தலைமையில் தேவர் சிலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது. அதற்குப் பிறகு காவல்துறை இணை ஆணையரும், வேறு சில காவல்துறை அதிகாரிகளும் அங்கேயே என்னை வந்து சந்தித்து, உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்திட நடவடிக்கை மேற்கொண்டிருப் பதாக அளித்த உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்தேன்.
★ ★ ★ 16-4-2002 அன்று தமிழகச் சட்Lப் பேரவையில், முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் வருமாறு :- "விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், இலங்கை அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனைச் சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்-பிரபாகரனை, அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்."
அவையில் அ.தி.மு.க.விற்கு இருந்த பெரும்பான்மை காரணமாக, அன்றைய தினம் ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கொண்டு வந்த அந்தத் தீர்மானம் பேரவையிலே நிறைவேறியது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த அளவிற்கு ஒரு தீர்மானத்தைப் பேரவையில் நிறைவேற்றினார் என்றால், அவருக்கு முன்பு ஓரிரு மாதங்கள் மட்டுமே முதல் அமைச்சராக இருந்த திரு. ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள், அவருடைய பங்குக்கு, 10-1-2002 அன்று, அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தின் சுருக்கம் வருமாறு :- "1989-1991ஆம் ஆண்டுகளில் தி.மு.க. அரசின் ஆதரவுடன் விடுதலைப்புலிகள் தமிழகத்தில் சுதந்திரமாகத் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். 1991ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜெயலலிதா முதல்வரான பின்தான் தனது உயிரையும் பொருட்படுத்தாது, புலிகளின் நடவடிக்கையை ஒடுக்கினார். புலிகளின் இயக்கம் தடை செய்யப்பட்டதும், ஜெயலலிதாவின் முயற்சியால்தான். "தி.மு.க. மீண்டும் 1996-2001ஆம் ஆண்டுகளில் பதவிக்கு வந்தபோது, புலிகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தினர்.
2001இல் மறுபடியும் அதிமுக பதவிக்கு வந்தபின் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புமீது தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்தார். உலகில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களில் மிகக் கொடூரமான அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்து வருகிறது. எனவே, ஆண்டன் பாலசிங்கம் உட்பட - புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் தமிழ்நாட்டில் தங்குவதற்கு அனுமதி எதுவும் தரக் கூடாது. அது மாத்திரமல்ல - மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அருமை நண்பர் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிப்பதுபற்றி ஒரு பிரச்சினை எழுந்தது.
அப்போது பிரதமர் வாஜ்பய் அவர்களிடம் அதுபற்றிக் கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில், பாலசிங்கம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றுதான் கூறினார். ஆனால், அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அதைக் கடுமையாக எதிர்த்தார். "தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது" என்றே கூறினார். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்மீது புதிய "பொடா" சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - என்றும் எச்சரித்தார்.
12-4-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக, இரண்டு முறை விரிவாகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின்போது- "விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே சமயம், விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து ஒருவித மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை எதிர்க்கிறேன்.
தமிழகம் மட்டுமின்றி - இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில், தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் இந்தியாவில் நுழைய எக்காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது" என்று கூறினார்.
இப்படியெல்லாம் 2002ஆம் ஆண்டு பேட்டி கொடுத்தவர் தான், இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்பவர் என்று இப்போது சொல்லிக் கொள்கிறார். ஜெயலலிதா அன்றைய தினம் பேட்டி அளித்தபோது, செய்தியாளர்கள் அவரிடம் வேறொன்றும் கேட்டார்கள். "விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கவேண்டும் என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே?"
என்று கேட்டபோது - "விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட ஒரு மிகப் பயங்கரவாத அமைப்பு. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களைத் தேச துரோகக் குற்றம் செய்ததாகக் கருத வேண்டும். எனவே, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்மீது புதிய "பொடா" சட்டத்தின்கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின்கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது" என்று பதிலளித்தார்.
நானாக இதை இட்டுக்கட்டிக் கூறவில்லை. "தினமணி" நாளிதழ், 13-4-2002இல் முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியே இதுதான்! இன்னும் சொல்லப்போனால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, 31-3-2002 அன்று கேள்வி - பதில் பகுதியில் நான் எழுதும்போது- "இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டில் நடைபெறுமென அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதே?"
என்று கேட்டதற்கு, "எங்கே நடைபெறுகிறது என்பதுகூடப் பிரச்சினையில்லை. 1956ஆம் ஆண்டு ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களால் அமைதி வழியில் ஆரம்பமான தமிழர்களின் உரிமை வேட்கைப் போராட்டம், 1983க்குப் பிறகு ஆயுதமேந்தி நடக்குமளவுக்கு உருவெடுத்து - உயிர்கள், உடைமைகள் எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு அழிந்தொழிந்து - பிரச்சினைக்கு அமைதி வழியில் விடை காண இலங்கையின் புதிய பிரதமர் திரு. 'ரனில் விக்ரம சிங்கே;' நார்வே நாட்டினுடைய தூதுக் குழுவின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்து, நிலையான அமைதியை நடை முறைக்குக் கொண்டு வருவதற்கு முனைந்திருப்பதும்; அதற்கு விடுதலைப்புலிகள் இணங்கியிருப்பதும் "சாந்தியால் உலகம் தழைப்பது நன்றாம்!"
எனும் பாவேந்தர் பாடலுக்குப் பெருமை சேர்ப்ப தாகும்." என்று எழுதி இருந்தேன். அ.தி.மு.க. அரசையும், ஜெயலலிதாவையும் அதுவரை ஆதரித்து வந்த நம்முடைய தாய்க் கழகமான திராவிடர் கழகமும்கூட, ஜெயலலிதா சட்டப் பேரவையில் பிரபாகரனுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அந்த முடிவை ஜெயலலிதா மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில், "உலகத் தமிழர்களின் பழியை அ.தி.மு.க.
அரசு சுமக்க வேண்டாம்!" என்று கேட்டுக் கொண்டார். ★ ★ ★ சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது, அவர்கள் பேச்சில் அடிக்கடி குறுக்கிட்டு மறுப்புக் கூறுவதில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஒரு தனி விருப்பம். ஆனால், பேரவையில் தவறான தகவல்களை யாரும் கூறக் கூடாது. அப்படிக் கூறினால், அவர்கள்மீது எந்த ஒரு உறுப்பினரும் உரிமைப் பிரச்சினை கொண்டு வரலாம். முதல் அமைச்சராக இருப்பவர் கூடுமானவரை தவறான தகவல்களைக் கூறக்கூடாது.
தாங்கள் ஆளுங்கட்சி - எதைச் சொன்னாலும் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற அடிப்படையில், எதை வேண்டுமானாலும் சொல்வது நல்லதல்ல - நாகரிகமும் அல்ல. ஒருமுறை பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, நீதிபதிகளைப் பற்றி மிகத் தவறாகச் சொல்லி விட்டார். பத்திரிகைகளில் அது பெரிதாக வந்தது. அதைப் பார்த்துவிட்டு, மறுநாள் பேரவையில் ஜெயலலிதா ஜாக்கிரதையாக- தான் நீதிபதிகளைப் பற்றி தவறாகப் பேசி விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
அதற்குப் பிறகு ஒரு முறை தி.மு.கழகத்தைப் பற்றி முற்றிலும் ஒரு தவறான கருத்தைக் கூறினார். உடனடியாக, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள் அது தவறான தகவல் என்பதை விளக்கினார். அதற்குப் பிறகு ஜெயலலிதா "வாய் தவறிச் சொல்லி விட்டேன் - நானும் மனுஷிதானே!"
என்றும் கூறி சமாளித்தார். ஆனால் அந்தப் பிரச்சினைக்காக கழகத்தின் சார்பில் தரப்பட்ட உரிமைப் பிரச்சினைக்கு அப்போது பேரவைத் தலைவராக இருந்தவர் அனுமதி மறுத்து விட்டார். ★ ★ ★ இதற்கிடையே 17-4-2002 அன்று சென்னை மாவட்டக் கழகத்தின் செயலாளராகச் சிறப்பாக நீண்ட காலம் பணியாற்றிய அருமைத் தம்பி ஆர்.டி.சீத்தாபதியின் அன்பு மகன் எஸ். சிவக்குமாருக்கும், கொரட்டூர் கே.பாலசுப்பிர மணியத்தின் செல்வி பி. கவிதாவுக்கும் மணவிழாவினை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நான் நடத்தி வைத்தேன்.
பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர், மத்திய அமைச்சர் தம்பி முரசொலி மாறன், மேயர் தம்பி மு.க. ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். கழகப் பொருளாளர் ஆர்க்காடு என். வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் கு.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினார்கள். தம்பி சீதாபதியின் இல்லத்தில், நான் தலைமை வகித்து நடத்திய ஐந்தாவது திருமணம் அது. சீத்தாபதியைப் பொறுத்த வரையில், தி.மு. கழகத்திலே என்னைப் போன்ற தலைவர்களுக்கு, அண்ணா அவர்கள் காலத்திலும் சரி- இப்பொழுது எங்களுடைய காலத்திலும் சரி-எங்களுக்கெல்லாம் இருக்கின்ற மெய்க்காவல் படைத் தளபதிகளிலே ஒருவராகத் திகழ்ந்தவர் சீத்தாபதி என்று சொன்னால் அது மிகையாகாது.
தற்போது அவர் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்தபோது, சென்னை மாநகரில் நான் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், தற்போது "பைலட்" -- "எஸ்கார்ட்" என்றெல்லாம் சொல்லுகிறார்களே, அதைப்போல சீத்தாபதியின் கார் என் காருக்கு முன்னால் செல்லாமல் இருந்ததே கிடையாது. அதைப்போல, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெறுவதற்கு முன்பு, நேரில் அங்கே சென்று பார்வையிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் அறிந்த பிறகுதான், எங்களையே கூட்டிச் செல்வார்.
அன்றாடம் என் வீட்டிற்குக் காலையில் வருவதோடு, நான் தலைமைக் கழகத்தில் இருந்தால், அப்போதும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் என்ற முறையிலே கழக அலுவலத்திலேதான் அவர் இருப்பார். தந்தை பெரியார் அவர்கள் காலத்திலேதான் எடைக்கு எடை வழங்குவது என்ற ஒரு முறை திராவிட இயக்க மேடைகளில் நடைமுறைக்கு வந்தது. அதைப்போல கழகத்தின் சார்பில் என்னுடைய எடைக்கு எடை நாணயங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறத் தொடங்கியபோது, சென்னை மாநகரில் மாவட்டக் கழகத்தின் சார்பில் எடைக்கு எடை வெள்ளியை வழங்கியவர் தம்பி சீத்தாபதிதான்.
அவருடைய அருமை மகனுக்கு நடைபெற்ற அந்த மண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். ★ ★ ★ 27-3-2002 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் நிறுத்தப்படுவார் என முறைப்படி அறிவிக்கப்பட்டது. சண்முகசுந்தரம் கழகத்திலே தியாகத் தழும்பேறிய வழக்கறிஞர்களில் ஒருவர். அவருடைய தந்தை எஸ்.
ராஜகோபால் அவர்களும் கழகத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட மூத்த வழக்கறிஞர். அவருடைய பெயரை அறிவித்து விட்டு இல்லம் திரும்பிய நேரத்தில், ஒரு பத்திரிகை அலுவலகத்திலிருந்து, ஒரு நிருபர் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, "எந்த சண்முகசுந்தரம் சார்?"
என்று கேட்டார். அவருக்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? "1995ஆம் ஆண்டு, டான்சி வழக்கிற்காக, இரவு நேரத்தில் ஆவணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஏவி விடப்பட்ட குண்டர்களால் 80 இடங்களில் வெட்டப்பட்டு, உயிர் ஊசலாடி, மருத்துவமனை அறை முழுதும் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தபோது; அதைக் காண முடியாமல் நான் மூர்ச்சித்துப் போனேனே - அந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தான் இப்போது மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்" என்றேன்.
நிருபர் தொடர்ந்து, "அவரைத் தாக்கிய அந்த வழக்கு என்ன சார் ஆயிற்று?" என்று விவரம் கேட்க ஆரம்பித்து விட்டார். நான் சொன்னேன், "செய்தி பரவியதும் தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அன்றிருந்த அ.தி.மு.க. ஆட்சியில் யாரோ சிலரைக் குற்றவாளிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டுமென வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் "ரிட்" வ
ழக்கு தொடர்ந்ததை யொட்டி, உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட்டது. அதை அன்றைய அ.தி.மு.க. அரசு எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அன்றைய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்காமல், சி.பி.ஐ. விசாரணையை நடத்துமாறு தீர்ப்பு வழங்கியது. சி.பி.ஐ. விசாரணை நடவடிக்கையைத் தொடர்ந்து, உண்மைக் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டனர். அந்த வழக்கு நடைபெற்று - அதற்குள் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு -சண்முகசுந்தரத்தைக் கொலை செய்யத் தூண்டி விடப்பட்டு - அதில் ஆறு பேர் ஈடுபட்டதாகக் கூறி - அந்த ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் "தீர்ப்பளிக்கப்பட்டது!"
என்று விவரம் தெரிவித்தேன். அறிவித்தவாறு, கழக வேட்பாளராக வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வேட்பு மனு, என்னாலும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களாலும் முன்மொழியப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தேர்தலில் போட்டி இல்லாமலேயே சண்முகசுந்தரம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ★ ★ ★ தமிழகத்தில் சைதை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம்- ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில், 31-5-2002 அன்று இடைத் தேர்தல்கள் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அணிகளை எதிர்த்து, மதச் சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடவுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த ஆர். நல்லகண்ணு அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இடைத்தேர்தல் எப்படி நடைபெற்றது என்பதற்கு ஒரேயொரு உதாரணம் - 2001 மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, சைதைத் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 263.
இடைத் தேர்தலுக்காக வாக்காளர் சரி பார்க்கும் பணி நடைபெற்று, மூன்று மாதங்களுக்குப் பிறகு, தமிழகத் தேர்தல் ஆணையம், 2002 ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 8 பேர். அதாவது 30 ஆயிரத்து 255 வாக்காளர்களின் பெயர்கள்- அதாவது கழகத்திற்கு யார் யார் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்த்து, அந்தப் பெயர்கள் பழைய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சைதாப்பேட்டை தொகுதியில் 11 உதவிப் பொறியாளர்கள், வாணியம்பாடி தொகுதியில் நான்கு ஊராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டார்கள். அதுவும் இடைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, முன்தேதியிட்டு அந்த மாற்றல் உத்தரவுகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதிகாரிகள் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது குறித்து பேரவையில் 23-4-2002 அன்று கழக உறுப்பினர்கள் பொன்முடி, பரிதி இளம்வழுதி, எ.வ.
வேலு, இள. புகழேந்தி ஆகியோர் தாங்கள் கொடுத்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள அனுமதி கோரி, அது மறுக்கப்பட்டதால், தரையில் அமர்ந்து தர்ணா செய்தார்கள். தி.மு.க., அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் எழுந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து, "பொன்முடியும், பரிதி இளம்வழுதியும் அமங்கலமான- இழிவான-நா கூசக்கூடிய வார்த்தைகளை பேசியதால் அவர்களைக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும்!"
என்று கூற, அதையேற்று பேரவைத் தலைவர் அவ்வாறே உத்தரவிட்டு, அவர்களை வெளியேற்றினார். சைதாப்பேட்டை, வாணியம்பாடியில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததுபற்றி தி.மு.க. மக்களவை உறுப்பினர் செ.குப்புசாமி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரினை யொட்டி, தமிழக அரசு பிறப்பித்த மாறுதல் உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அந்த இடைத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் கழக வேட்பாளராக இசைமுரசு இ.எம். அனிபா அவர்களையும், மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் அவர்களையும் அறிவித்தோம்.
அச்சரப்பாக்கம் தொகுதியில், பா.ம.க.வுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டு, பா.ம.க. வேட்பாளராக த. பார்வேந்தன் போட்டியிட்டார். 10-5-2002 அன்று காலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த ஜி.கே. மணி அவர்களும் என்னை வந்து சந்தித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் பேசிக் கொண்டிருந்தனர். ★ ★ ★ மே திங்கள் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் வாணியம்பாடி தொகுதியிலும், 25ஆம் தேதி அச்சரப்பாக்கம் தொகுதியிலும், 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் சைதாப்பேட்டை தொகுதியிலும் இடைத் தேர்தல் சுற்றுப் பயணத்தை நான் மேற்கொள்வதென முடிவெடுத்து, அவ்வாறே கலந்து கொண்டேன்.
24-5-2012 அன்று செய்தியாளர்களையெல்லாம் அழைத்து, வாக்காளர் பட்டியலில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடைபெற்றுள்ளன என்பதை எல்லாம் ஆதாரங்களோடு விளக்கினேன். 31-5-2002 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 1-6-2002 தேதிய "தினமணி" முதல் பக்கத்தில் வாக்குப் பதிவு பற்றிய செய்தியை வெளியிடும் போது, கொட்டை எழுத்துக்களில் "கரைபுரண்டது கள்ளவாக்கு" என்றும் - சைதாப் பேட்டையில் கைப்பற்றப்பட்டன வாக்குச் சாவடிகள்" என்றும் - பெரிய தலைப்பிட்டுப் புகைப்படத்தோடு செய்திகளை வெளியிட்டிருந்தன.
அந்தப் புகைப்படத்தில் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் கைகளில் புகைப்பட அடையாள அட்டை இருந்தும், பட்டியலிலே பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்று புகார் செய்கின்ற காட்சியாகும். அந்தச் செய்தியில், "தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை மிரட்டி வெளியேற்றிவிட்டு, ஆயிரக் கணக்கில் கள்ள வாக்குகளை அ.தி.மு.க.வினர் அளித்தனர். வடசென்னை பகுதியில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குவிக்கப்பட்ட அ.தி.மு.க.
தொண்டர்கள், கும்பல் கும்பலாகச் சென்று நிதானமாக வாக்குகளைப் போட்டனர். அவர்களுக்கு வசதியாக வாக்குச் சாவடிகளின் அருகேயே காரில் இருந்துகொண்டு தாசில்தார்களின் சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. "நந்தனம் கல்லூரி வாக்குச் சாவடியில் எவ்வித சான்றிதழும் காண்பிக்கப்படாமல்கூட வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் புத்தம் புதிய ரேஷன் கார்டுகளுடனும் வாக்களிக்க வந்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் தங்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்பது போல ஒதுங்கிக் கொண்டனர்" என்று எழுதியிருந்தார்கள் என்றால், அந்த இடைத் தேர்தல்கள் எப்படி நடை பெற்றன என்பதை சுலபமாக உணர்ந்து கொள்ளலாம்.
சைதைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூர்புரம் டி.டி.டி.ஐ. பள்ளி வாக்குச் சாவடியைப் பார்வையிடச் சென்றபோது, முன்னாள் அமைச்சர் தம்பி பொன்முடி அ.தி.மு.க.வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். நான் விடுத்த அறிக்கையில்- "ஜனநாயகக் கொலை நடந்துள்ளது! எனவே தேர்தல் நாளைத் துக்க தினமாகக் கருதுவதால், ஜூன் 3ஆம்தேதியன்று பிறந்த நாள் கொண்டாடவில்லை. என் பிறந்த நாள் என்பதற்காக, யாரும் என்னைச் சந்திக்க வர வேண்டாம்.
ஜூன் 2 அன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவிக்கப்பட்டப் புத்தக வெளியீட்டு விழா மட்டுமே நடைபெறும். பிறந்த நாளை முன்னிட்டு, ஜூன் 1 முதல் பல்வேறு அணிகள் சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தேன்.
செய்தியாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பூம்புகார் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், சித்திக் அங்கே ஓடி வந்து, தான் 139வது வட்டத்திலே பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளே புகுந்து - கலாட்டா செய்து அவரை விரட்டிவிட்டதாகவும், கத்தியைக் காட்டி தாக்க முற்பட்டார்கள் என்றும் கூறினார். சைதைத் தொகுதி முழுமைக்கும் மறு வாக்குப் பதிவு தேவை என்று தேர்தல் ஆணையாளருக்கு ஆதாரங்களையெல்லாம் இணைத்துக் கடிதம் எழுதினேன்.
சைதைத் தொகுதியில் மறு வாக்குப் பதிவு கோரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்து டெல்லியில் தி.மு.க., மற்றும் பா.ம.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் சைதைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போதிலும், 58 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
"அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை - அதில் எங்களுக்கு திருப்தியில்லை" என்று நான் செய்தியாளர்கள் அதைப்பற்றி கேட்டபோது கூறினேன். இடைத்தேர்தல் நடந்த மூன்று தொகுதிகளிலும், எதிர்பார்த்தவாறே ஆளும் கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதைப்பற்றி என்னிடம் கருத்து கேட்டபோது, "இது தி.மு.க.வுக்குத் தோல்வியும் அல்ல - அ.திமு.க.வுக்கு வெற்றியும் அல்ல" என்று கூறினேன்.
★ ★ ★
