நெஞ்சுக்கு நீதி
மஞ்சள் சால்வைக்கு மகத்துவம் · 383 / 391
22. மஞ்சள் சால்வைக்கு மகத்துவம் எதுவும் இல்லை! ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2-3-2002 அன்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவியேற்றனர். தி.மு.கழகத்தின் சார்பில், அந்தப் பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சித் தலைவராக அப்போதிருந்த நமது இனமானப் பேராசிரியரும், சென்னை மாநகர மேயர் என்ற முறையில் தம்பி மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்கள்.
ஆனால், அப்போது வெளிவந்த "தினமலர்" நாளேட்டில், "ஆரோக்கிய அரசியல் சூழ்நிலை என்பது ஒரு வழிப்பாதையாக இருக்கமுடியாது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்திக்கு பதவியேற்பு நிகழ்ச்சியின் போது முதல் வரிசையில் இடம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் இங்கே அப்படி வழங்கப்படவில்லை" என்றும் எழுதியிருந்தார்கள்.
ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவரான பேராசிரியருக்கு ஆறாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு, பிறகு யாரோ சொல்லி, நான்காவது வரிசையில் உட்கார வைத்தார்கள். முதல் வரிசையில் யார் யாரோ அமர்ந்திருந்தார்கள். மேயர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கே அமராமல், பேராசிரியர் அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் வந்து அவருடன் அமர்ந்து கொண்டார். பேராசிரியருக்கு ஆறாவது வரிசையில் இடம் ஒதுக்கப் பட்டதைப்பற்றி நான் கண்டனம் தெரிவித்து எழுதியிருந்தேன்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில், ஜெயலலிதா 7-3-2002 அன்று வெளியிட்ட அறிக்கையில் - "கடந்த மார்ச் 2ம் தேதியன்று தமிழக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவின்போது, பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காமல், வேண்டும் என்றே ஆறாவது வரிசையில் ஒதுக்கப்பட்டது என்று கருணாநிதி குற்றம்சாட்டினார். அதை நான் மறுத்து அவரது குற்றச்சாட்டு என் மீதான காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் எழுப்பப்பட்டது என்று தெரிவித்திருந்தேன்.
தற்போது பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பேராசிரியர் அன்பழகனும் அந்தக் குற்றச்சாட்டையே எழுப்பியிருப்பதால், உண்மை நிலையை விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். "அமைச்சரவை பதவியேற்பு விழா ஏற்பாடுகள் அனைத்தையும், பொதுவாக அரசு பொதுத்துறையினர்தான் கவனிப்பது வழக்கம். முதலமைச்சராக பதவியேற்பவருக்கு அதில் எவ்விதத் தொடர்பும் இல்லை. (பொதுத் துறை எப்போதுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறையாகும்) விழா துவங்கிய பின்புதான் எதிர்க்கட்சித் தலைவர் ஆறாவது வரிசையில் அமர்ந்திருப்பதை நான் பார்க்க நேர்ந்ததால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை...
எதிர்க்கட்சித் தலைவருக்குப் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்னைப் பொறுத்தவரை இதனை ஒரு தவறாகவே கருதுகிறேன். என் கவனத்துக்கு இப்பிரச்சினை உரிய நேரத்தில் கொண்டு வரப்பட்டிருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்குத் தெரிவித்திருப்பேன். இதனால் நடைமுறையில் உள்ள மரபு வரிசைப்பட்டியலை தற்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப உடனடியாகத் திருத்தியமைக்கும்படி ஆணை இட்டுள்ளேன்.
பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனை நான் பெரிதும் மதிக்கிறேன். எதிர்காலத்தில் தவறு நிகழாவண்ணம் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்கும்படி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கியுள்ளேன். எனக்குத் தெரியாமல் நிகழ்ந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து பேராசிரியர் அன்பழகனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
★ ★ ★ பதவியேற்பின்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கான இடம் குறித்து இவ்வாறு அறிக்கைவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பதவியேற்றவுடன் முதலமைச்சர் என்ற முறையில் அளித்த பேட்டியில், கழக ஆட்சியில் தொழில் வளம் முன்னேறவில்லை என்றும், தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்கப் போவதாக வழக்கம்போல தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கழக ஆட்சியில் தொழில் துறையில் எந்த அளவிற்குத் தமிழகம் முன்னேறியது என்பதுபற்றி இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் 21-7-2000 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்த விவரங்களையெல்லாம் தொகுத்து அறிக்கையாக அளித்தேன்.
அதனால் கோபமடைந்த ஜெயலலிதா, என்னுடைய குற்றச்சாட்டுகளுக்குத் தான் இனிமேல் பதில் அளிக்கப்போவ தில்லை என்றும், அமைச்சர்களும், அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அறிக்கை விடுத்தார். அதைப் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "அவர் ஆட்சியில் இருக்கிறார். அவருக்காக பதிலளிக்க ஆள், அம்பு, ஆனை, சேனையென ஏராளமானோர் இருக்கிறார்கள். நான் பாவம், என்னையே நம்பி 'எடுத்தேன் இந்தப் பேனாவை' என்ற உறுதியை மட்டும் உயிர் மூச்சாகக் கொண்டவன்.
ஆனால் ஒன்று, தன்னந்தனியனாக அபிமன்யூ போராடிய காட்சியை திரை ஓவியமாகவும், இந்திரஜித்தன் போராடிய காட்சியை கவிதைக் காவியமாகவும் தீட்டியவன் தான் இந்தக் கருணாநிதி - ஜெயலலிதா அவர்களே! உங்கள் படை வரிசை ஏவும் கணைகள் பாயட்டும் - எதையும் தாங்கும் இந்த இதயம்! ஆம்; இது அண்ணாவிடம் நான் பெற்றது - அவரிடமே நான் எழுதவும் கற்றது" என்று பதில் கூறினேன்.
ஆனால், அதற்குப் பிறகு என்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்காமல் இருந்தாரா என்பதை தமிழ்நாடே அறியும். ★ ★ ★ 2002ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் கூட்டத் தொடர், 9-3-2002 அன்று தொடங்கியது. ஆளுநர் ராம்மோகன் ராவ் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றினார். ஆளுநர் உரையைப் புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது. ஜெயலலிதா அதனைக் கடுமையாகக் கண்டித்து, "ஆளுநர் உரையாற்றும்போது, அவ்வாறு வெளிநடப்பு செய்தது அதுவரை நடை பெறாத ஒன்று" என்று வழக்கம் போலச் சாடியிருந்தார்.
நிருபர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்டபோது, 18-1-90ல் தி.மு.க. ஆட்சியின் போது ஆளுநராக திரு. அலெக்சாண்டர் இருந்தார். அவர் உரையைப் படிக்கத் தொடங்கியபோது, அ.தி.மு.க., ஐக்கிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள் என்றும், 18-1-91 அன்று ஆளுநர் பர்னாலா உரையாற்றிய போதும், அதி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், 18-3-98இல் ஆளுநர் பாத்திமா பீவி உரையாற்றியபோது, அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், எனவே தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையின் போது அ.தி.மு.க.
வெளிநடப்பு செய்துள்ளது என்றும் விளக்கினேன். ★ ★ ★ 2002ஆம் ஆண்டு மீண்டும் அவர் முதலமைச்சராக ஆன பிறகு, தமிழகம் முழுவதும் இருந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், கழக முன்னணியினர் இல்லங்களில் எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாகச் சோதனை நடத்தத் தொடங்கினார். உதாரணமாக, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சுரேஷ் ராஜன், சமையநல்லூர் செல்வராஜ், மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு, தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., என்.பெரியசாமி உட்பட 32 வீடுகளில் சோதனை நடைபெற்றது.
ஜெயலலிதா எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தி.மு.கழக ஆட்சியிலே செய்ததை எல்லாம் எதிர்ப்பது - அல்லது நீக்குவது என்பதில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்படுவார். அதன்படி, கழக ஆட்சியில் அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வந்த இரண்டு மாவட்டங்களை மீண்டும் ஒரே மாவட்டமாக ஆக்கப்போவதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த இரண்டு மாவட்டங்களையும் 2002ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவர் ஒரே மாவட்டமாக செய்தபோதிலும், 2006இல் தி.மு.கழக ஆட்சி வந்த பிறகு, மீண்டும் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, தற்போது இரண்டு மாவட்டங்களாகவே அது செயல்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த என்னுடைய தகவலுக்குப் பிறகு, ஜெயலலிதா திடீரென்று நினைத்துக் கொண்டு, "மீண்டும் அந்த இரண்டு மாவட்டங்களையும் ஒரே மாவட்டமாக ஆக்கப் போகிறேன்" என்று அறிவிப்பு செய்தாலும் செய்யக்கூடும். பொதுவாக புதிய மாவட்டங்களை உருவாக்குவது என்பது, அந்தப் பகுதியின் வளர்ச்சி குறித்தும், அந்தப் பகுதி மக்களின் நன்மையைக் கருதியும் அரசினால் செய்யப்படும் நற்காரியமாகும். தி.மு.கழக ஆட்சியிலேதான் நான் முதல் அமைச்சராக இருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் 14-1-1974 அன்று உருவானது.
முதலமைச்சராக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, 1989-1991ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேதான் திருவண்ணாமலை, நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கழக ஆட்சியிலே நாமக்கல், திருவள்ளூர், தேனி, திருவாரூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. கழக ஆட்சியில் புதிதாக மாவட்டங்களை உருவாக்கியது மாத்திரமல்ல - அதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த் துறைக்கான சில அலுவலகங்கள் கட்டுவதற்காக செய்யப்பட்ட செலவு 10 கோடியே 12 லட்சம் ரூபாய். 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு, தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் - தூத்துக்குடியில் 4 கோடி ரூபாய் செலவிலும், சென்னையில் 9 கோடி ரூபாய் செலவிலும், விழுப்புரத்தில் 4 கோடி ரூபாய் செலவிலும், திருவண்ணாமலையில் 5 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல்லில் 6 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவிலும், கரூரில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூரில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவிலும், நாகப்பட்டினத்தில் 6 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவிலும், திருவள்ளூரில் 5 கோடியே 61லட்சம் ரூபாய் செலவிலும், தேனியில் 5 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
ஆக, பத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் சுமார் 60 கோடி ரூபாய் செலவிலும் - அது தவிர, சுமார் 15 கோடி ரூபாய் செலவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்களும், வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்களும் கட்டப் பட்டுள்ளன. ★ ★ ★ 1-4-2002 அன்று மதுராந்தகம் ஆறுமுகம் அவர்களின் பவள விழா நிகழ்ச்சி - செங்கற்பட்டில்! காலையில் சென்னையிலிருந்து நானும், தம்பிகள் மேயர் ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், க.பொன்முடி, க.சுந்தரம், ஆகியோரும் புறப்பட்டுச் செங்கற்பட்டு சென்றோம்.
அங்கே மாவட்டக் கழகச் செயலாளர்கள் தம்பிகள் கும்முடிப்பூண்டி வேணு, அன்பரசு, சிவாஜி ஆகியோர் எங்களை வரவேற்றனர். பொங்கியெழுந்த பூரிப்பில் பவள விழா நாயகர் மதுராந்தகம் ஆறுமுகமும் அவரது துணைவியார் கோதையும் அருவியென ஆனந்தக் கண்ணீர் பொங்க எங்களை வரவேற்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் கழகத் தோழர்கள் வந்து குழுமியிருந்தனர். அங்கும் செய்தியாளர்கள். "என்ன - தொண்டரின் பவள விழாவினைச் சிறப்பிக்க வந்தீர்களா?"
என்றனர். "தொண்டரா? அவர் தொண்டர் மட்டுமில்லை அய்யா! கழகத்தை வளர்த்தவர்களில் ஒருவர். அவருக்குப் பவள விழா என்றால், வராமல் இருக்க முடியுமா?" என்றேன். சென்னை திரும்பினோம். வழியில் சிந்தனை. இடையில் அவர் கழகத்தை விட்டு விலகிவிட்டார். என் மீதுள்ள கோபத்தால் அல்ல - உள்ளூர் கோபதாபத்தால்! ஆனால் அங்கேயிருந்த போது கடுமையான வார்த்தைகளால் என்னை வசைபாடியிருக்கிறார். அதனால் என்னைப் பார்த்தவுடன் அவருக்கு வெட்கம் வேறு!
இடையில் அவர் என்னை வசைபாடினாலும், அதற்கு முன்பாகக் கழகத்தை வளர்க்க அவர் பட்டபாட்டினை நான் அறிவேனே; அப்போது நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மனதிலே அசை போட்டுக்கொண்டே சென்னை திரும்பினேன். மதுராந்தகத்தில், அவர் இயக்கத்தின் செயல் வீரராகச் சுற்றிச் சுழன்று, அந்தக் காலத்தில் கொடும்பகை எதிர்த்துக் கடும் போர் புரிந்து, களவெற்றிகள் கண்டதும், என்னையும் நடிகர் திலகத்தையும் அழைத்து நாடகம் நடத்தி, வசூலில் எஞ்சிய தொகையில் கழகப் பணிமனை திறந்ததும், மாவட்டக் கழகச் செயலாளராக அந்தப் பகுதியில் சுற்றிச் சுழன்றதும், பெரும் புயல் ஒன்றில் நானும், என் குடும்பத்தினரும் சிக்கிக்கொண்டு, அரசினர் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, அந்தப் புயல் வெள்ளத்தில் தன்னந்தனியனாக எங்களைத் தேடிக் கொண்டு அவர் வந்ததும், என் நினைவிலே பசுமையாகச் சுழன்றன.
சென்னை திரும்பியதும், நேராக 'முரசொலி' அலுவலகத்திற்குச் சென்று "மதுராந்தகத்தின் பவள விழா" என்ற தலைப்பில் உடன்பிறப்பு மடல் ஒன்று எழுதிவிட்டு, அந்த நிறைவுடன் இல்லம் திரும்பினேன். ★ ★ ★ 3-4-2002 அன்று நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தம்பி மு.க.ஸ்டாலின் பேசும்போது, அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளையெல்லாம் அ.தி.மு.க. அரசின்மீது சுமத்தினார். சென்னை மாநகராட்சி மன்றத்தினை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அ.தி.மு.க.
அரசு நடத்துவதைப்பற்றி எல்லாம் விளக்கினார். மரபுகள் மீறப்படுவதைப் பற்றியும் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பொறுத்துக் கொள்ள முடியுமா? உடனே பேரவையில் எழுந்து, "மரபுகள் மீறப்படுவதைப்பற்றி ஸ்டாலின் பேசினார். சென்னை மேயராக உள்ள ஸ்டாலின் என்னை வந்து சந்திக்கவில்லை. கூடிய விரைவில், அவர் ஒரு முடிவினை எடுக்க வேண்டும். இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
அதில் ஒருவர்; சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம் - அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் போன்ற பொறுப்பை வகிக்கலாம் - இரண்டிலும் இருக்கமுடியாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவோம்" என்றார். அந்த அம்மையாருக்குத்தான் எவ்வளவு நல்ல எண்ணங்கள் என்று பாருங்கள்! தம்பி ஸ்டாலின் பேசியதற்காக மட்டுமல்ல - அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தம்பி பொன்முடி சட்டப் பேரவையில் பேசும்போது, நியாயமான சில கேள்விகளைக் கேட்டார் என்பதற்காக அவையிலேயே மிரட்டப்பட்டதோடு, அன்றிரவே அவரது வீட்டிலும், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என்று 18 பேருடைய வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டது.
"முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவர் இரண்டு பதவிகளில் இருக்க முடியாது என்பதற்காக சட்டம் கொண்டு வரப்போவதாகச் சொல்லியிருக்கிறாரே" என்று என்னிடம் கேட்ட போதுகூட - "தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே - வேட்பு மனுதாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே - அதைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால், ஒருவர் தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குப் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவரை நீக்க, சட்டம் கொண்டு வரப்படுமானால், அது கோபத்திலும், ஆத்திரத்திலும், பழி வாங்கும் போக்கிலும் செய்யும் காரியம்!" என்றேன். "எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள், மேயராக பதவி வகிக்கக்கூடாது என்ற முடிவு தவறானது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்,
பா.ஜ.க.வும் முடிவெடுத்தன. ஜெயலலிதா, பேரவையில் அவ்வாறு கோபத்தில் சவால் விட்டதோடு சும்மா இருக்கவில்லை. யார் எதிர்த்தால் தன்னை என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு, 22-4-2002 அன்று ஒருவர் ஒரே சமயம் இரண்டு பதவிகள் வகிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை அறிமுகம் செய்தார். அறிமுக நிலையிலேயே தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை ஒட்டுமொத்தமாக எதிர்த்தன. மசோதாவின் முழு குறிக்கோளே தேர்தலில் நின்று, மக்களிடம் வாக்குகளைப் பெற்று, வெற்றியடைந்து, சென்னை மாநகர மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்த மு.க.ஸ்டாலினிடமிருந்து ஒரு பதவியை அபகரிக்கவேண்டும் என்பது தான்.
8-5-2002 அன்று அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. மசோதா அறிமுகப்படுத் தப்பட்டபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்மாறன், பா.ஜ.க. சார்பில் ஜெகவீரபாண்டியன், பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி, த.மா.கா. சார்பில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் , காங்கிரஸ் சார்பில் யசோதா, தி.மு.க. சார்பில் பேராசிரியர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் ஐந்தாண்டு காலம் மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து சிறப்பான நிலையில் பணியாற்றிய பிறகு, நடைபெற்ற மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் கடுமையாக எதிர்த்து, பல்வேறு முயற்சிகளைச் செய்து பார்த்தும் ஸ்டாலினைத் தோற்கடிக்க முடியாததால், அதிலே ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவும், சட்டப் பேரவையில் அ.தி.மு.க.வை எதிர்த்து கடுமையாகப் பேசியதன் காரணமாகவும், அந்த மசோதா கொண்டு வரப்பட்டி ருக்கிறது என்று அப்போது ஊரே பேசியது - ஏடுகள் எல்லாம் எழுதின. பேரவையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசும்போது, "ஒரு தனி நபரை குறி வைத்துக்கொண்டு, அந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது, அப்படி தனி ஒருவரைக் குறி வைத்து - கொண்டு வரப்படும் சட்டம், நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் செல்லாது!"
என்று கூறினார். "அந்த மசோதாவை எதிர்த்து கழகத்தின் சார்பில் வழக்குப் போடுவதாக இருக்கிறீர்களா?" என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது - "நாங்கள் வழக்குப் போடுவதாக இல்லை - அரசாங்கத்தின் முடிவுக்கே விட்டு விட்டோம்" என்று பதில் கூறினேன்.
மேயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பதவியில் இருந்த தம்பி ஸ்டாலினைச் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒருவருக்கு ஒரு பதவி என்பதை ஏற்கிறோம். ஆனால் மாநகராட்சித் தேர்தல் முடிந்த பிறகு இந்தச் சட்டம் கொண்டு வந்ததுதான் தவறு - நான் எந்தப் பதவியையும் நானாக ராஜினாமா செய்யப்போவதில்லை" என்றும், "அவர்களாகவே பதவியைப் பறித்துக் கொள்ளட்டும்" என்றும் கூறினார்.
ஆனாலும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் உதயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அ.தி.மு.க. அரசின் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தபோதிலும், திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் பிரச்சினையிலே மேற்கொண்டு தொடர விரும்பவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பை செய்தியாளர்கள் என்னிடம் கூறி "என்ன செய்யப் போகிறீர்கள்?"
என்று கேட்டபோது, "எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. உங்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கலாம் என்று நினைத்தேன். தீர்ப்பைப் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. எப்படியோ, மக்களிடம் வாக்குகளைப் பெற்று, மேயராக இரண்டாவதுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பி ஸ்டாலினின் மேயர் பதவியை ஜெயலலிதா அரசு பறித்துக் கொண்டது" என்று கூறினேன்.
★ ★ ★ 3-3-2002 காலையில் கும்பகோணம் சென்று, முன்னாள் அமைச்சரும், தஞ்சை மண்டலக் கழகப் பொறுப்பாளரும், கழக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தம்பி கோ.சி. மணி - கிருஷ்ணவேணி தம்பதியரின் அருமைச் செல்வன் கோ.சி. அன்பழகன், எஸ்.மெளலானா - எம். மல்லிகா தம்பதியரின் அருமைச் செல்வி செயிரா ஆகியோரின் மணவிழாவிற்குத் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்தினேன். சென்னை மாநகர மேயர் தம்பி மு.க. ஸ்டாலின், தம்பி மு.க.
அழகிரி ஆகியோர் வரவேற்புரையாற்றினர். அந்த மணவிழாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவபுண்ணியம் கலந்துகொண்டு பேசும்போது, "1996ஆம் ஆண்டு தி.மு.கழகத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்து, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கான வாய்ப்பினைப் பெற்றவன் நான். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கலைஞர் வந்தபோது, அந்தச் சுற்றுப் பயணத்தில் நான் போட்டியிட்ட மன்னார்குடி தொகுதி இடம் பெறவில்லை என்று தெரிந்ததும், மயிலாடு துறையிலே நான் கலைஞர் அவர்களைச் சந்தித்து, மன்னார் குடிக்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
கலைஞர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, மூன்றரை மணி நேர அவகாசத்தில் மன்னார்குடிக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அந்த மூன்றரை மணி நேரத்திற்குள்ளாக மன்னார் குடியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கலைஞர் அவர்களது பேச்சைக் கேட்டார்கள். "நான் தற்போது அணி மாறி வந்திருக்கிறேன் என்றாலும், கலைஞர் அவர்களிடத்திலே எனக்கு இருக்கிற அன்பும், மரியாதையும் என்றைக்கும், எப்பொழுதும் மாறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி தெரிவிக்கிற காரணத்தால் - ஏதாவது வருத்தமோ, பகையோ வரும் என்று நான் அச்சப்பட்டது கிடையாது. தமிழகத்திலே இருக்கிற அரசியல் கட்சித் தலைவர்களிலே மூத்த அரசியல் கட்சித் தலைவராக - முதுபெரும் தலைவராக - எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டியாக - இந்த நாட்டில் விளங்குகிற தலைவராக - கலைஞர் இருக்கிறார் என்பதை யாருமே மறுக்க முடியாது" என்று அந்த மணவிழாவிலே குறிப்பிட்டார்.
அன்று பேசிய அதே எண்ணத்தோடுதான் இன்றளவும் சிவபுண்ணியம் அவர்கள் இருக்கிறார் என்பதை நான் நன்றாக அறிவேன். ★ ★ ★ அதே 3-3-2002 அன்று, ஆந்திர மாநிலம், மேற்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் என்னும் இடத்தில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக அப்போது நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த திரு. ஜி.எம்.சி. பாலயோகி அவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் கிருஷ்ணா மாவட்டம், கைகாலூர் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது, தென்னை மரம் ஒன்றில் மோதி, நொறுங்கி, ஒரு மீன் வளர்ப்புக் குளத்தில் விழுந்தது.
அந்தக் கோர விபத்தில் மக்களவைத் தலைவர் ஜி.எம்.சி. பாலயோகி பரிதாபமாக இறந்தார். ஹெலிகாப்டரை ஓட்டிவந்த விமான ஓட்டியும், பாலயோகியின் செயலாளரும், பாதுகாவலரும் இறந்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் புயல் வீசுகிற நேரத்திலும், அமைதியின் வடிவமாக விளங்கி, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் காட்டாமல், பண்பார்ந்த நெறியினைக் கடைப்பிடித்தவர் பாலயோகி. அவரது மறைவு குறித்து "இந்திய ஜனநாயக அரங்கில் ஒரு தூண் விழுந்து விட்டது!"
என்று இரங்கல் செய்தி விடுத்தேன். பாலயோகி அவர்களின் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். கழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் தம்பி முரசொலி மாறன் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். ★ ★ ★ நான் மஞ்சள் துண்டு அணிவதைப் பற்றி சிலர், அது ஏதோ தெய்வீக மகத்துவத்திற்காக என்று இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதைப் பற்றி நான் பலமுறை விளக்கமளித்திருக்கிறேன்.
இருந்தாலும் அவர்கள் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. நான் மஞ்சள் துண்டு அணிவது எந்தவித தெய்வீக மகத்துவத்திற்காகவும் அல்ல. 1994ஆம் ஆண்டிற்கு முன்பு, ஒரு நாள் திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகத் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் பி. ராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பல்வேறு சோதனைகளைச் செய்தார்கள்.
வலது கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக உமிழ் நீர்த் தேக்கம் ஏற்பட்டு, அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப் பட்டது. வலது புறம் வாய்க்குள் அறுவைச் சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர். அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, மீண்டும் டாக்டர்கள் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த அறுவைச் சிகிச்சையினால் எதிர் விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற ஐயப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம்! டாக்டர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோதே என் வலது கன்ன வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக, ஒரு வழியாக அறுவைச் சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு, சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.
கழுத்துப் பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பாக இருக்க வேண்டுமென்றும், நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையை கழுத்தின்மேல் எப்போதும் இருக்கும்- படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர்கள் வலியுறுத்திக் கூறினர். அப்படிக் கம்பளிச் சால்வை அணிந்து கொண்டால், கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும், கன்னத்தில் சிறு வீக்கம் பெரிதாகாமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு - என்றும் கூறினர்.
அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது. தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் "இது நன்றாக இருக்கிறது, இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக - இதே வண்ணத்தில எப்போதும் அணிந்திடுங்கள்" என்று கூறினர்.
அடையாளமாகச் சிலர் தாடி, தொப்பி, கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இதைப் பற்றி பல காரணங்களை பலரும் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு தான் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் ஆடை குறித்து ஏற்கனவே சிறப்புப் பேட்டி ஒன்றில் என்னிடம் கேட்டபோதே, "நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ளளவும் மாற்றமில்லை.
நான் மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கையினால் அல்ல என்பதையும்; அதற்கான காரணத்தையும் பலமுறை விளக்கியிருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர; மூட நம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தெளிவில்லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக் கொள்வேன்.
இதில் எங்கே முரண்பாடு என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகிவிடாது! ஓஷோ எழுதிய "தம்மபதம்" என்ற நூலில் - மஞ்சளாடை பற்றி புத்தர் என்ன சொன்னார் என்பதை விளக்கியிருக்கிறார். அது வருமாறு :- "சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும்கொண்டவன் மஞ்சளாடை அணிவது பொருந்துமா? தன்னியல்பை ஆள்பவர் எவரோ - ஒளியும் தெளிவும் உண்மையுமானவர் எவரோ - அவரே மஞ்சளாடை அணியலாம்!"
இதுதான் என்னுடைய மஞ்சள் சால்வையின் மர்மம்! எந்தவொரு காரணத்திற்காகவும் அதை நான் அணியவில்லை. இதில் மகத்துவம் எதுவும் இல்லை - என்பதுதான் உண்மை! ★ ★ ★
