உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அய்யோத் - தீ!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அய்யோத் - தீ! · 382 / 391

21. அய்யோத் - தீ! 6-1-2002 அன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் என் தலைமையில் நடைபெற்று, இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளிலும் தி.மு.கழகமே போட்டியிடுவது என்றும், தாங்க முடியாத அளவுக்கு மக்கள்மீது அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகளை எல்லாம் கண்டித்து மாநிலம் முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்துவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் அடுத்தடுத்து நடைபெற்றன. தேர்தல் ஆணையத்திற்கு அவைகளை தெரிவித்ததின்பேரில், தேர்தல் ஆணையச் செயலாளர் திரு. கே.ஜெ.ராவ் அவர்கள் தலைமையிலான குழு ஒன்று அந்தத் தொகுதிக்கே வருகை தந்தது. அந்தத் தொகுதியிலே உள்ள கொண்டமநாயக்கன் பட்டியில் விசாரணை செய்தபோது, பல குளறுபடிகள் தென்பட்டன அப்போது தேர்தல் ஆணையச் செயலாளர் "டென்ஷன்" ஆனார் என்று ஏடுகளில் செய்தி அப்போதே வெளிவந்தன.

அந்தக் குழுவுடன் வந்த மாவட்ட ஆட்சித் தலைவரால் புகார்கள் எதையும் மறுக்க முடியவில்லை. உதாரணமாக, அந்த ஊரில், ஒரு எண்ணில் சரஸ்வதி என்ற பெயர் வாக்காளர் பட்டியலிலே இருந்தது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு வயது 13தான். அதை தேர்தல் ஆணையச் செயலாளரே கண்டறிந்தார். அ.தி.மு.க. பொறுப்பாளர் வீட்டில் மூன்று பேர் மட்டுமே இருக்க, வேறு சில பெயர்கள் எல்லாம் அந்த வீட்டிலே இருப்பதாக, பட்டியலிலே குறிக்கப்பட்டிருந்தது.

ஆண்டிப்பட்டி தொகுதியிலே அதிக அளவுக்கு முறைகேடுகள் நடந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையேற்று, சைதாப்பேட்டையிலும், வாணியம்பாடியிலும் இடைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதாகவும், ஆண்டிப்பட்டியிலே மட்டும் உடனடியாகத் தேர்தல் நடத்துவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அது வேண்டுமென்றே செய்கின்ற திட்டமிட்ட ஏற்பாடு என்றும், அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தேர்தல் வைத்தால் மூன்று தொகுதிகளிலும் வைக்க வேண்டுமென்றும், ஒத்திவைத்தால் மூன்று தொகுதிகளிலுமே ஒத்திவைக்க வேண்டுமென்றும் பத்திரிகையாளர்களிடம் நான் தெரிவித்தேன்.

தேர்தல் ஆணையம் இந்தக் கருத்தை ஏற்க முன்வராத நிலையில், 16-1-2002 அன்று, தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் ஆணையத்திற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தோம். குடியரசுத் தலைவருக்கும் நிலைமைகளை விளக்கி நானே கடிதம் எழுதினேன். ஆண்டிப்பட்டி தொகுதியில் கழக வேட்பாளராக ஒன்றியச் செயலாளர் வைகை சேகர் அறிவிக்கப்பட்டார். 16-1-2002 அன்று தேர்தல் ஆணையம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.

அந்தக் கடிதத்தின் முதல் வாசகமே தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழகத்தைச் சேர்ந்த 16 அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். அதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சம்பத் ஒரு முக்கிய அதிகாரி. அவர் உட்பட 8 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் விதிமுறைகளை மீறிய அந்த அதிகாரியை நிச்சயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அ.தி.மு.க.

அரசு அவரை மாநகராட்சி கமிஷனர் பதவியைவிட உயர்ந்த மாநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக நியமித்தது. அதைப்பற்றி 'இந்து', 'எக்ஸ்பிரஸ்' நாளேடுகள் அப்போதே கிண்டல் செய்து எழுதியிருந்தன. கள்ள ஒட்டுப் போடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. திட்டமிட்டபடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாக்காளர்கள் மிகவும் தாராளமாகக் கவனிக்கப்பட்டார்கள். "ஆனந்த விகடன்" வார இதழ், "போயஸ் தோட்டத்தை மிரட்டுது ஒரு குடிசை" என்று கட்டுரை எழுதியது.

அந்தக் கட்டுரையில், "ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்கத் தமிழ்ச் செல்வன் ராஜினாமா செய்ததில் இருந்தே, அந்தத் தொகுதிக்கு ஒரு "ஹீரோயின் இமேஜ்" கிடைத்துவிட்டது. மொத்த அரசாங்க இயந்திரமும் ஒரு "ரெட் மார்க்" செய்து கொண்டு தி.மு.கழகத் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை விளக்கி நான் உரையாற்றினேன்! ஆண்டிப்பட்டியை ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்கியது. குண்டும் குழியுமான சாலைகள் சமதளமாயின. திரும்பிய பக்கமெல்லாம் சமுதாயக் கூடங்கள், நிழற் குடைகள், நவீனக் கழிப்பிடங்கள், சத்துணவுக் கூடங்கள் எனப் "பளிச்" என்று சுண்ணாம்பில் கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன.

ஆண்டிப்பட்டி அருகில் தேனி என்.ஆர்.டி. நகரில், ஜெயலலிதா தங்குவதற்கென ஒரு பங்களா தயார். அமைதிப் பிரச்சாரத்தில் நிற்கிறது தி.மு.க. "நான் ஒன்றும் பெரிய நிலச் சுவான்தார் அல்ல. நான் ஆண்டிப்பட்டி மண்ணின் மைந்தன்" என்று பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் தி.மு.க.

வேட்பாளர் வைகை சேகர். போயஸ் தோட்டத்தை எதிர்ப்பது வைகை புதூர் கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீடு என்பது ஆச்சரியம்" என்றெல்லாம் எழுதியிருந்தது. சைதாப்பேட்டை, வாணியம்பாடியைவிட அதிக முறை கேடுகள் நடந்த ஆண்டிப்பட்டியில் மட்டும் இடைத் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் முன் வந்ததைப் பற்றி 22-1-2002 தேதியிட்ட "இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில நாளேடு தலையங்கமே எழுதியது. நிலக்கோட்டை தொகுதியில் உள்ள 50 வாக்காளர்களின் பெயர்கள், ஆண்டிப்பட்டித் தொகுதியின் வாக்காளர் பட்டியலிலே இடம் பெற்றிருந்ததை ஏடுகள் எல்லாம் எடுத்துக் காட்டி எழுதின.

கழக முன்னணித் தலைவர்கள் எல்லாம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கழகத்தின்மீது அப்போது ஆர்வம் கொண்ட கலையுலகப் பெருமக்களான டி. ராஜேந்தர், சரத்குமார் போன்றவர்களும் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 16-2-2002 அன்று, நான் ஆண்டிப் பட்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதை யொட்டி ஆண்டிப்பட்டி செல்லும் வழியில், திண்டுக்கல் குடகனாறு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்குமாறு அரசிடம் கோரி முறையாக அனுமதி பெறப் பட்டிருந்தது.

ஆனால், பிப்ரவரி 8ஆம் தேதியன்று திடீரென்று அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர். ஆனால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், தேனி, திண்டுக்கல் மாவட்டங் களில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலே தான் தங்கியிருந்தார்கள். இருந்தாலும், மணவிழாவில் சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வதைப்போல அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டினைப் பார்த்தபோது எனக்கு ஒரு நினைவு வந்தது.

★ ★ ★ 1969-1976 காலக் கட்டத்தில், நான் முதலமைச்சராக இருந்தபோது, பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது உடல்நிலையை உத்தேசித்து, அவர் சுற்றுப் பயணத்தின்போது, தங்குகிற வழியில் உள்ள அரசு விடுதிகள் அனைத்திலும், அதேபோல் சர்க்கரை ஆலை தங்கும் இடங்களிலும், குளிர்ப்பதன வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் ஒரு நாள் மேலவையில் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.

அந்தக் கடிதத்தில், "காமராஜர் அவர்கள், எம்.பி., என்ற முறையில் உதகை தமிழகம் இல்லத்தில் ஒரு வாரம் தங்க அனுமதி வழங்கவேண்டும்" என்று எழுதியிருந்தார். நான் கோபத்துடன் அவரிடம், "பெருந்தலைவர் காமராசர் அவர்கள், எம்.பி., என்ற முறையில்தான் அங்கே தங்க வேண்டுமா என்ன? அவர் இந்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர் என்ற முறையில், உதகை தமிழகம் இல்லத்தில் ஒரு வாரமல்ல - ஒரு மாதம்கூட அவரது விருப்பம்போலத் தங்கிக் கொள்ளலாம்" என்று கூறினேன்.

நம்முடைய பண்பாடு இது! ★ ★ ★ இந்த நேரத்தில், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்பாட்டையும் பற்றிச் சொல்ல வேண்டுமல்லவா? "நீதி கேட்டு நெடிய பயணம்" ஒன்றை மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நான் நடந்தே மேற்கொண்டேன். அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எனக்கு மதுரைக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "உங்கள் உடல் நிலையில் இந்த நெடிய நடைப் பயணம் தாங்குமா?"

என்று கேட்டதுடன், "உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் செல்ல முற்பட்டபோது, வழியில் அரசினர் விடுதி ஒன்றுக்கு முன் கூட்டியே அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்த கொடுமையும் நடைபெற்றது, ஜெயலலிதா தூண்டுதலால்! 16-2-2002 அன்று மாலையில் என்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து, வடுகப்பட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், வைகை புதூர், கண்டமனூர் ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறே வாக்குக் கேட்டு விட்டு, கடைசியாக கடமலைக் குண்டுவிலும், ஆண்டிப்பட்டியிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றினேன்.

வைகை சேகருக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்தேன். இவ்வளவிற்கும் பிறகு, ஆண்டிப்பட்டியில் தேர்தல் என்ற ஒன்று நடந்தது. எதிர்க்கட்சி ஏஜெண்டுகள் எல்லாம் வாக்குச் சாவடியிலிருந்து விரட்டப்பட்டனர். அ.தி.மு.க.வினரே தங்களுக்குத் தாங்களே வாக்குகளைப் பதிவு செய்து கொண்டனர். மொத்தத்தில் அங்கே அராஜகம் கொடி கட்டிப் பறந்தது. தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இருந்தது. ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

★ ★ ★ 21ஆம் தேதி சென்னை திரும்பி, 22ஆம் தேதியன்று சென்னையில் பாரதிய வித்யாபவன் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 26ஆம் ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும், முத்தமிழ்ப் பேரவையின் விழாவில் நான்தான் கலந்துகொண்டு விருதுகளைத் தொடர்ந்து இன்றளவும் வழங்கி வருகிறேன். முத்தமிழ்ப் பேரவையின் முதல் இசை விழா, அதே மயிலையில் உள்ள ஆர்.ஆர். சபாவில் என் தலைமையிலே தான் நடை பெற்றது.

அந்த விழா தொடங்கியபோது, அந்த விழாவிலே என்னுடன் கலந்து கொண்ட வழுவூர் ராமையா பிள்ளை, மதுரை சேதுராமன் - பொன்னுச்சாமி, குளிக்கரை பிச்சையப்பா, திருவீழிமிழலை சகோதரர்கள், மதுரை சோமு என்ற வயது முதிர்ந்த இசைமேதைகள் எல்லாம் அதிலே கலந்து கொண்டார்கள். முத்தமிழ்ப் பேரவையின் 26ஆம் ஆண்டு விழாவில், ராஜரத்னா விருதை ஆண்டாங் கோவில் ஏ.வி. செல்வரத்தினம் அவர்களுக்கும், இயல் செல்வம் விருதை எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும், இசைச் செல்வம் விருதை டி.வி.

சங்கர நாராயணன் அவர்களுக்கும், நாட்டியச் செல்வம் விருதை ஈ.வி. சரோஜா ராமண்ணா அவர்களுக்கும், தவில் செல்வம் விருதை மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன் அவர்களுக்கும் வழங்கினேன். முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் டாக்டர் இசைப் பேரறிஞர் என். ரமணி வரவேற்புரையாற்றினார். சங்கீத கலாநிதி தஞ்சாவூர் டி.கே.மூர்த்தி விழாவிற்குத் தலைமை வகித்தார். ★ ★ ★ சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் பலவற்றில் நான் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.

முன்னாள் தலைமை நீதிபதி, திரு. பு.ரா. கோகுல கிருஷ்ணன் தீவிர சுயமரியாதைக்காரர். என்மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும், தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு, 'முரசொலி'யில், தான் படித்த என்னுடைய பேச்சுக்களைப் பற்றியோ, கட்டுரைகளைப் பற்றியோ பேசிடுவார். மணவழகர் மன்றத்தின் தலைவராக அவர் இருக்கும்போதெல்லாம் அடிக்கடி என்னை அழைக்க அவர் தவறியதில்லை. 3-2-2002 அன்று மாலையில், மணவழகர் மன்றத்தின் 45வது ஆண்டு விழா சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

அந்த விழாவிலும் கலந்து கொண்டு உரையாற்றினேன். நமது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் "ஆத்திகப் பெரியார்" எனும் தலைப்பிலும், காவியக் கவிஞர் வாலி அவர்கள் "மூன்றெழுத்து முனிவர்" என்ற தலைப்பிலும் அங்கே உரையாற்றினர். ★ ★ ★ பிப்ரவரி 3ஆம் நாள் - நாம் மறக்க முடியாத நாள் அல்லவா? அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். ஒவ்வொரு ஆண்டும், கழகத்தின் சார்பில் என்னுடைய தலைமையில், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஆனால், 2002ஆம் ஆண்டு அமைதி ஊர்வலத்திற்கு என்ன காரணத்தாலோ அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அதன் காரணமாக 3-2-2002 அன்று காலை 7 மணி அளவில், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் நானும், பொதுச் செயலாளரும் மற்றும் கழகத்தினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அது போதாதா? அதிகாலை ஆறு மணியில் இருந்தே, ஆயிரக் கணக்கான கழகத் தோழர்கள் அங்கே திரண்டு விட்டனர். நானும், பொதுச் செயலாளரும் மற்றும் கழக முன்னணியினரும் அங்கே சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.

★ ★ ★ 2002ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தி.மு. கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்த கழகப் பொதுக்குழு உறுப்பினருமான எம்.கே.பாலன் காலையில் நடைப்பயிற்சிக்காகச் சென்றவர், இல்லம் திரும்பவே இல்லை. சைதாப்பேட்டை தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது என்றதும், அங்கே போட்டியிடுகின்ற எண்ணத்தோடு ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டிருந்தார். அன்றைய தினம், அவர் அதிகாலையில் வீட்டிலிருந்து வழக்கம்போல நடைப்பயிற்சிக்காகச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் இல்லம் திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர், மகன் மணிமாறன் ஆகியோர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். பாலனை சி.பி., சி.ஐ.டி. போலீசார் பிடித்துச் சென்றிருப்பதாகவும், அண்ணா நகர், திருமங்கலம் காவல் நிலையங்களில் வைத்து அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாகவும் வந்த தகவல்களின் அடிப்படையில், அங்கே சென்று பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. தன் தந்தையை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, அவருடைய மகன் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

பாலனைத் தேடும் பொறுப்பை சி.பி., சி.ஐ.டி., போலீசார் ஏற்றனர். வழக்கும் சி.பி., சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. பாலன் கொடைக்கானலில் வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அங்கு சென்றும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. திடீரென்று பாலன் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதைப் பற்றி அப்போதே "பாலா! என்ன நடக்கிறது இந்த நாட்டில்?"

என்று "முரசொலி"யில் உடன்பிறப்பு மடல் ஒன்று எழுதினேன். பாலனின் மறைவினை ஆட்சியாளர்கள் மறைத்தே விட்டார்கள்! ★ ★ ★ என்னுடைய அன்புப் பேரனும், தம்பி ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் மணவிழா அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மணமகள் காரைக்குடி சண்முகநாதபுரம் சேவு இராமசாமி அவர்களின் அருமைச் செல்வி கிருத்திகா. மணப்பெண்ணை நானோ, ஸ்டாலினோ கண்டு பிடிக்கவில்லை. மணமகன் உதயநிதியே கண்டுபிடித்து, காதலித்தவர்.

எங்களிடம் தகவல் தந்தார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம்

. முதல் நாள் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநராக இருந்த ராம்மோகன் ராவ், மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ப. சிதம்பரம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, இயக்குனர் கே.பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ராதிகா, சரத்குமார், ஏ.வி.எம். சரவணன், ஆர்.எம். வீரப்பன், த.மா.கா. தலைவர் தம்பி வாசன் மற்றும் சான்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

25-2-2002 அன்று காலையில் மணவிழா இனமானப் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது. நான் முன்னிலை வகித்தேன். தம்பி முரசொலி மாறன் வரவேற்புரையாற்றினார். மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பய், குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் ஆகியோர் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திகளை மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு படித்தார். மணமக்களை வாழ்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கலைஞானி கமலஹாசன், ஆந்திர மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.ஆர்.

லெட்சுமணன், குஜராத் மாநில உயர் நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டி யன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் எம்.பி., பேராயர் எஸ்றா சற்குணம், ஏ.எஸ். பொன்னம்மாள், சி.ஐ.டி.யு., மாநிலப் பொதுச் செயலாளர் டி.கே. ரெங்கராஜன், முன்னாள் எம்.பி., நடிகை வைஜயந்திமாலா, அண்ணா அவர்களின் புதல்வர் டாக்டர் சி.என்.ஏ. பரிமளம், இயக்குனர் முக்தா சீனிவாசன், த.மா.கா.

முன்னாள் எம்.எல்.ஏ. ச. அழகிரி, பா.ஜ.க. முன்னணித் தலைவர் ச. திருநாவுக்கரசர், எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் இரா. திருமாவளவன், எம்.எல்.ஏ., காவியக் கவிஞர் வாலி, பாடகி எஸ். ஜானகி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், நடிகை சௌகார் ஜானகி, நடிகர் ஆனந்தராஜ், நடிகை ராதிகா சரத்குமார், கவிப்பேரரசு வைரமுத்து, கழகப் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் உரையாற்றிய பிறகு, இறுதியாக பொதுச் செயலாளர் பேராசிரியர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

நான் நன்றியுரை ஆற்றினேன். மேலும், மணவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே. வாசன், தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் கலந்து கொண்டார்கள். ★ ★ ★ 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான "பூரணாகுதி" நடந்தது. அதில் பங்கேற்பதற்காக 300க்கும் அதிகமான கரசேவகர்கள் ஆமதாபாத்திலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அயோத்திக்குச் சென்றனர்.

அயோத்தியில் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பின்னர், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர்கள் ஆமதாபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 27-2-2002 அன்று காலை 8 மணி அளவில், கோத்ரா ரயில் நிலையத்துக்கு அந்தப் புகைவண்டி வந்தது. அப்போது போராட்டக்காரர்கள் அந்த ரயிலில் ஏறினார்கள். கரசேவகர்கள் பயணம் செய்த இரண்டு ரயில் பெட்டிகள்மீது பெட்ரோல் குண்டுகளையும், அமில குண்டுகளையும் சரமாரியாக அவர்கள் வீசினார்கள்.

அதில் அந்த இரண்டு பெட்டிகளும் எரிந்து நாசமாயின. அந்தத் தாக்குதலில் கரசேவகர்கள் 59 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கை விடுத்தேன். அந்த அறிக்கையில் - ✽ "பத்தாண்டுகளுக்கு முன்பு 1992இல் அயோத்தியில் பற்ற வைக்கப்பட்ட தீ, உருவாகியுள்ள சூழலில் இந்திய பூபாகம் முழுவதும் எரிமலைத் தீயாகப் பீறிட்டுக் கிளம்பி விடுமோ என்ற அச்சம், நாட்டு மக்களை நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவைக்குச் சென்று திரும்பிய பயணிகள், ரயில் வண்டியுடன் வைத்துக் கொளுத்தப்பட்டு, ஏதுமறியா இளங்குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் கருகிச் செத்த பரிதாபத்திற்காகக் கண்டனக் குரல்களும், கண்ணீர் அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, கோத்ரா கொடுமையின் எதிரொலியாக, குஜராத் மாநிலமே மீண்டும் ஒரு பூகம்பத்தைச் சந்திப்பது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி.

ஈஷா ஜாப்ரியும், அவரது உறவினர்கள் 19 பேரும் வீட்டோடு வைத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட சண்டாளத்தனம் ஆமதாபாத்துக்கு அருகில் உள்ள மேகானிநகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது எனச் செய்தி வந்துள்ளது. ரயிலில் கருகிப்போன சுமார் 60 உயிர்களை அன்னியில், குஜராத் மாநிலத்தில் வன்முறைச் செயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் முன்னூறைத் தாண்டியுள்ளது. விசுவ இந்து பரிட்சத் அறிவித்துள்ள பந்த் காரணமாக; இந்தியாவில் எத்தனை இடங்களிலிருந்து எத்தகைய செய்திகள் எல்லாம் வர இருக்கிறதோ என்று தெரியவில்லை.

✽ "இந்தப் பிரச்சினையில் சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை மக்கள் என்றெல்லாம் பகுத்துப் பார்ப்பதைவிட - எல்லோரும் இந்திய மக்கள்தான் என்ற அடிப்படையில், எந்தப் பிரிவினரானாலும் அவர்களை மொத்தமாகக் கணக்கிட்டு, அவர்களில் மதவெறிக்காக வன்முறையில் ஈடுபடுவோர் - அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வன் முறையில் ஈடுபடுவோர் - இம்மாதிரியான நெருக்கடியும் குழப்பமும் மிகுந்த சமயங்களில் கைவரிசை காட்டும் சமூக விரோதிகளாக வன்முறையில் ஈடுபடுவோர் - ஆகிய அனைவர்மீதும் பாரபட்சமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஈடுபடவேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.

நான் மாத்திரம் அறிக்கை விடவில்லை. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கண்டன அறிக்கை விடுத்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தலையங்கமே எழுதியிருந்தது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், அந்தச் சம்பவத்தைக் கண்டித்ததோடு, தேவையில்லாமல் - ✽ "பெரும்பான்மை சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்று ஏதாவது ஒரு சம்பவம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டால், எல்லா அரசியல் தலைவர்களும் ஓடிச் சென்று கண்டன அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால், அதைவிட வெறித்தனமான முறையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித்தனமாக நடந்த இந்தத் தாக்குதலைக் கண்டித்து எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை கண்டன அறிக்கை வெளியிட வில்லை. இது விநோதமாகவும், வருத்தம் அளிப்ப தாகவும் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

அயோத்தி பிரச்சினை குறித்து பிரதமரின் அறிவுறுத்தலுக்கிணங்க காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் முயற்சி எடுத்து, அங்கே சென்று, சுமுகமாகத் தீர்க்கப் போகிறார் என்றொரு செய்தி வந்தது. அதைப் பற்றி எனது கருத்தைக் கேட்டபோது, அவர் அங்கே சென்று எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. அந்த முயற்சியின் காரணமாக, இரு சாராரும் - அதாவது இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களும், வி.எச்.பி. தொடர்பான தலைவர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு சுமுகமான முடிவுக்கு வருவார்களேயானால், அதை நாங்கள் பாராட்டி வரவேற்போம்.

எங்களுடைய முக்கியமான பிரச்சினை, அயோத்தி தகராறை வைத்து மக்கள் பலர் பலியாவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கேற்ப இரு சார்புத் தலைவர்களும் கலந்து பேசி, அவர்கள் எந்த முடிவெடுத்தாலும் அது சுமுகமான இரு சாராரும் ஏற்றுக் கொள்வதற்கான முடிவாக இருக்குமானால் அது பாராட்டுக்குரியதும், வரவேற்கத்தக்கதுமாகும். அதில் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இவ்வளவு பெரிய பிரச்சினையை தமிழ் நாட்டின் சார்பாக சங்கராச்சாரியார் சென்று தீர்த்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி!"

என்று கூறினேன். "சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தால். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இருக்காது!" என்று நான் 4-3-2002 அன்று அறிவித்தேன். குஜராத் கலவரம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 427 ஆனது. குஜராத் மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்றும், குஜராத் முதல் அமைச்சராக அப்போதிருந்த நரேந்திர மோடி அவர்களை விலக்க வேண்டுமென்றும் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் அன்றாடம் பிரச்சினையை எழுப்பி குழப்பம் விளைவித்தார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. 13-3-2001 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் பூமி பூஜை நடத்த அனுமதியில்லை என்றும், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும், அப்போது இருந்த நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றும் கூறியது. 23-4-2002 அன்று மக்களவையில், துணைத் தலைவராக இருந்த திரு. பி.எம்.சய்யீத் குஜராத்தில் அமைதியை ஏற்படுத்தத்தவறிய அரசைக் கண்டிக்கும் தீர்மானம் அவை விதி எண்.

184இன் கீழ் மக்களவையில் 30-4-2002 அன்று விவாதிக்கப்படும் என்றும், அந்த விவாதத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பு ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கு பெருத்த பின்னடைவாகும். அதன் பெரும்பான்மையைச் சோதித்துப் பார்க்கும் வண்ணம் அந்த முடிவு அமைந்தது. எதிர்க்கட்சிகளுக்கு தார்மீக ரீதியில் கிடைத்த வெற்றியாக அது கருதப்பட்டது. பா.ஜ.க.வின் நிலைக்கு எதிராக இம்முடிவு இருந்தாலும், மரபு கருதி அதனை ஏற்கிறோம் என்று உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

29-4-2002 அன்று நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து திடீரென பதவி விலகினார். அவருடைய லோக் ஜனசக்தி கட்சிக்கு மக்களவையில் நான்கு எம்.பி.க்கள் இருந்தனர். அதற்கடுத்த நாள், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த வரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான உமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். "குஜராத் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது" என்று அவர் கூறினார்.

பத்து உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்று அறிவித்தது. 30-4-2002 அன்று குஜராத் விவகாரம் தொடர்பாக, மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம்மீது கடும் வாக்குவாதம் நடந்தது. பகலில் தொடங்கிய விவாதம் நள்ளிரவுக்குப் பின்னும் நீடித்தது. ஆனாலும் மக்களவையில் இந்தக் கண்டனத் தீர்மானம் தோல்வியடைந்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அரசே ஆதரவு தெரிவித்தது.

கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தளம் அமைப்பின் முக்கிய தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 62 பேர்மீது ஆமதாபாத் சிறப்பு நீதி மன்றத்தில், 2009ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான விஜய் சேத்தி உயிரிழந்து விட்டார். மொத்தம் 327 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 29-8-2002 அன்று தீர்ப்பு வெளியானது.

பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தளம் அமைப்பின் முக்கிய தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜியோத்ஸ்னா யாக்னிக், 29 பேரை குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்தார். ★ ★ ★