நெஞ்சுக்கு நீதி
கண்ணகிமீது ஏனிந்தக் காழ்ப்பு? · 381 / 391
20. கண்ணகிமீது ஏனிந்தக் காழ்ப்பு? பே ரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் கட்சி நடத்துவதோடு - ஆட்சியிலும் இருந்த அ.தி.மு.க.வினர், அந்த அண்ணாவின் விருப்பத்திற்கு எப்படிக் கேடு விளைவித்தார்கள் என்பதை விளக்க விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்து, 1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டினை சென்னை மாநகரில் சீரும் சிறப்புமாக நடத்தியபோது, பத்து சிலைகளை நிறுவினார். அதில் ஒன்றுதான் கற்புக்கரசி கண்ணகிக்கு வைக்கப்பட்ட சிலை.
அந்தச் சிலையின்மீது லாரி ஒன்று மோதியதில், சிலையின் பீடம் சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து சிலையைச் சுற்றிலும் தட்டிகள் கட்டப் பட்டிருந்தன. சிலையின் பீடத்தை சரி செய்து, மீண்டும் சிலையை உரிய இடத்தில் வைத்துவிடுவார்கள் என்று எதிர் பார்த்திருந்த நிலையில், 13-12-2001 அன்று பிற்பகலில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், கண்ணகி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொதுப் பணித்துறை அதிகாரிகளே அந்தச் சிலையை லாரி ஒன்றில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
அந்தச் சிலை இருந்த பீடத்தை பணியாளர்கள் கடப்பாரையால் இடித்து உடைத்தனர். சிலை அகற்றப்பட்டது குறித்து, அப்போது கண்ணகி சிலை வைக்கப் பட்டிருந்த இடம் வாஸ்து முறைப்படி ஆட்சியாளர்களுக்கு சரியாக இல்லை என்றும், கோபத்துடன் கண்ணகி விரல் காட்டுவதைப்போல சிலை இருந்ததால், முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அனைத்து முயற்சிகளிலும் தடைகள் ஏற்பட்டன என்றும், அந்தக் காரணத்தால்தான் அந்தச் சிலை அகற்றப் பட்டுவிட்டது என்றும் கூறப்பட்டது.
கண்ணகி சிலையை அகற்றியது தமிழர்களின் மானத்திற்கும், மரியாதைக்கும் விடப்பட்ட அறைகூவல் என்றும், அந்தச் சிலையை உடனடியாக அதே இடத்தில் வைக்க வேண்டு மென்றும் அறிக்கை ஒன்றினை நான் விடுத்தேன். அகற்றப்பட்ட கண்ணகி சிலையினை வேறு ஏதோ ஓர் இடத்தில் வைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையொட்டி, கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டுமென்று கோரிய வழக்கில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணியம் ஆகியோர், கண்ணகி சிலையை வேறு இடத்தில் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே 22-12-2001 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், தமிழ்ச் சான்றோர்களைக் கொண்ட ஒரு கலந்தாய்வுக் கூட்டம், கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க என்ன செய்யலாம் என்பதைப்பற்றி ஆலோசிப்பதற்காக என் தலைமையில் கூடியது. அந்தக் குழுவின் சார்பில், 5-1-2002 அன்று சென்னை கடற்கரை, சீரணி அரங்கில், என்னுடைய தலைமையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் அனைத்துக் கட்சியினர், அறிஞர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இறுதியில் நான் உரையாற்றும்போது, "கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கின்ற வரையில் தமிழர்களின் போராட்டம் ஓயாது!" என்று தெரிவித்தேன். கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்திட அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மறுத்த காரணத்தினால், சென்னை தேனாம்பேட்டை "அன்பகம்" முகப்பில், கழகத்தின் சார்பில் சிலை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். அதுபோலவே, ஜனவரி 12ஆம் தேதி கழக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கற்பின் கொழுந்து, பொற்பின் செல்வி கண்ணகி சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், சிலையினை நான் திறந்து வைத்தேன். கழக இளைஞரணிச் செயலாளர் தம்பி மு.க.ஸ்டாலின் விழாவிற்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து, அந்த விழாவினை முன்னின்று நடத்தியதோடு, விழாவில் வரவேற்புரையும் ஆற்றினார். கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை, அ.தி.மு.க. ஆட்சியினரால் அகற்றப்பட்டது பற்றியும், மீண்டும் அந்தச் சிலையினை வைக்க அ.தி.மு.க. அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலன் தராததுபற்றியும், அதற்குப் பிறகு கழக இளைஞர் அணியின் சார்பில், கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் அந்தச் சிலை வைக்கப்படுவது பற்றியும் நான் எனது உரையில் சுருக்கமாகக் கூறினேன்.
★ ★ ★ 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியில் தொழிலாளர்களுக் கெல்லாம் ஆண்டுதோறும் முறைப்படி போனஸ் வழங்கப் பட்டு வந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பதவியேற்றதும், போனஸ் 20 சதவிகிதம் கொடுக்க மறுத்த காரணத்தால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இருபது சதவிகித போனசை வழங்கக்கோரி, 23-11-2001 அன்று முதல் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்புக் கொடுத்திருந்தனர்.
கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இருபது சதவிகித போனசைவிட அதிகமாக போனஸ் தரப்பட வேண்டுமென்றுகூட தொழிலாளர்கள் அப்போது கோரிக்கை வைக்கவில்லை. கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இருபது சதவிகித போனசையாவது வழங்குங்கள் - என்றுதான் போராடினார்கள். ஆனால், அ.தி.மு.க. அரசு இருபது சதவிகித போனஸ் தரமுடியாது, 8.33 சதவிகித போனஸ்தான் தர முடியுமென்று அறிவித்தது. அதனை எதிர்த்து, தமிழகம் முழுவதிலும் உள்ள 1.25 இலட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 9-11-2001 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.
அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றபோது, அ.தி.மு.க. அரசின் காவல்துறை அவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலே அடைத்தது. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டனர். அப்போது தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர்ச் செல்வமும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் தொழிற் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்விதான் ஏற்பட்டது. போராட்டத்தின் ஒரு கட்டமாக 23-11-2001 அன்று தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்திட முடிவு செய்தார்கள்.
20-11-2001 அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் என்னைச் சந்தித்து, 23ஆம் தேதிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். நான் அவர்களிடம் "அரசின் நிதி நிலையை உத்தேசித்து இருபது சதவிகித போனசில் பத்து சதவிகிதத்தை உடனடியாகப் பெற்றுக் கொண்டு, மீதி பத்து சதவிகித போனசைத் தவணையில் பெற்றுக் கொள்ளலாமே!"
என்று கேட்டபோது, தொழிற்சங்கத் தலைவர்கள் அதற்கும் ஒப்புக் கொண்டார்கள். எனவே அரசும் இறங்கி வந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டுமென்று அறிக்கை ஒன்றும் கொடுத்தேன். அதன் பின்னரும், அ.தி.மு.க. அரசு இறங்கி வர முன்வராததால், தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தி.மு.கழகம் ஆதரிக்குமென்று அறிவித்தேன். 23ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் வெற்றியோடு நடந்தது. பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் எல்லாம் மூடிக்கிடந்தன.
போனஸ்பற்றி ஜெயலலிதா கூறும்போது, "போனஸைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். போனஸ் என்பது என்ன? முதன் முதலாக போனஸ் என்பது எப்படி வந்தது? ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்கி லாபம் சம்பாதித்தால், அந்த லாபம் முழுவதுமே உரிமையாளர்களுக்குப் போவது நியாயம் அல்ல என்ற கருத்து இருந்தது. அந்த நிறுவனத்திற்கு அந்த லாபத்தை ஈட்டித் தருபவர்கள் யார்? அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள்! ஆகவே, போனஸ் என்பது ஒரு நல்லெண்ணத்தின் அடையாளமாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு - அவ்வளவு லாபத்தை ஈட்டித் தந்த ஊழியர்களுக்கு - அந்த லாபத்தில் பங்கு தருவதுதான் போனஸ்!
போனஸ் என்பதே ஒரு நல்லெண்ணத்தின் அடையாளம். ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை - எங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று கேட்டால் அது எப்படி நியாயம் ஆகும்? அப்படித்தான் இன்றைக்கு அரசின் நிலையும் இருக்கிறது" என்று வாதிட்டார்.
அ.தி.மு.க. அரசுக்கு - குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எப்போது ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்தாலும், மின் கட்டணத்தை உயர்த்துவது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது - வரிகளை உயர்த்துவது - என்றால் எப்படித்தான் இனிக்குமோ, அதிலே மிகுந்த அக்கறை செலுத்துவார். அது போலவேதான் 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும், 28-11-2001 அன்று மின் கட்டணம், பஸ் கட்டணம் போன்றவைகளைக் கடுமையாக உயர்த்தி அறிவித்தார். வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்குப் பொது விநியோகத் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் அரிசியின் விலை ரூ.3.50 என்பது ஒன்பது ரூபாயாக உயர்த்தப் பட்டது.
பேருந்துக் கட்டணங்கள், பால் விலை போன்றவைகளும் உயர்த்தப்பட்டன. மோட்டார் வாகன வரி அதிகரிக்கப் பட்டது. வீடு, ஆலைகளுக்கான மின் கட்டணமும் உயர்த்தப் பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு படிப்புக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. உயர் கல்வித் துறைக்காக அரசு செய்யும் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், மாணவர்களுக்கான கட்டணங்களை உயர்த்தும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு அறிவித்தது.
டீசல், பர்னஸ் ஆயில், லோ சல்பர் ஹெவிஸ்டாக், சிமெண்ட் ஆகியவற்றின்மீது நுழைவு வரி விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சமையல் எண்ணெய், பருத்தி பின்னலாடை, கணினி மென்பொருள் ஆகிய மூன்றுக்கும் 4 சதவிகித சமச்சீர் தலவரி விதிக்கப்படும் என்றும் - யூரியா உரத்துக்கு சமச்சீர் தலவரி 2 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் - அயல் நாட்டு மதுவகைகள் மீதான விற்பனை வரி உயர்வு 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் - காஸ்டிக் சோடா, காற்றழுத்த விளக்குகள் போன்ற சில பொருட்களுக்கு 11 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக வரி உயர்த்தப்படும் என்றும் - அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அடுத்து, அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்தாண்டுகளில் 30 சதவிகிதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அரசு ஊழியர் எண்ணிக்கையை இரண்டரை லட்சம் பேராகக் குறைத்திட முடிவு செய்தார்கள். அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள் ஆகியவற்றில் உள்ள பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அமல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைப்பற்றியெல்லாம் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "சட்டப் பேரவை நடக்கும்போதோ, அல்லது பேரவையைக் கூட்டியோ அறிவித்திருக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள், குறிப்பாக கொள்கை அடிப்படை ஆனவைகூட ஏறத்தாழ ஒரு பட்ஜெட் அறிவிப்புப்போல இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கும், இந்த ஆட்சியை அமர்த்திய வாக்காளப் பெருமக்களுக்கும் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்" என்று கூறினேன்.
30-11-2001 அன்று "தினமணி" நாளிதழ் "கூடுகிறது எளிய மக்களின் சுமை" என்ற தலைப்பில் இக்கட்டண உயர்வுகளையெல்லாம் கண்டித்துத் தலையங்கம் தீட்டியது. "இந்து" ஆங்கில இதழில், "எகனாமிக் அவுட்லுக்" என்ற பகுதியில், எஸ்.சுவாமி நாதன் ஒரு விமர்சனக் கட்டுரையையும் எழுதியிருந்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஜெயலலிதா 30-11-2001 அன்று விடுத்த அறிக்கையில், "தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கட்டண உயர்வு, விலையேற்றம், நிதி நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, சில அரசியல் கட்சித் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.
தமிழகப் பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குக் காரணங்கள் என்னவென்பதை பிற கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்" என்று சொல்லியிருந்தார். எனவே, இவ்வாறு கட்டணங்களை உயர்த்துவது, மக்களை வருத்தி அதிலே இன்பம் காணுவது, கடந்த கால ஆட்சியினர் செய்த நல்ல காரியங்களைத் தூக்கிக் குப்பையிலே போடுவது, எதற்கெடுத்தாலும் "நான் ஆணையிட்டேன்", "எனது தலைமையிலான அரசு" என்றெல்லாம் சொல்லிக் கொள்வது - என்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கே உரிய "சாடிஸ்ட்" மனப்பான்மையாகும்.
இந்த வரலாறு காணாக் கட்டண உயர்வுகளைக் கண்டித்து, தமிழகத்தில் 7-12-2001 அன்று முழு அடைப்பு நடத்துவதென, 3-12-2001 அன்று கழகத் தலைமைச் செயற்குழு முடிவெடுத்து, அவ்வாறே முழு அடைப்பு நடைபெற்றது. முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று, அதன் காரணமாக 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ★ ★ ★ அ.திமு.க. ஆட்சியிலே இருந்த 1991-1996ஆம் ஆண்டுக் காலத்தில், முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசுக்குச் சொந்தமான நிலத்தை, அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு விற்க வழி வகுத்தார், அதனால் அரசுக்கு ரூ.4.16 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சி.பி.
சி.ஐ.டி. போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 120 பி (கூட்டுச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 169 (அரசு சொத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (சி) (டி) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றச் சாட்டுக்கு உள்ளான அனைவருக்கும் தண்டனை வழங்கினார், மூன்றாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன்! ஜெயலலிதாவுக்கு ஒரு வழக்கில் மூன்றாண்டுகளும், மற்றொரு வழக்கில் இரண்டாண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசன்ட் ஸ்டே ஓட்டலில் ஏழு மாடிகள் கட்டுவதற்கு அனுமதி அளித்ததாக, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாமீதும், மற்றவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இத்தீர்ப்புகளை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்பு மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. 5 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அந்த நிலையில், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென்று கோரி, மூத்த வழக்கறிஞர் வெங்கடபதி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணை ஆவணங்களை முழுமையாகப் படிக்கத் தனக்கு அவகாசம் அளிக்கவில்லை என்று அவர் புகார் கூறியிருந்தார்.
அதையடுத்து வழக்கை விசாரிக்க வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து டான்சி, பிளசன்ட் ஸ்டே வழக்குகளை விசாரிக்க நீதிபதி என்.தினகர் நியமிக்கப்பட்டார். 1-10-2001இல் விசாரணை தொடங்கியது. மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற விசாரணை 1-11-2001இல் முடிவடைந்தது. டான்சி வழக்கு விசாரணை முடிந்த பின்னர், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு விசாரணை நடைபெற்று, 21-11-2001இல் முடிவடைந்தது.
4-12-2001இல் வழங்கப்பட்ட தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம், தனி நீதி மன்றங்கள் விதித்த தண்டனையை ரத்து செய்து, அனைவரையும் விடுவி
த்தது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி என்.தினகர் கூறினார். இதன் காரணமாகத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது. நீதிபதி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பினைப் படிக்க ஆரம்பிப் பதற்கு முன்பே, உயர் நீதிமன்றம் முழுவதிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்திருந்தனர் என்றும், நீதிபதியின் அறையினுள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு நெரிசல் இருந்தது என்றும், தீர்ப்பு படிக்கப்படும்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன என்றும் - மறுநாள் ஏடுகளில் செய்திகள் வந்தன.
போயஸ் தோட்டம், தலைமைச் செயலகமானது என்று செய்தி வெளியிடுகின்ற அளவிற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டார்கள். 5-12-2001 அன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 1-12-2001 அன்று உயர்த்தப்பட்ட பேருந்து, மின் கட்டணங்களை ஓரளவிற்குக் குறைத்து அறிவித்தார். அதுபோலவே ரேஷன் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் விலைகளையும் பழைய விலைகளுக்கே மாற்றினார்.
இந்தச் செய்திகள் வந்ததுமே, இடைத் தேர்தல் வரப் போகிறது - அதிலே ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்று மக்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டனர். தீர்ப்புபற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "நீதியைப் பெற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்" என்று கூறினேன்.
"கடவுளின் கருணையால் வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ளேன்" என்று ஜெயலலிதா கூறினார். டான்சி வழக்கில், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது உயர் நீதிமன்றத்தால் 4-12-2001 அன்று விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ஜனதா கட்சித் தலைவர் திரு. சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றினை 7-1-2002 அன்று தாக்கல் செய்தார். கழகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தம்பி ஆலந்தூர் பாரதியும் டான்சி நில பேரம் மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுக்கள்மீதான விசாரணை 18-1-2002இல் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. ஆர்.எஸ். பாரதியின் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் சிறப்பு அனுமதி மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், ஜெயலலிதா முதலமைச்சர் பதவி வகிக்கத் தடை விதித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மனு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் சுப்பாராவ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு 5-2-2002 அன்று விசாரணைக்கு வந்து, நீதிபதிகள் அந்த மனுவினைத் தள்ளுபடி செய்தார்கள். ★ ★ ★ இந்திய நாட்டின் உயரிய அதிகாரபீடமான டெல்லி நாடாளுமன்றத்தில், பயங்கரவாதிகளின் தற்கொலைப் படையினர் புகுந்து வெடிகுண்டுகளை 13-12-2001 அன்று வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்றது. பயங்கரவாதிகள் ஆறு பேர் இருந்த டி.எல். 3 சி.ஜே. 1527 என்ற எண்களைக் கொண்ட வெள்ளை நிற அம்பாசிடர் கார் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காலையில் மிக வேகமாக நுழைந்தது.
சைரன் இயக்கப்பட்ட நிலையிலே படுவேகமாக வந்த அந்தக் காரில் நாடாளுமன்றம், உள்துறை அமைச்சகம் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. விஜய் சௌக் எதிரே உள்ள வாயில் வழியே நுழைய முயன்றபோது, எதிரே அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த கிருஷ்ண காந்த் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவருடன் வேறு சில கார்களும் வந்தன. அதில் ஒன்றில், பயங்கரவாதிகளின் கார் மோதியது. இதையடுத்து போலீசார் எச்சரிக்கையாயினர்.
அந்தக் காரை மடக்க முயன்றனர். திடீரென்று காரிலிருந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்குப் பாதுகாவல் படை ஜவான்களும் திருப்பிச் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகளில் ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்தார். பிரதான வாயிலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இறந்து போனார். இந்தப் பயங்கரச் சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு ராணுவம் உடனே வரவழைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்தபின் நாடாளு மன்றத்துக்குள் இருந்த அமைச்சர்களும், உறுப்பினர்களும் பின்னர் உரிய இடங்களுக்கு பஸ்களில் பத்திரமாகக் கொண்டு விடப்பட்டனர். காலையில் 11 மணி அளவில் நாடாளுமன்றம் கூடியவுடன், இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சவப் பெட்டிகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்காக அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலக வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டன. பிரதமர் வாஜ்பய், சோனியா இருவரும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில்தான் - அதாவது 11.40 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்றது. வாஜ்பய், சோனியா காந்தி, அமைச்சர்கள் எல்லாம் இந்தச் சம்பவத்தில் தப்பினர்.
சம்பவம் நடைபெற்றபோது, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்குள் இருந்தனர். இந்தச் சம்பவத்தில் ஐந்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தவிர, தீவிரவாத தற்கொலைப் படையினரின் தாக்குதலில் ஆறு காவலர்கள், ஒரு தோட்டக்காரர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். செய்தியாளர்கள், காவல் துறையினர் உட்பட தீவிரவாதிகள் அல்லாத மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமருக்கு நான் உடனடியாக அனுப்பிய தந்தியில், அவரும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பியது பெரும் நிம்மதி அளிக்கிறது - என்று தெரிவித்தேன். பிரதமர் வாஜ்பய் குடியரசுத் தலைவரைச் சந்தித்து உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் "லஷ்கர் - இ - தொய்பா" தீவிரவாத அமைப்புதான் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம் கூறினார்.
தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஆறாவது பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டான். ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த அவன் மிக முக்கியமான தகவல்களைப் போலீசாருக்குத் தெரிவித்தான். ஜெய்ஷ் - இ - முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பாகிஸ்தானியர்தான் டெல்லியில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப் பட்டது. அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு உதவி செய்தது.
அந்தத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டெல்லி பேராசிரியர் ஏர். ஜிலானி பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்திருந்தார். ★ ★ ★ அ.தி.மு.க.வும், த.மா.காவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் மறைவை அடுத்து, அந்த இடம், மூப்பனார் அவர்களின் திருமகனும், த.மா.கா. தலைவருமான தம்பி ஜி.கே. வாசனுக்கு அந்தக் கூட்டணியின் சார்பில் வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.மு.க.
சார்பில், மாநிலங்களவை வேட்பாளராக டாக்டர் வா. மைத்ரேயன் ஜெயலலிதாவினால் 27-12-2001 அன்று அறிவிக்கப்பட்டார். அந்த திடீர் அறிவிப்பு த.மா.கா.வினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோலவே சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் நடைபெறவிருந்த மூன்று தொகுதிகளிலும், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், தோழமைக் கட்சிக்கு எந்தத் தொகுதியும் விட்டுத் தரப்படமாட்டாது என்றும் அ.தி.மு.க.
முடிவெடுத்தது. 12-1-2002 அன்று சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் அரசியல் விவகாரக் குழு மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்று, இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்து அறிவித்தார்கள். அ.தி.மு.க.வின் முக்கியக் கூட்டணியாக அதுவரை இருந்து வந்த த.மா.கா., அந்தக் கட்சியோடு உறவை முறித்துக் கொண்டது. செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறும்போது, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட மூன்று பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில், அ.தி.மு.க.வை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் அவரிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்காதது தான் காரணமா என்று கேட்டபோது, "அதற்காக இல்லை - அ.தி.மு.க.வின் மக்கள் விரோதப் போக்குகள்தான் காரணம்" என்றார். த.மா.கா.வைப்போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த மூன்று இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க.வை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். தி.மு.க. என்ன செய்தது? அடுத்த வாரம் எழுதுகிறேன். ★ ★ ★
