உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அரசியல் சட்டத்தையே மீறிய
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அரசியல் சட்டத்தையே மீறிய · 380 / 391

19. அரசியல் சட்டத்தையே மீறிய ஆளுநர் பாத்திமா பீவி! ஜெ யலலிதா அவசர அவசரமாக முதல்வராகப் பதவி ஏற்றதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.ஆர். கபூர், மனோகர்லால் சர்மா, முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் பிரதாப் சிங் சௌதாலா, தனஞ்செயன் சவுஹான், பி.எல். வதேரா ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதன்மீது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவி வகிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் "கோ வாரண்டோ ரிட்" மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஜெயலலிதாவுக்கு மூன்று வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. டான்சி வழக்கில் மட்டும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8 (3) படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இழந்து விட்டார்.

அதனால் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர். இந்த நிலையில் தேர்தலில் நிற்க தகுதியில்லாத ஜெயலலிதாவை முதல் அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது தவறு, எனவே அவர் எந்தத் தகுதி அடிப்படையில் முதலமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்று வினவ வேண்டும். அந்த மனு மீதான விசாரணை முடியும்வரை முதல் அமைச்சராக அவர் பதவி வகிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்!"

என்று கூறியிருந்தார். உயர் நீதிமன்றத்தில் அந்த மனு விசாரிக்கப்பட கால தாமதம் ஆனதால், உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக அதை விசாரிக்க வேண்டுமென்று கேட்டு ஒரு மனுவினை 18-6-2001 அன்று அவரே தாக்கல் செய்தார். "ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த ஒருவர்மேல் நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை, அரசுப் பதவியில் நீடிக்கக்கூடாது - குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைக்கக்கூடாது - தண்டனையை வேண்டுமானால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் - ஆனால் ஊழல் குற்றவாளி ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் வரை அரசு பதவியில் நீடிக்கக்கூடாது - அப்படி அமர்வதற்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.டி.

தாமஸ், எஸ்.என். வரியவா ஆகியோர் 2-8-2001 அன்று பரபரப்பான ஒரு தீர்ப்பை வேறொரு ஊழல் வழக்கிலே தெரிவித்தனர். அந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் நீடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரித்தான் பி.ஆர். கபூர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கைத் தொடர்ந்து பல வழக்கறிஞர்களும், "இந்து" போன்ற நாளேடுகளின் ஆசிரியர்களும், ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியிலே தொடருவதுபற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

2-8-2001 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டதுபோலவே 17-8-2001 அன்றும் ஒரு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி சட்டப் பேரவை உறுப்பினராக ஆகாமல் ஆறு மாதத்திற்கு மேல் அமைச்சராக ஒருவர் இருக்க முடியாது என்பதுதான் அது. பஞ்சாப் மாநில முதல் அமைச்சராக இருந்த பியாந்த் சிங் 1995இல் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில் சிக்கி பலியானார். அதையடுத்து, அவரது மகன் தேஜ் பிரகாஷ் சிங் 9-9-1995இல் பஞ்சாப் மாநில அமைச்சராக்கப்பட்டார்.

அவர், அப்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆறு மாதத்திற்குள் அவர் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி ஆகவில்லை. எனவே 9-3-1996 அன்று அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகினார். சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு 23-11-1996இல் அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதும் அவர் எம்.எல்.ஏ. இல்லை. அதை எதிர்த்து எஸ்.ஆர். சவுத்ரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், நீதிபதிகள் ஆர்.சி. லகோட்டி, கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "தேஜ் பிரகாஷ்சிங் இரண்டாவது முறையாக அமைச்சராகப் பதவியேற்றது செல்லாது" என்று தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரையில் தமிழகத்திலே அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், எம்.எல்.ஏ.வாக இல்லாத ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஆறு மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.வாக ஏதாவதொரு தொகுதியில் நின்று வெற்றி பெறவேண்டும். ஆனால் டான்சி நில ஊழல் அப்பீல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவர் எந்தவொரு தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிட இயலாது.

இந்தத் தீர்ப்பின்படி அவர் ஆறு மாதத்திற்குமேல் - மீண்டும் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு முதலமைச்சராகவும் பொறுப்பேற்க இயலாது. அரசியல் சட்டப்படி அளிக்கப்பட்டத் தீர்ப்பு மேலானதா? மக்கள் தீர்ப்பில் பெரும்பான்மை பெற்ற ஜெயலலிதா பதவியில் நீடிப்பதா? என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால் அவர்கள் அப்போது வாதாடினார். "ஜெயலலிதா சிறைத் தண்டனைப் பெற்ற போதிலும், அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று தமிழக மக்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க ஆளுநர் முயன்றிருந்தால், மக்களின் விருப்பம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்" என்றார், வேணுகோபால். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, "சட்டத்துக்கு உட்பட்டுப் பேசுங்கள். மக்கள் அளித்த தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தை விட உயர்ந்ததாக இருக்கமுடியாது. தண்டனை பெற்ற போதிலும், தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விதிக்கப் பட்ட தண்டனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான்.

கொலைக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற ஒருவர், நாளை இதேபோல தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சராகவோ முதல்வராகவோ வரக்கூடும். இது எங்கு போய் முடியும்? ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப் பட்ட ஒருவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநரை இதுவரை நாம் பார்த்ததில்லை. (அப்போது ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பாத்திமா பீவியும் ஒரு நீதிபதிதான்) நமது அரசமைப்புச் சட்டம் இப்படியொரு சூழ்நிலை ஏற்படும் என்று நினைத்ததில்லை.

இதுபோன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்றத் தீர்ப்பையும் நாம் இதுவரைப் பார்த்ததில்லை. எனவே இதைப் புதிய கோணத்தில் நாம் அணுக வேண்டும்!" என்றார்கள். வேணுகோபால்:- அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் தங்கள் தலைவராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதை நாம் மதிக்க வேண்டும். நீதிபதி பரூச்சா :- அதே நேரத்தில் அவர்களது செயல் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக இருக்கக்கூடாது. வேணுகோபால் :- ஜெயலலிதாவுக்கு நியாயமற்ற முறையில் தண்டனை வழங்கப்- பட்டிருப்பதாகத் தமிழக மக்கள் கருதினர்.

அதனால்தான் அவரை ஆதரித்து தேர்தலில் வாக்களித்துள்ளனர். நீதிபதி பரூச்சா :- நாங்கள் உங்கள் வாதத்தைத்தான் கேட்கிறோமே தவிர, தமிழக மக்களின் வாதத்தைக் கேட்க வில்லை. மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள் என்பதற்காக அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி வீசிவிடலாமா? இதுபோன்ற வாதத்தை முன்வைப்பது ஆபத்தானது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து ஆகும்வரை ஜெயலலிதா காத்திருந்திருக்க வேண்டும். - இவ்வாறு நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் 21-9-2001 அன்று தீர்ப்பு அளித்தது.

ஐந்து நீதிபதிகளும் ஒருமித்தக் கருத்தைத் தெரிவித்தனர். அதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தமிழக முதல்வராக ஆளுநர் பாத்திமா பீவி நியமனம் செய்தது சட்ட விரோதமானது என்றும், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார்கள். அந்தத் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இழந்தனர். பொறுப்பிலே இருந்த தமிழக ஆளுநர் திரு. ரங்கராஜனைச் சந்தித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

அன்றைய தினமே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்று, ஓ. பன்னீர்ச் செல்வம் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு, இரவு 8.15 மணிக்கு புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. தமிழக அரசு இவ்வாறு பரபரப்பாகச் செயல்பட்ட அந்தக் காலக் கட்டத்தில், 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 - உலகம் முழுவதையும் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கிய ஒரு சம்பவம் - அன்றுதான் அமெரிக்காவில் பயங்கரவாதிகள் விமானங்களை அடுத்தடுத்து மோதி - அங்கேயிருந்த மிக உயரமான 110 மாடிக் கட்டிடங்களை எல்லாம் தகர்த்தனர்.

ராணுவத் தலைமையகத்தின்மீதே விமானம் மோதியது. இருபதே நிமிடங்களில் வானுயர எழுந்து நின்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிலே பலியாகினர். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன், இரண்டாவது பெரிய நகரம் நியூயார்க், மற்றும் பென்சில் வேனியா ஆகியவற்றின் மீது மிகப் பெரிய தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல்களில் நான்கு விமானங்கள் பயன்படுத்தப் பட்டன. 4 விமானங்களிலும் மொத்தம் 266 பயணிகள் இருந்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அந்த அப்பாவிப் பயணிகள் அனைவரும் பலியாகினர். அந்தத் தாக்குதலை அடுத்து அமெரிக்கா முழுவதும் விமானங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் நடந்தபோது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சர்வதேச பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மறுத்த போதிலும், அந்தத் தாக்குதலைத் தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

"அமெரிக்கப் படைகளிடம் இருந்து ஒசாமா பின்லேடன் தப்ப முடியாது, எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், அவர்மீது தாக்குதல் தொடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் புஷ் சபதம் செய்தார். தீவிரவாதிகளின் அந்தச் செயலை இந்தியப் பிரதமர் வாஜ்பய் வன்மையாகக் கண்டித்தார். அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் வாஜ்பாயுடன் அமெரிக்க அதிபர் புஷ் தொலைபேசியில் பேசினார். ★ ★ ★ 16-9-2001 அன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள மஸார்-இ-ஷெரீப் நகரின்மீது போர் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.

அந்த விமானங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை. அமெரிக்கா மீதான தாக்குதலில் முக்கிய குற்றவாளி எனக்கருதப்படும் ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க தலிபான் அரசிடம் பாகிஸ்தான் தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியது. அந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஒசாமா பின்லேடன் தானாக வெளியேற வேண்டுமென்று அந்த நாட்டைச் சேர்ந்த மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

"பின்லேடனை உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் - தவறினால் ஆப்கன்மீது தாக்குதல் நடத்துவோம்!" என்று அமெரிக்க அதிபர் புஷ் எச்சரித்தார். "பின்லேடனை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்" என்று தலிபான் அரசு அறிவித்தது.

★ ★ ★ 7-10-2001 அன்று ஆப்கான் தலைநகர் காபூல், காந்தகார், ஜலால்பாத் ஆகிய நகரங்களில் உள்ள தீவிரவாதிகள் முகாம், ராணுவ தளங்களைக் குறி வைத்து அரபிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க, இங்கிலாந்து போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. அமெரிக்கா இவ்வாறு தாக்குதலைத் தொடங்கியதும், தலிபான் ராணுவம் ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தினர். ★ ★ ★ இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா அவர்கள், 30-9-2001 அன்று விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவருடன் விமானத்தில் பயணம் செய்த நான்கு பத்திரிகையாளர்கள், விமானி, துணை விமானி, சிந்தியாவின் செயலாளர் ஆகியோரும் அந்த விபத்திலே பலியானார்கள். மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் மகன்தான் மாதவராவ் சிந்தியா. முதலில் ஜனசங்கத்திலும், பின்னர் பாரதீய ஜனதா கட்சியிலும் இருந்தவர் விஜயராஜே சிந்தியா. ஜனசங்கத்தின் ஆதரவுடன்தான் மாதவ ராவ் சிந்தியாவும் அரசியலில் நுழைந்தார்.

கான்பூரில் நடக்கவிருந்த காங்கிரஸ் கட்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 1971ஆம் ஆண்டு, தமிழகத்தில் கழகம் என் தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, மிகப் பெரிய வெற்றியை அடைந்த நேரத்தில்தான் மத்தியப் பிரதேசத்தில் "குணா" மக்களவைத் தொகுதியில் ஜனசங்க ஆதரவு பெற்ற சுயேச்சையாக மாதவராவ் சிந்தியா போட்டியிட்டு, வெற்றி பெற்று, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

★ ★ ★ 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. அணியினர் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அமர்ந்தவுடன், சூட்டோடு சூடாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்திட முடிவு செய்தார்கள். அதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, பத்தாண்டு காலத்திற்கு மேலாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களையே நடத்தவில்லை. 1996ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களையே நடத்தியது.

அப்போது அனைத்துப் பதவிகளிலும் உள்ளாட்சி மன்றங்களில் 33 சதவிகிதம் ஒதுக்கீடும் செய்தது. அதன் காரணமாக, மொத்த மிருந்த 1,16,747 நிர்வாகப் பொறுப்புகளில் 44,143 பொறுப்புகளில் முதன் முதலாக மகளிர் இடம் பெற்றார்கள். 2001இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.கழக அணியில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிடும் கட்சிகளாக தி.மு.க.வும், பா.ஜ.க.வும், பா.ம.க.வும், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வும், எம்.ஜி.ஆர்.

கழகமும், மூவேந்தர் முன்னேற்றக் கழகமும் இருந்தன. தமிழ் மாநில தேசிய லீக் மற்றும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், அந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வன்முறை வெறியாட்டம் நடத்தியது. காவல் துறையினரின் ஒத்துழைப்போடு அராஜகத்தில் ஈடுபட்டனர். கழகத்தினர் வேட்டையாடப்பட்டார்கள். "இந்து" போன்ற ஆங்கில ஏடுகள் எல்லாம், அதிகாரிகள் மிரட்டப் பட்டனர் என்றும், வாக்குச்சாவடிகள் சூறையாடப் பட்டன என்றும், ஆயுதம் தாங்கிய அ.தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினர் என்றும் எழுதின.

பேராசிரியர் தலைமையில் தோழமைக் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டும், எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஆளுங்கட்சியின் அராஜகம், அக்கிரமத்தை மீறி அந்த உள்ளாட்சித் தேர்தலில் கழகக் கூட்டணி 43 நகராட்சிகளிலும், 100க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும் வெற்றிப

ெற்றது. சென்னை மேயர் தேர்தலில் கழக வேட்பாளர் தம்பி மு.க.ஸ்டாலின் தன்னை அடுத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளரைக் காட்டிலும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அதிலுங்கூட, வாக்கு எண்ணுமிடத்தில் அ.தி.மு.க.வினர் நுழைந்து அதிகாரிகளின் துணையோடு கழக வெற்றியை மாற்றி அறிவித்திட முயற்சித்தனர். அதுபோலவே, மதுரை மாநகராட்சி மன்ற மேயர் தேர்தலிலும் கழக வேட்பாளர் செ.

இராமச்சந்திரன், செல்லூர் ராஜுவை விட 27,849 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். 1996ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்திய போது சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் தி.மு. கழகமும், திருச்சி, கோவை மாநகராட்சிகளில் கழகக் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கு ஒரு மாநகராட்சிகூடக் கிடைக்கவில்லை.

ஆனால், 2001ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினையேற்ற அ.தி.மு.க., உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தினால், தி.மு.க.விற்கு ஒரு மாநகராட்சி மன்றம் கூடக் கிடைக்காது என்றெண்ணி, நடத்திய அந்தத் தேர்தலில், சென்னை, மதுரை ஆகிய இரண்டு முக்கிய மாநகராட்சிகளைக் கழகம் கைப்பற்றியது, பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. அதுபோலவே 1996ஆம் ஆண்டு நடத்திய உள்ளாட்சித் தேர்தலில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கு 8 நகராட்சிகள் மட்டுமே கிடைத்ததற்கு மாறாக, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.

கழகக் கூட்டணிக்கு 43 நகராட்சிகளில் வெற்றி கிடைத்தது. எந்த அளவிற்கு வாக்கு எண்ணிக்கையின்போது தவறுகள் நடந்தது என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு கூற வேண்டுமேயானால், 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் செல்லாத வாக்குகள் 13 ஆயிரம்தான்! ஆனால் 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தலை நடத்தியபோது சென்னை மாநகராட்சியில் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 42,314. உள்ளாட்சித் தேர்தலில், கழகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு "அராஜக இருட்டுக்குள் ஜனநாயக அகல் விளக்கு ஏற்றிய தமிழக வாக்காளர்களுக்கு தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன்" என்று நான் அப்போது எழுதினேன்.

25-10-2001 அன்று சென்னை மாநகர மேயராகத் தம்பி ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் பதவியேற்றார். அதே நாளில் மதுரை மாநகராட்சி மேயராக செ. ராமச்சந்திரன் பதவியேற்றார். இருவரும், பதவியேற்ற மறுநாளே, அப்போது முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். உள்ளாட்சித் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிச் செய்திகளுக்கிடையே கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் - வரலாற்றுச் சான்றுகளுடன் கடல் மடை திறந்தாற்போல் சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவரும் - நாடாளுமன்ற, சட்ட மன்றங்களில் ஆக்கபூர்வமான அரிய கருத்துக்களை எடுத்துரைத்தவரும் - என்னுடைய அன்பு உடன்பிறப்புகளில் ஒருவருமான தம்பி சி.டி.தண்டபாணி 28-10-2001 அன்று காலையில் மறைந்து விட்ட செய்தி வந்தடைந்தது.

கழகத்தின் சார்பில் அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். அதே நாள் பகல், மதியம் ஒன்றரை மணி அளவில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்த மற்றொரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் தோன்றி என் விழிகளில் வேல்களைப் பாய்ச்சியது. பாகிஸ்தானில் உள்ள பாவல்பூர் நகரத்துக் கிறித்தவ தேவாலயத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர் என்றும், அவர்கள் ஏந்தியிருந்த துப்பாக்கிகளால் அந்தத் தேவாலயத்தில் குழுமியிருந்தோர்மீது சுட்டார்கள் என்றும், அந்தக் கோரத்தாக்குதலில் சுருண்டு விழுந்து மாண்டோர் 18 பேர்களின் சவங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்த அந்தச் செய்தி என் செவிகளுக்கு இடி முழக்கமாயின.

அதற்குமேல் ஒரு பிடி உணவுகூட அருந்திட இயலவில்லை. அசைவற்ற நிலையில் சற்று நேரம் இருந்து, பின்னர் எழுந்து கை கழுவினேன். அந்தத் தீவிரவாதக் கொடுமை தனது வெறிகொண்ட நகங்களை பாகிஸ்தானின் பாவல்பூர் தேவாலயத்தில் நீட்டியிருப்பது போலத்தான், அக்டோபர் முதல் தேதியன்று இந்தியாவில் காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவையைத் தகர்க்க திட்டமிட்டு, "ஜெய்ஷ்-இ-முகம்மது" என்ற பயங்கரவாத அமைப்பின் பெயரால், "டாட்டா சுமோ"வைக் கொண்டு வெடி குண்டுகளால் கட்டிடப் பகுதிகளைத் தகர்த்து, 26 பேரைச் சிதற அடித்துக் கொன்று, 40 பேரைப் படுகாயமுறச் செய்து, வன்முறைப் "பேயாட்டம்" ஒன்றை நடத்தி முடித்தனர்.

பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தைச் சேர்ந்த வஜாத் உசேன் என்ற பயங்கர- வாதியின் தலைமையில் இது நடைபெற்றதாக அப்போது அறிவிக்கப்பட்டது. ★ ★ ★ 2001ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள், முதல் வாரத்தில் சென்னை அருகே செங்குன்றத்தில் விஷச் சாராயம் குடித்து 32 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதே திருவள்ளூர் மாவட்டத்தில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் குடித்து பதினைந்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தார்கள்.

செங்குன்றம் அருகே உள்ள கோட்டூர், பள்ளிக்குப்பம், பாலவாயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 5-10-2001 அன்றிரவு கோட்டூரில் கள்ளச் சாராயம் வாங்கிக் குடித்திருக்கிறார்கள். அவ்வாறு குடித்தவர்களுக்கெல்லாம் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மட்டும் 13 பேர் உயிரிழந்தார்கள்.

"அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்ததும், கள்ளச்சாராயமும் வந்து விட்டது - கள்ளச்சாராய பலிகளும் வந்து விட்டன" என்று மக்கள் அதுபற்றி விமர்சனம் செய்தார்கள். கள்ளச் சாராயத்தை விற்றவர்கள் மாதந்தோறும் போலீசாருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாமூல் கொடுப்பதாகத் தெரிவித்தனர். அந்த விஷச் சாவுகளையொட்டி, செங்குன்றம் மற்றும் மாதவரம் மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த 15 போலீசாரும், செங்குன்றம் காவல் நிலையத்தில் வேலை பார்த்த 32 போலீ சாரும் மற்றும் 3 போலீஸ் அதிகாரிகளும் மாற்றப் பட்டார்கள்.

★ ★ ★ மீண்டும் 30-11-2001 அன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் விஷச் சாராயத்துக்கு 52 பேர் பலியானார்கள். இவைகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்குக் கொள்கை எந்த அளவிற்கு நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுகளாகும். இந்த விஷச் சாராய சாவுகள் குறித்து 1-12-2001 தேதிய "தினமணி" நாளிதழில் ஆர். உமாசங்கர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைப் படித்தாலே அப்போது அ.தி.மு.க. ஆட்சி எந்த அளவிற்கு நடை பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தக் கட்டுரை வருமாறு:- ✽ "தமிழகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், தாராளமாகக் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது - விற்கப்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது, பண்ருட்டி அருகே விஷச் சாராயத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்! மூன்று மாதங்களில் 90 பேர் பலியாகியுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் மதுவிலக்குக்கு என்று தனிப்பிரிவைக் கொண்டுள்ளது தமிழகக் காவல்துறை.

அப்படியிருந்தும், தமிழகத்தில் தாராளமாகச் சாராயம் காய்ச்சப்படுகிறது - விற்கப்படுகிறது! கள்ளச் சாராய வியாபாரிகள் - போலீசார் - அரசியல்வாதிகளுக்கு உள்ள நெருக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இது! மதுக்கடைகளில் "பார்கள்" நடத்த அனுமதி கிடையாது. ஆனாலும், பெரும்பாலும் எல்லா மதுக்கடைகளிலுமே "பார்கள்" நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மதுவிலக்குப் போலீசாருக்கு தரும் கற்பகத்தருக்களாக இந்தச் சட்ட விரோத "பார்கள்" உள்ளன.

மதுவிலக்குக் கொள்கையில் அரசுக்கு ஏன் இந்தத் தள்ளாட்டம்?" - என்று "தினமணி" அப்போது எழுதியது. 2001ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள், இரண்டாவது வாரத்தில், கத்தார் நாட்டில் தோகாவில் உலக வர்த்தக அமைப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் உலகின் 142 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் கலந்து கொண்டார்.

வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தராமல், வளர்ந்த நாடுகளுக்குச் சார்பாக அந்த மாநாட்டில் முடிவெடுக்க இருந்த நிலையில், முரசொலி மாறன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, "வளரும் நாடுகளின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு, அது தொடர்பாக இந்தியாவின் நிலையை அங்கே எடுத்து விளக்கினார்.

முரசொலி மாறனின் அந்தக் கருத்துக்கு அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு வளரும் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் எல்லாம் ஆதரவு தெரிவித்தனர். அதன் காரணமாக வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல் அளித்து, அது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டுமென்ற முடிவினை எடுத்தது. தம்பி மாறனின் அந்த நடவடிக்கை காரணமாக, இந்தியாவின் பெருமை உலக அரங்கில் பெரும் பாராட்டுக்குரியதாக அமைந்தது.

பிரதமர் வாஜ்பய் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மாறனின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தது. இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தன. இந்தியாவிற்குக் கிடைத்த அந்தப் பெரும் வெற்றியை விளக்கி செய்தியாளர்களிடம் தம்பி மாறன் உரையாற்றினார். "இந்து", "எக்ஸ்பிரஸ்", "பிசினஸ் ஸ்டாண்டர்டு" போன்ற நாளேடுகள் எல்லாம் பாராட்டித் தலையங்கங்கள் எழுதின. ★ ★ ★