உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நட்புக்கு இலக்கணம் -
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நட்புக்கு இலக்கணம் - · 379 / 391

18. நட்புக்கு இலக்கணம் - நண்பர் மூப்பனார்! ஆம் ஆண்டு, மே திங்களில் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களுக்கு ஏற்பட்ட சிறிய எலும்பு முறிவு காரணமாக, தற்காலிகமாக சிகிச்சை செய்துகொண்டு வந்தார் என்ற போதிலும், அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, மேலும் உடல் நலம் கெட்டு 31-7-2001 அன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது இரண்டு முறை நான் நேரில் சென்று உடல் நலம் விசாரித்து விட்டு வந்தேன்.

டாக்டர் தணிகாசலம் அவர்கள் அடிக்கடி தொலைபேசி வாயிலாக மூப்பனார் அவர்களின் உடல் நிலை குறித்துத் தெரிவித்து வந்தார். எனினும் கடைசிவரை அவர் உடல் நிலை தேறவே இல்லை. 30-8-2001 அன்று விடியற்காலையில், அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் இயற்கை எய்தினார். நானும், பேராசிரியர், தம்பிகள் மு.க. ஸ்டாலின், கோ.சி. மணி, துரைமுருகன், எ.வ.வேலு, சைதை கிட்டு, நடிகர் நெப்போலியன் ஆகியோரும் உடனடியாக மூப்பனார் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

சோனியா காந்தி, ஆளுநர் ரெங்கராஜன், முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், கலையுலகைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து அந்த மக்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் காமராஜர் மறைவிற்குப் பிறகு, காங்கிரஸ் இளைஞர்களின் உள்ளத்தில் இடம் பெற்ற ஒரே தலைவர் மூப்பனார். காமராஜர் எப்படி பிரதமர்களை உருவாக்கும் "கிங் மேக்கர்" என்று அழைக்கப்பட்டாரோ, அதே பெருமை மூப்பனாருக்கும் உண்டு.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ராஜீவ் காந்தி தான் அடுத்த பிரதமர் என்று முடிசூட்டி, நாட்டின் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பெருமையும் மூப்பனாருக்கு உண்டு. முரசொலி மாறன் சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தபோது, வராந்தா ஒன்றில் நான் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் வந்து அமர்ந்த மூப்பனார், பொழுது விடிகின்றவரையில், மாறன் பிழைத்துக் கொண்டார் என்று மருத்துவர்கள் வந்து சொல்கின்றவரையில் தான் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை.

★ ★ ★ 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முற்பட்டபோது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று மூப்பனார் முடிவெடுத்து, தமிழகத்திலே உள்ள அனைத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் பி.வி. நரசிம்மராவிடம் அதை எடுத்துக் கூறியும், அவர் அதனைக் கேட்காமல் பிடிவாதமாக அ.தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கூட்டணி என்று கூறிய நேரத்தில், மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, தி.மு.கழகத் துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, தி.மு.கழகத்தை ஆட்சியிலே அமர்த்த பெரும் துணையாக இருந்தார்.

"கட்சி மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கனிவு காட்டும் நட்பும் - அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அன்பு பொழிந்திடப் பழகும் உள்ளமும் - கொள்கை கோட்பாடுகள் எதுவாயிருப்பினும் அவற்றையும் கடந்த மனித நேயமும் கொண்ட என் இனிய நண்பர் மூப்பனார் அவர்களை இழந்துவிட்டேன். என்னிடமும், என் குடும்பத்தாரிடமும் அவர் வைத்திருந்த பாசமும் பரிவும் என்றைக்கும் என் நெஞ்சை விட்டு அகல முடியாதவையாகும். "தாய் மண்ணின் வரலாற்றில் மூப்பனாரின் புகழ் நிலைத்து நிற்கும்" என்று என் இரங்கல் செய்தியிலே தெரிவித்தேன்.

★ ★ ★ அரசியலில் கண்ணியமும் பெருந்தன்மையும் மிக்கவராக உண்மையாகவே வாழ்ந்து காட்டியவர் மூப்பனார். 1979ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல். அப்போது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல் அமைச்சர். அதற்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தஞ்சை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.டி.எஸ். என்று அழைக்கப்பட்ட எஸ்.டி.சோம சுந்தரம்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்று அமைச்சரானார். எனவே, அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அந்த இடத்திற்குத்தான் இடைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மத்திய அரசில் பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். தஞ்சை மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இந்திரா காந்தி போட்டியிடுவார் என்று பெரிதாக ஏடுகளில் எல்லாம் அறிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் வேட்பாளரான இந்திரா காந்தியை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். இதற்கிடையில் பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்திக்க, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். மொரார்ஜியைச் சந்தித்த பிறகு, இந்திரா காந்தியை ஆதரிப்பதற்கில்லை என்று கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆர். தெரிவித்துவிட்டார். இந்திரா காந்தியை அ.தி.மு.க. ஆதரிப்பதில்லை என்று கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆர். செய்த அறிவிப்பு காங்கிரஸ் வட்டாரத்தையே அதிர வைத்துவிட்டது.

அந்த அறிவிப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார் அல்லவா - அதற்கு அடுத்த நாள்தான் இந்திரா காந்தி டெல்லியிலிருந்து திருச்சிக்கு வந்து, தஞ்சையில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று ஏடுகளில் எல்லாம் செய்தி வந்திருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த ஜி.கே.மூப்பனாருக்கு இது ஒரு பெரிய சோதனையாக அமைந்தது. எனினும், காங்கிரஸ் வேட்பாளராக எஸ். சிங்காரவடிவேலுவை மூப்பனார் அறிவித்தார்.

அவரை எதிர்த்து தி.மு.கழகத்தின் சார்பில் அந்தத் தொகுதியில் அன்பில் தர்மலிங்கத்தை நிறுத்துவதா, எல்.கணேசனை நிறுத்துவதா என்ற பிரச்சினை ஏற்பட்டு, இறுதியாக அன்பில் அங்கே போட்டியிட்டார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நான் தஞ்சை சென்றிருந்தேன். தங்கும் விடுதியில் குளிர்பதன வசதி செய்யப்பட்ட இரண்டு அறைகள் தான் இருந்தன. மூப்பனார் ஒரு அறையிலும், எம்.ஜி.ஆரின் நண்பரான 'இதயம் பேசுகிறது' இதழ் ஆசிரியர் மணியன் ஒரு அறையிலுமாக தங்கியிருந்தார்கள்.

எனது உடல் நிலையை மருத்துவர்கள் மூலமாக அறிந்தவர்கள், அங்கே என்னை எங்கே தங்க வைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றிக் கேள்விப்பட்ட மூப்பனார், நேராக வரவேற்பு அறைக்குச் சென்று, தான் தங்கியிருந்த குளிர் பதன வசதியுள்ள அறையை எனக்கு அளிக்குமாறும், தான் பக்கத்திலே உள்ள தன் ஊரிலே உள்ள வீட்டிலே தங்கிக் கொள்கிறேன் என்றும் பரந்த மனப்பான்மையோடு தெரிவித்து விட்டு, என்னிடமும் வந்து தன்னுடைய அறையிலே என்னைத் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். தேர்தல் களத்திலே எதிரும் புதிருமாக போட்டியிட்ட அந்த நேரத்திலேகூட மூப்பனார் அந்த அளவிற்குப் பெருந்தன்மையோடு என்னிடம் நடந்து கொண்டார்.

அரசியலில் அந்த அளவிற்கு கண்ணியம் காத்த மூப்பனாரின் நினைவுகள் என்றைக்கும் என் நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளாகும்! ★ ★ ★ கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, 6-8-2001 அன்று தமிழகத்திலும் - புதுவையிலும் - 100க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும், ஜெயலலிதா அரசின் காட்டுமிராண்டிச் செயலைக் கண்டித்து நடைபெற்றன. 12-8-2001 அன்று, சென்னையில் பேரணியும் - நானும், பொதுச் செயலாளரும் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர், அருமை நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் என்னை இல்லத்தில் சந்தித்தார். அன்று மாலையில் தான் பேரணி! ஆனால் நடந்தது என்ன? கழகத்தின் மிகப்பிர மாண்டமான பேரணி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் இருந்து புறப்பட்டு, அமைதியாக கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேரணி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்து காமராஜர் சாலையில் திரும்பியது.

இரவு 7 மணியளவில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் திட்டமிட்டுக் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், திடீரென்று விளக்குகளை அணைத்துவிட்டு, பேரணியில் சென்றவர்கள்மீது தடியடி நடத்தினர். அதன் காரணமாக பேரணியில் வந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அப்போது காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந் தவர்கள்மீதும் போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதைப்போலவே, டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும், பேரணியில் சென்றவர்கள்மீது தடியடி நடத்தினர்.

மூன்று இடங்களிலும் போலீசார் சுற்றி வளைத்துத் தடியடி நடத்தியதால், பேரணியில் சென்றவர்கள் காந்தி சிலையை நோக்கி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பிறகு துப்பாக்கியாலும் சுட்டனர். பேரணியில் சென்ற ஆண்களும், பெண்களும் கடற் கரைக்குள் இறங்கி ஓடினார்கள். அந்தச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் படுகாயமடைந்தனர். போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகில், போலீசார் கழகத்தினரை விரட்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சோலை முருகேசன், திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்தோணி, சீர்காழி நகர முன்னாள் பொருளாளர் செல்வ ரமேஷ், மதுக்கரையைச் சேர்ந்த ரெங்கசாமி என மொத்தம் நான்கு பேர் பலியானார்கள்.

இந்த நான்கு பேரின் குடும்பத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது. மேலும் காயமடைந்து மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு, அவர்கள் அடைந்துள்ள காயத்தின் தன்மைக்கேற்ப 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய்வரை நிதி உதவி செய்யப்பட்டது. வேலூர் சகி அவர்களை பலத்தக் காயத்துடன் பொதுக் கூட்ட மேடைக்குத் தூக்கி வந்தனர். போலீசாரின் தாக்குதலில் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிச் செல்வன் ஆகியோரும் காயமடைந்தனர்.

காவல் துறையினர் கழகத்தினர்மீது கடுமையாகத் தாக்கியதைப் புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களையெல்லாம் போலீசாரே டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்றனர். குறிப்பாக, சன் தொலைக்காட்சியைச் சேர்ந்த கருப்பசாமி, ஆஜ்தக் தொலைக்காட்சியின் பெண் நிருபர் ஜெயஸ்ரீ, இந்து பத்திரிகையின் புகைப்படக்காரர் மூர்த்தி, ஆனந்த விகடன் விவேக், நக்கீரன் பிரகாஷ், தினமலர் சுரேஷ், வளையாபதி போன்றவர்கள் தாக்கப்பட்டனர்.

தினமணி போட்டோகிராபர் ராஜூ, செய்தியாளர் முருகன் ஆகியோரும் பயங்கரமாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தலைவர் தனசேகரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ரவீந்தரதாஸ், சென்னை நிருபர்கள் சங்கப் பொதுச் செயலாளர் கே.சுப்பிரமணியம், சென்னை பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் அப்போதே கண்டனம் தெரிவித்தனர்.

14-8-2001 தேதிய "இந்து" தலையங்கத்தில் "தமிழகத்திலே போலீஸ் ராஜ்யம் நடக்கிறது என்பதை ஞாயிறு கலவரம் நிரூபித்துள்ளது" என்று எழுதியது. ★ ★ ★ பொதுக்கூட்டத்துக்கு வந்த கழகத்தினரின் வேன்கள், கார்களை மெரினா கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வேன்களின் கண்ணாடிகளைக் காவல் துறையினரே இரும்புக் குழாய்களால் அடித்து உடைத்தனர். சில வேன்கள்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்ததால், பொதுக் கூட்டத்தை 9 மணிக்கெல்லாம் முடித்து விட்டோம்.

கூட்டத்தை முடித்துவிட்டு, போலீசாரின் தடியடியில் படுகாயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கழகத் தோழர்களை எல்லாம் நள்ளிரவில் சென்று நானும் பேராசிரியரும், மேயராக அப்போது இருந்த தம்பி ஸ்டாலினும், தம்பிகள் கோ.சி. மணியும், துரை முருகனும், வீரபாண்டி ஆறுமுகமும், பொன்முடியும், முரசொலி செல்வமும், பொங்கலூர் பழனிசாமியும், பொன். முத்துராமலிங்கமும் பார்த்து ஆறுதல் கூறினோம்.

ராயப்பேட்டை மருத்துவமனையின் மூன்று தளங்களிலும் அனுமதிக்கப்பட்டிருந்த அத்தனைக் கழகத் தோழர்களையும் நடந்து சென்றே நான் பார்த்து ஆறுதல் கூறினேன். தமிழக ஆளுநராக அப்போது கூடுதல் பொறுப்பு வகித்த ரங்கராஜன் அவர்களுக்கு ஐதராபாத்திற்கே தொலைபேசியிலே இரவிலே பேசி, நிலைமைகளையெல்லாம் விளக்கினேன். மறுநாளே சென்னைக்கு வருவதாகவும், தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். மறுநாள் காலையில் கிண்டி ராஜ்பவன் சென்று நானும், பேராசிரியரும், வீர பாண்டி ஆறுமுகமும் ஆளுநரைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கினோம்.

பேரணியின் முன் வரிசையில் சைதாப்பேட்டைத் தொகுதி சட்டப்பேரவை கழக உறுப்பினரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான வை. பெருமாள், தொழிலாளர் அணிக்குத் தலைமை தாங்கிச் சென்றார். சீருடை அணிந்து திறந்த ஜீப்பில் கோஷம் போட்டுக் கொண்டு சென்றார். தேவர் சிலை அருகே ஊர்வலம் வந்தபோது, பெருமாளுக்கு மயக்கம் ஏற்பட்டு, ஜீப்பிலேயே உட்கார்ந்தே வந்தார். மியூசிக் அகாடமி அருகில் ஊர்வலம் வந்தபோது, மீண்டும் ஜீப்பில் எழுந்து நின்று கொண்டு கோஷம் போட்டுக்கொண்டே சென்றிருக்கிறார்.

ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் அருகே சென்றபோது, காவல் துறையினரின் தடியடியில், கழகத் தொண்டர்கள் தலைகளில் வழிந்த குருதியைக் கண்டு; வை.பெருமாள் மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அங்கேயிருந்தவர்கள் அவரை சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயுள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதன் பேரில், அங்கே அழைத்துச் சென்று தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல், அருமைத் தம்பி வை. பெருமாள் மரணமடைந்தார். 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, வை. பெருமாள் என்னுடன் அந்தச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தன. காலமெல்லாம் தொழிலாளர்களின் நலனுக்காகவே உழைத்து, நீண்ட காலம் அ.தி.மு.க.விலே இருந்து பாடுபட்டு, அதன் பின்னர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய வை.

பெருமாள் அவ்வாறு இறந்த பிறகு 16-8-2001 அன்று நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டப் பேரவை மரபுகளின்படி, சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் பதவியிலே இருக்கிற போது இறந்துவிட்டால், அவருக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும்போது, அனைத்துக் கட்சிகளின் தலைவர்- களையும் அந்த இரங்கல் தீர்மானத்தின்மீது பேச அனுமதிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அ.தி.மு.க.வின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, வை.

பெருமாள், எம்.எல்.ஏ.வாக

இருந்த நிலையில் உயிர் விட்டபோதிலும், அவருக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய நாளில் யாரையும் அந்த இரங்கல் தீர்மானத்தின்மீது பேசுவதற்குக்கூட அனுமதிக்கவில்லை. "அது நியாயமற்ற செயல்" என்று பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் என்னிடமும் அதைப் பற்றிக் கேட்ட போது, "அது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்" என்று குறிப்பிட்டதோடு, 17-8-2001 அன்று, அதுபற்றி நீண்ட அறிக்கையும் வெளியிட்டேன். அ.தி.மு.க. அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களான பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதி, பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர்.

கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தொண்டர் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமரி அனந்தன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் - ஆகியோர் அறிக்கை விடுத்தனர். 15-8-2001 அன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதில் இந்து மாலினி பார்த்தசாரதி, தினமணி இரா.

சம்மந்தம், முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி சார்பில் மாலன், தினமலர் சார்பில் ஆர். கிருஷ்ணமூர்த்தி, நக்கீரன் கோபால், சின்னக்குத்- தூசி, ஆனந்தவிகடன் சீனிவாசன் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். ★ ★ ★ 2001ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில், பேரவையில் முதல் அமைச்சர் ஆகிவிட்ட ஜெயலலிதா பேசும்போது, சர்க்காரியா கமிஷன் சம்மந்தமான கோப்பிலே நடவடிக்கை தேவையில்லை என்று நானே கையெழுத்துப் போட்டதாக ஒரு குற்றச்சாட்டினைத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் உடனே என்னைச் சந்தித்து அது பற்றிய விவரத்தைக் கேட்டபோது, நான் விளக்கமளித்தேன். அந்த விளக்கம் இந்தத் தொடரிலும் இடம் பெற வேண்டுமென்று எண்ணுகிறேன். அது விவரம் வருமாறு:- 4-11-1972இல் - அதாவது நாற்பதாண்டுகளுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமீது சில பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய சர்க்காரிடம் கொடுத்தார்கள். அந்தப் புகார்கள் அப்போது எனக்கே மத்தியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு, அந்தப் புகார்கள் எல்லாம் பொய் என்பதை ஆதாரங்களோடு விளக்கி, 14-12-1972 அன்று பதில் அளிக்கப்பட்டதோடு, அந்தப் பதில்களைப் புத்தகமாகவே அச்சிட்டு தமிழகச் சட்டப் பேரவையிலும் வைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, நான்காண்டுகள் கழித்து, நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு தமிழகத்திலே கழக அரசைக் கலைத்ததோடு, 3-2-1976 அன்று சர்க்காரியா கமிஷனை நியமித்தது. நெருக்கடி காலம் என்பதால், சர்க்காரியா கமிஷன் அந்த விசாரணையில் சாட்சிகளை நாங்கள் யாரும் குறுக்கு விசாரணை செய்யக் கூடாது என்று மறுத்துவிட்டது. திரு. சாந்திபூஷன் தலைமையில் எங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் குழு, குறுக்கு விசாரணையை ஏற்றுக் கொள்ளாத சர்க்காரியா கமிஷனை அன்றைக்குப் புறக்கணித்து வெளியேறியது.

அதற்குப் பிறகு சர்க்காரியா கமிஷனுடைய முடிவுகள்மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அ.தி.மு.க. ஆட்சியிலே யோசிக்கப்பட்டது. வீராணம் போன்ற பெரிய புகார்களை அதிலே பண வரவு செலவு நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரை சர்க்காரியா கமிஷனே ஏற்றுக் கொள்ளாத அந்தச் சூழலில், அந்தப் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது, அட்வகேட் ஜெனரலாக இருந்த திரு.

வி.பி. ராமன் அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக ஆலோசனை கேட்டார். 15-11-1977 அன்று Thiru V.P. Raman, the then Advocate General had offered opinion that it was neither advisable or possible to launch prosecution successfully on any body for mere impropriety or irregularity (அன்றைய அட்வகேட் ஜெனரல், திரு. வி.பி. ராமன் இது குறித்து சட்ட ஆலோசனை வழங்கும்போது, யார்மீதும் அதிகார ஒழுங்கீனத்திற்காகவோ, அதிகார துஷ்பிரயோகக் குற்றத்திற்காகவோ வழக்கு தொடர்வதற்கு இயலாது என்பதோடு, அதற்குச் சாத்தியக் கூறுகளும் இல்லை என்று தன்னுடைய கருத்தை எம்.ஜி.ஆர்.

அரசுக்குக் கூறியிருக்கிறார்). அதற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை 1979ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அட்வகேட் ஜெனரல் அவர்களிடம் அதன் மீது வழக்கு தொடரலாமா என்பதற்கு கருத்துரை வழங்குமாறு மீண்டும் கேட்டபோது, அட்வகேட் ஜெனரல் வி.பி. ராமன், 24-10-1979 தெரிவித்த கருத்துரையில், ""With the exception of llegation No, 11(b) which related to Aerial Spraying none of the other allegations enquired into by the Sarkaria Commission could be successfully pursued further in a criminal prosecution" (ஏரியல் ஸ்ப்ரேயிங் சம்மந்தப்பட்ட 11 (பி) குற்றசாட்டினைத் தவிர, சர்க்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்ட வேறு எந்தக் குற்றச்சாட்டு சம்மந்தமாகவும் குற்ற வழக்கு தொடர்ந்து வெற்றி பெற இயலாது) என்று தனது கருத்தை இரண்டாவது முறையாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துவிட்டார்.

இதிலேகூட ஏரியல் ஸ்ப்ரேயிங் வழக்கைப்பொறுத்த வரையில் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்த ஏரியல் ஸ்ப்ரேயிங் வழக்கு சாட்சியங்கள் இல்லாததால் மத்திய அரசினாலேயே திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது தான் சர்க்காரியா கமிஷன்மீதான சூழ்நிலை. இதில் 1988ஆம் ஆண்டுவரை பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்த போது சர்க்காரியா கமிஷன் சம்மந்தமான கோப்பிலே எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

அதற்குப் பிறகு 1989இல் தி.மு. கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான், "The D.M.K. Ministry, which came to power in the State in January 1989, dropped further action on this subject on 23-11-1989 on the basis of the opinion offered by the then Advocate General on 15-11-1977 and 23-10-1979 and as the previous elected Government had not closed the cases, but kept them pending without a decision for a number of years" (1989 ஜனவரி மாதம் இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க.

அமைச்சரவை, அதற்கு முன்பிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பல ஆண்டு காலத்திற்கு கிடப்பிலே வைத்திருந்த கோப்பில், ஏற்கனவே இருந்த அட்வகேட் ஜெனரல் அவர்கள் 15-11-1977 அன்றும் 23-10-1979 அன்றும் தெரிவித்திருந்த கருத்துக்களை அடிப்படையாக வைத்துத் தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தது). செய்தியாளர்களிடம் இதை விவரமாகக் கூறி, "இதுதான் ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுக்கு என்னுடைய பதில்" என்று தெரிவித்தேன்.

மேலும் செய்தியாளர்களிடம் நான் கூறும் போது, "தி.மு.கழக ஆட்சியிலே இருந்த அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலே அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியிலே - அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது இது குறித்து வழக்குப் போட வழி இருக்கிறதா என்று யோசனை கேட்ட நேரத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலே தான், 13 ஆண்டுகள் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பிலே இருந்த கோப்பிலே, அதற்குப் பிறகும் மூட்டை கட்டி வைத்திருக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தோடு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சியிலே மட்டுமல்ல - இடையிலே இரண்டு முறை ஆளுநர் ஆட்சிகூட நடைபெற்றது. அந்த ஆட்சியிலே கூட எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதிலேதான் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்குப் போடுவதாகச் சொல்லியிருக்கிறார். வழக்கு போடட்டும்!"

என்று நான் பதிலளித்தேன். "சட்டமன்றம் தொடங்கிய நாளிலிருந்து தி.மு.க.மீதும், குறிப்பாக உங்கள்மீதும் வழக்கு போடுவதையே முக்கிய விஷயமாக அ.தி.மு.க. ஆட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்களே?" என்று தொடர்ந்து செய்தியாளர் கேட்டபோது - "சட்டமன்றம் நடைபெற்ற 24 நாட்களில் நான் சட்ட மன்றத்திற்குப் போகவில்லையே தவிர, அங்கே என்னுடைய பெயர் உச்சரிக்கப்படாத நாளே கிடையாது - அந்த வகையில் நான் சட்டமன்றத்தில் உயிரோட்டமாக இருந்து வருகிறேன் என்று எடுத்துக் கொள்கிறேன்" என்று பதிலளித்தேன்.

★ ★ ★ ஒவ்வோர் ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தஞ்சைத் தரணியின் வேளாண்மை ஒரு பெரிய சோதனையாகவே மாறி வருகிறது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப் படுகிற குறுவைப் பட்டத்தின் இளம் பயிர்கள் வளரும் பருவம் ஜுலை - ஆகஸ்ட் கால கட்டம். குறுவை மகசூலின் தன்மையை நிர்ணயிக்கக்கூடிய பருவமும் இதுவே. இந்தச் சமயத்தில் தேவைப்படக் கூடிய நீரை, கர்நாடகம் காவிரியில் விடுவதில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பிலேயே மாதந்தோறும் எவ்வளவு நீரைக் காவிரியில் கர்நாடகம் விடவேண்டும் என்பதைத் துல்லியமாக நிர்ணயித்துள்ளது.

இரு மாநிலங்களின் விவசாய நிலவரங்கள் மற்றும் பாசனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், பாசனத் துறையில் அனுபவம்மிக்க வல்லுநர்கள், தொழில் நுட்ப அடிப்படையில் ஆழ்ந்து பரிசீலனை செய்த பிறகு தயாரித்த அறிக்கையின் அடிப்படையிலேயே, மாதந்தோறும் தமிழகத்துக்கு கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை மதித்து நடந்து கொள்ள கர்நாடகம் முன் வருவதே இல்லை. 2001 ஆம் ஆண்டிலும் இந்த நிலை இருந்த காரணத்தினால், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியது.

காவிரியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த கழகம், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள நமது பேராசிரியர் அவர்களையும், பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் அவர்களையும் அனுப்பியது. எந்தக் கூட்டத்தில் எப்படிப் பேசுவது என்ற நாகரிகத்தைக் கூட அறியாத நிலையில், அந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் பேசும்போது, "1997ஆம் ஆண்டில், கழக ஆட்சியில் போடப்பட்ட வரைவு திட்டத்தை அடியோடு கைவிட்டுவிட்டு, எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு புதிய காவிரி நதிநீர் ஆணையத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டது கடுமையான கண்டனத்திற்குரியது!"

என்று ஜெயலலிதா பேசினார். அதையொட்டி நான் 8-9-2001 அன்று விடுத்த அறிக்கையில், கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆனால் தற்போது உள்ள நீர் 40.33 டி.எம்.சி. - கபினி அணையின் கொள்ளளவு 19.5 டி.எம்.சி., நீர் இருப்பு 17.34 டி.எம்.சி. - ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.5 டி.எம்.சி., நீர் இருப்பு 8.4 டி.எம்.சி. - ஹேமாவதி அணையின் கொள்ளளவு 35.7 டி.எம்.சி., நீர் இருப்பு 30.56 டி.எம்.சி.

- எனவே நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 113.15 டி.எம்.சி., நீர் இருப்பு 96.63 டி.எம்.சி. - இந்த அளவு தண்ணிரை வைத்துக் கொண்டுதான் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கின்றது. ஜுன் மாதத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவு 10.16 டி.எம்.சி. ஆனால் தந்த நீரின் அளவு 4.17 டி.எம்.சி.தான். உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தை கூட்டச் சொல்லி கேட்டிருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நமக்கு வர வேண்டிய நீரின் அளவு 42.76 டி.எம்.சி. - ஆனால் வந்ததோ 23.86 டி.எம்.சி.தான். இதற்குப் பிறகாவது மாநில அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் வர வேண்டிய நீரின் அளவு 54.72 டி.எம்.சி. ஆனால் வந்ததோ 21.48 டி.எம்.சி.தான். இதற்குப் பிறகும் மாநில அரசு விழித்துக் கொள்ளவில்லை. செப்டம்பரில் வர வேண்டிய நீரின் அளவு 29.36 டி.எம்.சி.

ஆனால் 7-9-2001 வரை வந்ததோ 1.6 டி.எம்.சி.தான். ஆக, ஜூன் முதல் செப்டம்பர்வரை நமக்கு வந்திருக்க வேண்டிய நீரின் அளவு 137 டி.எம்.சி. ஆனால் வந்த நீரின் அளவு வெறும் 51.11 டி.எம்.சி. தான். எனவே தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. அந்தப் பழியை மறைப்பதற்காகத்தான் தற்போது அவசர அவசரமாக ஏதேதோ செய்து கொண்டுள்ளனர். "காவிரிப் பிரச்சினையில் - கழக அரசு இருந்த போது அ.தி.மு.க. ஒத்துழைப்பு தர வில்லை.

ஆனால் தி.மு.க. அப்படி இராது. தனது ஒத்துழைப்பை தி.மு.க. அளிக்கும்!" என்று தெரிவித்திருந்தேன். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தையும் உட்கார வைத்துக் கொண்டு, கழக அரசின்மீது குறை கூறினார். அதைப் பற்றி கேட்டபோது, "பயிருக்கு தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் வேதனைக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே அணியில் இருந்து பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு காவிரிப் பிரச்சினையில் தி.மு.க.

தனது ஒத்துழைப்பை வழங்குமென்று கூறினேன். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தி.மு.க. ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவித்திருந்தேன். பொது நலப் பிரச்சினையில் எங்கள் செயல்பாடு இந்த அளவுக்கு இருக்க, முதலமைச்சர் தனது பேச்சில் தி.மு.க.மீது சேறு வாரி இறைத்திருக்கிறார்" என்று பதிலளித்தேன்.

★ ★ ★