நெஞ்சுக்கு நீதி
"நீ, எங்கிருந்தாலும் வாழ்க!" · 378 / 391
17. "நீ, எங்கிருந்தாலும் வாழ்க!" என்றார் அண்ணா! அ. தி.மு.க. அரசின் காவல் துறை என்னை கைது செய்த போது, அவர்கள் எந்த அளவிற்கு என்னை முரட்டுத்தனமாகத் தாக்கி இழுத்துச் சென்றனர் என்பதையெல்லாம், "சன் தொலைக்காட்சி நிறுவனத்தினர்" உடனடியாக அங்கே விரைந்து வந்து, காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் படம் எடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் என்னைத் தாக்கியதைப் பார்த்த தயாநிதி மாறன், "ஐயோ - கொல்றாங்களே! கொல்றாங்களே!"
என்று கதறித் துடித்த ஒலியையும்கூட அந்தச் செய்தியிலே கேட்ட தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் கதறித் துடித்தனர். ஏடுகள் எல்லாம் அந்தக் கைது நிகழ்வைக் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தன. காவல் துறையினர் நடத்திய காட்டு மிராண்டித் தாக்குதல் காரணமாக என் வலது தோள் தசையில் ஏற்பட்ட உள் காயத்தில் இரத்தக் கசிவு இருப்பதாகவும், அதனால் தான் தொடர்ந்து வலி ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் சொன்னதின்பேரில் 1-8-2001 அன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.
2-8-2001 அன்று வி.பி. சிங் அவர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, கையிலே எனக்கு ஏற்பட்ட வலி குறித்து விளக்கமாக விசாரித்ததோடு, மருத்துவர்களின் ஆலோ- சனைப்படி சில நாட்கள் கைக்கு பூரண ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். அ.தி.மு.க. அரசு என்னைக் கைது செய்ததையொட்டி நாடு முழுதும் எழுந்த எதிர்ப்பின் காரணத்தால், அரசின் சார்பில் நீதிபதி ஏ.ராமன் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று ஒப்புக்காக நியமிக்கப்பட்டது.
அந்த விசாரணைக் கமிஷனை புறக்கணிப்பது என்று தி.மு.கழகம் முடிவெடுத்தது. ஆனால் ஜெயலலிதா அதைக் கிண்டல் செய்து, நீதிபதி ராமன் கமிஷனைச் சந்திக்க நாங்கள் தயங்குவதாகக் குறிப்பிட்டார். 1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்காகத் தி.மு.கழக ஆட்சியில் நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் விசாரணைக் கமிஷன் நியமித்தபோது, ஜெயலலிதா 20-6-1998 தேதிய பத்திரிகைகளில் "தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி கோகுலகிருஷ்ணன் விசாரணைக் கமிஷன்மீது நம்பிக்கை இல்லை - எனவே அந்த விசாரணையைப் புறக்கணிக்கிறோம்" என்று அறிக்கை கொடுத்திருந்ததை நான் நினைவூட்டினேன்.
"அ.தி.மு.க. அரசில் நியமித்த விசாரணைக் கமிஷன்மீது நம்பிக்கை இல்லையா?" என்று என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நீதிபதிமீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அ.தி.மு.க. அரசின்மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷன் என்ற ஒன்றை அறிவித்துவிட்டு, விசாரணைக்குப் பிறகு அந்தக் கமிஷன் என்னென்ன முடிவுகளைச் சொல்ல வேண்டுமென்று இந்த அரசு நினைக்கிறதோ, அதையெல்லாம் முன்கூட்டியே அரசின் சார்பில் தெரிவித்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு அந்தக் கமிஷனிடம் எப்படி நம்பிக்கை வரும்?" என்று சொன்னேன். மேலும் செய்தியாளர்கள், என்னைக் கைது செய்தது பற்றி "மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்?" என்று கேட்ட போது, "மத்திய அரசின் இதே நிலை நீடித்தால் எங்கள் நிலை பற்றி யோசிப்போம்" என்று கூறினேன்.
"அரசியல் சட்டப்படி மாநில அரசை எச்சரிக்கை செய்யக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது - "1998ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தில் தி.மு.கழக அரசை உடனே அகற்றுவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டும், மாநில அரசுகளைக் கலைக்க வகைசெய்யும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு இருக்கும்வரை, அதை மத்திய அரசு பயன்படுத்தலாம் என்றும் பேசியது, 16.4.1998 அன்றே ஏடுகளில் வெளி வந்திருக்கிறது!"
என்று விளக்கினேன். ★ ★ ★ மாநிலங்களவைக்கு பா.ம.க. விற்கு ஓர் இடம் வழங்குவதாக அ.தி.மு.க. தலைவி அளித்த உறுதிபற்றி ஒரு பிரச்சினை எழுந்தது. அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தோழமைக் கட்சிகளை எந்த அளவிற்கு மதிக்கக் கூடியவர் - மரியாதை தரக்கூடியவர் என்பதை தமிழ்நாடு - ஏன், அகில இந்தியாவும் நன்கறியும். பாரதப் பிரதமராக இருந்த பா.ஜ.க. தலைவர் வாஜ்பய் அவர்களே, ஜெயலலிதாவின் தோழமைபற்றி சென்னைக் கூட்டத்தில் பேசியதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
அந்த வரிசையில் 6-7-2001 அன்று திண்டிவனத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டியின் சுருக்கம் வருமாறு:- ✽ "ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு மிகுந்த மரியாதை அளித்தார். ராஜ்ய சபை சீட் தருவதாகக் கூறினார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு தலைகீழாக மாறிவிட்டார். இப்போது பல்வேறு காரணங்களைக் காட்டி, எங்களுக்கு சீட் தர மறுக்கிறார். அதைவிட அவர் எங்களை நடத்திய விதம் மிகவும் அவமானகரமாக இருந்தது.
✽ "இந்திய நாட்டின் பிரதமரே எனது வசதிக்கேற்ப நேரத்தை ஒதுக்கி சந்திக்க அனுமதி தந்தார். ஆனால், எங்கள் தயவால் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவை சந்திக்க நான் அனுமதி கேட்டேன். அதற்கே என்னைப் பல நாட்கள் காக்க வைத்தார். தொலை பேசியில் ஜெயலலிதாவோடு பேச முயற்சி செய்தேன், பேச முடியவில்லை. என்னோடு தொலைபேசியில் பேச ஜெயலலிதா தயாராக இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சந்திக்க அனுமதி தந்தார். சென்றபோதும் ஒரு மணி நேரம் காக்க வைத்தார்.
அப்போதும்கூட உரிய மரியாதை தந்து பேசவில்லை. ✽ "ஜெயலலிதா இப்போது அமர்ந்திருக்கும் முதல் அமைச்சர் நாற்காலி எங்கள் உழைப்பால் கிடைத்தது. எங்கள் தயவு இல்லாமல் அவர் ஆட்சி அமைத்திருக்க முடியாது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு எங்களை அவமரியாதை செய்கிறார். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பதை அறிந்தவன் நான். ராஜ்யசபை சீட்டிற்காக எனது தன்மானத்தை இழக்க நான் தயாராக இல்லை."
வாஜ்பய் அவர்களின் பேச்சு - டாக்டர் ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டி - இதையெல்லாம் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகள் ஜெயலலிதாவைப் புரிந்து கொண்டார்களா என்றால் எனக்கு அதுபற்றிச் சந்தேகம்தான்! டாக்டர் ராமதாசை தான் அவமதிக்கவில்லை என்றும், காக்க வைக்கவும் இல்லை என்றும், தன் சுய லாபத்துக்காக சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு கூட்டணி அமைப்பதும், நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொண்டபிறகு வெளியேறுவதும் ராமதாசுக்கு வழக்கமாகப் போய்விட்டது என்றும் ஜெயலலிதா பதில் அறிக்கை வெளியிட்டதோடு - "1998 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டெல்லியில் வாஜ்பய் இல்லத்தில் நடைபெற்ற பா.ஜ.க.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து என்னை மட்டும் அழைத்திருந்தார்கள். டெல்லி சென்ற நான் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாஜ்பய் இல்லத்துக்குச் சென்றபோது, வாசலில் ராமதாஸ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். உள்ளே சென்ற நான் உடனடியாக வாஜ்பயிடம் பேசி ராமதாசும் கூட்டணிக் கட்சித் தலைவர்தான், அவரையும் உள்ளே அழைத்துக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர்தான் கூட்டம் நடந்த இடத்துக்கு ராமதாஸ் அழைக்கப்பட்டார்" என்றார் ஜெயலலிதா! ✽ "இதிலிருந்து தோழமைக் கட்சிகளை ஜெயலலிதா எந்த அளவிற்கு மதிக்கக் கூடியவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடைய இந்த அறிக்கையைக்கூட நான் வெளியிட விரும்பாவிட்டாலும் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டினேன். ஜெயலலிதாவின் நான்கு பக்க அறிக்கைக்கு அடுத்த நாளே அதில் உள்ள செய்திகளை மறுத்து, டாக்டர் ராமதாஸ் ஆறு பக்க அறிக்கை விடுத்து, அதுவும் அனைத்து ஏடுகளிலும் அப்போதே வெளிவந்தது.
★ ★ ★ 23.7.2001 அன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்ததின் அடிப்படையில், கழகத்தின் சார்பில் ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்பமுடியும் என்ற நிலையில், தி.மு.கழகத்தின் சார்பில் வேட்பாளராக சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமார் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று 10.7.2001 அன்று நான் அறிவித்தேன். எனது ஆணையை ஏற்று, "மத்திய அரசுக்கும் மக்களுக்கும் இடையே உறுதியான பாலமாகப் பணியாற்றுவேன்" என்றும், "மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு அவருடைய பிறந்த நாளுக்காக கழகம் அளித்த பரிசு" என்றும் சரத்குமார் அப்போது அறிக்கை விடுத்தார்.
கழகம் அப்போது அவருக்கு அளித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அவர் காட்டிய நன்றி? ★ ★ ★ சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து, பின்னர் அரசியல்வாதியாக மாறியவர் பூலான் தேவி. 1996ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று, அவர் பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்து, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உத்தரப் பிரதேசம், மிர்சாபுர் தொகுதியில் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
25.7.2001 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, மதிய உணவுக்காக நாடாளுமன்ற வளாகத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசோகா சாலையில் இருந்த அவருடைய வீட்டிற்குக் காரில் சென்று கொண்டிருந்த போது அவர் வீட்டு வாசலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற அவருடைய பாதுகாவலர் பல்விந்தர் சிங்கும் காயமடைந்தார். அசோகா சாலையில் முக்கிய பிரமுகர்கள் பலரின் வீடுகள் உள்ளதால், எந்த நேரமும் அங்கே பாதுகாப்பு பலமாகவே இருக்கும்.
அதையும் மீறி முகமூடி அணிந்த மூன்று பேர் பூலான் தேவியைச் சுட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த பூலான் தேவி, பின்னர் நாடே நடுங்கும் அளவுக்கு மிகப் பெரிய கொள்ளைக்காரியானார். 11 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு மக்கள் தொண்டராக மாறினார். 38 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பூலான்தேவி, தனது வாழ்நாளில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தவர்.
மிகச் சிறிய வயதில் அவரைவிட பல வயது மூத்தவரானவருக்கு மனைவியானார். பல்வேறு இன்னல்களை அவர் சந்தித்தார். அதனால் ஆண்களால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஆண்களுக்கு அளிக்க வேண்டுமென்ற வெறியில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களிடம் தஞ்சம் புகுந்தார், பூலான் தேவி. 1983ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச முதலமைச்சராக அப்போதிருந்த என் அன்பு நண்பர் அர்ஜூன் சிங் முன்னிலையில் பூலான்தேவி சரணடைந்தார். அந்த நேரத்தில் அவர்மீது 55 கிரிமினல் வழக்குகள் இருந்தன.
அதில் 22 கொலை வழக்குகள். ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் நோக்கத்தில் 1981ஆம் ஆண்டில் 20 உயர் சாதியினரைச் சுட்டுக் கொன்றார் பூலான் தேவி. பேமாய் படுகொலை என்றழைக்கப்படும் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பூலான் தேவியின் பெயர் நாடு முழுவதும் தெரிந்தது. அதன் பின்னர்தான் 11 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தார். 1994ஆம் ஆண்டு பிப்ரவரியில் மோசமான உடல் நிலை காரணமாக விசாரணை ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார்.
அந்த ஆண்டு ஜுலை மாதத்தில், சட்டப் பேரவை உறுப்பினரான உமத் சிங்கைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மறைந்தபோது சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ் மற்றும் பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பூலான்தேவி கொலையின் முக்கிய குற்றவாளியான ஷேர் சிங் ரானா என்கிற பங்கஜ் சிங் டேராடூனில் 27.7.2001 அன்று கைது செய்யப்பட்டார்.
14.2.1981 அன்று பூலான் தேவி 20 உயர் சாதியினரைச் சுட்டுக் கொன்றார் அல்லவா - அதற்குப் பழி வாங்கும் வகையில் அவரைக் கொலை செய்ததாக பங்கஜ் சிங் ஒப்புக் கொண்டார். ★ ★ ★ 29.7.2001 அன்று கழகத்தின் பொதுக் குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் என் தலைமையில் கூடியது. ஜெயலலிதாவின் போலீஸ் ராஜ்ய அராஜகங்களைக் கண்டித்து தமிழகத்தில் 6.8.2001 அன்று பேரணியும், பொதுக் கூட்டங்களும் நடத்துவதென்றும், சென்னையில் 12.8.2001 அன்று பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நள்ளிரவில் கொடூரமான முறையில் காட்டுமிராண்டித்தனமாக என்னை அடித்து இழுத்துச் சென்று கைது செய்ததை அறிந்து அதிர்ச்சியாலும், தீக்குளித்தும் உயிரிழந்த 67 பேர் குடும்பங்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி அளிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டு, அவ்வாறே வழங்கப்பட்டது. ★ ★ ★ 31.7.2001 அன்று இரவு கழக அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பிய எனக்கு, டெல்லியிலிருந்து ஒரு தகவல் வந்தது. சிவசேனாவின் கருத்துக்களில் அதிருப்தி அடைந்து, பிரதமர் வாஜ்பய் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை ஒருமித்த கருத்துடனும், ஒழுங்குக் கட்டுப்பாட்டுடனும் செயல்படுமாறு செய்ய என்னால் முடியவில்லை, எனவே பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு கூட்டத்திலிருந்து சென்று விட்டார்.
அந்தச் செய்தி எனக்குக் கிடைத்ததும், வாஜ்பய் அவர்களை இரவு 10.30 மணி அளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினேன். "தங்களின் செய்தியை அறிந்து மிகவும் திடுக்கிட்டு போய் இருக்கிறேன்" என்றும், முடிவினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், நல்ல செய்தியினை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
என்னைப் போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல தலைவர்களும் வாஜ்பயை அவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாக 1-8-2011 அன்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்று, பிரதமர் வாஜ்பய் தலைமையில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையிலும் பிரதமர் வாஜ்பய் அவர்கள், தான் ஏன் அப்படியொரு முடிவினை மேற்கொள்ள நேர்ந்தது என்றும், அதன் பிறகு அந்த ராஜினாமாவை விலக்கிக் கொண்டது ஏன் என்றும் விளக்கமளித்தார்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்க கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தம்பி முரசொலி மாறன், அர்ஜுன் சேத்தி, சிக்கந்தர் பக்த் ஆகிய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. ★ ★ ★ ராமனாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் மனநலக் காப்பகத்தில் 6.8.2001 அன்று காலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மனநோயாளிகள் 27 பேர் உயிரிழந்தனர்.
அதில் 14 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள். தமிழகத்தில் முஸ்லீம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான ஏர்வாடியில் கடந்த பல ஆண்டுகளாக மன நலக் காப்பகங்கள் தனியாரால் நடத்தப்பட்டு வந்தன. அந்தக் காப்பகங்களில் மனநோயாளிகள் தென்னங் கீற்றுத் தட்டியால் வேயப்பட்ட அறைகளில் சங்கிலியால் கட்டப்பட்டுத் தங்க வைக்கப் பட்டிருப்பார்கள். அந்தக் காப்பகத்தில் ஒன்றில் விடியற் காலையில் தீப்பிடித்தது. மன நோயாளிகள் பனை மரக் கட்டைகளில் இணைக்கப்பட்டிருந்த சங்கிலிகளில் பிணைக்கப் பட்டிருந்ததால், தப்பியோட முடியாமல் தீயில் கருகினர்.
இது பற்றிய உண்மை விவரங்களை விளக்கி பத்து நாட்களில் அறிக்கை தருமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இந்தக் கொடுமையான சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே 16.8.2001 அன்று வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கொடூர வெடி விபத்தில் கட்டடம் இடிந்து மண்ணோடு மண்ணாகப் புதைந்ததில் 22 பேர் பலியானார்கள். ★ ★ ★ 2001 ஜூலை 21 என் வாழ்க்கையில் சோகமான நாள்!
என் அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி மறைந்த நாள். அந்தச் செய்தி என்னிடம் கூறப்பட்டபோது என்னால் நம்பத்தான் முடியவில்லை. "நானிருக்கிறேன்; எனக்கு இளையவர் போய்விட்டாரே" என்ற துடிப்பும் துயரமும் என்னை வாட்டி வதைத்தன. ஒரு மாபெருங் கலைஞர் இருந்தார்; அவர் மறைந்தார்; என்பதற்கான இரங்கல் செய்தியோடு முடிவதல்ல எங்கள் நட்பின் இறுக்கம்! சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிமலையில் நடைபெற்ற அவரது மண விழாவை முன்னின்று நடத்தி வாழ்த்துரைத்தவன் நான்.
கணவனை இழந்து கதறித் துடித்து சகோதரி கமலா, மண விழாவினை நினைவூட்டி, அன்று அழுதபோது என் நெஞ்சு நொறுங்கிப் போயிற்று. "சென்னையில் வந்து என்னை சந்திக்கவும்" என்று நான் தந்தி கொடுத்தால் கூட இரண்டு வார்த்தைகள் அதிகமாகின்றனவே என எண்ணாமல், Dear Sivaji ("அன்புள்ள சிவாஜி") என்றே அழைத்து அந்தத் தந்தியை அனுப்புவேன்.
அப்படி ஒரு நட்பு மொட்டவிழ்ந்திருந்த அந்த இளமைக் காலத்தையும் - கல்மேல் எழுத்தாக பதிந்துவிட்ட எங்கள் கலையுலகப் பயணத்தையும் - நினைத்து நினைத்து அவர் மறைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏங்குகிறேன். "நான் பிறந்த வீடும்; புகுந்த வீடும் ஒன்று சேர்ந்தது கண்டு என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குகிறது" இப்படிச் சொன்னவர் நடிகர் திலகம் சிவாஜி. சொன்ன இடம் சென்னை கடற்கரைக் கூட்டம். சொன்ன ஆண்டு 1979.
அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு; ஆம் - தி.மு.கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு திருமதி இந்திரா காந்தி வந்தபோது சிவாஜி பேசியபோது குறிப்பிட்ட வார்த்தைகள் தான் அவை. பிறந்த வீடான திராவிடர் இயக்கமும், புகுந்த வீடான காங்கிரஸ் கட்சியும் தேர்தல் உறவு கொண்டதைத்தான் சிவாஜி அப்படிச் சுவைபடச் சொன்னார் என்பதுணர்ந்த லட்சோப லட்சம் மக்கள் அடங்கிய அந்தக் கூட்டம் ஆரவாரம் செய்து கையொலி முழங்கியது.
திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் தொடங்கப்படுவதற்கு முன்பே திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர் சிவாஜி! மராட்டிய மாவீரன் சிவாஜி ஒரு மாபெரும் ராஜ்யத்தைத் தனது வாள் முனையால் உருவாக்கினான் என்றாலும் கூட மன்னனாக மகுடம் புனைய அவனது குலம் இடம் தரவில்லை யென்று பழமைவாதிகளும் அவர்கட்குப் பாதுகாவலரான காக பட்டரும் தடுத்துரைத்து நின்ற வரலாற்றை அண்ணா அவர்கள் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அல்லது சந்திர மோகன்" என்ற ஒப்பற்ற நாடகமாகத் தீட்டியிருந்தார்.
அந்த நாடகத்தில் அண்ணா அவர்களே காகபட்டர் வேடம் தாங்கி நடித்தார். காவியுடை, கமண்டலம் இவற்றுடன் அண்ணா காகபட்டராகத் தோன்றிப் பேசியதையும், நடித்ததையும் பாராட்டிப் புகழாத நடிகர்களே இல்லை! அந்த நாடகத்தில் சிவாஜியாக "எம்.ஜி. ராம்சந்தர்" நடிப்பார் என்று அண்ணாவின் "திராவிட நாடு" பத்திரிகையில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. எனினும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் நாடக மேடையில் புகழ் பெற்று விளங்கியவரும், திராவிடர் கழக ஈடுபாடுடையவருமான நண்பர் வி.சி.
கணேசனை "சிவாஜி" வேடம் தாங்குமாறு அண்ணா அழைத்தார். அண்ணாவின் அழைப்பையேற்று சிவாஜி வேடத்தில், கணேசன் நடித்தார். அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்கள் வி.சி. கணேசனை "சிவாஜி கணேசன்" என்று அன்பொழுக அழைத்துத் தட்டிக் கொடுத்தார்.
அன்று முதல் வி.சி. கணேசன் "சிவாஜி கணேசன்" ஆனார். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள்; திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள் அனைத்திலும் தனது வில்லுப் பாட்டு நிகழ்ச்சியைத் தொடக்க நிகழ்ச்சியாகக் கொண்டு கழகக் கொள்கை பரப்பிடும் பணிபுரிந்தார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி, இலட்சிய நடிகர் இராசேந்திரன், நடிகமணி டி.வி. நாராயண சாமி ஆகியோர் திராவிடர் கழகத்திலும் பின்னர் தி.மு.கழகத்திலும் கொள்கை பரப்பும் கலை முரசுகளாகத் திகழ்ந்தார்கள்.
1953-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தான் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1952-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கழகத்தின் சார்பில் நிதி திரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு கைத்தறி வேட்டி, சேலைகள் வாங்கி ஏழை, எளியோர்க்கு வழங்குவதெனவும், இருபத்து ஐயாயிரம் ரூபாய் நிதி திரட்டுவதென்றும், அந்தப் பணிக்கு என்னைத் தலைவனாக இருக்குமாறும் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.
நிதி திரட்டும் முயற்சிக்குப் பல இடங்களில் நான் எழுதிய "தூக்கு மேடை" நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் பாண்டியன் என்னும் பள்ளி மாணவன் வேடத்தில் நானும், அபிநயசுந்தரர் என்னும் வேடத்தில் சிவாஜியும், பரமார்த்திகர் வேடத்தில் நண்பர் சி.வி.எம். அண்ணாமலையும் மற்றும் கழக முன்னணியினரும் நடித்தோம். மகாலிங்கம் என்ற இளைஞர் நடிப்பாற்றல் மிக்கவர். அவர்தான் கதாநாயகி வேடத்தில் நடித்தார். ஆடவர்கள் "ஸ்த்ரி பார்ட்" போட்டு நடிக்கும் கால கட்டம் 1952 வரையிலே கூட நீடித்தது எனலாம்!
கோயில்பட்டி வள்ளிமுத்து என்பவர், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் எங்களின் நாடகத்தை நடத்தி, நிதியளிப்பதாகக் கூறி வசூலான நாலாயிர ரூபாய் பணத்துடன் காணாமலே போய் விட்டார். நான், சிவாஜி, சி.வி.எம். அண்ணாமலை, அரங்கண்ணல், காஞ்சி சம்பந்தன், காஞ்சி கிருஷ்ணமூர்த்தி, எம்.என். கிருஷ்ணன், நம்பிராஜன், டி.என். கிருஷ்ணன் மற்றும் நாடகத்தில் பங்கேற்ற கழகத்தினர் பட்டினி கிடந்தது மாத்திரமல்ல; ரயிலில் திரும்பி வருவதற்கு வழிச் செலவுக்கான பணமும் இல்லாமல் திண்டாடித் தெருவில் நின்றோம்.
எங்கள் நிலையைக் கண்ட தூத்துக்குடி கே.வி.கே.சாமியும் தங்கப்பழமும் எங்களின் வழிச் செலவுக்காக தூத்துக்குடியில் அவசரமாக ஒரே நாள் விளம்பரத்தில் ஒரு நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த மிச்சப் பணத்தில் என்னையும் சிவாஜியையும் மற்றவர்களையும் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போதுதான் "பராசக்தி" படத்தில் நடிக்க சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்கள் "பராசக்தி" திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை நான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் ஒருவராக இருந்து என்னிடம் அன்பு காட்டுகிறவர்கள். அவர்களும் என்னை வலியுறுத்தினர். முதலில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிதான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத்தால் "பராசக்தி" யில் "குணசேகரன்" வேடத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார்கள். அந்தப் படம் ஏ.வி.எம். நேஷனல் பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பு! சிவாஜி இரண்டொரு காட்சிகளில் நடித்ததைப் போட்டுப் பார்த்து விட்டு, ஏ.வி.
மெய்யப்ப செட்டியார் அதிருப்தி தெரிவித்து, நடிகரை மாற்ற வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நேஷனல் பெருமாள் அவர்களும், நானும், இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவும் - ஏ.வி. மெய்யப்ப செட்டியார் கருத்தை ஏற்கவில்லை. "ஒரு அற்புதமான நடிகரை அவசரப்பட்டு இழந்துவிடக் கூடாது!"
என்று திட்டவட்டமாகக் கூறினோம்! 'பராசக்தி' படம் வெளிவந்தவுடன் அதை எரிச்சலுடன் விமர்சித்துக் கண்டனம் எழுதிய "தினமணிக் கதிர்" ஏட்டில் "பரப்பிரம்மம்" என்ற தலைப்பில் அந்தப் படத்தை ஏகடியம் செய்து கார்ட்டூனும் வெளியிட்டார்கள். உடனே நான் "பரப்பிரம்மம்" என்ற தலைப்பிலேயே ஒரு நாடகம் எழுதி நாடு முழுதும் நடத்த ஏற்பாடு செய்தேன். அதில் நானும், நடிகர் திலகம் சிவாஜியும் கழக நண்பர்களும் நடித்தோம். அந்த நாடகத்தில் "சேரன் செங்குட்டுவன்" வேடத்தில் சிவாஜி நடித்தது, இன்னமும் என் கண்முன்னால் நிற்கும் காட்சியாகும்!
கல்லக்குடி போராட்ட நிதி திரட்டுவதற்காக அந்த நாடகத்தைப் பயன்படுத்தினோம். இவ்வாறு கல்லக்குடி போராட்டம் 1953-ஆம் ஆண்டு நடைபெற்று நான் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையைப் பெற்று சிறை புகும் வரையில் சிவாஜி கணேசன், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தனது கலைப் பணியை ஆற்றி வந்தார்! ★ ★ ★ அதற்கிடையே இருபத்து ஏழாயிரம் ரூபாய் புயல் நிதி திரட்டப்பட்டு அதற்குக் கைத்தறி ஆடைகள் வாங்கி வழங்குகிற விழா சென்னையில் நடைபெற்றபோது, அந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி கணேசன் அழைக்கப்படவில்லை.
அவர் வெளியூரில் இருந்தபோது அவருக்குத் தெரியாமலே அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நிதி திரட்டும் பணியில் என்னுடன் பெரும் பங்கேற்றிருந்த சிவாஜி அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்பதில் நான் கண்ணுங் கருத்துமாக இருந்தேன் என்றாலும் சிவாஜியை வராமல் செய்யவேண்டுமென்பதில் அக்கறை காட்டியவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் இருந்த என்னை வந்து சிவாஜி பார்த்துவிட்டுப் போனார்.
என்னையும் அவரையும் சிறைச்சாலை ஆறுமாத காலம் பிரிந்துவிட்டதைப் பயன்படுத்திக் கொண்டு கழகத்திற்கு உள்ளே இருந்த சிலரும், கழகத்திற்கு வெளியே இருந்த சிலரும் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டு - அவரைக் கழகத்திலிருந்து பிரித்துவிட்டார்கள்! அவர் கழகத்திலிருந்து வெளியேற "திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட்டார்" என்பதே பெரும் குற்றச்சாட்டாக அப்போது வெடித்தது! அந்தக் குற்றச்சாட்டுக்கு அன்றைய தினம் கனம் ஏற்றிப் பேசியவர்கள் கொள்கைப் பற்றால்கூட அல்ல - சிவாஜியின் மீதிருந்த பொறாமையால் அவரை வெளியேற்ற வெகுண்டெழுந்தனர்!
கட்சியிலிருந்துதான் வெளியேறினாரே தவிர, அண்ணாவின் அன்பு உள்ளத்திலிருந்தும், என் உள்ளத்திலிருந்தும் யாராலும் வெளியேற்றவும் முடியவில்லை. அதனால் தான் நான் இரண்டாம் பாகத்தில் எழுதியிருந்ததைப்போல, சிவாஜியை "கணேசா! நீ எங்கிருந்தாலும் வாழ்க!"
என்று அண்ணா ஒரு மேடையில் வாழ்த்தினார். எங்களின் பாசம் மிகுந்த நட்பு, அந்த வெளியேற்றத்தால் வெட்டப்படவில்லை! அது தொடர்ந்தது - தொடர்ந்து கொண்டேயிருக்கிறது! இப்போது அவர் இல்லை - அந்தக் கலையுலக இமயம் சாய்ந்துவிட்டது - நானிருக்கிறேன் - நானுள்ள வரையில் அந்த நட்பின் ஈரம் காயப்போவதில்லை. எத்தனையோ நிகழ்ச்சிகள் - எவ்வளவோ சம்பவங்கள் - எதைச் சொல்வது? எதை விடுவது? அந்த நட்பின் அடையாளமாக, அந்த மாபெரும் கலை மகனுக்கு சென்னை மாநகரிலே ஒரு சிலை எழுப்ப கழகம் ஆட்சியிலே இருந்த காலத்தில் எடுத்த முயற்சிகளையும், அதற்கு இடைஞ்சல் விளைவிக்க என்னென்ன காரியங்கள் நடைபெற்றன என்பதையும் பின்னர் விரிவாக எழுது கின்றேன்.
இன்றைக்கும் அவருடைய செல்வங்கள் என்னிடம் அதே பற்றோடும், பாசத்தோடும் பழகும்போது அவர்களுடைய உருவத்தில் என் நண்பனைக் கண்டு வருகிறேன். ★ ★ ★
