நெஞ்சுக்கு நீதி
காரிருளில், காட்டாட்சி தர்பார்! · 377 / 391
16. காரிருளில், காட்டாட்சி தர்பார்! அன்று ... ஒரு நாள் ... நள்ளிரவு 2.30 மணி. நான் ஆலிவர் சாலையில் இருந்த என் இல்லத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். இரவு 12 மணி வரை படித்து விட்டுத் தூங்க ஆரம்பித்தேன். என் மகள் கனிமொழி "தாகம்" என்ற பத்திரிகையிலே எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, தூங்கச் சென்றேன். ஜெயலலிதாவின் காவல் துறையினர் எந்தவிதமான "வாரண்ட்"டும் இல்லாமல், வாயிற்கதவை உடைத்துக் கொண்டு, படுக்கை அறைவரை வந்து, என்னை எழுப்பிக் கைது செய்வதாகவும், உடனே கிளம்பும்படியும் கூறினார்கள்.
பக்கத்தில் இருந்த என் மனைவி ராஜாத்திக்கும் எதுவுமே புரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் தெரியவில்லை. "சரி - வருகிறேன்" என்று கூறிவிட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு, புறப்படத் தயாரானேன். வெளியே இருந்தவர்கள் யாரோ அதற்குள் கோபாலபுரத்திற்கு தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவிக்க, இரண்டு நிமிடங்களுக்கெல்லாம் மத்திய அமைச்சராக அப்போதிருந்த தம்பி முரசொலி மாறன், கலாநிதி மாறன், அவர் மனைவி ஆகியோர் வந்து காவல் துறையினரிடம் விசாரிக்க முற்பட, மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனுக்குப் பதில் கூறவே, எந்தக் காவல் துறை அதிகாரியும் தயாராக இல்லை.
என் கையைப் பிடித்தும், வலுக் கட்டாயமாக என்னைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்பதிலும் தான் காவல் துறையினர் அக்கறை காட்டினார்கள். தம்பி மாறனுக்குக் கோபம் வந்து, போலீசாரைத் தடுக்க முற்பட்டபோது, அவரையும் இழுத்துத் தள்ளிவிட்டு, என்னையும் அப்படியே தூக்கிக் கொண்டு இழுத்துச் செல்ல முற்பட்டனர். அன்றைய தினம் காவல் துறையினர் என்னைக் கைது செய்தபோது கைப்பந்தாக, கால் பந்தாக அடித்து உதைத்து அல்லாடச் செய்து மாடிப்படிகளில் போலீசார் இழுத்துச் சென்ற போது, முரட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் என் தோளைப் பிடித்தும், வலது கையைப் பிடித்தும், முதுகில் அழுத்தியும் தூக்கிய நேரத்தில் என் வலது கையில் ஏற்பட்ட வலி இன்னமும் முழுமையாக நீங்கியபாடில்லை.
வலது கையை அதற்குப் பிறகு முழுவதுமாக என்னால் நீட்ட இயலாமலே போய்விட்டது. எத்தனையோ ஆயிரம் உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதிய இக்கையால் இப்போது எழுதுவதற்கே கடினமாக இருக்கிறது என்று நான் அப்போதே செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறேன். மாடிப்படிகளிலேகூட காவல் துறையினர் என்னைக் கீழே இறங்கவிடவில்லை. குண்டுக் கட்டாகத் தூக்கி வந்த நிலையிலேதான் கீழே இழுத்து வந்து அங்கே உள்ள ஒரு காவல் துறை வாகனத்தில் போட்டார்கள்.
எல்லாம் ஒரு சில நிமிடங்களிலே நடைபெற்று முடிந்தன. வாகனத்தில் என்னை ஏற்றியதுதான் தாமதம், "சர்"ரென்று அந்த வாகனம் புறப்பட்டு விட்டது. வீட்டிலிருந்து நேராக வேப்பேரி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அதற்குள் அங்கே எங்கிருந்தோ பத்திரிகையாளர்கள் வந்து விட்டார்கள். ஆனால் காவல் துறையினர் அவர்களையும் அனுமதிக்காமல் லாரியில் அள்ளிச் சென்றனர். வேப்பேரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு ராஜாஜி ஹாலுக்கு அருகே உள்ள பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குப் பக்கத்தில் இருந்த சி.பி. சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கே என்னைக் காண வந்த என் குடும்பத்தினர், தயாளு, ராஜாத்தி, செல்வி, மருமகன் அரவிந்த், கனிமொழி, தமிழரசு ஆகியோரையெல்லாம் அந்தப் பகுதிக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. முரசொலி மாறன் மட்டும் மத்திய அமைச்சர் என்ற முறையில் நான் அமர வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நிற்பதற்குப் பெரிய மனது வைத்து அனுமதித்திருந்தார்கள்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு காவல்துறை அதிகாரிகளிடம் சற்று வேகமாகப் பேசிட முற்பட்டபோது, அவரை மத்திய அமைச்சர் என்றும் பார்க்காமல், காவல் துறையினர் தாக்கினர். எந்தச் சம்பவமும் ஒரு ஜனநாயக நாட்டிலே நடைபெறுவதாகவே தெரியவில்லை. சி.பி., சி.ஐ.டி., அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்னை வைத்திருந்தார்கள். ஆனால், நேரம் ஆக ஆக எப்படியோ செய்தி கேள்விப்பட்டுக் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.
எனவே அவசர அவசரமாக என்னை ஒரு வண்டியிலே ஏற்றினார்கள். அந்த வண்டியில் ஏற வந்த முரசொலி மாறனை வெளியே இழுத்து எறிந்தார்கள். எனக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு காவலர்கள் அமர்ந்து கொண்டார்கள். அதற்கு ஓராண்டிற்கு முன்பு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, செத்துப் பிழைத்த தம்பி முரசொலி மாறனைக் காவல் துறையினர் அன்றைய தினம் பந்தாடினார்கள். அவர் இடுப்பிலே கட்டியிருந்த "கைலி" அவிழ்ந்த நிலையில், அதை எடுத்து மீண்டும் கட்டிக் கொள்ளக்கூட அவரை விட வில்லை என்றால்; எந்த அளவிற்கு ஒரு சர்வாதிகார ஆட்சி அப்போது தமிழகத்திலே நடைபெற்றது என்பதை விளக்கத்தேவையில்லை.
அரசினர் விடுதியிலிருந்து பொழுது விடிவதற்குள்ளாகவே என்னைக் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள பெருநகர முதன்மை நீதிபதி அசோக்குமார் இல்லத்திற்கே "ரிமாண்ட்" செய்வதற்காக அழைத்துச் சென்றார்கள். என்னை அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகளைப் பார்த்து நீதிபதி அசோக் குமார், Is your heart made of Muscles or Mud?"
(உங்கள் இதயம் என்ன, தசையால் ஆனதா? அல்லது களிமண்ணால் ஆனதா?) என்று அவர் அன்றைய தினம் கேட்டது இன்னமும் என் நினைவிலே நன்றாக இருக்கிறது. "முதல் தகவல் அறிக்கை எங்கே?" என்று நீதிபதி கேட்டார். அதிலேதான் சென்னையில் மேம்பாலம் கட்டியதிலே நான்கு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று கூறப்பட்டிருந்தது. அதே வழக்கில் என்னோடு சேர்த்து மேயர் தம்பி மு.க. ஸ்டாலின், முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், ஐ.ஏ.எஸ்., மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏ.கே.ஜெகதீசன், ஆர்.எஸ்.
ஸ்ரீதர், மாநகராட்சிப் பொறியாளர் சேதுராமன் ஆகியோரும் இணைக்கப் பட்டிருந்தனர். நீதிபதி அசோக்குமார் ஜுலை 10ஆம் தேதிவரை ரிமாண்ட் செய்வதாகக் கூறினார். ஜுலை 3ஆம் தேதியன்று ஜாமீன் மனுதாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேலும் "என்னை சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகே, சென்னைச் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்றார்.
ஆனால், மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லாமல், சென்னை சிறை வாசலில் இருந்தபடியே வேலூர் சிறைக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியிலே காவல் துறையினர் ஈடுபட்டார்கள். நான் சிறை வாசலிலே அமர்ந்து காவல் துறையினரின் அந்த அடக்குமுறையைக் கண்டித்துப் போராட்டம் தொடங்குவதாக அறிவித்த பிறகுதான், அவர்கள் வேலூர் கொண்டு செல்லும் முயற்சியைக் கைவிட்டனர். என்னைக் கைது செய்ததுபோலவே, தம்பி ஸ்டாலின் வீட்டிற்கும் சென்று, காவல் துறையினர் அநாகரீகமாக நடந்து கொண்டு, தாக்குதல் நடத்தி அவரையும் கைது செய்தார்கள்.
என் கைது பற்றிக் கேள்வி கேட்ட ஒரே குற்றத்திற்காக மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனை காவல் துறையினர் தாக்கி, அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்தார்கள். மாறன் வீட்டில் காவல் துறையினர் உள்ளே நுழைய முயற்சித்தபோது, அதைத் தடுக்க முயற்சித்ததற்காக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தார்கள். ★ ★ ★ குடியரசுத் தலைவராக அப்போதிருந்த திரு.
கே.ஆர். நாராயணன் அவர்கள், ஆளுநராக இருந்த பாத்திமா பீவியைத் தொடர்பு கொண்டு, "தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?" என்று விசாரித்ததோடு, விவர அறிக்கையினையும் அனுப்பிடுமாறு கூறினார். குடியரசுத் தலைவர் பிரதமர் அலுவலகத்தோடும் தொடர்புகொண்டு கேட்டார். பிரதமர் வாஜ்பய் அவர்கள் முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு பேச முயற்சித்து முடியாததால், தலைமைச் செயலாளரிடம் தொடர்புகொண்டு பேசினார். 30.6.2001 அன்று காலையில், அண்ணா அறிவாலயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்று, அதிலே நிறைவேற்றிய தீர்மானத்தில், 2.7.2001 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
அ.தி.மு.க.வுடன் தோழமைகொண்டு 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டத.மா.கா. தலைவர், மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள், "இதுபோன்ற முறைகேடான நடவடிக்கைகளை ஜனநாயகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்காக நடு இரவில் அவரது இல்லம் சென்று, காவல் துறையினர் வயது முதிர்ந்த ஒரு அரசியல் தலைவரிடம் நடந்து கொண்ட முறை தவறானது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.
பிரதமர் வாஜ்பய், முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், சந்திரசேகர், உள்துறை அமைச்சர் அத்வானி, த.மா.கா. பேரவைத் தலைவர் ப. சிதம்பரம், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாய்க், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் சங்கரய்யா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவிப்பேரரசு வைரமுத்து, எம்.ஜி.ஆர்.
கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.
செல்லமுத்து, தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் இல. கணேசன், மத்திய ஊரக வளர்ச்சித் . துறை அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், தேசியச் செயலாளருமான ஷமீம் பைசி, 'மாலைமுரசு' நிர்வாக ஆசிரியர் பா.இராமச்சந்திர ஆதித்தன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், அகில இந்திய ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்து பத்திரிகையாளர் என். ராம், தமிழ் பா.ம.க. தலைவர் தீரன், சேலம் அமானுல்லாகான், எம்.ஜி.கே. நிஜாமுதீன், கு.ப. கிருஷ்ணன், ஜே.எம். ஆரூண், மக்கள் தமிழ் தேசத் தலைவர் கண்ணப்பன், பழ. கருப்பையா, முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் மாதவன், ஆசிரியர் சங்கத் தலைவர் க. மீனாட்சி சுந்தரம், சாம் ஏசுதாஸ் - ஆகியோர் என் கைதுக்காகத் தமிழக அ.தி.மு.க.
அரசைக் கடுமையாகத் தாக்கி அறிக்கைகளை விடுத்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த அறிக்கையில், "தென்னிந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை - 78 வயது முதியவரை - 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவரை அநாகரீகமான முறையில் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டது என்னை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் உள்ளத்தையும் கலங்க வைத்துள்ளது" என்று கூறினார்.
1.7.2001 அன்று "இந்து" நாளிதழ் எழுதிய தலையங்கத்தில், "முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி அரசியல் அராஜகத்தின் அடையாளமான நெருக்கடி நிலையின் நாட்களின் கருப்பு நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது" என்று தொடங்கி - மிக விரிவாக ஆட்சியினரைக் கண்டித்து எழுதியது.
அதைப்போவே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழும் கடுமையாகத் தலையங்கம் தீட்டியது. 8.7.2001 தேதியிட்ட "ஆனந்தவிகடன்" தனது தலையங்கத்தில், "நள்ளிரவைத் தாண்டி, கருணாநிதியின் வீட்டைப் போலீசார் அதிரடியாக முற்றுகையிட்ட காரணம் என்ன? அவருடைய அரசியல் அனுபவத்துக்கும், வயதுக்கும், மதிப்பும் மரியாதையும் கொடுக்காமல், ஏதோ பிக்பாக்கெட் கேடி மாதிரியாக அந்த முதியவரை சுற்றி வளைத்து, நெருக்கிப்பிடித்து, நெட்டித் தள்ளி, நியாய தர்மங்களை மீறி போலீசார் செயல்பட்டது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை காவல் துறைக்கும் அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கும் இருக்கிறது. கைவசம் பதவி இருக்கும் ஆணவத்தில் வஞ்சம் தீர்க்கும் வன்மத்தோடு எதிரிகளை வீழ்த்த நினைக்கும் சர்வாதிகாரப் போக்கு என்றுமே, எங்குமே ஜெயித்ததாக வரலாறு இல்லை" என்று எழுதியது.
நான் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதை தொலைக்காட்சியில் கண்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனத் தலைவரான வன்னிய அடிகளார் அவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு, 30.6.2001 அன்று இயற்கை எய்தினார். அவரைப் போலவே திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தப் பத்தர், கரூர் மாவட்டம் தனம்மாள், கோவையில் ஞானவேல், திருபுவனம் வரதராசன், ராமனாதபுரம் முகமது அலி ஜின்னா, கரூர் ராஜமாணிக்கம், கொட்டவாக்கம் மோகன், மயிலாடுதுறை அருகே விவசாயி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிர் இழந்தார்கள்.
விருதாசலம் தொலார் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். உடுமலைப் பேட்டை குமார் என்பவரும் தீக்குளித்தார். மேலும் விழுப்புரம் மல்லிகா, தஞ்சை சி.தண்டாயுதபாணி, திருவண்ணாமலை சண்முகம், சிவகங்கை அரசப்பன், ராமேஸ்வரம் சோமு சேர்வை, தர்மபுரி அமிர்தாம்பாள் , உடையார்பாளையம் வசந்தி, விழுப்புரம் சையத்துனிசா, திட்டக்குடி மு. சீனிவாசன், புளியங்குடி ராமையா, ஒட்டன்சத்திரம் மொட்டை நாயக்கர், எழும்பூர் அ.மு.
மாசிலாமணி, பூலாம்பட்டி குப்புசாமி, பம்மல் திருமதி லீலாசாமி, ஒட்டன்சத்திரம் ஈஸ்வரி, ஊட்டி வி.எல்.கே.அசோக், நரசிங்கபுரம் பொன். ராமன், பெரமனூர் செட்டியப்பன், கரூர் பள்ளப்பட்டி ஏ.என். அப்துல் வகாப், காளப்பட்டி என். ஞானசேகரன், கடலூர் சக்திவேல், அரவக்குறிச்சி காளிமுத்து, தஞ்சை வடக்கு வாசல் உஷா, முள்ளிப் பள்ளம் புவனேஸ்வரி, இனாம்புலியூர் சின்னதுரை, நாமக்கல் வரதராசன், புதுவை அரிதாஸ், சென்னை முருகேசன் உட்பட - நான் கைது செய்யப்பட்ட காரணத்தால், அப்போது 67 பேர் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்தனர்.
அதுபற்றி உடனடியாகப் பேராசிரியர், "யாரும் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று அறிக்கை விடுத்தார். என்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே கழக முன்னணியினர் கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என். நேரு, சற்குணப் பாண்டியன், எம்.ஆர்.கே. பன்னீர்ச்செல்வம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்கள்.
நான் ஆலிவர் சாலை இல்லத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியை நேரில் கண்ட துணைவியார் ராஜாத்தியின் தா
யார், அந்தக் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், நான் கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் உயிரிழந்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் செல்லக் கூட காவல் துறையினர் என்னை அனுமதிக்க வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் குழு ஒன்று சென்னைக்கு வந்தது. அந்தக் குழுவினர் சென்னை சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தது. அவர்கள் என்னைச் சந்திக்க உள்ளே வந்தபோது, அவர்களுடன் வந்த முரசொலி செல்வத்தையும், மாறன் மகள் அரசியையும் காவல் துறையினர் என்னைப் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
பின்னர் மத்தியக் குழுவினர் ஆலிவர் சாலையில் உள்ள என் இல்லத்திற்குச் சென்று, அங்கே காவல் துறையினர் செய்திருந்த கொடுமைகளையெல்லாம் நேரில் கண்டதோடு, அங்கேயிருந்த ராஜாத்தியின் தாயார் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகத்தில் நடைபெற்ற இத்தகைய கொடுமைகளைப் பற்றி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு எந்த அறிக்கையையும் அனுப்பாததால், குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஆளுநரைத் தொடர்புகொண்டு அறிக்கை கேட்டார்கள்.
1.7.2001 அன்று காலையில் பிரதமர் வாஜ்பய் தலைமையில் மத்திய அமைச்சரவைகூடி, மறுநாள் காலை 9 மணிக்குள் ஆளுநர் அறிக்கை அனுப்ப வேண்டுமென்று தெரிவித்ததின் அடிப்படையில், ஆளுநர் அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கை குறித்தும் மத்திய அமைச்சரவை விவாதித்தது. தமிழக ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் முடிவினைத் தொடர்ந்து, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி 1.7.2001 அன்று பதவி விலகினார்.
ஆந்திர ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார். என்னை விடுதலை செய்யக் கோரி 2.7.2001 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்பு மிகப்பெரும் வெற்றி யடைந்தது. ஒரு கடைகூட அன்று தமிழகத்திலே திறக்கப்படவில்லை. முழு அடைப்பை யொட்டி, பனகல் பூங்கா அருகில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி, வி.கே.லெட்சுமணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்டனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் உடன்வர சென்னை சிறைச் சாலைக்கே வந்து என்னைச் சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர்மீது தமிழக அரசு தொடுத்த வழக்குகளைத் திரும்பப் பெற்றனர். 4.7.2001 அன்று மத்திய அரசின் எச்சரிக்கை - நீதிபதி கண்டனம் ஆகியவற்றால் ஜெயலலிதா அரசு பணிந்து, மத்திய சிறையிலிருந்து என்னை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியான நான், நேராக அண்ணா அறிவாலயம் சென்று, அங்கே காத்திருந்த நூற்றுக்கணக்கான செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்க மளித்தேன்.
இந்த வழக்கில் நீதிமன்றம் என்னை எப்படி விடுவித்தது என்பது பற்றிச் சற்று விரிவாகக் கூற வேண்டும். சென்னை மத்திய சிறையிலே இருந்த என்னைச் சந்திக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், சென்னை உயர் நீதி மன்றத்திலே ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார். அந்த வழக்கு, டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் நாராயண குரூப், ஏ. ராமமூர்த்தி ஆகியோர் முன்பு 3.7.2001 அன்று காலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் சங்கரசுப்பும், அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனும் ஆஜரானார்கள். அப்போது நடந்த வாதம் வருமாறு :- சங்கரசுப்பு :- முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கைது செய்யும்போது போலீசார் அவரை அடித்து சித்ரவதைப் படுத்தியுள்ளனர். இப்படிக் கொடூரமாகத் தாக்கப்பட்டவரைச் சந்திக்க வழக்கறிஞர் என்ற முறையில், அவருக்கு சட்ட உதவி தர மத்திய சிறைக்குச் சென்றோம். அனுமதி மறுத்துவிட்டனர்.
அவரைச் சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் :- இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, இதைத் தள்ளுபடி செய்யவேண்டும். நீதிபதிகள் :- (அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கோபமாக) இது முக்கிய வழக்கு. இதுபற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் சர்வ சாதாரணமாகக் கூறுகிறீர்களே? சென்னையில் மக்கள் குடிநீர் இல்லாமல் குடத்தை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக அலைகிறார்கள். இந்தக் குடிநீர் பஞ்சம் இருக்கும் போது மாநகராட்சியைக் கலைக்கக் கூறி நோட்டீஸ் தருகிறார்கள்.
இது நியாயமா? குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காமல், இப்படிக் கைது செய்து அதை திசை திருப்புவது சரியா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கிரிமினல் குற்றவாளி என்று தனி நீதிமன்றம் ஜெயலலிதாவைக் கூறி அவருக்கு இரண்டாண்டுக்குமேல் சிறைத் தண்டனை கொடுத்துள்ளது. இப்படிப்பட்டவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இவர் முதல்வராக இருப்பதால் அரசியல் தலைவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகிறார். இது முக்கியப் பிரச்சினை.
இந்த வழக்கிற்குத் தெளிவாக உடனே பதில் கூற வேண்டும். கருணாநிதியைச் சந்திக்க அனுமதிக்காதது தவறு இல்லையா? மதியம் 2.15 மணிக்கு வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்கிறோம். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நீதி மன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். (பிற்பகல் விசாரணையின்போது) நீதிபதிகள் :- தற்போது ஜெயலலிதாவின் நிலை தடுமாற்றமாக உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா தனது கோபத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டாமா?
அட்வகேட்ஜெனரல் என்.ஆர். சந்திரன் :- தடுமாற்றம் இல்லை - தெளிவாக உள்ளார். நீதிபதிகள் :- அரசு சரியாக நடக்கவில்லை. இடைக்கால காபந்து அரசு செயல்படுவதுபோல உள்ளது. இதில் ஜெயலலிதா கொள்கை முடிவு சரியானது அல்ல. அட்வகேட் ஜெனரல் :- தற்போது கிடைத்த தகவல்படி கலைஞரை அரசு விடுதலை செய்து விட்டதாகக் கருதுகிறேன். (நீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எட்டியதன்பேரில், அரசு என்னை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது) ★ ★ ★ 5.7.2001 அன்று ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் டாக்டர் பி.ராமமூர்த்தி, டாக்டர் தணிகாசலம், டாக்டர் கோபால் ஆகியோர் வலியுறுத்தியதன்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
அதே நாளில் "இந்து" நாளேடு எழுதிய தலையங்கத்தில், "கடமையை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில், சட்டத்தைக் கையில் எடுத்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி எழுதியது. 9ஆம் தேதிவரை மருத்துவமனையிலே இருந்துவிட்டு இல்லம் திரும்பினேன். அந்த மாதத்திலேயே மத்திய அரசின் உத்தரவின்படி தேசிய பாதுகாப்பு (இசட் பிரிவு) கறுப்புப் பூனைப் படையினர் பாதுகாப்பு எனக்கு வழங்கப்பட்டது.
நான் கைது செய்யப்பட்டதை அடுத்து, திரையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், நெப்போலியன், பார்த்திபன் போன்ற பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதிலும் சரத்குமார், தனது அறிக்கையில் அரசை வேகமாக எப்போதும்போலத் தாக்கியிருந்தார். அதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர், 6.7.2001 அன்றிரவு 12 மணி அளவில் ஆட்டோவில் வந்து சரத்குமார் வீட்டைச் சரமாரியாகத் தாக்கினார்கள்.
தாக்குதல் நடைபெற்றபோது நல்லவேளையாக சரத்குமார் வீட்டில் இல்லை. அவரது துணைவியார் திருமதி ராதிகாவும், மகனும் வீட்டிலே இருந்திருக்கிறார்கள். காவல் துறையினரிடம் புகார் செய்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ★ ★ ★
