உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அன்றே ஆரம்பமான
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அன்றே ஆரம்பமான · 376 / 391

15. அன்றே ஆரம்பமான பொய் வழக்கு! ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக அணி பெற்றத் தோல்விக்குப் பிறகு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கழகத் தோழர் வெ.முத்து, அந்தத் தேர்தலில் தி.மு. கழகத்தின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், 15.5.2001 அன்று தீக்குளித்து உயிர்விட்டார். அவர் உயிர் துறப்பதற்கு முன்பு, அந்தத் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவராமனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டுத்தான் மறைந்தார்.

அந்தக் கடிதத்திலே - "அரசியல் ஆதாயம் பெற்று அரியணை ஏறுகிறது அ.தி.மு.க. அரசு. நல்லவர், பண்பாளர், கலைஞர் அவர்களின் பாசறையில் வளர்ந்த தங்களின் (சிவராமனின்) தோல்வி வெட்கக் கேடானது. இறப்பதைத் தவிர வேறு நன்றி செய்ய முடியாது. எவ்வளவோ இளைஞர்கள் கழகத்தில் துடிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் மனம் தளராமல் கழகத்தைத் தலைவர் கலைஞர், மேயர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காப்பாற்றுங்கள்... எனது சடலத்தை கறுப்பு சிவப்பு துணியால் போர்த்தவும்.

நல்லவருக்கு சோதனை வந்தால் நாடு தாங்காது. கழகம் வாழ்க! தலைவர் கலைஞர் வாழ்க! இப்படிக்கு வெ.முத்து, ஆசாரி தெரு, மதுரை ரோடு, திருப்பத்தூர்" என்று எழுதியிருந்தார். ✽ "முத்துவைப்போலவே, பொள்ளாச்சியில் கழக உடன் பிறப்பு நாகராசன் என்பவரும் தேர்தல் தோல்விக்காகத் தீக்குளித்து மாண்டார் என்ற செய்தி வந்தது. உடனடியாக நான் விடுத்த அறிக்கையில் - ✽ "ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம்.

வெற்றி கிடைக்கும்போது வெறி கொண்டலைவதும், தோல்வி வரும்போது துவண்டு விடுவதும் நல்லதல்ல. எனவே, கழக உடன்பிறப்புகள் தேர்தல் முடிவிற்காக வருந்தி, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வது என்பது என்னைப் பெரிதும் வருத்தும் செயலாகும். கழக உடன்பிறப்புகளை மன்றாடி நான் கேட்டுக் கொள்வது, இப்படிப்பட்ட செயல்கள் இனியும் தொடர வழி வகுக்கக்கூடாது" என்று கேட்டுக் கொண்டேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளே, ம.தி.மு.க., தி.மு.கழக அணியிலிருந்து பிரிந்து போனதைக் கண்டித்து, அந்தக் கட்சியிலிருந்து விலகி, கழகத்தில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், 14.5.2001 அன்று இரவு 9 மணி அளவில், தரமணி சாலையில் டைடல் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த நேரத்தில், இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்களில் சில குண்டர்கள் வந்து, ராதாகிருஷ்ணனைப் பயங்கரமாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

ராதாகிருஷ்ணன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுப் பிழைத்துக் கொண்டார். ★ ★ ★ வாக்குப்பதிவு நாளன்று, எழும்பூர் தொகுதி கழக வேட்பாளர் தம்பி பரிதி இளம்வழுதியைக் கொலை செய்ய முயன்று, ஓட ஓட விரட்டி, வெடிகுண்டுகளால் தாக்கியபோது, அவர் தப்பியோடி பிழைத்துக் கொண்டார். அவரை எதிர்த்து நின்று, அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.க. அணியின் வேட்பாளர் உட்பட சிலரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் மாறி, ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற காரணத்தால், உடனடியாகப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து, தாக்குதலுக்கு ஆளான பரிதி இளம்வழுதியையே காவல்துறை கைது செய்து, வேலூர் சிறையிலே கொண்டுபோய் அடைத்தனர். அந்தச் செயலைக் கண்டித்து நான் ஒரு கண்டன அறிக்கை விடுத்தேன். ★ ★ ★ கவர்னர் இவ்வாறு அவசர அவசரமாக பதவியேற்பு செய்துவைத்ததையொட்டி கவர்னர்மீது வழக்கு தொடரப்படும் என்ற ஒரு கருத்து வெளிவந்தபோது, ஜெயலலிதா, "கவர்னரின் செயல்களை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது - கவர்னர் முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று கூறினார்.

ஆனால், 1995ஆம் ஆண்டு, டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாமீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதியளித்தபோது, கவர்னருக்கு எதிராக ஜெயலலிதா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திர- மல்ல - கவர்னர் சென்னா ரெட்டி அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை சட்டப் பேரவைக் கோருகிறது - என்ற தீர்மானத்தையும் பேரவையிலே நிறைவேற்றினார்.

★ ★ ★ 15-5-2001 அன்று "இந்து" தலையங்கத்தில் - சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உறுதியாக தடை செய்யப்பட்ட ஒருவர் முதலமைச்சராவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல் முறை என்றும், "இரு நிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு - சட்ட ரீதியாகவும், நியாயப்பூர்வமாகவும் வேதனையளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது!"

என்று எழுதியது. மேலும் சில பிரபல ஆங்கில ஏடுகள் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டவர் முதல்வர் பதவியேற்று தார்மீக நெறியை மீறிவிட்டார் என்று எழுதின. "ஆனந்தவிகடன்" தனது தலையங்கத்தில், தன்மீதுள்ள களங்கத்தைச் சட்ட ரீதியாக துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும். அதுதான் கண்ணியமும் கௌரவமுமிக்க அந்தப் பதவிக்கும் அழகு. அவருக்கும் அழகு!"

என்று எழுதியது. ஆனால், அ.தி.மு.க.வில் நண்பர் சேடப்பட்டி முத்தையா மத்தியிலே 1998ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தார். அவர்மீது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று சேடப்பட்டி முத்தையா சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மீதான புகாரில் ஆதாரம் உள்ளதாகக் கூறி அவரது மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதற்காக சேடப்பட்டி முத்தையா "மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்" என்று அறிவித்துவிட்டார். ஆனால், ஜெயலலிதா புகைவண்டியில் சென்று கொண்டிருந்த சேடப்பட்டியைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, தான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படிக் கூறிவிட்டதாக ஏடுகளுக்குத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் அவரை நேரில் சந்தித்து விவரம் கேட்ட நேரத்தில், "ஊழல் உள்ளிட்டவை தொடர்பாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களோ - அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களோ - அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால் அவர்கள் பதவி விலக வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களைப் பிரதமர் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார். 15.4.1998 அன்று சென்னையிலே நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னரும் இதையே செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறினார். ★ ★ ★ இதைத் தொடர்ந்து 20-4-1998 அன்று "தினமணி" தனது தலையங்கத்தில், "குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அமைச்சர்களாக நீடிக்கக்கூடாது என்பதால் சேடப்பட்டியை விலகச் செய்து, அதே கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் மீதும் வலியுறுத்தும் ஜெயலலிதா, தன்மீது எண்ணற்ற வழக்குகளும், ஒரு வழக்கில் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் எப்படி முதல்வர் பதவியை ஏற்க முடியும்?"

என்று எழுதியது. ஜெயலலிதாவின் வலியுறுத்தல் காரணமாகப் பிரதமராக இருந்த வாஜ்பய் மத்திய அமைச்சராக இருந்த பூட்டாசிங் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். அந்த அளவிற்குக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அமைச்சர் பதவியிலே இருக்கக்கூடாது என்று தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரும், மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும் பதவி விலகக் காரணமாக இருந்த ஜெயலலிதாமீது, கொடைக்கானல் ப்ளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கிலே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சாட்சியங்கள் எல்லாம் முடிவுற்று, இறுதியாக ஓராண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதைப்போலவே டான்சி நில ஊழல் வழக்கிலே மூன்றாண்டு காலம் ஜெயலலிதாவிற்குச் சிறைத்தண்டனை அப்போது விதிக்கப்பட்டிருந்தது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாலே பதவியிலியிருந்து விலக வேண்டும் என்று வாதிட்ட ஜெயலலிதா, இவ்வளவு தண்டனைகளைப் பெற்ற பிறகும், 2001இல் அவசர அவசரமாக ஆளுநர் மூலமாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ★ ★ ★ தேர்தல் முடிவுகளும், ஆட்சி மாற்றமும் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே கால கட்டத்தில், தந்தை பெரியார் அவர்களின் "குடியரசு" பத்திரிகை அலுவலகத்தில் என்னுடன் இருந்த தவமணி இராசன் 19-5-2001 அன்று திடீரென மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தி, நான் விடுத்த இரங்கல் செய்தியில் - "பெரியாரின் குடியரசு பத்திரிகை அலுவலகம் எனும் குருகுலத்தில் என்னுடன் சக மாணவராக இருந்தவரும், பெரியாரின் பேரன்பைப் பெற்று இயக்கம் வளர்த்தவரும், சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் என்னைச் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டவரும், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர்களில் ஒருவருமான அருமைத் தோழர் தவமணி இராசன் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனத்தை உலுக்கிவிட்டது.

தலைதாழா தன்மானச் சிங்கமாக வாழ்ந்து மறைந்த அவரது நினைவு என்றென்றும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கும். வாழ்க தவமணி இராசனின் புகழ்!" என்று தெரிவித்தேன். தவமணி இராசனின் மறைவைத் தொடர்ந்து, சேலம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த தம்பி ஆ.நெடுஞ் செழியன் சில நாட்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தவர், 21.5.2001 அன்று மறைந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தின் அன்புச் செல்வன்தான் நெடுஞ்செழியன்.

என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தவன், எப்படி ஆறுமுகத்திற்கு ஆறுதல் கூறுவேன்? மருத்துவமனைக்கே நேரில் சென்று மறைந்தவருக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன். ★ ★ ★ தேர்தல் முடிவுகளைப் பற்றி விவாதிக்க, 23.5.2001 அன்று கழகத்தின் நிர்வாகக் குழு சென்னையில், அண்ணா அறிவாலயத்தில், என் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள்பற்றி விரிவாக பேசப்பட்டது. கழகப் பணிகள் விரைவாகவும், விறுவிறுப்பாகவும் தொடர்ந்து நடைபெற தலைமைக் கழகத்தின் சார்பில் 17 மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

★ ★ ★ ✽ "ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். பொறுப்பேற்ற இரண்டு நாட்களிலேயே கழகச் சட்டமன்ற உறுப்பினர், பரிதி இளம்வழுதிமீது பொய் வழக்குப் போட்டுச் சிறையிலே அடைத்ததைத் தொடர்ந்து, ஆற்காடு வீராசாமியின் இளவல் தேவராஜ், நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த திருப்போரூர் பரசுராமன், புரசைவாக்கம் ரெங்கநாதன் ஆகியோர்மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

✽ "அதைப்போலவே கழக அரசினால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மூடு விழா நடத்தினார்கள். ✽ "ஜுன் 3ஆம் தேதியன்று என்னுடைய பிறந்த நாளை யொட்டி பனகல் பூங்கா அருகில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியைக்கூட வழங்க மறுத்துவிட்டார்கள். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலித்து என்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தார். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே, இரண்டு முறை அந்தச் சர்க்காரியா கமிஷன் அறிக்கைமீது நடவடிக்கையெடுக்க முயன்று, அரசு வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டபோதே, அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதென மறுத்துவிட்டார்கள்.

பொய் வழக்குப் போடப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்ட பரிதி இளம்வழுதியை உயர் நீதிமன்றம் 30-5-2001 அன்று விடுதலை செய்தது. அதே நாளில், ஜெயலலிதாவின் பழி வாங்கும் நாடகம்பற்றி "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கத்தில் - ✽ "முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றது அரசியல் சட்ட ரீதியில் சரியானதா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கும் நிலையில், தமிழகத்தின் அரசியல் வழிகாட்டு முறையானது சோர்வடைவதாய் உள்ளது.

தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள சட்ட மன்றத்தில் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிமீதான ஊழல் வழக்கைத் திரும்ப விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அண்மையில்தான் மூன்று வழக்குகளில் கடுங்காவல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சட்ட விதிகளைத் தன் துணைக்கு வேறு வழியின்றி அழைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

✽ "ஆனால், அது மட்டுமே இங்கு பிரச்சினையில்லை. புதிய முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மோசமான அரசியலின் துர்நாற்றத்தை கிளப்புகிறது. அவர் முதன் முறையாக முதலமைச்சராக இருந்தபோது எல்லாமே அவர்தான் என்பது போன்றதொரு தோற்றத்தை அவர் ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்கப்படுத்தித் தன்னிச்சையான ஊழல் நடவடிக்கைகளின் 50 மூலம் சகதியை அவர் பூசிக்கொண்டார் என்பதும் தெள்ளத் தெளிவு" என்று எழுதியது.

2.6.2001 அன்று உலகைத் திடுக்கிட வைத்த ஒரு சம்பவம் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஆமாம் - நேபாள மன்னராக இருந்தவர் பீரேந்திரபீர் பிக்ரம் ஷா தேவா என்கிற பீரேந்திரா. அவருடைய வயது 56. அரசி ஐஸ்வர்யா. அவருடைய வயது 51. மன்னரையும், அரசியையும், மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த மன்னரின் இளைய மகன் நிரஞ்சன், மகள் ஸ்ருதி, தற்காலிக மன்னராக அறிவிக்கப்பட்டிருந்த ஞானேந்திரரின் மனைவி ஜெயந்தி, மன்னரின் சகோதரர்கள் சாந்தி சிங், சாரதா சிங், மைத்துனர் குமார் கத்காவிக்ரம் சிங் ஆகியோரை, பீரேந்திரரின் மூத்த மகனான இளவரசர் திபேந்திரர் தனது திருமணத் தகராறு காரணமாகத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார்.

பெற்றோரையும், குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, தானும் சுட்டுக் கொண்ட இளவரசர் திபேந்திரர் முதலில் கோமா நிலையில் இருந்து, பின்னர் அவரும் இறந்தார். லண்டனில் படித்தபோது காதலித்த தேவயானி என்ற பெண்ணை மணம் செய்யக் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். "இளவரசர் 35 வயதை எட்டும்முன் அவருக்குத் திருமணம் செய்யக் கூடாது - குழந்தையும் பிறக்கக் கூடாது - அப்படி நடந்தால் மன்னர் உயிருக்கு ஆபத்து" என்று ஜோதிடர்கள் எச்சரித்திருந்தார்களாம்.

அதன் காரணமாக ராணி திருமணத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம். திருமணத்தைத் தள்ளிப் போடுவதில் விருப்பமில்லாத இளவரசர், அந்த முடிவினைத் தேர்ந்தெடுத்தாராம். முதல் தகவல்கள் இவ்வாறு தெரிவித்தபோதிலும், பின்னர் தானியங்கித் துப்பாக்கி, தற்செயலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தினாலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்தார்கள். நேபாளம் இந்தியாவிற்கும், திபெத்திற்கும் இடையே உள்ள நாடு. 29 ஆயிரம் அடி உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில்தான் உள்ளது.

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் பாதி காடாகவும், மீதி வேளாண்மை நிலமாகவும், வடக்குப்பகுதி மலைப்பாங்கான குன்றுகளைக் கொண்ட பகுதியாகவும் வியாபித்துள்ளது. அரச பரம்பரையின் நிறுவனர் பிருத்வி நாராயண் ஷா என்பவர் 1768இல

் நேபாள பள்ளத்தாக்கில் பரந்து கிடந்த பல குறுகிய கூர்க்க ராஜ்யங்களை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். உலகத்திலேயே இந்து மத நாடு என்று அழைக்கப்படுகின்ற நாடு நேபாளம் ஒன்று தான். 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளதும், 2 கோடியே 47 லட்சம் மக்கள் தொகை கொண்டதும், காத்மாண்டு நகரைத் தலைநகரமாகக் கொண்டதும், லலித்பூர், பிராட் நகர் எனும் இரு நகரங்களை உள்ளடக்கியதும், நேபாளி, நிவாரி, புத்தியா, மைதலி ஆகிய மொழிகள் பேசு வோரைக் கொண்டதுமான நாடு நேபாளம்.

அங்கே 1972ஆம் ஆண்டு மணிமுடி சூட்டிக் கொண்டவர்தான் அப்போது கொலை செய்யப்பட்ட பீரேந்திரா. அவ்வப்போது அங்கு தோன்றிய முடியரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் - குறிப்பாக மாவோயிஸ்டுகள் நடத்திய புரட்சிகள் காரணமாக, 1990ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் மன்னர் பீரேந்திரா ஒரு புதிய அரசியல் அமைப்பை அறிவித்து, அனைத்துக் கட்சி ஜனநாயகத்தை உருவாக்கி, அந்த அமைப்புக்குமேலே மன்னராகப் பதவி வகித்தார். ஒருமுறை மன்னர் நேபாளத்தின் கிழக்குப் பிராந்திய பகுதிகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அரசு வரித்துறை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

மேல் அதிகாரியின் இருக்கை காலியாக இருந்தது. மன்னர் அந்த இருக்கையிலே சென்று அமர்ந்தார். அந்த இருக்கையில் அமர வேண்டிய உயர் அதிகாரி தாமதமாக அலுவலகத்திற்கு வந்தார். தனது நாற்காலியில் மன்னரே அமர்ந்திருந்ததைக் கண்டு வெட்கித் தலைகுனிந்தார். மன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மற்றொரு முறை. பீர்கானி என்ற பகுதிக்கு மன்னரும் மகாராணியும் சென்றார்கள். ரிக்ஷா ஒன்றில் செல்ல வேண்டுமென்று விரும்பிய அவர்கள், தாங்கள் யார் என்பதைச் சொல்லாமலே, அங்கே நின்றிருந்த ரிக்ஷாவில் ஏறிப் பயணம் செய்தார்கள்.

வழியில் ரிக்ஷாக்காரனிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அவனும் தனது ஏழ்மையைப் பற்றியெல்லாம் விவரித்தான். பின்னர் அந்த வண்டியிலிருந்து இறங்கியவுடன், மன்னர் தம்பதிகள் பெரும் தொகை ஒன்றை ரிக்ஷா ஓட்டுநரிடம் தர, அப்போதுதான் மன்னர் குடும்பத்தினர் தன் ரிக்ஷாவில் பயணம் செய்த செய்தி அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினானாம். ★ ★ ★ நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, நேபாள நாட்டின் புதிய மன்னராக ஞானேந்திரர் பதவியேற்றார்.

அரச குடும்பத்தினர் படுகொலை மர்மம் குறித்து விசாரணைக்கு உத்தர விடக்கோரி, தலைநகர் காத் மாண்டுவிலும், லலித்பூர் நகரிலும் பொதுமக்கள் கிளர்ச்சியிலே ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைத்து விரட்டப் போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளும் வீசப்பட்டன. நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால், வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுமாறு ராணுவத்தினருக்கும், போலீசாருக்கும் உத்தரவிடப் பட்டது.

பல்வேறு இடங் களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையில் அரச குடும்பத்தினர் படுகொலை மர்மம் குறித்து விசாரணைக்கு புதிய மன்னர் உத்தரவிட்டார். ★ ★ ★ 3.6.2001 அன்று வழக்கம்போல எனது 78வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய், மக்களவைச் சபாநாயகர் ஜி.எம்.சி.

பாலயோகி, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். கழகத்தின் பல்வேறு அணிகள் சார்பில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பொதுக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தோழமைக் கட்சியினர், கழகத்தின் பல்வேறு மட்டங்களிலே உள்ளவர்கள், திரை உலகத்தினர் என்று ஏராளமானவர்கள் நேரில் வந்து எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கழகம் தோற்றுவிட்டது என்ற காரணத்தாலோ என்னவோ, எல்லா ஆண்டுகளையும்விட கழகத் தோழர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. செய்தியாளர்களே அதைப் பார்த்து விட்டு, "எந்த ஆண்டும் கூட்டம் நெருக்குகிறதே" இல்லாத அளவிற்குக் என்று கேட்டபோது - "தி.மு.கழகத் தொண்டன் எப்பொழுதுமே தோல்வி கண்டு துவண்டு விடமாட்டான் என்பதற்கு அடையாளம்தான் இந்தக் கூட்டம்" பதிலளித்தேன். ★ ★ ★ 4.6.2001 அன்று காலையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் என்னுடைய தலைமையில் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்று, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2001ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயகம் என்று புகழப்படும் பிரிட்டனில் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில், தொழில் கட்சி அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்திற்கு மொத்தம் உள்ள 659 தொகுதிகளில், தொழில் கட்சி 413 இடங்களைக் கைப்பற்றியது. செட்ஜ் பீல்டு தொகுதியில் வெற்றிபெற்ற அந்தக் கட்சியின் தலைவரான டோனி பிளேர் மீண்டும் பிரதமரானார். தொழில் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சி இரண்டாவது முறையாகத் தொடர்ந்து அந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது.

162 இடங்களில் மட்டும் அந்தக் கட்சி வெற்றி பெற்றது. நூறாண்டு கால தொழில் கட்சி வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது, அதுவே முதல் முறை. எனவே தொழில் கட்சிக்கு சிறப்புமிக்க வெற்றியாக அது கருதப்பட்டது. பிரிட்டனின் மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 47 இடங்கள் கிடைத்தன. அந்தக் கட்சியின் தலைவரான சார்லஸ் கென்னடி, டிங்வால் தொகுதியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

★ ★ ★ ஜெயலலிதா பதவியேற்ற ஒரு மாதத்திற்கெல்லாம் வேகமாக நடைபெற்ற செயல்பாடுகள் என்னவென்றால், கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களையும், சாலைப் பணியாளர்களையும் பதவி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ✽ சிறையில் இருந்த புரசைவாக்கம் ரெங்கநாதன் அவர்களைப் பார்க்கச் சென்ற ப.சிதம்பரம் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ✽ அண்ணா நினைவிடத்திலே இருந்த முகப்புக் கதிர்கள் முதலில் தாள்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டன, பின்னர் அதை அப்படியே இடித்து அகற்றினார்கள்.

✽ விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளராக இருந்த முடக்கத்தான் பாண்டி மதுரையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றுகோரி, மாவட்டத் தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரெனக் கைது செய்யப்பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று கூறி நான் அறிக்கை விடுத்தேன்.

★ ★ ★ 15.6.2001 அன்று, திருவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவரும். சட்டமன்ற முன்னாள் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தவருமான இரா.தாமரைக்கனி, அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து கழகத்திலே தன்னை உறுப்பினராக ணைத்துக் கொண்டார். அதே நாளில் வெளிவந்த "எகனாமிக் டைம்ஸ்" ஆங்கில நாளேடு, பெரும் நிறுவனங்களின் முதலீட்டைப் பெறுவதில் தி.மு.கழக ஆட்சியில் தமிழ்நாடு முதல் இடம் வகித்தது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக மிக விரிவாகச் செய்தி வெளியிட்டது.

27.6.2001 தேதிய "துக்ளக்" இதழிலே, "கருணாநிதி எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே ஜெ.அரசு செயல்படுகிறது, மத விரோதங்களைக் கிளப்பிவிடக்கூடிய விஷயத்தில் காட்டப்பட வேண்டிய பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையை, இந்த அரசு காட்டவில்லை - இது நல்லதல்ல" என்றெல்லாம் எழுதியது. ★ ★ ★ அமைச்சரவை மாற்றங்களும் அடிக்கடி நடைபெற்றன. 2001 மே மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதா பதவியேற்றவுடன், ஐந்து அமைச்சர்கள் அன்றைய தினமே பதவியேற்றார்கள்.

மீண்டும் 19ஆம் தேதியன்று மேலும் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றார்கள். அதற்கடுத்த ஜுன் மாதம் 9ஆம் தேதியன்று அமைச்சர்களாக இருந்த அய்யாறு வாண்டையார் பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.விசுவநாதன் ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்தார். அன்றைய தினம்மேலும் 7 அமைச்சர்களின் துறைகளை மாற்றினார். அதே மாதம் 11ஆம் தேதி மூன்று பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 26.6.2001 அன்று வெங்கடாசலம் என்ற அமைச்சர் நீக்கப்பட்டு, வளர்மதி ஜெபராஜ் என்பவர் புதிய அமைச்சராக்கப்பட்டார்.

அமைச்சர் பதவியில் வெங்கடாசலம் 39 நாட்கள் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி புது டெல்லியிலிருந்து வெளி வரும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்"" 28.6.2001 அன்று தலையங்கத்தில் எழுதும் போது- ✽ "தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தனக்குத்தானே அமைத்துக் கொண்ட வினோதமான நடத்தையின் விதிகளின்படி கூட ஒரு மாதத்திற்கு மேற்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாக நான்கு அமைச்சர்களை நீக்கியிருப்பது, குறைவாக விமர்சிப்பதானால் விளையாட்டுத்தனமாக உள்ளது.

மாபெரும் தலைவர்களான ஈ.வெ.ரா., அண்ணா போன்றவர்களால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கத்தில், பகுத்தறிவு ஒரு கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா தலைமையில் உள்ள கட்சி அதை துதிபாடுவதாக மாற்றிவிட்டது. அதன் விளைவாக தற்போது அ.தி.மு.க. ஒரே பெண்ணின் கட்சியாக காட்சியளிக்கிறது. ✽ "அவரிடமோ, அவருடைய கட்சியிலோ உள்கட்சி ஜனநாயகம் இல்லை. தன்னுடைய சொந்தத் தகுதிகளே சந்தேகத்திற்குரிய நிலையில், தனது அமைச்சர்களிடம் உயர்வான தரம் கொண்ட நடத்தைகளை ஜெயலலிதா எதிர்பார்ப்பது அளவுக்கு மீறிய செயலாகும்.

ஆனால், அவர் நான்கு அமைச்சர்களை நீக்கிய காட்சிகள் போன்ற இசை நாற்காலி நிகழ்ச்சிகள் தன்னுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்று ஜெயலலிதா நினைப்பதாகவே தோன்றுகிறது" என்று எழுதியது. ஜெயலலிதாவின் "துக்ளக்"தனமான ஒரு மாத கால ஆட்சியில் தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நிலை ஏற்பட்டுள்ளதாக "தி ஸ்டேட்ஸ்மேன்" ஆங்கில ஏடு 23.6.2001 அன்று தலையங்கம் தீட்டியது. அந்தத் தலையங்கத்தில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கால் பந்துகள்போலப் பந்தாடப் பட்டு, தர்மசங்கடமான பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டனர் என்றும், காவல் துறையில் முக்கிய பல பொறுப்புகளை வகித்த கூடுதல் டி.ஜி.பி., ஒருவர் ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், இறுதியாக அவர் இலங்கை அகதிகள் முகாமின் முன் உள்ள புறக்காவல் நிலையத்தில் இதுவரை ரோந்து போலீசாருடன் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் நிர்வகித்து வந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்றும், சூப்பர் டைம் ஸ்கேல் நிலையில் இருந்த 20 பேர் உட்பட மூன்று டஜன் ஐ.ஏ.எஸ்.

அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தது. 25.6.2001 அன்று ஒரு நாளில் மட்டும் 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்!