நெஞ்சுக்கு நீதி
தேர்தலும், ஏமாந்த · 375 / 391
14. தேர்தலும், ஏமாந்த வாக்காளர்களும்! 14-4-2001 அன்று சென்னையில், சேப்பாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையிலும், ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், ப.சிதம்பரம், மேயர் மு.க.ஸ்டாலின், க.சுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழக வேட்பாளர்களின் பட்டியலைப் படித்தேன். அந்தப் பட்டியல்படி ஏற்கனவே சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் 93 பேர் - புதியவர்கள் 74 பேர் - 14 பேர் மகளிர் - 81 பேர் பட்டதாரிகள் - அதிலும் 33 பேர் முதுகலைப் பட்டதாரிகள் வழக்கறிஞர்கள் 26 பேர் - டாக்டர்கள் 5 பேர்.
சென்னையில் சேப்பாக்கம் தொகுதியில் நானும், துறைமுகம் தொகுதியில் பொதுச் செயலாளர் பேராசிரியரும், அண்ணா நகர் தொகுதியில் பொருளாளர் ஆற்காடு வீராசாமியும், ஆயிரம்விளக்கு தொகுதியில் தம்பி மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டோம். தி.மு.கழகம் வெற்றி பெற்றிருந்த இடங்களில் 26 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துக் கூட்டணி அமைந்தது. அ.தி.மு.க.வோ, த.மா.கா. விடமிருந்து 21 தொகுதிகளையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 3 தொகுதிகளையும் பறித்துக் கொண்டு கூட்டணி அமைத்தது.
அந்தத் தேர்தலில் தி.மு.கழகத்தின்மீது வேறு எந்தக் குற்றச்சாட்டையும் எதிர் அணியினரால் சொல்ல முடியவில்லை. திருப்பித் திருப்பி அவர்கள் கூறியது, "வாஜ்பாய் அவர்கள் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு. கழகம் எப்படி இடம் பெறலாம்?"
என்பது தான்! 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, டான்சி நில பேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் 9-10-2000 அன்று ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையை விதித்திருந்தது. இதையடுத்து இரண்டாண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டி யிட முடியாது என்ற விதிமுறைப்படி "ஜெயலலிதாவும் தேர்தலில் போட்டியிட முடியாது" என்று சட்ட நிபுணர்கள் கூறினார்கள்.
அந்த நிலையில் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-11-2000 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தனி நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்து, தன்னைத் தேர்தலிலே போட்டியிட அனுமதிக்குமாறு கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியன், ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து 11-4-2001 அன்று தீர்ப்பளித்தார். இந்தியத் தண்டனைச் சட்டம் 409வது பிரிவின்கீழ் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தால், அதனை தம்மால் நிறுத்திவைக்க முடியும் என்றும், ஆனால் அந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நீதி மன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை தன்னால் நிறுத்தி வைக்க முடியாது என்றும் நீதிபதி கூறி, ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே தனி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டாம் என்றும், அதனை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அந்தத் தீர்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் 16-4-2001 அன்று பரிசீலித்தது. தலைமை தேர்தல் ஆணையராக அப்போதிருந்த திரு. எம்.எஸ்.கில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர்கள் திரு.
கிருஷ்ண மூர்த்தி, திரு.லிங்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்பிரமணியம் அவர்கள் அளித்த தீர்ப்பு விரிவாக ஆராயப்பட்டது. மேலும், அந்தத் தீர்ப்பு குறித்து இந்தியாவில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களையும் பரிசீலித்தனர். இறுதியாக, ஊழல் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா அப்போது ஜாமீனில்தான் வெளியே இருந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மட்டும்தான் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்ததே தவிர, அவர் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எந்த நீதிமன்றமும் நிறுத்தி வைக்கவில்லை. எனவே, அவர் "தேர்தலில் போட்டியிட முடியாது" என்று தான் டெல்லியில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் அதைப்பற்றி தேர்தல் ஆணையம் டெல்லியில் கலந்து பேசிக் கொண்டிருந்த அதே நாளில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டார். மேலும் அதற்கடுத்த நாளான 17-4-2001 அன்று ஆண்டிப்பட்டி தொகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை தொகுதியிலும், புவனகிரி தொகுதியிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்குமேல் போட்டியிட முடியாது என்பது நன்கு தெரியும். இருந்தாலும், நான்கு தொகுதிகளிலே அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக் காரணம், எப்படியும் தேர்தல் அதிகாரி தனது வேட்பு மனுவினைத் தள்ளுபடி செய்து விடுவார் - மக்களிடம் சென்று தன்னைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்துவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து, அதன் மூலம் மக்களின் பரிதாபத்தைச் சம்பாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டார்.
மக்களை ஏமாற்றுகின்ற அந்தத் தந்திரத்தை நம்முடைய பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அம்மன் கண்ணிலே இருந்து ரத்தம் கொட்டுகிறது என்றும், வேரிலே இருந்து பிள்ளையார் உதயமாகியிருக்கிறார் என்றும் செய்யப்படுகின்ற பிரச்சாரத்தை நம்பி ஏமாறுகின்ற நம்முடைய மக்களுக்கு ஜெயலலிதாவின் தந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை - என்பது ஆச்சரியமான ஒன்றல்லவே! ★ ★ ★ 17ஆம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையினை சென்னையில் நான் வெளியிட்டு விட்டு, தேர்தல் பிரச்சாரத்தை அதே நாளில் சென்னையிலிருந்து தொடங்கினேன்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், தம்பி ஸ்டாலினும், கழகத்திலே இருந்த கலையுலகப் பெருமக்களான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், இயக்குநர் டி. ராஜேந்தர் ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக, நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் அந்தத் தேர்தலில் தி.மு.கழக அணிக்காகக் கடுமையானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுப் பணியாற்றினார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதைப்பற்றி அப்போதே 20-4-2001 தேதிய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டில் சுவாதிதாஸ் எழுதிய சிறப்புச் செய்தி வருமாறு :- PRESS SHOOED; ONE LUCKY Hotel Madurai Ashok, where AIADMK leader Jayalalitha stayed, was virtually sealed to the media.
While a select few were allowed inside, unwelcome visitors were unceremoniously escorted out. When Jayalalitha's campaign began after filing of nomination in Theni Collectorate on Wednesday; press vehicles were pushed to almost the 100th position in the convoy. This left very little chance for the media to watch the interaction between the AIADMK supreme and the people from whom she was seeking votes.
Times of India photographer K. Sunil Prasad and another lensman from a Tamil paper, managed to reach her by hanging on to Periyakulam MP T.V. Dinakaran's Tata Sumo. As the convoy stopped at a village and Jayalalitha offered money ranging from Rs. 5 to Rs. 1000 to the people, the Times of India photographer asked her why she was giving away money. Jayalalitha, who rarely opens up to journalists explained:" You must be a north Indian.
This is a custom here. It is a gift we offer as part of the Tamil New Year". ✽ "அ.இ.அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்கியிருந்த மதுரை அசோகா ஓட்டல் பத்திரிகையாளர்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வரவேற்கப்படாத பார்வையாளர்கள் மோசமான முறையில் வெளியேற்றப்பட்டனர். ✽ "புதன்கிழமை அன்று, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தபிறகு, ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அவருடைய கார் வரிசையில், பத்திரிகையாளர்களின் வாகனங்கள் ஏறக்குறைய 100வது இடத்திலே இருந்தது.
அதனால் அ.தி.மு.க. தலைவிக்கும் அவர் வாக்கு கேட்ட மக்களுக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. ✽ "இவற்றையும் மீறி "டைம்ஸ் ஆப் இந்தியா" புகைப்படக் கலைஞர் கே. சுனில் பிரசாத்தும், தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் புகைப்படக் கலைஞர் ஒருவரும் பெரியகுளம் தொகுதி எம்.பி.யான டி.வி. தினகரனின் டாடா சுமோ காரில் தொங்கிக் கொண்டே சென்று ஜெயலலிதாவை நெருங்கினர்.
✽ "ஜெயலலிதாவின் கார் வரிசை, கிராமம் ஒன்றில் நின்றபோது, ஜெயலலிதா அங்கிருந்த மக்களுக்கு ரூ.5 முதல் ரூ.1000 வரை அன்பளிப்பு வழங்கினார். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்பட நிபுணர் ஜெயலலிதாவிடம் "பொது மக்களுக்கு ஏன் பணம் கொடுக்கிறீர்கள்?"
என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த - பத்திரிகையாளரிடம் அபூர்வமாகவே வாய் திறக்கும் ஜெயலலிதா, "நீங்கள் ஒரு வடநாட்டுக்காரராக இருக்கவேண்டும். இது இங்கே ஒரு வழக்கம். இது தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாங்கள் அளிக்கும் பரிசு" என்று சொன்னார்.
- என்று எழுதி இருந்தது, "டைம்ஸ் ஆப் இந்தியா" ★ ★ ★ 21-4-2001 அன்று சென்னையில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வாரக் "கல்கி" வார இதழில் ஜெயலலிதா தோழமைக் கட்சிகளோடு எந்த அளவிற்குக் கூட்டணி அமைத்திருக்கிறார் என்பதைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதியிருப்பதைக் கூட்டத்தில் படித்துக் காட்டினேன். அந்தத் தலையங்கத்தில் - "கடந்தமுறை ஆட்சியில் இருந்த போது, அதிமுக தலைவி நிகழ்த்திய அதர்மங்கள் பரவலாக அனைவரும் அறிந்வையே.
அப்படியிருந்தும் அவரோடு கூட்டணிக்கு விழைந்தவர்கள் இன்று அவருடைய கூட்டணி (அ) தர்மத்தையும் ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். த.மா.கா. வுக்கு நாற்பது தொகுதிகள் ஒதுக்கித் தரத் தயாராக இருந்தார் கலைஞர். வேறு எந்தக் கட்சிக்கும் அவர் இத்தனை தொகுதிகள் அளிக்க முன்வரவில்லை. 96 சட்டமன்றத் தேர்தலில் த.மா.கா. பெற்ற வெற்றியையும், சட்டமன்றத்தில் அக்கட்சி ஆற்றிய ஆரோக்கியமான பணியையும் மதித்து வழங்கப்பட்ட தொகுதிகள் இவை.
✽ "தோழமை நிலையிலிருந்து த.மா.கா. எதிர்ப்பு நிலைக்கு மாறிவிட்டபோதிலும், நேசக்கரம் நீட்டினார், கருணாநிதி. அதைப் புறக்கணித்துவிட்டு, அ.தி.மு.க. தலைமையிடம் போய் ஒவ்வொரு சீட்டுக்காகவும் பேரம் பேசி, ஒருவாறு கூட்டணியைப் படியச் செய்துகொண்டது த.மா.கா. அந்த முயற்சியில் த.மா.கா. வியர்த்துக் களைத்திருந்த நேரத்தில், அதிர்ச்சி அணுகுண்டாக அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைக் கருத்துக் கேட்கவோ, கலந்து ஆலோசிக்கவோ முயற்சிகூட மேற்கொள்ளவில்லை. ✽ "ஜெயலலிதா தன்னிச்சையாகப் பட்டியல் தயாரித்து வெற்றி வாய்ப்பு கணிசமாக இருக்கிற தொகுதிகளையெல்லாம் அ.தி. மு.க.வினருக்கென்று சுருட்டிக் கொண்டு விட்டார். அ.தி.மு.க. அணியில் நீடிக்கும் வரை கூட்டணிக் கட்சிகளுக்கு அவமானங்கள்தான் தொடரும்" - என்று எழுதப்பட்டிருந்தது. ★ ★ ★ ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலே வேட்பு மனு தாக்கல் செய்த காரணத்தால், அனைவரும் எதிர்பார்த்தபடி அவருடைய வேட்பு மனு தேர்தல் அதிகாரிகளால் செல்லாது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைப்பற்றி 26-4-2001 தேதிய "இந்து" இதழின் தலையங்கத்தில் - ✽ "எதிர்பார்த்தவாறே இந்தத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், 1997ஆம் ஆண்டு தகுதியின்மை குறித்து பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்திய பிறகு, ஜெயலலிதாவின் தகுதியின்மை என்பது நிச்சயமாகிவிட்டது. அந்த ஆணைப்படி இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்ற ஒருவருக்கு அவரது தண்டனை தள்ளி வைக்கப் பட்டபோதிலும், அவர் தேர்தலிலே போட்டியிட முடியாது" என்பதாகும்.
✽ "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களுக்குமேல் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்திருந்த போதிலும், அ.தி.மு.க. தலைவி நான்கு இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்து குழப்பமான நிலையை உருவாக்கினார். செல்வி ஜெயலலிதா மூன்று ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். இதைவிடச் சிறிய தவறை செய்த பலர் பதவி விலக வேண்டுமென்று நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
✽ "தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்த பிறகு அ.தி.மு.க. தலைவி, தான் முதல் அமைச்சராக ஆவேன் என்று கூறுவதையும், அரசியல் தூண்டுதல் காரணமாக அதிகாரிகள் தன்னுடைய வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறுவதையும் விட்டு, அவருடைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடும் பணியிலே ஈடுபடுவதே சாலச் சிறந்ததாக இருக்கும். அரசியல் காரணமாக, தான் பாதிப்புக்கு ஆளாகிவிட்டதாகத் தன்னைக் காட்டிக் கொள்வதன் மூலம் தேர்தலில் சில பயன்களைப் பெறலாம் என்றாலும், உண்மை என்ன வென்றால், அவர் போட்டியிடத் தகுதி இழந்ததற்கு முற்றிலும் அவர்தான் காரணமாகும்!"
- என்று எழுதியது. அந்தத் தேர்தலில் "இந்து" நாளேடு உத்தேசித்தவாறு, தான் பாதிப்புக்கு ஆளாகிவிட்டதாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் தேர்தலில் சில பயன்களைப் பெறலாம் என்று எழுதியதற்கொப்பத்தான் நடைபெற்றது. "இந்து" மாத்திரமல்ல - எக்ஸ்பிரஸ் நாளேடும் இதே கருத்தினைத் தனது தலையங்கத்தில் எழுதியது. ஆனால் நான்கு தொகுதிகளிலே அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகும் என்று தெரிந்திருந்தும், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, பிறகு ஜெயலலிதா ஒவ்வொரு ஊராகச் சென்று, தன்னைத் தேர்தலிலே போட்டியிட முடியாமல் செய்து விட்டார்கள் - தி.மு.க.
தலைவர்தான் அதற்குக் காரணம் தன்னைப் பழிவாங்கி விட்டார்கள் - என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அனுதாபம் தேடிட முற்பட்டார். ஜெயலலிதா குறிப்பாகத் தனது பிரச்சாரத்தில், "கேரளாவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கொட்டாரக்கரா என்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பாலகிருஷ்ண பிள்ளை வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் ஊழல் வழக்கில் ஐந்தாண்டுக் காலம் சிறைத் தண்டனை பெற்றவர். அவருடைய வேட்பு மனு அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ் நாட்டில் எனது வேட்புமனுக்களை ஏற்றால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்று கருணாநிதி தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதால்தான் எனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன" என்று ஒவ்வொரு ஊரிலும் சென்று புலம்பினார். தமிழ்நாட்டு ம
க்களும் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஆனால் உண்மை என்ன? தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், நான்காவது பத்தியில், "தண்டனைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட எந்த நபரும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 - துணைப் பிரிவு 1-ன்படி தண்டனைக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேதி முதல் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார்" என்பதாகும். அந்த உத்தரவின் அடிப்படையிலேதான் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அப்படியென்றால், கேரளாவில் பாலகிருஷ்ண பிள்ளையின் வேட்பு மனு மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது தெரியுமா? தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், ஆறாவது பத்தியில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 - துணைப் பிரிவு 4ன்படி தண்டனைக் குற்றவாளி என அறிவிக்கப்படும் நபர், அப்போது நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலே இருந்து, தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருந்தால், அந்த வழக்கில் தீர்வு காணப்படும்வரை போட்டியிட தகுதி இழப்பு ஏற்படாது" என்பதாகும்.
அதனால்தான், தண்டனை விதிக்கப்பட்டபோது பால கிருஷ்ணபிள்ளை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால், அவருடைய வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவியில் இல்லை. இந்த உண்மையைத்தான் அப்படியே மறைத்து விட்டு, ஜெயலலிதா ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். அதைத் தமிழ்நாட்டு மக்களும் அப்போது நம்பி ஏமாந்தார்கள். இந்திய அரசியல் வரலாற்றில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காரணத்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் முதல்வர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கொண்டே, குறைந்த விலைக்கு வாங்கியவர்! அதற்காகத் தண்டனை விதித்தது நீதிமன்றம்! தண்டனைக்குரிய ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியது தேர்தல் ஆணையம்! ஒருவர் இரண்டு இடங்களுக்குமேல் போட்டியிடக்கூடாது என்ற விதிக்கு மாறாக நான்கு இடங்களில் போட்டியிட்டவர் ஜெயலலிதா! அந்த வேட்பு மனுக்கள் செல்லாது என்று நிராகரித்தது தேர்தல் அதிகாரிகள்!
ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன், ஜெயலலிதா, நான்தான் பல வழிகளில் சூழ்ச்சி செய்து அவரு- டைய வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்துவிட்டேன் என்றும், நீதிமன்றத்தை மிரட்டி, பல்வேறு தீர்ப்புகளை அவருக்கு எதிராக மாற்றச் செய்தேன் என்றும் குற்றஞ்சாட்டினார். திட்டமிட்டு, அவரைத் தேர்தலில் நிற்காத அளவிற்கு நான் செய்து விட்டேன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் எதிரொலித்து மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சித்தார்.
இறுதியாக அந்தத் தேர்தலில் அனுதாபம்தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்துச் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் எந்த மகிழ்ச்சியும் எனக்கு இல்லை!" என்று கூறினேன். ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்த நான்கு தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளை முதலமைச்சர் என்ற முறையில் நான் மிரட்டியதால் தான் அவர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தார்கள் என்று ஜெயலலிதா புகார் கூறினார் அல்லவா?
அந்த நேரத்தில் அந்தத் தேர்தல் அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாக இருந்தவரிடம் செய்தியாளர்கள் சந்தித்து, இது பற்றிக் கேட்டதற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி, "ஆங்காங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தங்கள் கடமையினைச் சட்டப் படிச் செய்துள்ளனர்- அவர்கள் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது - அவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் கூற முடியாது!"
என்று பதிலளித்தார். ★ ★ ★ அந்த நேரத்தில் 26-4-2001 அன்று கழக அணியிலே தீவிரமாகப் பணியாற்றி வந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அரசியலில் இதுவரை நடந்திராத ஒரு கோழை நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார், செல்வி ஜெயலலிதா. படித்தவர் - ஒரு முன்னாள் முதலமைச்சர் - மத்திய நல்லாட்சியைத் தனது சுயலாபத்திற்காகக் கவிழ்க்கும் அளவிற்கு அரசியல் தெரிந்தவர் - நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஊழல் குற்றம் புரிந்த குற்றவாளி என்ற காரணம் சொல்லி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசியல் அரங்கிலே செல்லாக் காசாகி விடுவோம் என்று தெரிந்து கொண்டு அவர் அப்படிச் செய்தார். இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்று உறுதிமொழி எடுத்தவர் சட்டத்தை எட்டி உதைத்து விட்டு, மேலும் இரண்டு தொகுதிகளில் எப்படி வேட்பு மனு தாக்கல் செய்தார்? இப்படி சத்திய பிரமாணத்தின் வாக்குறுதிகளையே அவமதிக்கும் செல்வி ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்" என்றெல்லாம் அந்த அறிக்கையில் எழுதி இருந்தார்.
★ ★ ★ 7-5-2001 அன்று, சென்னை காந்தி சிலை அருகில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பய் கலந்து கொண்டார். மேலும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். பிரதமர் வாஜ்பய் உரையாற்றும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்தும், அறிஞர் அண்ணாவுக்கும் அவருக்கும் மாநிலங்களவையில் தொடங்கிய நட்பு குறித்தும், மத்திய மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒற்றுமையோடு பணியாற்றி வருகின்றன என்பது குறித்தும் உரையாற்றினார்.
நான் என்னுடைய உரையில் கழக அரசு ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகச் செய்த சாதனைகளையெல்லாம் பட்டியலிட்டேன். ★ ★ ★ 10-5-2001 அன்று தமிழகத்தில் வாக்குப் பதிவு அமைதியாக எந்த வன்முறைச் சம்பவமுமின்றி நடை பெற்றது. எழும்பூர் தொகுதியில் மட்டும் வெடிகுண்டு வீசி, பயங்கர ஆயுதங்களுடன் கழக வேட்பாளர் பரிதி இளம்வழுதியைத் தாக்கிட சிலர் முயன்ற போதிலும், அவர் உயிர் தப்பினார். 13-5-2001 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
தான் நான்கு இடங்களில் போட்டியிட முயற்சித்தும், தன்னைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தி.மு.க. செய்து விட்டது என்று ஜெயலலிதா ஊருக்கு ஊர் செய்த பிரச்சாரம் வெற்றி பெற்று, தி.மு.கழகக் கூட்டணி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க. 28 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. 2 இடங்களிலும், த.மா.கா. ஜனநாயகப் பேரவை 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் அ.தி.மு.க. 132 இடங்களிலும், த.மா.கா. 23 இடங்களிலும், பா.ம.க. 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 6 இடங்- களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் 5 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். புதுவை மாநிலத்தில் தி.மு.கழக கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 7 இடங்களிலும், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 4 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் 11 இடங்களிலும், த.மா.கா. 2 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும் சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. கழகத்தின் சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் நானும், துறைமுகம் தொகுதியில் பொதுச் செயலாளர் பேராசிரியரும், அண்ணா நகர் தொகுதியில் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும், ஆயிரம்விளக்கு தொகுதியில் தம்பி மு.க. ஸ்டாலினும், காட்பாடியில் தம்பி துரைமுருகனும், கும்பகோணத்தில் தம்பி கோ.சி. மணியும், விழுப்புரத்தில் தம்பி பொன்முடியும், தண்டராம்பட்டு தொகுதியில் தம்பி எ.வ.வேலுவும், குறிஞ்சிப்பாடியில் தம்பி எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வமும், சாத்தூரில் தம்பி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், பாளையங்கோட்டையில் தம்பி மைதீன்கானும், வெள்ளக்கோவிலில் தம்பி மு.பெ.சாமிநாதனும் மற்றவர்களும் வெற்றி பெற்றோம். மேலும் தமிழகச் சட்டப் பேரவைக்கு பத்தாவது முறையாக நான் அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இடங்களைப் பொறுத்தவரையில் தி.மு.கழக அணியில் குறைவாக இருந்தபோதிலும், வாக்குகளைக் கணக்கிட்டபோது, அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.
கூட்டணி 1 கோடியே 40 லட்சம் வாக்குகளையும், தி.மு.கழகக் கூட்டணி 1 கோடியே 8 லட்சம் வாக்குகளையும், ம.தி.மு.க. தனியாகப் போட்டியிட்டு, 13 லட்சம் வாக்குகளையும் பெற்றன. தேர்தல் முடிவு குறித்து என்னிடம் கருத்து கேட்டபோது, "எங்களின் ஐந்தாண்டு கால அடுக்கடுக்கானச் சாதனைகளுக்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்துள்ளப் பரிசாக இந்த முடிவைக் கருதுகிறேன். தேர்தல் ஆணையத்தின் விதி முறைகள் மற்றும் சட்டத்தின்படி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்- பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்ற பொய்ப் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. கில் அவர்களே வேட்பு மனு தள்ளுபடி என்பது சட்டப்படியாக செய்யப்பட்டது என்று அறிவித்த பிறகும் புளுகுப் பிரச்சாரம் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் எங்கள் அணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினேன்.
★ ★ ★ 18-5-2001 அன்று காலையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கழகச் சட்டமன்றக் கட்சித் தலைவராகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், துணைத் தலைவராக ஆர்க்காடு வீராசாமியும், கொறடாவாக கடலூர் இள.புகழேந்தியும் நான் முன்மொழியத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அன்றைய கூட்டத்தில், கிரிமினல் வழக்கில் கடுங்காவல் தண்டனைப் பெற்றவரை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்து அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு முற்றிலும் முரணாகவும், எதிராகவும் செயல்பட்டுள்ள ஆளுநரின் நடவடிக்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் "ஆளுநர் உரையில் தி.மு.கழகம் பங்கேற்காது" என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
★ ★ ★ தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த 14ஆம் தேதி அன்றே அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப் பெற்றது. ஜெயலலிதா சட்ட மன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். உடனடியாக 14ஆம் தேதி மாலையிலேயே அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்கத் தடைகோரி யாராவது வழக்கு தொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவசர அவசரமாகப் பதவியேற்ற தாக அப்போது ஏடுகள் எல்லாம் கூறின.
15-5-2001 "இந்து" தலையங்கத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உறுதியாக தடை செய்யப்பட்ட ஒருவர் முதலமைச்சராவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல் முறை என்றும், இரு நிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு, சட்ட ரீதியாகவும், நியாயபூர்வமாகவும் வேதனையளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது என்றும் எழுதியது. மேலும் சில பிரபல ஆங்கில ஏடுகள் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டவர் முதல்வர் பதவியேற்று தார்மீக நெறியை மீறிவிட்டார் என்று எழுதின.
"ஆனந்தவிகடன்" தனது தலையங்கத்தில் "தன் மீதுள்ள களங்கத்தைச் சட்ட ரீதியாகத் துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும். அதுதான் கண்ணியமும் கவுரவமுமிக்க அந்தப் பதவிக்கும் அழகு - அவருக்கும் அழகு!" என்று எழுதியது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆனால் அது நிலைத்ததா?
