நெஞ்சுக்கு நீதி
தமிழே இந்தியாவின் ஆட்சிமொழி · 374 / 391
13. தமிழே இந்தியாவின் ஆட்சிமொழி என்ற அருமைத் தலைவர்! நா ன் கடந்த வாரம் எழுதியதைப்போல, எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் அவர்களின் சிலைத் திறப்பு விழா நடை பெற்றதற்கு மறுநாள் 22ஆம் தேதியன்று, சென்னை, ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கட்டப்பட்ட சுற்றுலா வளாகக் கட்டிடத் திறப்பு விழாவிலும்- அதற்கடுத்த நாள் - 23ஆம் தேதியன்று காலையில், உடுமலைப்பேட்டையில் நாராயணக் கவிராயர் மணி மண்டபத்திறப்பு விழாவிலும் - மாலையில் கோவையில் நடைபெற்ற காவல் துறை ஆணையர் அலுவலகக் கட்டிடத் திறப்பு விழாவிலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநாட்டிலும் - அதற்கடுத்த நாள் - 24ஆம் தேதியன்று, சென்னை கலைஞர் அரங்கத்தில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தம்பி டி.
ராஜேந்தர் ஏற்பாடு செய்த கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டத்திலும் - அதற்கடுத்த நாள் - 25ஆம் தேதியன்று, காலையில் கழக வழக்கறிஞர் ஜின்னா இல்லத் திருமணத்திலும் - அதே நாள் மாலையில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திலும் அதன் பின்னர் காயிதே மில்லத் மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவிலும் கலந்துகொண்டேன். காயிதே மில்லத் மணிமண்டபக் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவின் துவக்கத்தில், நமது இசை முரசு நாகூர் அனீபா அவர்கள் காயிதே மில்லத் அவர்களையும், அண்ணா அவர்களையும் இணைத்து ஒரு பாடல் பாடினார்.
அந்தப் பாடலில் குறிப்பிட்டதைப் போல அந்த இரண்டு தலைவர்களும் என் இதயத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி விட்டுத்தான் என் உரையையே தொடங்கினேன். "தம்பி திருப்பூர் அல்தாப் அந்த விழாவிலே பேசும்போது, யாரோ சிலர் அந்த நிகழ்ச்சியை நான் ஆதாயத்திற்காகச் செய்வதாகச் சொன்னதை எடுத்துக்காட்டி வருத்தப்பட்டார். ஆதாயத்திற்காகச் செய்வதாக இருந்தால், தேர்தல் நேரத்தில் மட்டும் மலர் மாலையைத் தூக்கிக்கொண்டு காயிதே மில்லத் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவார்கள்-ஆனால் நான் எவ்வாறு அண்ணா அவர்களின் நினைவிடத்திற்கு ஆண்டு தோறும் பிப்ரவரி 3ஆம் தேதியன்று சென்று வணங்குகிறேனோ, அதைப்போலவே தான், காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும், நானோ அல்லது கழகத்தின் சார்பில் தம்பி ஸ்டாலின் போன்றவர்களோ வருகை தந்து வணங்குகிறோம்" என்று கூறினேன்.
பேராசிரியர் "காதர் மொய்தீன்" பேசும்போது, "யார் முதலமைச்சராக வரக்கூடாது என்று ஓட்டு போட்டோமோ, அவரையே பிறகு சந்தித்து காயிதே மில்லத் மணி மண்டபம் எழுப்பித் தாருங்கள்!" என்று கேட்டதாகச் சொன்னார். "அதுதான் என்னுடைய சுபாவம் - ஓட்டுப் போடாதவர்களுக்குத்தான் முதலில் உதவி செய்கிறேன்!"
என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன். தொடர்ந்து அந்த விழாவில் பேசும்போது, சிறுபான்மையினரான இஸ்லாமியப் பெருமக்களுக்குக் கழக ஆட்சியில் எப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் செய்யப்பட்டன என்பதை நினைவுபடுத்தினேன். உதாரணமாக, 1974ஆம் ஆண்டு, ஜூன் 5ஆம் தேதி, அரசு பெண்கள் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி என்று பெயர் சூட்டியதையும் - சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் பெயரில் முஸ்லீம் கல்வி கலாச்சார அறக்கட்டளை ஆண்கள் கல்லூரி ஒன்றினைத் தொடங்க முன் வந்ததையும் - அதற்கு 40 ஏக்கர் நிலத்தை அரசின் சார்பில் வழங்கியதையும் - வாலாஜா சாலையிலிருந்து டாக்டர் பெசன்ட் ரோடு வரையிலான நெடுஞ்சாலைக்கு 29-1-1976 அன்று "காயிதே மில்லத் நெடுஞ்சாலை" என்று பெயரிட்டதையும் - காயிதே மில்லத் அவர்களின் பெயரை ஒரு பாலத்திற்கு வைத்ததையும் - காயிதே மில்லத் அவர்களுடைய பெயரால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், 25 இலட்சம் ரூபாய் மூலதனத்துடன் அறக்கட்டளை ஒன்றை 1997 ஜுன் திங்களில் அமைத்து, காயிதே மில்லத் அவர்களின் பெயரால் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வருவதையும் - காயிதே மில்லத் மணி மண்டபம் கட்டிட 50 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்ததையும் - 1970ஆம் ஆண்டு நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை இந்தியாவிலேயே முதன் முதலாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்ததையும் - உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை உயர்த்தியதையும் - சிறுபான்மைச் சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாத்திட 1989ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்ததையும் - உருது பேசும் இஸ்லாமியர்களையும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவித்ததையும் - 21-7-2000 அன்று "உருது அகாடமி" தொடங்கப்பட்டதையும் - வக்ஃப் வாரிய நிர்வாகச் செலவிற்காக வழங்கப்பட்டு வந்த மானியம் 30 லட்சம் ரூபாய் என்பதை 45 லட்சம் ரூபாயாக உயர்த்தியதையும் தொகுத்து - அந்த விழாவிலே நான் விளக்கினேன்.
அதன் பின்னர், காயிதே மில்லத் அவர்கள் நம் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் அவரது வாழ்க்கையில் நடந்து காட்டிய சிலவற்றையும் அந்த விழாவில் ஞாபகப்படுத்த நான் தவறவில்லை. 1962இல் சீன ஆக்கிரமிப்பு நடைபெற்ற போது, நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் பேசியது :- ✽ "நமது நாட்டின்மீது ஆக்கிரமிப்பு செய்த சீனாவிற்குப் பாரதப் பிரதமர் கொடுத்த சவாலை நான் வரவேற்கிறேன். யாதொரு நிபந்தனையுமின்றி அதை நான் ஆதரிக்கிறேன்" என்று ஆங்கிலத்தில் காயிதே மில்லத் பேசியபோது, ஒரு உறுப்பினர் குறுக்கிட்டு,"உருதுவில் பேசுங்கள்" என்றார்.
அப்போது காயிதே மில்லத், "ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கெல்லாம் இந்தியிலும் பேசத் தெரியும் என்று நண்பர் நினைத்துக் கொள்கிறார். எனக்கு இந்தியும் அன்னிய மொழி- உருதுவும் அன்னிய மொழி - தமிழ் தான் என் தாய்மொழி!" என்றார். இந்தியாவின் தேசிய மொழியாக எது இருக்க வேண்டு மென்ற பிரச்சினை அரசியல் நிர்ணய சபையில் எழுந்தபோது, பெரும்பான்மையாக அங்கே இருந்தவர்கள் தேசிய மொழியாக இந்தியைத்தான் வைக்க வேண்டுமென்றனர்.
வேறு சிலரோ ஆங்கிலமே இணை மொழியாக இருக்கட்டும் என்றனர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிலர், "ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டோம் - அவர்களது மொழியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தி பிடிக்காவிட்டால், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழி தேசிய மொழியாக இருக்கலாம்!"
என்றனர். அப்போது காயிதே மில்லத் எழுந்து, "ஆங்கில மொழி அந்நிய மொழி - அது இந்நாட்டின் தேசிய மொழியாகக் கூடாது. வேறு எந்த இந்திய மொழியானாலும் பரவாயில்லை - அதைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளலாம் என்று பலர் இங்கே பேசினர். இந்நாட்டில் உள்ள மொழிகளில் எல்லாம் தொன்மை வாய்ந்தது - இன்றளவும் பேச்சுவழக்கில் இருக்கக் கூடியது - இலக்கண, இலக்கிய நயங்களில் உலகில் உள்ள எந்த மொழிக்கும் ஈடு கொடுக்கும் சிறப்புடையது எனது தாய் மொழி தமிழே!
அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறிக் கொள்கிறேன்!" என்றார். ★ ★ ★ இந்த நாட்டுக்காகத் தன் மகனையே தானமாகத் தருகிறேன் என்று சொன்னவர் காயிதே மில்லத். டெல்லியில் நடைபெற்ற "புத்திரதான் தினத்தில்" (புத்திரனை நாட்டிற்காக தானம் செய்கின்ற தினம்) காயிதே மில்லத் இவ்வாறு கூறியதாக, 13-11-1962 நாளிட்ட "மெயில்" ஆங்கில இதழில் செய்தி வெளிவந்தது. ★ ★ ★ பாகிஸ்தான் பிரிந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான், காயிதே மில்லத் அவர்களிடம், "இந்தியாவில் வாழும் நாலரைக் கோடி இஸ்லாமியர்களின் நினைவைப் பாகிஸ்தான் என்றென்றும் மறவாது" என்று இரக்கத்தோடு கூறினார்.
அப்போது காயிதே மில்லத், "அய்யா! நடந்தவைகளை யெல்லாம் மறந்து விடுங்கள். நாம் அந்நியராகி ஆறு மாதங்களாகிவிட்டன. எங்கள் சர்க்கார் எங்களை நியாயமாக நடத்தும் என்பதில் எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அவசியப்பட்டால் எங்கள் உரிமைகளைச் சத்தியப் பாதையில் போராடிப் பெற்றுக் கொள்ள எங்களுக்கு உறுதி உண்டு. எங்கள் நிலைக்காக நீங்கள் இரங்க வேண்டாம்" என்று கூறினார்.
தொடர்ந்து லியாகத் அலிகான், "உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் - எது வேண்டுமானாலும் செய்கிறேன்" என்று கேட்டபோது, "எங்களுக்கு வேறு ஒன்றும் செய்யவேண்டாம் - ஒன்றை மட்டும் செய்யுங்கள்! எங்கள் நாட்டில் எது நடந்தாலும் எங்களுக்காகக் கவலைப் படாமல், பாகிஸ்தான் நாட்டில் வாழும் சிறுபான்மை இந்து மக்களின் நலனுக்கு ஆவன செய்திட வேண்டும்! எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு எத்தகைய இடையூறும் இழைக்கக் கூடாது.
இது ஒன்றே நீங்கள் எங்களுக்காகச் செய்ய வேண்டிய உதவி" என்று காயிதே மில்லத் பதிலளித்தாராம். இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் அந்த விழாவிலே எடுத்துக் கூறி என் உரையை நிறைவு செய்தேன். ★ ★ ★ "முரசொலி"யில் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருபவர் தம்பி ராஜேஷ். நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகள், சுற்றுப் பயணங்கள் ஆகியவற்றில் தவறாமல் பங்கேற்று, புகைப்படங்களை எடுத்து, முரசொலி இதழில் அந்தப் படங்கள் வெளிவரப் பணி செய்து வருகிறார்.
24-1-2000 அன்று அவருக்கும், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் தஞ்சை லூர்துசாமி அவர்களின் செல்வி ஜூலியட் நிர்மலா விற்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், மேயர் தம்பி மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு வாழ்த்தினோம். வாழ்த்தியவர்கள் எல்லாம் தம்பி ராஜேஷ் கட்சியிலே எவ்வாறு பணியாற்றுகிறார் என்பதைப்பற்றிப் பேசியபோது, நான் அவருடைய தந்தையாரைப் பற்றி அந்த விழாவிலே பேசினேன்.
தஞ்சை மாவட்டத்தில் ஒருமுறை பெரும் புயல் அடித்து பெருத்த சேதம் ஏற்பட்டபோது, நானும், பேராசிரியரும் சிறைச்சாலையிலே இருந்தோம். சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன், புயலால் சேதமடைந்த பகுதிகளுக்கெல்லாம் சுற்றுப் பயணம் செய்து, நிதி வசூலித்து, கழகத்தின் சார்பிலே நிதி வழங்கி நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டோம். அந்தச் சுற்றுப் பயணத்திலே ஈடுபட்டு நாங்கள் சென்ற போது, திருத்துறைப்பூண்டி அருகில் போலீஸ் உடை அணிந்த ஒருவர் எங்கள் வேனை நிறுத்தி, எங்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, கையிலே புயல் நிவாரண நிதியும் கொடுத்தார்.
அந்தப் புகைப்படம் பின்னர் எப்படியோ அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்குக் கிடைத்து, "எப்படி கருணாநிதி கையிலே புயல் நிவாரண நிதியை நீ கொடுக்கலாம்? என்று அவரை அந்த ஆட்சியிலே பணி நீக்கம் செய்தார்கள். அதை அவர் தாங்கிக் கொண்டார். அதற்குப் பிறகு விசாரணை நடைபெற்று, ஏழாண்டு காலப் பணி நீக்கத்திற்குப்பிறகு, மீண்டும் பணியிலே சேர்ந்தார். அவருடைய பெயர் ஆல்பர்ட் தங்கையா. காவல்துறையிலே பணியாற்றியவர். அவருடைய அருமை மகன் தான் தற்போது முரசொலியில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ராஜேஷ்.
இந்த நிகழ்ச்சியை அந்த விழாவிலே நான் குறிப்பிட்டு, தந்தையையும், மணமக்களையும் வாழ்த்தினேன். ★ ★ ★ 2-3-2001 அன்று சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் குஜராத் நிவாரண நிதிக்காக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், என் அருமைப் பேரன், கலாநிதி மாறன் 5 கோடியே 15 லட்சத்து 59 ஆயிரத்து 14 ரூபாய்க்கான காசோலையை என்னிடம் வழங்கினார். கலாநிதி மாறனை எங்கள் வீட்டில் "புகழ்" என்றும், தயாநிதி மாறனை "அன்பு" என்றும் அழைப்போம்.
அவர்களின் தந்தை முரசொலி மாறனே நான் தூக்கி வளர்த்த பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிள்ளை, தான் நடத்தும் நிறுவனத்தின் சார்பில், 5 கோடி ரூபாய்க்கு மேற்பட்டத் தொகையினை நிவாரண நிதிக்காக அளித்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சியினை நான்தான் அறிவேன். குஜராத் நில நடுக்க நிதியாக முதலில் 27-1-2001 அன்று அந்த மாநில முதல்வருக்கு 5 கோடி ரூபாயை நான் அனுப்பிவைத்தேன். அதன் பிறகு 5 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகள், ஜமக்காளங்கள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வாங்கப்பட்டு, குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழக அரசின் சார்பில் வசூல் செய்த 30 கோடி ரூபாய்க்கான காசோலையை 6-3-2001 அன்று மத்திய அமைச்சர், தம்பி முரசொலி மாறன் மூலமாக மத்திய அரசுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ஆகமொத்தம் தமிழகத்தின் சார்பாக, குஜராத் மாநில நிவாரண நிதிக்காக, 40 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நிதியினை முரசொலி மாறன் பிரதமர் வாஜ்பயிடம் அளித்தார். 2-3-2001 அன்று பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கும், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா அவர்களுக்கும் நான் எழுதிய கடிதத்தில், அடுத்து வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பினைச் செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
3ஆம் தேதியன்று, காலையில் திருச்சியில் நடைபெற்ற கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திலும் - அன்று மாலையில் வணிக வளாகத் திறப்பு விழாவிலும் - மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநாட்டிலும் - 4ஆம் தேதியன்று, காலையில் சேலத்தில், அரசினர் கலைக் கல்லூரி நூற்றாண்டு விழாக் கட்டிடத்தின் முதல் தளத் திறப்பு விழா - அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சைக் கட்டிடத் திறப்பு விழா - பெரியார் பல்கலைக் கழகக் கட்டிடத் திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டேன். 11-3-2001 அன்று மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் நான்காவது மாநில மாநாட்டிலும் - அன்று மாலையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியப் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவிலும் - இரவு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டேன்.
மறுநாள் 12ஆம்தேதியன்று, குன்றக்குடியில் நடைபெற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணி மண்டபத் திறப்பு விழாவிலே கலந்து கொண்டேன். ★ ★ ★ தமிழக மீனவர்களின்மீது இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலும், அடிக்கடி தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும் தொடர்ந்து நடைபெற்றே வந்தது. அந்த வகையில் 16-3-2001 அன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கோபி, சசிகுமார், குமார் ஆகிய மூவரும் மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை ராணுவத்தினர் அவர்களை நோக்கிச் சுட்டதில் கோபியின் உடலைக் குண்டு துளைத்து, அங்கேயே பிணமானார்.
தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில், மேயர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அதனை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், சென்னையில் இலங்கை அரசின் தூதுவரகத்தின் முன்னால் 20-3-2001 அன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ★ ★ ★ 6-4-2001 அன்று மகாவீரர் 2600-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தேன். 19-4-2001 அன்று தர்மபுரியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதியில், கழக ஆட்சியில் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் முன்னிலையில், அன்புமணி என்ற அறநிலையத் துறை உதவி ஆணையாளர் தாக்கப்பட்டது குறித்து பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது.
அதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், உண்மை நிலவரத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று மாநில குற்றப் புலனாய்வு
(சி.பி., சி.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அந்த விசாரணையின் முடிவு வந்ததும் பாரபட்சமில்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தேன். அதைப் போலவே விசாரணை செய்து குற்றப் புலனாய்வுத் துறை அளித்த முதல் நிலை அறிக்கையில், அன்புமணிமீது நடைபெற்ற தாக்குதல் அமைச்சர் முல்லைவேந்தன் முன்னிலையில் நடைபெற்றது என்பதை அறிந்து, அதற்குப் பொறுப்பேற்று முல்லை வேந்தனை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அவரும் கழகத் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த போதிலும், கழகப் பணிகளிலும், சட்டப் பேரவை உறுப்பினர் பணிகளிலும் முன்னைவிடத் தீவிரமாக ஆர்வத்துடன் பணியாற்றினார். ★ ★ ★ தமிழகத்தில் பொதுத் தேர்தல் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில், அகில இந்திய அளவில் டெஹல்கா என்ற இணைய தளம் மூலம் வெளியான பாதுகாப்புத் துறை விவகாரங்களுக்காக மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும் குரல் கொடுத்தனர்.
பாதுகாப்புத் துறை விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடசாமியை வாஜ்பய் அரசு நியமித்தது. டெஹல்கா வெளியிட்ட தகவல்படி, உத்தேச ஆயுத பேரத்தில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கள்ளப் பணம் கைமாறி உள்ளதா? ஆயுத பேரம் மற்றும் பிற கொள்முதல்களில் ஊழல் நடைபெற்றுள்ளதா? தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக பேரங்கள் நடைபெற்றுள்ளனவா?
அப்படி யாராவது கையூட்டுப் பெற்றிருந்தால், அவர்கள்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? இது பற்றியெல்லாம் நீதிபதி விசாரித்து நான்கு மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தரவேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், வாஜ்பய் அரசு உடனடியாகப் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் கட்சி போராட்டம் தொடங்கியது. 2-4-2001 அன்று திருச்சியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரு.
அத்வானி அவர்கள் அரசுமீது எந்தக் குற்றமும் கூற முடியாததால் டெஹல்காவைப் பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். ★ ★ ★ "நெஞ்சுக்கு நீதி"யின் ஐந்தாம் பாக முடிவில் நான் சுருக்கமாகத் தெரிவித்திருப்பதைப்போல, 2001ஆம் ஆண்டு நடை பெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு. கழகக் கூட்டணியின் சார்பில் தி.மு.க. 177 இடங்களிலும், பா.ஜ.க. 21 இடங்களிலும், ம.தி.மு.க. 21 இடங்களிலும், புதிய தமிழகம் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 8 இடங்களிலும், மக்கள் தமிழ் தேசம் 6 இடங்களிலும், தி.மு.க.
ஆதரவு நண்பர்கள் 3 இடங்களி லும், தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் 3 இடங்களிலும், எம்.ஜி.ஆர். கழகம் 2 இடங்களிலும், முத்தரையர் சங்கம், தொண்டர் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலுமாகப் போட்டி யிடுவதென ஒப்பந்தங்கள் 18-3-2001 அன்று கையெழுத்தாகின. தி.மு.க. வுடன் ம.தி.மு.க. மேலும் அதிக இடங்களைப் பெறவேண்டுமென்று அந்தக் கட்சியின் சார்பில் ஒரு சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, பூரண மகிழ்ச்சி என்றும், "பேச்சுவார்த்தையின்போது எங்கள் தேவையறிந்து தலைவர் கலைஞர் அதனைப் பூர்த்தி செய்துள்ளார். மகிழ்ச்சி என்றாலே திருப்தி எல்லாம் அதற்குள் அடக்கம்" என்றும் தெரிவித்தார்.
ஆனால் எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கெனப் பிரித்துக் கொள்கின்ற நிலையில் தி.மு.க.விற்கும் ம.தி.மு.க. விற்கும் இடையே ஒப்பந்தம் காண முடியாமல் போயிற்று. ம.தி.மு.க. சார்பில் 43 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து, அதிலே 21 தொகுதிகளை ம.தி.மு.க.விற்கு வழங்கும்படிக் கூறினர். தி.மு.கழகம் அந்த 43 தொகுதிகளில் பெரும்பாலானவை வேறு வேறு தோழமைக் கட்சிகளுக்கு பேச்சுவார்த்தையின் போது தரப்பட்டு விட்டதால், அவர்கள் கொடுத்த 43 பேர் கொண்ட பட்டியலில் 18 தொகுதிகளையும், வேறு மூன்று தொகுதிகள் - அவர்களுடைய பட்டியலில் இடம் பெறாத தொகுதிகளையும் வழங்கிட முன் வந்தோம்.
ஆனால் வைகோ, அவர் கொடுத்த 43 தொகுதிக்குள் நாங்கள் 12 தொகுதிகளைத்தான் ம.தி.மு.க.விற்கு வழங்கியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நான் செய்தியாளர்களை அழைத்து, ம.தி.மு.க. சார்பில் கையெழுத்திட்டுக் கொடுத்த கடிதத்தையே செய்தியாளர்களிடம் காட்டினேன். எப்படியோ, அந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் இடையே - தொகுதிப் பங்கீட்டில் எத்தனை இடங்கள் என்பதில் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, எந்தெந்த தொகுதிகள் என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு - இறுதியாக உறவே இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது.
அந்தத் தேர்தலில் ம.தி.மு.க. எந்த அணியுடனும் சேராமல், பா.ஜ.க. போட்டியிடும் 21 தொகுதிகள் தவிர, மற்ற 213 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.வில் சிறப்பாகப் பணியாற்றி வந்த அதன் செய்தித் தொடர்பாளர் தம்பி கே.எஸ்.இராதா கிருஷ்ணன், ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் எடுத்த முடிவு பிடிக்காமல், அங்கிருந்து விலகி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தன்னலம் பாராது திறம்பட இன்றளவும் பணியாற்றி வருகிறார்.
இதைப்போலவே அ.தி.மு.க. அணியிலும் குழப்பமான சூழ்நிலை. அந்த அணியிலே சேரும் என்று உறுதியாக நம்பப்பட்ட த.மா.கா. வும், காங்கிரசும் திரிசங்கு சொர்க்கத்தில் நின்றன. த.மா.கா. சார்பில் நால்வர் குழு ஒன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியும், பலன் விளையவில்லை. அதிலும் அ.தி.மு.க.வில் பா.ம.க. சேர்ந்த பிறகு, அ.தி.மு.க., த.மா.கா.விற்கு அவ்வளவு முக்கியத்துவம் தர முன்வரவில்லை. பா.ம.க. எப்போதும்போல, அ.தி.மு.க.வோடு முதலில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி 27 இடங்களைப் பெற்றுக் கொண்டதுடன், புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.
கூட்டணி வெற்றி பெற்றால், முதல் இரண்டரை ஆண்டுக் காலம் பா.ம.க.வின் ஆட்சியும், அடுத்த இரண்டரை ஆண்டுக் காலம் அ.தி.மு.க. அரசும் அமைவதற்கான உடன்பாடும் ஏற்பட்டது. 7-3-2001 அன்று "சோக உண்மை" என்ற தலைப்பில், த.மா.கா., காங்கிரசை கிண்டல் செய்து "தினமணி" தலையங்கம் எழுதியது. 2-4-2001 அன்று த.மா.கா. தலைவர், மூப்பனார் அவர்களின் இல்லத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்றார். பிறகு அ.தி.மு.க., பா.ம.க.
இணைந்த கூட்டணியுடன் த.மா.கா., காங்கிரஸ் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்பதென்றும், ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணியில் காங்கிரஸ், த.மா.கா., சேராமல் தனித்து நிற்பது என்றும் ஒரு முடிவினை அறிவித்தார்கள். ஆனால் அ.தி.மு.க., த.மா.கா. கூட்டணிக்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க.வுடன் த.மா.கா. சேர்ந்த நிலைபற்றி "பொய்த்தது நம்பிக்கை" என்ற தலைப்பில் 13-3-2001 அன்று தலையங்கம் எழுதிய தினமணி, "ஜெயலலிதாவுக்கு யோகம் அடித்திருக்கிறது - இது நம்ப முடியாத ஆச்சர்யம்தான்!
ஆயினும் நடந்திருக்கிறது, ஜோதிட சாஸ்திரத்தில் விபரீத ராஜயோகம் என்ற விநோதமான யோகம் உண்டு, அந்த ரகத்தைச் சேர்ந்தது அ.தி.மு.க. வின் இந்த யோகம்!" என்று குறிப்பிட்டிருந்தது. த.மா.கா.வும், காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வோடு தோழமை கொண்டது, அந்தக் கட்சியிலே ஒரு சாராருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக ப.சிதம்பரம் அவர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அது பிடிக்காததால், காங்கிரஸ் கட்சியில் இருந்தே பிரிந்து வந்து, "த.மா.கா.
ஜனநாயகப் பேரவை" என்ற அமைப்பை நிறுவினார். அதில் ப.சிதம்பரம் அவர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்த புரசை ரெங்கநாதன், காரைக்குடி சுந்தரம் போன்றவர்களும் முக்கியமானவர்களாவர். சிதம்பரம் அவர்கள் அறிவாலயத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். தி.மு.கழக அணிக்கு ஆதரவாக அந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது முடிவினை வரவேற்று நான் பாராட்டினேன்.
சிதம்பரம் அவர்களின் முடிவினை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்தார். சிதம்பரம் அவர்களுக்கு முன்பாகவே குமரிஅனந்தன் காங்கிரசிலிருந்து விலகி, "தொண்டர் காங்கிரஸ்" என்ற அமைப்பை உருவாக்கி தி.மு.கழக அணியுடன் இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட்டார். இறுதியாக தி.மு.கழக அணியின் சார்பில் தி.மு.க. 167 இடங்களிலும், பா.ஜ.க. 21 இடங்களிலும், புதிய தமிழகம் 10 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 8 இடங்களிலும், மக்கள் தமிழ் தேசம் 6 இடங்களிலும், புதிய நீதிக் கட்சி 5 இடங்களிலும், தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் 3 இடங்களிலும், எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. 3 இடங்களிலும், தி.மு.க. ஆதரவு நண்பர்கள் (ப. சிதம்பரம் அவர்கள் தலைமையிலான தமாகா ஜனநாயகப் பேரவையினர்) 2 இடங்களிலும், எம்.ஜி.ஆர். கழகம் 2 இடங்களிலும், தொண்டர் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, முத்தரையர் சங்கம், தமிழர் பூமி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்றும் பேசி முடிவு காணப்பட்டது.
புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், தி.மு.க. 13 இடங்களிலும், புதுவை மக்கள் காங்கிரஸ் 9 இடங்களிலும், பா.ஜ.க. 5 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், ஜனதா தளம் (முக்கியம்) 1 இடத்திலும் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டது. இதிலே அறநிலையத் துறை அமைச்சராக இருந்த முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்களின் தொகுதியான இளையான்குடி, கூட்டணி அமைத்தபோது, மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
அதனால் ஆத்திரமடைந்த தமிழ்க்குடி மகன், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 1-4-2001 அன்று ஜெயலலிதாவைச் சந்தித்து, அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்க்குடிமகன் அ.தி.மு.க.வில் இணைந்தபோதிலும், அவருடைய பெயர் அ.தி.மு.க. பட்டியலிலே இடம் பெறவில்லை. அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.
141 இடங்களிலும், த.மா.கா. 32 இடங்களிலும், பா.ம.க. 27 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 8 இடங்களிலும், இந்திய தேசிய லீக், பார்வர்டு பிளாக், த.மு.க., ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. அணியிலும் குழப்பமான சூழ்நிலை! இன்னும் சொல்லப்போனால், தோழமைக் கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதற்கு முன்பாகவே அ.தி.மு.க., தான் நிற்கும் தொகுதிகளின் பெயர்களை எல்லாம் தன்னிச்சையாக அறிவித்துவிட்டது.
அவ்வாறு அறிவித்தது, த.மா.கா., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, பாரம்பரியமாக காங்கிரஸ், த.மா.கா. கோட்டையாகத் திகழும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் பகுதிகளில் அந்தக் கட்சிக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தொகுதிகளைக்கூட ஜெயலலிதா அறிவித்துவிட்டாரே என்று ஆதங்கப்பட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நல்லகண்ணு கூறும் போது, "எங்கள் கட்சி வசமுள்ள திருப்பூர், பெருந்துறை, நாங்குனேரி தொகுதிகளில்கூட அ.தி.மு.க.
போட்டியிடுமென்று அறிவித்தது சரியல்ல" என்றார். த.மா.கா. தலைமையை ஜெயலலிதா அவமானப்படுத்தியுள்ளதைக் கண்டு "நெஞ்சில் ரத்தம் கசிகிறது" என்று த.மா.கா. ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் கூறினார். தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி 10-5-2001 என்றும், வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 16 என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார தொடக்க விழா தி.மு.கழக மாநாடு திருச்சியில் கொட்டப்பட்டு அண்ணாநகரில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
வளாகத்தில், அன்பில் பொய்யாமொழி அரங்கத்தில் 9-4-2001 அன்று மாலையில் நடைபெற்றது. என்னுடைய தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், பொதுச் செயலாளர் பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி, மத்திய அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எம். வீரப்பன், எஸ்.திருநாவுக்கரசர், டாக்டர் கிருஷ்ணசாமி, ஆர். திருமாவளவன், எஸ். கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், குமரி அனந்தன், ஜே.எம். ஆரூண், குழ.செல்லையா, கு. செல்லமுத்து, ஏ.எம்.
ராஜா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினோம். மாநாட்டு ஏற்பாடுகளை தம்பி கே.என்.நேரு அவருக்கே உரிய தன்மையில் மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். வழக்கம்போல இசைமுரசு நாகூர் அனீபா இசை நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. 11-4-2001 அன்று கிறித்தவ சமுதாய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் தலைமையில் என்னையும், பேராசிரியரையும் சந்தித்து, கழகக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
